Google   www kalachuvadu.com

பத்தி: இங்கிலாந்து: மறுபார்வை
மை நேம் இஸ் கான்: புளித்துப்போன காதல் கதை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

முதலில் சொல்லிவிடுகிறேன். இது முழு மையான திரைப்பட விமர்சனம் அல்ல. அதற்குச் சம்பந்தமில்லாத செய்திகளும் வரும்.

காவல் துறையினரின் பாதுகாப்பு இன்றி, e-bayஇல் எக்கச்சக்கமான தொகை கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்காமல், அரை அரங்கம் நிரம்பிய பார்மீங்கம் சினிவேர்ல்ட் திரை அரங்கில் ‘மை நேம் இஸ் கான்’ படத்தை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் பார்த்தேன். ஆரவாரமில்லாமல் என்ற வார்த்தையை நெஞ்சறிந்து தான் இங்கு நுழைத்திருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. சென்ற வாரம் இதே அரங்கில் என்னை நானே ஒரு சுய ஆக்கினைக்கு உட்படுத்திக்கொண்டேன். தன்னறிவைத் தற்காலிகமாக இழந்த தருணத்தில் ஒரு தமிழ்ப் படத்தை அதீத சினிமா உணர்வுள்ள தமிழ் ரசிகர்களுடன் பார்த்தேன். ‘அசல்’ படத்தின் கதா நாயகன் அஜித் திரையில் முதல் முறையாகத் தன் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தபோது திரை அரங்கமே அதிரும்படி கத்தல்கள், கைதட்டல்கள், விசில்கள், அங்க அசைவுகள். இதற்கு எதிர்மாறாக, ஹிந்தி திரைப்படத்தில் ஷாரூக் கான் முதலில் அறிமுகமாகும்போது, இலக்கிய ஆசிரியர்கள் வர்ணிப்பதுபோல் திரையரங்கில் மயான அமைதி நிலவியது. அரங்கின் கம்பளத்தில் சோளப் பொரி விழுந்தால் கூடக் கேட்கும்படியான மௌனம். இந்த தாய்நாடு விட்டு வாழும் தமிழ் ரசிகர்களின் சாமி ஆட்டம் ஒரு பட்டினத்துப் பழமொழியை நினைவூட்டியது: you can take a person out of the village but you can’t take the village out of the person. பெர்லினில் ‘மை நேம் இஸ் கான்’ படத்துக்கான நுழைவுச்சீட்டு ஆயிரம் ஈரோக்களுக்கு e-bayஇல் விலை போனதாக வலைத்தளத்தில் படித்தேன். அதில் தென்படும் எல்லாச் செய்திகளும் நம்பத்தக்கவையல்ல.

சிவசேனாவும் அதன் தலைவர் பால் தாக்கரேயும் இந்தப் படத்திற்குத் தெரிவித்த எதிர்ப்பு, இந்தப் பத்தியைக் கணினியில் ஏற்றும்வரைக்கும் ஐக்கிய இராச்சியத்து இந்துக் கலாச்சாரக் கண்கானிகளை அதிகம் பாதித்ததாகத் தெரியவில்லை. பால் தாக்கரே என்ற இன்றைய கெட்டியான எண்ண இயலாளர் அவர் கேலிப்பட வரைவாளராக இருந்த ஒரு காலகட்டத்தில் என்ன மாதிரியான ஆளாக இருந்தார் என்பதைத் தற்செயலாக என் கண்ணில்பட்ட ஒரு நூல் தெரிவித்தது. அதை இந்தப் பத்தியின் இறுதியில் சொல்கிறேன்.

பழக்கப்பட்ட பாத்திரப் படிமங்கள்

சரி, திரைப்படத்திற்கு வருவோம். இந்தப் படத்தின் கலை நுணுக்கங்கள், ஒளிப்படக் கோணங்கள், திரை இசை பற்றிய தீர்ப்புகளை சினிமா விமர்சனத்தைத் தொழில் வாழ்வாகக்கொண்ட தொழில்முறை விமர்சகர்களிடம் விட்டுவிடுதே சரி. ஷாரூக்கானுக்கு இந்த வருடம் ஆஸ்கார் பரிசு கிடைக்காவிட்டால் அவர் பக்தர்கள் துடிதுடித்துப்போய்விடுவார்கள். சராசரி மனிதர்களுக்கு இவரது போலித்தனமான நடிப்பு எரிச்சலைத் தரும்.

