|
பேராசிரியர் அ. ராமசாமியின் எதிர்வினை இரண்டு பொருட்கள் சார்ந்தது. தமிழக அரசு
அளித்த திரு.வி.க. பரிசிற்காக இமையத்தை ‘இடைநிலை’ இதழ்கள் பாராட்டவில்லை என்பது
ஒன்று. வீட்டுக்குத் தபாலில் வருபவை அல்லது ‘இடைநிலை’ என்ற அரூபமான கருத்தாக்கத்தின்
அடிப்படையில் இதழ்களைப் பொதுமைப்படுத்துவதை ஏற்பதற்கில்லை. காலச்சுவடு தீவிர
இதழாகத் தன்னை அடையாளம் காண்கிறது. இலக்கியம், அரசியல், கலைகள், சினிமா அனைத்திலும்
மாற்றுகளைத் தேடிவரும் இதழ். மகா கலைஞர்களின் வருகை ஏற்பட்டு விட்டது, விரைவில்
வரலாற்று நாயகன் அரசியல் தலைமை ஏற்றுவிடுவான், சினிமா உலகத் தரத்தில் உருவாகிவிட்டது
என நம்பும் இதழ்களையும் காலச்சுவடையும் பொதுமைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இமையத்தை ஏன் வாழ்த்தவில்லை எனில் கடந்த 20 ஆண்டுகளில் தமிழக அரசு பரிசுபெற்ற
எவரையும் காலச்சுவடு வாழ்த்தவில்லை என்பது தான் பதில். (காலச்சுவடு வெளியிட்ட சோ.
தர்மனின் ‘கூகை’ சிறந்த நாவலாக அதிசயமாகத் தேர்வுபெற்ற போது சோ. தர்மன்
விரும்பியதால் ஒரு சிறு குறிப்பு வெளியிட்டதாக நினைவு. சென்னையில் இருந்தும், தமிழ்
வளர்ச்சித் துறை இயக்குநர் அழைத்தும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்துவிட்டேன்.
கோவில்பட்டியிலிருந்து விழாக் கூட்டத்திற்கு வந்த தர்மனை அரசு வழக்கம்போல
அலட்சியப்படுத்தி அனுப்பியது.) இதில் இமையம் தலித் என்பதற்காக விதிவிலக்கு செய்வது
கூடாத காரியம். இலக்கியச் சமூகம் மதிக்கும் ஒரு தகுதியான பரிசை - விளக்கு அல்லது
இயல் போல - இமையம் பெற்றிருந்தால் வாழ்த்தியிருப்போம். வாழ்த்தாமல் விட்டதற்கு
வேறு காரணம் இல்லை. இமையம் தான் ஒரு படைப்பாளி என்பதை மறந்து, ஒரு கட்சி
விசுவாசியாக நூலகங்களில் காலச்சுவடை அரசு தடைசெய்ததை ஆதரித்து, காலச்சுவடுக்கு வரும்
விளம்பரத்தைத் தடைசெய்ய முடியும், காலச்சுவடையே தடைசெய்ய முடியும் என எழுதிய
மிரட்டல் கடிதம், வாழ்த்தாமைக்குக் காரணம் அல்ல. இவ்வாறு எழுதித் தனது விசுவாசத்தை
நிரூபித்ததற்கும் இப்பரிசை அவர் பெற்றதற்கும் இடையிலே இருக்கும் அரூபமான
தொடர்ச்சிகூடக் காரணம் அல்ல. தமிழச்சி தங்கபாண்டியன் பாரதிதாசன் பரிசுபெற்றபோது
வாழ்த்திவிட்டு, இமையத்தைப் புறக்கணித்த இதழ்களை நோக்கி அ.ரா. இக் கேள்வியை எழுப்ப
வேண்டும்.
