|
கடந்த செப்டம்பர் 20, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,
சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பேராசிரியர் அ.கா.
பெருமாள் கலந்துகொண்டார். நாட்டுப்புற வழக்காற்றியல் துறையில் மிகுந்த ஈடுபாடு
கொண்ட அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.
தன் குடும்பச் சூழல், கல்விப் பின்னணி குறித்து அ.கா. பெருமாள் முதலில்
பகிர்ந்துகொண்டார். தன் தந்தையார் மலையாள ஆசிரியராகப் பணிபுரிந்தமையால், மலையாளம்
சார்ந்த பல்வேறு கலை நுட்பங்களை விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது என்றார்.
சமூகவியலைக் கல்லூரியில் படிக்க ஆரம்பித்துப் பிறகு தமிழ்ப் பாடத்தில் நாட்டம்
கொண்டு தமது பட்டப் படிப்பை முடித்ததாகவும், சிறந்த பேராசிரியர்களின்
வழிகாட்டுதலால் வாசிப்பு அனுபவம் உறுதியாக உள்ளதென்றும் பெருமைபடக் கூறினார்.
குடும்பச் சூழ்நிலையின் காரணமாகத் தினத்தந்தி நாளிதழில் பணிபுரிய நேர்ந்தமை
குறித்தும் ஒரு வகையில் அதுதான் தனக்கு மொழியைக் கையாளும் வித்தை படித்த இடமாக
இருந்ததென்றும் எடுத்துரைத்தார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் ஏற்பட்ட தொடர்பு
பற்றிக் கூறியபோது, தரமான நூலை எப்படி வாசிக்க வேண்டுமென அவரிடம் தான்
கற்றுக்கொண்டதாக நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
சொந்த ஊரில் நிகழ்ந்த கோயில் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கூத்துகள், யாசகர்களின்
பாடல்கள் மற்றும் பல்வேறு கலை சார்ந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கும் மகத்தான
வாய்ப்பு கிடைத்தமை நாட்டார் வழக்காற்றில் ஈடுபாடு கொள்ளக் காரணமாய் அமைந்தன என்பதை
எடுத்துரைத்தார்.
நாட்டுப்புறவியல் என்பதற்குச் சரியான விளக்கமளிக்க முற்பட்ட அவர் முந்தைய
வரையறைகளைப் பட்டியலிட்டு, மக்களைப் பற்றிய படிப்புதான் நாட்டுப்புறவியல் என்று
உறுதியுடன் கூறினார்.
நாட்டார் கலைகளுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவி
வருகின்றமையால் அவை உயிரோட்டம் பெற்று வருகின்றன என்றும் அரசு தருகிற மானியங்களின்
வழியாகத் தம்மால் குறிப்பிடத்தகுந்த ஆக்கங்கள் செய்ய முடிந்ததையும் பல்வேறு காரணிகள்
மூலம் விளக்கிக் காட்டினார். நாட்டுப்புற ஆய்வுகள் மேற்கொள்வதற்கு நேரடிக் கள ஆய்வு
அவசியம் என்பதை வலியுறுத்தி, அத்தகைய ஆய்வுகளைத் தொடர்ந்து தாம் செய்தமையால்
பல்வேறு படைப்புகள் காத்திரமாக உருவானதைப் பெருமிதம் பொங்கக் கூறினார். மேலும்
நாட்டுப்புற இயலில் மேலானவை, கீழானவை என்றோ உயர்வானவை, தாழ்வானவை என்றோ எதுவும்
கிடையாது என்பதை விளக்கிக் காட்டியதோடு, தமக்கு வாய்த்த அனுபவங்களை சுவாரசியம்
ததும்ப எடுத்துரைத்தார்.
கிராமிய மக்கள் மூலமாக வருகிற இலக்கியம் சாதாரணமானது என்கிற எண்ணம் உடைபட
வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் அவர்களோடு தாம்
இருந்ததையும் பழகியதையும் அவற்றின் மூலம் தாம் நிறையத் தெரிந்து கொண்டதையும்
பற்றிக் குறிப்பிட்டார். வாய்மொழிக் கதைகளிலுள்ள மாறுபட்ட செய்திகளைக் கூறிப்
பார்வையாளர்களைக் கவர்ந்தார். போலி வழக்காறுகளைக் களைந்து உண்மையான வழக்காறுகளை
அறிய வேண்டிய கட்டாயத்தைத் தக்க சான்றுகளோடு நிறுவிக் காட்டினார்.
நாட்டுப்புறவியலை ஆழமாகப் புரிந்துகொள்ள, மக்களின் அடிப்படைப் பண்புகள், அவர்களின்
உணர்வுகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமெனப் பார்வையாளர்களிடம்
கேட்டுக்கொண்டார். ஒரு சாதி பற்றிய புரிதல் சரியாக இருக்குமானால் அரசாங்கம் தவறு
செய்யவோ தவறான நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்பில்லை என்பதைத் தமக்கு நேர்ந்த அனுபவம்
ஒன்றின் வாயிலாக உணர்ச்சிபடக் கூறினார். தமது எதிர்காலத் திட்டமாகத் தமிழ்நாட்டின்
சிற்பங்கள், வாய்மொழி இராமாயணம் பற்றி ஆராய்ந்து நூலாக வெளிக்கொணரப் போவதாகத்
தெரிவித்தார். பிறகு, பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் என்கிற
தொனியில் பதிலளிக்காமல், ஆய்வாளர் என்கிற நிலையில் பல்வேறு மாறுபட்ட செய்திகளை
அழகுற விளக்கினார். குறிப்பாக, கள ஆய்வு பற்றிய ஒரு பார்வையாளரின் வினாவுக்குக் கள
ஆய்வில் உண்மையை அனுபவத்தின் வாயிலாகத்தான் அறிய முடியுமென்றார். நாட்டுப் புற
ஆய்வாளன் செய்ய வேண்டிய பணி யாது எனும் கேள்விக்குச் சாதி சார்ந்த செய்திகளையும்
விரிவாகத் தெரிந்துகொண்டு அவற்றில் ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டுமென விடையளித்தார்.
இந்தச் சந்திப்பின் வாயிலாக இதுவரைக்குப் பார்வையாளர்கள் அறிந்திராத நாட்டார்
வழக்காற்றியல், நாட்டுப்புற ஆய்வு முறை, அதன் செயலாக்கம், பழங்குடி மக்களின்
வாழ்வனுபவம் முதலானவற்றையும் அ.கா. பெருமாளின் அளப்பரிய உழைப்பையும் இத்துறையில்
அவருக்குள்ள நீண்ட நெடிய தொடர்பையும் பார்வையாளர்கள் விரிவாகத் தெரிந்துகொண்டனர்.
|