இந்தப் படம் வெளிப்படுத்தும் கலாச்சார தாற்பரியங்கள் குழப்பத்தைத் தருகின்றன. பாத்திரப் படைப்புகள் பொதுக்களத்தில் பரிச்சயமான வகை மாதிரிகளுக்குள்ளேயே சுழலுகின்றன.

மை நேம் இஸ் கானில் மூன்று நிகழ்வுக் கோப்புகள் உண்டு - இஸ்லாம் பற்றிய தப்பான மனக்கோட்டம், Asperger’s syndrome உடைய ரிஸ்வான்கானின் சரிதம் மற்றும் இந்துவான மதிராவுக்கும் முஸ்லிமான ரிஸ்வானுக்குமான காதல் கதை. இந்திய வெகுசனத் திரைப்பட மரபுப்படி இங்கே சொல்லப்பட்ட முதலிரண்டு காரியங்களும் வளமைபோல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. 9/11க்குப் பிறகு இஸ்லாமுக்கும் மேற்கு உலகுக்கும் ஏற்பட்ட தப்பெண்ணங்களைச் செப்பனிடும் அறிகுறிகள் படத்தில் இல்லை. ரிஸ்வான் தன்னுடைய அஸ்பேகர்ஸ் பிணிக்கூட்டு (syndrome) நிலைமையை எப்படிச் சமாளிக்கிறான் என்ற விளக்கங்கள் இல்லை. எஞ்சியிருப்பது எப்போதும் பார்த்துப் புளித்துப்போன காதல் கதைதான்.

9/11க்குப் பின் வெளிவந்த திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் எதிரெதிர்க் கூறுகளில் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று, படு இருண்மையான தீவிரவாதியாக இருப்பார். அல்லது அதி உத்தமராக இருப்பார். இந்த இரண்டு வகை மாதிரிகளும் இந்தப் படத்தில் உண்டு. பயங்கரவாதத்தைப் போதிக்கும் இஸ்லாமியரும் ரிஸ்வானைக் கத்தியால் குத்தவருபவரும் முந்தைய வகைக்கு எடுத்துக்காட்டு. ரிஸ்வான் சகோதரரின் மனைவி ஹசினா கான் இஸ்லாமிய மரபாளராக மாறுவதையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம். தெளிவுள்ளவராயிருந்த இந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர், இறுகி வரும் அமெரிக்க இனவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் தன்னுறுதியை நிலைநாட்டவும் இறுதியில் முகத்திரை போட்டுத் தன் இஸ்லாமிய மரபை மீள்கண்டுபிடிக்கிறார்.

ரிஸ்வானின் பாத்திரம் பின்னையதுக்கு உதாரணம். அவர் ஒரு உயர் குணமுடைய குடிமகனாக, பல்துறை அறிவு வாய்ந்தவராக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். இவரது குடிமை நல் உணர்வுக்குச் சான்றுகள்: மசூதியில் பயங்கரவாத்தைப் பரப்புரை செய்யும் முஸ்லிம்கள் பற்றிய தகவலை திஙிமிக்குத் தெரிவிக்க முயல்வது; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் காப்பாற்றும் முயற்சி. சாதாரணமான, எல்லோரையும்போல் குப்பை மோக சீரியலில் லயித்திருக்கிற, ஐபில் ரசிக்கிற, ஆட்டோ ஓட்டுநரிடம் மோதாமல் வாடகைக் கூலி தருகிற, பக்தி வைராக்கியமற்ற, எல்லாரையும் போல் தூங்கி வழிகிற ஒரு இஸ்லாமியரைத் திரையில் காண்பது அரிதான காரியம். ஊடகங்களால் பதியல் செய்யப்பட்ட வடிவமைப்புக்குள் சிக்க மறுக்கும், பொருத்தமற்ற இந்த இஸ்லாமியர் வணிக சினிமாவுக்கு உதவாதவர்.

