Google   www kalachuvadu.com

கட்டுரை
ஜே. பி. சாணக்யாவின் கதையுலகம்
கனவின் யதார்த்தப் புத்தகம்
அரவிந்தன்

தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஜே. பி. சாணக்யாவின் இரண்டாம் தொகுப்பு இது. 2005இல் வெளியான இத்தொகுப்பில் கதைகள் கால வரிசைப்படி அமையாமல் கதாசிரியரின் விருப்பத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கால வரிசைப்படி அமைந்த கதைகள் காலத்தின் கதியில் ஒரு படைப்பாளியின் மாற்றங்களை உணர உதவிகரமாக இருக்கும். ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளுக்குக் கீழே தரப்பட்டுள்ள பிரசுர விவரங்களைப் படிக்காமல் இந்தக் கதைகளைப் படிக்கும் ஒரு வாசகருக்கு இவற்றில் எது முதலில் எழுதப்பட்டது என்பது குறித்து அவ்வளவு எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. காலத்தின் போக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை ஒரு படைப்பாளி தவிர்க்க முடியாது என்றாலும் சாணக்யாவின் தொடக்க கட்டக் கதைகளுக்கும் அடுத்தடுத்து அவர் எழுதிய கதைகளுக்கும் இடையே பக்குவம் சார்ந்தோ பண்பு சார்ந்தோ மொழி சார்ந்தோ பெரிய வித்தியாசம் எதையும் சட்டென்று சொல்லிவிட முடியவில்லை.

இந்தக் கூற்று அவர் மாறவோ வளரவோ இல்லை என்னும் செய்தியை உள்ளீடாகக் கொண்டிருப்பதாகப் பொருள் தரக்கூடும். ஆனால் நான் சொல்ல வருவது வேறு. சாணக்யா, தமிழில் முக்கியமான படைப்பாளிகளின் வரிசையில் இயல்பாகச் சேர்ந்துகொள்ளும் படைப்பாளி என்பதே என் துணிபு. அவரது ஆரம்ப கட்டக் கதைகள்கூட அவரது ஒட்டுமொத்தக் கதைகளின் தரத்தோடும் பிறர் எழுதிய நல்ல கதைகளின் தரத்தோடும் ஒப்பிடத்தக்க விதத்தில் இருக்கின்றன. உதாரணமாக கனவுப் புத்தகம் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கண்ணாமூச்சி கதை.

இந்தியா டுடேயில் 1999இல் வெளியான இக்கதை சென்னைக் குடிசைப் பகுதி ஒன்றைக் களமாகக் கொண்டது. அடித்தட்டு மக்களின் வாழ்வைச் சொன்ன பல சிறந்த கதைகளின் தரத்தோடு ஒப்பிடத்தக்க இக் கதை; ஒரு வீட்டில் இரண்டு பெண்களுக்கிடையில் நடக்கும் அடிதடி சண்டையுடன் தொடங்குகிறது. ஒருத்தி இன்னொருத்தியைத் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு வெளியே வந்துவிடுகிறாள். கதை, வீட்டில் இருப்பவளை விட்டுவிட்டு வெளியே வந்த பெண்ணைப் பின்தொடர்கிறது. அழுக்கு, சண்டை, மலினமான விபச்சாரம், வறுமை, தெருவோரக் கடை என்று சேரிப் பகுதி வாழ்க்கையின் அசைவு படக்காட்சிபோலத் துலங்குகிறது. வீட்டில் அடி வாங்கிப் படுத்திருக்கும் செல்வி இவளுடைய மகள் என்ற தகவலும் இவளுடைய கணவன் ஓடிப்போன பிறகு, இவர்கள் இருவருமே காசி என்னும் ரிக்ஷாக்காரனிடம் அடைக்கலமாக இங்கே வந்துவிட்டதும் கதைப்போக்கினூடே தகவல்களாகச் சொல்லப்படுகின்றன.

மறுநாள் காலையில் அவளைச் சந்திக்க வரும் காசி, செல்விக்கு மண்டையில் கட்டுப் போட்டிருக்கும் விவரத்தைச் சொல்கிறான். அவள் அவனுடன் வீட்டுக்குக் கிளம்புகிறாள். போகும்போது அவனிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறாள். என் எதிரில் அவளிடம் எதுவும் ‘வெச்சிக்காத’ என்கிறாள். அம்மாவையும் பெண்ணையும் காப்பாற்றி அழைத்து வந்தவன் இருவரையும் தன் மனைவியராகக் கருதி உறவாடிவரும் தகவல் முன்வைக்கப்படும் சகஜத் தன்மை நம்மை உறையவைக்கிறது. இந்த உறவால் அம்மாவும் பெண்ணும் நாளும் அடித்துக்கொண்டு சாகும் நிலை உருவாகியும் இருவரும் அங்கேயே கிடந்து உழல வேண்டிய யதார்த்தமும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

