|
சில தலைவர்களின் மரணம் பேரிழப்பாக அமைகிறது. அத்தகைய ஒரு தலைவர் ஜோதி பாசு
(08.07.1914 - 17.01.2010). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிறுவப்பட்ட
நாளிலிருந்து தன் இறுதி நாள்வரை அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தவர்
(2005இலிருந்து 2008வரை சிறப்பு அழைப்பாளர்) பாசு. அவரது மரணத்தின் மூலம்
மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. அக்கட்சி
தொடங்கப்பட்டபோது இருந்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில்
கடைசியாக மறைந்தவர் பாசு. சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு, மிகச் சமீப
காலம்வரை அரசியலில் தீவிரமாக இருந்தவர் என்ற வகையிலும் பாசுவின் மரணம் தேசிய
அரசியலிலும் ஒரு சகாப்தத்தின் முடிவு எனச் சொல்லலாம்.
கொல்கத்தாவில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜோதி பாசு. இவருடைய தந்தை சிறந்த
ஓமியோபதி மருத்துவர். பள்ளிக் கல்வியை செயின்ட் சேவியரிலும் பட்டப் படிப்பைப்
புகழ்பெற்ற கொல்கத்தா ராஜதானிக் கல்லூரியிலும் முடித்த பிறகு பாரிஸ்டர் பட்டப்
படிப்பிற்காக லண்டன் சென்றார். இந்தக் காலகட்டமே அவரது அடுத்த 75 வருட கால அரசியல்,
சித்தாந்த வாழ்க்கையைத் தீர்மானித்தது. அங்கு இந்திய மாணவர்களைத் திரட்டி வி.கே.
கிருஷ்ணமேனன் நடத்திவந்த இந்தியா லீக் என்னும் அமைப்பில் தீவிரமாகப் பங்குகொண்டார்.
அவரது அரசியல் வாழ்வின் தொடக்கம் இதுதான். பின்னர் பிரிட்டன் கம்யூனிஸ்டு கட்சியைச்
சேர்ந்த ஹாரி போலிட், ரஜினி பாமி தத், பென் பிராட்லே ஆகிய தலைவர்களுடன் ஏற்பட்ட
தொடர்பால் கம்யூனிஸ்டாக மாறினார்.
1940இல் இந்தியா திரும்பிய பாசு தொழிற்சங்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக
ஈடுபடுத்திக்கொண்டார். 1946இல் ரயில்வே தொழிலாளர்கள் தொகுதியிலிருந்து
முதன்முறையாக மேற்கு வங்க சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம்
அடைந்ததிலிருந்து 1996வரை அனைத்துச் சட்டசபைத் தேர்தல்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட
அவர் 1967இல் ஐக்கிய முன்னணி அரசில் துணை முதல்வரானார். 1977இல் இடது முன்னணி அரசு
ஆட்சியமைத்தபோது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000இல் தனது உடல்நிலை
காரணமாகப் பதவி விலகும்வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின்
முதல்வராக இருந்தார். அவரது ஆட்சியை மதிப்பிடுவது என்பது அவரவர் சித்தாந்த
நிலைப்பாட்டை பொறுத்தது. ஆனால் இரண்டு விஷயங்களை அவருடைய எதிரிகளால்கூட மறுக்க
முடியாது. ஒன்று நாட்டில் அமலான மொத்த நிலச் சீர்திருத்தத்தில் 22% மேற்கு
வங்கத்தில், அவரது ஆட்சியால் அமல்படுத்தப்பட்டது. நாட்டில் நிலச் சீர்திருத்தத்தால்
பலனடைந்தவர்களில் 54.6% பேர் மேற்கு வங்க விவசாயிகள். இதன் மூலம் விவசாய உற்பத்தி
அதிகரித்தது. கிராமப்புற வறுமை பெருமளவு குறைக்கப்பட்டது. இரண்டாவது, மூன்றடுக்குப்
பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்திப் பஞ்சாயத்துத் தேர்தல்களைத் தொடர்ந்து
நடத்தியதன் மூலம் ஜனநாயக நடைமுறைகளுக்கு அம்மாநிலத்தில் வலுவூட்டியது.
