Google   www kalachuvadu.com

எதிர்வினை

கலாச்சாரப் பரிமாற்றம் என்பது என்ன?

சமூகவியலும் சமுதாயமும் கட்டுரை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா கொடுத்துள்ள பதில் தொடர்பாகச் சில விளக்கங்கள்:

1. ‘சமூகவியலும் சமுதாயமும்’ கட்டுரையின் பொதுவான கருத்தியல் ஒன்றுதான். அதாவது ஐரோப்பியச் சிந்தனையை மறுப்பது அல்லது ஒதுக்குவது என்று புரிந்துகொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஐரோப்பியச் சிந்தனையை மட்டும் பிடித்துக்கொள்ளாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க, மற்றும் ஆசிய சிந்தனைகளிலும் கவனம் செலுத்தலாம் எனத் தெளிவாக அந்தக் கட்டுரை சொல்கிறது. மேலும் ஐரோப்பியச் சிந்தனை ‘அவசரமாக’ நிராகரிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் மார்க்ஸ், லெவி ஸ்ட்றோஸ், சாத்ரு, பூத்திரிலா ஆகிய சில ஐரோப்பியச் சிந்தனையாளர்களைப் பற்றிதான் அதிகபட்சக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நமது சமூக அறிவியல் பாடத்திட்டமோ 50 வருடங்களாக இதையேதான் படிப்பிக்கிறது. இப்படியிருக்க அவசரமாவது! சமத்துவம், மானுடம் போன்ற கருத்துகளைப் பகர்ந்த ஐரோப்பியச் சிந்தனையின் வரலாற்றுப் பின்புலத்தையும் கவனத்தில் கொண்டால்தான் சிந்தனை முறையின் முழுப்பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும். பின்னணியைப் பார்த்தால் வலிக்கும், குறைதான் தெரியும். அதனால் பார்க்க வேண்டியதில்லை என்ற கூற்றை எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளபடி ஏற்றுக்கொள்ளலாமென பொதுஜனம் சொன்னால் மூடநம்பிக்கை என்று நாம் சொல்லுவோம். ஆய்வுக் கட்டுரையானாலும் பொதுக் கட்டுரையானாலும் விமர்சனமற்ற விரிவுரை பிரச்சினைக்குரியது.

2. பின்னணியைப் பார்ப்பதும் விமர்சிப்பதும் ‘காலனியக் கையாலாகாத்தனம்’ என்று மூன்றாம் தர வெள்ளைக்காரர்களும் மேலாண்மைத் துறையினரும் முன்வைக்கும் கருத்தை நாமும் கிளிப்பிள்ளைபோல் சொல்வது வருத்தத்திற்குரியது. பல நூற்றாண்டுகளாகக் காலனிய ஆட்சியில் சிக்கியிருந்த சமூகங்கள் சுதாரித்துக்கொள்ளப்பட்டு வரும் இன்னல்கள் ஐரோப்பிய நாடுகள் கண்டிராதவை. புலப்பெயர்ச்சி, இனக்கலவரம், தீவிரவாதம் என்று தேசக்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளை முதலாம் உலக ஆயுத உற்பத்தியாளர்களின் ஏகாதிபத்தியம் மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு நடுவில் சமாளித்து, பொருளாதார நிலையையும் உயர்த்த வேண்டிய நிலை மிகவும் கஷ்டமானது தான். 300 ஆண்டுகளாக ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களில் நடந்த மாற்றங்களில் வல்லரசு தலையீடோ ஏகாதிபத்தியமோ இல்லை. பிறநாட்டு வளங்களைத் தம் தேவைக்கேற்றப்படி சூறையாடி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடிந்தது. இது போன்ற முன்னேற்றத்தை ஒரு நூற்றாண்டுக்குள் மூன்றாம் உலக நாடுகள் காட்டவில்லை என்ற கூற்று வரலாற்று-சமூகப் பிரக்ஞையற்றது. இங்குக் குறைபாடுகள் இல்லாமல் இல்லை; ஆனால் நாகரிகப் பெயர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் இவை சமூக மாற்றத்தின் தற்காலப் பிரச்சினையாகப் பார்க்கலாம். தீர்க்க ஆவன செய்யலாம். இந்நிலையை ஒரு நாகரிகத்தின் குறைபாடாகக் கருத முடியாது. கி.பி 1இலிருந்து15 ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பா அடிமைச் சமுதாய அமைப்புடையதாய், அறிவியலிலோ தத்துவத்திலோ எந்த வளர்ச்சியுமில்லதாய்த்தான் இருந்தது பிறகு தானே மாறியது?