இவை அனைத்தும் உணர்ச்சிப் பிசுக்கற்றுப் புறவயமான தொனியில் முன்வைக்கப்படும் விதம் அந்தச் சூழலின் தன்மை பற்றிய சூட்சுமமான செய்தியாக வெளிப்படுகிறது. யதார்த்தத்தை மிகத் துல்லியமாகவும் அடங்கிய தொனியிலும் கூறியதன் மூலம் வளமான தமிழ்ப் புனைகதை மரபின் இயல்பான தொடர்ச்சியாக இந்தக் கதையிலேயே சாணக்யா வெளிப்பட்டுவிடுகிறார்.

o

அவர் கதைகளில் இடம்பெறும் முக்கியக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் விளிம்புநிலை மனிதர்கள்தாம். வேலையின்மையின் துயரத்தைத் தாண்டுவதற்காகக் குடும்ப வாழ்வில் பெரும் அவமானத்தைச் சகித்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகும் இளைஞன், தன் காமத்தைத் தன் இருப்பை வலுப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண், சக்களத்திகளாகி, அடித்துக்கொள்ளும் அம்மாவும் பெண்ணும் திருவிழாவுக்கு மேளம் வாசிக்கும் பரம்பரை என்று வாழ்வின் பல்வேறு விளிம்புகளிலிருந்து சாணக்யாவின் கதை மாந்தர்கள் வெளிப்படுகிறார்கள். இவர்கள் வெளிப்படும் விதங்களில் தொழிற்படும் யதார்த்தமும் படைப்புப் பார்வையும் இவர்கள் வழி புதியதொரு உலகை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. காலமும் இடமும் கலைத்துப் போட்டிருக்கும் வாழ்வின் புள்ளிகளை இணைத்தபடி செல்லும் இப்பயணத்தின் வழித்தடங்களில் நாம் அதிகம் பார்த்திராத சில முகங்கள், அறிந்திராத நிகழ்வுகள், பலரது அனுபவத்துக்கு வசப்படாத வாழ்க்கை ஆகியவை காணவும் அறியவும் அனுபவிக்கவும் கிடைக்கின்றன. தீராத வியப்புணர்வைத் தூண்டும் கனவின் புனைவுத் தன்மையுடனும் நமது தீவிரமான கவனத்தைக் கோரும் உண்மைகளின் பதிவுகளோடும் சுழல்கிறது சாணக்யாவின் புனைவுலகம்.

சமூக, பொருளாதார அடுக்குகள் சார்ந்த விளிம்பு நிலைகள் மட்டுமின்றி, உளவியலின் அடிப்படையிலும் மைய நீரோட்டம் என்று சொல்லப்படும் போக்கிற்குள் அடங்காத மாந்தர்களும் சாணக்யாவின் புனைவுலகில் வெளிப்படுகிறார்கள்.

o

கனவின் புகைமூட்டமும் தர்க்கத்தை மீறும் புதிர்த் தன்மையும் அவர் படைப்புலகின் முக்கியக் கூறுகளாக இருந்தாலும் யதார்த்தத்தை அதன் தளத்தில் நின்று வலுவாக எதிர்கொள்கிறார்.

கோடை வெயில், பதியம், கண்ணாமூச்சி போன்ற கதைகள், குறியீடுகள், படிமங்கள், மிகுயதார்த்தக் கூறுகள் ஆகியவை இல்லாத, நேர்த்தியான யதார்த்த வகைக் கதைகள். பாத்திரங்கள், மன ஓட்டங்கள், கதைக் களங்கள், நிகழ்வுகள் ஆகியவை நம்பகத்தன்மை யுடன் துல்லியமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கதைகள் புனைவு அம்சத்தின் வலுவையும் கதை சொல்லுதலின் கூர்மையான உத்திகளின் துணையையும் கொண்டு சிறந்த வாசக அனுபவத்தைத் தருகின்றன.

எல்லா நல்ல கதைகளையும் போலவே இவையும் சார்புகள் அற்று முன்வைக்கப்படுகின்றன. வாழ்வின் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகளையோ வாழ்வு எழுப்பும் கேள்விகளுக்குப் பலவீனமான விடைகளையோ முன்வைக்காமல் வாழ்வு குறித்த விசாரணையை முன்னிலைப்படுத்தியபடி வாசகருடன் உறவாடுகின்றன இக்கதைகள். இவற்றில் அமைந்திருக்கும் மௌனம் இவற்றை வேறொரு தளத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. தனிப்பட்ட வாழ்வு என்பது வகைமாதிரித் தன்மை கொண்ட வாழ்க்கையாகப் பொதுத் தன்மை பெறுகிறது. வாழ்வின் கசப்பான யதார்த்தம் விருப்பு வெறுப்பற்ற தொனியில் அடையாளப்படுத்தப்படுகிறது. பதியம், கோடை வெயில், கண்ணாமூச்சி ஆகிய மூன்று கதைகளிலும் இந்தக் கூறுகளைப் பார்க்க முடிகிறது.