பாசுவின் ஆட்சியின் மிகப் பெரும் குறையாக அவரது எதிரிகளால் சுட்டப்படுவது
தொழில்மயமாக்கத்தில் சிறப்பாக இருந்த மேற்கு வங்கம் அவரது ஆட்சியில் மிகவும்
பின்தங்கிவிட்டது என்பது. இந்தக் குறையை அவரே நன்கு உணர்ந்திருந்தார் என்பதை
1990களின் பிற்பகுதியில் தேசிய, சர்வதேச முதலீடுகளை மேற்கு வங்கத்திற்குக்
கொண்டுவர அவரது அரசு எடுத்த முயற்சிகளிலிருந்து அறியலாம். புரட்சிகர மாற்றங் களைக்
கொண்டுவரப் போராடும் கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ அமைப்பிற்கு உட்பட்ட ஒரு மாநில
ஆட்சியை நடத்துவதன் மூலம் சந்திக்க நேரிடும் முரண்களையும் பிரச்சினைகளையும் பாசுவின்
ஆட்சியில் காணலாம். தொழில்துறை முதலீடுகளில் மத்திய அரசின்
புறக்கணிப்புகளுக்குள்ளான நிலையில் வலுவான தொழிற்சங்க நடவடிக்கைகளின் காரணமாகப்
பெருமுதலாளிகளின் முதலீடும் மேற்கு வங்கத்திற்குக் கிட்டவில்லை. ஆங்கிலத்தில்
சிறீமீயீt stவீநீளீ ஜீஷீsவீtவீஷீஸீ என்பார்கள். ஆட்சிக்கு வந்திராவிட்டால் நிலச்
சீர்திருத்தத்தை அமல்படுத்தியிருக்க முடியாது. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களது
தொழிற்சங்க நடவடிக்கைகளால் தொழில் முதலீடுகளைக் கவர முடியவில்லை.
சிங்கூர் மற்றும் நந்திகிராம் விவகாரங்களைப் புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூட்டணிக்
கட்சிகளைக் கூடக் கலந்தாலோசிக்காமல், கையாண்ட விதத்தைப் பாசு வெளிப்படையாகவே
கண்டித்தார். இது அவரது கட்சித் தலைவர்களையே சங்கடத்தில் ஆழ்த்தியது. சிங்கூர்,
நந்திகிராம் மக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே தொழில்மயமாக்கல் திட்டங்களைக்
கொண்டுவந்திருக்க வேண்டும் என்பதே பாசுவின் நிலை. பாசு ஏன் மிக வெற்றிகரமான மக்கள்
தலைவராக இறுதிவரை நீடித்தார் என்பதற்கு இந்த அணுகுமுறையே காரணம். காவிரி மற்றும்
முல்லைப் பெரியாறு விவகாரங்களை சுமூகமாகத் தீர்ப்பதில் நாம் எதிர்நோக்கும்
சிக்கல்களைப் பார்க்கும்போது இந்தியா-வங்கதேசம் நதி நீர் ஒப்பந்தத்தைச்
சாத்தியமாக்கியதில் பாசுவின் சாதனை விளங்கும்.
1996இல் அவர் பிரதமராவதற்கு வந்த வாய்ப்பு, கட்சியின் முடிவால் தவறிப் போனது.
கட்சியின் முடிவை மறுக்காது ஏற்றபோதிலும் பின்னர் சில சந்தர்ப்பங்களில் இதை
வரலாற்றுத் தவறு என்று வர்ணித்தார். கட்சியின் முடிவை அவரால் கடைசிவரை ஜீரணிக்கவே
முடியவில்லை என்பதையே இது காட்டியது. பாசுவின் புரிதல் தவறாகப் போன சில
சந்தர்ப்பங்களுள் இதுவும் ஒன்று. பத்து சதவிகித நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூடத் தன்
கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவாக இல்லாத சூழலில் பிரதமர் பதவியேற்பதன் மூலம் எதையும்
சாதித்திருக்க முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய அரசியல் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அது ஒரு
சமூக ஜனநாயகக் கட்சியாக மாறிவருவதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றம், சட்டசபைக்கு
வெளியேயான மக்கள் போராட்டங்களில் அதிகக் கவனம் குவிப்பதன் மூலமே அக்கட்சி தனது
முந்தைய, சீரிய நிலைக்கு மீள இயலும். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை பாசுவின் மரணம்
அக்கட்சிக்கு இதைவிட மோசமான தருணத்தில் நிகழ்ந்திருக்க முடியாது. ஆனால் பாசுவின்
அரசியல் வாழ்விலிருந்து கட்சியும் அதன் மேற்கு வங்கக் கிளையும் கற்றுக்கொள்ள
நிறையவே பாடங்கள் இருக்கின்றன. றீ
|