Google   www kalachuvadu.com

கட்டுரை

ராஜபக்ச வெற்றியின் சரித்திரம்

சங்கரன் சித்தார்த்தன்

கடந்த மே மாதத்தில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதோடு மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டமும் வன்முறையும் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டது போல அங்கு அமைதி திரும்பிடவில்லை. பதிலாக அரசியல் நெருக்கடியின் களமும் தளமும் வேறாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் உருவான அரச ஆதரவு அலையை மூலதனமாகக் கொண்டு தனது ஆட்சிக் காலத்தை நீட்டித்துவிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நினைத்திருந்தார். அதனால் அவருடைய பதவிக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கையிலேயே அவர் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.

ஆனால் தேர்தல் நெருங்கிய தறுவாயில் அவர் நினைத்தது போல நிலைமைகள் அமைந்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் களமுனைத் தளபதியாக இருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டபாய ராஜபக்சவுக்கும் இடையே உருவான மோதல் சரத் பொன்சேகாவை எதிரணியை நோக்கித் தள்ளியது.

ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போரில் பெற்ற வெற்றி எதிர்க் கட்சிகளைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலைமைக்குத் தள்ளியிருந்தது. அதேபோன்று மகிந்த ராஜபக்சவுக்கு ஈடான ஒரு வேட்பாளர் எதிர்த்தரப்பில் இருக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர் ரணில் விக்ரமசிங்கமீது அவருடைய கட்சிக்குள்ளேயே அதிர்ஷ்டமற்ற தலைவர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவைத் தவிர்த்து வேறொருவரை நியமிக்க வேண்டுமென்ற குரலும் வலுப்பெற்றிருந்தது. இதேபோல மூன்றாவது பலம் வாய்ந்த கட்சி எனச் சொல்லப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் கவர்ச்சிகரமான ஒரு தலைவர் எனக் கொள்ளப்பட்டவரல்ல. இதனால் அக்கட்சியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து ஒரு பொது வேட்பாளரைக் களமிறக்குவதுதான் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி என்று நினைத்தது.

இந்நிலையில் இரண்டு ‘முன்னாள்’ சரத்களின் பெயர்கள் பொது வேட்பாளராக நியமிக்கப்பட ஆலோசிக்கப்பட்டன. ஒருவர் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா. மற்றையவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் இருப்பினும், தனது பதவியின் இறுதிக் காலத்தில் ஆளும் மகிந்த அரசாங்கத்திற்கெதிராகப் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய தன் காரணமாக எதிர்க் கட்சியினரின் ஆதரவுக்குரிய ஒருவராக மாறியிருந்தார்.

அதேபோன்று முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா புலிகளுக்கெதிரான இராணுவ வெற்றியில் தனக்குரிய பாத்தியதையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வழங்காததாலும் இராணுவத் தளபதியாகத் தான் தொடர்ந்திருப்பதை மகிந்த அணியினர் அங்கீகரிக்க மறுத்ததாலும் அதிருப்தியுற்று மெல்ல மெல்ல அரசாங்கத்திற்கெதிரானவராக மாறிவந்தார்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் அரசாங்கப் படைகள் பெற்ற வெற்றியானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற ஒரு வீரனாக்கி இருந்தது. அரச கட்டுப்பாட்டில் இருந்த தொலைக்காட்சிகளும் வானொலிகளும் பத்திரிகைகளும் அவரை வீர நாயகனாகச் சித்திரிப்பதில் முனைப்புக் காட்டின. தொலைக்காட்சிகளும் வானொலிகளும் மகிந்தவை வீரநாயகனாகச் சித்தரித்துப் பாடல்களை இடைவிடாது ஒளி மற்றும் ஒலிபரப்பி வந்தன.

இத்தகைய சூழலில் போர் வெற்றியையே பிரதானப்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளைச் சுவீகரிக்கும் முனைப்பில் ஈடுபட்ட அரசாங்கத்தைத் தோற்கடிப்பதாயின் எதிரணியிலும் சிங்கள மக்கள் மத்தியில் வீர நாயகனாகக் கொள்ளத்தக்க ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்ற நிலை உருவாகியது.

