|
ஒடுக்கப்பட்ட, தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட
‘தலித்’ என்னும் அடையாளம் இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. தலித் அடையாளம்
சார்ந்த போராட்டத்தின் வழி பல உயர்மட்டப் பதவிகளை வந்தடைந்த தலித் ஆளுமைகளில் ஒரு
சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். நீதிபதி தினகரன்,
தாழ்த்தப்பட்டோர் நல தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டா சிங், மத்திய அமைச்சர் ஆ. ராசா
ஆகியோர் சில உதாரணங்கள். இவர்கள்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக அவர்கள்
‘தலித்’ என்பதாலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டப்படுவதாக மறுப்பும் அளிக்கப்படுகிறது.
சமூக நீதி அரசியல் தாக்கத்தின் வழி உயர்நிலையை வந்தடையும் தலித்துகள் சார்ந்து பல
நெருக்கடிகள், குழப்பங்கள், சார்புகள், வெறுப்புகள் பொதுச் சமூகத்தில் உள்ளன. இவை
எல்லாத் தளங்களிலும் வெளிப்படவும் செய்கின்றன. ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
காலச்சுவடில் (இதழ் 120, டிசம்பர் 2009) வெளிவந்த ஆ. ராசாமீதான ஊழல்
குற்றச்சாட்டுகள் பற்றிய ‘இரண்டாம் தலைமுறை ஊழல்’ என்னும் கட்டுரையின் மூல ஆங்கில
வடிவத்தைப் படித்துப் பார்த்தபோது அதில் ஆ. ராசாவைப் பற்றிய முதல் குறிப்பிலேயே
திமுகவைச் சேர்ந்த ‘தலித்’ அமைச்சர் எனக் குறிப்பிட்டிருந்தது உறுத்தியது.
இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தினர் இவ்வாறு தனித்து அடையாளப்படுத்தப்படுவதில்லை.
கட்டுரையாளரின் தடுமாற்றம் இங்கு வெளிப்படுவதாகவே நினைத்தேன். ஆனால் அதையும் மீறி
வரலாறு காணாத இந்தப் பெரும் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய ஆழமான அந்த ஆய்வை வெளியிடுவது
முக்கியமாகத் தோன்றியது. இதுபோல இன்னும் பல உதாரணங்களைச் சுட்ட முடியும். ஆனால்
ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டுகள்மீதான விசாரணைகளைத் தடைசெய்ய ‘தலித்’ என்ற
அடையாளம் துஷ்பிரயோகிக்கப்படும்போது அது ஊழலுக்குக் கவசமாகிறது. இங்கு
விடுதலைக்கான அடையாளம் கடும் சேதமுறுகிறது.
ஆ. ராசா விவகாரத்தில் அவர்மீதான பல ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை மறுக்க அவர் தலித்
அமைச்சர் என்பதாலேயே எதிர்க்கட்சியினரும் ஊடகங்களும் அவரைத் தாக்குவதாக முன்வைப்பது
திமுக எனும் குடும்பக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இன்றைய அரசியல் கட்சிகள்
தனியார் கம்பனிகளைப் போலவே அதிகமும் செயல்படுகின்றன. இதில் லாபம் என்பது ஊழல் வழி
உருவாக்கப்படுவது. ஆக ஊழலின் நுகர்வு இங்கு எந்தத் தனிநபருக்கும் உரியது அல்ல.
இன்றைய அரசியல் கட்சிகள் பலவும் சில பெருங்குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருப்பவை
என்பதைப் பார்க்கும்போது, கட்சி என்பது குடும்பத்தின் நீட்சியாக இருக்கும்போது,
ஊழலைப் பாதுகாப்பது குடும்பக் கடமையாகிறது. இவர்கள் தலித் அமைச்சர்களுக்கு ‘தலித்’
என்னும் அடையாளத்தை ஊழலுக்குக் கவசமாக அணிவிக்கும் செயல் சற்று ஆழ்ந்து பார்க்கப்பட
வேண்டியது.
‘தலித்’ என்னும் விடுதலையின் அடையாளம் ஒரு நூற்றாண்டிற்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட
மக்களின் போராட்டம், தியாகம், படுகொலை வழி உருவானது. இந்தப் பயணத்தில் இந்த
அரசியல் குடும்பங்களின் பங்களிப்பு இல்லை. மாறாக ‘தலித்’ என்பது தவிர்க்க முடியாத
அடையாளமாக, அதிகாரமாக உருவாகும் காலம்வரை அதைக் கீழறுக்க முயல்வதே இவர்கள்
செயல்பாடாக இருந்துள்ளது. இன்று ஊழலில் கிடைக்கும் பங்கிற்காகவும் விசாரணைக்குத்
தடையாகவும் ‘தலித்’ அடையாளத்தை இவர்கள் பிரயோகிக்க முயல்வதை ஒடுக்கப்பட்ட மக்களின்
விடுதலைக்கான அடையாளத்தைச் சுயலாபத்திற்காகச் சுரண்டுவதாகவே பார்க்க வேண்டும். தலித்
அமைச்சரின் ஊழலில் பங்கு கிடைக்கும்வரை தலித் மக்கள் பற்றிய இவர்களின் மன
அவசத்திற்கு வேறு உதாரணங்களை எவ்வளவு தேடினாலும் கிடைக்காது. தலித் அடையாளத்தை
முன்னிறுத்திய சில அரசியல் சக்திகளை இந்தக் குடும்பங்கள் குழைந்து, காலில் விழுந்து,
மண்டியிடும் சின்னங்களாக மாற்றியிருப்பதையும் இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
தலித் அடையாளத்தை ஊழலில் புதைக்கும் அரசியலிலிருந்து மீட்பது இன்று ஒடுக்கப்பட்ட
மக்கள் முன்னிற்கும் சவால்.
|