|
நாகர்கோயிலில் உள்ள ‘நெய்தல்’ இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும்
வழங்கப்பட்டு வரும் ‘இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது’ இந்த ஆண்டு
எழுத்தாளர் எஸ். செந்தில் குமாருக்கு வழங்கப்பட்டது.
எஸ். செந்தில் குமார் சிறுகதைகள், கவிதைகள் மூலம் 1999இல் தமிழ் இலக்கியத்துக்கு
அறிமுகமானவர். ‘வெயில் உலர்த்திய வீடு’, ‘சித்திரப் புலி’ ஆகிய சிறுகதைத்
தொகுப்புகளும் ‘சமீபத்திய காதலி’ என்னும் கவிதைத் தொகுப்பும் ‘ஜி.
சௌந்திரராஜனின் கதை’ என்னும் நாவலும் புத்தகமாக வந்துள்ள இவரது படைப்புகள்.
‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, ‘உயிரெழுத்து’, ‘வனம்’, ‘புது எழுத்து’ முதலான இதழ்களில்
தொடர்ந்து எழுதிவரும் எஸ். செந்தில்குமார் சுந்தர ராமசாமியின் பெயரிலமைந்த
இவ்விருதை பெறுவதற்கு மிகவும் தகுதியான இளம் படைப்பாளி என்பதில் சந்தேகமிருக்க
முடியாது. 10,000 ரூபாய் பரிசுத் தொகையும் நினைவுப் பரிசும் உள்ளடக்கிய இவ்விருது
வழங்கும் நிகழ்வு கடந்த 31.10.2009 அன்று நாகர்கோயிலில் உள்ள ரோட்டரி சங்க
கம்யூனிட்டி ஹாலில் மாலை 6:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. விருது குறித்து
தேர்வுக் குழுவின் சார்பாக எழுத்தாளர் அரவிந்தன் வாசித்த அறிக்கையுடன் தொடங்கிய
விழாவில் சுந்தர ராமசாமியின் துணைவியார் கமலா ராமசாமி செந்தில்குமாருக்கு விருது
வழங்கி விருதுக் குழுவினரையும் பாராட்டினார்.
காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதி செந்தில்குமாரையும் அவரது படைப்புகளையும்
அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார்.
கவிஞர் சுகுமாரன் செந்தில்குமாரின் ‘ஜி. சௌந்திரராஜனின் கதை’ நாவல் குறித்தும்
அவரது படைப்புப் பார்வையின் நுட்பம் குறித்தும் சில கருத்துகளைப்
பகிர்ந்துகொண்டார். விருது பெற்ற செந்தில்குமார் தன் மகிழ்ச்சியைப்
பகிர்ந்துகொண்டு ஏற்புரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
‘நெய்தல்’ அமைப்பின் சார்பாகக் கிருஷ்ணன் நன்றி கூறினார். பங்கேற்பாளர்களுக்கு
நெய்தல் அமைப்பின் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜி.எஸ். தயாளன் நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கினார். ‘காலச்சுவடு’ ஆசிரியர்
கண்ணன், எழுத்தாளர்கள் அ.கா. பெருமாள், எம்.எஸ்., ஜே.ஆர்.வி. எட்வர்ட், கவிஞர்
என்.டி. ராஜ்குமார், காலச்சுவடு அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில்
கலந்துகொண்டனர்.
- ஷாலினி
நான் இதுவரை கூட்டங்களில் பேசியதில்லை. முதலில் பேசுவது சுராவின் நினைவு நாள்
கூட்டத்தில் என்பது வருத்தத்தை அளித்தாலும், அவர் நினைவாக விருது வழங்கும்
நிகழ்ச்சி என்பதில் மகிழ்ச்சியும் உண்டு.
