Google   www kalachuvadu.com

விவாதம்
ஒதுக்கிவைத்தல் - பங்கேற்றல் - கொண்டாடுதல் - அவரவர் வாழ்வும் அவரவர் நியாயங்களும்
அ. ராமசாமி

இடைநிலைப் பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகளை முதல் புரட்டுதலில் வாசிப்பது என் வழக்கம். இலக்கிய வாதிகளுக்கான அஞ்சலிக் குறிப்புகள், பெற்ற விருதுகள் பற்றிய குறிப்புகள், அந்தந்தப் பத்திரிகைகளின் உள் வட்டாரத்திற்குரிய இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள் பற்றிய பதிவுகள், இலக்கியக் கிசுகிசுக்கள், வம்பளப்புகள் போன்றன அந்தப் புரட்டுதலில் கவனம் பெற்றுவிடும். பிப்ரவரி மாதம் மிகுந்த கவனத்தோடு ஒரு பெயரையும் குறிப்பையும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, புத்தகம் பேசுது, உயிர் எழுத்து, தீராநதி, புதிய கோடாங்கி என எல்லாப் பத்திரிகைகளிலும் தேடினேன். எதிலும் அந்தக் குறிப்பு இல்லை.

தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் அதிகபட்சத் தொகையான ரூபாய் ஒரு லட்சம் தொகை கொண்ட விருதுகளில் ஒன்றான திரு.வி.க. விருதை எழுத்தாளர் இமையம் பெற்றதைப் பாராட்டியும் வாழ்த்தியும் குறிப்புகள் இருக்குமென எதிர்பார்த்தேன். அதே விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருதை ஆழி பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டுள்ள அழகிய பெரியவனின் கவிதை நூல் பெற்றது என்ற குறிப்பும் இடம்பெறுமென எதிர்பார்த்தேன். ஒரு பத்திரிகையிலும் இக்குறிப்புகள் இடம்பெறவில்லை. இப்படி எதிர்பார்த்ததற்குக் காரணம் நான் தொடர்ந்து இமையத்தின் வாசகனாக இருந்திருக்கிறேன்; இருக்கிறேன். அவரது படைப்புகள் குறித்து இந்தப் பத்திரிகைகள் பலவற்றில் எழுதியிருக்கிறேன். அவ்வெழுத்துக்களை எந்தத் தடையும் சொல்லாமல் வெளியிட்டதன் மூலம் என்னை ஏற்றுக்கொண்டதோடு, அவரது படைப்புகளையும் தீவிரமான இலக்கியம் என்றே அவை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

நான் அவரைப் பற்றி எழுதியதால் ஏற்றுக்கொண்டன என்பதல்ல எனது வாதம். அவரையும் அவரது படைப்புகளையும் இந்த இதழ்கள் படைப்பின் தீவிரத்தன்மை சார்ந்து ஒதுக்கிவைத்தது கிடையாது என்பதுதான் நான் சொல்ல வருவது. இதுவரை அவர் வெளியிட்டுள்ள இரண்டு சிறுகதைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை இந்த இதழ்களில் அச்சானவைதான். அந்தக் கதைகள் மூலம் மட்டுமல்ல; இமையம் தனது காத்திரமான விமர்சனக் கட்டுரைகள், மதிப்புரைகள், விவாதக் குறிப்புகள், நேர்காணல்கள் வழியாக இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களில் நிரம்பி வழிந்தவர் என்பதை இவை மறந்துவிட முடியாது; மறுத்தும் விட முடியாது. அவரது முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ பெற்ற கவனத்தின் மூலம் இந்த நூற்றாண்டின் எழுத்தாளர் என ஆங்கிலப் பத்திரிகையின் இலக்கியச் சிறப்பிதழில் பாராட்டப் பெற்ற இளம் தமிழ் எழுத்தாளர் அவர். அவரது மூன்று நாவல்களும் குறைந்தது ஒரு ஐரோப்பிய மொழியிலும் இன்னொரு இந்திய மொழியிலும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட தீவிரமான ஒரு படைப்பாளியை- ஐம்பது வயதிற்குட்பட்ட ஒரு தமிழ்ப் படைப்பாளியைத் தமிழக அரசு இதுவரைக்கும் கவனித்ததில்லை; விருதுகள் வழங்கியதில்லை. இமையத்தைக் கவனித்திருக்கிறது; விருது வழங்கியிருக்கிறது. ஆனால் அவர் விருது வாங்கியது ஒரு செய்தியாகக்கூட இந்தப் பத்திரிகைகளில் இடம்பெறவில்லை. இமையம் பெற்ற விருதை மையப்படுத்தி இவற்றின் ஆசிரியர்களும் அவர்களை இயக்கும் நண்பர் வட்டங்களும் வெளிப்படுத்தியுள்ள மனநிலைகள் எத்தகையன?

