Google   www kalachuvadu.com

33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி
விரிவடையும் வாசகர் பரப்பு
தேவிபாரதி

சென்னைப் புத்தகக் கண்காட்சி இப்போது சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டிருக்கிறது. நேற்றுவரை பதிப்பாளர்கள், எழுத்தாளர்களின் விழாவாகக் கருதப்பட்ட இக்கண்காட்சி பொதுமக்களின் அறிவுத் தேடலுக்கான ஒரு களமாக விரிவடைந்திருக்கிறது. கண்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் புத்தக விற்பனையும் ஒவ்வோராண்டும் கூடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கைந்தாண்டுகளில் பல புதிய பதிப்பாளர்கள் உருவாகியிருப்பதற்குப் புத்தகக் கண் காட்சி ஏற்படுத்திய நம்பிக்கையே காரணம். கண்காட்சியில் இடம்பெறும் பலவகைப்பட்ட அரங்குகள் வாசகர்களின் வாசிப்பார்வத்தை மட்டுமல்லாமல் அவர்களது தேர்வையும் விரிவுபடுத் தியிருக்கின்றன. வாசிப்பு தொடர்பான முன் தீர்மானங்களுடன் புத்தகக் கடைகளுக்குப் போய்க்கொண்டிருந்த வாசகனுக்குப் புதிய எழுத்தாளர்களும் புதிய வகைப்பட்ட நூல்களும் எளிதில் அறிமுகமாகின்றன.

ஒரு கொண்டாட்டமான மனநிலையில் வாசகன் சோதனை முயற்சிகளில் துணிந்து இறங்குகிறான். எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகனின் இந்த உற்சாகத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் போட்டி போடுகிறார்கள். சாருநிவேதிதா, ஜெயமோகன் அடிச்சுவட்டில் புத்தகக் கண்காட்சியையொட்டி குறைந்தபட்சம் 10 புத்தகங்களையாவது வெளியிட்டுவிட வேண்டுமென்ற பதற்றமான மனநிலைக்கு ரவிக்குமார் போன்றவர்களும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஏற்கனவே இணையங்களிலும் வலைப்பூக்களிலும் எழுதிவைத்தவற்றை ரகம் வாரியாகப் பிரித்துக் கடைபரப்பிவரும் புதிய கலாச்சாரத்துக்கும் வித்திட்டிருக்கிறது சென்னைப் புத்தகக் கண்காட்சி. பார்த்துப் பார்த்து எழுதி ஒரேயொரு கவிதைத் தொகுப்பையோ கதைத் தொகுப்பையோ வெளியிடுபவர்களுடைய நிலை ஆழியில் கரைத்த பெருங் காயத்தைப் போலப் பரிதாபமானது. தப்பிப் பிழைத்திருப்பவற்றை டிசம்பர் திங்களின் வெளியீட்டு விழாக்கள் ஒரு கை பார்த்துவிடும். சாரு நிவேதிதா, ஜெயமோகன், தமிழச்சி தங்கப்பாண்டியன் நடத்திய நூல் வெளியீட்டு விழாக்கள் சந்தைப்படுத்துதலில் புதிய பரிமாணங்களைக் கண்டன. தமிழச்சியின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடந்தது. தமிழ் எழுத்தாளர்களில் 99 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களை அந்த விழாவில் பார்த்தேன். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே எழுத்தாளர்கள் படு உற்சாகமாகத் தென்பட்டார்கள். சாட்சாத் துணை முதல்வரே வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் இத்தனை பேர் இலக்கிய ஆர்வலர்களா!

ஒரு வெளியீட்டு விழாவில் சாரு, ஜெயமோகனின் புத்தகமொன்றிலிருந்து சில பக்கங்களைக் கிழித்துப் போட்டுக் காலில் மிதித்தாராம். பழைய கலகச் செயல்பாடுகளுக்கு ஒரு பரபரப்பு மதிப்பு உருவாகியிருப்பதற்குக்கூடப் புத்தகக் கண்காட்சியின் தாக்கம்தான் காரணமாயிருக்க வேண்டும். தமிழின் தீவிர எழுத்தாளர்களாக அறியப்பட்ட சாருநிவேதிதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்களெல்லாம் குமுதத்திலும் ஆனந்த விகடனின் லூசுப் பையனின் கார்ட்டூன்களிலும் இடம்பெறும் பாக்கியம் பெற்றதற்குக் கூடப் புத்தகக் கண்காட்சிதான் காரணமோ என்னவோ! இவர்களது முன்னோடிகளான கல்கி, சுஜாதா, சாண்டில்யன், புஷ்பா தங்கத்துரை போன்றோருக்குக் கிடைக்காத பாக்கியம் அல்லவா இது?

