|
விலைவாசி உயர்வைவிட பால் தாக்கரே தான் இப்போது நாட்டில் பரபரப்பாகப்
பேசப்படுகிறவராகிவிட்டார். அவர் ஒரு கார்ட்டூனிஸ்ட், பத்திரிகையாளர். அதனால் எதைத்
தொட்டால் பரபரப்புத் தீ பற்றிக்கொள்ளும் என்பது அவருக்குத் தெரியும். 11.11.09இல்
டெண்டுல்கருக்கு எதிராக அவரது ‘சாம்னா’ தினசரி தலையங்கம் எழுதியதிலிருந்தே பால்
தாக்கரே செய்திகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கிவிட்டார்.
சச்சின் டெண்டுல்கர் ‘மும்பை எல்லோருக்குமானது’ என்று சொன்னது
பிராந்தியவாதத்திலும் மண்ணின் மைந்தர் கொள்கைச் சேற்றிலும் மூழ்கித் திளைக்கும்
சிவசேனா, பால் தாக்கரேவின் தமையனாரின் மகனான ராஜ் தாக்கரே, ராஜ் தாக்கரேவின்
‘மகாராஷ்டிர நவநிர் மாண் சேனை’ இத்யாதிகளுக்கு எரிச்சலூட்டியது.
சிவசேனையின் மண்ணின் மைந்தர் கோஷம் அதன் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவருவதுதான்.
என்றாலும் இப்போது திடீரென்று சச்சின் டெண்டுல்கர் கூறியதற்கு பால் தாக்கரே
எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா - பா.ஜ.க.
கூட்டணி கண்ட தோல்வி.
இன்னொரு புறம், தன்னுடைய மண்ணின் மைந்தர் முழக்கத்தையே காப்பியடித்து
வளர்ச்சிபெற்றுவரும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனை. 2006இல் தொடங்கப்பட்ட ராஜ்
தாக்கரேவின் நவநிர்மாண் சேனை கடந்த மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் கணிசமான இடத்தைக்
கைப்பற்றியுள்ளது. இது பால் தாக்கரேவின் கண்களை உறுத்துகிறது. இதனால் ராஜ்
தாக்கரேயைவிடச் சத்தமாக மண்ணின் மைந்தர், பிராந்தியவாதம் முதலான முழக்கங்களை எழுப்ப
வேண்டிய நிலையில் பால் தாக்கரே உள்ளார்.
ஆனால் பால் தாக்கரேவின் ‘மும்பை மராத்தியருக்கே’ என்ற புளித்துப்போன முழக்கம் நாடு
பூராவும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு முகேஷ்
அம்பானியும் ‘மும்பை எல்லோருக்குமானது’ என்றார். இதுவும் பால் தாக்கரேவின்
எரிச்சலைக் கிளப்பிவிட்டது. இப்போது ஷாருக்கான், பாகிஸ்தான் கிரிக்கெட்
ஆட்டக்காரர்கள் யாரும் ஐ.பி.எல்லில் ஆடத் தேர்ந்தெடுக்கப்படாததற்காக வருத்தம்
தெரிவித்ததால் அவரது மும்பை வீடு, தாக்கப்பட்டது. அவரது ‘மை நேம் இஸ் கான்’ என்னும்
புதிய படத்துக்கு ஆரம்பத்தில் சிவசேனை எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
பால் தாக்கரேவின் ரத்தத்திலேயே மண்ணின் மைந்தர் வாதம், குறுகிய பிராந்திய வாதம் இவை
ஊறியிருக்கின்றன. அவருடைய தந்தை கேசவ் சீதாராம் தாக்கரே ஒரு எழுத்தாளர், சமூக சேவகர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மராத்தி பேசும் மக்களுக்காகத் தனி
மாநிலம் வேண்டுமென்ற கோரிக் கையை முன்வைத்து சம்யுக்த மகா ராஷ்டிர சால்வால் என்ற
இயக்கம் அந்நாளைய பம்பாய் மாகாணத்தில் செயல்பட்டது. இதில் கேசவ் சீதா ராம் தாக்கரே
இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். பால் தாக்கரேவின் பிராந்திய வெறி அப்போதே அவர்
மனத்தில் ஊன்றப்பட்டுவிட்டது. பிறகு ஃப்ரீ ப்ரஸ் ஜர்னலில் பால்தாக்கரே
கார்ட்டூனிஸ்டாக வேலைபார்த்தார். அவரது கார்ட்டூன்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா
வெளியிட்டிருக்கிறது.