கோடை வெயில் கதையில் வரும் சேகர், ஊரிலிருந்து வந்திருக்கும் மாமாவின் மூலம் தனக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறான். ஆனால் அதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் விலை அவன் தன்மானத்தைக் குலைக்கிறது. இல்லாமையும் இயலாமையும் ரோஷத்தையும் ஆத்திரத்தையும் மழுங்க அடிக்கிறது. வாழ்க்கையின் மீதும் மாந்தர்கள்மீதும் தீர்ப்புகளை முன்வைக்காமல் வாழ்வின் சித்திரங்களைத் தீட்டியபடி தன் புனைகதை வெளியில் மௌனமாக நடந்து போய்க்கொண்டே இருக்கிறார் சாணக்யா.

சாணக்யா புற உலக யதார்த்தத்தைப் பதிவுசெய்யும் நுட்பம் தமிழின் சிறந்த யதார்த்தக் கதாசிரியர்களின் திறனோடு ஒப்பிடத்தகுந்தது. கோடை வெயில் கதையில்கள் குடிக்கும் இடம் பற்றிய சித்திரம், கண்ணாமூச்சி கதையில் குடிசைப் பகுதி மக்களின் சூழலும் வாழ்வும் சொல்லப்படும் விதம், பதியம் கதையில் லோஞ்சாக் காடு உருப்பெறும் பாங்கு, கறுப்புக் குதிரைகள் கதையில் திருவிழாக் காட்சிகள் காட்சிப்படுத்தப்படும் நேர்த்தி என்று பல உதாரணங்களை அடுக்கலாம். இவரது முந்தைய தொகுப்பில் பிளாக் டிக்கெட் கதையை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். புறக் காட்சி வர்ணனைகளில் மட்டுமல்லாது கதையின் ஆதாரமான செய்தியை யதார்த்தப் பார்வையுடன் கலை அமைதி கொண்ட மௌனங்களுடன் வெளிப்படுத்துவதிலும் இவரது திறமை குறிப்பிடத்தக்கது. பதியம் கதையின் இறுதியில் டீச்சர் அந்தப் பக்கம் போன பிறகு செல்லம் தன் கண்ணீரைத் துடைத்துக்கொள்வதில் இருக்கும் நுட்பம் ஆழமான பல செய்திகளைத் தன்னுள் அடக்கியிருக்கிறது. ஒட்டுமொத்தக் கதைக்கும் புதிய அர்த்தம் கொடுக்கும் வலிமை கொண்ட இடம் இது.

கனவு சார்ந்த படிமங்களும் கனவின் மெல்லிய படலம் போர்த்திய நிகழ்வுகளும் யதார்த்தத்தின் தர்க்கத்தை மீறிய சலனங்களும் இயல்பாக அவர் கதைகளில் தோற்றம் கொள்கின்றன. கறுப்புக் குதிரைகள், கனவுப் புத்தகம், மஞ்சள் நீலம் வெள்ளை, கடவுளின் நூலகம் ஆகிய கதைகளில் இந்தக் கூறுகளைப் பார்க்க முடியும். யதார்த்தத்தின் சட்டகங்களை மீறும் இடங்களும் யதார்த்தத் தொனியுடனேயே முன்வைக்கப்படுகின்றன. இந்த மீறல்களை, அவற்றின் செல்வாக்கை, வாழ்வின் யதார்த்தத்தினின்றும் பிரித்துவிட முடியாது எனப் படைப்பாளி நம்புகிறார் என்பதை இவை காட்டுவதாகக் கொள்ளலாம்.

சிறந்த எழுத்தாளர்கள் பலரையும் போலவே சாணக்யாவும் கால மாற்றத்தைத் தன் புனைவுலகில் பிரதிபலிக்கச் செய்கிறார். உதாரணம் கறுப்புக் குதிரைகள். திருவிழாக்கள் தேவையற்ற ஒன்றாகப் பார்க்கப்பட்டுவரும் போக்கின் தாக்கத்தைப் பதிவுசெய்யும் சாணக்யா, இந்தக் கதையில் பல்வேறு அடுக்குகளை அமைத்திருக்கிறார்.

சாணக்யா இயல்பாகவும் வலுவாகவும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார். கறுப்புக் குதிரைகளில் வரும் மேளம், குதிரை, அமராவதியின் பூனைகளில் வரும் சிலம்பு, கனவுப் புத்தகத்தின் தாமரைக் கொடிகள் ஆகியவை படைப்பு வீரியம் மிக்க குறியீடுகள். கதையின் எல்லைகளுக்கு வெளியிலும் விரிவடையும் தன்மை கொண்டவை இவை.

o

காமத்தின் பங்கைப் பற்றிப் பேசாமல் சாணக்யாவின் கதைகள்மீதான எதிர்வினை முழுமை பெற முடியாது. காமத்தை நேரடியாகவும் வெளிப்படையாகவும் கையாளும் சாணக்யா, அதற்காகத் தமிழ்ச் சூழலில் அடைந்த பழிபாவங்கள் அதிகம். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றுவதை விடவும் காமத்தை அவர் எப்படி, ஏன் கையாள்கிறார், அவரது புனைவுலகில் அதன் இடம் என்ன என்பதைப் பார்ப்பதே பொருத்தமானது.

