Google   www kalachuvadu.com

கட்டுரை
சரத் பொன்சேகா: சதியின் கதை
சசி

‘நீ எதைச் செய்தாயோ அதன் பயனை இப்பிறப்பிலேயே அனுபவிப்பாய். நல்லதோ கெட்டதோ அடுத்த பிறப்பிற்காகக் காத்திருக்கத் தேவையில்லை’ என்று பௌத்தம் கூறுவதாக அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்து பத்திரிகையின் ஆசிரியருக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கொலைசெய்யச் சதி செய்தமை, ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் பிப்ரவரி 8ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மிகுந்த சவாலாக இருந்தவர்; எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டவர்; தேர்தல் முடிவுகளின்படி 40 வீதத்திற்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றிருந்தவர்; ஜனவரி 26ஆம் திகதி தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குள்ளாகவே மேற்படி குற்றச்சாட்டுக்களின் மீது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவரீதியில் முறியடிக்கப்பட முடியாதவர்கள் என்று இராணுவ ஆய்வாளர்களால் விதந்துரைக்கப்பட்ட விடுதலைப் புலிகளை முறியடித்தவர்; உலகின் பலம் வாய்ந்த ஒரு கெரில்லா இயக்கத்தைப் பூண்டோடு அழித்தவர்; இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முதலில் நான்கு நட்சத்திர அந்தஸ்துப்பெற்ற ஒரு இராணுவத் தளபதி; மூன்றாம் உலக நாடுகளின் இராணுவத் தளபதிகளிலேயே உயர் அந்தஸ்துப்பெற்ற ஒருவர்; உலகிலேயே மிகச் சிறந்த இராணுவத் தளபதிகளில் ஒருவர் என்று இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் கே. நாராயணனால் புகழ்ந்துரைக்கப்பட்டவர் என்பது மட்டுமல்ல கடந்த வருடம் மே 18இல் வன்னியில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்ததோடு இந்தத் தேசத்தின் வெற்றியின் நாயகனாகக் கொண்டாடப்பட்டவர்; அந்தக் கொண்டாட்டங்கள் ஓய்வதற்கிடையில் அந்தத் தேசத்தின் துரோகியாகவும் சதிகாரனாகவும் மோசடியாளனாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு தேசத்தால் தேசப் பிதாவாகக் கொண்டாடப்படுபவர் இன்னொரு தேசத்தினரால் தேசத் துரோகியாகக் கொள்ளப்படுவதோ ஒரு இனத்தினரால் தலைவராகக் கொண்டாடப்படுபவர் இன்னொரு இனத்தினரால் எதிரியாகக் கொள்ளப்படுவதோ வரலாற்றிற்குப் புதிதல்ல.

ஆனால் வெற்றியின் நாயகனாகவும் தேசாபிமானியாகவும் மூன்று தசாப்தகாலமாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவந்து அந்த வெற்றிச் செய்தியை முப்படையினரும் அணிசூழ நாட்டின் தலைவரிடம் கையளித்த ஒரு இராணுவத் தளபதி ஆறு மாதங்களுக்குள்ளாகவே தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் சிறைப்பட நேர்ந்திருக்கிறது. இது எதனால் ஆனது? இது அவர் மேற்கொண்ட சதியின் கதையா அவர்மீது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற சதியின் கதையா? இந்தக் கதைகள் வெறும் சுவாரசியக் கதைகள் அல்ல. அவை இலங்கை அரசியலின் போக்கையும் நோக்கையும் தெளிவாகப் புலப்படுத்தி நிற்பவைகூட.

2005 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச முதன்முதலாகப் போட்டியிட்டபோது அவருடைய பிரதானத் தேர்தல் முழக்கமாக இருந்தது, தான் பதவிக்கு வந்தால் முன்னதாகப் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் செய்துகொண்ட துரோகத்தனமான புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவேன் என்பதுதான். இன்று சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குரலெழுப்புகிற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)தான் அன்று மகிந்த ராஜபக்சவின் இந்த முழக்கத்தைப் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றதென்பது குறிப்பிடத்தக்கது.