ஒதுக்கிவைக்கும் மனநிலையா? ஒதுங்கிப் போகும் மனநிலையா?

ஒதுக்கிவைக்கும் மனநிலைதான் காரணமென்றால் அவர் ஒரு தலித் எழுத்தாளர் என்பதைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒதுங்கிப் போகும் மனநிலைதான் காரணமெனில் அம்மனநிலையின் பின்னணியில் இருக்கும் காரணங்களை எல்லாப் படைப்பாளிகளுக்கும் நாம் பொருத்துவது இல்லையே? அது ஏன்?

இமையம் விருது வாங்கியதற்குச் சற்று முன்னும் பின்னுமாகச் சில படைப்பாளிகள் விருதுகள் பெற்றுள்ளதாக இதே பத்திரிகைகளின் பக்கங்களில் செய்திகள் வந்துள்ளன. ஞானக் கூத்தனுக்கு வழங்கப்பட்ட விருது விழாவை ஒரு பத்திரிகை படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஞானிக்கும் ஐராவதம் மகாதேவனுக்கும் இயல் விருது வழங்கப்பட்ட செய்தியும் குறிப்புகளாகச் சில பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. விளக்கு விருது கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்ட செய்தியை அநேகமாக எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டுத் தெரிவித்தும் வாழ்த்தியும் செய்திகளை வெளியிட்டன. உயிர் எழுத்தும் அம்ருதாவும் உச்சபட்சமாக அட்டைப் படம் போட்டும் நேர்காணல் செய்தும் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டும் கொண்டாடிக் களித்துவிட்டன. ஒருபுறம் ஒரு கலைஞன் விருது வாங்கினால் கொண்டாடி மகிழ்கிறோம்; இன்னொரு கலைஞன் விருது வாங்கினால் கண்டுகொள்ளாமல் புறங் கையால் ஒதுக்கித்தள்ளுகிறோம். இந்த மனநிலைக்குப் பின்னால் கலைஞர்கள் அல்லது படைப்பாளிகள் குறித்த இலக்கியப் பார்வை இருக்கிறதா? கொடுக்கப்படும் விருதின் பண அளவு இருக்கிறதா? அல்லது கொடுக்கும் நிறுவனங்கள் பற்றிய பார்வை இருக்கிறதா? அல்லது அப்பட்டமான சாதியம்தான் செயல்படுகிறதா?

இமையம் விருது வாங்கியதில் படைப்பு சார்ந்ததாக அல்லாமல் வெறும் அரசியல் மட்டுமே இருக்கிறதென நினைத்திருந்தால் கடும் விமர்சனத்தை நாம் வெளியிட்டிருக்க வேண்டும். அவ்விமர்சனக் கட்டுரையில் இந்த அரசு அண்மையில் அளித்த கௌரவங்களையும் சேர்த்தே விமர்சிக்க வேண்டும். இமையத்தோடு சேர்ந்து அதே ஒரு லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டதற்காக மட்டும் அல்ல; தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கிய முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஐராவதம் மகாதேவனையும் அவரோடு சேர்த்துக் கௌரவிக்கப்பட்ட ஜெயகாந்தனையும் விமர்சிக்க வேண்டும். அதே பல்கலைக்கழகமும் அதை நிர்வகிக்கும் அதே அரசும் வழங்கிய அதிகாரத்துவம் கொண்ட உறுப்பினர் பதவிகளை ஏற்றுக்கொண்ட பேராசிரியர்களையும் அறிஞர்களையும் அவர்களின் நிலைப்பாட்டிற்காக விமர்சிக்க வேண்டும்.

சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படும் ஒவ்வொருமுறையும் தீவிரமாக எதிர்ப்புணர்வு அல்லது கண்டனத்தை வெளியிடும் நாம், தமிழக அரசுகள் - இன்றைய அரசும் இதற்கு முந்திய அரசும் விருதுகள் வழங்கும்போது மௌனமாக இருப்பது ஏன்? இந்த அரசுகள் தரும் விருதுகள் பற்றி மௌனம் சாதித்தல் அல்லது ஒதுங்கிப்போதல் என்னும் உத்தியைக் கடைபிடிக்கும் தீவிர இடைநிலைப் பத்திரிகைகளும் அவை நடத்தும் பதிப்பகங்களும் அரசின் நூலக ஆணைக்குழுவிற்கு நூல்களை அனுப்பிவைக்கத்தானே செய்கின்றன? கணிசமான நூல்களை வாங்கிய இதே அரசையும் அதற்குக் காரணமான அமைச்சரையும் பாராட்டிக்கூடப் பேசியிருக்கிறோமே? அதே அரசு நம்மிலிருந்து ஒருவரை- அடையாளப்படுத்திய காரணம் வேறாக இருந்தாலும், அளிக்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அவர் பொருத்தமானவர் என்னும் நிலையில் இமையத்தையும் அழகிய பெரியவனையும் பாராட்டாமல் விட்டது எந்த வகையில் நியாயமானது? உண்மையான படைப்பாளி என்ற நிலையில் - இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களிலேயே தனது எழுத்தைக் கண்டு சந்தோசம் கொண்டவன் என்னும் நிலையில் இமையத்தின் மனம் வேதனையடையாமல் இருந்திருக்குமா? அப்போது அவர் ஒதுக்கப்பட்டதா? நினைக்காமல் - சாதி காரணமாக ஒதுக்கப்பட்டதாக நினைக்காமல் - வேறு காரணத்தையா நினைத்திருப்பார்?

நமது மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் குறித்துத் தொடர்ச்சியான விமர்சனங்களை வைக்காமல், நண்பர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது பாராட்டிப் பேசுவதும் வேண்டாதவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்காக விமர்சிப்பதும் இரண்டிற்கும் இடையில் இருப்பவர்கள் என்றால் மௌனம் காப்பதும் அறிவுசார்ந்த செயல்கள் தானா? மாநில அரசுகளின் இருப்பு சார்ந்து தமிழ் அறிவுஜீவிகள் வெளிப்படுத்துவது இயலாமையின் கவிதலையா? அச்சத்தின் முடக்கத்தையா? இப்படி நிறையக் கேள்விகளைக் கேட்கலாம்.

இந்தக் கேள்விகளின் தொடர்ச்சியாகவே எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்தின் விமர்சனத்தை எதிர்கொள்கிறேன் (அதிகாரத்தை நோக்கி வாளும் மயிலிறகுகளும்). நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்பதா? விலகி நிற்பதா? என்று கேள்வியை முன்வைத்து வாக்குச்சாவடி அரசியல் குறித்து நீண்ட விவாதங்களில் ஈடுபட்ட அனுபவங்கள் கொண்டவர் அவர். அதே தர்க்கங்களோடு, செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கிக் காட்டியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் மட்டும் அல்லாமல் அவர் எழுதும் கடிதங்கள், பரிந்துரைக்கும் எழுத்துக்கள் எனப் பலவற்றிலும் இந்தப் பிரச்சாரம் இருக்கவே செய்கிறது. அப்படிச் செய்வதற்கு முழுமையான சுதந்திரம் அவருக்கு உண்டு. அவர் செய்யும் பிரச்சாரத்தை ஏற்பதற்கான காரணங்கள் பலருக்கும் இருப்பது போலவே நிராகரிப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்பதை நான் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் நிராகரிக்க வேண்டுமெனச் சொல்லப் போவதில்லை. அதிலும் ஈழத்தில் நடந்த யுத்தத்தைக் காரணம் காட்டி இந்த மாநாட்டை நிராகரிக்க வேண்டுமெனவாதிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றே தோன்றுகிறது. இப்படிச் சொல்வதால் ஈழத்தில் முள்வேலிக்குள் இருக்கும் மனிதர்களின் வேதனையை உணரும் பக்குவம் இல்லை என்று எடுத்துக்கொண்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை. “சிறுபான்மை இன மக்களின் விடுதலைப் போராட்டமே இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்தது” என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உடன்பாடான மனநிலையே இருந்தது என்பதைப் பா. செயப்பிரகாசம் உறுதிசெய்வாரா? தொடர்ந்து தமிழ்நாட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுதலின் பகுதியாகவே அப்போராட்டம் வடிவமைக்கப்படவில்லையா? இப்போது ஆளுங் கட்சியும் அதை எதிர்க்க நினைக்கும் கட்சிகளும் செம்மொழி மாநாட்டையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் எதிரிணையாக வைப்பதிலும் அந்த நோக்கம் இருக்கத்தானே செய்கிறது?

