|
தில்லிக் குளிர்காலம் கால்களை நடக்கத் தூண்டும். பாய்ந்து வரும் வாகனங்களின்
சக்கரங்களில் மாட்டிக்கொள்ளாமல் நடக்க இந்த நகரத்தில் முடியும். நான் பாதுகாப்பு
அமைச்சகத்தில் பணியாற்றிய நாட்களில் மதிய உணவு இடைவேளைபோது தவறாமல் நடப்பேன். ஒரு
நாள் ராஜாஜி சாலையில் நடந்தபோது ஒரு காவலரால் நிறுத்தப்பட்டேன்.
“ஐயா, நீங்கள் இந்த வழியில் செல்ல முடியாது”
“ஏன்?”
“பிரதமர் இந்த வழியாக வருகிறார்.”
“எனக்கு அதைப் பற்றி ஒரு ஆட்சேபணையும் இல்லை. தாராளமாக வரட்டும்.’
“ஐயா, யாரும் சாலையில் இருக்கக் கூடாது, என்பது உத்தரவு.”
பேசிக்கொண்டிருக்கையிலேயே சங்குகள் அலறத் தொடங்கிவிட்டன.
“திரும்பிப் போக நேரமில்லை. தயவுசெய்து சாலைக்குப் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு
நில்லுங்கள்.”
பிரதமருக்கு எனது பிருஷ்டத்தைக் காட்டுவது அவ்வளவு சரியாக இருக்காது என்று அந்தக்
காவலரிடம் சொல்ல முயன்றேன். ஆனால் அவர் பதற்றத்தில் இருந்ததால் மறுவார்த்தை பேசாமல்
அவர் சொன்னபடி செய்தேன்.
அப்போது பிரதமராக இருந்தவர் வாஜ்பேயி.
இந்தச் சம்பவம் குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்
இந்தியில் புகழ்பெற்ற ஒரு கவிஞர். எழுத்தாளர்.
“இவருக்கு எதற்கு இத்தனை பாதுகாப்பு? பாவம் வயதானவர். பாகிஸ்தானியருக்கும் இவரைப்
பிடித்திருக்கிறது. இவருக்கு யார் குறிவைக்கப்போகிறார்கள்?”
“என் அருமை நண்பா, இந்திக் கவிதைமீது வெறித் தனமான பிரியம் வைத்திருப்பவர்களில் பலர்
தில்லியில் இருக்கிறார்கள்.”
எனது சிரிப்பு அடங்கப் பல நிமிடங்கள் எடுத்தன. வாஜ்பேயும் என் நண்பர் சொன்னதைக்
கேட்டி ருந்தால் நிச்சயம் சிரித்திருப்பார். அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்.
அரசின் முதல்நாற்காலியில் அமர்ந்துகொண்டிருக்கும் காரணத்தை வைத்துக்கொண்டு
கவிதையின் கடைசி நாற்காலிக்குக்கூடத் தன்னால் உரிமை கொண்டாட முடியாது என்பது
வாஜ்பேயிக்குத் தெரிந்திருக்கும் என ஓரளவு நம்ப முடியும்.
தமிழகத்தில் இந்த நம்பிக்கை யாருக்கும் நிச்சயமாக வராது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அரங்கங்களில் படிப்பதற்காக எழுதப்பட்ட கவிதை
ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கம்பனையும் நம்மாழ்வாரையும் ஆண்டாளையும்
நாவுக்கரசரையும் மாணிக்க வாசகரையும் செம்மொழி அணியில் சேர்த்துக்கொள்ளத்
தயக்கப்படும் கவிதை அது.
இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்திக் கவிதை எழுதும் என் நண்பரிடம்
படித்துக்காட்டினேன்.
அவர் சொன்னது இது:
“இது கவிதை என்றால், நான் பாரக் ஒபாமா.”
ஒருவேளை எனது மொழிபெயர்ப்பில் தவறு இருந்திருக்கலாம்.
2
நல்ல கவிதை எது?