படைப்பு வீரியத்துடன் காமத்தைக் கையாளும் திறன் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. காமச் சித்தரிப்புகள் வெகுஜனத் தளத்தில் கிளுகிளுப்பூட்டும் மலினமான உத்தியாகவும் தீவிர எழுத்தாளர்கள் மத்தியில் தேவை சார்ந்து கையாளப்படும் அம்சமாகவும் வெளிப்படுகின்றன. வழமைக்கு மாறான, வெளிப்படையான காமச் சித்தரிப்புகளை மாற்று அழகியலாகப் பயன்படுத்தும் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். இவை தவிர, கலகப் படிமத்தைப் பெற உதவும் முயற்சியாகவும் அதிர்ச்சி மதிப்பை உருவாக்கிக் கவனம் பெறும் மலின உத்தியாகவும் சிலருக்கு இது பயன்படுகிறது. சாணக்யாவைப் பொறுத்தவரை காமம் கதையின் தேவை குறித்து எழுதப்படும் இயல்பான விஷயமாக அமைகிறது. புனைவுலகின் தவிர்க்கவியலாத் தேவையின் பொருட்டு ஒரு விஷயம் எழுதப்பட வேண்டும் என்றால் அந்த விஷயத்தின் சமூகப் பெறுமானம் குறித்த எச்சரிக்கை உணர்வு படைப்பாளியிடத்தில் இயல்பாகக் கழன்று போகும். சாணக்யாவின் கதைகளில் காமம் சார்ந்த சித்தரிப்புகளின் தன்மை இதுதான். “கயிற்றுக் கட்டிலை வாசலில் எடுத்துப் போட்டுத் துண்டைத் தலைக்கு வைத்துப் படுத்தான்” என்று எழுதுவது போலவே “அவள் மார்புகளைத் திரை விலக்கி உதடு பொருத்திக் கவ்வினான்” என்றும் அவரால் இயல்பாக எழுத முடிகிறது. இரண்டுக்கும் இடையில் படைப்பு மனத்தின் தோய்விலோ சொல்லப்படும் தொனியிலோ மாற்றம் எதுவும் இல்லாததை நுட்பமான வாசிப்பில் உணர முடியும்.

கலைத் தேவையின் பொருட்டும் புனைவுலகின் தவிர்க்கவியலாத் தேவையின் பொருட்டும் உருவாகும் சொற்கள் காமத்தைப் பேசுகின்றனவா கால் வலியைப் பற்றிப் பேசுகின்றனவா என்பது ஒரு படைப்பாளிக்கு முக்கியமல்ல. அவற்றின் தேவையை ஏற்படுத்திய படைப்பு உத்வேகத்துக்கு அவை நியாயம் செய்கின்றனவா என்பதே முக்கியம். அந்த வகையில் சாணக்யாவின் கதைகளில் காமம் பேசும் வரிகள் படைப்புரீதியான அமைதியுடன் விளங்குவதையும் அப்படி விளங்குவதாலேயே படைப்பனுபவத்தைத் தருவதையும் உணர முடிகிறது. சில உதாரணங்கள் மூலம் இதை மேலும் விளங்கிக்கொள்ளலாம்.

அமராவதியின் பூனை கதையில் சிலம்பாட்டக் கலைஞனின் தான் என்னும் உணர்வு, சுயம் குறித்த அடையாளம், அற்புத வித்தைகள் புரியும் அவனது சிலம்பின் வீச்சிலும் தன் மனைவியைத் திருப்திப்படுத்தும் புணர்ச்சி வேகத்திலும் இருப்பதைக் காட்டும் சாணக்யா, காமத்தில் சறுக்கும்போது அவனது சுயம் அடி வாங்கி அவமானம் கொள்ளும் சோகத்தையும் காட்டுகிறார். கதையின் ஒரு கட்டத்தில் திருப்தியுறாத காமத்தின் வேகத்தால் உந்தப்படும் அமராவதி, காம விளையாட்டில் ரசாக்கை வெற்றிகொள்வதில் அவன் சுயம் நொறுங்கிப் போகிறது. எத்தகைய வீரனையும் தன் சிலம்ப வீச்சில் சாய்த்துவிடும் வீராதி வீரனான ரசாக்கினால் மனைவியிடம் படுக்கையில் தோற்பதை ஏற்க முடியவில்லை. அவளை வீழ்த்தத் தன்னிடம் இருக்கும் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். அவளது யோனியை முத்தமிடுகிறான். இப்படிச் செய்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்று இதுகாறும் எண்ணிவந்த அவன் தன் சுய பிம்பத்தைத் தனக்குள் மீட்டெடுத்துக்கொள்ள இந்த முயற்சியில் இறங்குகிறான்.

