|
கல்யாணி என அறியப்படும் பேராசிரியர் பிரபா கல்விமணி கல்வியாளர், மனித உரிமைப்
போராளி, சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். திருநெல்வேலி மாவட்டம்
ராதாபுரம் தாலுகா சௌந்திர பாண்டியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கல்யாணி
திண்டிவனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் விருப்ப
ஓய்வுபெற்றுத் தற்போது அங்கேயே வசிக்கிறார். மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சிய
இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த கல்யாணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்,
மக்கள் யுத்தக் குழு)யின் பண்பாட்டு அமைப்பான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்க’த்தில்
செயல்பட்டவர். அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ‘செந்தாரகை’ என்னும் இலக்கிய
இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த கல்யாணி பிறகு அதிலிருந்து விலகிக் கல்வி சார்ந்த பல
போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். மக்கள் கல்வி இயக்கம் என்னும் அமைப்பைத்
தோற்றுவித்து அதன் சார்பாகத் தாய்த் தமிழ்ப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.
பணியிலிருக்கும் போதே பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திய
கல்யாணி, ஓய்வுக்குப் பிறகு பழங்குடி இருளர் பேரவை என்னும் அமைப்பின் மூலம் அவர்களது
வாழ்வுரிமை சார்ந்த போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார்.

காலச்சுவடுக்காகப் புதுச்சேரியில் கடந்த 12.07.2009 அன்று பொறுப்பாசிரியர்
தேவிபாரதி, ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜாங்கம், உதவியாசிரியர் செல்லப்பா
ஆகியோர் பேராசிரியர் கல்யாணியுடன் நடத்திய பல மணி நேர உரையாடலிலிருந்து
தொகுக்கப்பட்டது இந்நேர்காணல்.
உங்கள் இளமைக்காலம், பெற்றோர், குடும்பப் பின்னணி குறித்துச் சொல்லுங்கள்...
எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திரபாண்டியபுரம். அப்பா சிறு
விவசாயி, சமூகரெங்கபுரத்தில் தலையாரி வேலை பார்த்தார். குடும்பத்தில் உறுப்பினர்கள்
அதிகம். நான் கடைசியாக, பத்தாவது குழந்தையாக 1947இல் பிறந்தேன். கல்யாணி எனும் பெயரை
எங்கள் பகுதியில் மறவர், தலித் சாதிகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு வைப்பார்கள்.
நான் மறவர். மறவர் என்பது denotified tribe. அங்கு அது சிறுபான்மைச் சாதியாக
இருந்தது. நாடார்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர்.
ஐந்தாம் வகுப்புவரை சொந்த ஊரில் படித்தேன். அப்புறம் கள்ளிகுளம் பள்ளிக்குச்
சென்றேன். அது சாமியார்கள் நிர்வாகத்தில் செயல்படும் பள்ளி. அண்ணன் பத்தாம் வகுப்பு.
நான் ஒன்பதாம் வகுப்புப் படித்தேன். பள்ளியில் அண்ணன் செய்த ஒரு தவறுக்காக
நிர்வாகத்தினர் அவனைத் தண்டித்தனர். அவனுடன் சேர்ந்து தவறுசெய்த இன்னொரு மாணவர்
நிர்வாகத்தினருக்கு வேண்டியவரென்பதால் அவரை விட்டுவிட்டனர். அதனால் அந்தப் பள்ளியில்
படிக்க மாட்டேனென வீம்புடன் சொல்லிட்டு சமூகரெங்கபுரத்திலிருந்த பள்ளியில்
சேர்ந்தேன். அது டிஸ்ட்ரிக்ட் போர்டு பள்ளி. அங்கு ரெட்டியார்கள் பெரும்பான்மை
வகுப்பினராக இருந்தனர்.
பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் பியூசி (1963 - 1964). கல்லூரியில் நான்தான் கடைசி
மதிப்பெண். ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துவார்கள். முதலில் அவற்றைப்
புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. பியூசி முடித்துவிட்டு அங்கேயே இயற்பியல்
(1964-1967) படித்தேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக இருந்ததால் தொடர்ந்து
ஆங்கில நாளிதழ்கள் படிப்பது போன்ற சுய முயற்சிகளைச் செய்தேன். மூன்று வருடப்
படிப்பில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அதிக நேரம் விரயமாகியது. இயற்பியல் துறை சார்ந்து
படித்தது மூன்றாம் ஆண்டில் தான். அறிவியல் பாடங்களில் அடிப்படை பலமாக இருந்ததால்
தேர்ச்சி பெற்றேன். மேலும் விடுமுறையின் போதே கல்லூரிப் பாடப் புத்தகங்களை
எடுத்துக் கொண்டுபோய்ப் படித்துவிடுவேன்.
அந்த வருடங்களில்தானே இந்திப் போராட்டம் தீவிரமாக இருந்தது?
65இல் கல்லூரியில் அந்தப் போராட்டம் தீவிரமாக இருந்தது.
நீங்கள் அப்போராட்டத்தில் கலந்துகொண்டீர்களா?
ஆமாம். திமுகவில் இருந்ததால் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். ரகுமான்கான் அமெரிக்கன்
கல்லூரி தானே! கல்லூரியில் அவர் எனக்குச் சீனியர். மற்றவர்களுடன் சென்று நானும்
கலந்துகொண்டேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பருவத்திலேயே திமுக அனுதாபி.
அப்போது எனக்குப் பதினோரு வயது.
அந்தச் சிறுவயதில் அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?
என் அண்ணன் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர், திராவிடர் கழகத்துக்காரர் என்றே
சொல்லலாம். என் சித்தப்பா கொழும்பில் இருந்தார். சித்தி மட்டும் இங்கே இருந்தார்.
அவரது வீட்டுக்கு அண்ணனுடன் போய்ப் பேசிக்கொண்டிருப்பது உண்டு. அப்போது அரசியல்
பற்றிய பேச்சுகளும் வரும். அதனால் அந்தச் சின்ன வயதிலேயே கடவுள் மறுப்பு, திமுக
அரசியலிலெல்லாம் ஈடுபாடு வந்துவிட்டது.

வாசிப்பு சார்ந்து உங்கள் ஆர்வம் எப்படி இருந்தது?
கள்ளிகுளத்தில் நாடார் வாசக சாலைக்குப் போய்ப் படிப் போம். எனக்குக் கதை வாசிப்பு
பிடிக்காது. அப்போது நான் வாசித்ததெல்லாம் கட்சிச் செய்திகள்தாம். நான் ஒன்பதாம்
வகுப்புப் படிக்கும்போது அண்ணாத்துரை வள்ளியூரில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு வந்தார்.
எங்கள் ஊரிலிருந்து கிட்டத்தட்ட பத்துக் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று
கூட்டத்தைப் பாத்துட்டு வந்தேன். அவ்வளவு ஆர்வம். அடிப் படையில் நான் அரசியல் ஆர்வம்
கொண்டவன்தான். கல்லூரியிலும் அது தொடர்ந்தது. தலைவர் பொறுப்பில் இருந்ததில்லையே
தவிர, போராட்டத்தில் கலந்துகொள்வது உண்டு.
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் வேலையில் சேர்ந்துவிட்டீர்களா?
1967இல் இளங்கலை முடித்தேன். முதுகலைப் படிப்புக்குச் செல்லவில்லை. வேலைக்குப்
போகவே விரும்பினேன். கும்பகோணத்தில் ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரியில் அறிவியல்
ஆசிரியராகச் சேர்ந்தேன். மாதம் 150 ரூபாய் சம்பளம். ஒரு வருடத்திற்குப் பிறகு மாமா
மூலமாகத் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஒரு வருடம் வேலை.
அடுத்த வருடம் சிவகங்கையில் வேலை. அங்கே பதினான்கு நாள்கள் மட்டுமே வேலை
பார்த்தேன். அப்போது முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் அதே சமயத்தில்
யானைமலை ஒத்தக்கடை அரசு விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. நான்
அதில் சேர்ந்துவிட்டேன்.
அந்த வேலையில் சேர்ந்த பிறகு திரைப்படங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நிறைய
நேரம் கிடைத்தது. திமுகவின் மீது விமர்சனம் எழத் தொடங்கியிருந்த தருணம் அது.
அப்போதுதான் செம்மலர் பத்திரிகை வந்தது. மக்கள் உரிமைக் கழகத்தின் தில்லைநாயகம்
மூலமாக முற்போக்கு இயக்கம் அறிமுகமானது. எனக்குத் திமுகவின் கொள்கைகளோடு கருத்து
வேறுபாடு ஏற்பட்டு இடதுசாரிச் சார்பு மனநிலை உருவானது. முற்போக்கு இயக்கங்களில்
ஈடுபாடு ஏற்பட்டது. எனக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் மார்க்சிஸ்ட்
கட்சிதான் நெருக்கமாகத் தென்பட்டது. அதற்கு எந்தத் தத்துவார்த்தப் பின்னணியும்
காரணமல்ல. எங்கள் கல்லூரி விவசாயப் பல்கலைக் கழகமாக ஆன பின்னர் அங்கே பணியில் தொடர
எனக்கு ஆர்வமில்லை, எனவே கடலூருக்கு வந்துட்டேன். அங்கேதான் பழமலயைச் சந்தித்தேன்.
அவர் கடலூரில் பேராசிரியராக இருந்தார். அங்கேயிருந்து மதுரை மேலூரிலும் பிறகு மதுரை
மருத்துவக் கல்லூரியிலும் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று மாதம் அங்கே வேலை
பார்த்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது.
அதனால் விடுப்பு எடுத்துக்கொண்டு படிக்க வந்துவிட்டேன்.
விடுப்பு எடுத்துக்கொண்டுதான் வந்தீர்களா?
ஆமாம். அப்போதெல்லாம் சம்பளத்தோடு அனுப்பமாட்டார்கள். அப்போது 1975
நெருக்கடிநிலை சமயம். திமுகவின் நட வடிக்கைகள் பிடிக்காத சூழலில்கூட
நெருக்கடிநிலைமீது ஒரு கோபம் வந்தது. நான் இருந்த விடுதிக்கு நேரெதிரே இருந்த
இடத்தில் இரவு நேரத்தில் நெருக்கடிநிலை அமலாகியிருப்பது குறித்த சுவரொட்டி ஒன்று
ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். காலையில் போய் டீ குடித்துவிட்டுச் சுவ
ரொட்டிமீது சாணி அடிக்க வேண்டுமென்று சாணியை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால்
எனக்கு முன்பே யாரோ அந்தச் சுவரொட்டிமீது சாணி அடித்திருந்தனர்.
1972-73இல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகினார். அப்போது நான் கடலூரில் வேலையில்
இருந்தேன். ஒரு கட்சிக்காரனாக எப்போதும் எம்ஜிஆரின் சினிமாத்தனங்கள்மீது எனக்கு
விமர்சனம் உண்டு. அவரை விலக்கியது என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இந்த மாதிரி
ஆள்களைக் கட்சியில் வைக்கக் கூடாது என்னும் நினைப்பு எனக்கிருந்தது.
