|
ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் அம் மக்களுக்குச் சமூக
நீதி கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தும்வகையிலும் தமிழக அரசாங்கம் செயல்படவில்லை
எனக் குற்றம்சுமத்தியிருக்கிறது தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம். மாநிலத்தில்
ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து பிப்ரவரி
மூன்றாம் வாரத்தில் தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்திய ஆணையத்தின் துணைத் தலைவர்
பேராசிரியர் கும்ளே தலைமையிலான குழு ஆதிதிராவிடர் நலன் சார்ந்து தமிழக அரசாங்கம்
செயல்படும் விதம் குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
ஆய்வு குறித்து ஆணையம் ஆறு மாதங்களுக்கு முன்னரே அரசுக்குத் தகவல்
தெரிவித்திருந்தும் தீண்டாமையை ஒழித்தல், கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆதிதிராவிட
மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல் போன்ற
விஷயங்களில் தமிழக அரசாங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான
புள்ளிவிவரங்களைக்கூடத் தலைமைச் செயலாளரால் அளிக்க முடியவில்லை எனக் கடந்த 18ஆம்
தேதி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கும் கும்ளே,
ஆதிதிராவிடர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத்
தமிழக அரசாங்கம் சரியாகக் கையாளவில்லை எனவும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை வீதம் மிகக்
குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கும்ளே, தலித்துகளுடன் விழுப்புரம்
அருகேயுள்ள காங்கையனூர் திரவுபதையம்மன் கோயிலுக்குள் நுழைய முயன்ற குடியாத்தம்
தொகுதி சட்டமன்ற உறுப்பினரான லதாமீது தாக்குதல் நடத்தியவர்கள்மேல் இதுவரை நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
முற்போக்கான மாநிலம் என அறியப்படும் தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும்
இழிநிலை இன்னும் நீடித்திருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் தனக்குக்
கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் கும்ளே. தமிழகத்தை ஆளும் திமுகவை
‘ஆதிதிராவிட முன்னேற்றக் கழகம்’ என விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார்
போற்றியுள்ள பின்னணியில், இந்த அரசின் தலைமைச் செயலாளரிடம் மொத்த அரசு ஊழியர்களில்
எத்தனை பேர் ஆதிதிராவிடர்கள், பதவியுயர்வு அளிக்கப்பட்ட ஆதிதிராவிடப் பணியாளர்களின்
எண்ணிக்கை, ஆதிதிராவிடர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ளவற்றின்
துறை வாரியான, மாவட்ட வாரியான எண்ணிக்கை எவ்வளவு என்பன போன்ற அடிப்படையான
புள்ளிவிவரங்கள்கூட இல்லை என்பது ஆதிதிராவிடர் நலனில் இந்த அரசாங்கம் காட்டி வருகிற
அக்கறைக்குச் சான்றாக உள்ளது.
பிற சாதியினரின் ஆக்கிரமிப்புகளுக்குள்ளான நிலங்களே இதுவரை தலித் மக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 8,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும்
சுட்டிக்காட்டியிருக்கிறது ஆணையம். தலித்துகள் தொடர்புடைய வழக்குகளை விரைவாக
விசாரித்து நீதி கிடைக்கப்பெற வகை செய்யும் முறையில் அதற்கெனச் சிறப்பு
நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற தலித் அமைப்புகளின் நீண்டகாலக் கோரிக்கையை
ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. தலித்துகளுக்குச் சிறந்த சேவை
ஆற்றியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரால் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான
‘அம்பேத்கர் விருதை’ப் (ஆணையர் தமிழக அரசைக் கண்டித்துப் பேட்டியளித்த அதே நாள் மாலை
இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது) பெற்றிருக்கும் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளில்
ஒன்றாகப் போற்றப்படும் அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற மூன்று சதவிகித
உள் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆணையத்தின் அனுமதி பெறாமல், அதன் ஆலோசனையைப் பெறாமல்
நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும்
குற்றம்சாட்டியுள்ள கும்ளே, தமிழக அரசின் அந்தச் சட்டம் ரத்துசெய்யப்படலாம் என
எச்சரித்திருக்கிறார்.
ஆணையத்தின் விமர்சனங்களுக்குக் கருணாநிதி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.
ஆணையம் ‘யாருடைய பேச்சையோ’ கேட்டுக்கொண்டு தமிழக அரசின் மீது குற்றம்
சுமத்தியிருப்பதாகச் சொல்லும் முதல்வர் இது பற்றி பிரதமரிடம் முறையிடப் போவதாகவும்
சொல்லியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகப் பல்வேறு தரப்பினரும் எடுத்துவரும்
விழாக்களில் பொழியும் பாராட்டு மழையில் சொட்டச்சொட்ட நனைந்து நிற்கும்
கருணாநிதிக்கு ஆணையத்தின் இத்தகைய விமர்சனங்கள் எரிச்சலை ஏற்படுத்துவது ஆச்சரியமான
ஒன்றல்ல.
சுதந்திரம் பெற்று 60ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டில் உள்ள மக்கள்தொகையில் 25
சதவிகிதமுள்ள தலித்துகள் சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் கடைநிலையிலேயே
இருத்தப்பட்டிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டிய ஆட்சியாளர்கள், அரசியல்
சாசனப்படி அமைக்கப்பட்ட ஒரு ஆணையத்தை விமர்சிப்பது அவமானகரமானது. பிற்படுத்தப்பட்ட,
தலித் மக்களின் நலனை முன்னிறுத்தி அவர்களது வாக்குகளைப் பெற்று நாற்பதாண்டுகளுக்கும்
மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரும் திமுகவும் அதிமுகவும் தலித் வாக்குவங்கியைப்
பயன்படுத்திப் பெற்ற அதிகாரம் ஆதிக்கச் சாதியினரின் முன்னேற்றத்திற்கே
துணைபுரிந்துள்ளது என்பதற்குத் தமிழகத் தலித் மக்களின் அவல நிலையே சான்று.