19.6.1966இல் பால் தாக்கரே சிவ சேனையை ஆரம்பித்தார். அப்போது தென்னிந்தியர்கள்,
மார்வாடிகள், குஜராத்திகளுக்கு எதிராகத்தான் கட்சியின் கொள்கைகளை அமைத்தார்.
மராத்தியர்களின் வேலை வாய்ப்புகளை இவர்கள் பறிக்கிறார்கள் என்ற முழக்கம் அப்போது
எளிதாக எடுபட்டது. இப்படித்தான் மகாராஷ்டிரம் மராத்தியருக்கே என்ற பிராந்திய வாதம்
தொடங்கியது. ஆரம்பத்தில் சிவசேனை கம்யூனிஸ எதிர்ப்பு இயக்கமாகவும் இருந்தது.
அந்நாளைய பம்பாயில் கம்யூனிஸ்ட்கள் வசமிருந்த பல யூனியன்களைச் சிவசேனை கைப்பற்றியது.
‘திராவிட நாடு திராவிடருக்கே’ எனத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த தி.மு.கழகம்,
பஞ்சா பின் அகாலிகள் இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு தான் மகா ராஷ்டிரத்திலும்
தாக்கரே மண்ணின் மைந்தர் என்னும் பிராந்திய வாதத்தை எழுப்பினார்.
பிராந்திய வாதம், மண்ணின் மைந்தர் கோட்பாடு இவை சென்னை ராஜதானியிலிருந்து தெலுங்கு
பேசும் மக்களைக் கொண்ட தனி ஆந்திர மாநிலத்தை அமைக்க வேண்டுமென 1953இல் 52 நாட்கள்
உண்ணாவிரதமிருந்து இறந்துபோன பொட்டி ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு முன்பிருந்தே
அரசல்புரசலாக ஆரம்பித்துவிட்டது எனலாம். மொழிவாரி மாநிலம் அமைக்கப்படுவதற்கு முன்பு
சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியா பல மாகாணங்களாகவும் குறுநில மன்னர்களால்
ஆளப்பட்ட ராஜியங்களாகவும் சிதறிக்கிடந்தது. சுதந்திரம் பெற்றபோது பூடானும் ஹைதரா
பாத்தும் தனி நாடுகளாக இருக்க விரும்பின.
அப்போது இருந்த மாகாணங்கள், அரசுகளை
A, B, C என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
‘A’ வகை மாகாணங்கள் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பீகார், சென்ட்ரல் ப்ராவின்ஸ்
மற்றும் பியரரை உள்ளடக்கிய மத்தியப் பிரதேசம், மெட்ராஸ், ஒரிஸ்ஸா, பஞ்சாப்,
அந்நாளைய யுனைட்டெட் ப்ராவின்ஸான உத்தரப் பிரதேசம் போன்றவை. இவை கவர்னர்களால்
ஆளப்பட்டன. சட்ட சபைகளும் இங்கே இருந்தன.
‘B’ வகை மாகாணங்களில் மன்னர்கள் ஆண்டனர். இவர்கள் ‘ராஜ்பிரமுக்’ என்று
அழைக்கப்பட்டனர். இவர்களை ஜனாதிபதி நியமிப்பார். இந்த மாகாணங்களில் சட்டசபைகளும்
இருந்தன. இப்படிப்பட்ட மாகாணங்கள் ஹைதராபாத், சௌராஷ்டிரா, மைசூர்,
திருவாங்கூர்-கொச்சி, மத்திய பாரத், விந்தியப் பிரதேஷ், பாட்டியாலா, கிழக்குப்
பஞ்சாப் யூனியன், ராஜஸ்தான் முதலியன.
‘C’ வகைப் பகுதிகள் பிரதமக் கமிஷனர்களால் ஆளப்பட்டன. இவையும் முன்னாள் பிரின்ஸ்லி
ஸ்டேட்களே. அவர்களை ஜனாதிபதி நியமித்தார். இவை டெல்லி, கட்ச், ஹிமாச்சல் பிரதேசம்,
பிலாஸ்பூர், கூர்க், போபால், மணிப்பூர், மேவாரா, திரிபுரா ஆகியன. நாடெங்கும்
ஒருவிதமான நிர்வாகக் குழப்ப நிலை நிலவியது உண்மை. அப்போது மொழிப் பிரிவினை, மொழி
அடிப்படையிலான பகுதி என்ற வித்தியாசங்கள் எல்லாம் பெரிய அளவில் இல்லை. ஒரே
மாகாணத்தில் பல மொழிகளைப் பேசும் பகுதிகள் இருந்தன. சென்னை மாகாணத்தில் தெலுங்கு,
மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகளும் இணைந்திருந்தன.