மாயத்தேவருக்காக சிபிஐ, சிபிஎம் எம்ஜிஆரை ஆதரித்ததால் அந்தக் கட்சிகளை வெறுத்து,
சிபிஎம்மிலிருந்து நான் விலகிவிட்டேன்.
1976இல் முதுகலைப் படிப்பை முடித்தேன். பிறகு விழுப்புரத்தில் வேலை கிடைத்தது.
முதுகலை முடித்த புத்துணர்ச்சியோடு மிக ஆர்வமாக வகுப்பு எடுக்கத் தொடங்கியிருந்த
சமயம் அது. வகுப்பில் போகிறபோக்கில் வாய்ப்புக் கிடைக்கும்போது கடவுள் மறுப்பு
பற்றியெல்லாம் பேசுவேன். என் இயல்பு அது. மாணவர்களும் என்னை விரும்புவார்கள்.
விடுதிக்குச் சென்று தலித் மாணவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுத்தால் அவர்கள்
மருத்துவம், பொறியியல் போன்ற துறைப் படிப்புகளுக்குப் போக முடியும் என்பதால்
அவர்களுக்குப் பயிற்சியளிப்பேன். கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் முக்கியமான
பொறுப்பில் இருந்தேன். இப்படிப் பல தளங்களிலும் இயங்கியதைப் பார்த்த முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தினர் என்னை அவர்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அப்போதுதான்
தினகரன் பத்திரிகை வந்தது. எப்போதும் தினகரன் பத்திரிகையோடுதான் இருப்பேன்.
அப்போது நான் தீவிர திமுக ஆதரவாளன். ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்,
அவர்களின் வேண்டுகோள்களுக்காகக் கடவுள் மறுப்பு போன்ற செய்திகளைப் பேசுவேன்.
அஷ்வகோஷ் அங்கே அறிமுகம் ஆனார். ஒரு நாள் அங்கே ஏற்பட்ட விவாதத்தில் நான்
பேசியதைக் கேட்ட ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சித் தோழர் என்னைப் பார்க்க
அறைக்கு வந்துவிட்டார். அவர் வெளிப்படையாகத் தான் அந்த இயக்கத்தில் இருப்பதாகக்
காட்டிக்கொள்ளமாட்டார். என்னை அந்தத் தோழர் பார்த்ததை அறிந்த மார்க்சிஸ்ட்கள்
அவரை மிரட்டினர். எனக்கு அவர்களின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. அவர்களைப்
பிடிபிடியென்று பிடித்துவிட்டேன். பிறகு அவர்களிடமிருந்து விலகிவந்துவிட்டேன்.
தோழர் செந்தாரகை வந்து என்னைச் சந்தித்தார். இரவில்தான் வருவார், தலைமறைவு
அரசியலிலிருந்துதான் தொடங்குவார். எனக்கு நன்றாகத் தூக்கம் வரும்.
மார்க்சிஸ்ட்டுகளோடு இருந்த முரண்பாடு காரணமாக அவர் சொல்வதைக் கவனமாகக்
கேட்டுக்கொண்டிருப்பேன். இயல்பான பிடிப்பு இல்லை. இப்படியான சூழலில்
இலங்கையிலிருந்து வந்த சில மலையகத் தமிழர்கள் மார்க்சியம் பற்றி எனக்கு அதிகமாகத்
தெரியுமென நினைத்து என்னிடம் வந்தார்கள். எனக்கும் எதுவும் தெரியாது. எல்லோரும்
சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லி அரசுங்கிற புத்தகத்தை வரிக்கு வரி படித்தோம்.
பின்னர் குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும்
ஆகிய புத்தகங்களைப் படித்தோம்.
அதன் விளைவாக மார்க்சியத்தின் அடிப்படை புரிந்தது. அப்போதுதான் தேசிய இனப்
பிரச்சினை பற்றிய விவாதம் வந்தது. தேசிய இனப் பிரச்சினைக்கு
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (மக்கள் யுத்தம்) இயக்கத்தினர்தான் சரியான தீர்வை
முன்வைக்கிறார்கள் என்பது புரிந்தபோதுதான் அந்த இயக்கத்தின் மேல் ஒரு பிடிப்பு
வந்தது. தோழர் ஏ. எம். கோதண்டராமனுடன் (ஏஎம்கே) தொடர்பு ஏற்பட்டது. முற்போக்கு
மாணவர் சங்கத்தின் பணிகளைச் செய்தேன். இதற்கிடையில் பழமலயைப் போய்ப் பார்த்துக்
கட்சிக் கொள்கைகள் பற்றிப் பேசி அவரைச் சம்மதிக்கவைத்தோம். திருக்குறள்
முனுசாமியின் மகன் சூரியநாராயணன் விவேகானந்தர் பற்றி ஒரு கட்டுரை எழுதி அதை
வெளியிடுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் போயிருந்திருக்கிறார். இது
மோசம் அது மோசம் என்று சொல்லி அவரைக் காலிசெய்துவிட்டனர். நான் அப்படியே அவரை
இழுத்து ஒரே வாரத்தில் இந்தப் பக்கம் கொண்டுவந்துட்டேன். அவர் என்னை விவேகானந்தர்
இயக்கத்துக்கு இழுக்க வந்தவர். பின்னர் நமக்குப் பாடம் நடத்தும் அளவு வந்துவிட்டார்
அவர்.
அந்தச் சமயத்தில் நெம்புகோல் என்னும் அமைப்பை நடத்திக்கொண்டிருந்தீர்கள் அல்லவா?
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு மாற்றாக இலக்கிய அமைப்பு ஒன்றை உருவாக்க
விரும்பினோம். அப்படி உருவாக்கப்பட்டதுதான் நெம்புகோல். வேகமாகச் செயல்பட்டோம்.
மு. ராமசாமியை வைத்து நாடகங்கள் நடத்தினோம். இலக்கிய ஆர்வமுள்ளவர்களை
ஊக்குவிப்போம். அதனோடு முற்போக்கு மாணவர் சங்கத்தையும் ஏற்படுத்தினோம். கவிதை
விமர்சனங்கள் நடத்தினோம். தெருவில் நின்று கவிதை வாசிப்போம். ஓவியக் கண்காட்சி
ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். இவற்றில் பழமலயின் பங்கு மிக முக்கியமானது.
அவர் எல்லாரையும் நன்றாக ஊக்குவிப்பார். முற்போக்கு மாணவர் சங்கத்தை
ஏற்படுத்தினோம். நெம்புகோலை வெகுஜனத் தளத்தில் பிர பலப்படுத்தினோம். இயல்பாகவே
எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கிடையாது. ரவிக்குமார் ஏகாதிபத்திய எதிர்ப்பு
குறித்துக் கவிதை எழுதுவார். என்னிடம் காட்டுவார். பிரமாதமாக இருப்பதாகச்
சொல்வேன். இன்றுவரை அது எதனால் எப்படி நன்றாக இருந்ததென்று எனக்குத் தெரியாது.
செந்தாரகை ஆசிரியர் குழுவில் இருந்தீர்களா?
இருந்தேன். நான் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளர்தான். ஆசிரியர்
குழுவைக் கூட்டுவது, பத்திரிகையைக் கொண்டுவருவது எல்லாமே நான்தான். அப்போது பெயர்
மாற்றுவது குறித்துப் பேசினார்கள். சட்டப்படி இருக்கலாம், பாதுகாப்புக்காக வேண்டும்
என்றால் மாற்றலாம் என்று ஏஎம்கே சொன்னார். கல்யாணி எனும் பெயரைவைத்து என்னை
ஒருமுறை மகளிர் கல்லூரிக்கு மாற்றினார்கள். அப்படியான பிரச்சினைகள் எல்லாம் பெயரை
வைத்து வந்தன. ஆனாலும் அப்பா அம்மா வைத்த பெயரை மாற்ற நான் விரும்பவில்லை. கல்யாணி
அம்மன் கோவில் பெயர் அது. செந்தாரகையில கல்யாணி என்னும் பெயர்தான் இருந்தது. மிக
வெளிப்படையான தன்மை என்னுடைய இயல்பு. நான் எதையும் ரகசியமாக வைத்துக்கொள்வதில்லை
என்று ஒரு கட்டத்தில் விமர்சனம்கூட வந்தது. “எதெல்லாம் ரகசியமோ அதை என்னிடம்
சொல்லாதீர்கள், எதை வெளியில் சொல்லலாமோ அதை மட்டும் என்னிடம் சொல்லுங்கள்,
உங்களுக்காக என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள இயலாது” என்று கூறிவிட்டேன்.
எப்போது செந்தாரகையோடு உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது?
புரட்சிப் பண்பாட்டு இயக்கம் சார்பாக ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்றும் பெயர்
செந்தாரகை என்றும் முடிவுசெய்தோம். இல.கோவிந்தசாமியும் நானும் அமைப்பாளர்களாக
இருந்தோம். அவர் கட்சி வேலைகளுக்காகவும் நான் வெகுஜன வேலைகளுக்காகவும்
நியமிக்கப்பட்டோம். கோ. கேசவன், அ. மார்க்ஸ், ரவிக்குமார், பழமலய் போன்ற பதினாறு
பேர் கொண்ட, எதிரெதிர் கருத்துகளை ஆரோக்கியமான புரிதலுடன் எதிர் கொள்ளும் நல்ல
குழு அது. ஆயிரம் பிரதிகள் எனத் தொடங்கிய இதழ் மூவாயிரம் பிரதிகள்வரை விற்றது.
பத்திரிகை விற்ற பணம் சரியாகக் கைக்கு வராது. பிரச்சினைகள் இருந்தன.
கட்சியைவிட்டு நான் வந்த பிறகு இரண்டு மூன்று இதழ்கள் வந்தன. பத்திரிகையில் கொள்கை
சம்பந்தமான முடிவுகளை மார்க்ஸ், கேசவன் போன்றோர் எடுப்பர். அவற்றைச்
செயல்படுத்தும் வேலையை நான் செய்வேன். கட்சி வெகுஜன அமைப்புத் தொடங்குவதற்கு
முன்பே நாங்கள் நெம்புகோல் என்னும் அமைப்பைத் தொடங்கினோம்.
புரட்சிப் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பைத் தொடங்கியது பண்பாட்டுரீதியான
அமைப்பு வேண்டும் என்பதற்காகவா?
கட்சிக்குத் தேவை. அப்போது அதற்குப் பொறுப்பேற்பதற்கு யாரும் இல்லை. அதனால்
நம்பகமாகவும் வெளிப்படையாகவும் இருந்த நான் பொறுப்பாக இருந்தேன்.
நீங்கள், மார்க்ஸ், ரவிக்குமார், கேசவன், பழமலய் போன்ற பண்பாட்டுத் துறையில்
செயல்பட்ட அறிவுஜீவிகள் பலர் கட்சிக்குள் வந்தது கட்சியின் அடிப்படைகளில் ஏதாவது
மாற்றத்தை ஏற்படுத்தியதா?
முற்போக்கு மாணவரணி இருந்தபோதிலும் முற்போக்கு இளைஞரணிதான் வெகுஜன அமைப்பாக
இருந்தது. புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தை இளைஞரணி தனக்குப் போட்டியாகப் பார்த்தது.
கீழே உள்ளவர்களிடம்தான் இப்படியான புரிதல் இருந்தது.
புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் அமைப்பு வேலைகளைவிடக் கட்சி
வேலைகளைத்தானே செய்தார்கள்?
அப்படிச் சொல்ல முடியாது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்த அமைப்புதான்
பிரச்சாரம் செய்தது. அதற்கு எங்களுடைய ஆள்கள் கொடுத்த அழுத்தம் அதிகம்.
புதிய கல்விக் கொள்கையை நீங்கள் - புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தினர் - எப்படிப்
பார்த்தீர்கள்?
நவோதயா போன்றவை மாநில உரிமைகளுக்கு எதிரானவை. அவை வியாபாரமயமான கல்விக்குச் சட்ட
அங்கீகாரம் கொடுத்தன. கல்வியில் அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்தன. குறிப்பாக அ.
மார்க்ஸ் எழுதிய ஒரு புத்தகம் கட்சிக்குள் அதிகமாக விவாதிக்கப்பட்டது. கோ.
கேசவன்கூட ஒரு புத்தகம் எழுதினார். புதிய பொருளாதாரக் கொள்கையின் உபவிளைபொருள்
போன்றுதான் இக்கல்விக் கொள்கையும் இருந்தது. புரட்சிப் பண்பாட்டு இயக்கம்,
முற்போக்கு இளைஞரணி இரண்டும் சேர்ந்து புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஒரு
மாநாட்டை 85 அல்லது 86இல் விழுப்புரத்தில் நடத்தினோம். ஆந்திராவின் புரட்சிப்
பாடகர் கத்தாரின் நிகழ்ச்சிகள் பலவற்றை மாநில அளவில் ஒருங்கிணைத்து நடத்தினோம்.
சாதியும் வர்க்கமும் குறித்த மாநாடு ஒன்றைச் சென்னையில் நடத்தினோம். சாதிரீதியான
ஒடுக்குமுறை வர்க்கத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. அதற்குக் கூடுதல்
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது அந்த மாநாட்டின் நோக்கம்.
சாதிக்கும் வர்க்கத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையைக்
கட்சியும் அந்த மாநாட்டில் சமர்ப்பித்தது.
பெரியார் செயல்களை எப்படிப் பார்த்தீர்கள்?
நேர்மறையாகப் பார்த்தோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றப்படும் எந்தவொரு
பணியையும் முற்போக்காகப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் வர்க்கப்
போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது
அம்பேத்கார், பெரியார் போன்றவர்களின் பணி மிக முக்கியமானது.
மக்கள் யுத்தக் குழுவின் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மிக ஆழமாகப் போகவில்லை. எனக்கும் கோவிந்த சாமிக்கும்தான் கட்சியுடன் நேரடித்
தொடர்பு. தன்னெழுச்சி வாதம் பற்றிய விவாதம்தான் அப்போது எழுந்தது. கட்சிக்குள்
இவ்விவாதத்துக்கான முக்கியத்துவம் அதிகமானது. இதுவரை நடந்தவை மாயை என்னும் கருத்து
அணிகளுக்குள் சோர்வை உண்டுபண்ணியது. ரஷ்ய வழி, சீன வழி இரண்டில் நமக்கு எது
உகந்தது போன்ற விவாதங்கள் எழுந்தன. இவை பற்றிய புரிதல் எனக்கு இருந்தது.
தன்னெழுச்சி வாதம் என்பது என்ன?
எழுச்சிக்குப் பின்னால் ஓடுவது. இதுவரையானது தன்னெழுச்சிதான். தன்னெழுச்சியின்
பின்தான் கட்சி போய்க்கொண்டிருந்தது என்னும் கருத்து இருந்தது. பின்னர் பாசிச
எதிர்ப்பு மாநாடு நடந்தது. எல்லோரிடமும் கருத்துக் கேட்டார்கள். ஆனால் கட்சி அதை
அனுமதிக்கவில்லை. வெகுஜன அமைப்புகளில் இருந்தவர்களுக்கும் கட்சிக்கும் இடையில்
இதனால் முரண்பாடு வந்தது. நான், ரவி கார்த்தி, பாலு போன்றோர் நெம்புகோல்
அமைப்பில் இருந்தவர்கள். அந்த அமைப்பை நாங்கள் வைத்திருந்தது யாருக்கும் தெரியாது.
கட்சிக் கூட்டத்தில் நாங்கள் ஒரு விவாதம் வைப்போம். எங்கள் கருத்து வெற்றி
பெறாதபோது கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம்.
அப்படித்தான் செயல்பட்டோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு
ஆகியவைதான் கட்சியின் செயல் திட்டங்கள். பண்பாட்டுத் தளத்திலும் அந்தத்
திசையில்தான் செயல்பட வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை இயந்திரத்தனமாகச்
செயல்படுத்தினார்கள். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சுவரொட்டி சிகப்பில்
இல்லாவிடில் ஒரு கட்சித் தோழர் அதை விமர்சிப்பார். இயல்பாகவே நான் ஜன நாயகத்தை
நேசிப்பவன் என்பதால் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் அன்றாட நடைமுறைகளில் கட்சி
குறுக்கீடு செய்தது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதுதான் நான் வெளியே வர
முக்கியக் காரணம். பண்பாடு என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிரபுத்துவ எதிர்ப்பு
மட்டுமல்ல ஒரு புதிய மனிதனை உருவாக்குவது. எனவே பண்பாட்டுத் தளத்தின் எல்லை அரசியல்
எல்லையைவிட விரிவானது. பண்பாட்டுத் தளத்தைக் கட்சிக்கு ஆள் பிடிப்பதற்கான அமைப்பு
என்று குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை.
ஒருமுறை எனக்கும் பெண் தோழர் ஒருவருக்கும் கட்சியில் திருமணம் செய்வதெனக் கட்சி
முடிவு செய்தது. அதை எப்படிக் கட்சி முடிவு பண்ண முடியும்? சில தனிப்பட்ட
விஷயங்களில் கட்சி வெறுமனே கொள்கை சார்ந்து தலையிடுவது சரியல்ல. கட்சியின்
நெருக்கடி எனக்குத் தெரியும். நான் என்ன காரணத்துக்காக வெளியேறினேன் என்பது ஆறு
மாதம்வரை யாருக்கும் தெரியாது. விசாரித்துப் பார்த்ததில் மற்ற இயக்கங்கள் இதைவிட
மோசம் என்று தெரிந்தது.
1983இல் இலங்கைப் பிரச்சினை வந்தது. அதைக் கட்சி எப்படிப் பார்த்தது?
கட்சி அதை ஆதரித்தது. பிரபாகரன் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியா சிங்கள
அரசுக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது, இராணுவத்தை அனுப்பக் கூடாது என்று கூறினார்கள்.
திமுகவினர் இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள். ஈழ விடுதலையை, தனி
ஈழத்தை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்கள் ஆதரித்தனர். ஒரு தேசிய இனத்துக்கு சுயநிர்ணய
உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமை. அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. தேசிய இனப்
பிரச்சினையிலும் மொழிப் பிரச்சினையிலும் இந்திய அளவில் ஏஎம்கே அளவுக்குத்
தெளிவானவர்கள் யாரும் இல்லை. மொழிப் பிரச்சினை தொடர்பான இந்திய அளவிலான
விவாதத்தில் தமிழ்நாடு வைத்த பயிற்சி மொழி, ஆட்சி மொழி, தொடர்பு மொழி மூன்றும்
ஒரே மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்னும் ஒரு மொழிக்கொள்கையை அப்படியே எல்லா
மாநிலங்களும் பின்பற்றின. மொழிப் பிரச்சினை தொடர்பாக மபொசி எழுதிய புத்தகம் மிக
முக்கியமான ஒன்று. நாடாளுமன்றத்தில் தேசிய இனங்களுக்கான இடம் சமமாக இருக்க
வேண்டும். மக்கள்தொகை சார்ந்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது என்று
சிந்தித்திருக்கிறார்.
திமுக எழுப்பிய மாநில சுயாட்சிக் கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அது ஒரு ஜனநாயகக் கோரிக்கை. அதில் அவர்கள் உறுதியாக நிற்கவில்லையே தவிர அது ஒரு
ஜனநாயகப் பிரச்சினை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மாநில சுயாட்சிக்காகப்
பேசுபவர்கள் தமிழ்வழி மாணவர்களுக்காக உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வுகள்
தமிழிலும் நடத்தப்பட போராடியிருக்க வேண்டும்.
கட்சியிலிருந்து விலகிய பின்னர் உங்கள் செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொண்டீர்கள்?
எனக்கு இயல்பாகவே கல்வியில் ஈடுபாடு உண்டு. கட்சியிலிருந்து வெளியேறிய அ. மார்க்ஸ்,
ரவிக்குமார் ஆகிய இருவருமே புதிதாக ஒரு கட்சி தொடங்கலாமென எனக்கு ஆலோசனை கூறினர்.
நிறப்பிரிகை கூட்டங்களுக்கெல்லாம் சென்றேன். என்னை இயக்கத்துக்குக் கொண்டுவந்ததில்
தங்கவேல்சாமிக்கு முக்கியப் பங்கு உண்டு. பொடாவை எதிர்த்து நானும் மருத முத்துவும்
இணைந்து ஒரு துண்டறிக்கை வெளியிட்டோம். அதிர்வு என்னும் அமைப்பை உருவாக்கினோம்.
தமிழகக் கட்சிகளின் கொள்கைகள் குறித்த அறிக்கை ஒன்றைத் தங்கவேல்சாமி தயாரித்தார்.
மக்கள் கல்வி இயக்கத்தை உருவாக்கி அறிக்கை ஒன்றைத் தயாரித்தோம்.
மக்கள் கல்வி இயக்கத்தில் யார் யாரெல்லாம் பங்கெடுத்துக்கொண்டீர்கள்?
அ. மார்க்ஸ், ரவிக்குமார், தர்மலிங்கம், துரைக்கண்ணு, பழமலய் ஆகியோர் சேர்ந்து
1989இல் மக்கள் கல்வி இயக்கத்தை ஆரம்பித்தோம். தொடக்கவிழா விழுப்புரத்தில்
நடந்தது. அதன் சார்பாகத் தனிப் பயிற்சிக்கு எதிராகத் திண்டிவனத்தில் ஒரு மாநாடு
நடத்தினோம். பெண் கல்வி, பயிற்றுமொழி தமிழா ஆங்கிலமா, வரலாறு எழுதுதல் - கோச்சடை
எழுதியது - இட ஒதுக்கீடு போன்றவை தொடர்பான சில நூல்கள் கொண்டுவந்தோம். கல்வி
இயக்கம் எப்படி இருக்க வேண்டுமென்ற புரிதல் இன்று இருக்கிறது. அன்று நிலைமை அப்படி
இல்லை. திண்டிவனத்தில் தமிழ்வழிக் கல்வி மாநாடு நடத்தினோம். டாக்டர் ராமதாஸ்,
தீரன் போன்றோர் அதில் கலந்துகொண்டனர்.
டாக்டர் ராமதாஸ் எழுச்சியோடு இணைந்து அறிவுஜீவிகள் குழுவினர் சேர்ந்து செய்த
வேலைகள் குறித்துச் சொல்லுங்கள்.
