|
பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர் பேரவை வளாகம். பிறக்கவிருக்கும்
புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கோலாகலமும்
அக்கட்டடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது. தடித்த கண்ணாடியின் கீழ்ப்
பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு, பச்சை,
பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டடத்திற்கும்
இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள்.
குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாகக் கையில்
வாங்கிய வேகத்தில் மதுவைத் தொண்டைக்குழிக்கனுப்பிக் குளிரைச் சரீரத்திலிருந்து
உரித்து எரிந்தனர்.
அந்தப் பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக் கால ரயில்கள்போல வீறிட்டுக்கொண்டு
சீழ்க்கையொலி. பண்டிகைக் காலக் குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும்
கேட்டுமுடித்த சில நொடிகளில் கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாய
விமானமென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய
குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிக்கொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன்
பாருங்க!’ பிடித்திருந்த கையைச் சட்டென்று விலக்கிச் சிறுமி கலகலவென்று சிரித்தாள்.
சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மெனப் பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம்
புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன். ‘எனக்கு இந்தக் குட்டி ஆனை வேண்டாம்! அதோ அந்தப்
பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்...ம்... மற்றொரு சிறுவன். ‘இந்தமுறை
போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். ‘கப்ரியேல்! பிடியைக்
கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப் பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு,
மனத்தில் அரும்பிய சந்தோஷத்தைக் காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும்
பாட்டி. பஞ்சு போன்ற தலை. கூன் போட்ட முதுகு. வயது எண்பதுக்குக்
குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ளப் போதுமான ஆடைகளில்
தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிப்பழத்தைக்
குடைந்து கவிழ்த்தது போன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்
குல்லாய்கள். கழுத்தை அரவம்போலச் சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.
மனத்தில் ஈரபூமியில் பரவும் நீர்போலச் சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்
பார்க்கிறபோது ஒரு நாள் மற்ற நாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா
நேரமும் நாட்களும் புறத்தில் சம மதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன.
யுகதர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில்
பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக்
கலைத்துக் கொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதிய கதை, புதிய
இயக்குநர், புதிய ஒப்பனையெனப் பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓடிப்
பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போலச் சீண்டுவதும்
பின்னர் நழுவிக் கெக்கலிகொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரே
கூரையில் ஒரே புள்ளியில் நடந்தவை அவரவர் குடும்பம், அவரவர் பாதை என்றான பிறகு
ஆளுக்கொரு திசை நோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்டப் பதினைந்து
ஆண்டுகளுக்குப் பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிப் பார்த்தேன். நமக்கு
ஒரு செண்ட்கூடத் தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று
பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டு பேரும் சேர்ந்து செய்ய வேண்டிய விஷயம்.
இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி...”
பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல். இத்தனை கம்பீரமாகத் தமிழ்க்
குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.
கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். ‘வணக்கம்!’ கறுத்த முகத்தில்
வெண்ணிறப் பற்கள் பிரகாசிக்கச் சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான
கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையின் நிறமும் கறுப்பு. அது
முழங்கையின் அணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித்
துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப் பெண்மணி, தைரியசாலி. இவளைக் காட்டிலும் வயதில்
நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு
முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி
பெண்மணியொருத்தி இறங்கிக்கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி
ஆகமெல்லெனக் கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ?” என்று கேட்டு முறுவலித்தாள்.
‘அதெல்லாமில்லை. நம்மைச் சுற்றிலும் பிரெஞ்சு மனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு
தமிழில் சத்தமாகப் பேசினால் என்ன நினைப்பார்களோ? - என்ற பதிலைக் கேட்டுக் கலகலவெனச்
சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு உரத்துப் பேசினால்,
நம்மைத் தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்துப்
பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்துப் பேசினால் தப்பு என்கிற மாதிரி உங்க பதில்
இருந்தது அதனால் கேட்டேன்’ என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதெனத் தெரியாமல் இவள்
சிரித்துச் சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும்,
பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன.
“அக்கா நான் வாரென், வெள்ளெனப் போகணும். இப்போதே காமணித்தியாலம் தாமதம். எங்க
முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி
நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக்
கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனத்திலும்
உடம்பிலும் நிறைய இருக்கிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவக் கூறியிருந்தாள்.
அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவிதக் குற்ற
உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.
‘பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்புக் கேட்ட வயதான பெண் மணியிடம், ‘கவனத்துடன் வர
நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்’, என்ற இவள் பதிலை முடிக்கு முன்பே
அப்பெண்மணி கூட்டத்தில் கலந்திருந்தாள். ஒவ்வொரு வருடமும் கிருஸ்துமஸ் காலத்தில்
தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று
நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போன மாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை
அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது
தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாகக் கற்கள் பதித்துச்
செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர்
மனிதர்களைக் காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய
புதுத்தேன் போலப் பளிச்சிட்டது. முல்லைப் பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக்
கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலவென்று உதிர்ந்தது. காற்று வேகமாக
வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாகப் பறந்து, கடைசியில்
வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத்
தொட்ட மாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர்
திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள் வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம்
பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்லத் தேவாலயத்தை நோக்கி முன்னேறும். காலையில் எட்டு
மணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற
கடைகளுக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன் பிறகு விடிய விடிய
மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்துக் கோபுரத்தின் உயரத்தைக் கண்டு
பிரமிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்த மட்டும் அதன் வடிவத்தைக் குறுக்கிச்
சேமிப்பார்கள். கோரைத் தலையும் குண்டு முகமும் கீற்றுக் கண்களும் சிறு உதடுகளுமாக
சீனர், ஜப்பானியர், தென்கொரியர்கள், எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசிய
நாட்டவர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண்பனி போலத்
திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போலக் கலைந்து நடப்பார்கள்.
அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பிக் குட்டி
குட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது
உடன்பாடு செய்துகொண்டோ அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ
குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.
போன ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலை பதினோரு மணி. படுக்கை அவளைக் கெட்டியாகப்
பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான்
கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னல் கதவும் வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தைச்
சுகமாக்கியிருந்தன. புரண்டுபடுத்துப் போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம்,
தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து
அநாவசியப் பதற்றத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடி
வருகின்றவர்களென்று எவருமில்லை. மனத்தில் முருகேசனாக இருக்குமோவென்று சந்தேகம்.
இவளைவிட்டு விலகிப்போய் ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையைச்
சரிசெய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்துத் தலை முடியைக்
கைகொள்ளக் சுழற்றிக் கொண்டையாக்கினாள். எழுந்து மின் விளக்கைப் போட்டபோது
அழைப்பு மணி இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது.
வந்திருப்பவன் முருகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால் கதவைத்
திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத் திறந்தாள். குப்பென்று மது வாடை.
காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:
‘எங்கே வந்த?’ என்றாள்.
‘இனிமே அவகூட நான் இருக்க விரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி
சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது
கொண்டுவரட்டுமா?’
‘வேண்டாம். அதற்குச் சாத்தியமில்லை.’
‘சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சுப் பேசற?’
‘முடியாது. என் பிரண்டு ஒருத் தன் உள்ளே தூங்கறான்.’ அவனைச் சீண்டுவதற்கும்
தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.
‘பிரண்டுன்னா?’
‘நீங்க நினைக்கிற மாதிரிதான்.’
வால் மிதிப்பட்ட நாய்போலச் சத்தமிட்டான்.
‘தேவடியா. தேவடியா...’
குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியில் தள்ளிக் கதவை அறைந்து
சாத்தினாள்.
இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்
கொண்டு உருவாக்கப்பட்ட குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின்
வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய கைவேலைப்பாட்டுப் பொருட்கள்.
‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்’, மெல்லிய
உலோகத் தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பாட்டு மேசையில்
கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை
ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப்
பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலைக் காதில் வாங்கியபடி நடந்தாள்.
கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர் காரணமாகக் குத்தலெடுத்தது. பையை இடது
தோளுக்கு மாற்றிக்கொள்ள வலது கை தீக்கோழிபோலக் கம்பளி ஆடைக்குள்
பதுங்கிக்கொண்டது. “பொனே...பொனே” தொப்பி விற்கும் ஆப்பிரிக்கரின் குரல். அவரது
முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போலத் தொப்பிகள். அவரைப் பார்க்க
விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும் பக்கத்திற்கொன்றாகத் தளரக்
காலைத் தொங்கவிட்டபடி இறக் கையைப் பரத்தி அடைகாப்பது போலக் கொக்கொன்று அவர்
தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைத்தான் தலையில்
அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிக்கொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது
கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே
இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் ஃபிளாம்பே” என்று ஓர் இளைஞன்
தங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பட்டியலிட்டான். ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!’
