Google   www kalachuvadu.com

கடிதங்கள்

‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ கண்ணோட்டம் கண்டேன்.

எல்லாக் காலங்களிலும் எல்லாக் கட்சிகளிலும் மோசமானவர்கள் இருந்து வந்துள்ளனர். இருக்கவும் செய்கின்றனர். ஆனால் ஒரு முதலமைச்சரின் மகன் அதிகாரப் பின்புலத்தில் இருந்து கொண்டு வெறியாட்டம் போடுவது இதுவரை தமிழகம் காணாதது. இந்தியா கண்டிருக்கிறது - சஞ்சய் காந்தி வடிவில். அதிகாரமும் மீடியாவும் கைகோத்தால் அதன் முடிவு எப்படியிருக்கும் என்பதையே மதுரை தினகரன் எரிப்புத் தீர்ப்பு விளக்குகிறது.

பணபலம், அதிகார பலம், அடியாட்கள் பலம் இவை மூன்றும் சேர்ந்துதான் மூன்று அப்பாவிகள் உயிரைக் குடித்தன. தமிழகம் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் அதிமுகவினர் மூன்று பெண்களை உயிரோடு எரித்துக் கொன்ற அனுபவத்தைக் கண்டிருந்தனர்.

ஊடகங்களுக்கு அவை இரண்டு நாள் செய்தி மட்டுமே. அதிமுகவினர் பெண்களை எரித்தபோது மாதக் கணக்கில் கவிதை எழுதித் துக்கம் கொண்டாடிய எமது கவிப்பேரரசுகளும் கவிக் கொண்டல்களும் தங்களது பேனா மூடியை இப்போது திறக்கவே மறுத்தனர். தினகரனுக்கு ஏற்பட்ட சதி தங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாதே என நாளிதழ்கள் அஞ்சி நடுங்கின.

அவர் (அழகிரி) தேர்ந்த ஒரு அரசியல்வாதியாக இன்னும் பக்குவப்படவும் இல்லை. ஸ்டாலின் குறித்தோ தயாநிதி மாறன் குறித்தோ இத்தகைய கறாரான மதிப்பீட்டுக்கு நாம் வர முடியாது. அழகிரி செயல்படும் தளம் அரசியல் சார் தளமும் அல்ல. இன்னும் கறாரான முறையில் - எல்லைகளை வரையறுத்துச் சொல்ல முடியுமானால், சந்தன வீரப்பனைவிடச் சற்று மேலான தளத்தில் செயல்படுகிறார் அழகிரி. இப்படிப்பட்ட ஒருவர் எதிர்காலத் திமுகவுக்குத் தலைவர் என்பதை எண்ணிப் பார்க்கவே நெஞ்சு நடுக்கமுறுகிறது.

அழகிரிக்கு அரசியல் பின்புலம் இருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்த அரசியல்வாதி அல்ல. அவரை அண்டி நிற்பவர்கள் நிச்சயம் திமுக தொண்டர்கள் அல்லர். எந்தப் பழிபாவத்திற்கும் அஞ்சாத மதுரை நகரின் லும்பன்கள் தான் அவர்கள். ‘அட்டாக் பாண்டி’ என்ன அரசியல் மேதையா? பொன். முத்துராமலிங்கமும் அக்கினிராசுவும் காவேரி மணியமும் நடத்திய அரசியலில் கோபிக்கும் மன்னனுக்கும் முபாரக் மர்தர்க்கும் இருந்த இடம் என்ன?

இதே படைதான் இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளிலும் உலா வந்தது. பணபலம், படைபலம், அதிகாரத்தின் துணைகொண்டு எதையும் சாதிக்கலாம் - சாதித்துக் காட்ட முடியும் - எனத் தினம்தினம் நினைத்துவரும் ஒரு கும்பலுக்கு எதிராக மக்களின் மனசாட்சி இப்படித் தூங்கிக்கிடப்பது ஒரு ஜனநாயக அவலம்.