தொடக்கத்தில் சரியான அமைப்பு கிடையாது. நான் நக்சல்பாரி இயக்கத்தில் இருப்பது
எல்லாருக்கும் தெரியும். அதனால் பெண் கல்வி தொடர்பா ஒரு பள்ளி கொண்டுவர வேண்டிய
முயற்சிக்கு என்னை அணுகினர். வன்னியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி அது.
மருத்துவர் ராமதாஸ் மக்களைச் சார்ந்து நிற்பார் என அவரைக் கொண்டுவந்தோம். அவரும்
முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். பல்வேறு தரப்பினரைக் கொண்டு பள்ளி திறப்புக்
குழு, வெகுஜன மேம்பாட்டுக் குழு என இருகுழுக்களை உருவாக்கினோம். தலைவர் மருத்துவர்
ராமதாஸ். நான் ஒரு குழு உறுப்பினர். செயலாளர் பவனந்தி. ஹீராசந்த் அப்ப நகராட்சித்
தலைவர். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தின் அதிமுக செயலாளர். அவரை
எதிர்த்துதான் அதை நடத்த வேண்டும். கடுமையான போராட்டம். அவர்தான் இலக்கு. அவரை
எதிர்த்து எப்படி அணி திரட்டுவது என்பது குறித்த தெளிவான பார்வை இருந்தது. அதில்
எனக்குப் பயங்கர பாதிப்பு. ஆனால் திண்டிவனத்தில் எனக்குக் கிடைத்த நல்ல பெயர்
அப்போராட்டத்தை வைத்து உருவானதுதான். நாங்கள் விரும்பியபடி பள்ளியைக்
கொண்டுவந்துவிட்டோம். பல தடைகளைத் தாண்டி இப்போது அது மேல்நிலைப் பள்ளியாக
வளர்ந்திருக்கிறது. அதன் பின்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் துண்டறிக்கை
கொடுத்ததற்காகத் திக தோழர்களை வன்னியத் தரப்பினர் தாக்கினார்கள். அவர்கள்
பள்ளிக்கான போராட்டத்தில் எங்களுடன் இருந்தவர்கள். அதைக் கண்டித்துக் கூட்டம்
போடவும் பேசவும் மருத்துவர் ஒத்துக்கொண்டார். ஆனால் வன்னியர்கள் அவரிடம்
கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிறகு கூட்டத்துக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார். அதனால்
ஏற்பட்ட கோபத்தால் அவரிடம் அதன் பின்பு நான் பேசவில்லை.
மக்கள் கல்வி இயக்கத்தின் சார்பாகத் திண்டி வனத்தில் தமிழ்வழிக் கல்வி மாநாடு
நடத்தினோம். வீடுவீடாகப் போய் நிதி வசூல் செய்தோம். சென்னையில் சிலர் 150பேரை
வைத்துத் தலைநகர் தமிழ்ச் சங்க மாநாடு போட்டார்கள். அதைப் பார்த்ததும் மாநாடு
பற்றிய பிரமிப்பு போய் எங்களுக்கும் தைரியம் வந்துவிட்டது. மாநாடா ஆர்ப்பாட்டமா
என்பதைச் சுவரொட்டிதான் தீர்மானிக்கிறது. இம்மாநாட்டுக்கென அரசியல் தேவை
ஏற்பட்டது. பாமகவும் ஒருமொழிக் கொள்கைதான் கொண்டிருந்தது. அதனால் போய்ப்
பார்த்தோம். அவரும் கலந்து கொண்டார். பின்னர் பாமகவின் கட்சிக் கொள்கையை,
அரசியல் திட்டத்தைப் பேராசிரியர் மூர்த்தியும் கருணாமனோகரனும் எழுதினார்கள்.
அவற்றைப் பரிசீலித்துப் பார்க்கச் சொன்னார்கள். நான் இருவேறு துருவங்களில் இருந்த
அவர்கள் இருவரையும் இணைய வைத்து ஒரு அறிக்கையைத் தயாரித்தேன்.
இது குறித்துப் பல்வேறு கட்சி முன்னோடிகளிடம் கருத்துக் கேட்பதற்காகச் சென்னையில்
ஒரு ஆலோசனைக் கூட்டம் போட்டோம். அதில் தீரன், மருதமுத்து, தியாகு போன்றோர்
கலந்துகொண்டனர். அந்தச் சமயத்தில்தான் தடா சட்டம் தமிழகத்தில்
அமலாக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் அனைவரும் தடா பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர்.
எனவே சென்னைப் பாமக அலுவலகத்தில் வைத்துத் தடாவை எதிர்க்க ஆலோசனை நடத்தப்பட்டது.
அடக்குமுறைச் சட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஏழு பேர் கொண்ட
குழு. தீரன் தலைமை. அதில் நானும் ஒருவன். தியாகுவும் இருந்தார். இது போன்ற
சட்டங்களின் நோக்கம் மக்களை அச்சுறுத்துவது. எனவே அதை எதிர்த்துப் போராடி மக்களது
அச்சத்தைப் போக்க முயன்றோம். அதில் மிக அழகாகப் பேசியவர் பழநி பாபா. அப்போது
நான் வேலையில்தான் இருந்தேன். எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் அந்தக் காரணத்தைச்
சொல்லி விடுப்பு எடுத்துவிட்டுத்தான் போவேன். தடாவால் பாமககூட நெருக்கமாகப்
பணியாற்ற வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் நான் இடமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால்
தனிப்பயிற்சிக்கு எதிராகப் போராடியதால் இடமாற்றம் செய்யப்பட்டேன். பின்னர் பாமக
சார்பாகச் சிந்தனையாளர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய பொறுப்பை ராமதாஸ் என்னிடம் அளித்திருந்தார்.
அதில் கருணா மனோகரன், மூர்த்தி, கரூர் குப்புசாமி போன்றோர் இருந்தனர். பெரியார்
திடலில் நடந்த வாழ்வுரிமை மாநாடு பாமக வரலாற்றில் முக்கியமானது. அதை நடத்துவது
தொடர்பான கூட்டத்துக்குத் தியாகு வந்திருந்தார். தலித்துகள்-பிற்படுத்தப்பட்டோர்
ஒற்றுமை பற்றிய ஒரு கருத்தை தியாகு முன்வைத்தார். ராமதாஸுக்கும் இயல்பாக அந்தக்
கருத்தில் உடன்பாடு உண்டு. அவர் தலித்துகளுக்கெதிராகச் செயல்பட வேண்டும் என
எண்ணுபவரல்ல.
பாமகவிலிருந்து எப்போது வெளியேறினீர்கள்?
பாமகவினர் காங்கிரஸ் கட்சியுடன் இராணிப் பேட்டை இடைத்தேர்தலுக்காகக் கூட்டணி
வைத்துக்கொண்டார்கள். இயல்பாகவே எனக்குக் காங்கிரஸ் கட்சியைப் பிடிக்காது. பாமக
கொள்கைக்கும் அது எதிரானது. அதனால் நான் விலகிவிட்டேன். அது அரசியல்ரீதியான
விலகல்தான்.
பொதுவாக நீங்கள் ஒரு அரசுப் பணியில் இருந்து கொண்டே இத்தகைய செயல்பாடுகளை
மேற்கொண்டிருக்கிறீர்கள். இதனால் அரசிடமிருந்து, உங்கள் துறையிடமிருந்து
நெருக்கடிகள் உருவாகவில்லையா?
துறை சார்ந்த நெருக்கடி என்று சொன்னால் 1986இல் பள்ளி ஆரம்பித்தபோது, புகார்
எழுதி அனுப்பியிருந்திருக்கிறார்கள். அதற்கு விளக்கம் கேட்டனர். ‘பள்ளி திறப்புக்
குழுவில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்களா?’ எனக் கேட்டு விசாரணை வந்தது.
நண்பர்கள், அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால் கோப்பை முடித்துவிடுவார்கள் என
ஆலோசனை கூறினர். ஆனால் அதில் செயல்பட்டது உண்மைதான் என்று நான் எழுதினேன். நடத்தை
விதிகளுக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறினர். நான் இல்லை என்றேன். நான்
குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டதாகக் கூறி வளர் ஊதியத்தை ரத்து செய்தனர். அதை
எதிர்த்து வழக்குப் பதிவுசெய்தேன். 1990இல் தனிப் பயிற்சியை எதிர்த்துப்
போராடினேன்.
தனிப்பயிற்சியை எதிர்த்து என்ன செய்தீர்கள்?
நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு நன்கொடை எதிர்ப்பு, தனிப்பயிற்சி எதிர்ப்பு
போன்றவற்றைச் செய்தது. அதனால் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் மாணவர்களைக் கொண்டு
தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகப் புகார் கூறி என்னை ஊட்டிக்கு மாற்றச் செய்தனர். எனக்கு
ஊட்டிக்குப் போவது பிடித்திருந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர்
இதை விடக் கூடாது என்றார். அதனால் ராமதாஸ் தலைமையில் இதைக் கண்டித்து ஒரு பெரிய
ஊர்வலம் நடத்தினோம். பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கூட்டத்தில் ராமதாஸ்
பேசிக்கொண்டிருக்கும்போது என் பணிமாற்றம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்
வந்தது. அது ஒரு பெரிய வெற்றி.
91இல் விடுமுறை சமயத்தில் ஒரு பணிமாற்றம். அதை எதிர்த்தும் வழக்குத் தொடர்ந்தேன்.
92இல் மற்றொருமுறை பணிமாற்றம் செய்தபோது, மாணவர்கள் எனக்கு ஆதரவாகப்
போராடினார்கள். மணிவண்ணன் இது குறித்து த இண்டியன் எக்பிரஸில் ஒரு கட்டுரை
எழுதினார். அதை நீதிபதி ஒருவர் படித்திருந்ததால் ஸ்டே கொடுத்துவிட்டார்.
அதன்பின்தான் சந்திரசேகர் அறிவுரைப்படி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தேன்.
அப்போது குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவுமின்றித் தற்காலிகப் பணிநீக்கம் செய்தனர்.
மீண்டும் சந்துருவைப் பார்த்தேன். பணம் வாங்காமல் நமக்காக வழக்கை நடத்தித்தருவார்
அவர். தார்மீகரீதியில் எனக்குப் பெரிய ஆதரவு அளித்தவர் சந்துரு. மொத்தம் ஒன்பது
வழக்குகள் என்மீது போடப்பட்டன. விருப்ப ஓய்வு தர முடியாதெனச் சொன்னதால் அதை
எதிர்த்து ஒரு வழக்குப் போட்டேன். 93இல் போட்ட இந்த வழக்கு 96 வரை நடந்தது.
அதுவரை நீங்கள் வேலையில்தான் இருந்தீர்களா?
ஆம். வெளியில் போனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? வேறு வருமானம் கிடையாதே?
வழக்கில் 96இல் எனக்கு வெற்றி கிடைத்தது. முன் தேதியிட்டு விருப்ப ஓய்வு
கொடுத்தனர்.
நீங்கள் புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மார்க்சிய-லெனினிய இயக்கங்களில் இருந்தபோது
வழக்கு எதையும் சந்திக்கவில்லையா?