1970ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த மகிந்த ராஜபக்ச தன்னுடைய மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட அரசியல் வாழ்வில் ஒருபோதும் இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களுடைய பிரச்சினையை அரசியல் பிரச்சினையாகப் பார்த்தவரல்ல. அதற்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று எண்ணியவருமல்ல. இனப்பிரச்சினையின் முக்கியமான காலகட்டங்களிலெல்லாம் அவர் மதில்மேல் பூனையாக மௌனமாகவே இருந்து வந்தவர். இலங்கை ஒரு பல்லினத்துவ, பல் கலாசார நாடு என்பதையோ சமஸ்டி முறையிலான அரசியலமைப்பின் அவசியத்தையோ அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவரைப் பொறுத்தவரையில் இதுவொரு பயங்கரவாதப் பிரச்சினை; இராணுவரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டியது. இலங்கை ஒற்றையாட்சிக்குரிய நாடு என்பது அவரது திடமான எண்ணமாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலிலும் எதிரொலித்தது.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவானதும் சொன்னது போலவே புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செயலற்றதாக்குவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார்; பேச்சுவார்த்தையை முடக்கினார்; இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினார். அவர் அவ்வாறு இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்கு அவருக்கு மிக உதவியாக இருந்தவர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. நவம்பர் 2005 தேர்தல் வெற்றியின் மூலம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்க, அதே ஆண்டு டிசம்பரில் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். இருவரும் இலங்கையின் தென் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். மகிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர். சரத் பொன்சேகா அம்பலாங்கொடயைச் சேர்ந்தவர். மகிந்த ராஜபக்சவைவிட ஐந்தே வயது இளையவரான சரத் பொன்சேகா (மகிந்த ராஜபக்ச டிசம்பர் 18, 1945 - சரத் பொன்சேகா டிசம்பர் 18, 1950) மகிந்த ராஜபக்ச அரசியலில் நுழைந்த அதே 1970ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்டவர். மகிந்த ராஜபக்சவுக்கு எவ்வளவு கால அரசியல் அனுபவம் இருந்ததோ அதேயளவு இராணுவ அனுபவம் சரத் பொன்சேகாவுக்கு இருந்தது.

பலவேகய, ஜெயசிக்குறு, ரிவிரச போன்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல முக்கியமான இராணுவ நடவடிக்கைகளின்போது களமுனைத் தளபதியாகச் செயற்பட்டவர்; 1993ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்த இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்திருந்தபோது மிட்நைட் எக்ஸ்பிரஸ், என்ற நடவடிக்கை மூலம் அங்கிருந்த இராணுவத்தினர் பலர் உயிரோடு வெளியேறக் காரணமாக இருந்தவர் என்று நீண்ட பல கள அனுபவங்கள் கொண்டவர் பொன்சேகா.

முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரரான கோட்டபாய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் அடங்கிய இந்தக் கூட்டு இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினைதான், அதற்கு இராணுவ நடவடிக்கை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்பதில் திடமாக இருந்தது மட்டுமல்லாமல் அதற்காக என்னவிலை கொடுக்கவும் தயாராக இருந்தது. விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதன் எதிரொலியாக விடுதலைப் புலிகளால் ஏப்ரல் 2006இல் சரத் பொன்சேகா மீதும், டிசம்பர் 2006இல் கோட்டபாய ராஜபக்ச மீதும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் இருந்து இருவருமே தப்பித்துக்கொண்டனர்.

சில மாதங்கள் சிகிச்சை பெற்ற சரத் பொன்சேகா மீண்டுவந்து இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டுத் தலைமை தாங்கத் தொடங்கினார்.