இப்படத்தில் வரும் திரை இந்தியர்கள்/இந்துக்கள்கூடத் தெளிவற்ற, கறைபட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ரிஸ்வான் பயங் கரவாதி அல்ல என்று நிரூபிக்க முயலும் தொலைக்காட்சி மாணவர்களும் அதை அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தும் ஒளிபரப்பாளரும் தங்களின் தொழில்வாய்ப்பு மேம்படும் என்று கருதியே அந்தச் செயலில் ஈடுபட்டார்களே தவிர, தவறாகக் கைதுசெய்யப்பட்ட சுத்தவானான முஸ்லிமை மீட்பதற்காக அல்ல. உந்துவிடுதி (motel) நடத்தும் ஜித்தேஷ் வெள்ளை இனவாதிகள் அவனது நிறுவனத்தைத் தாக்கும்போது ‘நான் இந்து’ என்று சீறுகிறான். ஆனால் ரிஸ்வான் பிரபலமானதும், ‘ரிஸ்வான் இங்கு தங்கியிருந்தான்’ என்று பலகையில் எழுதி காசு சம்பாதிக்கிறான்.

இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் தீவிர சோதனைக்குப் பின் விமான நிலையப் பாதுகாவலர் ரிஸ்வான் கானிடம் உன் பிரயாணத்தின் நோக்கம் என்ன என்று கேட்கிறார். அதற்கு ரிஸ்வான் “நான் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்க்க வேண்டும் அவருக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும்” என்கிறான். “உன்னுடைய செய்தி என்ன” என்று பாதுகாவலர் திருப்பிக் கேட்கிறார். இதே கேள்வியைத்தான் நாமும் இத்திரைப்படத்தைப் பற்றிக் கேட்க வேண்டியிருக்கிறது.

கேலிச் சித்திரம் பேசுதடி, என் எண்ணம் கலங்குதடி

இந்தப் படக் கதைக்கு நேரடியான சம்பந்தமில்லாத, ஆனால் இந்தப்பட வெளியீடு ஏற்படுத்திய சர்ச்சைகள், அந்தப் பிரச்சினைக்கு அடி கோலிட்டவரைப் பற்றிச் சில செய்திகளைப் பகிர்ந்து, இந்தப் பத்தியை முடிவுக்குக் கொண்டுவருகிறேன். சாதாரண மக்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு, கண்மூடித்தனமாக நடந்துகொள்கிறார்கள்? போஸ்டர்களைக் கிழித்து எறியவும் திரை அரங்குகளை முற்றுகையிடவும் அவர்களுக்கு ஆவேசம் எங்கிருந்து வந்தது? ருவாண்டா முதல் பால்கன் வரை நடந்த இனக் கொலை, சுத்திகரிப்புகளை ஆராய்ந்த Daniel Jonah Goldhagen (நூலின் தலைப்பு: Worse than War: Genocide, Elimination and the ongoing assault on humanity) எல்லோருக்கும் தெரிந்த விடையை நடப்பு உதாரணங்களுடன் கூறுகிறார். அவர் சொல்லும் காரணம் சில சக்திவாய்ந்த மனிதர்களின், முக்கியமாக அரசியல்வாதிகளின் உந்துதலே தீமை தரக்கூடிய அதிகாரத்துவ வெகுசனவாதத்தைப் பரப்புகிறது. மக்கள் சுயமாக வன்முறையில் ஈடுபடுவதில்லை. மக்களிடத்தில் உள்ளுறைந்திருக்கும் காற்புணர்ச்சிகளை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். முசோலினி ஒருமுறை கூறினார்: ‘நான் பாசிசத்தை உருவாக்கவில்லை. இத்தாலிய மக்களின் ஆழ்மனத்திலிருந்து பிழிந்தேடுத்தேன்.’

