Google   www kalachuvadu.com

கடிதங்கள்

பிப்ரவரி 2010 இதழில் ‘தலித்: அடையாளம், கவசம்’ குறித்து: மிகவும் ஒடுக்கப்பட்டவர்களும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களுமான மனிதர்களுக்கு உருவாக்கப்பட்ட ‘தலித்’ எனும் அடையாளம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். ‘தலித்’ மக்கள் இன்றும் அனுபவித்து வரும் தீண்டாமைத் தன்மையும் மிகவும் ஒடுக்கப்படுபவர்கள் என்கிற நிலைமையும் நூறு சதவீதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டியவைதான் என்பதில் கருத்து வேறுபாடேயிருக்க முடியாது. ‘தலித்’ எனும் அடையாளம் அடியோடு ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக, அதை ஒரு கவசமாக உபயோகித்து ‘தீமைகளை’ நன்மைகளாக மாற்றிக் காட்டும் முயற்சி வெற்றி பெற்றால் அது பெருங்குழப்பத்தில்தான் முடியும்!

கே.எஸ். கீழாம்பூர் ராமையா
மதுரை

‘உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது!’ கட்டுரையைப் படித்ததும் இந்திய சுதந்திர தினத் தன்றும் குடியரசு தினத்தன்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மிட்டாயுடன் அவர்களுடைய எதிர் காலத்தில் இனிமையே வராது என்ற உண்மை தெளிவாகப் புரிந்தது.

தேர்தல் தோல்வியை வெற்றியாக மாற்றிக்காட்ட முடிந்த தருணத்திலிருந்தே தாம் கதர்ச் சட்டை அணிந்த வன்முறையாளர் என்பதைப் ப. சிதம்பரம் இன்றுவரை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

பணக்காரர்களும் அன்னிய நிறுவனங்களும் இந்த நாட்டின் வளங்களை முற்றாக அனுபவிக்கப் பிறந்தவர்களென்றும் அவற்றின் மீது உரிமை கொண்டாடும் ஏழைகளும் பஞ்சை பராரிகளும் வேட்டையாடப்படுவார்களென்றும் எழுதப்படாத சட்டத்தை நிறைவேற்றும் உள்துறை அமைச்சர் பள்ளிப் பருவத்தில் “ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்று படித்ததை மறந்துவிட்டாரா?

ஏதுமறியாத அப்பாவி மக்களை நக்ஸல்கள் எனக் கூறிச் சித்திரவதை செய்வதும் வன்புணர்ச்சிக்குள்ளாக்குவதும் சுட்டுக்கொல்வதும் தொடர் நிகழ்ச்சிகளாக அரங்கேறுவது சிதம்பரத்துக்குத் தெரியாதா?

பிரெஞ்சு, ருஷ்ய, சீனப் புரட்சி ஆகியனவெல்லாம் குடியானவர்களின், தொழிலாளிகளின், பாட்டாளிகளின் ரத்தம் சிந்தி வெற்றி பெற்றவை என்பதைப் ப. சிதம்பரம் நினைவிற் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று என்பதை அடிப்படைப் பாடமாகப் பயின்றவர்களும் மனித உரிமை காக்க மறந்து நிற்பதுதான் எதிர் காலத்தில் ‘வரலாற்றுப் பிழை’ அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கும் நிகழ்வு ஏற்படப் போகிறது.

தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு

திருநெல்வேலி இந்துக் கல்விக்கூடம் தொடர்பான பி.ஏ. கிருஷ்ணனின் கட்டுரை படித்தேன். அவர் அப் பள்ளியில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் சீதையாகப் பேர் பெற்ற போது அப்போது அவர் சிவப்புதான்! நான் அங்கே பயின்றுகொண்டிருந்தவன்; அவர் அக்கல்லூரி ஆசிரியரானதும் நான் வேறொரு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவருடன் மார்க்சிய இலக்கியத் திறனாய்வுகள் பற்றிக் காரசாரமாக விவாதித்தவன். இந்தப் பீடிகையுடன், அவர் தெரிவித்துள்ள விவரங்களில் இரண்டைப் பற்றி, இவற்றின் சமூகவியல் சார்புக்காக இங்கே விமர்சிக்கிறேன்: (1) “சாதி சார்ந்த நோக்குடன்” பிராமண ஆசிரியர்கள். (2) “செங்கொடி பிடித்துக்கொண்டு அலையும்” ஆசிரியர்கள்.