அதற்குப் பொருத்தமானவர் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் களத்தில் நின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவே என்ற முடிவுக்கு எதிரணிகள் வருவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

தாம் கொடுத்த வாளைக்கொண்டு எதிரியை வீழ்த்திய அரசாங்கம் அதே வாளைத் தமக்கெதிராகப் பாவிக்க ஆரம்பித்துவிட்டதில் எரிச்சலுற்றிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைத் தேர்தலில் நிறுத்தும் முயற்சிகளில் முழுமூச்சாக ஈடுபட்டது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் பொருத்தமான வேட்பாளர் இன்றி அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேளை சரத் பொன்சேகாவின் பெயர் எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளராக முன்மொழியப்பட்டபோது அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

ஆக, இறுதியில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்ட பின்னரும்கூட விடுதலைப் புலிகளை மையப்படுத்தியதாகத் தமிழ் மக்களுடைய அரசியலை மையப்படுத்தியதாகவே இந்தத் தேர்தல் அமைந்தது.

அதாவது தமிழ் மக்களுடைய போராட்டத்தை ஒழித்ததில் முக்கியப் பங்கு வகித்தது யார் என்பதற்கான ஒரு போட்டியாக, தமிழ் மக்களுக்கு எதையுமே கொடுக்காமல் அவர்களுடைய போராட்டத்தை ஒழித்துக்கட்டியது யார் என சிங்கள மக்களிடையே நிறுவும் போட்டியாக, மிகுந்த இனவாதத் தன்மை மிகுந்ததாகத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக மேலும் இனவாதத்தை வளர்ப்பதான ஒரு தேர்தலாக அமைந்தது.

இத்தகைய ஒரு நிலைமையில் சரி தவறுகளுக்கப்பால் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவக் குரலாக இருந்த விடுதலைப் புலிகளும் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளும், மலையகத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்திச் சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தவும் சிறுபான்மை இனங்களின் அரசியல் கோரிக்கையை வலுப்படுத்தவும் வாய்த்த சந்தர்ப்பத்தை அவை கைநழுவ விட்டுவிட்டன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தாம் பட்ட அவலம் காரணமாகத் தமிழ் மக்கள் ஒருபோதும் மகிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்பதையும் அவர்கள் தமது வெறுப்பைக் காட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஒருவருக்கே வாக்களிப்பார்கள் என்பதையும் நாடி பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன் சேகாவுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. மற்றைய சிறுபான்மை இனக்கட்சிகளான முஸ்லிம் காங்கிரசும் ஜனநாயக மக்கள் முன்னணியும்கூட அதே வழியையே தொடர்ந்தன.

தேர்தலில் எதிர்பாராமல் ஏற்பட்ட இத்தகைய நிலைமைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இலகுவான வெற்றி என்பதைக் கனவாக்கிவிட்டன. தேர்தல் நெருங்க நெருங்க சரத் பொன்சேகாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்து வந்தது.

இதன் காரணமாகத் தேர்தல் வெற்றியைத் தமதாக்கிக்கொள்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்தது. எதிர்க்கட்சியினருக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. எதிர்க் கட்சியினரின் கூட்டங்கள், ஊர்வலங்கள் பொலிஸாரின் அனுசரணையுடன் அரசாங்க ஆதரவுக் குண்டர்களால் தாக்கப்பட்டன. எதிரணியினரின் கூட்டங்களுக்கு மக்கள் செல்ல அச்சப்படும் வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எதிரணியினரின் தேர்தல் காரியாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் எதிரணியினரின் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண்மணி ஒருவர் மரணமடைந்தார். புத்தளத்திலும் இளைஞர் ஒருவர் பலியானார். பெரும் எண்ணிக்கையானோர் படுகாயமடைந்திருந்தனர். எதிரணியினருக்கெதிரான இவ்வன்முறைகள் ஊடகங்களில் வெளிவராதவாறு ஊடகங்களைக் கட்டுப்படுத்தியது அரசாங்கம். மறுபுறத்தில் எதிரணியினருக்கு எதிரான சேறடிப்புகள், அவதூறுகள்யாவும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஊடகங்களினூடாக மேற்கொள்ளப்பட்டன. தனியார் ஊடகங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகின.

அரச ஊடகங்களில் எதிரணியினருக்குப் போதுமான நேரம் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அரச ஊடகங்களின் பாரபட்சமின்மையைக் கண்காணிக்கவும் உறுதிப்படுத்தவும் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரி பணியாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டார். அரச ஊடகங்களால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். தான் தகுதி வாய்ந்த அதிகாரியை நியமித்தும்கூட எத்தகைய பிரயோசனமும் இல்லாத காரணத்தால் அவரைத் தான் திருப்பியழைப்பதாகத் தேர்தல் ஆணையாளர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

ஊடகங்கள்மீதான ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக லங்கா ஈநியூஸ் என்ற இணையதளம் உட்பட நான்கு இணையதளங்கள் தடை செய்யப்பட்டன. லங்கா ஈநியூஸ்இல் பணியாற்றி வந்த பிரகீத் எக்னலியகொட என்ற ஊடகவியலாளர் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்னதாக ஜனவரி 24ஆம் திகதி கடத்தப்பட்டார். இன்றுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரிய வரவில்லை.