மதுரையையும் அதற்குக் கீழுள்ள தமிழகத்தையும் சென்னை ஆளவில்லை. வெளிப் பார்வைக்குப் பிரிக்கப்படாத தமிழகம் அரசியல்ரீதியாகப் பிரிந்தே இருக்கிறது. மதுரைப் பெருநகரின் பொருளாதாரம், வர்த்தகம், நிர்வாகம் எல்லாமே மதுரையில் உள்ள ஒரு கும்பலின் பிடியில் உள்ளது.

இந்த வகையில் போதை மருந்து கடத்தல் கும்பலின் சொர்க்கபுரியான கொலம்பிய நாட்டின் தலைநகர் பொகடாவுக்கு மிக அருகில் இருக்கிறது மதுரை. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை, இப்படிப் பங்கப்பட்டுப் போயுள்ளது. நல்லவேளை தா. கிருஷ்ணனும் தினகரன் ஊழியர்கள் மூவரும் நடக்கும்போது புல் தடுக்கி விழுந்து தானாகவே இறந்துபோனார்கள் என்கிற மாதிரி ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கிடவில்லை, அந்த மட்டில் நீதி பிழைத்தது.

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்

சல்மாவின் கவிதைகள் படித்தேன். குறைந்தபட்ச மொழிப் பிரக்ஞையற்ற, கவி ஒழுங்குமற்ற அக்கவிதைகள் இருவிதமான கேள்விகளை எழுப்புகின்றன. காலச்சுவடு தேர்வுக் குழுவின் தெரிவென்பது தனிநபர்களின் பொதுப் பிம்பங்கள் சார்ந்தவையா அல்லது மலினமான கவனக்குறைவா என.

ஜே. பி. சாணக்யாவின் பூதக் கண்ணாடி சிறுகதையின் சொற்கள் வரையாத இளவழகனின் சித்திரத்தை, அனந்தபத்மநாபனின் வரைகோடுகள் அவ்வளவு துல்லியமாய் வெளிப்படுத்தியிருந்தன.

பா. திருச்செந்தாழை,
மதுரை

பெருமாள்முருகனின் ‘பள்ளிகள் சிறைகளா?’ கட்டுரை இன்றைய பள்ளிகளின் வார்ப்புகளாகிய ‘மாணவச் செல்வங்களின்’ மனப்பாங்கை எடுத்துரைக்கிறது. மதிப்பெண்கள் அதிகம் பெற்றால்தான் மருத்துவராக, பொறியியலாளராக முடியும். அடிப் படையில் கல்வியின் நோக்கம் மனிதத்தின் மேம்பாடு என்றிருந்தால் மட்டுமே பள்ளிகள் பூந்தோட்டமாக முடியும். அதுவரை பெருமாள்முருகன் கூறியது போல் கொஞ்சம்கூட நாகரிகம் அற்ற தலைமுறைதான் விளங்கும். கல்வியின் நோக்கம் விலங்கு மனத்தில் மாற்றம் கொண்டுவருவதே என்றார். கல்வி, இப்பணியைக் கையிலெடுத்துக் கொள்ளாதவரை வன்முறை என்பது அன்றாட நிகழ்வாக மட்டுமே இருக்கும். ‘மறைந்து வாழும் ஓர் இயக்கம்’ என்ற பேராசிரியர் ம.இலெ. தங்கப்பாவின் நேர்காணல் நன்று. தமிழ் மண்ணின் மணம்தான் தங்கப்பா. “நுண்மையை நோக்கி” என்ற அவருடைய நூல் பூங்குன்றனாரின் புறப்பாடலுக்கான விளக்கம். பேட்டியில் அறியப்படாததும் உள்ளது. அவர் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். ஜே. கேயின் சிந்தனைகள் அவர் கருத்தில் எழுத்தில் பேச்சில் ஒளிரும். அவருடைய தமிழ் உணர்வு குறுகிய எல்லைகளைக் கடந்தது. மனிதத்தை மேம்படுத்தும் தன்மைகொண்டது. சங்கச் செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது மிகப் பெரிய தமிழ்ப் பணி. ‘புதிய தலைமுறை புதிய அடையாளம்’ சுருக்கமான, ஆனால் ஆழமான ஆய்வுத் தொகுப்பு.

முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை

ஜனவரி 2010 காலச்சுவடு இதழில் ஜெர்மானியக் கவிஞர் ரைனர் மாரியா ரில்கேவின் கவிதைகளைத் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசிக்க நேர்ந்தது.

கவிதைகளை ஜெர்மனிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் வஸந்தா சூர்யாவிற்கு நிச்சயம் ஜெர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழாக் கூட்டத்தில் அவர் பேசியபோது, ‘தமிழுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்குத் தமிழ் தெரியாது’ என்று அறிவித்து விட்டுத்தான் பேசினார். இத்தனைக்கும் அவர் பேசியது ஒரு தமிழ்க் கவிதை நூல் வெளியீட்டு விழாவில். இப்போது அவர் ஜெர்மன் மூலத்திலிருந்து நேரடியாகக் கவிதைகளை மொழிபெயர்த்திருப்பது ‘அவருக்குத் தெரியாத தமிழ் மொழியில்.’

இருப்பினும், ரில்கேவின் கவிதைகள் நேரடி மொழிபெயர்ப்பில் என்று உணர்ந்தபோது எந்த முன்முடிவுகளும் இன்றியே கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். ரில்கேவின் கவிதைகளுடனான எனது உறவு, ஆங்கிலம் வழியானது என்பதால் அவரது கவிதைகள் நேரடியாக ஜெர்மனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும்போது ஒரு கவிதை வாசகருக்கு ஏற்படும் இயல்பான ஆனந்தத்துடனும் ஆச்சரியத்துடனும்தான் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். (நேரடியான தமிழ் மொழிபெயர்ப்புகள் வருவதைப் பொற்காலம் என்று துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் என்கிற நெரூடாவின் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் அதை மொழிபெயர்த்திருக்கும் சலபதி சொல்கிறார்).

ஆனால் ரில்கேவின் கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வாசிக்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் கவிதானுபவமும் இந்தத் தமிழ் மொழி பெயர்ப்பில் நிச்சயமாகக் கிடைக்கவில்லை. ரில்கேவை முதன்முறையாக வாசிக்கும் யாருக்குமே இந்த மொழி பெயர்ப்பு ஒரு சரியான அறிமுகம் இல்லை. இதன் மூலம் வெளிப்படும் ரில்கே மிகச் சாதாரணமான, கொண்டாட்டங்களுக்குத் தகுதியற்ற கவிஞராகவே வெளிப்படுகிறார். சொல்லப்போனால், கவிதைகளாகக் கருதப்படுவதற்குக்கூட மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ஒன்றிரண்டு கவிதைகளுக்குத் தகுதியில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

உதாரணத்துக்கு, ‘பெரும் பாடலா நான்’ என்கிற கவிதையைச் சொல்லலாம்.

என் உயிரைச் சுழித்துச் சுழித்து வளர்த்து வருகிறேன் நான்
பொருள்கள் அனைத்துக்கும் மேல்
அதன் வட்டங்கள் உயர உயர
இழுக்கப்படுகின்றன.
பூர்த்திசெய்ய முடியுமா என்னால்
இறுதிக் கட்டத்தை?
ஒன்றும் சொல்வதற்கில்லை, ஆனால்,
முயற்சி செய்தே தீருவேன் நான்.
வலம் வருகிறேன் நான்
தொல் கோபுரத்தானை
இப்படியே விடாமல் சுற்றுகிறேன் நான்,
ஆயிரம் ஆயிரங்காலமாக. நான் யார்?
இதுவரையில் எனக்குத் தெரிய வில்லை -
ஒரு கழுகா, நான்?
புயலா, நான்?
அல்லது
ஒரு பெரும் பாடலா, நான்?

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இங்கே தர விரும்புகிறேன்.

