Google   www kalachuvadu.com

பதிவுகள்: “பிணிக்கு வேண்டும்”, சென்னை
ஒரு நாடகம் இரு நடிகர்கள் சில கதாபாத்திரங்கள்
அருண்மொழி

குழந்தைகளின் பிரச்சினையை மையமாக வைத்து, அதுவும் பள்ளி செல்ல மறுக்கும் சிறுவன் ஒருவனைச் சுற்றிச் சுழலும் ‘பிணிக்கு வேண்டும்’ எனும் தமிழ்நாடகம் ஒன்றை மூன்றாம் அரங்கின் துணையுடன் இலங்கையின் மேக்ஸ் முல்லர் பவன் நிதியுதவியுடன் நாடக இயக்குநர் தயாளனுடன் இணைந்து கருணா பிரசாத் பல்வேறு இடங்களில் நிகழ்த்திக்காட்டியுள்ளார். இலங்கையிலுள்ள நவீன நாடகக் குழு Inter Act Art நௌரலியா பகுதியைச் சேர்ந்த எட்டு இளைஞர்களை ஒன்று கூட்டிச் சில ஆண்டுகளாக நிகழ்த்திவரும் நாடகங்களில் ஒன்று இந்நாடகம். இது சென்னையிலுள்ள பத்துப் பள்ளிகளில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

“பிணிக்கு வேண்டும்” கதையின் கருவை, உள்ளடக்கத்தைப் பகுத்தாய்ந்தால் அது சற்று மனவளர்ச்சி குன்றிய பிணி என்ற சிறுவனைப் பற்றி கதைக்கிறது. பிணியைக் குறித்துப் பள்ளிக்கூட மேலாளர், ஆசிரியர் எத்தகைய பார்வையைக் கொண்டுள்ளனர் என்பதுவும், அவன் எண்களைப் பற்றி என்ன மாதிரியான எண்ணங்களைக் கொண்டுள்ளான் என்பனவும் காட்சிகள், வசனங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. பிணியின் தந்தை தன் மகனைப் பற்றி புரிந்துவைத்துள்ளவை, பிணியின் தாயின் இறப்பு பற்றியான சித்தரிப்புகள், பிணி பள்ளிக்குச் செல்வதை அறவே வெறுத்து வருவதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. தந்தை வெளியில் சென்றால் இறந்துவிடக் கூடும் என பிணி, தான் கண்ட கனவை விளக்குகிறான். கற்பனா சக்தியும் நாடக உத்திகளும் இணைந்து பிணியின் மனநிலை பற்றிய ஆழமான புரிதலில் பார்வையாளர்களை இருத்துகிறது இக்காட்சி.

இலங்கையிலுள்ள இனப் பிரச்சினையை, போர்க் காலத்தை, அதன் பின்னான காலகட்டத்தை நாடகம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை எனச் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். இருப்பினும் இக்கதையின் கருவில் அரசியல் இல்லாமலில்லை என்று கூறுவோரும் உண்டு. மிஷோல் என்ற ஜெர்மன் நாடக ஆசிரியரின் மூலத்திலிருந்து தமிழுக்கு முழுமையாக மாற்றியமைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டனவென்று இக்குழுவின் சாசி கண்ணப்பத் தம்பிரான் கூறுகிறார். ஜெர்மனியில் கோத்தே இன்ஸ்டிடியூட் மூலம் உதவித் தொகைப் பெற்று Black Box நாடகக் குழுவில் தேர்ச்சிப் பெற்றவரான எம். சஃபீரின் வழிகாட்டலில் தயாளன், நேசராஜ், ஆர். வசந்தன் ஆகியோர் இந்நாடகத்தை சிறப்பாக வழங்கி பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுத் தூண்டலுக்கு வழி வகுத்தனர் என குமார ராணிமுத்தைய்யா பள்ளி ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆவணப்பட இயக்குநர் ஆர்.வி. ரமணி, தனது பள்ளிக்கூட நாட்களை நாடகம் முழுமையாக ஞாபகப்படுத்தியது என்றும் உண்மையிலேயே இந்நாடகத்தின் அடிச்சரடு இன்றைய சமுதாயத்திற்கு மிகத் தேவையான ஒன்றாக அமைந்துள்ளதென்றும் இரண்டே நடிகர்கள் பல கதாபாத்திரங்களை நம் கண்முன் அப்படியே கொண்டுவந்து நிறுத்தியது இதன் மற்றொரு சிறப்பெனவும் கூறினார்.

ஆசிரியராகவும் தந்தையாகவும் நடித்த நேசராஜ், பிணியாகவும், பிணியின் அம்மாவாகவும் நடித்த வசந்தன் இருவரும் நல்ல பயிற்சி பெற்ற நடிகர்கள் என்பது அவர்களது தேர்ந்த உடல் மொழி மூலமாகவும், அவர்கள் மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துகளை அடுத்த நாடக நிகழ்வில் உட்புகுத்தி நடித்ததன் மூலமாகவும் புலப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் எனத் தாங்கள் யாருக்காக நாடகத்தை நடத்துகிறார்களோ அவர்களிடம் நாடகத்தை எடுத்துச்செல்வதில், மிக மிக, எளிமையான முறையில், குறைந்த செலவில் அதை நடத்துவதில் பெருமளவு வெற்றி அடைந்துள்ளார்கள் இந்த Inter Act- Art குழுவினர். “பிணிக்கு வேண்டும்” ஏன் ஈழப்பிரச்சனையை எதையுமே தொட்டுக் காட்டவில்லை? என்ற கேள்விக்கு நாடக இயக்குநர் தயாளன் பதிலளிக்கையில், தாங்கள் எடுத்துக்கொண்ட கரு, சிறுவர்களுக்கும் அதிகாரத்தை அவர்கள்மீது திணிக்கும் பெற்றோர்கள், மாணவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்களுக்குமான சிக்கல்களை மட்டுமே தழுவி, ஜெர்மானிய நாடக ஆசிரியரால் எழுதப்பட்டது; இதிலுள்ள நிறைகுறைகளை நாம் விவாதிக்கலாம்; ஈழப்பிரச்சினையை ஏன் எடுத்துக் கையாளவில்லை எனக் கேட்பது நியாயமானதில்லை என்றார். கூத்துக் கலைஞர் காசி, நமது கலாச்சாரத்தில் இல்லாத சில அம்சங்கள் இந்த நாடகத்தில் தூக்கலாகக் கதைக்கப்பட்டிருக்கிறது - குறிப்பாக, குழந்தைகளை நாம் தனி அறையைக் கொடுத்துத் தூங்கவைப்பது கிடையாது - தந்தைக்கும் மகனுக்குமுள்ள சில உறவின் தன்மை நமக்கு ஒவ்வாததாக இருக்கிறது போன்ற அழுத்தமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

உள்ளடக்கம்