மாற்றிதழ்களில் அல்லது சிற்றிதழ்களில் ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம்பெறுவது வழக்கம்.
ஆனால் முழுக்க முழுக்க ஆளுமைகளின் நேர்காணலை மட்டுமே வைத்து ஓர் இதழ் வருவது இதுதான்
முதல் முறை. இது தலையங்கம் அல்ல என்னும் பெயரில் இந்த இதழ் குறித்து எழுதியுள்ள
பவுத்த அய்யனார் Paris Review இதழைப் போன்று தமிழில் ஓரிதழ் வர வேண்டும் என்ற
ஆர்வத்தில் இதைக் கொண்டுவந்துள்ளதாகவும் Paris Review பெற்ற முக்கியத்துவத்தை
வருங்காலத்தில் நேர்காணலும் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒரு
சிற்றிதழ் மட்டுமே என்பதையும் அடைப்புக்குறிக்குள் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.
முதல் இதழில் நாடக ஆளுமை ந. முத்துசாமியின் நீண்ட நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
நாற்பது பக்க இதழில் இந்நேர்காணல் தவிர இடையிடையே வண்ணநிலவன், ப்ரஸன்னா ராமஸ்வாமி,
அ. மங்கை, நாசர், அ. ராமசாமி, சண்முகராஜா, நடேஷ், ப்ரளயன், முருகபூபதி, திலீப்
குமார் போன்றோர் ந. முத்துசாமி பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஒரு
சிறப்புக் கட்டுரையை செ. ரவீந்திரன் ந. முத்துசாமியின் படைப்பாளுமை என்னும்
தலைப்பில் எழுதியுள்ளார். ஆக முழுக்க முழுக்க ந. முத்துசாமி குறித்த செய்திகளைத்
தாங்கி இந்த முதல் இதழ் வெளிவந்துள்ளது. இது முத்துசாமியின் சிறப்பிதழ் அல்ல. இதழின்
வடிவமே இதுதான் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார் அய்யனார். இவ்விதழின் முதல்
சந்தாதாரர் பெயரை வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்தியுள்ளார். மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை வெளியாகும் இவ்விதழ். முதலிதழில் ந.முத்துசாமியின் முழுமையான சித்திரம்
நேர்காணல் வழியே தீட்டப்பட்டுள்ளது.
|