மும்பாய்க் கலவரத்தைத் தூண்டிவிட்ட தாக்கரே பற்றி ஒரு செய்தி தருவேன் என்று தொடக்கத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா? இதோ அது: என்னுடைய நூல் அல மாரியில் எதோ ஒரு புத்தகத்தைத் தேடப் போனபோது நாராயணன் வாமன் திலக்கின் (1861-1919) ஒரு நூல் தொகுப்பு எதிர்பாராதவிதமாக என் கவனத்தை ஈர்த்தது. திலக் ஒரு மராத்திய பிராமணர். தற்செயலாகக் கிடைத்த கிறிஸ்தவ வேதமான புதிய ஏற்பாட்டை வாசித்துப் பல எதிர்ப்புகளுக்கிடையே கிறிஸ்தவரானார். கிறிஸ்துவைப் பற்றி மராத்திய பக்தி வழிமுறையில் பல பாடல்களை எழுதியிருந்தார். அவற்றில் ஒன்று இராமாயண பாணியில் எழுதிய கிறிஸ்தியணம். இவரது பாடல்களின் ஒரு திரட்டு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் Bhakti Niranjana என்னும் தலைப்பில் வெளிவந்தது. ஒரு மதம் மாறிய இந்து முழுக்க இயேசு கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் புகழ்பாடும் இந்தத் தொகுப்பிற்கு அட்டைப்படம் வரைந்தவர் தன் கையொப்பத்தைப் போட்டிருந்தார். படித்துப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. மறுபடியும் கவனமாக வாசித்தேன். சித்திரம் வரைந்தவர் இன்றைக்கு இன, மத துவேஷத்தைத் தூண்டிவிடும் பால் தாக்கரே. தொகுப்பாசிரியர்கள் பால் தாக்கரேக்குத் தங்களின் நன்றியையும் தெரிவித்திருந்தார்கள். இது தாக்கரே காசுக்காகச் செய்த வேலை அல்ல. கிறிஸ்தவப் பதிப்பகங்கள் படைப்பாளிகளுக்குச் சன்மானம் வழங்குவது அரிது. அப்படிக் கொடுத்திருந்தாலும் அந்தத் தொகையில் பால்தாக்கரே இரண்டு தட்டு பேல் பூரிதான் வாங்கியிருக்கக்கூடும். 1966இல் சிவசேனா ஆரம்பிக்கும்முன் தீட்டிய ஓவியம் இது. ஒரு விசாலப் பார்வையுள்ளவராகத் தென்பட்ட ஒருவர் எப்படி ஒரு குறுகலான எண்ணம் உடையவரானார் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது. வேறு பல எண்ணங்களும் வருகின்றன.

ஹைத்தி: ஊடகங்கள் சொல்ல மறந்த தகவல்

ஹைத்தி நில அதிர்ச்சியின் சேதங்களை அறிவிக்கும்போது ஊடகங்கள் சளைக்காமல் அலுப்புத் தட்டும்படி வாய்ப்பாடம்போல் ஒப்பிவித்த ஒரு வாசகம்தான் என்னை இப்பத்தியை எழுதத் தூண்டியது. ஒவ்வொரு முறையும் அகதிகளின் அங்கலாய்ப்புகளை வர்ணிக்கும்போது உலகில் மிக ஏழ்மையான நாடு ஹைத்தி என்று திரும்பத் திரும்பத் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் செல்வமிக்க ஒரு நாடாகயிருந்த இந்தத் தீவு ஏன் இப்படியானது என்று விளக்க அவர்கள் முயலவில்லை. அதை நிவர்த்தி செய்வதே என் நோக்கம். அதற்கு முன் ‘நீங்களும் கோடீஸ்வரராகலாம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பாணியில் சில கேள்விகள்:

கேள்வி 1: உலகில் முதல்முதலாகக் கறுப்பர்களின் எதிர்ப்பு இயக்கத்தால் விடுதலையடைந்த நாடு எது?

அ) நைஜீரியா
ஆ) உகாண்டா
இ) ஹைத்தி.