மொழிவாரி மாநிலம் என்ற கருத்து பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்துக்குப் பின்
வலுப்பெறத் தொடங்கியது. அதன் பின் நேருவின் அரசு 1954இல், மாநிலங்கள்
மறுசீரமைப்புக் கமிட்டியை நீதிபதி பாஸல் அலியின் தலைமையில் அமைத்தது. இக்கமிட்டி
1955இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது 1.11.1956இல் மாநிலங்கள் மறுசீரமைப்புச்
சட்டம் கொண்டுவரப்பட்டது. நீதிபதி பாஸல் அலி கமிட்டி 16 மாநிலங்களையும் 3 யூனியன்
பிரதேசங்களையும் அமைக்கச் சிபாரிசு செய்தது. இதுதான் மொழி வாரி மாநிலங்கள்
அமைவதற்கும் மாநிலக் கட்சிகள் தோன்றுவதற்கும் வழிவகுத்தது. அப்போதே ராஜாஜி,
‘மொழிவாரி மாநிலங்களை அமைக்கக் கூடாது, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று
பிரித்தால் போதும்’ என்றார். அவரது பேச்சு எடுபடவில்லை. பஞ்சாப் முதல் தமிழகம்வரை
அகாலிதளம், தி.மு.க போன்ற பிராந்தியக் கட்சிகள் வளர ஆரம்பித்தன. பிற்காலத்தில்
அஸ்ஸாம் கண பரிக்ஷத், தெலுங்கு தேசம் என்று அவை மேலும் பல்கிப் பெருகின. இப்போது
தேசமெங்கும் 600க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
தமிழகத்தில் திராவிட நாடு கோரிக்கை ஒரு காலத்தில் வலுவாக இருந்ததுபோல், பஞ்சாபில்
காலிஸ்தான் வாதம் வேரூன்றியது. நாடெங்கும் எதிரொலித்த பிராந்திய வாதம் மொழி, இன
அடிப்படை வாதமாகப் பெருகியது. சிவசேனாவும் இப்படித் தான் அவதாரம் எடுத்தது.
பிராந்திய வாதம் அல்லது மண்ணின் மைந்தர் கொள்கை போன்றவை அரசியல் நிர்ணயச்
சட்டத்தின் 19ஆவது பிரிவுக்கு எதிரானவை. ஒரு இந்தியக் குடிமகன் இந்தியாவில் எங்கு
வேண்டுமானாலும் குடியேறி, தொழில் புரியலாம், எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகச்
செல்லலாம் என்று அந்தப் பிரிவு கூறுகிறது. ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல்
சுடுகாடு’ என்ற தி.மு.க.வின் முழக்கங்கள், கொள்கைகள் எல்லாம் நேருவின் கடுமையான
எச்சரிக்கைக்குப் பின் கைவிடப்பட்டன.
திராவிட இயக்கம் ஆரம்பத்தில் உயர் ஜாதி எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு இவற்றைத்தான்
கொண்டிருந்தது. பிறகு தி.மு.க தனிநாடு கேட்டது. இதுபோல் சிவசேனையும்
மகாராஷ்டிரத்தில் குடியேறிய பிற மாநிலத் தவருக்கு எதிரான இயக்கமாகத்தான் ஆரம்பத்தில்
வளர ஆரம்பித்தது. மகாராஷ்டிரா என்பது முழுமையான மராத்தி பகுதியல்ல. 1960இல்
குஜராத்தும் மகாராஷ்டிராவும் அமைக்கப்பட்டன. அதற்கு முன்பு பம்பாய் மாகாணமாக இருந்த
பகுதியில் சௌராஷ்டிரா, கட்ச், மத்தியப் பிரதேசத்திலிருந்த மராத்தி பேசும் நாக்பூர்
டிவிஷன், ஹைதரா பாத் பகுதியிலிருந்த மரத்வாடா பகுதி இவை எல்லாம் இருந்தன. தெற்கே
உள்ள மராத்தி மக்களைக் கொண்ட பகுதியைப் பிரித்து மைசூர் மாகாணத்துடன் இணைத்து
விட்டனர். (இன்றைக்கும் பெல்ஹாம் பிரச்சினைக்குரிய பகுதியாகக் கர்நாடகத்துடன் உள்ளது.)