மனிதர்களாகப் பிறந்தவர்களில் மிகச் சிலருக்கு வாழ்வின் கணக்கில்லாப் பரிமாணங்களை
வார்த்தைகளில் பிடித்துக் கவிதைகளில் அடைக்கும் திறமை வாய்த்திருக்கிறது. இந்தத்
திறமை மொழிக்கு அப்பாற்பட்டது. எந்த மொழியில் படிக்கப்பட்டாலும் பிடித்து
வைக்கப்பட்டிருக்கும் பரிமாணத்தை விடுதலை செய்து படிப்பவர்கள் முன்னே நிறுத்தி
அவர்களை வியப்பில் ஆழ்த்தும் திறமை அது.
நாம் உலகையே வார்த்தைகளுக்குள் அடைக்கிறோம் என்ற பெருமிதம் இத்தகைய கவிதைகளைப்
படைப்பவர்களுக்கு இருந்திருக்கிறது.
பெரிய தமிழ்க் கவிஞர்களுக்கு இந்தப் பெருமிதம் வாய்த்திருந்திருக்கிறது. உதாரணமாக
பொய்கை ஆழ்வார் சொல்கிறார்:
வையம் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடரானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று
உலகை அகலாக, கடலை நெய்யாக, கதிரவனை நெருப்பாகக் கொண்ட அந்த ஒளியின் கீழ் சொல் மாலை
புனைந்துவிட்டேன் என்ற அளவிட முடியாத மகிழ்ச்சி இந்தக் கவிஞருக்கு. இதை நான்கு
வரிகளில் அவரால் நமக்குச் சொல்ல முடிந்திருக்கிறது. கடுகைத் துளைத்துக் கடலைப்
புகட்டும் மாயத்தால் கடுகைப் பிளந்து கடல் வெள்ளத்தில் நம்மை மூழ்கவைக்கவும்
முடியும் என்பதை நமக்கு உணர்த்தும் கவிதை இது.
இந்தத் திறமை பழைய கவிஞர்களின் தனிச் சொத்து அல்ல. ஒரு திரைப்படப் பாடலின் வரிகள்
இவை:
‘மழை வந்தால் தண்ணீர் ஓடும்
மறுநாளே வண்டி ஓடும்.’
இருந்தும் இல்லாமலும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆறு ஒன்றைப் பற்றிய இந்த வரிகள்
கொண்டுவரும் பிம்பங்கள் பல. வறுமை, வறட்சி, பாதை இல்லாப் பயணங்கள், மழை மறைவு
போன்ற பிம்பங்கள் எனக்கு உடனே தோன்றுகின்றன. இது நல்ல கவிதையின் ஒரு கீற்று.
ஆங்கிலத்தில் டெட் ஹ்யூஸ் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். படிக்க எவ்வளவு பேறு
செய்திருக்க வேண்டும் என்பதைப் படிக்கும்போதெல்லாம் உணர்த்துவது. ஓடை மீன் (ஒழுகுநீர்
ஆரல்?) ஒன்றைப் பற்றிய கவிதை இது.
Brooktrout
The Brooktrout, superb as a matador,
Sways invisible there
In water empty as air.
The Brooktrout leaps, gorgeous as a jaguar,
But dropping back into swift glass
Resumes clear nothingness . . .
You can catch Brooktrout, a goggling gewgaw -
But never the flash God made
Drawing the river's blade.
Ted Hughes
ஓடைமீன்
ஓடைமீன், காளை அடக்குபவனைப் போலக் கண்ணாமூச்சி காட்டுவது,
அதோ ஆடுகிறது கண்ணுக்குத் தெரியாமல்
காற்றைப் போலக் காலியாக இருக்கும் தண்ணீரில்.
ஓடைமீன், துள்ளுகிறது, வழுவழுப்பான கருஞ்சிறுத்தையைப் போல்
உடனே விழுகிறது வேகமான கண்ணாடிக்குள்
தெளிவான வெறுமையாக, மறுபடியும்...
உன்னால் ஓடைமீனைப் பிடிக்க முடியும், கண்கள் பிதுங்கி, காசு பெறாதது.
ஆனால் அந்த ஒளியை, கடவுள் நதியின் வாளை வெளியில் எடுத்துப் படைத்ததை,
ஒருபோதும் பிடிக்க முடியாது.
டெட் ஹ்யூஸ்
3
இனி மோசமான கவிதைகளுக்கு வருவோம்.