கேள்வி 2: மேற்குப் பிராந்தியத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டாவது குடியரசு எது?

அ) அயர்லாந்து
ஆ) அர்ஜெண்டினா
இ) ஹைத்தி.

இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான்: ஹைத்தி

காலனிய விபரீதங்கள்

18ஆம் நூற்றாண்டில் மிக வளமையுள்ள காலனிய நாடாக ஹைத்தி கருதப்பட்டது. அன்றைய வணிகப் பயிரான கரும்பு இங்கேதான் அதிகம் உற்பத்தியாயிற்று. அது ஏழை நாடாக மாறியதற்குக் காரணம் இருவகையான கடன்கள். ஒன்று அதன் பழைய காலனிய எஜமான்களுக்குக் கட்டிய பண இழப்பீடு. 1 ஜனவரி 1804இல் ஹைத்தி (அப்போதைய பெயர் Saint Dominigue) பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஹைத்தி விடுதலைபெற்றாலும் அதை ஏற்க பிரான்சு ஒத்துக்கொள்ளவில்லை. விடுதலை கேட்ட துடுக்குத்தனச் செயலுக்காக ஹைத்தி மக்கள் பல தலைமுறைகளாகக் கஷ்டப்பட நேரிட்டது. வருவாய் இழந்த பிரான்ஸ் தோட்ட முதலாளிகள் உலுத்தனமாக நடந்துகொண்டார்கள். தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தினார்கள். பிரான்சு நியமித்த கணக்காளர்கள் ஹைத்தி இழப்பு ஈடாக முன்னைய காலனிய முதலாளிகளுக்குத் தர நிர்ணயித்த தொகையின் முழுமதிப்பு 150 மில்லியன் தங்க பிராங்ஸ்.

இத்தொகையைக் கட்டிமுடிக்க 122 வருடங்கள் ஆயிற்று. மற்ற கடன் சர்வாதிகாரியான டுவெலியர், மற்றும் அவருடைய மகன் ஏற்படுத்தியது. இதன் மொத்த மதிப்பு 504,00,000 டாலர்களுக்கு மேல். ஹைத்தி சீரழிந்ததுக்கு இன்னுமொரு மேலதிகக் காரணம் சமானமில்லாத சர்வதேச வியாபார ஒழுக்கங்கள். உதாரணம்: சுயதேவைக்குப் போதுமான அரிசி உற்பத்தி செய்த ஹைத்தி, அமெரிக்க அரசிடம் நிதி உதவிபெற்ற மலிவான விளைச்சல் அரிசியை வாங்க வற்புறுத்தப்பட்டது.

பின் காலனிய எடுப்புரைப்பில் ஹைத்திக்கு முக்கிய இடமுண்டு

விடுதலையைப் பிரான்சு அங்கீகரித்தால் சுதந்திரத்தை விரும்பும் மற்ற கறுப்பு அடிமைகளுக்கு இது உந்துதலாக இருக்குமென நெப் போலியன் எச்சரித்தார். அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் ஹைத்தியின் விடுதலை ஒரு தவறான உதாரணம் என்றார். அமெரிக்கக் கருப்பு அடிமைகள் சுதந்திரம் கேட்டு விடுவார்களோ என்று பயம். ‘எல்லா மனிதர்களுமே சமனாகப்படைக்கப் பட்டவர்கள்’ எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட அமெரிக்கா, இந்த நாட்டை அங்கீகரிக்க அறுபது ஆண்டுகள் ஆயிற்று. அதுமட்டுமல்ல இருபது வருடங்கள் இரண்டு உலக யுத்தங்களிடையே ஹைத்தியை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொண்டது.