“I Live My Life In Widening Circles”

I live my life in widening circles / that reach out across the world. / I may not complete this last one / but I give myself to it.

I circle around God, around the primordial tower. / I've been circling for thousands of years / and I still don't know: am I a falcon, / a storm, or a great song?

ஆங்கில மொழிபெயர்ப்பு தரும் கவிதானுபவத்தைத் தமிழ் மொழி பெயர்ப்பு தரவில்லை என்பது இரண்டையும் வாசிக்கும் யாருக்கும் விளங்கும். தவிர, மொழிபெயர்ப்பின் நுணுக்கங்கள், தமிழின் தனித்துவம் வாய்ந்த சில சலுகைகள் போன்ற எதையும் மொழிபெயர்ப்பாளர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

“translating poems into equivalent formal patterns is to some extent a matter of luck and grace” (கவிதைகளை, அவற்றையொத்த வடிவங்களில் மொழி பெயர்ப்பது என்பது கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கொஞ்சம் நளினத்தையும் பொறுத்தது) என்று ரில்கேவின் கவிதைகளைப் பரவலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் ஸ்டீபன் மிஷெல் சொல்கிறார். இரண்டுமே தமிழ் மொழிபெயர்ப்பில் கைகூடவில்லை.

சலபதி தொகுத்த நெரூடாவின் கவிதைகளில் அவர் ‘தோன்றா எழுவாய் தமிழின் மிகப் பெரிய பலம்’ என்று சொல்கிறார். குறிப்பிட்ட இந்தக் கவிதையில் அதை அழகாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

என் உயிரைச் சுழித்துச் சுழித்து வளர்த்து வருகிறேன் நான்

என்கிற வரியில், என் அல்லது நான் இரண்டில் ஏதாவது ஒன்று இடம் பெற்றிருந்தாலும் அந்தக் கவிதை வரி முழுமையாக இருந்திருக்கும்.

அதேபோலத் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ‘நான்’ என்கிற வார்த்தையும் சுந்தர ராமசாமி சொல்லும் ‘கவிதை வரிகளைத் தலைகீழாக மடக்கும்’ உத்தியும் (முயற்சி செய்தே தீருவேன் நான்/வலம் வருகிறேன் நான்/தொல் புரத்தானை இப்படியே விடாமல் சுற்றுகிறேன் நான்)

வாசகருக்குச் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.

இந்த வரிகளைத் தலைகீழாக ‘மடக்கிப்போடுவது புதுமையாக இருந்து, குறுகிய காலத்தில் தேக்கமடைந்து, இன்று அலுப்பைத் தரத் தொடங்கிவிட்டது’ என்று சுந்தர ராமசாமி சொல்கிறார். கவிதைகளைப் புதிதாக எழுதுபவர்களும் மொழிபெயர்ப்பவர்களும் இது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

சுந்தர ராமசாமி போன்ற தமிழில் முக்கியமாகக் கருதப்படும் கவிஞர்கள்கூட மொழிபெயர்க்கும்போது மிகுந்த கவனத்துடனும் ஒருவிதப் பயத்துடனும் தான் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அவரது தொலைவிலிருக்கும் கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பின் முன்னுரையிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். சில கவிதைகளை எவ்வளவு தேர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளனாலும் நெருங்கவே முடியாது என்று சொல்லும் சுந்தர ராமசாமி, ‘... சில கவிதை வரிகளில் மொழிக்கு வசப்படாமல் நிற்கும் சூட்சுமங்களையும் அழகுகளையும் மொழிபெயர்க்க முடியாமல் போய் விடுகிறது. சமாளிக்கலாம்; ஆனால் சமாளிப்பது நல்ல மொழிபெயர்ப்பாகாது’ என்று எழுதுகிறார்.

