|
வட்டமேசை
கேரளத்தில் குழந்தை இலக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட ரிஷிமிசிலி அமைப்பு
பதிப்பாளர்களுக்கான ஒரு வட்டமேசைச் சந்திப்பை டிசம்பர் 20 - 22 தேதிகளில் ஒழுங்கு
செய்திருந்தது. ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிப் பதிப்பாளர்களிடையே பரஸ்பர மொழி
பெயர்ப்புப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான சந்திப்பு. அசாம், மகாராஷ்டிரா, தில்லி,
மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சுமார்
இருபத்தைந்து பதிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். கேரளத்திலிருந்து சிந்தா பதிப்பகம்
- இது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகம் - கலந்துகொண்டதும் தனது
உரிமைக்குரிய எழுத்துகளை அங்கு மொழிபெயர்ப்பு உரிமை விற்பனைக்காக முன்வைத்ததும்
இத்தகைய ஒரு முயற்சி கம்யூனிஸ்ட் ஆட்சியில் நடைபெறுவதும் முக்கியமானவை.
இச்சந்திப்பில் அதிக மொழிபெயர்ப்பு உரிமைகளை விற்பனை செய்தது
KSICL நிறுவனம்தான். மலையாள நாளிதழ்களில் இது முக்கியச் சாதனையாகச் செய்திகளில்
குறிப்பிடப்பட்டது. வட்டமேசையின் நடுவில் காப்புரிமைச் சின்னமான © நுண் கலைஞர்
ஒருவரால் பெரிதாக வடிவமைக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்டிருந்தது. துரதிருஷ்டவசமாகத்
தமிழ்ச்சூழலில் எல்லாக் காப்புரிமைகளையும் பொதுவுடைமையாக்கும் நோக்கமும்
காப்புரிமை பற்றிய அபத்தமான புரிதல்களும் - குறிப்பாக இடதுசாரிகளிடம் -
இருந்துவருகின்றன.
கேரள அரசு நிறுவனத்தின் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டு ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.
இந்திய மொழிகளிடையேயான மொழிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘நேஷனல்
புக் டிரஸ்ட்’ போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் செய்யத் தவறிய பணியைக் கேரள அரசின்
KSICL நிறுவனம் தொலை நோக்கோடும் தேசியப் பார்வையுடனும் மேற்கொண்டுள்ளது.
தொலைவிலிருந்து வந்த பதிப்பாளர்களுக்கு விமானப் போக்குவரத்துச் செலவையும் தங்கும்
வசதியையும் அரசே வழங்கியது. இம்முயற்சிக்காக
KSICLஇன் இயக்குநர் ரூபின் டி
குருசையும் கல்வி அமைச்சர் எம்.ஏ. பேபியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மூன்று நாட்கள் நடந்த இந்தச் சந்திப்பில் எந்த அரசியல்வாதியும் எட்டிக்கூடப்
பார்க்கவில்லை; தலைவர்கள் தங்களுடைய படைப்புகளுக்கான மொழிபெயர்ப்புகளை
வலுக்கட்டாயமாக விற்க முயலவில்லை. இ.எம்.எஸ் முதல் அச்சுதானந்தன் வரையிலானவர்களின்
எழுத்துக்கள் பிறமொழிப் பதிப்பாளர்கள்மீது திணிக்கப்படவில்லை. இந்நிகழ்விற்கு
அத்தகைய உள்நோக்கம் இருக்கவில்லை. அவ்வாறு செயல்படாதமைக்காக நிகழ்ச்சி
அமைப்பாளர்கள் யாரும் பின்னர் தலைவர்களால் வசைபாடப்படுவார்கள் என்றும் தோன்றவில்லை.
சந்திப்பு நடைபெற்ற அற்புதமான கனகக் குன்று அரண்மனை அருகில் நடந்த புத்தகச்
சந்தையில் கவிஞர் சுகுமாரனுடன் சுற்றிக்கொண்டிருந்தபோது Leftword அரங்கில் கேரள
நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அவர்களைச் சந்தித்தேன். தனியாக நின்று புத்தகங்களைப்
பார்த்துக்கொண்டிருந்தார். புத்தகச் சந்தை அமைப்பாளர்கள், துப்பாக்கி ஏந்திய
கரும்பூனைகள், கட்டியம் சொல்லும் கூட்டம், வாய்பொத்திப் பின்தொடரும் ஜால்ராக்கள்
யாரும் இல்லை. Leftword பதிப்பாளர் சுதன்வா தேஷ்பாண்டே அவருடைய வழக்கமான
உடல்மொழியுடன் சகமனிதரிடம் பேசுவதைப் போலவே அமைச்சருடன் பேசிக்கொண்டிருந்தார்!