இக்காலப்பகுதியில் வெளிவந்த இவருடைய கட்டுரைகளில் இங்கு குறிப்பிடத்தக்கது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியாவார் என்றால் ஒரு இராணுவ ஆட்சியே இலங்கையில் ஏற்படும் என அரசாங்கம் மேற்கொண்டு வந்த பிரச்சாரத்திற்கு எதிராகத் தற்போது இலங்கையில் உள்ளது ஜனநாயக ஆட்சியின் பேரால் நடைபெறும் ஒரு சர்வாதிகார ஆட்சியே என்றும் உண்மையில் ஒரு ஜனநாயக ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியதாகவும் இருந்தது. இது ஆட்சியாளர்களுக்கு மேலும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டிருந்தது.

ஊடகங்களை அரசாங்கம் கையாண்ட விதத்தின் இன்னொரு விடயத்தையும் இங்குக் குறிப்பிடல் வேண்டும். சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளார் என்றும், அவர் தேர்தலில் வெற்றிபெறுவாராயின் புலிகள் எதைக் கோரிப் போராடினரோ அதை அவர் வழங்கி விடுவார் என்றும், அரசாங்கம் புலிகளைத் தோற்கடித்துள்ள நிலையில் சரத் பொன்சேகா மேற்கொள்ளும் இந்நடவடிக்கை ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்றும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது அரசாங்கம். அவ்வாறான ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சரத் பொன்சேகாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை மறுத்திருந்தன. ஆனால் அரசாங்க அச்சகத்தில் இரவோடிரவாகப் போலியான ஒப்பந்தம் ஒன்று அச்சிடப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

அதையும்விட முக்கியமானது தேர்தலுக்கு முதல் நாளன்று இலங்கையில் சிங்கள மக்களிடையே ஆகக் கூடுதலாக விற்கும் பத்திரிகை எனவும் சுயாதீனமான பத்திரிகை எனவும் பெயர் பெற்றிருந்த லங்கா தீப என்னும் சிங்கள நாளிதழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனுடனான நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்நேர்காணல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டதான சாரத்தைக் கொண்டிருந்தது.

நேர்காணல் வெளியானதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தான் லங்காதீப பத்திரிகைக்கோ அதை எழுதியிருந்தாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஊடகவியலாளருக்கோ அவ் வாறான நேர்காணல் எதையும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார். மறுநாள் அந்நேர்காணலைத் தொகுத்து எழுதியிருந்தவர் இரா. சம்பந்தன் தனக்கு அந் நேர்காணலைத் தரவில்லை என்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துகளையே தான் தொகுத்து எழுதியதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அதிலும் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. அச்செய்தியாளர் மாநாட்டில் இரா. சம்பந்தன் அவ்வாறான கருத்துகள் எவற்றையும் தெரிவிக்கவில்லை என்பது ஒன்று. அதையும்விட முக்கியமானது அதை எழுதியவர் எனச் சொல்லப்பட்ட குறித்த ஊடகவியலாளர் அச்செய்தியாளர் மாநாட்டிற்கே போகவில்லை என்பதுதான். ஆனால் இவையெல்லாம் வெளியே தெரிய வரும்போது தேர்தல் முடிந்துவிட்டிருந்தது. மக்கள் வாக்களித்து விட்டிருந்தார்கள்.

பின்னர் இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிற்று. ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும் சகோதரமான பசில் ராஜபக்சவின் கோரிக்கையின் பேரில் லங்காதீப ஆசிரியரின் உத்தரவில் குறித்த ஊடகவியலாளர் அந்தக் கற்பனைப் பேட்டியை எழுதியிருக்கிறார்.

வழமைபோல் தவறு, குறித்த ஊடகவியலாளர்மீது போடப்பட்டு லங்காதீப தினசரியிலிருந்து விலக்கப்பட்ட அவர் தற்போது பதவியுயர் வோடு அதன் ஞாயிற்றுப் பதிப்பில் பணியாற்றுகிறார்.

தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா கட்சித் தலைவர்களுடன் நடாத்திய கூட்டத்திலும் செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவித்த கருத்துகள் இந்தத் தேர்தலின் லட்சணத்தைத் துலாம்பரமாக எடுத்துக்காட்டின.