பொன்னூரில் தறி முதலியார்களுக்கும் தலித்துகளுக்குமிடையில் ஒரு பிரச்சினை
எழுந்தது. அங்கே ஒரு கோவில் இருக்கிறது. முதலியார்கள் அங்கே தறி ஓட்டுவார்கள்.
திருவிழா சமயத்தில் தலித்துகள் அதைப் பயன்படுத்துவர். தலித்துகள் அங்கு
எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தனர். ஒருமுறை தலித்துகள் திருவிழாவுக்காகக்
கோவிலைப் பயன்படுத்துவதை முதலியார்கள் தடுத்துவிட்டனர். அந்தப் பகுதியில்
வழக்கறிஞர் லூசியானா ‘மண்ணின் மைந்தர் விடுதலை இயக்கம்’ என ஒரு இயக்கத்தை
நடத்திவந்தார். அந்த இயக்கம் தலித்துகளுக்கு ஆதரவாகப் போராடியது.
போராட்டக்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதைக் கண்டித்து நடத்தப்பட்ட
போராட்டத்தில் கலந்துகொண்டேன். பத்திரிகைகளுக்குச் செய்தியளிப்பது தான் என்
பொறுப்பு. அதற்காகக் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை நான்
பார்க்காமல் இருக்க முடியுமா? நான் போன உடனே சிறை வாசலில் என்னைக் கைதுசெய்தனர்.
இரு சமுதாயங்களுக்கு இடையில் மோதல் உருவாகத் தூண்டுதலாக இருந்ததாக என்னையும்
என்னுடன் வந்த மற்றவர்கள்மீதும் காவல் துறை குற்றம் சுமத்தியது. பெண்களை
விட்டுவிட்டனர். தலித்துகளின் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் நிறையப்
பிற்படுத்தப்பட்டோர் கைதாயினர். அது ஒரு நேர்மறையான விஷயம். அங்கே கல்யாணி என்னும்
பெயரைப் பார்த்தவுடன் - காவல் துறையின் கருப்புப் பட்டியலில் என் பெயர் இருந்ததால்,
எங்களை - நாங்கள் 11 பேர் - தனிக் கொட்டடியில் வைத்துவிட்டனர். அந்தக்
கொட்டடிக்குப் பெயர் கண்டம். தூக்குத் தண்டனைக் கைதிகளைத் தூக்கில் போடுவதற்கு
ஒரு மாதத்திற்கு முன்வரை தனியாக வைத்திருக்கும் இடம். யாருடனும் தொடர்பு எதுவும்
இருக்காது. முதல் நாள் ஜெயில். மறுநாள் பெயில். இது நடந்தது 92இல். அப்போது நான்
புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் இல்லை.
98இல் டிசம்பர் 6 நிகழ்வை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரையும் இஸ்லாமியரையும்
கைதுசெய்திருந்தனர். இதற்கு எதிராக ஒரு பத்திரிகைச் செய்தி கொடுக்க வேண்டுமென
ரவிக்குமார் சொன்னார். செய்தியை அவரே எழுதினார். அப்போது இஸ்லாமியர்களுடன்
இணைந்து சதிசெய்ததாக ஒரு வழக்கு எங்கள்மீது போடப்பட்டது. ரவி என்பவர் அப்போது
மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். இருளர்களுக்கு எதிரான
வழக்குகளில் ரவி சரியாகச் செயல்படவில்லை என நான் முன்பு அவர்மீது குற்றம்
சுமத்தியிருந்தேன். அதை மனத்தில் வைத்துக்கொண்டு பழிவாங்கும்விதமாக இப்படி ஒரு
வழக்குப் போடப்பட்டது.
2002இல் திண்டிவனம் அருகே பட்டிணத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரைப்
போட்டு அடித்துவிட்டார்கள். புகார் கொடுத்தோம். எதிர்த் தரப்பினர்
கட்டப்பஞ்சாயத்துக்கு வந்தனர். தலித் இனத்தைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் தலைமையில்
அந்தப் பஞ்சாயத்துக்கு வந்தனர். எப்போதும் கட்டப்பஞ்சாயத்துகளை நான்
ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொள்ளமாட்டேன்.
கடுமையாகப் பேசிவிடுவேன். அதனால் இருளரில் ஒருவரைப் பிடித்துக் காவல் நிலையத்துக்கு
அழைத்துச்சென்று கையெழுத்து வாங்கி அவரை நான் திட்டியதுபோல் என்மேல்
வழக்குப்போட்டார்கள். ஆனால் கைது செய்யவில்லை. அதை எதிர்த்துத் திருமாவளவன்
தலைமையில் விழுப்புரத்தில் 10,000 பேர் திரண்ட பெரிய பேரணியையும்
ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. பல்வேறு
இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அப்பேரணியில் இணைந்தனர்.
பழங்குடியினர் மத்தியில் பணியாற்ற வேண்டிய அவசியத்தை எப்போது உணர்ந்தீர்கள்?
எப்போதிலிருந்து இன்றைக்கு இருக்கும் அமைப்பில் செயல்படுகிறீர்கள்?
மார்க்சிய - லெனினிய இயக்கத்திலிருந்து வந்த பின்பு பண்ணையபுரம் துப்பாக்கிச் சூடு
சம்பவம் தொடர்பான உண்மையறியும் குழுவில் இணைந்து பணிபுரிந்தேன். அப்போது 93இல்
அத்தியூர் விஜயா வழக்கு கவனத்திற்கு வந்தது. ஒரு கைதியைத் தேடிப் போவதுபோல் போய்
அந்த இருளர் இனத்துப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
உண்மையில் இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை. வழக்கமாகப் பாண்டிச்சேரி போலீசார்
இவ்வாறு செய்வதுண்டாம். தமிழகப் போலீசாரும் இதற்கு உடந்தைதான். அதனால் போலீஸ்
நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் பகுதியில் வின்செண்ட் என்பவர் ஒரு தொண்டு
நிறுவனம் நடத்துகிறார். விஜயாவின் அண்ணன் ஏழுமலை அதில் உறுப்பினர். அதன் மூலம்
புகார் தந்தி அனுப்பியுள்ளனர். விசாரணைகள் நடக்கின்றன.
அப்போது இணை ஆட்சியர் ஜவஹர் விசாரித்து அதில் முகாந்திரம் இருப்பதாகச் சொல்லி,
முதல் தகவல் அறிக்கை போடச் சொல்லிவிட்டார். இச்சம்பவம் நடந்து 15 நாள்களுக்குப்
பிறகுதான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. இந்தச் செய்தி போலீஸ் செய்தி
வழியாகத் தினசரி நாளிதழ்களுக்கு வந்தது. அதை வைத்து மணிவண்ணன் எனும் மனித உரிமைப்
பத்திரிகையாளர் மூலமாகத் தகவல் வந்தது. அதுவரை இருளர் என்று ஒரு பழங்குடியினர் சாதி
இருப்பதே எனக்குத் தெரியாது. அதன் பின்பு பவனந்தி தலைமையில் உண்மையறியும் குழு
அமைத்து, வழக்கறிஞர் லூசியானா போன்றோர் அங்கே சென்றோம். அந்த உண்மை அறியும்
குழுவின் அறிக்கையை இண்டியன் எக்ஸ்பிரஸிலும் தினமணியிலும் மிகப் பெரிய செய்தியாக
வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து விஜயாவுடைய அப்பாவைத் திருப்பதி போலீஸ் அழைத்துச்
சென்றுவிட்டனர். அந்த வழக்கைக் கையில் எடுத்தோம். நானும் சிஸ்டர் லூசியானாவும்
திருப்பதி போய் ரத்தினம் முலமாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அவரை பெயிலில்
எடுத்தோம். இதற்கிடையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் மூலமாக ஆந்திரா போலீஸ்
விஜயாவின் அப்பாவைக் கடத்தியது ஹைதராபாத்தில் ஆங்கில நாளிதழில் வெளியானது. இதைப்
படித்த இளைஞர் ஒருவர் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எனவே விஜயாவின் தந்தையை
ஹைதராபாத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு எங்களிடம் ஒப்படைத்தனர்.
அங்கே மனித உரிமைப் போராளி பாலகோபால் இருக்கும் இடத்தில் தங்கியிருந்தோம்.
ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தவர் இளம் வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கு பற்றி
நீதிமன்றத்துக்கு வழிகாட்ட மூத்த வழக்கறிஞர் சீனிவாசலு என்பவரை நியமித்திருந்தனர்.
நாங்கள் சென்று கண்ணபிரானைப் பார்த்தோம். அவர் சீனிவாசலுவை அறிமுகப்படுத்தினார்.
அவர் இவ்வழக்கு குறித்த முன் தயாரிப்புகளோடு இருந்தார். அங்கே அன்று நீதிமன்றப்
புறக்கணிப்பு வேறு. எங்களிடம் போதிய பணமும் இல்லை. நாங்கள் தமிழகத்திலிருந்து
சென்றிருந்ததால் வழக்கறிஞர் சங்கத்தினரே எங்களுக்குப் போக்குவரத்துக்கென 1,000
ரூபாய் கொடுத்தனர். இந்த வழக்கில் திருப்பதி போலீஸ் விஜயாவின் அப்பாவுக்கு 5,000
ரூபாய் தர வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் பின்பு விஜயா மூலமாகக்
கிட்டத்தட்ட 16 வழக்குகள் எங்களிடம் வந்தன. அதனால் இவர்களுக்கென்று ஓர் அமைப்பு
வேண்டும், அதற்கு ஒரு தலித் தலைமை ஏற்கவேண்டுமென நினைத்தேன். விடுதலைச்
சிறுத்தைகளைச் சார்ந்த லாரன்ஸை வைத்து அமைப்பை உருவாக்குவதாக ஏற்பாடு. கடைசி
நேரத்தில் அவரால் வர இயலவில்லை. கூட்டம் திட்டமிட்டபடி கூடியதால் ரத்தினம், சிஸ்டர்
லூசியானா ஆகியோர் ஆலோசனைப்படி நானே அந்த அமைப்புக்குத் தலைமையேற்க
வேண்டியதாயிற்று. எனவே 04.08.1996இல் மயிலத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச்
சங்கம் உருவானது. 01.10.1996இல் இருளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு பேரணி
நடத்தினோம். வழக்கமான முழக்கங்களுக்குப் பதிலாகப் பழமலய் பாடல் எழுதிப் பாடினார்.
பல ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைத்ததுதான் நான் செய்த செயல்.
என்னென்ன கோரிக்கைகள்?
எஸ்சி, எஸ்டி சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், சாதிச் சான்று வழங்க வேண்டும்,
மனைப்பட்டா வழங்க வேண்டும், உண்டு உறைவிடப் பள்ளி வேண்டும், இருளர்களுக்குத் தனி
இயக்குநரகம் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தோம்.
பழங்குடி இன மக்கள்தொகை எவ்வளவு?
தமிழ்நாடு அளவில் ஆறரை லட்சம் பேர். இருளர் குழு அதில் ஒரு முதன்மையான குழு.
இவர்கள் ஒரு லட்சம் பேர். மலையில் இருப்பவர்கள் இரண்டு லட்சம் பேர்.
பழங்குடி இருளர் அமைப்பு இருளருக்கானது மட்டும்தானா?