இந்தத் திட்டமிடலிலும் தொடர் இராணுவ நடவடிக்கைகளிலும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணமோ சர்வதேசரீதியாக யுத்தங்களின்போது பின்பற்றப்பட வேண்டிய இராணுவ அணுகுமுறைகள், ஒழுங்கு விதிகள் பற்றிய அக்கறையோ சிறிதும் காணப்படவில்லை. மறுதலையாக மக்களை எவ்வளவு தூரம் நெருக்கடிக்கு உள்ளாக்க முடியுமோ அவ்வளவு தூரம் நெருக்கடிக்கு உள்ளாக்குவதனூடாக விடுதலைப் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடை வெளியை அதிகப்படுத்துவதும் அதன்வழி புலிகளை மக்களிலிருந்து அந்நியப்படுத்துவதும் அந்நியப்பட்ட புலிகளை ஒழித்துக்கட்டுவதுமே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. அதற்காக எத்தகைய வழி முறைகளையும் கையாளத் தயாராக இருந்தது அரசாங்கம். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் என்பவற்றைத் தடைசெய்வதிலிருந்து மக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு வலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், கோவில்கள் என்பவற்றை இலக்குவைத்து விமானத் தாக்குதல், மற்றும் செல் வீச்சை மேற்கொள்ளவும் அது தயங்கவில்லை. ஏற்கெனவே விடுதலைப் புலிகளுடைய மக்கள் விரோத நடவடிக்கைகள் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு விரிசலை உருவாக்கி இருந்தது என்பதும் அது மக்களை அந்நியப்பட வைத்திருந்தது என்பதுவும் குறித்துக்காட்டத்தக்க ஒரு விடயம்.

முதலில் கிழக்கில் ஆரம்பித்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதன் பின்னர் தென்னிலங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சரத் பொன்சேகா பேசும்போது, இலங்கையில் சிறுபான்மையினர் இருக்க வேண்டுமானால் அவர்கள் இருக்க வேண்டிய முறையில் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் விசேடமாக எந்தச் சலுகைகளையும் கோரக் கூடாது எனவும் சொன்னார்.

இராணுவத் தளபதியின் இந்தக் கூற்று அவர் இலங்கை அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதை எடுத்துக்காட்டியது.

ஆனால் அந்த முக்கியத்துவம் இவ்வளவு விரைவிலேயே கேள்விக்குரியதாகுமென்று அவர் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார். சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா சொல்வதைப் போல அவர் போரின் இறுதிக்காலங்களில் வரைபடங்களுடனேயே வாழ்ந்து வந்தவர். அவருடைய அலுவலகத்தின் ஹோலில் பெரிய வரைபடம் ஒன்று விரித்துவைக்கப்பட்டிருக்கும். உண்ணும்போதும் உறங்கும்போதும் அவருடைய மூளையில் வரைபடமே ஓடிக்கொண்டிருக்கும். புலிகளின் நிலைகள், இராணுவத்தின் நிலைகள், புலிகள் முன்னேறி வந்து தாக்கக் கூடிய வழிகள், அவற்றைத் தற் காத்துக்கொண்டு முன்னேற எடுக்க வேண்டிய வழிமுறைகள், தந்திரோபாயங்கள் என்று வரைபடங்களுடனேயே வாழ்ந்து இறுதி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர். வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்குத் தனது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டுமென விரும்பினார்.

ஆனால் வெற்றியைத் தொடர்ந்து சிங்களச் சமூகத்தில் சரத் பொன் சேகாவுக்கு வளர்ந்துவந்த ஆதரவும் ஊடகங்கள் அளித்துவந்த முக்கியத்துவமும் ராஜபக்ச குடும்பத்திற்கு எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தன. குறிப்பாகப் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ச இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளானார்.

நாட்டின் தலைவர் என்ற வகையில் போரை நிறைவுசெய்ததில் மகிந்த ராஜபக்ச பாராட்டிற்குள்ளானாலும் களமுனை இராணுவத் தளபதி என்ற வகையில் பௌத்த மத பீடங்களாலும் ஊடகங்களாலும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டவராக சரத் பொன்சேகாவே இருந்தார்.