தேர்தல் ஆணையாளராகிய தன்னால் விடுக்கப்படும் உத்தரவுகளை அரசாங்கத் தரப்பினர் மதிப்பதில்லை எனவும் இதனால் தன்னால் எதுவும் செய்ய முடியாதிருப்பதாகவும் தான் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடுகளிலிருந்து விலகப் போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.

தேர்தல் சட்டங்களை உறுதியாக நடைமுறைப்படுத்தத் தான் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவுக்கு விடுத்த கோரிக்கைகளை அவர் கணக்கில் எடுக்காததால் தான் இனி மேல் அவருக்கு இது தொடர்பில் எத்தகைய கோரிக்கைகளையும் விடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபருக்குப் பல கடிதங்களை அனுப்பியிருக்கின்ற போதிலும்கூட, தேர்தல் சட்டவிதி மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றனவே தவிர, குறைந்தபாடாக இல்லை என்று கவலை தெரிவித்த ஆணையாளர் தனக்கு இனிமேல் தேர்தல் முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளை அனுப்ப வேண்டாமென்றும்கூட ஏனைய அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவை ரத்து செய்துவிடலாமென்று விதிப்புரையும் செய்திருக்கிறார். நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட தினம் தொடக்கம் வாக்களிப்பு தினம் வரையான காலகட்டத்தில் சுவரொட்டிகள், கட் அவுட்கள், பதாகைகள் மற்றும் படங்கள் போன்ற வேட்பாளர்களின் பிரசாரச் சாதனங்களைக் காட்சிக்கு வைத்தல் தொடர்பான கட்டுப்பாடுகள் பற்றியதே 74ஆவது பிரிவாகும்.

சட்டவிரோதமான முறையில் பிரச்சாரச் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான அதிகாரங்களையும் சட்டவிதிகள் மீறப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமானால் படை பலத்தைப் பிரயோகிப்பதற்கான அதிகாரங்களையும் அந்தப் பிரிவு பொலிஸாருக்கு வழங்குகிறது. தேர்தல் ஆணையாளரின் இந்தக் கருத்து தேர்தல் சட்டவிதிகள் மீறப்படுவதைத் தடுப்பதற்கு பொலிஸ் தரப்பு நடவடிக்கை எடுக்கின்ற இலட்சணத்தைப் பிரகாசமாக அம்பலப்படுத்தி நின்றது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் இலங்கையின் வரலாற்றிலேயே மோசமான வன்முறைகளைக் கொண்ட ஒரு தேர்தல் இதுவென வர்ணித்திருந்தன. இறுதியில் வெளியான பொது நலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பான அறிக்கையில்கூட இந்தத் தேர்தல் ஏற்றுக்கொள்ளத்தக்க ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட தேர்தலாக அமையவில்லை எனச் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை இனங்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறுபான்மை இனமக்களுக்கு எதிராகவே பேசத் தொடங்கினார். அவர்களுக்கு எத்தகைய அதிகாரங்களையும் வழங்கப்போவதில்லை என வெளிப்படையாகத் தெரிவித்தார். மகியங்கனையில் ஜனவரி 16ஆம் திகதி பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் ஜனவரி 27இல் தான் மீளவும் பதவியேற்றதும் இரண்டு உடன்படிக்கைகளை ரத்து செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார். 2002 பிப்ரவரியில் அன்றைய பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையையும் ஜெனரல் பொன்சேகாவும் இரா. சம்பந்தனும் கைச்சாத்திட்டதாகக் கூறப்படும் “துரோகத்தனமான” உடன்படிக்கையையுமே தான் ரத்துசெய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார். அத்தோடு தனிப்பட்ட நலன்களுக்காக நாட்டுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் அரசியல் கட்சிகளாலும் அரசியல்வாதிகளாலும் செய்துகொள்ளப்படுகின்ற சகல உடன்படிக்கைகளையும் அரசியலமைப்புக்கு முரணானவையென்று பிரகடனம் செய்யும் சட்ட மூலமொன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகவும் அவர் அன்றைய பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் மகிந்த அரசாங்கம் இத்தோடு விட்டுவிடவில்லை. சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்காது என்பதால் அவர்களின் வாக்களிப்பைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. குறிப்பாக யாழ்ப்பாண வாக்காளர்கள் தமக்கு வாக்களிக்காதது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மீதிருக்கும் அதிருப்தியின் காரணமாக சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் உணர்ந்துகொண்ட அரசாங்கம் தேர்தலுக்கு முதல் நாளிரவு யாழ் குடா நாடு முழுக்க குண்டுகளை வெடிக்க வைத்தது. பாரிய 13 குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதோடு பல்வேறு இராணுவ முகாம்களிலிருந்து செல்வீச்சுகளையும் நடாத்தியிருந்தது. போர் ஓய்ந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள் அச்சத்திலாழ்ந்தார்கள். ஏற்கெனவே தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கூறி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஏராளமான துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு ஜனாதிபதிக்கு ஆதரவான ஈபிடிபி உறுப்பினர்கள் மூலமாக யாழ்குடா நாடெங்கும் விநியோகித்திருந்தது. தேர்தல் தினத்தன்று பொதுப் போக்குவரத்துகளை அரசு முடக்கியது. ஆங்காங்கே வாக்களிக்கச் சென்றவர்கள் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானார்கள். புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுத் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் நடாத்தப்பட்ட தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வெறும் 20 சத விகிதமானோரே வாக்களித்திருந்தனர் என்ற புள்ளிவிவரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருவாக்கியிருந்த ஜனநாயகச் சூழலுக்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமே. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவானவர்கள் வாக்களிக்கவிடாது தடுக்கப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். தேர்தல் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு எதிர்க் கட்சிப் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படாமலே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முறைமையே சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக இருந்தது. வழமையாக ஒவ்வொரு தேர்தல் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டதும் அம் முடிவுகள் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு அவருடைய கையொப்பத்துடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படும். ஆனால் இம்முறை உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாதென்றும் மாவட்டரீதியாக முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டே அறிவிக்கப்படுமெனவும் இந்த ஏற்பாடு தேர்தல் முடிவுகள் காரணமாகக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மோதிக்கொள்ளாமலிருக்கவே என்றும் சொல்லப்பட்டது. தேர்தல் முடிந்த பிற்பாடு இரத்தினபுரி என்னுமிடத்தில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையமாக இருந்த தொழில்நுட்பக் கல்லூரிக்குப் பின்புறமாக எரிக்கப்பட்ட குப்பைகளுள் இருந்து எரிந்தும் எரியாததுமாக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஏற்கெனவே எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகள் என்றால்கூடத் தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் ஆறு மாதங்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய வாக்காளர் அட்டைகள் எவ்வாறு குப்பைக்குச் சென்றது என்ற கேள்விக்குத் தேர்தல் ஆணையாளரிடமிருந்து இதுவரை பதிலில்லை.