1. தென்பாண்டியில் கிறித்துவ மிஷனரிகள் கல்விச் சேவை மூலமாக மத மாற்றத்தைத் தீவிரமாக்கிக்கொண்டிருந்த காலம் அது. இந்து உணர்ச்சி பெற்ற பிராமணர்களாலும் பிராமணரல்லாதவர்களில், முக்கியமான சைவ வேளாளர்களாலும் 1861இல் ஆங்கிலோ வெர்னாக்குலர் பள்ளிக்கூடம் திருநெல்வேலி நகரில் தொடங்கப்பட்டது. 1871இல் திருநெல்வேலி கூடலில் இந்நிறுவனம் கல்லூரியாக வளர்ச்சி பெற்று 1936இல் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அதைப் பலப்படுத்தியவர் ஒரு கிறித்துவ நாடார் என்பது வியப்புக்குரியது. அவர்தான் ‘அலெக்ஸான்டர் த கிரேட்!’ என்னும் புகழுக்குரிய முதல்வர் அலெக்ஸான்டர் ஞானமுத்து. அப்போது மதுரையில் வசித்துவந்த திரவியம்பிள்ளை, தாயுமானசாமிப் பிள்ளை என்னும் செல்வந்தர்களிடமிருந்து அலெச்ஸான்டர்தான் கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான நிதி கிடைக்கச் செய்தார்; இச்சகோதரர்களின் பெயரைக் கல்லூரிக்குச் சூட்டியதோடு இவர்களின் நிபந்தனையான இன்னொன்றையும் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்கும்படிப் பேசி முடித்தார். அதுதான், ஆசிரியர் நியமனத்தில் ஐம்பது விழுக்காடு மட்டுமே பிராமணருக்காக இருக்க வேண்டுமென்பது. இந்நிபந்தனையை மதுரையிலிருந்த பிராமணக் கல்லூரி நிர்வாகம் ஏற்காததால்தான் இந்நன்கொடை திருநெல்வேலிக் கல்விக் குழுவிற்குக் கிடைத்தது!

பிராமணர், சைவ வேளாளர் என்னும் சமுதாயங்களின் பாரம்பரிய இனப் பெருமிதப் போட்டியுணர்வுகளின் தாக்கம் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டதைப் போலவே ஆசிரியர் வர்க்கங்களிலும் எதிரொலித்தது. பிராமண ஆசிரியர்கள் தங்களின மாணவர்களிடம் கருணை காட்டியது போல் பிள்ளைமார் ஆசிரியர்கள் தங்களினப் பிள்ளைகளிடம் தனிக் கவனம் செலுத்தவில்லை. கட்டுரையாளர் குறிப்பிட்டது போல், “பிராமண ஆசிரியர்களுக்கு சைவப் பிள்ளைமார்களைக் கண்டால் ஒரு இளக்காரம்” என்பதற்கு எத்தனையோ சான்றுகளைத் திரட்ட முடியும். ஆனால் இத்தகவலைத் தொடர்ந்து அவர் விவரிக்கும் இச்சாதிப் பாகுபாடு பற்றிய கணிப்புகள் முறையல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் இத்தகைய “இளக் காரம்” வேறு ரூபங்களில் திசை மாறி இப்போதெல்லாம் ‘கவர்ன்மென்டு பிராமணர்களே’, அரசாங்கத்தின், அதாவது அரசியலின், ‘செல்லப் பிள்ளைகளாக’ அவதாரமெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்!

2. கல்லூரி ஆசிரியர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மார்க்சிய சித்தாந்த அரசியலை ஏற்காத என்னைப் போன்றவர்கள் கல்வியின் நலனுக்காகவும் ஆசிரியர்களின் சுயநலனுக்காகவும் போராடிக்கொண்டு சாதனைகளும் படைத்தோம். மார்க்ஸிய ஊடுருவல் ஏற்பட்டதும் ஆசிரியர் சங்கம் வலுப்பட்டது. மார்க்சிய யூனியனிஸ்ட்கள் போல் மற்றவர்களால் உழைப்பையும் நேரத்தையும் இயக்கத்திற்காகத் தொடர்ந்து ஒதுக்க முடியாத நிலை. ஆகவேதான் கல்வித் துறையில் தேர்வுகள் எப்படி ஒரு “தேவையான தீமை” என்னும் சொல்வழக்கு போல், கட்டுரையாளரின் கூற்றுப்படி, “செங்கொடி” ஆசிரியர் சங்கத்தின் தவிர்க்க முடியாத ஓர் அடையாளமாகி விட்டது.

