|
வழமையாகச் செல்லும் பாதைதான் என்னும் நினைப்பில் நடந்துகொண்டிருக் கையில்,
எதிர்பார்ப்பிற்கு மாறாகப் புதிய காட்சிகளை நாம் காண நேர்கையில் மனம் வியப்பால்
விரிந்துகொள்கிறது. அப்புதியவை எதுவாகவும் இருக்கலாம். ஆற்றங்கரையாக, அடர்வனமாக
அல்லது அந்நிய முகங்கள் நிறைந்த வாழ்விடங்களினூடாகக் கடந்துசெல்லும், பார்வையெங்கும்
படர்ந்திருக்கும் மணல்வெளியாகக்கூட இருக்கலாம். மனம் விரிகிறது அல்லது ஏற்கனவே
பார்த்தவை, கடந்து சென்றவைகூட, புதிய அர்த்தச் செறிவுடன் நம்முன்
கையசைத்துக்கொண்டிருக்கும். மனிதக் காலடி படாத அடர்வனங்களிடையே மலர்ந்திருக்கும்
மலர்கள், புல்வெளியில் மஞ்சள் பொட்டாய்ப் பூத்திருக்கும் ஒற்றை மலர் இனம்புரியாச்
சோகத்தை நம்முள் எழுப்பிவிடலாம். அறிமுகமற்ற குடியிருப்புகளினூடான நமது
கடந்துசெல்லல், பாதுகாப்பின்மை, கண்ணுக்குத் தெரியாதவகையில் செறிந்திருக்கும்
வெறுப்பு கலந்த காற்றின் ஸ்பரிசம் திகிலை ஏற்படுத்தலாம். இவையெல்லாம் பொதுத்தன்மை
வாய்ந்தவை அல்ல. அவரவர்களுக்கான தனித்தன்மை கொண்டவை. அவை அவரவர்களுக்கான அக
உலகங்களில் ஏற்படும் உணர்வின் உரசல்கள்.
|
அ/மனிதன்
(சிறுகதைகள்)

ஆசிரியர்:
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
பக்.: 64 விலை: ரூ. 50/-
முதற்பதிப்பு: 2008
வெளியீடு:
காலச்சுவடு
669, கே.பி. சாலை
நாகர்கோவில் - 629 001 |
சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின்
அ/சாதாரண மனிதன் என்னும் மெலிந்த சிறுகதைத் தொகுப்பைப் படித்தவுடன்
மேற்குறிப்பிட்ட எண்ணங்கள்தாம் என்னுள் அலைந்தன. 80களில் எழுதப்பட்ட இச்சிறுகதைகள்,
அன்றைய காலகட்டத்தில் அசோகமித்திரனுக்கு விசேடமானவையாகவும் ஒரு புதிய உலகத்தை
வெளிக்காட்டுவனவாகவும் அமைந்திருந்தன. இன்று, 2009இல் படிக்கும் எனக்கு இவை பழகிய
பின்புலங்களாயிருந்த போதிலும் புதிய ஒளியுடன் விசேடத் தன்மை கொண்டவையாகவே
தென்படுகின்றன. ஆக, கடந்த 29 வருடங்களாக இதன் விசேடத்தன்மை நிலைத்திருக்கிறது
என்றுதான் கொள்ள வேண்டும்.
‘எனக்குப் புதிதான நாட்டில் நான் கண்டதையும் காண விரும்பியதையும் கண்டும் காணாமல்
இருந்ததையும் சொல்லியிருக்கிறேன்’ என்கிறார் ஆசிரியர். இதில் கண்டும் காணாமல்
இருந்ததை எவ்வாறு படைப்பாக்க முடியுமென்று எனக்குப் புரியவில்லை. அசட்டையாக
இருக்கும் மனம் படைப்பின் செறிவுகளை உள்வாங்குவதில்லை. படைப்பு மனம் புற, அகவுலக
அதிர்வுகளைக் கவனமாக உறிஞ்சி உறையவைத்து அல்லது அடைகாத்துத் தானாக வெளித்தள்ளுவது.