அரசாங்கத் தரப்பிலிருந்து சரத் பொன்சேகாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைக்குமாறு ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. சரத் பொன்சேகா எதிர் பார்த்தது போலப் பதவி நீட்டிப்புச் செய்யப்படவில்லை. பதிலாக ஏனோதானோவென்று அமைச்சரவைச் செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டது. இவை சரத் பொன்சேகாவை ஆத்திரப்படவைத்தன. எனினும் இரண்டு தரப்பினருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியால் அவர் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டாரே ஒழிய அவருக்கான அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை. அது யுத்தத்தின் மூலம் முறியடிக்கப்பட வேண்டும் என்று ஆரம்பம் முதலே கூறிவந்த ஜேவிபி அதற்காகவே மகிந்த ராஜபக்சவையும் அதன் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் ஆதரித்துச் செயற்பட்டு வந்த ஜேவிபி யுத்தம் முடிவடைந்ததும் யுத்த வெற்றிக்குத் தாம் மட்டுமே காரணம் என்று ராஜபக்ச குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவதையும் யுத்த வெற்றியில் தாங்கள் புறக் கணிக்கப்படுவதையும் உணர்ந்தனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிகூட யுத்த வெற்றி விழாக்களில் ஓரம்கட்டப்பட்டனர்.

அடுத்து வரும் தேர்தலில் வெற்றியைத் தனதாக்கிக்கொள்வதற்கு இந்த ஓரம்கட்டல் அரசாங்கத்திற்கு அவசியமாக இருந்தது. யுத்த வெற்றி தான் அதன் தேர்தல் மூலதனம். இந்த மூலதனத்தை உடனடியாகவே தேர்தல் வெற்றியாக்குவதற்காகக் குறித்தகாலப் பகுதிக்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை அறிவித்தது அரசாங்கம்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்போடு சரத் பொன்சேகாவைத் தேர்தலில் இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று எதிர்க்கட்சிகள் முடிவுக்கு வந்தன. சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தனக்கு வகிபாகம் ஏதும் கிடைக்காது என்பதால் எதிரணியின் வேட்பாளராவது என்ற தீர்மானத்தை எடுத்தார்.

போர் வெற்றியை மூலதனமாக்கித் தேர்தலில் வெற்றிகாண நினைத்த மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு இந்தத் தீர்மானம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளைவாக விடுதலைப் புலிகளை முறியடித்த போரின் இறுதி நாட்களில் சரத் பொன்சேகா களத்தில் இருக்கவில்லை என்றும் வேறு களமுனைத் தளபதிகளே இறுதி யுத்தத்தை நடாத்தினார்கள் என்றும் போர் வெற்றியில் அவருக்கு எத்தகைய பாத்தியதையும் இல்லை யென்றும் பிரச்சாரத்திலீடுபட்டது ராஜபக்ச தரப்பு.

இதையே சாதகமாகப் பாவித்த சரத் பொன்சேகா சண்டே லீடருக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் போரின் இறுதி நாட்களில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்ட பாய ராஜபக்சவின் உத்தரவின்பேரில் களமுனைத் தளபதிகள் படுகொலை செய்ததாகத் தான் அறிந்ததாகவும் போர்க்குற்ற விசாரணை என்று எதுவும் வந்தால் தனக்குத் தெரிந்ததைச் சொல்வேன் என்றும் தெரிவித்தார்.

இது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குப் பேரிடியாக அமைந்தது. ஏற்கெனவே இலங்கையில் ‘ஜன நாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு’, வெளியிட்டு சானல் 4 உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியான போர்க்குற்றக்காட்சி தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில் இராணுவத் தளபதியாக இருந்தவரே அது பற்றி விசாரணைகளில் சொல்லத் தயாராவார் என்றால் அது கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என்பதோடு, அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகும் பட்சத்தில் தன் எதிர்காலத்திற்கே ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்து கொண்ட அரசாங்கம் சரத் பொன் சேகாவுக்கு எதிரான சதி வலைகளைப் பின்ன ஆரம்பித்தது.

முதலாவதாக, சரத் பொன்சேகா ஜனாதிபதி ஆவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்பது. எத்தகைய வழிமுறையையும் அதற்குப் பாவிப்பது.

இரண்டாவதாக, சரத் பொன் சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சோடித்து அவரைக் கைதுசெய்வது.

இரண்டு வழிகளிலும் முனைந்த அரசாங்கம் எல்லாவகையான வன்முறைகளையும் மோசடிகளையும் பாவித்து இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத வன்முறைகளுடன் கூடிய தேர்தலை நடாத்தியது.

