Google   www kalachuvadu.com

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஜூன் 21, சேலம் தமிழ்ச் சங்கம்
“ஆய்வாளன் நடுநிலையாளன் அல்ல”
அ. கார்த்திகேயன்

கடந்த ஜூன் 21, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக் கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டார். வரலாறு, கல்வெட்டு, மெய்யியல், தொல்லியல், பண்பாட்டுத் துறை ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.

தான் எழுத்துத் துறைக்கு வந்தமைக்குக் காரணம் தகப்பனாரின் படிப்பு ஆர்வமும் எழுத்தாளர்களோடு தனக்கு இருந்த தொடர்புமேயாகும் என்றார் அவர். திரைப்படம் பார்ப்பது மிகப் பெரிய பாவம் என்று கருதிய அவருடைய தகப்பனார், ஓய்வு நேரத்தைப் புத்தகம் படிப்பதில் செலவிட்டதாகவும் அப்பழக்கமே தன்னையும் பிடித்துக் கொண்டது என்றும் நெகிழ்வுடன் கூறினார். தான் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த காலகட்டம் திராவிட இயக்கத்தின் எழுச்சி மிகுந்ததாகவும் தமிழாசிரியர்களிடம் தமிழுணர்வு மேலோங்கி இருந்ததாகவும் இன்றைய தமிழாசிரியர்கள் ஊதியத்திற்கான பணியாக மட்டுமே ஆசிரியத் தொழில் பார்ப்பதாகவும் குறைபட்டுக்கொண்டார்.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமீது தனக்குள்ள ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார். அடித்தள மக்கள் பின்பற்றும் சடங்குகள், வழிபாட்டு முறைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் புதிய கண்ணோட்டத்தின் வழியாக நாம் பார்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். சாதியை ஒதுக்கிவைத்துவிட்டு வரலாற்றை ஆராய முடியாது என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

அடித்தள மக்கள் வணங்கும் சிறு தெய்வங்களுக்கு என்று தனித்தனி வரலாறு உண்டு என்று சான்று காட்டிய அவர், இராஜராஜ சோழன் மாத்திரமே அரசன் என்று கொண்டாடப்படத் தேவையில்லை, அடித்தட்டு மக்களுக்காகப் போராடி உழைத்த சாமானியர்களும் அரசர்களே என்று பெருமிதம் கொண்டார்.

தன்னைக் கவர்ந்த முக்கியத் துறையாகக் கிறித்தவம் விளங்குகிறது என்றும் ஒருவேளை தான் பயின்ற கிறித்தவ நிறுவனங்கள், கிறித்தவ சார்பு கொண்டவனாகத் தன்னை மாற்றியிருக்கலாம் என்றும் கூறினார். பலர் சொல்வதைப் போல், அறிஞர் ஜி.யூ. போப் தனது கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்ற வாசகத்தையெல்லாம் எழுதிவைக்கவில்லை என்னும் தகவலைத் தெரியப்படுத்திப் பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கினார். அடித்தள மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறிய காரணம் குறித்து அவர் நுணுக்கமான செய்திகளைக் கூறியபோது அவருடைய ஆய்வுத்திறனையும் ஆழமான வாசிப்பின் வெளிப்பாட்டையும் பார்வையாளர் நன்கு அறிந்துகொண்டனர்.

எந்த ஆய்வுத் துறையும் தனித்து இயங்க முடியாது எனத் தொடர்ந்த அவர், ஆய்வாளன் என்பவன் நடுநிலைமை கொண்டவனாக இருக்கச் சாத்தியமில்லை என்பதோடு ஆய்வாளன் சார்பு உள்ளவனாகத்தான் இருக்க முடியுமென்று அறுதியிட்டுக் கூறினார். தானும் ஒரு சார்புநிலை கொண்ட ஆய்வாளன்தான் என்றும் மார்க்சியம் கலந்த சார்புநிலைத் தன்மை தனக்கு உண்டு என்றும், அந்த அடிப் படையில்தான் தன்னுடைய ஆய்வு நூல்கள் வடிவமைக்கப்படுகின்றன என்றும் தெளிவுபடுத்தினார்.

தம்முடைய ஆய்வுப் பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் செல்வதாகவும் தான் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என்றும் அதற்குக் காரணம் தம்முடைய முன்னோடிகள் எளிமையான வாழ்க்கையைக் கைக்கொண்டு சிறந்த சாதனையைச் செய்து இயங்கியமையே என்று தீர்க்கமாகச் சொன்னார். தனது ஆய்வுப் போக்கு மண்ணையும் மக்களையும் சார்ந்தே அமைவதாகவும் அதில் தனக்கு வெற்றியா தோல்வியா என்பதை வாசகன்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் முத்தாய்ப்பாகக் கூறினார்.

பிறகு பார்வையாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதுகாறும் பொதுப்புத்தியில் உறைந்து புரையோடிப்போன சிந்தனைகளைத் தகர்த்து எறியும்படியான பதிலுரையாக அவை அமைந்தன. உதாரணமாக, தமிழ் இனத்தின் பொதுப்பண்பு யாது என்றதொரு வினாவுக்குத் தமிழன் என்பவனுக்கும் தமிழ் இனத்துக்கும் அடையாளம் என்ற வகையில் எந்த வடிவமும் உருவாக்கப்படவில்லை என்றார். சோடாப் பாட்டிலை உடைத்தால் வெளியேறும் வாயு கலந்த நீரூற்றைப் போல, மிதமிஞ்சிய கருத்தாக்கங்களும் மிகையான சொல்லாடல்களுமே தமிழனுக்குரிய பலவீனம் என்பதையும் வருத்தமுடன் குறிப்பிட்டார். ஆய்வு முறை குறித்து ஒரு பார்வையாளரின் கேள்விக்கு ஆய்வு என்பது தலைப்புக்காகவா தேடலுக்காகவா என்பதை ஓர் ஆய்வாளன் முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர்கள் படிக்கும் பழக்கத்தை விடாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ், தமிழியம், தமிழினம் குறித்துப் பார்வையாளர் ஒருவரின் சந்தேகத்திற்கு அவற்றை மக்கள் இப்போது குறுகிய நோக்கில் பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் அதற்குக் காரணம் அந்தச் சிந்தனைகள் குறித்துப் பேசுகிறவர்களின் அதிகப்படியான எழுச்சியும் உணர்ச்சிப் போக்குமேயாகும் என்றார். தற்கால அரசியல் பற்றிய பார்வையாளரின் ஒருவரின் கேள்விக்கு, தற்போதைய அரசியல் திரைப்படம் சார்ந்து இயங்குகிறது; உருவாகிறது என்றும் அதனாலேயே அது மலினப்பட்டுப்போய்விட்டது என்றும் எடுத்துரைத்தார். தவிர ஈழ விடுதலை, பல்கலைக்கழக ஆய்வு முயற்சிகள், தற்போதைய சமூகச் சூழல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்துக் காய்தல், உவத்தல் இன்றி உள்ளது உள்ளபடி காட்டும் நிலைக்கண்ணாடிபோல் ஆ.சிவசுப்பிரமணியனின் பேச்சு அமைந்ததோடு, பார்வையாளருக்கு நுட்பமான கருத்துகள் அறிய சிறந்த வாயிலாக இக்கூட்டம் திகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

உள்ளடக்கம்