வஸந்தா சூரியாவின் மொழி பெயர்ப்புகளில் வெளிப்படுவது சமாளிப்பு மட்டுமே.

kavithamuralidharan@gmail.com

ஜனவரி 2010 மாதத் தலையங்கம் படித்தேன். பாலியல் தொழில் சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் சொல்ல இயலாத அவலங்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியுள்ள காலச்சுவடின் பணி பாராட்டுக்குரியது. ஏனைய ஊடகங்கள் இதை முதன்மைப்படுத்துவதை விரும்பாத நிலையிலும் சமூகத்தின் புற விளிம்பில் கண்ணீருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளர்களின் நிலை குறித்த நேர்மையான அக்கறையைக் காலச்சுவடு பதிவுசெய்துள்ளது. பெரும்பாலான பெண்கள் பாலியலில் ஈடுபடுவதும் அப்பாவிப் பெண்களில் சிலர் வலிந்து இத்தொழிலுக்குத் தள்ளப்படுவதும் வறுமை காரண மாகவே என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் பால்வினை நோய்கள் அதிக அளவில் பெருகி வருவதற்குப் பாலியலை ஒரு தொழிலாக அரசு அங்கீகரிக்காதது தான் காரணம் என்ற வாதம் சரியானது. பாலியல் தொழிலாளர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தாம் என்ற நோக்கில் அவர்களை அனைவருமே காணத் தவறுகின்றனர். பாலியல் சார்ந்த குற்றங்களைத் தடுக்க தவறும் சமூக அமைப்பு அவர்களைப் பற்றிய ஊடகங்களின் செய்திகளை வக்கிரத் தோடு படிக்க ஆசைப்படுகிறது. பாலியல் தொழில் தடைசெய்யப்பட வேண்டுமென அடிப்படைவாதிகள் வெற்றுக் கூச்சலிடுவது அவர்களின் பிற்போக்குத்தனத்தையும் மதத்தின் பெயரால் வாழ்க்கை நடத்திவரும் அவர்களது பிழைப்பு பாதிக்கும் என்பதையுமே வெளிக்காட்டுகிறது. காலச்சுவடு சமுதாயம் சார்ந்த இவ்வித முறைகேடுகளைத் தொடர்ந்து துணிவுடன் பதிவுசெய்ய வேண்டும்.

ச. தியாகராசன்,
மயிலாடுதுறை

ஊடகங்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டு உண்மையை மூடி மறைக்கின்றன, இந்தியா இறையாண்மையுள்ள, சுதந்திரமான, ஜனநாயக நாடு என்பதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதையே க. திருநாவுக்கரசு ‘மாபெரும் வரலாற்று முரண்நகை’ என்னும் கட்டுரையில் நிரூபித்துள்ளார்.

‘கடந்து செல்ல வேண்டிய தூரம்’ என்னும் கட்டுரையில் கடந்த பத்தாண்டுகளில் வெளியான தமிழ் நாவல்களின் போக்கு குறித்து மிகுந்த அக்கறையுடன் எழுதியுள்ளார் ந.முருகேசபாண்டியன். ஒரே ஒரு நாவலை எழுதியுள்ள ஜனகப்ரியாவின் சூரனைத் தேடும் ஊர் குறித்து குறைவான வாக்கியங்களில் விளக்கமாகக் கூறியுள்ள பாங்கு நன்று.

தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு

க. திருநாவுக்கரசுவின் கோபன்ஹேகன் உச்சி மாநாடு கட்டுரை, “எதற்கெடுத்தாலும் அமெரிக்காவையே குற்றம் சொல்லாதீர்” என்ற மத்திய தர வர்க்கத்தின் முகச்சுழிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதாயும் பராக் ஒபாமாவை ஒரு தேவ தூதனைப் போன்று வர்ணித்த பத்திரிகைகள், அறிவுஜீவிகளின் முகத்தில் காறி உமிழ்வதாயும் இருந்தது.

மேலும், Cap and track, Carbon offset போன்ற திட்டங்களுக்கு, ‘மக்கள் நலனை’ விட, கார்ப்பரேட்டுகளின் லாபமே முக்கியம் என்பதையும் கார்பரேட்டுகளுக்குத் தரகு வேலை பார்ப்பது ஒன்றே ஒபாமாவின் தினசரிப் பணியென்பதையும் அதற்கு வாலாட்டுவதே இந்தியா உள்ளிட்ட அடிமைகளின் ஒரே அரசியல் பணி என்பதையும் போட்டுடைப்பதாக இருந்தது.