காலச்சுவடுக்குப் பரிசுகள் பட்டங்கள் பற்றித் தெளிவான பார்வை உண்டு. தமிழக அரசுப்
பரிசுகள், மத்திய அரசு அமைப்புகளின் பரிசுகள், அரசு பட்டங்கள், பல்கலைக்கழகப்
பட்டங்கள் போன்றவற்றைக் கவனப்படுத்துவது இல்லை. இதன் பொருள் ஐராவதம் மகாதேவன்
கௌரவ டாக்டர் பட்டத்திற்குத் தகுதியானவர் அல்ல என்பதல்ல. எந்தக் கணமும் அதே
நிறுவனம் உரிய சமிக்ஞைகள் வந்தால் அழகிரிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத்
தயங்காது என்பதால் அப்பட்டத்திற்கு மதிப்பு இல்லை என்பதுதான். தொடர்ச்சியாக நாங்கள்
கவனப்படுத்திவரும் சில நிறுவன விருதுகள் ‘விளக்கு’, ‘இயல்’, ‘நெய்தல்’ ஆகியன.
சாகித்திய அகாதெமிப் பரிசுகள் இலக்கிய உலகில் தீவிரமான எதிர்வினையைப் பெற்றுப் பல
ஆண்டுகள் கடந்துவிட்டன. சுமார் எட்டு ஆண்டுகளாகக் காலச்சுவடு இப்பரிசு பற்றி
அறிவிப்பு வெளியிடுவதில்லை. இச் சாதனையைத் தமிழ்ச் சூழலில் நிகழ்த்தியவர் கவிஞர்
பாலா. அரசு, அதிகார வர்க்கம், பெருமுதலாளிகள், சினிமாத் துறையினர் என எல்லா
அதிகாரங்களிடமும் இளித்து, குழைந்து, புகழாரம் சூட்டி ‘வெற்றி’ அடைவதற்காக அளவு
கடந்து தம்மையே இழிவுபடுத்திக்கொள்பவர்கள், தமது மதிப்பீடுகளின் அம்மணத்தை மறைக்கச்
சோளைக்காட்டு பொம்மைகள் முன்பு மீசையை முறுக்குவதையெல்லாம் பொருட்படுத்த
வேண்டியதில்லை. எதிர்ப்பு, எங்கு இழப்பு ஏற்படுமோ அங்கு செய்யப்பட வேண்டியது.
பரிசுகளில் ஆக அபத்தமானவை தமிழக அரசுப் பரிசுகள். அரசியல், சாதி, ஊழல் - பணம் முதல்
பாலியல் வரை - சார்ந்தே இவை பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றன. அரசியலிலும்
மிகக் குறுகிய பார்வையுடன் கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள் என
முடிவுசெய்யப்படுகிறது. இது அனைவரும் அறிந்த உண்மை. எனவே தமிழக அரசுப் பரிசுகள்
விமர்சனத்திற்கு உரியவையாகத் தோன்றவில்லை. விமர்சனத்திற்கு உரிய தகுதிகூட
அவற்றிற்கு இல்லை. ஆனால் அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று வெகுசனப் பண்பாட்டு
விமர்சகரான அ.ரா. கருதினால் அக்கட்டுரையை வெளியிட இன்று பெரும்பான்மையான
இதழ்களுக்குத் திராணி கிடையாது. சாகித்திய அகாதெமியை விமர்சித்தால் மத்திய அரசு
கண்டுகொள்ளாது. தமிழக அரசுப் பரிசுகளை விமர்சித்தால் கடும் ஒடுக்குமுறைகளைச்
சந்திக்க வேண்டும். அவற்றைக் காலச்சுவடு சந்தித்துவருகிறது. இனியும்
எதிர்கொள்ளும். அ.ராவின் கட்டுரைக்காகக் காத்திருக்கிறோம். இந்நிலையில் மாற்றுக்
கருத்தை முன்வைத்தமைக்காகக் காலச்சுவடைப் பழிவாங்கும் அரசைக் கண்டிப்பதைத்
தவிர்த்துவிட்டு ஏன் நூலக ஆணைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகிறார்
அ.ரா. அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் மக்களைப் பார்த்து ஏன் குடும்ப
அட்டைக்காக, சாதிச் சான்றிதழுக்காக அரசிடம் செல்கிறீர்கள் என்று கேட்பது போன்றது
இது.