80களில் மாகிரட் தச்சரின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டவர்கள் எதிர் கொண்ட
நிறத்துவேசம் அதனடியான வெள்ளையரல்லாதவர்மீதான வெறுப்பு, போக்லான்ட் தீவு யாருக்குச்
சொந்தம் என்று எழுந்த சர்ச்சையிலான இங்கிலாந்து, ஆஜன்ரீனா யுத்தம், கலப்புத்
திருமணங்கள் மூலம் அந்திக் காலத்தில் அடையாளங்களை இழந்து அவதியுறும் மனங்கள் ஆகியவை
இவரது முக்கியப் படைப்புகளின் பின்னணி. இந்தப் பின்னணியில் இயந்திர உதிரிப்பாகங்கள்
விற்றுப் பின்னர் பெரிய மோட்டார் கொம்பனிக்கு அதிபராக உயர்ந்து, ஆஜன்ரீனாவில்
முதலீடு செய்து, போக்லான்ட் யுத்தத்தின்பின் நொந்து நூலாகிய டேவிட் மரே.
ஆப்பிரிக்க நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் துணைவேந்தராயிருந்து, ஆப்பிரிக்கப்
பழமொழிகளை ஆராயும் மைக்கல் பார்கின்ஸின் தவறவிடப்பட்ட கைப்பையால் எழும்
நிறம்சார்ந்த முன் முடிவுகள். தமிழச்சியாகப் பிறந்த மாதவி தன்னை மிஸஸ் ஸ்ருவாட்டாக
மாற்றிக் கொண்டபின், ஆங்கிலக் கலாச்சாரத்துள் மூழ்கியபின்னும் வெள்ளைக் கொக்காக
ஏற்றுக்கொள்ளாத ஆங்கில மனோபாவம்; வெளிப்படுத்தும் உளவியல் தாக்கங்கள். இதே
கலாச்சாரக் கலவையுள் நனைந்த தந்தைக்கும் மகளுக்குமான கலாச்சார நெரிசல்களும்
உறவுகளும். ஆங்கில மேலாதிக்க மனோபாவத்தில் கேலிக்குள்ளாக்கப்படும் ஆசிய மனம்
தனக்குரிய negative resistance வெளிப்படுத்தும் விதங்கள் என்பவற்றைத் தம்
படைப்புலகில் நுட்பமாக நடமாடவிட்டுள்ளார் ஆசிரியர். இவை தொடர்ந்து மேலும் மூன்று
கதைகள் இருந்தபோதிலும் அவை மிகவும் சாதாரணமான கதைகளே. ஏனைய கதைகளில் காணப்படும்
தனித் தன்மைகள் எதுவுமற்றவை. எனது கவனத்தையும் கவராத கதைகள் இவை.
இவரது கதை சொல்லும் முறை நவீனத்துவச் சாயல்கொண்டதாக இருப்பினும், சிறுகதை அமைப்பு
என்னும் அளவில் பலவீனம் கொண்டது. சில நாடக உரையாடல் அமைப்பிலும்
அடைப்புக்குறிக்குள்ளும் மேலதிக விளக்கக் குறிப்புகளாய் அமைந்துள்ளன. இவற்றை இன்றைய
பின்நவீனத்துவ, தாராளச் சிந்தனையின் ஒளியில் சிதைவுகளாக, வடிவ மீறல்களாகச் சிலர்
நியாயப்படுத்த முன்வரலாம். காலம் படைப்புகளுக்கு அளிக்கும் சலுகையால், இல்லாத
தகுதிகளாலும் ஒளிவட்டங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பலர் ராஜ உலா வரும் இன்றைய தமிழ்
இலக்கியச் சூழல், சுகிர்தராஜாவிற்குக் கைகொடுக்காது என்றே நினைக்கிறேன். இக்கதைகள்
வெளிவந்த ஆண்டுகளே அதற்குத் தடையாக நிற்கின்றன. லியோதாத்தின் The Postmodern
Condition கூட ஆங்கிலத்தில் 1984இல்தான் வெளிவந்திருந்தது.
காலம் அவருக்கு எந்தச் சலுகையையும் அளிக்காவிடினும் அவர் தனது தனித்த திறமையாலும்
தன் அக உலகில் கருக்கொண்டிருந்த புதிய பார்வையாலும் உணர்வுகளை எள்ளல் கலந்து
வெளிப்படுத்தும் வகையிலும் காலச்சலுகையைக் காலடியில் போட்டு மிதித்தவராகவே தன்னைத்
தன் படைப்புகளினூடாக வெளிப்படுத்துகிறார். மிகப் பெரிய புத்தகங்களில் நாம் படித்து
வியப்புடன் மீட்டுக் கொள்வதற்கு எதுவுமே இருக்காது. ஆனால் இந்தச் சிறிய,
தொகுதியில் சொல்வதற்கு அதிகமும், நின்று நிறுத்தி வியக்கப் பல வெளிகளும் தாராளமாக
உண்டு.