1935இல் ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பு வெளிவந்தது. அதன் தலைப்பு ‘The Stuffed Owl -
An Anthology of Bad Verse (பதப்படுத்தப்பட்ட ஆந்தை - மோசமான கவிதைகளின் தொகுப்பு).
இந்தத் தொகுப்பில் ஆங்கிலத்தில் மிகச் சிறந்த கவிஞர்களாகக் கருதப்படுபவர்களின்
கவிதைகள் இருந்தன - வொர்ட்ஸ்வொர்த், ட்ரைடன், கீட்ஸ், பைரன், டென்னிஸன்
போன்றவர்களின் கவிதைகள். நல்ல கவிஞர்கள் நல்ல கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்க
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதைக் காட்டும் தொகுதி. அமேசானில் இந்தத்
தொகுப்பு இன்றும் கிடைக்கிறது. தமிழில் இத்தகைய தொகுப்பு வெளியிடப்பட்டால் பல
பாகங்களில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இந்தத் தொகுப்பில் இன்று உயிருடன்
இருந்து பதவியில் இருப்பவர்களின் அல்லது அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களின்
கவிதைகள் இடம்பெற்றால் பதிப்பாசிரியரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பது சிறிது
கடினம்.
அவரது கவிதை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றாலும், பைரன் மோசமான கவிதைக்கு மிகப்
பெரிய எதிரி. பைரனின் சமகாலத்தவர் ஸாதே (Southey). அவர் ஒரு இரண்டாம் தரக் கவிஞர்
என்பது பைரனின் அசையாத நம்பிக்கை. ஆனால் இங்கிலாந்தை அன்று ஆண்ட மூன்றாம் ஜார்ஜ்
மன்னர் அவ்வாறு எண்ணவில்லை. ஸாதே அவரது ஆஸ்தான கவிஞர். சில ஆண்டுகள் மனம்
பிறழ்ந்திருந்த மூன்றாம் ஜார்ஜ் 1820இல் இறந்தார். ஸாதே அவருக்கு ஒரு இரங்கற்பா
எழுதினார். இந்தப் பாடலில் மன்னர் எவ்வாறு சுவர்க்கத்தில் வெற்றிகரமாக நுழைகிறார்
என்பதைச் சித்தரித்திருந்தார். பைரன் ஒரு பதில் கவிதை எழுதினார். இந்தக் கவிதையில்
ஜார்ஜ் எப்படிச் சுவர்க்கத்தில் நுழைந்தார் என்பதை இவ்வாறு சொன்னார். ஸாதே முன்
சென்று தனது கவிதைகளைச் சுவர்க்க வாயிலைக் காப்பவர்களிடம் படித்தார். அவர்கள் சிதறி
ஓடத் தொடங்கினர். அப்போது யாருக்கும் தெரியாமல் மூன்றாம் ஜார்ஜ் சுவர்க்கத்தில்
நுழைந்தார்.
பைரனின் இந்தக் கவிதையில் புகழ்பெற்ற வரிகள் இவை
He first sank to the bottom - like his works,
But soon rose to the surface - like himself;
For all corrupted things are buoyed like corks
அவர் முதலில் மூழ்கினார் - அவரது படைப்புகளைப் போல
ஆனால் விரைவில் மேலே வந்தார் - தன்னைப் போல
ஏனெனில் அழுகியவை எல்லாம் தக்கைகளைப் போல மிதக்கும்.
4
1997இல் மற்றொரு புத்தகம் வெளிவந்தது. அதன் தலைப்பு Very Bad Poetry - மிக மோசமான
கவிதை. இந்தப் புத்தகம் கூறுகிறது: மிக மோசமான கவிதை எழுதுவதற்குத் திறமை வேண்டும்.
ஒரு நல்ல வரிகூட வராமல் பார்த்துக்கொள்ளக் காதுகள் மரத்தால் செய்யப்பட்டவையாக
இருக்க வேண்டும். நினைத்தால் நெகிழ்ந்து உருகிப் போவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
ஒருவேளை திறமை சிறிதும் இல்லாமல் இருந்தால் தொடர்ந்து மிக மோசமான கவிதைகளை
எழுதுவதற்கு அசாதாரணமான தன்னம்பிக்கை வேண்டும்.