இந்த ஹைத்தி பூகம்பத்தால் அதிக நன்மை பெற்றவர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அமெரிக்க இராணுவம், மற்றையது பேரழிவு முதலாளித்துவம் (disaster capitalism). பொதுமக்களிடையே நல்ல பெயரெடுக்க அமெரிக்க இராணுவத்தினருக்கு இந்தப் பூமியதிர்ச்சி பெரிய அருட்பேறு. இதுவரை ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படைகளை ஆக்கிரமிப்பாளராகக் காட்டிய தொலைக்காட்சிகளுக்கு மாறுதலுக்காக அமெரிக்கத் துருப்புகளைத் தயவுள்ளவர்களாக ஒளிபரப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எந்தத் தும்பி விமானங்கள் ஈராக்கிலும் ஆப்கானிலும் குண்டுகளை வீசினவோ அதே விமானங்கள் அகதிகளுக்கு உணவுப் பொட்டலங்களைத் தூக்கி எறிந்தன. காரமாக மட்டுமல்ல கண்ணியமாகவும் நடந்துகொள்ள அமெரிக்காவுக்கு இயற்கைப் பேரிடர்கள் உதவுகின்றன.

இயற்கைப் பேராபத்தால் அதிக ஆதாயமடைந்தது பேரழிவு முதலாளித்துவமாகும். இது கனடிய கலாச்சார விமர்சகர் நவோமீ கிளையின் கொடுத்த பெயர். எங்கெல்லாம் இயற்கை விளைவித்த பெருந்துன்பங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் நிவாரண வேலைகளில் பேரழிவு முதலாளித்துவம் செயல்படுவதைக் காணலாம் என்கிறார். அகதிகளின் வாழ்வு வளமடைய வேண்டுமானால் இது சிபாரிசு செய்யும் உட்படிவங்கள்: சந்தை ஒழுக்கத்தை ஆதரித்தல்; அரசுக் கட்டுப்பாடுகளை நீக்கல்; பன்னாட்டுக் கூட்டு நிறுவனங்களை உள்நாட்டுச் சந்தையில் அனுமதித்தல். மறுசீரமைப்பில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டுக் கூட்டுக் குழுமங்கள் மக்கள் வெறுக்கும் பொருளாதாரக் கொள்கைகளைப் பரப்ப இந்த இயற்கை விபத்துகள் உதவுகின்றன என்று கிளையின் கூறுகிறார். தாமதமாகிய, தள்ளிப் போடப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமலாக்க இது நல்ல தருணமென முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் சார்பாக ஹைத்தி சென்ற சிறப்புத் தூதுவர் ஜெயம்ஸ் டாப்பின்ஸ் அறிவித்திருந்தார். இந்த மறுவாழ்வுத் திட்டத்தில் பலனடையப்போகும் வணிக நிறுவனங்களின் பட்டியலை Wall Sreet Journal வரிசைப்படுத்தியிருந்தது. அதில் காணப்பட்ட பெரும் வர்த்தகப் பணியமைப்புகள்: General Electric, Caterpillar, Deere, Flour, Jacob Engineering.