ஊரின் நடுவில் வெட்ட வெளியில் சிலம்பாட்டக் களத்தில் எதிர்த்து நிற்க ஆளின்றி கம்பீரமாகத் திமிறும் தனது ஆண்மை நான்கு சுவர்களுக்கு நடுவில் நொறுங்கிப்போவதாக ரசாக் உணரும் இடத்தில் காமத்தை வெளிப்படையான சொற்களின் மூலம் வெளிப்படுத்தும் சாணக்யா எந்த வக்கிரமும் ஒட்டிக்கொள்ளாமல் இயல்பாக அதைச் சொல்கிறார். இந்தச் சித்தரிப்பின் மூலம் மனிதர்களின் மனப் பின்னல்களையும் ஆளுமைக் கோணல்களையும் அடையாளம் காட்டுகிறார். வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தப் பின்னல்களும் கோணங்களும் கதையின் தவிர்க்க முடியாத பகுதிகளாக மாறிக் கதையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சிக்கலான இந்த விஷயத்தைக் கையாள்வதில் படைப்பு கோரும் சவாலைக் கம்பீரமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக வெளிப்படுகிறார்.

ஆண்களின் படித்துறை, கனவுப் புத்தகம் ஆகிய கதைகளிலும் இதே அனுபவத்தை நாம் பெற முடியும். இக்கதைகளிலும் காமச் சித்தரிப்புகள் கதையின் தேவையை முன்னிட்டு வெளிப்பட்டிருப்பதை உணர முடியும். அமராவதியின் பூனை கதையில் ரசாக்கின் சுயம் குறித்த தவிப்பாய் இது வெளிப்படுகிறது. ஆண்களின் படித்துறையில் அன்னம்மாளின் ஆளுமையை உணர்த்தும் அடையாளமாய் வெளிப்படுகிறது. கனவுப் புத்தகத்திலோ தீராத ஏக்கத்தின் தாபமாய் வெளிப்படுகிறது. இந்த மூன்று கதைகளிலும் புனைவுத் தர்க்கத்திற்குட்பட்டுப் படைப்பின் தேவையை முன்னிட்டு இயல்பாகக் காமம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

பசி, கோபம், ஆனந்தம், வறுமை போன்ற உணர்ச்சிகளை விவரிப்பது போலத்தான் காமமும். ஒரு படைப்பாளி வறுமையைத் தத்ரூபமாகச் சித்தரிப்பதுபோலக் காமத்தையும் சித்தரிக்கலாம். படைப்பாளி கூறும் விஷயம் அவரது கலைத் தேவையின் நியாயம் சார்ந்து வெளிப்படுகிறதா என்பதுதான் நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி.

இந்தத் தெளிவைத் தன் படைப்பு யாத்திரையினூடே கண்டடைந்த படைப்பாளி சாணக்யா. அதனாலேயே காமத்தைக் கலகப் பிரகடனங்களோ ரகசியக் கிளுகிளுப்புகளோ இல்லாமல் இயல்பாகக் கையாள அவருக்கு முடிகிறது.

o

சாணக்யாவின் ஒரு சில கதைகளில் வெளிப்படும் காமத்தைப் பற்றியே பலரும் அதிகம் பேசியிருப்பதாலோ என்னமோ அவற்றின் கலைப் பெறுமானம் பற்றி அதிகப் பேச்சுகளைக் கேட்க முடியவில்லை. இந்த மூன்று கதைகளும் படைப்பாளியின் படைப்பாளுமையைப் பறைசாற்றும் கதைகள். பாத்திரங்களும் கதை நிகழ்வுகளும் இயல்பான விதங்களில் தத்தமக்குரிய ஓசைகளுடனும் மௌனங்களுடனும் உருக்கொள்ளும் கதைகள்.

கனவுப் புத்தகம் கதையின் தொடக்கத்தில் தாமரைக் குளத்தினுள் நீந்தும் மூன்று பேர் கதையின் முடிவில் சடலங்களாக மேலெழும்பி வருகிறார்கள். நீருக்குள் மேற்கொள்ளப்படும் அவர்களது விளையாட்டினூடே அவர்களுக்கிடையேயான உறவையும் ஏக்கங்களையும் குறிப்பால் உணர்த்தும் சாணக்யா, உணர்ச்சியின் சுழியில் சிக்கிக்கொள்ளும் அவர்கள் கனவுலகில் சரிந்து விழுவதையும் நிஜத்தில் அவர்கள் நீருக்கடியில் அபாயகரமான இடத்துக்குப் போய்க்கொண்டிருப்பதையும் நுட்பமாக உணர்த்துகிறார். அவர்கள் பெரியவர்களாவதையும் இரண்டு பெண்களும் வாலிபம் கடந்துபோன பிறகும் தனி மரங்களாகவே நிற்பதையும் அவர்களைத் தேடி அந்தப் பையன் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதையும் பிம்பங்களாய்த் தீட்டிக் காட்டும் அவர் அந்தக் காட்சிகளின் கனவுத் தன்மையைக் கற்பனை என்று நினைத்துவிட முடியாத அளவுக்கு வலுவாக அந்த மூவரின் அன்பையும் நிராசைகளையும் உயிர்த் துடிப்புடன் நம்முன் நிறுத்துகிறார்.