இந்த வழிமுறைகளினூடாக சரத் பொன்சேகாவின் வெற்றியைத் தடுக்க முடியாது போனால் அன்றிரவே அவரைக் கைதுசெய்வது என்று திட்டமிட்டது.

தேர்தலின்போது ஏவப்பட்ட வன்முறைகளால் அச்சமடைந்த எதிர்க்கட்சியினர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது மீளவும் தம்மீது வன்முறை ஏவப்படலாம் என்பதால் தேர்தல் தினமான ஜனவரி 26 இரவு ஒன்றாகத் தங்கியிருப்பதற்காக ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

அன்றிரவே ஹோட்டலைச் சுற்றி 400க்கு மேற்பட்ட இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அரசாங்கம் தன்னைக் கைதுசெய்ய முயல்வதாக சரத் பொன்சேகா குற்றம்சாட்டினார்.

சர்வதேசத்தின் அழுத்தமும் சரத் பொன்சேகாவுக்கான வெற்றிவாய்ப்பும் அற்றுப்போன நிலையில் மறுநாள் இராணுவம் ஹோட்டலை விட்டு விலகியது. சரத் பொன்சேகா ஹோட்டலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

எனினும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சதிவலைப்பின்னலைக் கைவிடவில்லை. ஹோட்டலில் தங்கியிருந்து அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் ஜனாதிபதியைக் கொல்லவும் சதி செய்தார் என்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களூடாகப் பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்துவிட்டது.

உடனடியாகப் பொதுத் தேர்தலை நடாத்தத் திட்டமிட்ட அரசாங்கம் சரத் பொன்சேகா என்ற காயை அரங்கிலிருந்து அப்புறப்படுத்துவது தான் தமது வெற்றிக்கான உத்தர வாதம் என்று கருதியது. அதற்கான சந்தர்ப்பத்தை அது எதிர்பார்த்துக் காத்திருந்தது.

பிப்ரவரி 8 ஆம் திகதி சரத் பொன்சேகா நடாத்திய செய்தியாளர் மாநாடு உடனடியாகவே சரத் பொன்சேகாவை அரங்கிலிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிட்டது.

அந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர் மூன்று விடயங்களைத் தெரிவித்திருந்தார். ஒன்று: சர்வதேசப் போர்க்குற்ற விசாரணைகளுக்குத் தான் முகம் கொடுக்கத் தயார் என்றும், இறுதி நேரத்தில் யுத்த களத்தில் என்ன நடைபெற்றது என்பது பற்றித் தனக்குத் தெரிந்ததைச் சொல்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தெரிவு என்பது முறையற்றது என்று தெரிவித்து அதற்காகத் தான் நீதிமன்றத்திற்குச் செல்லப் போவதாக அறிவித்தார். மூன்றாவது பொதுத் தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாடு மகிந்த அரசாங்கத்தை உசாரடையச் செய்துவிட்டது. அன்றிரவே நூற்றுக்கு மேற்பட்ட இராணுவப் பொலிஸார் அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

அவரது கைது பற்றி அரசத் தொலைக்காட்சியூடாகக் கருத்துத் தெரிவித்த அரசாங்கம் அவர் இராணுவ இரகசியங்களை வெளியிடத் திட்டமிட்டிருந்தார் என்றும், அது இராணுவத்திற்குத் துரோக மிழைக்கும் ஒரு நடவடிக்கை என்றும் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியது. சரத் பொன்சேகா தனது மருமகனின் நிறுவனத்தினூடாக மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவில் மோசடி இருப்பதாகக் கூறி அவரது மருமகன் தனுகதிலகரட்ணவைக் கைது செய்யப் பிடிவிறாந்து பிறப்பித்தது. அவரது வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து அதற்குள்ளிருந்து கைப்பற்றப்பட்ட டொலர்கள் எவ்வாறு அவருக்குக் கிடைத்தன என்று தனுகவின் தாயாரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக சரத் பொன் சேகாவிடமும் வாக்குமூலத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை இராணுவ விதிமுறைகளின் கீழ்க் கைதுசெய்ய முடியாது, விசாரிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கிளப்பிய வாதத்தை அவர் ஓய்வு பெற்றாலும் ஆறு மாதங்களுக்குள் இராணுவச் சட்டங்களின் கீழ்க் கைது செய்யப்படலாம், விசாரிக்கப்படலாம் என்று அரசாங்கம் சொல்லி முறியடித்தது. மே மாதம் 14ஆம் திகதியுடன் ஆறு மாதங்கள் பூர்த்தியடைவதால் அதற்கிடையில் விசாரணைகளை முடித்துவிடுவதில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