ஆம். அப்படித்தான் வைத்துக்கொண்டோம். எல்லாப் பழங்குடியினருக்கும் சேர்த்து ஒரு
முழுமையான அமைப்பாக வைத்துக்கொண்டால் சரிவரச் செயலாற்ற இயலாது என்பது என் கருத்து.
இந்தக் கோரிக்கைகளை வைத்து இவ்வளவு நாள் வேலை செய்துள்ளீர்கள். இதன் தாக்கம் என்ன?
2008வரை 348 வழக்குகள். இந்த வருஷத்தில் 26 வழக்குகள். இதன் விளைவாகக்
கட்டப்பஞ்சாயத்து என்பது வழக்கத்தில் இல்லை. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில்
இருளர்களுக்கு ஏதோவொரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. 1999
முதல் கோடைக் காலக் கல்விப் பயிற்சி முகாம் நடத்துகிறோம். இருளர்களின் எழுத்தறிவு
அரசுப் புள்ளிவிவரப்படி 12 சதவிகிதம்தான். நாங்கள் எடுத்த ஒரு புள்ளிவிவரப்படி 12.3
சதவிகிதம். இப்போது இருளர்கள் மத்தியில் கவசம், பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை
என்னும் எமது அமைப்பு, வாழை ஆகிய சில அமைப்பினர் கல்விப் பணி மேற்கொள்கிறார்கள்.
எமது கல்வி அறக்கட்டளைக்கு எழுத்தாளர் சிவகாமி ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தந்தார்.
வாழை அமைப்பினர் ஆறாம் வகுப்பு படிக்கும் 32 குழந்தைகளைத் தத்து எடுத்துக்
கல்வியளிக்கிறார்கள்.
இனச் சான்று பெற்றுத்தருவது தொடர்பாக என்னவிதமான முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது?
அது ஒரு தொடர் போராட்டம். கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்தினத்தை
ரவிக்குமாருடன் போய்ப் பார்த்து இருளர்கள் அனைவருக்கும் இனச் சான்று கிடைக்கச்
செய்தோம். ஐந்து, ஆறு கிராமங்களுக்கு மொத்தமாகச் சான்று கொடுத்தனர்.
பிருந்தாதேவி எனும் மாவட்ட வருவாய் அலுவலர்தான் சான்று கொடுத்தார். இருவருக்கும்
நாங்கள் பாராட்டு விழா நடத்தினோம்.
ராஜ்குமாரைக் கடத்திய பின்பு வீரப்பன் அழைக்க விரும்பியவர்களில் நீங்கள் ஒருவர்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சென்ற குழுவிலும் இடம்பெற்றிருந்தீர்கள். அது
தொடர்பான அனுபவங்களைச் சொல்லுங்கள்...
இந்தப் பிரச்சினையை ஒட்டி நெடுமாறன் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ராஜ்குமார் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு கோரிக்கைகளும் நியாயமானவை என்னும்
விதத்தில் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்ற கருத்து நிலவியது. ரவிக்குமாரும்
வந்திருந்தார். அங்குதான் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உருவாகியது. அப்போது நான்
பிள்ளையார் கோவில் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் இருந்தேன். 2000இல் திண்டிவனம்
நீதிமன்ற வளாகத்தில் பிள்ளையார் கோவில் எழுப்பினர். 1999இல் திண்டிவனத்தில் ஊரகக்
கூட்டுறவு வங்கியில் பிள்ளையார் சிலை வைத்தனர். மார்க்சிஸ்ட் கட்சி உட்பட ஒத்த
கருத்துக்கொண்ட எல்லா இயக்கங்களையும் ஒன்றிணைத்துச் சிலையை அகற்றப் போராடினோம்.
போலீசார் என்னைக் கைதுசெய்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நான் சென்னையில்
இருந்தேன். எனக்காக ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியைச்
சேர்ந்த ராமமூர்த்தி என்ற வழக்கறிஞர். அவர் அங்கே வழக்கறிஞர் சங்கத் தலைவர்.
வழக்கறிஞர்களுக்கு எதிராகக் கல்யாணி இருக்கிறார். ஜாமீன் மனுவுக்கு விண்ணப்பிக்கக்
கூடாது என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். அவரோ நான் தலைவர் பதவியை வேண்டுமானால்
ராஜினாமா செய்துவிடுகிறேன் எனச் சொல்லிட்டு ஜாமீன் மனுவுக்கு விண்ணப்பித்தார்.
அப்போதுதான் இந்த வீரப்பன் தூதுக்குழு விஷயம் வந்தது. முதலமைச்சரை நெடுமாறனோடு
போய்ப் பார்த்தபோது இந்த வழக்கு பற்றிச் சொல்லி ஜாமீன் நிபந்தனையைத்
தளர்த்தினால் தான் அங்கே போக இயலும் என விளக்கினேன். நக்கீரன் கோபாலுக்கு
வழக்குப் பதிவுசெய்யமாட்டோம் என்று எழுதிக்கொடுத்தது போல் எனக்கும் வழக்குப்
பதிவுசெய்யமாட்டோம் என இரண்டு அரசுகளும் எழுதிக்கொடுத்தன. ஜாமீன் நிபந்தனை உடனே
தளர்த்தப்பட்டது.
வீரப்பன் கோரிக்கை நிறைவேறியதோ இல்லையோ என் கோரிக்கை நிறைவேறியது. அப்போதுதான்
முதலில் கொளத்தூர் மணியைச் சந்தித்தேன். காட்டுக்குள் போக அனுமதி கிடைக்கும்வரை
ஈரோட்டில் தங்கி அதற்கான தயாரிப்பு வேலைகளைச் செய்தோம். அரசின் முடிவுகள், மனித
உரிமைத் தளத்தில் என்னென்ன செய்வோம் எனவும் வீரப்பனிடம் எதையெதைச் சொல்ல
வேண்டுமெனவும் விவாதித்து முடிவெடுத்தோம். மறுநாள் இரவில் காட்டுக்குள் போனோம்.
மனித உரிமை கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றும், இல்லாவிடினும் மனித உரிமை
தளத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் இதை எடுத்துக்கொண்டு போவோம் - அந்த
அடிப்படையில் மனித உரிமை பிரச்சாரப் பயணத்தைத் தமிழகம் முழுக்க நடத்தினோம். -
இரண்டு மாநிலக் காவல் துறைகளும் மக்கள் உரிமை விஷயத்தில் எப்படிச்
செயல்பட்டிருக்கின்றன என்பதையும் மக்கள் மன்றத்துக்குக் கொண்டுபோவோம், தடா
வழக்கில் முடிந்த உதவிகளைச் செய்வோம். சதாசிவம் விசாரணைக் கமிஷன் விஷயத்தில், மனித
உரிமைத் தளத்தில் ஏற்கனவே செய்து வருகிற வேலைகளைத் தொடர்ந்து செய்வோம்
போன்றவற்றை வீரப்பனிடம் எடுத்துச் சொன்னோம்.
வீரப்பன் கர்நாடக அரசுக்கு ஒரு நெருக்கடியான சக்தியாக இருந்தாரா?
ஆம். ராஜ்குமார் மிக முக்கியமான கன்னட நடிகர். அவரைப் பிடித்து வைத்திருக்கும்போது
அரசுக்கு அது நெருக்கடிதானே! மேலும் வீரப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்டவை மனித
உரிமை கோரிக்கைகள்தாம். வீரப்பன் மாதிரி ஆள்கள் உருவாகப் போலீஸாரின்
அத்துமீறல்கள்தான் காரணம்.
வனப்பகுதி மக்களின் பிரச்சினைகள் என்ன? ஒரு பக்கம் வீரப்பன் போன்றவர்கள் வன
வளத்தைச் சுரண்டுபவர்களாகவும் சமூக விரோதச் சக்திகளாகவும் பார்க்கப்படுகிறார்கள்,
மறுபக்கம் வனப்பகுதி மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது
அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வனப்பகுதியைக் கொள்ளையடித்தது கட்சிக்காரர்கள்தான்.
வீரப்பன் மாதிரியானவர்கள் பொதுப்புத்தியில் வீரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனரே,
அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர் சிறு வயது முதல் வனப்பகுதியில் இருந்ததால் கட்சிக்காரர்கள் ஏதாவது பிரச்சினை
எனில் அவரிடம் சென்றிருக்கின்றனர். அவர் சொல்வதுபோல் நடந்துள்ளனர். கிட்டத்தட்ட
ஒரு கட்டப்பஞ்சாயத்து மாதிரிதான் நடந்திருக்கிறது. நாங்கள் அவரிடம்
பேசிப்பார்த்ததில் யானைத் தந்தம் கடத்துவது போன்ற செயல்களை அவர் செய்ததுபோல்
தெரியவில்லை. அது கட்சிக்காரர்கள் அவருக்குக் கொடுத்த ஒரு படிமம் எனத்
தோன்றுகிறது. மூன்று நாட்கள் அங்கே இருந்ததை வைத்து அங்கே உள்ள உண்மை நிலவரங்களை
அறிந்துகொண்டுவிட்டதாகச் சொல்ல முடியாது அல்லவா? ஆனால் வீரப்பன் தேடுதல் வேட்டை
என்னும் பெயரில் அதிரடிப்படையினர் மிகக் கடுமையான அத்துமீறல்களில்
ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வாச்சாத்தியை எடுத்துக்கொள்ளுங்கள் வனத்
துறையினர் இருக்கும் இடங்களில் இத்தகைய அத்துமீறல்கள் அதிகமாக இருக்கத்தான்
செய்கின்றன.
அவையெல்லாம் வீரப்பன் போன்ற கொடியவர்களை ஒழிக்க எடுத்த நடவடிக்கை எனச்
சொல்லப்படுவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
வீரப்பனைக் கொடியவனாகப் பொதுமக்கள்கூடப் பார்க்கவில்லையே. வீரப்பனின்
நடவடிக்கைகளை நான் நியாயப்படுத்தவில்லை. அதேசமயத்தில் அரசாங்கம் சொன்னதை அப்படியே
ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நீங்கள் நகரத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு எதிரான
விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். காட்டுக்குள் இருப்பவர்கள் என்ன செய்ய
இயலும். துப்பாக்கியால் சுட்டனர். இதில் நாம் யாரை நியாயப்படுத்துவது? கடைசியில்
ராஜ்குமார் உள்பட எல்லாரையும் ஒப்படைத்துவிட்டு விடைபெறும் போது சேத்துக்குளிக்
கோவிந்தன் சொன்னது, “தோழரே சதாசிவம் கமிஷனைப் பாத்துக்கங்க” என்பதுதான். “நீங்க
சுடுறீங்க நாங்க சுடுறோம். அவ்வளவுதான். அப்பாவி மக்களை ஏன் தொந்தரவு பண்றீங்க?”
என்பதுதான் அவர்களது நிலை.
இருளர் பாதுகாப்பு, கல்வி போன்றவற்றிற்காகப் போராடியிருக்கிறீர்கள். அது தவிர
ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கிறீர்கள். மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கங்களில்
பெற்ற அனுபவங்களை முன்வைத்து உருவாகி வந்திருக்கிறீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை
ஒரு கட்டத்துக்கு மேல் மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் சுருங்கிப்போய்விட்டன.