இணையத்தில் கவிதை எழுதித் தமது புகழை விடா முயற்சி செய்து பரப்ப முற்படுபவர்களின்
தன்னம்பிக்கையும் அசாதாரணமானது. இந்தக் கவிதையைப் படியுங்கள். மொழிபெயர்ப்பு
தேவையில்லாத கவிதை இது:
PLAY
Art is color play
Sculpting is shape play
Drawing is line play
Music is sound play
Pottery is clay play
Drama is pretend play
Cinema is story/visual/sound play
Singing is voice play
Writing is word play
Dance is movement play
Quilting is fabric play
Sports are game play
Chess is strategy play
It is only work when a critic ruins the fun.
தமிழ் சினிமாக்களைத் தவறாமல் பார்த்து வருபவர்களுக்கு இந்தக் கவிதை நிச்சயம்
பிடிக்கும்.
பிபிஸி இணையத்தில் How to write Bad Poetry? என்ற ஒரு தளம் இருக்கிறது. இந்தத் தளம்
மோசமான கவிதை எழுதுவதற்கு எதுகை மோனை அவசியம் என்கிறது. இதைப் படியுங்கள்.
இதற்கும் மொழிபெயர்ப்பு தேவையில்லை.
Boom!/ It shook the room!/ The sound of my doom!/ Then, I smelt the fume!/ And
heard the death tune! Played on a loom!/ Everything went... Voom!
இந்தக் கவிதையில் tune மாத்திரம்தான் உதைக்கிறது. மற்றபடி நமது கவியரங்கங்களில்
படிக்கப்பட்டுப் பலத்த கைதட்டுகளைப் பெறத் தகுதியான கவிதைதான் இது.
தமிழில் மிக மோசமான கவிதைகளை எழுதப் பயிற்சி தேவையில்லை. அந்தத் திறன் இயற்கையாகவே
அமைந்துவிடுகிறது.
இந்தக் கவிதை எனக்கு இயற்கையாக வந்தது.
அன்பால், அறிவால்,
பண்பால், பாசத்தால்
நட்பால், நயத்தால்,
சொல்லால், செயலால்,
வாயால், வார்த்தையால்,
கண்ணால், காதலால்
காதால், கவிதையால்
மூக்கால், முனகலால்,
நாக்கால், நரம்பால்,
உடலால், உயிரால்,
உதையால், மிதியால்
உன்னால், என்னால்
ஒருவரை ஒருவர்
உணர முடியும்
5
சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு முக்கியமான வரி -‘உன் சீரிளமை திறம்
வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே.’ செயல் மறப்பதை ஒரு வேள்வியாகச் செய்பவர்கள்
தமிழகத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால், கவிதைகள் எழுதுவதால், தமிழுக்கு
விழாக்களில் வாழ்த்துகள் பெறுவதைத் தவிர உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.
செம்மொழிப் பட்டம் நமது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் தங்கள் பதவிகளைக்
காப்பாற்றிக்கொள்வதற்காக வழங்கும் டாக்டர் பட்டங்களைப் போன்றது. மொழிக்கு அதனால்
எந்த நன்மையும் வந்துவிடாது. மாறாக, செயல் மறந்ததால், தமிழில் பழந்தமிழ் நூல்களின்
செம்பதிப்புகள் பஞ்சம். தரப்படுத்தப்பட்ட (standard) அகராதிகள் பஞ்சம்.
தொலைக்காட்சியில் ‘ல’ ‘ழ’ ‘ள’ எழுத்துகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் தெரிந்தவர்கள்
பஞ்சம். வாழ்த்துப் பாக்களுக்குப் பஞ்சம் இல்லை. அவற்றில் நல்ல கவிதைகளுக்குப்
பஞ்சம்.
தமிழில் நல்ல வாழ்த்துப் பாக்கள் இல்லாமல் இல்லை. பல்லாண்டு பல்லாண்டு என்று
இறைவனையே வாழ்த்தியவர்கள் நாம்.