3. மூன்றாம் உலகச் சிந்தனையாளர்கள் பெயர் குறிப்பிடவில்லை எனக் கூறியிருப்பதிலிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை என்று தெரி கிறது. சான்றுக்கு ஒரிரண்டு பெயர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளது; இன்னும் பெயர்கள் உள்ளன. லெவி ஸ்ட்றோஸ், சாத்ரு போன்ற சிந்தனையாளர்களைத் தாமாகக் கண்டெடுத்து விரித்துரைப்பது போல மூன்றாம் உலகச் சிந்தனையாளர்களையும் கண்டெடுத்து விரித்துரைக்கலாம் என்பதே கட்டுரையின் சாரம். லெவி ஸ்ட்றோஸ் கருத்தியல் போலவே மூன்றாம் உலகச் சிந்தனையிருக்குமா போன்ற கேள்விகளில் உள்ள பிரச்சினையைத்தான் கட்டுரையின் பின்பாதி விளக்கியது.

அவர்களைப் போல் நாம் ஏன் இல்லை என்ற கேள்வி எழுவதன் காரணமே அவர்கள் தம்மை மையமாகக்கொண்டு எழுதும் இரட்டைப் பாகுபாடுகளை நாம் மனனம் செய்து உள்வாங்கிக்கொண்டிருப்பதுதான். அவர்கள் தம்மை மையமாகக் கொண்டு எழுதுவதில் தவறில்லை. ஆனால் அதை உலகத்திற்குப் பொதுவான அனுபவமாக அவர்கள் பேசுவதும் இங்குள்ளவர்கள் அந்த வறையறைப்படி தம்மையே உணர்வதும்தான் பிரச்சினை. கலாச்சாரப் பரிமாற்றம் என்பது என்ன? சான்றாக, புத்த மதம் பரவியதை எடுத்துக்கொள்வோம். சீன மற்றும் கிழக்காசியப் புத்த பிட்சுக்கள் இந்தியாவில் வந்திருந்து பௌத்தத்துவங்களைப் படித்தனர். பின்னர் தமது தேடல்கள், பிரதேச வழக்கங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொண்டனர். சீன மருத்துவமும் சித்த மருத்துவமும் தத்தமது சித்தாந்தங்களுக்கேற்றவாறுதான் சிகிச்சை முறைகளைப் பரிமாறிக்கொண்டன. கிரேக்க அறிவியல்கள் மத்தியக் கிழக்குப் பிரதேசங்களில் வளர்ந்ததும் இப்படியே. கலாச்சாரப் பரிமாற்றம் என்பது அவரவர் போக்கு, தேவைக்களுக்கேற்ப விமர்சனக் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்வதேயன்றி உள்ளபடி இறக்குமதி செய்வதல்ல.

5. லெவி ஸ்ட்றோஸ் பற்றிய கட்டுரை பிரெஞ்சு மூல நூல்களின் அடிப்படையில் ஆங்கில உரைகளில் காணாத அரியக் கருத்துகளைத் தந்தது, படித்து அறியச் சுவையாக இருந்தது. மேற்கத்தியச் சிந்தனைகளிலுள்ள சிறப்புகளை யாரும் மறுக்கவில்லை. ஐரோப்பியர்களைவிடவும் அவர்கள் கூற்றிலுள்ள நியாயத்தைச் சிறப்பாக விளக்கும் எழுத்தாளர்களைப் படித்து ரசித்தவர்கள் அதை மறுக்கவும் முடியாது. நமது எழுத்தாளர்களின் சீரிய திறன்களால் மூன்றாம் உலகச் சிந்தனைகளும் பயன் பெற வேண்டுமென்பது நோக்கமேயன்றி லெவி ஸ்ட்றோஸ் அல்லது அவரை விரித்துரைத்த கட்டுரையாளர் குறித்த தனிப்பட்ட விமர்சனம் இது அல்ல.

வி. சுஜாதா
ஜெ.என்.யூ, புது தில்லி

உள்ளடக்கம்