கீழ்வெண்மணி தொடங்கி, உத்தபுரம்வரை இதற்குப் பல உதாரணங்களைத் தர முடியும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தலித் மக்கள் உயர்சாதியினரின்
அச்சுறுத்தல்களுக்கும் ஓயாத வன்முறைகளுக்கும் உள்ளாகி வருவதையும் தீண்டாமை பல்வேறு
வடிவங்களில் நீடித்துவருவதையும் தலித் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும்
சுட்டிக் காட்டிவந்துள்ளன. தலித் மக்களைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உயர்சாதி, போலீஸ், நீதித் துறை, அதிகாரவர்க்கக்
கூட்டணியால் முடக்கப்பட்டுள்ள உண்மையைப் புள்ளி விவரங்களைக்கொண்டு நிரூபிக்க
வேண்டிய தேவையே இல்லை. அந்த அளவுக்கு வெளிப்படையாக அந்தச் சட்டம் மீறப்பட்டுவருகிறது.
கொங்கு வேளாளர் முன்னேற்றப் பேரவை போன்ற சாதியக் கட்சிகளும் பிற கட்சிகளில் உள்ள
ஆதிக்கச் சாதியினரும் அந்தச் சட்டப் பிரிவையே நீக்க வேண்டுமென வெளிப்படையாகக்
கோருமளவுக்குத் துணிந்ததற்கு அந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, தலித்துகளைப்
பாதுகாப்பதில் தொடர்ந்துவரும் அரசுகள் கடைபிடிக்கும் அலட்சியப்போக்கே காரணம்.
நிலச்சீர்திருத்தச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி, நிலமற்ற தலித் மக்களுக்கு
விவசாய நிலம் கிடைக்கப் பெறுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை
மேற்கொண்டிருக்குமானால் கிராமப்புறத் தலித் மக்கள் உண்மையான சமூகப் பொருளாதார
விடுதலையை எட்ட உதவியிருக்க முடியும். ஆதிக்கச் சாதி நிலவுடமையாளர்களின் பிடியில்
இருக்கும் கட்சிகளிடமும் அவற்றின் தலைமையிலான அரசாங்கங்களிடமும் அது போன்ற
உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பது பேதமை. கருணாநிதியோ வேறு எந்தவொரு முதல்வரோ
இதற்கு முழுமையான பொறுப்பு ஏற்க முடியாது. ஆனால் முதல்வருக்குத் தலித்துகளின்
நலனில் உண்மையான அக்கறை இருக்குமானால், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் போன்ற
குறைகளைச் சுட்டிக்காட்டும் - அரசியல் சாசனப்படி அதற்கு உரிமை பெற்ற - அமைப்புகளின்
விமர்சனங்களைத் திறந்த மனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான்
குறைபாடுகளுக்கான காரணிகளை ஆராய்ந்து களைவதும் தவறிழைத்தவர்களைத் தண்டிப்பதும்
சாத்தியப்படும். அதைவிடுத்து ஆணையத்தின் விமர்சனங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்க
முயல்வதும் ஆணையம் தலித்துகளின் நலனுக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை
உருவாக்க முயல்வதும் கருணாநிதியைச் சிறந்த ராஜதந்திரியாகக் காட்டுவதற்கு மட்டுமே
பயன்படும்; தலித் மக்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை.
ஐந்து முறைகளில் 15 ஆண்டுகள் முதல்வர் நாற்காலியை அலங்கரித்திருக்கிற, அரை
நூற்றாண்டுக்கு மேலாகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து சட்டரீதியான வழிமுறைகளில்
அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருக்கிற கருணாநிதிக்கு அருந்ததிய மக்களுக்கு உள்
ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல்
சாசனரீதியிலான வழிமுறைகளைப் பின்பற்ற முடியாமல் போனது ஏன் என்னும் கேள்வி எழுகிறது.
ஆணையரின் எச்சரிக்கைக்குப் பின்னாலுள்ள சட்டரீதியிலான நியாயத்தை மறுத்து அவர்
சுட்டிக்காட்டிய குறைகளைக் குறித்து பிரதமரிடம் முறையிடுவேன் எனக் கருணாநிதி
சொல்வது இழைத்த தவறை மறைக்க ஆடும் திசைதிருப்பு நாடகம்.
தலித்துகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் அவர்களது சமூக விடுதலையை இலக்காகவும்
கொண்டு தொடங்கப்பட்டுத் தலித் மக்களுக்கு எழுச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டிய
தலித் கட்சிகள் பலவும் ஓரிரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்காகவும் ஏழெட்டு சட்டப்
பேரவைத் தொகுதிகளுக்காகவும் திமுக, அதிமுகவிடம் சரணடைந்து புகழுரைகளாகவும்
பரிசுகளாகவும் சாமரம் வீசிக்கொண்டிருக்கிற அவலச் சூழலில் பேராசிரியர் கும்ளே
போன்ற அதிகாரிகள் தம் கடமையைச் சரியாகச் செய்திருப்பதை வரவேற்போம். ஆணையத்தின்
பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட, தமிழக அரசுக்குப் போராட்டங்கள் வழி நெருக்கடி
ஏற்படுத்தப்பட வேண்டும். அறிவுஜீவிகள் திமுக அரசாங்கக் காலங்களில் தாம்
மேற்கொள்ளும் மகாமௌனத்தைக் கலைத்துத் தம் கருத்துகளை அழுத்தமாகப் பதிவுசெய்ய
வேண்டிய தருணம் இது.
|