நெய்தல் கிருஷ்ணன், சுராவைப் பார்த்து பேசுவதற்காக எங்கள் வீட்டிற்குள் வந்தவர்,
அவர் மனத்திற்குள்ளும் நுழைந்து முக்கியமான இடத்தில் அமர்ந்துவிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ‘சுராவிருது’ வழங்கும் நிகழ்ச்சியை பாவண்ணன், சுகுமாரன்,
அரவிந்தன் போன்ற நண்பர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக
நடத்திக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவார் என்பதற்கான
சூசகமும் தெரிகிறது.
நண்பர்கள் அரவிந்தன், சுகுமாரன், பாவண்ணன் மூவரும் சுராவின் ஆத்மார்த்தமான
அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்கள். அவர்கள்தான் நடுவர்கள் என்பதில்
எனக்கு மகிழ்ச்சியே. அந்த மூவரின் ஒருமித்த முடிவால் தேர்வு செய்யப்பட்ட
செந்தில்குமார் அவர்களுக்கு ‘சுராவிருது’ வழங்குவதில் பெரு மகிழ்ச்சிகொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
விருது வழங்கும் விழாவில்
கமலா ராமசாமி
தமிழில் தரமான படைப்பாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இன்றும் பல மூத்த,
இளம் எழுத்தாளர்கள் தங்களுக்கே உரிய அடையாளங்களுடனும் வீரியத்துடனும் படைப்புச்
செயல்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். அங்கீகாரம் இல்லை என்ற நிலை மாறி உடனடி
அங்கீகாரங்கள்கூடக் கிடைக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது.
இந்நிலையில் இளம் படைப்பாளியைத் தேர்ந்தெடுக்கும் பணி சவால் நிறைந்ததாகவே
இருந்துவருகிறது. நெய்தல் அமைப்பை நிறுவி அதைத் தனக்கே உரிய உற்சாகத் துடிப்புடன்
நடத்துவரும் நெய்தல் கிருஷ்ணன் பல்வேறு படைப்பாளிகளுடன் கொண்டுள்ள ஆரோக்கியமான
நட்புறவு இந்தச் சவாலை எளிதாக்கப் பெரிதும் உதவி வருகிறது. அவரது பெரிய
சட்டைப்பைக்குள் ஒளிந்திருக்கும் சின்னஞ்சிறு தொலைத் தொடர்புக் கருவியின் மூலம்
இலக்கிய உறவுகளைப் பேணி இலக்கியச் செயல்பாட்டை விஸ்தரித்துக்கொண்டு செல்லும்
கிருஷ்ணனின் ஆளுமை இந்த விருது வழங்கும் பணியின் சுமையைப் பெருமளவு
குறைத்துவிடுகிறது என்று சொல்வதில் சற்றும் மிகையில்லை.
கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றின் வழியே முன்வைக்கப்பட்ட
பரிந்துரை களில் கீழ்க்காணும் படைப்பாளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன:
சுகிர்தராணி, கீரனூர் ஜாகீர் ராஜா, ஷோபா சக்தி, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி,
செந்தில்குமார், யா. சாம்ராஜ், ஜே.பி. சாணக்யா, ஹரிகிருஷ்ணன், சங்கர
ராமசுப்பிரமணியன்.
பரிந்துரைகளின் எண்ணிக்கை, வயது வரம்பு, தொடர்ந்து இயங்கிவரும் போக்கு,
பங்களிப்பின் வீச்சும் வலுவும், தேர்வுக் குழுவினரின் பார்வைகள் முதலான சில
அளவுகோல்களின் அடிப்படையில் இந்தப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் பரிசீலிக்கப்பட்டன.
தேர்வுக் குழுவினர், நெய்தல் அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணன் மற்றும் இதர
படைப்பாளிகள் சிலர் ஆகியோரிடையே நடைபெற்ற கலந்தாலோசனையின் அடிப்படையில் இந்த
ஆண்டு
எஸ். செந்தில்குமாருக்கு விருது வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.
அரவிந்தன் வாசித்தளித்த தேர்வுக் குழுவின் அறிக்கையிலிருந்து |