நித்திய கேள்வி

இயற்கைப் பேரழிவுகளான பூகம்பங்கள், சூறாவளிகள், ஆழிப் பேரலைகள் சேதங்கள் விளைவிக்கும்போது கடவுளின் இருப்பும் இயற்கை பற்றியும் தத்துவார்த்த, இறையியல் சம்பந்தமான விவாதங்கள் நடைபெறுகின்றன. வழமையாகக் கேட்கப்படும் கேள்வி: மக்களுக்குக் கடவுள் இந்த வேதனையை ஏன் தந்தார்? இதற்கு அடிப்படை மதவாதிகள் எந்த மதத்தினராயிருந்தாலும் சொல்லும் விடை: மக்கள் சமய நெறியிலிருந்து தவறிவிட்டார்கள். கடவுள் சினமாக இருக்கிறார், ஆகையால் மனித பாவத்திற்குக் கடவுள் அளித்த தண்டனை. 2004 ஆசிய கடலனர்த்தம் நடந்தபோது அமெரிக்க வைதிகக் கிறிஸ்தவர்கள் பழியை ஓரின ஈர்ப்பாளர்கள்மீது சுமத்தினார்கள். தன்பாலினச் சேர்க்கையாளர்களைக் குற்றம் சாட்டியதற்குக் காரணம் தாய்லாந்திற்கு விஜயம் செய்யும் உல்லாசப் பயணிகளில் பெரும்பாலோர் சுவீடன் நாட்டுத் தன்பாலின உடலுறவுக்காரர்கள். உள்ளாடைகளில் வரையப்பட்ட புத்தரின் படம் விளைவித்த வினை என்றார்கள் பௌத்தர்கள். அதுமட்டுமல்ல கிறிஸ்துமஸ் தினத்தன்று மாமிசம் சாப்பிட்டது இன்னொரு காரணம் என்றார்கள். சுமத்திராவில் வேசித்தனமும் விபச்சாரமும் வட்டி வாங்குதலும் பெருகியதால் அல்லா அளித்த தண்டனை என்றார்கள் முஸ்லிம் மத குருக்கள். இறையியல் விஷயங்களில் கொஞ்சம் தளர்ச்சித் தன்மையுள்ள இந்துக்கள்கூட ஜெயேந்திர சரஸ்வதிகளைக் கைதுசெய்ததற்கான வந்த பாவ விளைவு என்றார்கள். காட்ரீனா நீயு ஓலியன்சைத் தாக்கிய போது மறுபடியும் தன்பாலின உடலுறவு வேட்புடையவர்கள்மீது கிறிஸ்தவப் பழமைவாதிகள் குற்றம் சாட்டினார்கள். இந்த ஹைத்தி பூகம்பத்தையும் மதப்பிரசாரகர்கள் விட்டுவைக்கவில்லை, இந்தப் பேரிடருக்குக் காரணம் ஹைத்தி மக்கள் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்தால் சாத்தானை வணங்குவோம் என அவரிடம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தால் வந்த சாபம் என்று அமெரிக்கத் தொலைக்காட்சி நற்தூதுப் பிரசங்கி பட் ராபின்சான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கடவுள் பற்றிய சிந்தனை உள்ளவர்களைவிட, இரு இலக்கியவாதிகளில் கடவுளின் இயல்பைப் பற்றிய இறையியல் சச்சரவான வியாக்கியானம் என் கவனத்தை ஈர்த்தது. ஒருவர் போர்த்துகீசிய எழுத்தாளர் José Saramago. அவர் எழுதிய The Gospel According to Jesus Christ என்னும் நாவலில் மக்கள் படும் அவதிகளைவிடத் தன்னுடைய மேலாண்மையே முக்கியமானதாகக் கருதுபவராகக் கடவுள் படைக்கப்பட்டிருக்கிறார். கடவுள் தன்னுடைய முடிவில்லா ஆற்றலுடைமையை மேலும் உறுதியாக்க, விளைவிக்கும் துன்பங்களைப் பார்த்து அவர் மகன் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும்போது சொன்ன வார்த்தைகள் திருமறையில் பதியல் செய்யப்பட்டவற்றைவிட நேர்மாறானவை: ‘மக்களே, இவரை மன்னியுங்கள். இவர் செய்கிறது இன்னதென்பதை அறியாதிருக்கிறார்’. மற்றையவர் Jerry Springer : The Opera என்ற இசை நாடகத்தை எழுதிய Stewart Lee and Richard Thomas. பூலோகத்தில் நிகழும் அல்லகள், அட்டூழியங்களை அவதானித்துக் கடவுளாக வரும் பாத்திரம் இப்படி ஒரு வசனத்தை உதிர்ப்பார்: ‘It’s hard being me’. கடவுள் முற்றுமுணர்ந்தவர் என்றதற்கு நேர்மாறான எண்ணம் இது. ஒன்று மட்டும் நிச்சயமாயிருக்கிறது. நில நடுக்கங்கள், சூறாவளிக் காற்றுகள், கடல் ஆழிகள், பஞ்சங்கள், உயிர்க்கொல்லி நோய்கள், குண்டுவெடிப்புகள், தாலிபான்கள், அமெரிக்க வலுதாக்குதல்கள் மத்தியில் கடவுளாயிருப்பது சுலபமான செயல் அல்ல.

உள்ளடக்கம்