எழிலமுதன்
தூத்துக்குடி

‘கனவின் யதார்த்தப் புத்தகம்’ என்னும் அரவிந்தனின் கட்டுரை குறித்து:

‘எழுத்து’ என்பது தனிமனித மனம் சார்ந்த படைப்புக் கலை மட்டுமே என வாதிடுபவர்களிடமிருந்து சற்று விலகிக் கனவின் களமாக எழுத்தின் பிறிதொரு செயல்பாட்டைத் தனது எழுத்துக் களமாகக் கொண்டவர்களில் ஜே.பி. சாணக்யாவும் ஒருவர். புனை கதையுலகம் எப்போதும் வளம் மிகுந்த கற்பனைகளின் ஊற்று என்பதை எழுத்தாளர் கோணங்கி, ரமேஷ் பிரேமுக்குப் பிறகு நன்கறிந்த சிறந்த படைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கைத் தடம் மாற்றி ஆக்கப்பூர்வமானதாக எழுத்தையும் அதன் ஆற்றலையும் வெளிப்படுத்தி அதில் வெற்றி காணும் எழுத்தாளராகவும் இவரைக் குறிப்பிடலாம். சாணக்யா குறிப்பிடும் கதையாடலுடன் வெளிப்படும் காம களியாட்ட வெளிப்பாட்டை நிஜத்தில் அனுபவித்து மகிழும் மனிதர்கள், கதையினூடே அவ்வெளிப்பாட்டுணர்வை மனக் கூச்சங்களாகக் கருதி எதிர்வினையாற்றியிருந்த ‘ஆண்களின் படித்துறை’ காலச்சுவடில் வெளியானபோது அதற்கடுத்த இதழிலேயே சரமாரியாக எழுதப்பட்ட கடிதங்கள் சான்று.

பா. செல்வவிநாயகம்
சென்னை

எஸ்.என். நாகராஜனின் கீழை மார்க்சியம் என்னும் நூலைப் பற்றி ஜி.கே. ராமசாமியின் கட்டுரை ஒட்டு மொத்தமாக நாகராஜனின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் அதை நிராகரிப்பதாகவும் இருந்தது. நாகராஜன் கள அனுபவம் இல்லாதவர், கட்சியில் 8 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் எந்த அமைப்பிலும் இயக்கத்திலும் இல்லாமல் தனிநபராகவே இருப்பவர். நமக்கு எழும் கேள்விகள், கள அனுபவம் இல்லாதவர், கட்சியின் கொள்கைகளை, திட்டங்களை விமர்சிப்பதற்கு உரிமையில்லையா? அத்தகைய அனுபவம் இல்லாமல் மார்க்சியம் பற்றிப் பேசினால் அது சரியாக இருக்குமா? இப்படிச் சொல்லிவிட்டு இந்தியக் கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கூறும்போது 1950களுக்குப் பிறகு களப் பணிகளில் அதாவது மக்கள் ஜனநாயகப் போராட்டப் பாதையிலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிவிட்டனர் என்பது முரண்பாடாக இல்லையா? கம்யூனிஸ்டு கட்சிகளில் புரட்சிகரச் செயல்பாட்டிற்கான, கோட்பாட்டு விவாதமோ தத்துவார்த்தப் போராட்டமோ நடை பெறவில்லை. அப்படிச் செயல்படும் போதுதான் இந்திய எதார்த்தம் பற்றிய புரிதலும் செயலுக்கான கோட்பாடும் தேவைப்படும். தேர்தல் வழியைத் தேர்ந்தெடுத்ததால் கட்சிகள் கள வேலைகளை முற்றுகையிட்டன என்று குறிப்பிடுகிறார். ஆனால் எஸ்.என். நாகராஜன் இந்தியச் சூழலில் எந்த வகையான மார்க்சியத்தைப் பொருத்திப் பார்ப்பது என்ற தத்துவார்த்தத் தேடல் நிரம்பிய வெளிகளைத்தானே காட்டுகிறார்.