குனிவு, குழைவு எதுவுமே இல்லை. அவர்களைப் பார்த்தால் நிலவுடைமைக் காலத்தைக் கடந்து
வந்து நவீன ஜனநாயக உலகில் வாழ்பவர்களைப் போலத் தோன்றியது. என்னையும் அமைச்சரிடம்
அறிமுகப்படுத்திவைத்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியராகத்
திருவனந்தபுரம் CDSஇல் அவர் பணியாற்றிய காலகட்டத்தில் நண்பர் சலபதியுடன் அவரைச்
சந்தித்ததையும் அவர் வீட்டில் ஒரு நாள் காலை உணவருந்தியதையும் நினைவுகூர்ந்தேன்.
சிவகாசித் தொழிலாளர் - உரிமையாளர் உறவு பற்றிய அவரது முக்கியமான - ஆனால் நிறைவு
பெறாத - ஆய்வு பற்றியும் பேசினோம். 1996இல் கேரள இடதுசாரி அரசு தொடங்கிய,
மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான ‘வெகுமக்கள் இயக்க’த்தில் இணைந்த பிறகு ஆய்வுப்
பணியெல்லாம் காற்றில் பறந்துவிட்டது என்றார் சிந்தித்தபடியே. பின்னர் புத்தகங்களுடன்
- அவற்றைத் தூக்கிவர உடன் யாரும் இருக்கவில்லை - ஒரு வாசகராக வெளியேறினார்.
சென்னைப் புத்தகச் சந்தையில் சினிமாக்காரர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள்
ஆகியோரின் வருகைகளும் அதிகார உலாக்களும் நினைவில் வந்து உறுத்தின. தமிழ்ச் சமூகம்
உருவாக்கியிருக்கும் ஒப்பீட்டளவில் அதிக ஜனநாயகமும் சமத்துவமும் மிளிரும் வெளிகளில்
ஒன்று சென்னைப் புத்தகச் சந்தை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பயணம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் காலச்சுவடில் (ஜூன் 2009) எழுதிய
ஓட்டுப் பண்ணை 2009 கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
(கருணாநிதியால்) “தனது 6 மணிநேர உண்ணாவிரதத்தின் வழி ஈழத்தில் ஒரு தமிழனையும்
காப்பாற்ற முடியவில்லை. அந்த உண்ணாவிரதத்தின் உண்மையான அறிவிக்கப்படாத கோரிக்கை
என்னவென்பது இப்போது தெளிவு. புலிகளின் அழிவையும் பிரபாகரனின் முடிவையும்
தேர்தலுக்கு முன்னர் நிகழ்த்தக் கூடாது என்பதுதான் அவருடைய அசல் கோரிக்கை.”
அன்று இது ஆதாரபூர்வமான உண்மை என்பதாக அல்லாமல் அறிவார்த்தமான ஊகமாகவே இருந்தது.
சமீபத்தில் ராஜபக்ஷேயின் செயலாளர் லலித் வீரதுங்க டெய்லி மிரர் (ஜனவரி 14)
நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கீழ்க் காணும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
“மே 2009இல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த இலங்கையின் உள்நாட்டுப்போரில் தமிழ்
மக்கள்மீது கடும் ஆயுதப் பிரயோகம் தொடர்ந்தால் அது மே 13 அன்று தமிழகத்தில் நடந்த
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் தோல்வியில்
முடியும் என இந்தியா அஞ்சியது. எனவே தேர்தல் முடியும்வரை போர்நிறுத்தத்தை
வேண்டியது. இலங்கை அதிபர் முதலில் மறுத்தாலும் பின்னர் இந்தியத் தேர்தல் காலத்தில்
கடும் ஆயுதப் பிரயோகத்தைத் தவிர்த்துத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி
வெற்றிபெற இலங்கை உதவியது.”
இந்தியா இலங்கைக்குக் கொடுத்த நெருக்கடி திமுக தலைவர் ஏப்ரல் 27 அன்று நடத்திய
முற்பகல் உண்ணாவிரதத்தின் விளைவு என்பது தெளிவு. தமிழ் மக்களின் இறுதிப்
படுகொலையைப் பத்துநாட்களுக்குத் தள்ளிப்போட்ட பெருமை கருணாநிதிக்கே உரியது.
தமிழினத் தலைவர் ஆட்சி, சிங்கள அதிபரின் ஆசிபெற்ற ஆட்சி. இதற்குக் கைமாறாகத்தான்
இலங்கைக்கு எம்பிக்கள் குழுவை, பரிசுகளுடன் கருணாநிதி அனுப்பிவைத்தார். தமிழர்
உரிமைகளை மீட்டெடுக்கக் கருணா நிதி மேற்கொண்டிருக்கும் நீண்ட பயணம் இன்னும்
எங்கெல்லாம் இட்டுச் செல்லுமோ தெரியவில்லை.
சொரணை
தில்லி உலகப் புத்தகச் சந்தையில் மேற்கு வங்க மாநில அரசு அரங்கமொன்றை
அமைத்திருந்தது. நேரம் கிடைத்தபோது ஆர்வம் மேலிட இரண்டுமூன்றுமுறை சென்று
பார்த்தேன். அரங்க நிர்வாகிகளுடனும் உரையாடினேன்.