தேர்தல் ஆணையாளர் இதற்கு மட்டுமல்ல வேறு பல கேள்விகளுக்கும் இதுவரை வாய்திறக்கவே இல்லை. தேர்தலுக்கு முன்பாக இந்தத் தேர்தலைத் தன்னால் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் நடாத்த முடியாதிருக்கின்றது என்று தெரிவித்திருந்த அவர் தேர்தல் ஒழுங்காக நடைபெற்றிருக்கிறது என்றும் ஜனாதிபதியாக மீண்டும் மகிந்த ராஜபக்சவே தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அவர் வெளியிடுகிற போதான அவருடைய நிலைமை இயல்பாக இல்லாதிருந்தது என்றும் அவர் மிகுந்த அச்சமடைந்தவராகக் காணப்பட்டார் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டன. தமது அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அவை தேர்தல் ஆணையாளரிடம் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தன.

அவற்றுள் சில முக்கியமான கேள்விகள் இவை:

இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னராக ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச தேர்தல் ஆணையாளரைச் சந்தித்தார் என்று ரைம்ஸ் நாளிதழின் செய்தியாளர் ஜெரேமி குறிப்பிட்டுள்ளார். இதை அமைச்சர்கள் சிலர் மறுத்தபோது பசில் ராஜபக்ச தேர்தல் ஆணையாளரது அலுவலகத்திலிருந்து வெளியேறியதைத் தான் கண்டதாக வென்ஜர் என்ற சுவிஸ் நாட்டு ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். பசில் ராஜபக்ச தங்களைச் சந்தித்தாரா இல்லையா என்பதைத் தாங்கள் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு சந்தித்தாரானால் என்ன விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது அல்லது என்ன உத்தரவு தங்களுக்குப் பிறப்பிக்கப்பட்டது என்பதைத் தாங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டாவது: உங்களையும் உங்களது மனைவியையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தடுத்து வைத்துக்கொண்டு தேர்தல் முடிவுகள் குறித்து அரசாங்கத்திற்குச் சாதகமான வகையில் கருத்துகளை வெளியிடும்படியும் தங்களது ராஜினாமாவை வாபஸ் பெறும்படியும் பயமுறுத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது. மக்களது நலன் கருதியும் மக்களுடைய நம்பிக்கையைப் பெறும் வகையிலும் இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்பதை உங்களுடைய முகத்தை நேராக நிமிர்த்தி மக்களுடைய முகத்தை நேராகப் பார்த்து அச்சமின்றி, குரலைத் தாழ்த்தாமல் உறுதிப்படுத்த முடியுமா?

