Google   www kalachuvadu.com

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஆகஸ்டு 16 சேலம் தமிழ்ச் சங்கம்
மனிதனைப் பண்படுத்தும் ஞான நிலை
அ. கார்த்திகேயன்

கடந்த ஆகஸ்டு 16, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்கம் இரா.வை. கணபதி அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் சமூகவியலாளரும் சமூக உளவியலாளருமான ஹாலாஸ்யம் கலந்துகொண்டார். அவரை சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை.பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

தான் ஒரு சிறந்த வாசகன், இலக்கிய ஈடுபாடு கொண்ட வாசிப்பாளன் என்று தொடங்கிய அவர் மனித வளம் குறித்த பல்வேறு விளக்கங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். மனித வளம் என்பது உள்ளும் புறமுமாக நிகழ்கின்ற ஒன்று என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினார். தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காகவே எந்த உயிரும் போராடுகிறது; அந்த மேம்பாட்டை அடைய பல்வேறு தடைகள் எழுவது இயல்பு. அந்தத் தடையும் வருங்காலத்தில் உயர்த்திக்கொள்வதாக அமைய உதவக்கூடும்; ஒரு வகையில் ஒவ்வொரு தடையும் அனுகூலமாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு என்பதைச் சுட்டிக்காட்டிப் படைப்பில் ‘புரியாமை’ என்னும் தடையை நிவர்த்திக்க முற்பட்டார்.

அறிவு நிலைகளின் வகைமைகளைப் பட்டியலிட்டுக் காட்டிய அவர், இலக்கியம் அறிவு நிலையை எளிதாக வெளிக்கொண்டு வருகின்றது என்றும் ஒரு படைப்பாளி, வாசகன் இப்படி இருக்கிறான் என்று நினைத்து அதற்கேற்ற வகையில் எழுதுவது இல்லை என்றும் ஒரு நல்ல கவிதை புரிதல் நிலையை உயர்த்துவதுடன் அந்தப் புரிதல் நிலை படிப்பவரையும் மேம்படுத்துகிறது என்பதை எடுத்துக் கூறினார்.

‘படைப்பைப் புரிந்துகொண்டு, அல்லது எழுத்தை எடுத்துக்கொண்டு எனக்குள்ளே நான் சென்றால் அங்கே என்னைத்தான் நான் காண்கிறேன்’ என்ற அவரது பேச்சு வாசிப்பு அனுபவத்தின் ஆழமான நுட்பத்தைப் பார்வையாளருக்கு விளக்கிக் காட்டியது.

ஞான நிலைகளின் படிநிலைகளைத் தொகுத்துக் கூறிய அவர் புராதன ஞானம், மாந்திரீக ஞானம், தொன்ம ஞானம் முதலிய வகைமைகளைப் பட்டியலிட்டார். தொன்ம ஞானம் குறித்து விளக்க முற்பட்ட அவர் நவீனக் கவிஞர் பிரம்மராஜனின் கவிதை ஒன்றைச் சான்றாதாரமாகக் கொண்டு விரிவான முறையில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஒரு ஆண் தனக்குள் இருக்கும் பெண்ணை அறிய முற்படுவதும் ஒரு பெண் தனக்குள் இருக்கும் ஆணை அறிய முற்படுவதும்தான் முழு மனிதனாகத் தம்மை அறிந்துகொள்ளும் நிலைக்குப் பேருதவி புரியும் என்பதைப் புராணக் கதாபாத்திரத்தின் வழியாகத் தெளிவாக விளக்கினார்.

பிறகு பார்வையாளர்களின் வினாக்களுக்குச் சமூக ஆய்வியல் நோக்குடனும் உளவியல் ரீதியாகவும் பதிலளித்துப் பார்வையாளர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தினார். மாணவர்களின் எதிர்கால மேம்பாடு குறித்த ஒரு கேள்விக்கு அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களைச் சிந்திக்கச் செய்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். தனக்குப் பிடித்த படைப்பிலக்கியங்களைப் பட்டியலிட்டுக் காட்டிய அவர் மணிமேகலை காப்பியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.

எதிர்காலச் சமூகம் வளம் பெற அறிவுரைகளைக் காட்டிலும் நல்ல வழி காட்டுதலே தேவை என்பதை ஒரு பார்வையாளரின் வினாவுக்குப் பதிலாகவும் வேண்டுகோளாகவும் முன்வைத்தார்.

சிறந்த வாசகராகவும் சிந்திப்பவராகவும் விளங்கும் அவர், வாசகன் என்பவன் வெவ்வேறு மனநிலைகளில் உள்ளான்; ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு புரிதல் திறன் உள்ளது என்றார்.

மொத்தத்தில் கலை இலக்கியத்தின் ஊடாக சமூகம் மற்றும் உளவியல்ரீதியான பல்வகை கருத்துகளை அறிந்துகொள்ளும் விதமாகவும் மாறுபட்ட ஆளுமைத் திறன் மிக்க ஒருவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததையும் எண்ணிப் பார்வையாளர் பெரு மகிழ்ச்சிகொண்டதைப் பார்க்க முடிந்தது.

உள்ளடக்கம்