Google   www kalachuvadu.com

புத்தாயிரத்தின் இலக்கியம்
புதிய தலைமுறை, புதிய அடையாளம்
பொறுப்பாசிரியர்

தமிழ் நவீன இலக்கியத்தைச் செம்மைப்படுத்தி வளர்த்தெடுத்ததில் விமர்சனத் துறைக்குப் பெரும் பங்கு உண்டு. நம் பன் முகத்தன்மையின் மறுபக்கம் அநீதியும் சுரண்டலும். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான நவீன இலக்கியம் இந்த மறுபக்கம் குறித்த புரிதல்களைக்கொண்டிருந்தது என்பதற்குச் சொற்பமான உதாரணங்களே இருக்கின்றன. படைப்பிலக்கியம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் பெரும்பகுதி மேற்குறிப்பிட்ட மறுபக்கம் சார்ந்தவையே. இலக்கிய விமர்சனம் என்பது சாராம்சத்தில் சமூக விமர்சனமாகவே இருந்து வந்திருப்பதைக் கடந்த சில பத்தாண்டுகளின் இலக்கிய விமர்சனப் போக்கைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அறிவர். தமிழ் நவீன இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய சிற்றிதழ் இயக்கங்கள் இந்த விமர்சனங்களுக்கு முக்கியத்துவம்மளித்து வளர்த்தெடுத்து வந்திருக்கின்றன. பல தருணங்களில் விமர்சனம் ஒரு காலகட்டத்தின் படைப்பிலக்கியம் சார்ந்த அடையாளங்களை மாற்றியிருப்பதற்கும் சான்றுகள் உண்டு.

1980களுக்குப் பிறகு அறிமுகமான தலித்தியமும் பெண்ணியமும் அவற்றையொட்டி உருவான தமிழ் பின்நவீனத்துவக் கோட்பாடுகளும் தமிழ் நவீன இலக்கியத்தின் அடையாளங்களை முற்றாக மாற்றியமைத்திருக்கின்றன. இலக்கிய விமர்சனத்துக்கும் சமூக விமர்சனத்துக்கும் இடையேயான கோடு இப்போது அழிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியம் சார்ந்து கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களின் புனிதம் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழ்ப் படைப்பிலக்கியம் பொருட்படுத்தாத தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகள் அறிவுலகக் கவனம் பெறுவதற்கு இந்தத் தகர்ப்பு இன்றியமையாத முன்தேவையாக இருந்தது. இடிபாடுகளிலிருந்து மேலெழுந்து வந்த ஒரு புதிய தலைமுறை இலக்கியச் செயல்பாட்டுக்கு முற்றிலும் புதிய அர்த்தங்களை அளிக்க முற்பட்டிருக்கிறது. தமக்கு முந்தைய தலைமுறை இலக்கியச் செயல்பாட்டாளர்களிடமிருந்து திட்டவட்டமாக வேறுபட்டிருக்கும் இந்தப் புதிய தலைமுறை எழுப்பியுள்ள கேள்விகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களைத் தேக்கம் என வர்ணிக்கும் விமர்சகர்கள் உண்டு.

எனினும் தமிழ் நவீன இலக்கியம் முன்னெப்போதையும்விட அதிக முனைப்புடன் தனக்குரிய இடத்தை விரிவுபடுத்தியபடி செயலாற்றத் தொடங்கியிருப்பதற்குப் புத்தாயிரமாண்டின் முதல் பத்தாண்டு இலக்கியப் போக்குகள் சாட்சியமாக இருக்கின்றன. அவற்றின் மீதான பரிசீலனையின் தொடக்கமாக இப்பகுதியில் இடம்பெற்றுள்ள விமர்சனக் குறிப்புகளை முன்வைக்கிறோம். தொடர்ந்த உரையாடல்கள் மூலம் இவற்றை விரிந்த தளத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு படைப்பிலக்கியத்தின் மீதும் தமிழ் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

உள்ளடக்கம்