இதேபோன்று தேர்தல் தினத் தன்று தேர்தல் ஆணையாளரது மனைவியையும் மகளையும் வாட்டர்ஸ் எஜ்ட் என்ற ஹோட்டலில் ஒரு இராணுவக் குழுவினர் தடுத்துவைத்திருந்ததாக வெளியான செய்தி பொய்யானது என்று தங்களால் உறுதிப்படுத்த முடியுமா?

இதே போன்று பொதுத் தேர்தல் முடியும்வரை தாங்கள் வெளிநாட்டிற்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தங்களால் மறுக்க முடியுமா?

இறுதியாக, தாங்கள் நடாத்திய ஜனாதிபதி தேர்தல் குறித்தும் தங்கள் மீதும் பல முக்கியமான விமர்சனங்கள் உள்ளன. அந்நிலையில் எதிர் வரும் பொதுத் தேர்தலைத் தாங்கள் சுதந்திரமாக நடாத்துவீர்கள் என எவ்வாறு நாங்கள் நம்பிக்கை வைக்க முடியும்?

ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் அவை எதிர்காலத்தில் மீளவும் இடம்பெறாதவாறு தாங்கள் என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் என்பது குறித்தும் பகிரங்க அறிக்கை ஒன்றை விடுத்து உறுதிப்படுத்துவீர்களா?

இந்தக் கேள்விகள் எவற்றுக்கும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்பது இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வெளியான போது சரத் பொன்சேகாவைவிட ஜனாதிபதி 18 இலட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தார். இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிக் கூட்டணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்த முடிவுகள் முறைகேடானவை என அவர்கள் தெரிவித்தார்கள். இப்போது அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கையும் அவர்கள் தொடுத்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் முடிவுகள் உண்மையானவை அல்ல. வாக்களிப்பின் அடிப்படையிலான முடிவுகள் அல்ல இவை. திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டவை என்றால் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக உள்ள வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் சரத் பொன்சேகாவுக்கு அதிகளவிலான வாக்குகள் அளிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்பது முக்கியமான ஒரு கேள்வி.

மறுபுறத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் உண்மையானவை என்றால் சில யதார்த்த நிலைமைகளை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

வடக்கில் யாழ் மாவட்டத்தில் ஊர்க்காவற்றுறை என்ற தேர்தல் தொகுதியைவிட அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் அரசாங்கம் தோல்வியைத் தழுவி இருக்கிறது. (ஊர்க்காவற்றுறை தேர்தல் தொகுதி 1990ஆம் ஆண்டிலிருந்து தென்னிலங்கையில் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எனப்படுகின்ற ஈபிடிபியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பிரதேசம் என்பதும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுந் தரப்பிற்கு ஆதரவாக அங்கு வாக்கு மோசடி இடம்பெறுவதும் சாதாரணமான விடயம்.) யாழ் மாவட்டத்தில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பிரச்சாரங்கள் எதையும் முன்னெடுத்திருக்கவில்லை. அதற்கான பாதுகாப்பானதும் சுதந்திரமானதுமான சூழலும் அங்கிருக்கவுமில்லை. பதிலாக மகிந்தவை ஆதரித்த ஈபிடிபி அரசாங்க வளங்களைப் பெரிதும் பாவித்துப் பாரிய பிரச்சாரத்தில் இறங்கியிருந்தது. இம்முறை யாழ்ப்பாணத்து வாக்காளர்களை மகிந்தவுக்கு வாக்களிக்க வைக்கவெனப் பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் அழைக்கப்பட்டுப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. இலங்கை ஜனநாயக முன்னணியின் முக்கியஸ்தரான ரெங்கன் தேவராஜன் (லண்டன்), மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்களின் (யாழ்) பிரதிநிதியான மனோரஞ்சன் (கனடா), எழுத்தாளரான ராஜேஸ் வரி பால சுப்ரமணியம் (லண்டன்), கெங்காதரன் (லண்டன்), கலாநிதி நொயல் நடேசன் (ஒஸ்ரேலியா), மித்திரன் (கனடா), வைத்திய கலாநிதி நரேந்திரன் (மத்தியக்கிழக்கு) போன்ற பலர் மகிந்தவுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். (புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திலோ நாடு முழுவதிலுமோ தேர்தலின்போது இடம்பெற்ற ஜனநாயக முறைகேடுகள் குறித்து ஒரு வார்த்தை தானும் பேசவில்லை என்பதும், விடுதலைப் புலிகளின் இருப்பு என்பது எப்போதுமே ஜன நாயகத்திற்கு அச்சுறுத்தலானது. அது ஒழிக்கப்பட்டால்தான் ஜனநாயகச் சூழல் உருவாகும், மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்த வழியேற்படும் என்று சொல்லிவந்த இவர்கள் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு ஆறு மாதங்களின் பின் நடை பெற்ற இத்தேர்தல் ஏன் இவ்வளவு வன்முறைகளைக் கொண்டதாக இருந்தது என்றோ ஏன் யாழ்ப்பாணத்தில் வெறும் 20 வீதத்தினரே வாக்களித்தனர் என்றோ இதுவரை மூச்சுக்கூட விடவில்லை என்பது இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது.)