இந்தப் பரபரப்பையெல்லாம் பார்த்து முதல்வருக்கே முழு நேர எழுத்தாளராகும் ஆசை வந்துவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க வந்த முதல்வர் அதிகாரத்திலிருந்து விலகிக்கொண்டு ஜெயகாந்தனுக்குப் பக்கத்தில், வைரமுத்துக்குப் பக்கத்தில், தமிழன்பனுக்குப் பக்கத்தில் அந்த வரிசையில் உட்கார ஆசை எனச் சொன்னதை எப்படிப் புரிந்துகொள்வது எனக் குழப்பமாக இருந்தது. அவர்கள் மூன்று பேருமே சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள் அல்லவா? தன் மற்ற காரியங்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளைவிட எழுத்துச் செயல்பாடுகளுக்குப் பாராட்டுக் கிடைத்தால் அதிகம் மகிழ்ச்சியடைவேன் எனவும் தொடக்க விழாவில் குறிப்பிட்டார் முதல்வர். சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க முதல்வர் வரும்போது ஏதாவது உருப்படியான கோரிக்கை வைக்க முடியும். இந்த ஆண்டு வைத்தார்களே ஒரு கோரிக்கை! ஒவ்வொரு வருடமும் பாபாசியைச் சேர்ந்த இரண்டு பேருக்குக் கலைமாமணி விருது தர முதல்வர் ஆவன செய்ய வேண்டுமாம். ஆனால் நல்ல காலம், முதல்வர் அவர்களுடைய கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. கனிமொழியின் ‘சிகரங்களில் உறைகிறது காலம்’ நூலுக்கு காலச்சுவடு ஸ்டால் உட்பட பல ஸ்டால்களின் சுவர்களில் ‘இங்கே கிடைக்கும்’ விளம்பர போஸ்டர் கண்காட்சி விதிகளுக்கு மாறாக ஒட்டப்பட்டிருந்தது. யாரும் கண்டு கொள்ளவில்லை. தந்தையார் நன்கொடையாகக் கொடுத்த ‘சொந்தப் பணம்’ பாதாளம்வரை பாய்கிறது போலும்.

வித்தியாசம் என்றால் இந்த முறை அரங்குகளுக்கிடையே தென்பட்ட இடைவெளிகள் போதிய அளவுக்கு இருந்ததால் வாசகர்கள் சௌகரியமாக நடமாடினார்கள் என்பதைக் குறிப்பிடலாம். ஆனால் போதிய காற்றோட்டம் இல்லாமல் புழுக்கமாக இருந்தது. மின் விநியோகத்திலும் தொடர்ந்து இடையூறுகள் இருந்தன. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும் கூட்டம் கூட்டமாகத் தென்படும் எழுத்தாளர்களில் பலரை இந்தப் புத்தகக் கண்காட்சியில் காண முடியவில்லை. அதிகமாகப் பிரபலமாகிவிட்டது காரணமோ? பொதுவாகப் புத்தகக் கண்காட்சிகள் வாசகர்கள்-எழுத்தாளர்கள் சந்திப்புக்கான வெளியாக இருக்க வேண்டும். அதற்கான அரங்குகளைப் பாபாசியே ஏற்பாடு செய்யலாம். எழுத்தாளர்களைத் தேடி டீக்கடைகளுக்கும் கட்டணக் கழிப்பறைகளுக்கும் போக வேண்டியிருக்கும் அவலத்தைப் போக்க பாபாசி ஏதாவது செய்தால் நல்லது.

பல பதிப்பாளர்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டார்கள். காலச்சுவடு பதிப்பக அரங்கு விற்பனையில் 60 சதவிகிதம் முன்னேற்றம் கண்டு சாதனை படைத்த ஆண்டு இது. இந்த ஆண்டு வெளிவந்த ஜோ. டி. குருசின் ‘கொற்கை’, ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’, சா. பாலுசாமியின் ‘அர்ஜுனன் தபசு’ உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட புதிய நூல்களுடன் முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட புத்தகங்களும் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. டிசம்பர் 31ஆம்தேதி தொடங்கி ஜனவரி 9ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் மாலை 6:00 மணிக்கு காலச்சுவடு அரங்கில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழின் முக்கிய ஆளுமைகள் பலர் பங்கேற்ற இந்நிகழ்வுகளில் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினர். அவை குறித்த நிழற்படப் பதிவுகள் இவ்விதழில் இடம்பெற்றிருக்கின்றன.

உள்ளடக்கம்