ஆண்களின் படித்துறை கதையில் அன்னம்மாளின் ஆளுமையை, காமத்தை அவள் கையாளும் விதத்தில் சொல்லிச் செல்கிறார். காசுக்காகக் காமத்தை வழங்கும் அவள் பாலியல் தொழிலாளி அல்ல. அதாவது யாரும் தன் விருப்பப்படி அவளைக் கூப்பிட்டுவிட முடியாது. தேர்வு அவளுடையது. அந்த ஊர் ஆண்களுக்கு ஏங்குவதற்கு மட்டுமே உரிமை உள்ளது. தீர்மானிக்கும் அதிகாரம் அன்னம்மாளின் கையில்தான். தன்னைப் பார்த்து ஏங்கும், வசதி அற்ற, பலவீனமான ஒரு ஆண் மீது கொள்ளும் அனுதாபத்தால் அவனது விருப்பத்தை எந்தப் பிரதிபலனும் இல்லாமலும் நிறைவேற்றுவாள். அதுதான் அன்னம்மாளின் ஆளுமை. கிளுகிளுப்புக்காகவோ கலகப் பிரகடனத்துக்காகவோ காமம் கையாளப்படவில்லை. பாத்திரத்தின் ஆளுமையை அவளது வாழ்நிலையின் பின்னணியில் வைத்துத் துலங்கச் செய்வதற்காகக் கையாளப்படுகிறது.

அன்னம்மாளின் ஆளுமையைச் சொல்வதோடு கதை நின்றுவிடுவதில்லை. காட்டாறு போன்ற வாழ்வைக்கொண்டிருக்கும் அவளுக்கு நேர்மாறாக இருக்கும் அவளது பெண், காமம், கற்பு, குடும்பம் ஆகியவை பற்றிய சமூகத்தின் பொதுப்புத்திக்கு உட்பட்ட வரையறைகளை முழுமையாக ஏற்பவளாக இருக்கிறாள். தன் அம்மாவின் குணம் குறித்து உள்ளூர வருந்துகிறாள். ஆனால் அவளை எதிர்த்துப் பேச முடியாத பலவீனமும் கொண்டிருக்கிறாள். மகளின் திருமணத்திற்காகத் தன் காமத்தை விலைபேச அம்மா முனையும்போது மகளின் மதிப்பீடு அதை ஏற்கவில்லை. தன் மரணத்தால் அம்மாவுக்கு எதிர்வினையாற்றுகிறாள். மாறுபட்ட ஆளுமைகள் ஒரே விஷயத்தை எப்படி எதிரெதிர் திசை வழிகளில் எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுவதுடன், மிகுந்த சுய பிரக்ஞையுடனும் தன்னம்பிக்கையுடனும் காமத்தைத் தன் ஆயுதமாக மாற்றும் அன்னம்மாளுக்கு, அதைத் தன் மகளின் வாழ்வைக் கரை சேர்க்கப் பயன்படுத்த முடியவில்லை என்னும் சோகத்தை முகத்தில் அறைந்து சொல்லியபடி முடிகிறது கதை.

ஆணாதிக்கம் நிலவும் சமூகத்தில் தன் சுய மரியாதையை நிலைநாட்டிக்கொள்வதில் அன்னம்மாள் காட்டும் முனைப்பு, தன் செயல்களின் விளைவுகள் பற்றிய யோசனையிலோ அவை தன் மகளைப் பாதிக்கக்கூடிய விதத்தின் மீதான அக்கறையிலோ இருக்கவில்லை. தன் செயல்கள் மீதான வரம்பு மீறிய தன்னம்பிக்கை அவளது ஆதாரமான நோக்கத்தையே சிதைத்து அவளது மகளை இழக்கச் செய்துவிடுகிறது. வாழ்வின் ஆதார முரண்பாடுகளில் ஒன்றை வலுவாகச் சொல்லும் இந்தக் கதை அதிலுள்ள காமச் சித்தரிப்புகளுக்காக மட்டுமே அதிகம் பேசப்பட்டது சோகம்தான்.