ஆனால் இவை எதுவும் மக்களுடைய தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் பயங்கரவாதப் பிரச்சினையாகப் பார்த்து மூர்க்கத்தனமான போர் ஒன்றினூடாக அதை அழித்தொழித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஒரு பேரழிவு யுத்தத்தை நடாத்தியவர். அவருடைய கடந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்திலும் ஆட்கடத்தல், காணாமல் போதல், படுகொலை, வரன்முறையற்ற விமான செல் தாக்குதல் உயிரழிவு, சொத்தழிவு, உறவுகளைப் பறிகொடுத்தமை, அவயங்களை இழந்தமை, அடிப்படை உணவு, மற்றும் மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டமை என்று இன்னோரன்ன காரணங்களால் தமது வாழ்வில் என்றுமில்லாதளவிற்கு அவலப்பட்டிருக்கிறார்கள். பலர் மரணத்தின் எல்லைவரை சென்று மீண்டவர்கள். தங்களது வீடு வாசல்களை இழந்து நிர்க்கதியானவர்கள். அவர்கள் இந்தத் தேர்தல் இந்த அரசாங்கத்தின் மீதான தமது வெறுப்பைக் காட்டக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதினார்கள். மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தார்கள். 13ஆவது திருத்தத்தை ஜனாதிபதி அமல்படுத்துவார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியதை அவர்கள் கணக்கே எடுக்கவில்லை. 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதற்கு அல்ல ஒரு துரும்பைக்கூட அசைப்பதற்கு அழுத்தம் கொடுக்க லாயக்கற்றவர் அவர் என்பதையும் அவர்கள் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தனர்.

அதேபோல் வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் மக்கள் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் அதேநிலைமைதான். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக இருந்து திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பெரும்பான்மையைக் குறைப்பதற்காகப் பின்னைய காலத்தில் திருமலையுடன் இணைக்கப்பட்ட சேருவில தொகுதியில் மட்டும்தான் மகிந்தவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் தொகுதியாகட்டும் தமிழர்களின் திருமலை தொகுதியாகட்டும் இரண்டிலுமே ஆளும் மகிந்த அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது.

கிழக்கின் இன்னொரு மாவட்ட மான மட்டக்களப்பு கடந்த ஐந்து வருட காலத்திலும் மிகுந்த சர்ச்சைக்குரிய ஒரு பிரதேசமாகவே இருந்து வந்துள்ளது. கருணாவின் பிரச்சினையோடு தூண்டிவிடப்பட்ட பிரதேசவாதம் எழுந்து நின்று ஆடிய ஒரு பிரதேசமாக அது இருந்தது. அவசர அவசமாக கிழக்கிற்கு ஒரு மாகாண சபைத் தேர்தலும் நடாத்தப்பட்டு ஒரு பொம்மை முதலமைச்சரும் தெரிவுசெய்யப்பட்டு வடக்கு கிழக்கில் ‘மகிந்தவின் ஜனநாயகம்’ நிலைநாட்டப்பட்ட முதற் பிரதேசமாகவும் அது இருந்தது.

முதலமைச்சரான பிள்ளையானும் ஆளும் கட்சியின் அமைச்சரான கருணாவும் தமக்குள் அவ்வப்போது மோதிக்கொண்டாலும் இருவருமே சேர்ந்து மகிந்தவுக்கு ஆதரவு கோரி வாக்குவேட்டை நடாத்திய பிரதேசமாகவும் அது இருந்தது. தேர்தலுக்கு முன்னைய நாட்களில் எதிரணிக்கு ஆதரவு தெரிவித்த பலர் தாக்குதலுக்குள்ளானதும் அச்சுறுத்தப்பட்டதுமாகத் தேர்தல் பிரச்சாரம் ஆளும் தரப்பால் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் தினத்தன்று இரவு எதிரணிக்கு ஆதரவு வழங்கியதற்காக மட்டக் களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனுடைய வீடு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. இவ்வளவு அச்சுறுத்தல் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்திலும்கூட மூன்று தொகுதிகளிலும் ஆளும் தரப்பு தோல்வியையே தழுவ நேர்ந்தது.