என்று புன்னகைத்த விற்பனைப் பெண்ணிடம், ‘நான் கேட்டது ஒயின்!’ என்று மறுத்தார்
முதியவர் ஒருவர். ‘அப்படியா?’ என்றவள் முணுமுணுத்துக்கொண்டே ‘இன்னுமொரு ஒயின்
கொடு’ என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம் கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு
எனக்கு நான்கு கைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப்பக்கமாக
ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். ‘லொரான்! லொரான்! நில்லு நில்லு!
ஓடாதே!’ முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து
நடந்து குழந் தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.
ஜிங்கிள் பெல் . . . ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது.
அப்பாட்டிற்கேற்பக் கைகோத்து நடனமிட்டபடி ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம்
சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை
அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிபொங்க ஸ்கேட்டிங்
விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷூ. ஷூக்களில் பொருத்தியிருந்த
கத்திபோன்ற கனத்த தகடுகள் நழுவிச் செல்கிற வேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல
எதிரொளித்தன. அக்காட்சியில் மனம் லயித்தவளாய்ச் சிறிதுநேரம் அங்கே நின்றாள்.
பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்யப் போதுமான வெப்ப நிலைக்கு
விளையாட்டுத் திடலைச் செயற்கையாகக் கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை
உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின்
கொம்புகளில் இணைத்துச் சரஞ்சரமாகப் பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார
பல்புகள். ஓர் இளஞ்ஜோடி யொன்று கைகளைப் பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள்.
பள்ளிப் பிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர் பற்றியபடி சறுக்குவதுகூட
நன்றாக இருந்தது. பதின் வயதுப் பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன்
கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயதுப் பெண்களை மோதுவது போல நெருங்கி,
சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களை வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள்
கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோலக் கைகளைப் பரத்திச் சறுக்குகிறாள்.
ஒரு கறுப்பினப் பெண்மணிகூட அநாயசமாகச் சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும்
யுவதியும் தம்மைச் சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தைக் கருத்தில்
கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்த
மிட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து
தனது கால் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷூக்களை வாங்கி அணிந்தாள்.
நடக்கத் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த
பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப் பார்ப்பதுபோல
இருந்தது. மேற்கொண்டு செயல்படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்களின் கண்கள்
இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பிப் பிற
மனிதர்களின் கவனத்தைத் தேடியபோது எல்லாம் கற்பனையெனத் தோன்றியது. அவரவர்கள்
தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம்
சறுக்கிக்கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பைப்
பிடித்தபடி மாற்றி மாற்றிக் கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள்
விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழு உடலும் பின்பாரமாய்ச் சரிந்தது.
மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’ என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன்
கைகொடுத்தான். இவளுக்கு வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது.
ஆபத்திற்குப் பாவமில்லை என்பதுபோல அவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல
எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப் பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க
முடியவில்லை. இடுப்பில் தாங்கொணாத வலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்தது போலச்
சுரீரென்றது. மீண்டும் விழப் போனவள் எப்படியோ சமாளித்துத் தடுப்புக் கண்ணாடியைப்
பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்றுத்
தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவக் குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும்
பெண்ணும் ஓடி வந்தார்கள். ஆளுக்கொரு பக்கம் தாங்கியவர்களாய்ப் பனித்திடலை
ஒட்டியிருந்த முதலுதவிக் கூடத்திற்கு அழைத்துச் சென்று உட்கார முடியுமாவெனக்
கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்கார முடிந்தது.
பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக
ஆட்டிப்பார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து
வலி தெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றைத் தற்காலிகமாக ஸ்ப்ரே
செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக் கிடத்தினார்கள்.
இரண்டு ஊழியர்கள் முன்னும் பின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச்
சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கையசைப்பது தெரிந்தது.
ஆம்புலன்ஸ் தேவாலயத்தைச் சுற்றிக் கொண்டு பிரதான சாலையைப் பிடித்து இறங்கி ஓடத்
தொடங்கிய போது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.
|