கோவையில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கான அடித்தளங்கள் உருவாக்கப்படும் அறிகுறிகள் எதாவது தெரிகின்றதா? என்றால் அவையும் இல்லை என்றே தோன்றுகிறது. இப்படியான மாநாடுகளில் மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி என்பதான மையக் காரணங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென நினைப்பதுகூடச் சரியல்ல என்றே தோன்றுகிறது. இதற்கு முன்பு நடந்த உலகத் தமிழ் மாநாடுகளின் விளைவுகள் என்னவாக இங்கே இருக்கின்றன?

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நடக்கும் சென்னை சங்கமம் என்னும் பெருநிகழ்வு நாட்டார் கலைகளை வாழவைக்குமா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அந்நிகழ்வு திராவிட இயக்கம் சார்ந்த அரசியல்வாதிகளிடமும் படித்த வர்க்கத்திடமும் கிராமிய வாழ்வு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து இருந்த எதிர்மறை மனோபாவத்தை மாற்றியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதேபோல நவீன இலக்கியப் படைப்பாளிகளின் இருப்பும் படைப்பு வெளியும் வெகுமக்கள் தளத்திற்குள் உருட்டிவிடப்பட்டுள்ளதன் பின்னணியில் சென்னை சங்கமத்தின் துணை நிகழ்வான தமிழ்ச் சங்கமம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த நான்காண்டுகளில் மூன்று முறை தமிழ்ச் சங்கமம் நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். கலந்துகொண்ட ஒவ்வொரு முறையும் நாடகம் என்ற எனது விருப்பத் துறை சார்ந்தே அழைக்கப்பட்டேன் என்பது முக்கியம். ஒரு நபர் எந்தத் துறை சார்ந்து இயங்குகிறார் என்பதைக் கண்டுபிடிக்கும் கருவி நமது அரசதிகாரத்தின் கைகளுக்கு வயப்பட்டிருக்கிறது என்ற வகையில் இதை நான் புரிந்துகொள்கிறேன். நான் இயங்கும் துறை சார்ந்து என்னை அழைக்கும்போது அந்த மேடையை நான் பயன்படுத்திக்கொள்வதையும் எனது கருத்துகளைச் சொல்வதையும் விரும்பவே செய்கிறேன்; மறுப்பதில்லை. ஒரு பேராசிரியனாக அது எனது கடமை என்றுகூட நான் நினைக்கிறேன்.

அற்றைத் திங்களில் சிறப்பு விருந்தினராகக் காலச்சுவடு என்னை அழைத்தபோது, இந்துத்துவச் சதியுடன் இயங்கும் மேடை என எச்சரிக்கப்பட்டேன். நான் கண்டுகொள்ளவில்லை. அதைப் போலவே தான் செம்மொழி மாநாடு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தின் பரிகாரத்திற்குச் செய்யப்படும் சடங்கு என்ற எச்சரிக்கையையும் பார்க்கிறேன். இரண்டிலும் உண்மைகள் இருக்கலாம். இரண்டிலும் கலந்துகொண்டு எனக்கு விருப்பமான நாடகங்கள் - ஊடகங்கள்- கவிதைகள் என்பதாகத்தானே பேசுவேன். நான் என்னை அழித்துக்கொள்ளக் கூடாது என்று தன்னுணர்வோடு இருக்கும்வரை பெரும் நிகழ்வோ சிறு நிகழ்வோ கலந்துகொள்வதே சரியாக இருக்கும்; இல்லையென்றால் நான் காணாமல் போவேன். நான் இருக்கிறேன் என வருகையைப் பட்டியலில் பதிவுசெய்ய மறுத்தால் நிராகரித்தவன் என்ற அச்சமூட்டும் பட்டியலில் இடம்பெற நேரிடும் வாய்ப்புகளும் உண்டுதானே. நமது அரசுகள் இரண்டு பட்டியலையும் ஒரே நேரத்திலேயே தயாரிக்கும் என்பதும் உண்மை.

நவீன அரசுகள் சார்த்தர் போன்ற அறிவுஜீவிகளின் புறக்கணிப்பிற்குச் செவிசாய்க்கும். கண்கொடுக்கும். ஆனால் நமது காலத்துப் பின்நவீன அரசுகள் ஒரு பா. செயப்பிரகாசத்திற்குப் பதிலாக - ஒரு அ. ராமசாமிக்குப் பதிலாக - ஒரு இன்குலாப்பிற்குப் பதிலாக அவர்களின் சாயல் கொண்ட ஆளுமைகளால் நிரம்பிக்கொள்ளும். உலகத் தமிழ் மாநாடு என்பதற்குப் பதிலாக உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என நிரப்பிக்கொள்ளவில்லையா? அதை எல்லாத் தமிழ் மனங்களும் ஏற்றுக்கொள்ளவில்லையா?

உள்ளடக்கம்