முதலில் என்னை வியப்படையவைத்த விஷயம் அரங்கில் முதலமைச்சர்
இளித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இருக்கவில்லை என்பது. அரசு வெளியீடுகளையும்
தனியார் பதிப்பக வெளியீடுகளையும் காட்சிப்படுத்தி விற்பனை
செய்துகொண்டிருந்தார்கள். இது போன்ற அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழை
முன்னிறுத்தும் பண்பாட்டுச் சொரணையுள்ள காரியங்களில் ஈடுபடும் அரசு நமக்கு அமையும்
சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. தம்மை முன்னிறுத்தித் தமிழ்ப் பண்பாட்டை அயலில்
கேலிப் பொருளாக்குபவர்கள் இல்லாத காலம் உருவானால் அதுவே முதல் பாய்ச்சலாக
இருக்கும்.
தமிழக அரசுக்கு மட்டுமல்ல ‘பாபாசி’ போன்ற பதிப்பாளர் கூட்டமைப்புகளுக்குக்கூட
இத்தகைய கனவுகள் இல்லை. இம்முறை கன்னடப் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு இலவச ஸ்டால்
அளித்து, தங்கும் வசதியும் பிற உதவிகளையும் நேஷனல் புக் டிரஸ்ட் வழங்கியிருந்தது.
இதுபோல அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களின் பதிப்பாளர்களுக்கும் பல சலுகைகள்
கிடைப்பதாக அறிந்தேன். முன்னர் இந்த உலகப் புத்தகச் சந்தையில் தமிழகப் பதிப்பாளர்
சங்கமொன்றிற்கு (பாபாசி அல்ல) இலவச ஸ்டால் ஒதுக்கிவந்தார்கள். அது முறையாகப்
பயன்படுத்தப்படாமல் சீரழிந்தது. இவ்வாறு தேசிய அரங்கில், உலக அரங்கில் கிடைக்கும்
வாய்ப்புகளை, திட்டங்களை, சலுகைகளை எவற்றையும் பயன்படுத்தாமல் ‘தமிழன்
ஒடுக்கப்படுகிறான்’ என்று புலம்பிக்கொண்டிருப்பதில் பொருள் ஏதும் இல்லை.
விருந்தோம்பல்
கிங்பிஷர் விமானத்தில் தில்லியிலிருந்து திருவனந்தபுரம் பயணம். இரண்டாண்டுக்கு
ஒருமுறை நடைபெறும் உலகப் புத்தகச் சந்தையில் கலந்துகொள்ள ஐந்தாவது முறையாகத்
தில்லி சென்றிருந்தேன். பரஸ்பர மொழியாக்கங்கள் பற்றி இந்தி, கன்னடம், உருது,
மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப் பதிப்பாளர்களுடன் உரையாட முடிந்தமை மகிழ்ச்சி
அளித்தது. இருப்பினும் இம்முறை புத்தகச் சந்தை கொஞ்சம் சோபை இழந்து காணப்பட்டது.
விமானத்தில் ஏறியதும் அதிபர் விஜய் மல்லையாவின் பதிவுசெய்யப்பட்ட வரவேற்புரை
எல்லோரையும் வரவேற்கிறது. “உங்கள் எல்லோரையும் எங்கள் வீட்டு விருந்தினர்போல
நடத்தும்படி சிப்பந்திகளைப் பணித்துள்ளேன்” என்றார் டாக்டர்(?) மல்லையா. கவனிப்பு
மோசமில்லை. அன்று வான் வழியில் பல காற்றழுத்தங்களும் படபடப்புகளும். அதிக நேரமும்
பயணிகள் இருக்கையிலேயே இருக்கும்படி உத்தரவு. யாரும் கழிவறைக்குச் செல்ல
முடியவில்லை. இடையில் விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும் நடுத்தர வயதுப்
பெண்கள் கழிவறைக்குப் படையெடுத்தனர். விமானப் பணிப்பெண்கள் அவர்களை வழிமறித்தனர்.
‘இப்போது பாதுகாப்புத் துறையினர் வந்து சோதனை மேற்கொள்வார்கள், அதுவரை
எல்லோரும் இருக்கையில் அமர’ வேண்டினார்கள். பின்னர் ‘இப்போது பயணிகள் விமானம்
ஏறுகிறார்கள்’ என்று அறிவித்து உட்காரவைத்தனர். பின்னர் கழிவறைகள் சுத்தம்
செய்யப்படுவதாக அறிவிப்பு. இதற்குள் விமானம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. பல
பெண்கள் வாக்கு வாதம் செய்தனர். பல புகார்ப் படிவங்கள் நிரப்பப்பட்டன.
விஜய் மல்லையா அவர்களின் விருந்தோம்பல் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவ்விருந்துகளில் ஒன்றுக்கு எப்போதேனும் அழைக்கப்படுவேனோ தெரியவில்லை. அத்தகைய
வாய்ப்பு வந்தால் சிறுநீரகத்தைக் காலிசெய்துவிட்டுப் போக வேண்டும் என்பதை நினைவில்
இருத்திக்கொள்ள வேண்டும்.
|