அதுபோலவே அமராவதியின் பூனை கதையில் காமத்தில் ஏற்பட்ட சறுக்கலால் காயமடையும் ரசாக்கின் சுயம், தன் காலைச் சுற்றி வந்த அமராவதியின் பூனைகள் காசியின் வீட்டுக்குப் போவதைக் கண்டு மேலும் அடி வாங்குகிறது. எஜமானியைப் பின்தொடர்ந்துதான் பூனைகள் போகின்றன என்பது புரியும்போது அவனது சுயத்தின் வீழ்ச்சி, தான் என்னும் உணர்வின் சிதைவு முழுமையடைகிறது. வெளியெங்கும் தன் சிலம்பத்தை வீசி மாவீரனாக வலம் வந்த ரசாக் சாமானியனாகச் சிறுத்து ஒடுங்குகிறான். எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் தன் சுயம் சார்ந்த படிமம் சிதறுண்டு போகும்போது ஒருவன் அடையும் அக வீழ்ச்சி எவ்வளவு பயங்கரமானது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. காமம் என்பது இனப்பெருக்கத்துக்கும் உடல் சுகத்துக்கும் என்பதற்கும் மேலாக ஒருவனது வாழ்வையே தீர்மானிக்கும் அடையாளச் சிக்கலாக மாறும் கூறையும் அதன் பின்னணியிலுள்ள சமூக மதிப்பீடுகளையும் பற்றி மிகவும் யோசிக்க வைக்கும் கதை இது.

o

சாணக்யாவின் படைப்புகளின் ஒவ்வொரு வரியும் அவரது படைப்பாளுமையை உணர்த்துகின்றன. படைப்புச் செயல்பாட்டை மிகவும் தீவிரமும் முனைப்பும் கொண்ட யாகமாகக் கருதுகிறார் என்பதை அவரது கதைகளின் இறுக்கமும் தீவிரமும் உணர்த்துகின்றன. சிக்கலான இந்த வாழ்வையும் அனுபவித்துத் தீராத அதன் வகைமைகளையும் புரிந்துகொள்வதற்கான விசாரணையாகவே படைப்புச் செயல்பாடு அவருக்கு இருக்கிறது. புற உலகை மிகவும் மதிக்கும், நம்பும் இவர், புற உலகிலேயே எல்லாம் இருக்கின்றன என்பதை நம்புவதில்லை. அக உலகின் சிக்கலான சமன்பாடுகளும் அடுக்குகளும் அவற்றுக்குக் காரணமான சமூக, வரலாற்றுக் காரணிகளும் மனித சுபாவங்களையும் வெளிப்பாடுகளையும் பாதித்துப் புற உலகில் நாம் காணும் சலனங்களை ஏற்படுத்துகின்றன என்று இவர் நம்புவதாக இவர் கதைகளிலிருந்து உணர முடிகிறது.

இவரது கதைகளில் ஒரு வரிகூட மேலோட்டமான மனநிலையிலிருந்து பிறந்திருக்க முடியாது என்பதும் மேலோட்டமான மனநிலையில் இவற்றைப் படிக்க முடியாது என்பதும் கதையைப் படிக்க ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களிலேயே தெரிந்து விடும். கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதுவதும் ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாக எழுத முனைவதும் இவரது இயல்பான அம்சங்களாக இருப்பது தற்செயலானதல்ல. படைப்புச் செயல்பாடு என்பதை அவர் எவ்வளவு முக்கியமானதாக நினைக்கிறார் என்பதை இவை உணர்த்துகின்றன.

o

இயல்பாகச் செயல்படும் எந்த ஒரு படைப்பாளியையும் போலவே சாணக்யாவும் படைப்புச் செயல்பாட்டில் பெரும் பாய்ச்சல்களுடனும் சில சறுக்கல்களுடனும் பயணம் செய்கிறார். சில கதைகள் பெரும் வீச்சில் வெளிப்படுகின்றன. வேறு சில கதைகள் அப்படி நடக்காமல் சரிகின்றன. கடவுளின் நூலகம் என்னும் கதை வினோதமானதும் சுவாரஸ்யமானதுமான கதைப் பொருளைக் கொண்டிருந்தாலும் முழுமை பெறாத வெளிப்பாடாகவே தோன்றுகிறது. யதார்த்தம் சார்ந்த கற்பனையும் கற்பனை சார்ந்த யதார்த்தமும் பிணைந்து தோற்றம் கொள்ளும் இந்தக் கதை அவரது மற்ற கதைகளைப் போல முறுக்கேறி வலுப்பெறத் தவறுகிறது. கதையின் போக்கில் உருப்பெறும் புதிர்த்தன்மை கதையின் புனைவுத்தன்மையைக் கூட்டுகிறதே அன்றிப் படைப்பனுபவத்தை முழுமை செய்யவில்லை. இரண்டாவது ஆப்பிள் கதையும் படைப்பனுபவத்தைத் தரத் தவறுகிறது. கற்பனைப் பிராந்தியத்தில் நிகழும் இக்கதையின் உள்ளீடாக வாழ்வு என்னும் பிரம்மாண்டமான யாத்திரை குறித்த விசாரணை இருந்தாலும் கதையின் உள்ளார்ந்த செய்தி புதிய திறப்பு எதையும் சாத்தியப்படுத்தவில்லை. புனைவின் மூலம் முன்வைக்கப்படும் ஒரு விஷயம் வேறு வழிகளின் மூலம் முன்வைக்கப்பட முடியாது என்னும் நிலையில்தான் அந்தப் புனைவு வலுவான படைப்பாக மிளிர்கிறது. வேறு வகையான வாசிப்பின் மூலம் கண்டடையக்கூடிய அறிவு அல்லது தரிசனங்கள் புனைகதையை வலுப்படுத்தப் பயன்படுமே அல்லாது அவையே புனைகதையாகிவிடாது. இரண்டாவது ஆப்பிள் கதைக்கு நேர்ந்த விபத்து இதுதான் என்பது என் எண்ணம்.