அரசாங்கம் எதிர்பார்த்தபடியே சரத் பொன்சேகாவை அரங்கிலிருந்து அப்புறப்படுத்தியவுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புச் சிதைந்துவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தின் கீழ் ஒன்றாகப் போட்டியிட்ட ஜேவிபி, ஐதேக உட்பட அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே களமிறங்கத் தீர்மானித்துள்ளன. இது அரசாங்கத்திற்கெதிரான வாக்குகளைச் சிதறடித்துவிடும் என்பதால் ஒரு வகையில் அதற்கு இலாபகரமானது.

ஆனால் அரசாங்கம் எதிர்பார்க்காத இடத்திலிருந்து இக்கைதுக்கு எதிரான எதிர்ப்பு வந்தது. இலங்கையின் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்திவரும் பௌத்த மகா சங்கத்திடமிருந்து வந்த எதிர்ப்புதான் அது. சரத் பொன்சேகாவின் கைதுக்கு எதிராக ஒரு மாநாட்டைக் கூட்ட அது திட்டமிட்டது. தனது ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் பிளவை ஏற்படுத்தி அவற்றைப் பலவீனப்படுத்திய ஜனாதிபதி பௌத்த மகா சங்கத் திற்குள்ளும் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார். தற்போது மாநாடு ரத்துச் செய்யப்பட்டுவிட்டது.

இப்போது எதிரணிக் கட்சிகளுக்குப் பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குரிய ஒரு விடயமாக சரத் பொன்சேகாவின் விடயம் மாறிவிட்டுள்ளது. ஆனால் அந்தப் பிரச்சாரம் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறியே என்கின்றனர் ஒரு சாரார்.

சரத் பொன்சேகா போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க முன்வருவதன் மூலம் படையினர் காட்டிக் கொடுக்கப்படுவார்கள். அதனூடாகச் சிங்களச் சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டுவிடும். அது ஒரு தேசத் துரோக நடவடிக்கை, சதி முயற்சி என்று அரசாங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரத்தை முறியடிக்கும் தார்மீக பலம் எதிர்க் கட்சிகளுக்கு கிடையாது. குறிப்பாக சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தும் ஜேவிபிக்கு அந்தப் பலம் ஒருபோதும் இல்லை. ஏனெனில் இத்தகைய அரசியல் போக்கை வளர்த்ததில் அந்தக் கட்சிக்குக் கணிசமான பங்கிருக்கிறது.

ஆக, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜேவிபியும் தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு கட்சியெனச் சுட்டப்படலாம். ஏற்கெனவே அரசாங்கம் தம்மைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் கூறி அதைத் தடுப்பதற்காகச் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது அக்கட்சி.

தேசத் துரோகம் என்ற ஒற்றை வார்த்தையினுள் சரத் பொன்சேகாவின் எதிர்காலம் அமிழ்த்தப்பட்டுவிடப் போவதற்கான அறிகுறிகளே மேற்கிளம்ப ஆரம்பித்துள்ளன.

சிங்களச் சமூகம் தானே வளர்த்த ஒரு அரசியல் வழிமுறையூடாகத் தன்னையே அழித்துக்கொள்ளும் ஒரு சுழலுக்குள் அகப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமூகம் துரோகம், தியாகம் என்ற வழிமுறைகளினூடாகத் தன்னையே அழித்துக்கொண்டது போல என்று எண்ணத் தோன்றுகிறது.

உள்ளடக்கம்