அவருள் கருக்கொண்ட புதிய பார்வையாக இரு சிறுகதை முடிவுகளைக் குறிக்க
விரும்புகிறேன். டேவிற் மரே (அசாதாரண மனிதன்) தனது வாழ்வின் வீழ்ச்சியை யோபுவின்
கதையுடன் ஒப்பிட்டபோது சிவா கூறுகிறான், ‘டேவிட் நீயும் யோபுவும் நினைக்கிறீர்கள்
நீங்கள் விசேஷமானவர்கள்; ஆகையினால் சாதாரணமாக எல்லா மனிதருக்கும் வரும் இழப்புகள்
உங்களுக்கு வரக்கூடாதென்று, உனக்கும் யோபுவிற்கும் அகந்தை அதிகம். உங்களுக்கு
உங்கள் சுயகௌரவம்தான் முக்கியம்’ என்கிறான். இது இக்கதைப்போக்கிற்கு எதிர்பாராத
ஒரு தீர்ப்புதான். இதைவிட சிவாவின் மனநிலையாக ‘நான் டேவிற் மரேக்குச் சொன்னவை
தகுதியானவையாகவும் இருக்கலாம். தப்பானவையாகவும் இருக்கலாம். அது முக்கியமல்ல.
என்னுடைய வார்த்தைகள் அவருக்கு நிச்சயமாக வருத்தத்தைத் தந்திருக்கும். இதைச்
சரிக்கட்ட அவருக்கு நான் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் தரலாம். ஆனால்
அவர் இருக்கும் இந்த நிலையில் இவற்றை அவரால் பராமரிக்க முடியாது. பதிலாக நான் ஏழு
மட்டன் கபாப்களையாவது வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் அவரும் அதைத்தான்
வரவேற்பார்’ என வருகையில் அதன் எள்ளலின் வீச்சில் தனித்து நின்றுவிடுகிறோம்.
இதேபோல் ஆப்பிரிக்கப் பழமொழி பற்றி ஆராயும் மைக்கல் பார்கின்ஸின் கைப்பை
தவறவிடப்பட்ட சந்தேகம்; நிறம் சார்ந்த முடிவுகளைக் கொண்டிருக்கையில், திருட்டுப்
பட்டம் பெற்ற மோசஸ் பற்றிய முடிவுகள் எவையும் வழமையான தடத்தில்
முன்வைக்கப்படவில்லை. மாவோவிற்குப் பிந்திய சீன ஆராச்சியாளன் ஒருவரின் பதிலால்
முன்வைக்கப்படுகிறது. ‘பொறுப்புள்ள ஒருவர் கவனக்குறைவாக இருந்தமைக்காக மிஸ்டர்
மைக்கல் பார்கின்ஸினை ஒரு Rehabilitation Centreக்கு அனுப்பிவிட்டிருப்போம்’.
இந்தப் பதிலின் விசேடத் தன்மையால் நாம் வியப்பில் ஆட்பட்டிருக்கையில் ஆசிரியரின்
வியப்பு மாவோவிற்குப் பிறகு இன்னும் Rehabilitation Centreகள் இருக்கின்றனவா என்று
கேட்க மறந்ததைப் பற்றியே. இதேபோல் ‘இரண்டாம் எலிசபேத் மகாராணியின் Crownஇல்
இந்தியா இன்னமும் ஒரு Jewel ஆக ஒளி வீசிக்கொண்டிருக்குமாயின் பார்பரா எதாவது
மிஷன்பள்ளியில் மாரல் இன்ஸ்ரக்ஷன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பாள். நல்லவேளை
நடுநிசிக் குழந்தைகள் தப்பிவிட்டார்கள்’ என்பது.