‘அம்மையாய் அப்பனாய அத்தனே, அருளின் வாழ்வே’ என்றும், ‘பாழிய பணைத்தோள் வீர,
துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே’ என்று அனுமனை கம்பனின் சிறையிருந்த செல்வி
வாழ்த்தும்போதும்
This royal throne of kings, this sceptered isle,
This earth of majesty, this seat of Mars,
This other Eden, demi-paradise,
This fortress built by Nature for herself
என்று ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தை வாழ்த்தும்போதும் மொழிகளின் அழியா அழகுகள்
வெளிப்படுகின்றன. ஆனால் வாழ்த்துவதற்கு நல்ல கவிஞர்கள் அமைய வேண்டும். பெரும்பாலும்
அவ்வாறு அமைவதில்லை. மோசமான கவிஞர்களே வாழ்த்துப்பாக்களை வாரி வழங்குகிறார்கள்.
ஆங்கிலத்தின் மிக மோசமான கவிஞன் யார்?
எல்லோரும் William Mcgonagall என்று சொல்கிறார்கள். ஸ்காட்லண்டைச் சேர்ந்த இவர்
சொல்கிறார்: எனது வாழ்க்கையிலேயே என்னை அதிரவைத்த சம்பவம் எனக்கு நான் ஒரு கவிஞன்
என்று தெரிந்ததுதான். இன்றுவரை இவரது கவிதைகள் ஆங்கிலக் கவிதைகள் படிப்பவர்களை
அதிரவைத்துக்கொண்டிருக்கின்றன. இவரது கவிதையைப் படித்த பாதிரி ஒருவர் ‘ஷேக்ஸ்பியர்
கூட இந்த மாதிரி எழுதியதில்லை” என்றாராம். எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று
தெரியவில்லை.
நமது கவிஞர்களுக்கு இருப்பதுபோல இவருக்கும் ஒரு ரசிகர் மன்றம் இருக்கிறது. William
Topaz Mcgonagaal Appreciation Society என அழைக்கப்படும் இந்த ரசிகர் மன்றக்
கூட்டத்திற்குத் தான் எடின்பரோவில் இருந்தபோது சென்றிருப்பதாக நண்பர் இரா. முருகன்
என்னிடம் கூறியிருக்கிறார்.
இந்தக் கவிஞரும் வாழ்த்துப்பாக்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் எனக்குப் பிடித்தது
அவர் ஷேக்ஸ்பியரை வாழ்த்தி எழுதியிருப்பது An address to Shakespeare என்ற ஒரு கவிதை.
கவிதையின் முதல் நான்கு வரிகள்:
Immortal! William Shakespeare, there's none can you excel,
You have drawn out your characters remarkably well,
Which is delightful for to see enacted upon the stage
For instance, the love-sick Romeo, or Othello, in a rage;
மொழிபெயர்ப்பு:
என்றும் வாழ்பவன் நீ! வில்லியம் ஷேக்ஸ்பியர். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் நீ!
மிக்கத் திறனுடன் நீ வரைந்த பாத்திரங்கள்
மிளிர்கின்றனர் அரங்கேறும்போது,
காதல் வயப்பட்ட ரோமியா ஒரு சான்று. கோபமுற்ற ஒத்தல்லோ மற்றொன்று.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் வரிகள் நமது செம்மொழி வாழ்த்துப் பாடலில்
நுழைந்திருப்பதைப் போல நண்பர் மெக்கோநகாலின் கவிதையிலும் ஷேக்ஸ்பியரின் வரிகள்
நுழைந்திருக்கின்றன.
“Oh,God that men should put an enemy in their mouths to steal away their
brains!” (கடவுளே, மனிதர்கள் ஏன்தான் மூளைகளைத் திருடும் எதிரியை வாய்களில்
இடுகிறார்களோ) என்ற Othello நாடகத்தின் குடியின் கேட்டைப் பேசும் வரிகள் இவரது
வாழ்த்துக் கவிதையில் வருகின்றன.
நண்பர் மெக்கோநகாலின் திருடப்பட்ட மூளை (குடிப்பழக்கம் இருந்ததால் திருடப்பட்டதாகத்
தெரியவில்லை) அவருக்குக் கடைசிவரை திரும்பக் கிடைக்கவில்லை. விடாமல் கவிதை
எழுதிக்கொண்டிருந்தார்.
தமிழின் மிக மோசமான கவிஞர் யார்? என்னைத் தவிர.
|