மாற்று அரசியலை முன்னெடுப்பவராக இனங்காணப்பட்ட ஒபாமாவின் முகமூடிகள், ஈரான் விஷயத்தில் மூக்கை நுழைத்து அறுபட்டதோடு கோபன்ஹேகன் உச்சி மாநாடு நடவடிக்கைகளின் மூலம் ஒன்றன்பின் ஒன்றாகக் கழன்று விழுவதையும் சுட்டிக்காட்டியது.

யோகேஷ்வரன்
சிவகங்கை

ஜனவரி இதழில், உங்களது கண்ணோட்டம் கண்டேன். ‘நெஞ்சுக்கு நீதி’யுடன் எழுதியிருக்கிறீர்கள். தற்போதைய ஊடகத் துறை அசுர வளர்ச்சி அடைந்திருந்தும் அடிப்படையான தார்மிக சக்தி இல்லாமல் உள்ளது. தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டது மட்டுமல்ல, வேறு எந்த மோசமான நிகழ்விலும் (ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி கிடுகிடு உயர்வு, திவாரி விவகாரம், மற்றும் பல) நமது ஊடகங்கள் கள்ள மௌனமே சாதிக்கின்றன. இலங்கையில் சொந்தச் சகோதரர்கள் துயரில் துடித்தபோதும் நமது பத்திரிகைகள் (தினமணி, காலச்சுவடு தவிர்த்து) ஒன்று விற்பனைக்காகக் கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டன; அல்லது காணாமல் இருந்தன. யாருக்கும் அரசை கண்டிக்கும் துணிவும் நேர்மையும் இல்லை. பாரதி, திரு. வி. க., வ. உ. சி., போன்ற பெரியவர்கள் வழிநடத்திய தமிழ் இதழியல் உலகம், சுயநலம், ஒருசார்பு, ஊழல் மயமாகிவிட்டது வேதனையான உண்மை. இந்த அவலமான சூழலில், மனத் துணிவுடன் நல்ல தலையங்கம் எழுதியுள்ளீர்கள். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - கெடுப்பார் இலானுங் கெடும்’ என்பது குறள் (448) வரையும் அரசியல் ஓவியம். நீங்கள் தக்க சமயத்தில், இத்தலையங்கத்தைத் தமிழ் உலகுக்கு வழங்கியுள்ளீர்கள்.

வ.மு. முரளி, திருப்பூர்
ஒரு திருத்தம்

காலச்சுவடு ஜனவரி 2010 இதழில் வெளியான தலித் அடையாளம்: எழுத்தாகி வந்த வரலாறு என்னும் கட்டுரையில் 87ஆம் பக்கம் இறுதியில் வர வேண்டிய திருத்தம்.

“. . . . பிற்காலத்தில் அம்பேத்கர் தனித்த இயக்கத்தை உருவாக்கித் தமிழ்நாட்டு தலித் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார். அந்த இயக்கங்கள் பற்றிய பேச்சு வந்தபோது தலித்துகள் அவர்களின் இயக்கங்களில் இருந்துகொள்ளட்டும் என்று மட்டுமே சொல்ல முடிந்த பெரியார் அந்த இயக்கங்கள் குறித்த ஒவ்வாமையையே கொண்டிருந்தார் என்று சொல்ல முடியும். 1954 குடியாத்தம் இடைத் தேர்தலில் தலித் தலைவர்களில் ஒருவரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியும் போட்டியிட்டபோது அவரை ஆதரிப்பதைவிடத் திமுக மீதான ஈகோ காரணமாக திமுகவின் சம எதிரியான காமராஜரை வலிய ஆதரித்தார் பெரியார்.”

ஸ்டாலின் ராஜாங்கம்

உள்ளடக்கம்