சாணக்யாவின் மொழியில் உள்ள சில குறைகளை அவரது புனைவெழுத்தில் இன்னொரு குறைபாடாகச் சுட்டிக்காட்டலாம். சிக்கலான யதார்த்தங்களையும் மனிதர்களையும் உளவியலையும் குறித்த தீவிரமான விசாரணைக்கு ஏற்ற இறுக்கமான, செறிவான மொழி இவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. அலங்காரங்களைத் துறந்த இவரது மொழி மன உணர்வுகளுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. உணர்வுகளுக்கு மொழி வடிவம் தருவதிலும் காட்சிகளை வர்ணிப்பதிலும் நிகழ்வுகளைச் சிக்கனமாக முன்வைப்பதிலும் பெரும் தேர்ச்சி கொண்டுள்ள இவர் சில இடங்களில் வாக்கிய ஒழுங்குகளைத் தவற விட்டுவிடுகிறார். படைப்பு வேகம் ஏற்படுத்தும் அவஸ்தையின் விளைவாய்ச் சில வாக்கியங்கள் தொடங்கிய இடத்திலிருந்து திசை மாறிப் பயணிக்கின்றன. சில இடங்களில் பொருள் குழப்பம் தருமளவுக்கு இவை கலைந்திருக்கின்றன. சிக்கலைச் சிக்கலாகவே சித்தரிக்க முயலும்போது மொழியும் சிக்கலாகிவிடும் என்பது உண்மைதான். ஆனால் சிக்கல் என்பது வேறு, ஒருங்கமைவு குலைந்த வாக்கிய அமைப்புகள் என்பது வேறு. படைப்பு வீரியம் குன்றாமலேயே மொழி ஒழுங்கை வென்றெடுக்க முடியும் என்பதையும் நேர்த்தியான மொழி என்பது படைப்பூக்கத்துக்கு வலுவூட்டக்கூடிய ஒன்றுதான் என்பதையும் தமிழில் சிறந்த படைப்பாளிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

o

மொத்தமாகப் பார்க்கும்போது, கனவுப் புத்தகம், அமராவதியின் பூனை, ஆண்களின் படித்துறை, கறுப்புக் குதிரைகள் ஆகிய கதைகளும் இத்தொகுப்பு வந்த பிறகு எழுதப்பட்ட சித்திரைச் சாலைகள் கதையும் வளமான தமிழ்ப் புனைகதைப் பரப்பின் தகுதி வாய்ந்த வழித்தோன்றலாகச் சாணக்யாவை அடையாளம் காட்டுகின்றன. தமிழின் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர் இவர் என்று தயங்காமல் கூறும் வாய்ப்பை இந்தக் கதைகள் அளிக்கின்றன.

ஒரு படைப்பாளி என்னும் முறையில் சாணக்யாவுக்கு முழக்கங்களோ உதிர்ப்பதற்குத் தத்துவங்களோ பிரகடனம் செய்வதற்கு மகாவாக்கியங்களோ இல்லை. சுயபடிமங்களின் சுமைகள் இல்லை. இருப்பதெல்லாம் வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் சாத்தியப்படும் வெவ்வேறு அனுபவங்கள், வெவ்வேறு வாழ்நிலைகள் சார்ந்த வெவ்வேறு யதார்த்தங்கள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான செயல்பாடுகள். இந்த வகைமைகளை ஒட்டிச் சுழலும் வாழ்வியக்கத்தின் முரண் கூறுகளையும் ஒத்திசைவுகளையும் வாழ்வின் மாணவனாக நின்று வியப்புடனும் கவலையுடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கிறார் சாணக்யா. அவரது படைப்பு மனம் இந்தக் கூறுகளுக்கு ஆற்றும் எதிர்வினைகளைத் தன் மொழியின் துணைகொண்டு பொறுப்போடு பதிவுசெய்கிறார். இப்படி உருவாகும் எழுத்துகள் சிறப்பான படைப்பனுபவத்தை நமக்குத் தருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

o

குறிப்பு: ஜே.பி. சாணக்யாவின் கனவுப் புத்தகம் சிறுகதைத் தொகுப்பு (2005, காலச்சுவடு பதிப்பகம்) குறித்த இந்தக் கட்டுரை ஜூன் 27, 28 (2009) தேதிகளில் கடவு இலக்கிய அமைப்பு சார்பாக மதுரையில் நடைபெற்ற கவிதை, சிறுகதைக்கான கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.

உள்ளடக்கம்