நூலக ஆணை அரசு மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளும் செயல்பாடு. அதைப்
போராடிப் பெறுவது பதிப்பாளர் உரிமை. எழுத்தாளர்களின் படைப்புகளைத்
தமிழகமெங்குமிருக்கும் நூலக வாசகர் முன் கொண்டுசெல்வது பதிப்பாளர் கடமை. இதற்காக
அரசாங்கத்திடம் வாலாட்டித் திரிய வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்தின் ஈனத்தனமான
செயல்பாடுகளை அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நூலக ஆணை வாசகர் நலன் கருதி
அரசு நடுநிலையுடன் முடிவு செய்யும் செயல்பாடாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின்
அரசியல் சார்புகளின் களமாகக் கூடாது. காலச்சுவடின் இன்றைய முரண்பாடு திமுக
அரசாங்கத்துடன், தமிழக அரசுடன் அல்ல.
இமையம் தலித் என்பதால் புறக் கணிக்கப்பட்டாரா என்ற கேள்வியை அ.ரா. திமுக
அரசாங்கத்தை நோக்கி எழுப்பியிருக்க வேண்டும். கோவேறு கழுதைகள் வெளிவந்து 15
ஆண்டுகள் கடந்துவிட்டன. இமையம் திமுக உறுப்பினர் என்பதால் அதிமுக ஆட்சிக் காலத்தை
மறந்துவிடலாம் என்பதுதான் தமிழக அரசுப் பரிசுகள் செயல்பட்டு வரும் அபத்த தளம்.
ஆனால் இக்காலகட்டத்தில் திமுக ஆட்சியில் சுமார் 10 ஆண்டுகள் அரசுப் பரிசுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. இமையத்தை இத்தனை ஆண்டுகள் புறக்கணித்ததற்கு என்ன காரணம்?
இமையத்திற்கு ஒரு தலைமுறைக்குப் பிறகு எழுதவந்த தமிழச்சிக்கு இமையத்திற்கு முன்னர்
இமையத்தைவிட உயர்ந்த பரிசு வழங்கப்பட்டதற்கு என்ன காரணம்?
திமுக அரசின் தலித் விரோதப்போக்கு தலித் அறிவுஜீவிகளால் தெளிவாக
ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதுகூடத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திமுக
அரசைப் பக்கச்சார்பான செயல்பாட்டிற்காகக் கண்டித்துள்ளது. இத்தனை ஆண்டுகள் ஒரு
இலக்கியவாதியாகக் கௌரவத்துடன் செயல்பட்ட இமையத்திற்கு பரிசு வழங்காமல் இப்போது
கட்சி அடிப்பொடியாக, அதிகாரக் கவிதையின் ஆராதனை விமர்சகராகத் தன்னைச்
சிதைத்துக்கொண்ட பிறகு பரிசு வழங்கப்பட என்ன காரணம்? பண்பாட்டாளர்களின் ஆளுமைகளைச்
சிதைத்து அவர்களைப் பரிசுகளால் அங்கீகரிக்கும் வக்கிர குணத்தின் ஊற்றுக்கண் எது?
இக்கேள்விகளை எழுப்பாமல் காலச்சுவடு, தலித் என்பதால் இமையம் பரிசு பெற்றதைப்
புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டைச் சன்னமாக முன்வைப்பதில் பொருள் இல்லை.
காலச்சுவடு இதழில் (இதழ் 116, ஆகஸ்டு 2009) அ.ராவே குறிப்பிட்டதுபோல அவர் உட்படத்
தலித் இலக்கிய/பண்பாட்டு வட்டத்தினர் - நிறப்பிரிகை, களம் புதிது போன்ற இதழ்கள் -
இமையத்தைப் புறக்கணித்த காலத்திலேயே கவனப்படுத்திய இதழ் காலச்சுவடு.
இமையத்திற்குப் பரிசளிக்கப்பட்ட நிகழ்வில் இப்பரிசால்தான் பிறவிப் பயனை
அடைந்துவிட்டதாக இமையம் மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசித் தலைவர் காலிலும்
விழுந்து ஆசி பெற்றதாக அறிந்தேன். இந்நிலையில் வெளிவராத சில அறிவுப்புகளால் அவர்
மனம் புண்படும் எனத் தோன்றவில்லை.