சிதறிப்போய்விட்டன. அவற்றின் தாக்கங்கள் பல அரங்குகளில், குறிப்பாகக் கருத்துலகில்
எதிரொலித்திருக்கின்றன. இப்போது உங்களது செயல்பாடுகளை அவற்றோடு எப்படிப்
பொருத்திப் பார்க்கிறீர்கள் அல்லது விலக்கிப் பார்க்கிறீர்கள்?
அந்தப் பணியின் தொடர்ச்சியாக இப்போது செயல்படுறேன் என்று சொல்ல முடியாது. இருளர்
பாதுகாப்பு இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல. அடிப்படையில் அது ஒரு மனித உரிமை
இயக்கம். இப்போது எனது செயல்பாடுகளை மனித உரிமை இயக்கம் என்ற அளவில்
சுருக்கிக்கொண்டேன். இப்போது அந்த அமைப்புகளும் நம்பிக்கையூட்டக் கூடியவையாய்
இருப்பதாகத் தெரியவில்லை.
தன்னார்வ அமைப்புகள் பற்றி உங்களுக்கு ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. உங்கள்
செயல்பாடுகளில் எந்த அளவு அவர்களின் தாக்கம் இருக்கிறது?
இந்தப் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தை எந்தக் காலத்திலும் ஒரு தன்னார்வ
அமைப்பாக மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். வாழை அமைப்பு கல்வி
தொடர்பாக வேலை செய்யக்கூடிய ஒரு அமைப்பு. மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்கள்
முதல்தலைமுறையில் கல்வி கற்கத் தொடங்கியவர்களுக்காக எங்கள் அமைப்போடிணைந்து வேலை
செய்கின்றனர். கவசம் ஒரு மிஷனரி. பழங்குடியினர் கல்வி அறக்கட்டளை என்பது
ஆளாளுக்குப் பணம் போட்டு நடத்தப்படுவது. ஏதாவது ஒரு போராட்டம் வரும்போது அதில்
பங்குகொள்ளப் பலதரப்பினரும் ஆர்வத்துடன் வரும்போது எல்லாரையும் இணைத்துச்
செயல்படுகிறோம்.
அரசியல்ரீதியான பின்புலமோ அரசியல்ரீதியான அமைப்பின் வழிகாட்டுதலோ இல்லாமல் மனித
உரிமை சார்ந்த அமைப்புகளோ விளிம்புநிலை மக்களுக்காக, வாழ்வியல் ஆதாரங்களுக்காகப்
போராடும் அமைப்புகளோ தொடர்ந்து இயங்க இயலுமா?
அரசியல் பின்புலம் இல்லாமல் செயல்பட முடியும் என்றுதான் நினைக்கிறேன்.
ஜனநாயகப் போராட்டங்கள் அரசியல் பின்புலம் இல்லாமல் தாக்கத்தை ஏற்படுத்த இயலுமா?
எல்லாவற்றையுமே அரசியல்தானே தீர்மானிக்கிறது. அதனால் அரசியலுக்கான
முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் எந்த அரசியல்
இயக்கத்தைப் பின்புலமாக வைத்து நாம் செயல்படுவது என்று ஒரு கேள்வி வருகிறது
இல்லையா?
உங்கள் இயக்கத்துக்கு ஒரு அரசியல் தன்மையை உருவாக்க முடியுமா?
அதை ஒரு சங்கமாகத்தான் வைத்திருக்கிறோம். அரசியல் தன்மையானதாக்க முடியும் எனத்
தோன்றவில்லை. நம்முடன் இணைந்து பணியாற்ற விடுதலைச் சிறுத்தைகள்தான் வருவார்கள்.
கம்யூனிஸ்ட்கள் எப்போதும் எங்களை நக்ஸலைட்டுகளாகத்தான் பார்க்கின்றனர். இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியை இணைத்திருக்கிறோம். மார்க்சிஸ்ட்கள் எங்களோடு வரமாட்டார்கள்.
இருளர் பிரச்சினைகளைத் தொடர்ந்து கையிலெடுப்பதால் பாமகவும் வருவதில்லை.
பழங்குடியினர் போன்றவர்கள் தங்களுக்கான ஒரு அரசியல் பார்வை இல்லாமல் தங்கள்
உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட முடியுமா? அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று
வரும்போது உங்களிடமோ உங்களைப் போன்ற பிற அமைப்புகளிடமோ வருகிறார்கள். நீங்கள்
சட்டப்படி தீர்வு காண்கிறீர்கள். இப்பிரச்சினைகள் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு
வருவதோ தங்களுக்காகத் தாங்களே போராடுவதோ சாத்தியமா?
அரசியல்ரீதியாக நாங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்தோம்.
தேர்தல் புறக்கணிப்பிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு விதிவிலக்கு அளித்தோம்.
அதன் நோக்கம் எங்கள் போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான்.
எங்கள் அமைப்பு இருளருக்கான சங்கமாக இருந்தாலும் வன்னியர் சங்கத்துக்கும் இதற்கும்
வித்தியாசம் இருக்கிறது. அடிப்படையில் இது ஒரு மனித உரிமை அமைப்பு;
ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்பு வைக்கிற கோரிக்கைகள் எல்லாமே
மனித உரிமை கோரிக்கைகள்தாம். மனித உரிமை சார்ந்து செயல்படும்போது ஒரு கட்சிப்
பின்னணியோடு செயல்படுவது சிரமம். அதேசமயத்தில் ஒரு மைய நீரோட்ட அரசியல் கட்சி
மனித உரிமைத் தளத்தில் பெரிதாக அக்கறை காட்டியிருக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது.
மார்க்சிஸ்ட்களைச் சொல்லலாம். அவர்கள் பத்மினி வழக்கு மாதிரி சில வழக்குகளை
எடுத்துப் போராடியிருக்கின்றனர்.
மனித உரிமை அமைப்புகள் அடிப்படையில் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்
சட்டமீறல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதை வலியுறுத்திப் போராட்டம்
நடத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் சட்டமீறல்கள் என்பது அவற்றை மீறித் தீவிரமாகப்
போய்க்கொண்டிருக்கின்றன. சேதுக்கால்வாய்ப் பிரச்சினையில் மனித உரிமை அமைப்புகளின்
குரல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதேபோல் தினகரன் அலுவலக ஊழியர்கள்
எரிப்புச் சம்பவத்திலும் அவர்கள் குரல் எடுபடாமல் போனது. இதற்குக் காரணம் என்ன?
இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு அரசியல்ரீதியில்தான் தீர்வுகாண இயலுமே தவிர மனித
உரிமை அமைப்புகளால் தீர்வுகாண இயலாது. கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மனித உரிமை அமைப்பு
இருக்க முடியாது. ஒரு அரசியல் கட்சிக்கு மாற்றாகக் கட்சி தான் இருக்க முடியும்.
அழகிரியை விமர்சித்து சி. மோகன் கொஞ்சம் பேசினார். அவரையும் பேசவிடவில்லை. அவர்
திமுகவைத் தாக்கிப் பேசியவற்றில் பல செய்திகள் இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்ததே தவிர
தீக்கதிரில் வரவில்லை. அரசியல் கட்சிகளால் செய்ய முடியாததை மனித உரிமை அமைப்புகளால்
செய்ய இயலாது. மனித உரிமைகள் அமைப்புகளால் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக்
கொண்டுவர முடியும். அவ்வளவுதான்.
கடந்த காலங்களில் மார்க்சிய - லெனினிய இயக்கங்களின் வெகுஜன அமைப்புகளில்
ஒருங்கிணைந்த ஒரு பார்வை இருந்தது. அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இப்போது உள்ள
அமைப்புகளுக்கிடையே உருவாக வாய்ப்பு இருக்கிறதா?
பொடா வரும்போது முயன்றோம். அதிலேயே இருவிதக் கருத்துகள் வந்தன. பொடாவை
எதிர்க்கிற அனைத்துச் சக்திகளையும் நாம் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்.
பரந்துபட்ட தளத்தைக் கட்ட வேண்டும் என்பது என் கருத்து. அப்படியில்லாமல்
இதையிதையெல்லாம் ஒத்துக்கொள்கிறவர்களை மட்டும்தான் இணைத்துக்கொள்ள வேண்டும்
என்பது மற்றொரு கருத்து. பொடாவை எதிர்க்க வேண்டுமெனில் ராமதாஸ்
போன்றவர்களைத்தான் தலைவராகப் போட முடியும். கல்யாணி போன்றவர்கள் பின்னால் மக்கள்
வரமாட்டார்கள். இந்த அணுகு முறையிலேயே சில மாறுபாடுகள் வந்தன. மனித உரிமை
அமைப்புகளுக்கு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது. அது பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது.
ரீட்டா மேரி வழக்குக்காக மதிமுகவோடு சேர்ந்து வேலைசெய்தோம். மதிமுக
எடுத்துச்செய்தது போன்று பேசப்பட்டுவிடும் என்று கூறினார்கள். தொடர்ந்து
வேலைசெய்யும்போது மக்களுக்குத் தெரியும் யார் வேலைசெய்கிறார்கள் என்பது. எந்தப்
பிரச்சினைக்கு யார் வருவார்களோ அவர்களை வைத்துக்கொண்டுதான் பணியாற்ற
வேண்டியதிருக்கிறது. ஒரு பிரச்சினையின்போது ஒரு அமைப்பு வராததால் அடுத்த
பிரச்சினையின்போது அதை அணுகாமல் இருப்பதில்லை. பிரச்சினை வரும்போது
ஆலோசனைக்கூட்டம் போடுகிறோம். எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்புக் கொடுக்கிறோம்.
எந்தக் கட்சியையும் ஒதுக்கிவைப்பதில்லை. யார் வருகிறார்களோ அவர்களை
இணைத்துக்கொள்கிறோம். இப்படித்தான் இத்தளத்தில் இயங்க முடியுமென நினைக்கிறேன்.
ரத்தினத்தின் அணுகுமுறை என்னவென்றால் யார் வரவில்லையோ அவர்களை அம்பலப்படுத்த
வேண்டும் என்று நினைக்கிறார். இது அரசியல் தளத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.
மனித உரிமைத் தளத்தில் அம்பலப்படுத்தும் வேலை செய்ய வேண்டாம் என நான் சொன்னேன்.
இந்தக் கட்சி இதற்கு வந்தது இதற்கு வரவில்லை என்பதை அரசியல் கட்சிகள் வேண்டுமானால்
சொல்லிக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட கட்சி ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைக்காகவும் இருப்பதாகச்
சொல்லிக்கொண்டு சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு வராமல் போகும்போது அதை
அம்பலப்படுத்த வேண்டாமா?
அதைச் செய்ய வேண்டியது ஒரு கட்சி. கட்சி என்பது எதார்த்தத்தில் நீர்த்துப்போன
அமைப்பு. மனித உரிமை அமைப்பு போராளிகளின் அமைப்பாகத்தான் இருக்க முடியும். ஒரு
மாவட்டத்துக்கு இருபது பேர் இருந்தால் போதும். அதிகமான ஆள்கள் தேவையில்லை. ஆள்கள்
அதிகமாக இருந்தால் வேலை செய்யும் மனநிலை நீர்த்துப்போய்விடும். மனித உரிமைத்
தளத்தில் ஆறேழு பேரைத்தான் வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு கட்சியில்
லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். எனவே ஒரு கட்சியின் செயல்பாடின்மையை மற்றொரு
கட்சிதான் பதிலீடுசெய்ய முடியும்.
நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தலித் அல்லாத தலித் ஆதரவாளர் எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறீர்கள். தலித் அல்லாத தலித் ஆதரவாளன் என்னவாக
இருக்க வேண்டும் என்ற அணுகுமுறையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். தலித் அரசியலை
ரவிக்குமார் போன்றோர்களுடன் சேர்ந்து உருவாக்கியதில் உங்களுக்கும் ஒரு பங்குண்டு.
தலித் இயக்கங்களோடு உங்களுக்கு நெருக்கமான தொடர்பும் உண்டு. இந்தத் தொடர்பு
வெறும் ஆதரவுநிலையிலிருந்து வந்ததாகச் சொல்ல முடியாதில்லையா? ஒரு தலித் ஆதரவாளன்
என்னவாகத் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்?
தலித்துகளுக்கு இயல்பாகவே ஜனநாயக சக்திகள் ஆதரவாக இருந்தாக வேண்டும்தானே? அந்தக்
கோணத்திலிருந்துதான் செயல்படுகிறேன். சில இடங்களில் தலித்துகளை எதிர்த்துக்கூட
வேலைகளைச் செய்திருக்கிறேன்.
ஜனநாயகம்தான் அளவுகோல் இல்லையா?
கண்டிப்பாக ஜனநாயகம்தான் அளவுகோல். அடிப்படை. எனக்கு ஒரு பிற்படுத்தப்பட்ட இன
மனநிலைதான் இருக்கிறது. தலித் மனநிலை இல்லை. இருக்க முடியாது. அவரவர்கள் பிறந்த,
வளர்ந்த விதம் சார்ந்து ஒவ்வொருவருக்கும் ஒரு மனநிலை இருக்கிறது. நான் என்னதான்
தலித்துகளுக்கு ஆதரவாகப் பேசினாலும் ஒரு தலித் மனநிலையில் நான் இல்லை. நான்
பிற்படுத்தப்பட்டவாகளிடம் பேசும்போது எனக்கும் அவர்களுக்குமுள்ள இடைவெளி குறைவாக
இருக்கிறது. எனக்கும் தலித்துகளுக்கும் இடைவெளி அதிகமாக இருக்கிறது. ஒரு தலித்,
பிற்படுத்தப்பட்டவர்களிடம் பேசும்போது தள்ளி நின்று பேசுகிறார். ஆனால் நான் ஒரு
பிற்படுத்தப்பட்டவரிடம் தலித்துகளுக்காகப் பேசும்போது ஒரு நெருக்கம் இருக்கிறது.
அவர்களுக்கு உறைக்கிற மாதிரி இது இருக்குமென நான் நம்புகிறேன். ஒரு தலித் தலைமையில்
போராடுவது என்பது வேறு. ஆதரவு நிலையில் நின்று போராடுவது என்பது வேறு.
திருமாவளவன் பேசுவதை என்னால் பேச முடியாது. உக்கிரமான அனுபவங்களிலிருந்து பேசுவது
வேறுதான். இப்ப திமுகவில் உள்ள ஒரு தலித்துக்கு ஒரு பிரச்சினை என்றால்
திமுகக்காரர்கள் பேசுவதில்லை. விடுதலைச் சிறுத்தைகள்தான் வர வேண்டியதிருக்கிறது.
தலித்துகளுக்கான கட்சி தனியாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால்
வலுவாகப் பேச இயலும்.
அருணா குலசேகரன் ஒரு மாநாடு நடத்தினார். “தலித்துகளுக்காக ஒரு மாநாடு
நடத்துகிறீர்கள். இதில் எஸ்சி எஸ்டி சட்டம் குறித்த தீர்மானம் போடவில்லையே ஏன்
தோழர்?” என நான் கேட்கிறேன். கொஞ்சம் தலித் அல்லாத தோழர்களும்
வந்திருக்கிறார்கள் அதனால்தான் என்றார். இவர்களே அதைச் சொல்லும்போது எனக்கு
உடன்பாடு கிடையாது. ஒரு தலித் இயக்கம் எப்படி இருக்க வேண்டுமென்பதில் எனக்கு ஒரு
பார்வை இருக்கிறது. தலித் ஒருவர் புரட்சிகர இயக்கத்துக்குப் போவதற்கு நான் எதிரி
அல்ல. ஆனால் அவர் தலித்துகளுக்கான ஒரு அமைப்பில் செயல்படுவதைத் தவறாகப் பார்க்க
முடியாது. தலித் அரசியல் கூட்டங்களில் தலித் பிரச்சினைகளை மட்டும்தான்
பேசுகின்றனர். மற்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் தலித் பிரச்சினை களைத்
தவிர்த்துவிட்டு மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இன்னும் இந்த இடைவெளி
இருக்கிறது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் பாலன் போன்றவர்கள் செய்தவற்றை
விதிவிலக்காகப் பார்க்க வேண்டியதிருக்கிறது. நாகப்பட்டினம் பகுதிகளில் கம்யூனிஸ்ட்
கட்சிகளால் தலித்துகளுக்கொரு கிளை மற்றவர்களுக்கு ஒரு கிளை என்றுதான் வைக்க
முடிகிறது. பொதுவான ஒரு கிளை வைக்க முடியவில்லை. இந்தச் சிக்கல்கள் இருக்கின்றன.
தஞ்சையில் மார்க்சிஸ்ட் கட்சிக்காரர் ஒருவர் கள்ளர். அவர் தீண்டாமைக்கெதிராகச்
செயல்பட்டதால் அவரைக் கொன்றுவிட்டார்கள். தீண்டாமை விஷயங்களுக்கு எவ்வளவு அழுத்தம்
கொடுக்கப்பட வேண்டுமோ அவை கொடுக்கப்படவில்லை. அவர்கள் தனியாக இருந்து
கத்தும்போதுதான் அவர்கள் பிரச்சினை வெளியே தெரிகிறது. இல்லையெனில் அது வெளியே
தெரிவதில்லை.
இது போன்ற ஒரு சூழலில் வர்க்கரீதியான அரசியல் சாத்தியமா?
வர்க்கரீதியான அரசியல் சாத்தியம்தான். வர்க்க ஸ்தாபனங்கள் சாதிரீதியான
பிரச்சினைகளைத் தொடர்ந்து எடுத்திருந்தால் திருமாவளவன் வந்த உடனே இவர்கள் ஏன்
அங்கே கூட்டமாகப் போகிறார்கள். நமது செயல்பாட்டை வைத்துத்தான் நம்மகூட இருப்பதா
இல்லையா என்பதைத் தீர்மானிப்பார்கள். மார்க்சிஸ்ட்டுகள் ஒரு மனித உரிமை
பிரச்சினையைக் கையிலெடுத்தால் அந்த ஆள்களிடம் நம்மைப் பேசவேவிட மாட்டார்கள்.
இப்போது முன்பைவிடப் பரவாயில்லை.
நீங்கள் தொடக்கத்திலிருந்தே தமிழ்மொழி, தேசிய இனப் பிரச்சினை தொடர்பான
விஷயங்களின் மீது அக்கறை செலுத்தி வருகிறீர்கள் அல்லவா?
தமிழ்மொழிப் பற்றுக் காரணமாக நான் எப்போதுமே பேசியதில்லை. நான் திமுகவில்
இருக்கும்போதுதான் அப்படியொரு கருத்து எனக்கு இருந்தது. நான் மார்க்சிய - லெனினிய
இயக்கத்துக்கு வந்தபோது அவரவர் தாய்மொழி அவரவருக்குப் பெரிது என்னும் எண்ணம்
வந்துவிட்டது. நமது மொழிக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். அதற்காக நாம் சிறப்பு
உரிமை கொண்டாட முடியாது. மொழிப் பிரச்சினையை ஜனநாயக உரிமையாகப் பார்க்கிறேன். என்
மொழியில் படிப்பதற்கு எனக்கு எல்லா வாய்ப்பும் இருக்க வேண்டும் என்கிறேன். தமிழக
அரசு போடுகிற கடிதம் தமிழில் இருக்க வேண்டாமா?
தாய்த் தமிழ்ப் பள்ளி பற்றியான உங்கள் கருத்து...
அரசுப் பள்ளிகள் எல்லாமே தாய்த் தமிழ்ப் பள்ளிகள்தாம்.
நீங்கள் தொடங்கிய தாய்த் தமிழ்ப் பள்ளிகள் பற்றி...
தாய்த் தமிழ்ப் பள்ளிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 2000இல்
தொடங்கப்பட்டன. வெளி வேலைகள் பார்க்க முடியாதபடி அப்பள்ளிகளின் வேலைகள் என்னை
முடக்கிவிடுகின்றன.
இப்போது நீங்கள் அதில் இருக்கிறீர்களா?
நானும் அப்படி ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையில ஒரு பள்ளி ஆரம்பித்தேன்.
கட்டட வேலைகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. ரவிக்குமார் 4 லட்சம்
வாங்கிக்கொடுத்தார். நடிகர் சூர்யா 2 லட்சம் கொடுத்தார். எனது மாணவர்கள் ஒரு
லட்சம் ஒன்னேகால் லட்சம் என்று இடம் கொடுத்திருக்கின்றனர். கீழ்மட்டத்தில்
வாங்குவதற்கான பரந்துபட்ட முயற்சி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?
மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழுமூச்சாகச் செயல்பட வேண்டும் என நினைத்தேன்.
அதற்குக் குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பின்னர்
நாள் கடந்துவிட்டது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது நல்லதென்று இப்போது
நினைக்கிறேன். வேலைகள் செய்வதற்குத் தடையில்லாமல் இருக்கிறது.
வாழ்க்கை பற்றிய உங்கள் ஒட்டுமொத்த மதிப்பீடு என்ன? நிறைவாக உணர்கிறீர்களா?
நிறைவாகத்தான் உணர்கிறேன். ஒன்று சொல்லட்டுமா? திண்டிவனத்தில் ஒரு வக்கீல்
இருந்தார். அவரை எஸ்ஸி, எஸ்டி சட்டத்தில் உள்ளே தூக்கிவைத்தேன். அதைத்தான் ரொம்ப
நிறைவாக உணர்கிறேன். அவர் இப்போது இறந்துவிட்டார். நடராஜன் என்பது அவருடைய பெயர்.
அவர் ஜாமீனில் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முத்துராமன் என்ற வக்கீல்
ஆலோசனை தந்தார். யாரையாவது கெடுப்பதற்கு அருமையான ஆலோசனை தருவார் அவர்.
மனுஷனுக்குப் பழிவாங்கும் உணர்வு இருக்குய்யா. நமக்குப் பிடிக்காதவர்களைப்
பழிவாங்கும்போது ஒரு திருப்தி கிடைக்கிறது. எனக்கு எஸ்ஸி, எஸ்டி சட்டத்தின் மேல்
காதல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.
|