சுகிர்தராஜா தனது படைப்புகளினூடாக ஆங்கில மனோபாவங்கள் வெளிப்படுவதை மிக நுட்பமாக
Daily Mail பத்திரிகையினூடாகவும் டிக்கனஸ் பற்றிய ஆசியர்களின் ஆராய்ச்சி பற்றிய
இகழ்விலும் முக்கியமாக மிசிஸ் ஸ்டுவார்ட்டிற்கு இன்னும் பிரித்தானிய
சாம்ராஜியத்தில் வெயில் அடித்துக்கொண்டிருக்கிறது சிறுகதையிலும் காட்டுவதுபோல்
அதற்கு எதிராக ஆசியர்கள் கறுப்பினத்தவர்கள் வெளிப்படுத்தும் Negative Resistance
ஐயும் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறார். கறுப்பர்கள் Kick out the Tories என்று
பென்னியனில் போட்டுக்கொள்வது, ஆங்கிலப் பெண்ணால் அவமானத்திற்கு உள்ளானவன் பச்சை
விளக்கு எரிந்தவுடன் தெருவைக் கடக்கையில் வாகனங்கள் அவனுக்காகக் காத்துக்கொண்டு
நிற்கையில் ஒவ்வொரு அடியாக எடுத்து நடப்பதில் ஆறுதல் கொள்வது என்பவை இன்றும்
தொடர்பவைதான்.
இவர் சிறுகதைகளில் விலகிக்கொள்ள முடியாத தன்மையுடன் இணைந்திருக்கும் எள்ளல்கள்
குறிப்பிடக்கூடியவையே. போக்லான்ட் போர் பற்றி ‘மனிதனை மீட்க ஆடுகள்
அடிபடுவதுண்டு. ஆனால் ஒரு மாறுதலுக்காக மனிதர்களைவிட ஆடுகள் அதிகமாகவுள்ள
தீவுகளுக்காக மனிதர்கள் பலிகொடுக்கப்பட்டார்கள்.’ இதேபோல் புரட்சி பற்றி ‘நாளை
வரும் சமுதாயப் புரட்சி எப்போ வருமென்று சொல்லு நான் எங்காவது ஒதுங்க வேண்டும்.
புரட்சி தரும் விளைவுகளை என்னால் தாங்க முடியாது’ எனக் கடவுள் கூறுவதையும்
குறிப்பிடலாம். 80கள் இலங்கை அரசியலிலும் உலக அரசியலிலும் மார்க்சியம் அல்லது
புரட்சி நம்பிக்கையையும் வழிகாட்டும் மேய்ப்பர் தன்மையையும் கொண்டிருந்தது.
அலெக்சான்டர் ப்பொளக்கூடத் தனது ‘பன்னிருவர்’ கவிதையில் மேய்ப்பரின் குறியீட்டுத்
தன்மையையே குறிப்பிட்டார். ஆனால் இன்று புரட்சி தந்த விளைவுகளைத் தாங்க
முடியாமல்தான் இருக்கிறது. இதை இன்னமும் கழட்டாத செஞ்சட்டை அணிந்தவர்கள்,
புரட்சிக்கு எதிரானவை, எதிர் புரட்சி, திரிபுவாதம் என்ற இத்துப் போன
வாய்ப்பாட்டைக் கொண்டு அளக்க முயல்வார்கள். ஆனால் மார்க்ஸ் கண்ட கனவு
இராட்சியத்திற்கு அமைவான ஒரு நாட்டைக்கூட இவர்களால் காட்ட முடியாது. உண்மையைத்
தவறவிட்டுவிட்டு அசைவற்ற நம்பிக்கையின் கோட்டிற்குள் காலம் கடந்தும் நிற்பதனால்
ஒரு Antique தன்மையைத் தம்முள் ஏற்றிக்கொண்டிருப்பவர்கள் ஆவணக்
காப்பகத்திற்குரியவர்கள்.
ஆங்கிலச் சிந்திப்பின் தமிழ்ச் சாயல் சில இடங்களில் அப்படியே வெளிப்படுகிறது.
சிப்ஸைப் பொரித்த உருளைக் கிழங்குச் சீவல் என்பதெல்லாம் துருத்தி நிற்கிறது. இவை
போன்றவற்றை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கால வரிசையின்படி பார்த்தால் அவரது வீழ்ச்சிக்குரிய மூன்று கதைகளும் பிற்பட்ட
கதைகளாகவே இருக்கின்றன. 86க்குப்பின் சுகிர்தராஜா எந்தச் சிறுகதையும் எழுதியதாகத்
தெரியவில்லை. அவர் தன் திறமைகளைக் கட்டுரைகளுடன் வரையறுத்துக்கொள்ளக் கூடாது,
ஏற்கனவே விரிந்து மூடப்பட்ட படைப்பு மனத்தை மீண்டும் திறக்க வேண்டும். எழுத
வேண்டும். தொடர்ந்து எழுத வேண்டும். அது தொகுப்பிலுள்ள பின் மூன்று கதைகளின்
தொடர்ச்சியாக அல்ல. அவரது நல்ல கதைகளின் தொடர்ச்சியாக. |