இரண்டாவது செம்மொழி மாநாடு பற்றி. செம்மொழி மாநாட்டையும் இலங்கைப்
பிரச்சினையையும் பிரிக்க முடியாது. ஏனெனில் அம்மாநாடு நடைபெறக் காரணமே இலங்கையில்
தமிழர்களுக்கு நடந்த பேரழிவுதான். அப்பிரச்சினையில் முதுகெலும்பின்றிச்
செயல்பட்டுத் தமிழினத் தலைவராகத் தன் தகுதியை இழந்த கருணாநிதி அதை மீட்க
மேற்கொள்ளும் முயற்சி இம்மாநாடு. இதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பரிந்துரை
எதுவும் எங்களிடம் இல்லை. ஏனெனில் ஒரு மாநாட்டின் விளைவுகளும் பின் விளைவுகளும்
முன்திட்டங்களின் வரையறைக்குள் அடங்கப்போவதில்லை. ஆனால் மேற்படிப் பின்னணியில்
சுரணையுள்ள ஒரு சமூகத்தில் இம்மாநாட்டுக்கு வலுவான எதிர்ப்பு எழவே செய்யும். எல்லா
மாற்றுக் கருத்துகளின் முனையை மழுக்கடிப்பது அல்லது ஒடுக்குவது என மிக ஆபத்தான
முறையில் செயல்பட்டு வரும் இந்த அரசு, மாநாட்டுக்கான எதிர்ப்பையும் ஒடுக்க முயன்று
வருகிறது. எனவே அவர்களின் கருத்துக்குக் களமளிக்க வேண்டியது ஒரு தீவிர இதழின் கடமை.
தமக்கான நிலைப்பாட்டிலிருந்து யாரும் இம்மாநாட்டில் கலந்துகொள்வதில் எங்களுக்குப்
பிரச்சினையில்லை.
‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியையும் இந்துத்துவத்தையும் இணைக்கும் சாதியவாதிகளை
எள்ளி நகையாடாமல் - ‘இரண்டிலும் உண்மைகள் இருக்கலாம்’ என அ.ரா. ஒதுக்குவது சில
ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு நாங்கள் வழங்கிய ‘மூன்றாவது மனிதன்’ பரிசுக்கு அவரை
மேலும் தகுதிப்படுத்துகிறது. ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது தீர
விசாரித்து விழிப்புணர்வுடன் முடிவெடுப்பதே சரி.
அறிவுஜீவிகளைத் தமிழக அரசு கண்டுகொள்ளாததன் காரணம் அரசின் நவீனத்துவம்
பின்-நவீனத்துவம் எல்லாம் காரணம் அல்ல. திமுக அரசாங்கம் மன்னர்களின் நிலப்
பிரபுத்துவ மதிப்பீடுகளையே இன்னும் தாண்டி வரவில்லை. புலவர்கள், மனைவிகள்,
வாரிசுகள் சூழக் கோட்டையில் ஆட்சிசெய்யும் சக்கரவர்த்தி. அவர் முன் குனிந்து
வாய்பொத்தி உரையாடும் மந்திரிகள், மனைவிகள், அதிகாரிகள், வாரிசுகள். இதுவா
பின்-நவீனத்துவ அரசு? அறிவுஜீவிகள் ஏற்படும் இழப்பைப் பொருட்படுத்தாமல் அரசுக்கும்
அதிகாரத்திற்கும் எதிராக உறுதிபட நிற்கும்போது மதிக்கப்படுவார்கள். அரசு அவர்களைப்
பொருட்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். நம் அறிவுஜீவிகள் அதிகாரத்தின் பத்தி வாசனை
அடித்ததுமே துண்டை இடுப்பில் கட்டி நெடுஞ்சாண்கிடையாக விழத் தயாராகி விடுவார்கள்.
இவர்களை எந்த அரசும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
|