கிழக்கின் மற்றைய மாவட்டமான அம்பாறையிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறைத் தொகுதி ஒன்றில் மட்டும்தான் ஆளும்கட்சி வெற்றி பெற முடிந்திருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் மகிந்தவின் பேரினவாத அரசால் நாளாந்தம் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து மௌனம் சாதித்துக்கொண்டு, அவர்களுடைய அறுவடைகள் தீக்கிரையாக்கப்படுவது குறித்துப் பேசாமல் மௌனம் சாதித்துக்கொண்டு முஸ்லிம் தேசியம் பற்றிப் பேசிய ஆளும் கட்சியின் முஸ்லிம் அமைச்சர்களின் மகிந்தவுக்கு ஆதரவான போக்கை அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். கிழக்கில் முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு வடக்கில் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்காக மகிந்த வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். கிழக்கில் முஸ்லிம்களின் வாழ்வு மகிந்த ஆட்சியில் சீரழிவது குறித்து மௌனம் காத்துக்கொண்டு தமது சகோதரர்களான வடக்கு முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்புவதாகப் பாவ்லா பண்ணும் போலி ஜனநாயகவாதிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் அவர்கள் தெளிவாகவே அடையாளம் கண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய வாக்குப் பதிவு தெளிவுபடுத்தியிருக்கிறது.

மலையகத்தின் இருபெரும் கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் மகிந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கக் கோரியும் அவர்கள் வாக்களிக்கவில்லை. வழமைபோல மலையக மக்கள் யானைக்கு வாக்களிக்கப் பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் இம்முறையும் வாக்களித்தார்கள் என்று சொல்ல முடியாதபடி இம்முறை அவர்கள் அன்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் - அன்னம் தான் இம்முறை எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பின் சின்னம். அவர்கள் நிதானமாகவே தமது விருப்பையும் எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

மலையகத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் நுவரெலியா-மஸ்கெலியா, மற்றும் கொத்மலை தேர்தல் தொகுதிகளில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவிய அதேநேரம் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஹங்குராங் கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளிலேயே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசுக்கும் அது கடந்த ஐந்து வருடங்களாக முன்னெடுத்து வந்த கொள்கைகளுக்கும் எதிராக ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று கொள்ள முடியும்.

இந்த முடிவின் அடியாகச் சிங்கள மக்களது தெரிவும் தமிழ் முஸ்லிம் மலையகச் சிறுபான்மை இன மக்களது தெரிவும் ஒன்றல்ல என்பதையும், தென்னிலங்கையின் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது சிறுபான்மை இனங்களுக்கெதிரான பேரினவாத உணர்வென்பதையும் புரிந்துகொள்ளும் அதேவேளை வடக்கின் அபிலாசைகள் வேறு கிழக்கின் அபிலாசைகள் வேறு என்றும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது என்றும் பேசி வந்தவர்களுக்கு மக்கள் ஜனநாயகரீதியாகத் தமது முடிவை அதாவது தமது அபிலாசைகள் ஒன்று தான் என்றும் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டியவை அல்ல என்றும் எடுத்தியம்பி உள்ளனர் என்றும் கொள்ள முடியும்.

முதலாவது சிறுபான்மையினத்திற்கு எதிராக இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் ஆளும் அணியுடன் இணைந்திருப்பதே அவர்களது அரசியல் என்ற போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துச் சிறுபான்மையினங்கள் என்ற ரீதியில் அவை ஒன்றாகக் குரல் எழுப்பத் தயாராகி வருகின்றமையையும் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

பாரம்பரியமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையோ மலையக மக்கள் முன்னணியையோ சார்ந்திருக்காது மலையக மக்கள் சுயமாகத் தமது முடிவைப் பதிவு செய்துள்ளனர். இது சிறுபான்மையினர் என்ற வகையில் தமது உரிமைகளுக்காக வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு புதிய களத்தைத் திறந்திருக்கிறது.

இந்தப் போக்குகள் யாவும் மிகத் துல்லியமாக ஒரு விடயத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது இலங்கையில் பெரும்பான்மையினர் தேசமும் சிறுபான்மையினர் தேசமும் ஒன்றல்ல!

உள்ளடக்கம்