சிவசேனை, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனையைப் போலவே அஸ்லாமில் உல்பாவும் அஸ்ஸாமியர்
அல்லாதவர்களைத் தாக்குகிறது. மும்பையில் ரயில்வே போர்டு தேர் வெழுத வந்தவர்களை
சிவசேனையும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனையும் தாக்கியதுபோல் உல்பாக்கள் அஸ்ஸாமில்
ரயில்வே போர்டு தேர்வெழுத வந்த பீகாரிகளைத் தாக்கினர். 50 பீகாரிகள்
கொல்லப்பட்டனர். ஆனால் உல்பா தடைசெய்யப்பட்ட இயக்கம். சிவசேனை இன்னும்
தடைசெய்யப்படாத, பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடும் இயக்கமாக உள்ளது.
மும்பை மராத்தியர்களுக்குரியது என்று சொல்லிக்கொண்டே, நாங்கள் மராத்தியருக்குத்
தனிநாடு கேட்கவில்லை என்று பால்தாக்கரேவின் ‘சாம்னா’ தினசரி சாமர்த்தியமாக
எழுதுகிறது. மும்பையில் மராத்தியர் அல்லாதவர்கள் வாழக் கூடாது என்றால் அது பிரிவினை
வாதம் அல்லாமல் வேறென்ன?
சிவசேனையுடன் போட்டி போட்டுக்கொண்டு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையும் பிராந்திய
வெறியைத் தூண்டிவிடுகிறது. சட்ட சபையில் ஹிந்தியில் உறுதிமொழி
எடுத்துக்கொண்டதற்காக சமாஜ்வாடி கட்சி உறுப்பினரை ராஜ் தாக்கரே வின் கட்சி
எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலேயே சில மாதங்களுக்கு முன் தாக்கினர். தற்போது
பதவியிலுள்ள காங்கிரஸ் - தேசியவாதக் காங்கிரஸ்கூட்டணி அரசு இரு தாக்கரேக்களையும்
அடக்க வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது.
இந்தச் சேனைகளின் பிராந்தியவாத அரசியலில் மாநில அரசும் தடுமாறுகிறது. சமீபத்தில்
மகாராஷ்டிர முதல்வர், மராத்திய மொழி எழுதப் படிக்கத் தெரிந்த, 15 ஆண்டுகளுக்கு மேல்
இங்கே வசிப்பவர்களுக்குத்தான் டாக்ஸி லைசென்ஸ் வழங்கப்படும் என்றார். பின்னர்
மறுநாளே தனது நிலையை மாற்றிக் கொண்டு ஹிந்தி, குஜராத்தி பேசத் தெரிந்தவர்களுக்கும்
லைசென்ஸ் தரப்படும் என்றார்.
கடந்த தேர்தல்வரை சிவசேனையுடன் கூட்டணி சேர்ந்திருந்த பார தீய ஜனதா இப்போது
தைரியமாக ‘மும்பை எல்லோருக்குமானது’ என்கிறது. பீஹார் சட்டசபைத் தேர்தலின் மீது
கண்வைத்துத்தான் பீஹாரிகளை எதிர்க்கும் சிவசேனையின் உறவைப் பா.ஜ.க. உதறித்தள்ளுகிறது
என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவரும் இதுவரை சிவசேனை பற்றி
வாயே திறவாமல் இருந்துவிட்டு இப்போது ‘மும்பை எல்லோருக்குமானது’ என் கிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தைப் பிரித்து உருவாக்கும் விதர்பா மாநிலக் கோரிக்கையை சிவசேனை
ஆதரிக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. அதை ஆதரிக்கிறது. இவையெல்லாம் சிவ சேனை - பா.ஜ.க.
முரண்பாடுகளுக்குக் காரணம் என்கிறார்கள். என்றாலும் மகாராஷ்டிரத்தைப் பொறுத்து,
சிவசேனையின் கூட்டணி இல்லாமல் பா.ஜ.க தனித்து நிற்பது கடினம் என்றும் அரசியல்
விமர்சகர்கள் கூறுகிறார்கள். அந்தளவுக்கு மகாராஷ்டிரத்தில் சிவசேனைக்குப் பல
தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. அரசியல் பகடையில் எந்தக் காய்களும் எப்போதும்
நகர்த்தப்படலாம். என்றாலும், சிவசேனையும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையும்
அடக்கிவைக்கப்பட வேண்டிய சக்திகள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க
முடியாது.
|