குறிப்பாக அந்த நூலில் நாகராஜன் முன்வைக்கும் அம்சங்கள் உற்பத்தி சக்திகளுக்கு மேலை மார்க்சியம் அழுத்தம் கொடுத்துப் பகை முரண்பாடுகளை முதன்மைப் படுத்துகிறது. கீழை மார்க்சியம் நட்பு முரண்பாடுகளை அழுத்தமாக வலியுறுத்தி உற்பத்தி உறவுகளை முதன்மைப்படுத்துகிறது. உற்பத்தி சக்திகளை முதன்மைப்படுத்தும்போது அறநெறிகளைக் கையாளாமல் போனால் சூழல் அழிவும் மானிட வாழ்வு முழுவதற்கும் அச்சுறுத்தலாக அதன் விளைவுகள் அமையும் என்பதை வலியுறுத்துகிறார். பொருள் உற்பத்தி அதிகரித்து அதை விற்பதற்கு சந்தையைத் தேடும்போது மனித சமூகத்திற்கிடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுப் பெருமளவிலான அழிவைத் தருமென்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்தும்போது அற நெறிகளுக்கான வெளிகளைப் புறக்கணித்துச் செயல்படுதல், விளைவுகள் எதிர்மறையாக அமைதல் என்பது பாஸிட்டிவிசம். மேலும் அமெரிக்க டெயிலரிசத்தை அதிகார வர்க்கச் செயல்பாட்டில் கையாண்டதன் விளைவுகள் பெருமளவில் அழிவைத் தந்ததாகக் குறிப்பிடுகிறார்.

மாவோ மார்க்சியத்தைத் தன் மண்ணுக்கேற்ற ஒன்றாக அதாவது சீன மரபில் உள்ள டாவோயிசத்தையும் கன்பூசியஸ் பௌத்த மரபுகளையும் அதன் கூறுகளையும் கொண்டு ஒரு செழுமையான கோட்பாட்டைக் கொண்டுதான் சீனப் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ராணுவத்தில் அதிகாரப் படிவரிசை என்னும் முதலாளித்துவ முறைக்குப் பதிலாக, வீரர்களும் அதிகாரிகளும் சம அளவில், சம அந்தஸ்தில் இருக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். ஜி.கே.ராமசாமி கூறுவதுபோல இதை ஒட்டு மொத்தமாக நாம் நிராகரிக்கக் கூடாது. அதிலுள்ள ஆக்கபூர்வமான கூறுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நா. சுப்புராயலு,
ஆத்திபட்டி

க. திருநாவுக்கரசுவின் ‘கலவரங்களின் தேசம்’ கட்டுரை குறித்து:

இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள்மீது நடத்தப்பட்ட சில தேவையற்ற தாக்குதல்கள் பற்றிப் பல நாளேடுகளிலும் புத்தகங்களிலும் வெளிவந்த நிகழ்வுகள் சீக்கிய மதம் தோன்றுவதற்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள ஒரு தேசம் குறித்த அபிப்பிராயத்தின் அடிப்படையாக அமைய முடியாது.

உலகம் முழுவதும் ஓட ஓட விரட்டப்பட்ட யூதர்களுக்கு அடைக்கலம் தந்ததோடு மட்டுமின்றி அவர்கள் வழிபாடு செய்வதற்கும் வாணிபம் செய்வதற்கும் இடமும் பொருளும் அளித்து, அவர்களுக்கு முன்பே இந்தியா வந்து குடியேறிய பார்சி மதத்திற்கு இணையாக நடத்தும் இந்தியாவையும் அதன் மக்களையும் அல்லாவின் கடைசித் தூதராகக் கருதப்படும் முஹமது நபி சல்லல்லாஹுக்குப் பிறகும் ஒரு தூதர் வர வாய்ப்புள்ளதென மனதளவில் மட்டும் நம்பும் அஹமதியா பிரிவு முஸ்லிம் மக்களை அடிமைகளாய், வாக்குரிமை இல்லாதவர்களாய் நடத்தும் நம் அண்டை நாட்டைவிடச் சகிப்புத் தன்மை குறைந்தவர்கள் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை பற்றிச் சொல்லுவதற்கு இனி ஒரு கருத்து மட்டுமே எஞ்சியுள்ளது.

வழக்கமான எல்லோரது கருத்துகளுக்கு மாற்றாக இருக்க வேண்டுமென்ற முறையில் எழுதப்படும் ழிமீஷீ- கீக்ஷீவீttவீஸீரீ எனும் புதிய சிந்தனைக் கட்டுரைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குச் சிறிது உதவலாம். ஆனால் தெருவில் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக்கொண்டு ரத்தம் சொட்டச் செல்லும் கல்லுளிமங்கன்கூட நம் உடனடிக் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. கலவரங்கள் மனத்தில் இருக்கும் போது தேசம் முழுவதும் அது பிரதிபலிக்கவே செய்யும்.

எஸ்.எஸ். வாசன்
புரசைவாக்கம், சென்னை

‘காலச்சுவடு’ பிப்ரவரி 2010 இதழில் வெளியான சூரியதீபனின் கட்டுரை தொடர்பாக- தெளிவு கருதி- இச்சிறு குறிப்பை வரைகிறேன்.

1. சிங்களக் கலைஞர்களின் சரியான பெயர்கள்: பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம.

2. “எல்லாரும் அங்கால போயிற்றாங்க . . .; நான் போகயில்ல...” என எழுத்தாளர் குறித்துச் சிலரிடம் கதைத்திருக்கிறேன்.

ஆனால் அவரது கட்டுரையில், “யாழ்ப்பாணத்தில் இப்போது நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்” என நான் தெரிவித்ததாகவுள்ள வரிகள், வேறுவிதமான கருத்தையும் அகங்காரத் தொனியையும் கொண்டுள்ளன.

அ. யேசுராசா,
யாழ்ப்பாணம்

ஜனவரி 2010 இதழில் வெளியான ‘பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள்’ பற்றிய என் கட்டுரையில், நாவலாசிரியர் கண்மணி குணசேகரன் அவர்களைத் தலித் படைப்பாளர் எனத் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன். தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.

ந. முருகேசபாண்டியன்
புதுக்கோட்டை

சுகுமாரனின் ‘எறும்பைக் கொல்ல வெடிகுண்டு வீசுதல்’ கட்டுரை குறித்து:

எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மிக உயரத்தில் வைத்துப் போற்றும் கேரளாவில் இப்படி ஒரு சம்பவமா? என்பதை நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. கலாச்சார வைத்தியர்களின் ‘முரட்டு ஆபரேஷன்’களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

தாங்கள் நினைப்பதையே மற்றவர் பேச வேண்டும்; தாங்கள் போடும் கோடுதான் அனைவருக்குமான ஒழுக்க விதி என்பது கலாச்சாரத் தடித்தனம். மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் தனிநபர் ஆவேசமும் தடித்தனமும் எதற்கும் பயன்படமாட்டா. வேண்டுமானால் இந்தக் கலாச்சார வைத்தியர்களின் அற்ப நேர சந்தோஷத்திற்குச் சில நிமிடம் உதவலாம்.

மனித இயல்புகளைப் புரிந்துகொள்ளாதவர்களே இந்த வன்முறையைப் பிறர்மீது ஏவுகின்றனர். இதே வன்முறைக்கு என்றேனும் ஒரு நாள் தாங்களும் ஆட்படக் கூடும் என்பதை ஏனோ இவர்கள் மறந்து விடுகின்றனர்.

சிவசேனா, மகாராஷ்டிர நவநிர்மாண், ராமர் சேனை, நாம் தமிழர் இயக்கம் இவற்றின் வரிசையில் DYFI சேர்ந்துவிட்டது துரதிருஷ்டவசமானது.

ஹிட்லரின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்ட்கள், இன்று தாங்கள் ஆளும் பகுதிகளில் குட்டி ஹிட்லர்களாக மாறிப் போனது காலத்தின் முரண்பாடு தான். சீக்கியர் படுகொலை (1984) குறித்து நிறைய விவரங்களைத் திருநாவுக்கரசுவின் கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன். குஜராத்தின் மனித நேயமற்ற அரக்கர்கள் காங்கிரசுக்குள்ளும் அன்றே இருந்திருக்கின்றனர். இது போன்று மனிதர்களைப் படுகொலை செய்வதில் காங்கிரசும் - பி.ஜே.பி.யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்

உள்ளடக்கம்