|
நாட்டின் மத நல்லிணக்கத்துக்குக் கடும் ஊறு விளைவித்து இந்தியாவில்
பயங்கரவாதத்திற்கு வித்திட்ட நிகழ்வான அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணி
குறித்து விசாரிப்பதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ்
அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் கமிஷன் அறிக்கையின் சில
பகுதிகளைத் தில்லியிலிருந்து வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் நவம்பர்
23ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் மிகப்
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த அறிக்கை நாளிதழுக்குக் கிடைத்தது எப்படி என்பது
குறித்த விவாதங்களால் நாடாளுமன்றத்தின் அன்றைய நடைமுறைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டன.
பாஜக, சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அறிக்கை
வெளியிடப்பட்ட நேரம், பின்னணி, நோக்கம் குறித்துப் பல சந்தேகங்களை எழுப்பின.
அறிக்கை வெளியானதற்குத் தன் அமைச்சகம் பொறுப்பல்ல எனக்கூறி நிலைமையைச் சமாளிக்க
முயன்ற உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மறுநாளே அறிக்கையை நடவடிக்கைக் குறிப்புகளுடன்
அரசு அவையில் சமர்ப்பிக்கும் என அறிவித்தார். அறிக்கையின் உள்ளடக்கம் குறித்த
விஷயங்களை எக்ஸ்பிரஸ் வெளியிட்டுவிட்டதால் அதை முன்வைப்பதில் அரசுக்குச் சிக்கல்
எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் எஞ்சிய
நாட்களை இந்த அறிக்கைமீதான விவாதங்களே எடுத்துக்கொள்ளும் என்பதால் தான்
எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பல்வேறு கேள்விகளிலிருந்து அரசு எளிதாகத்
தப்பித்துக்கொண்டிருக்கிறது.
கரும்புக்குத் தேசிய அளவில் விலை நிர்ணயம் செய்வது தொடர்பான சர்ச்சைகளால் களைத்துப்
போயிருந்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் லிபரான் கமிஷன் அறிக்கை
வெளியானது தொடர்பாக எழுந்த விவாதங்களைப் பதற்றமில்லாமல் பார்த்துக்
கொண்டிருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. உள்துறை அமைச்சருக்கு இது கூடுதல் நிம்மதி
தரக்கூடிய செய்தியாகவே இருக்கும்.
அவர் பல கேள்விகளுக்குப் பதில்தர வேண்டியிருந்தது. அரசுக்குப் பெரும் சவாலாக
இருந்துவரும் மாவோயிஸ்ட் சிக்கலையும் அதற்கு ஆதாரமான பழங்குடி மக்களின்
பிரச்சினைகளையும் குறித்து எதிர்க் கட்சிகள் நடப்புக் கூட்டத் தொடரில்
கேள்வியெழுப்பத் திட்டமிட்டிருந்தன. சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என
வர்ணிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல், அதில் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவுக் கும்
பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் உள்ள பங்கு ஆகியவை குறித்த கேள்விகளை எதிர்கொள்ளவே
முடியாத அளவுக்கு அரசுத் தரப்பு பலவீனமாக இருக்கும் நிலையில், சங்கடத்தைத்
தவிர்க்கும் வாய்ப்பு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, சீன அபாயம்,
பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட அரசு பதிலளிக்க வேண்டிய வேறுபல கேள்விகளிலிருந்தும்
அரசு தப்பித்துக்கொண்டிருப்பதோடு அரசியல்ரீதியில் காங்கிரசுக்கு ஆதாயம் தரும்
வாய்ப்பையும் இந்த அறிக்கை கொண்டிருக்கிறது. இந்த வாரம் தொடங்கவிருக்கும்
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் முக்கியப் போட்டி சக்தியாக இருக்கும்
பாஜகவின் அரசியல் தகுதிகளை லிபரான் கமிஷன் அறிக்கை பலவீனப்படுத்தும் என்பதும்
முக்கியம்.
கமிஷன் கண்டறிந்துள்ள விஷயங்கள் புதிதானவையோ எதிர் பாராதவையோ அல்ல. பாபர் மசூதி
இடிப்பு பாஜகவின் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், லால்
கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தலைவர்
வினய் கட்டியார் ஆகியோரால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு
என நீதிபதி தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். வாஜ்பாயை மென்மையான இந்துத்துவவாதி
அல்லது மதச் சார்பற்றவர் என முன்னிறுத்திய பாஜகவால் இதை சகித்துக்கொள்ள முடியும்
எனத் தோன்றவில்லை.
எண்பதுகளில் ராம ஜென்ம பூமி விவகாரத்தைக் கையிலெடுத்ததால் அப்போது ஏற்பட்டிருந்த
அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்த பாஜக,
1999இல் வேறுபட்ட அரசியல் பார்வைகள் கொண்ட கட்சிகளுடன் அரசியல் அதிகாரத்தைப்
பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உருவான நிலையில் தன் வெளிப்படையான தீவிர
இந்துத்துவச் சார்பைத் தற்காலிகமாகவேனும் கைவிட வேண்டியிருந்த தருணத்தில்
‘எல்லோராலும்’ ஏற்றுக்கொள்ளப்பட்டவராக முன்னிறுத்தப்பட்ட மிதவாதத் தலைவர் வாஜ்பாய்.
லிபரான் அவரைப் ‘போலி மிதவாதி’ எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். வாஜ்பாயும்
பாஜகவின் மூத்த தலைவர்களும் நன்கு திட்டமிட்டு 1992, டிசம்பர் 6 அன்று அயோத்தியில்
நடைபெற்ற மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்த நிகழ்வுகளை நடத்தியதாகக்
குற்றம்சாட்டும் கமிஷன் அவர்களை சங்கப் பரிவார அமைப்புகளின் கருவிகள் எனவும்
அவர்களது கட்டளைகளை மீற முடியாதவர்கள் எனவும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
‘உணர்ச்சிவசப்பட்ட கரசேவகர்களால் நடத்தப்பட்ட துரதிருஷ்டவசமான நிகழ்வு’ எனக் கடந்த
காலங்களில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மக்களிடம் சொல்லி வந்த பொய்களை நீதிபதி
அம்பலப்படுத்தியிருக்கிறார். சங்கப் பரிவாரங்களின் அயோத்தித் திட்டம் அதிகாரத்தை
நோக்கமாகக்கொண்டதே தவிர தத்துவரீதியிலானது அல்ல எனச் சொல்லும் அறிக்கை
மேற்குறிப்பிட்ட தலைவர்கள் சங்கப் பரிவார அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றும்
ஆயுதங்களாகச் செயல்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. ராமஜென்ம பூமி
அமைப்பினரால் வசூலிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளது
என்னும் கமிஷனின் கூற்று கர சேவகர்கள் உணர்ச்சி வசப்பட்டு மசூதியை இடிக்கவில்லை
என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கரசேவகர்களுக்குத் தேவையான வசதிகளைச்
செய்துகொடுக்கவும் ‘உபகரணங்களை’ அளிக்கவும் கோடிக்கணக்கான ரூபாய்
செலவளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘உணர்ச்சிவசப்படுதல்’ என்னும் சங்கப் பரி வாரத்
தலைவர்களின் வாதம் அர்த்தமிழந்து போகிறது.
பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டின் முதன்மையான அரசியல் சக்திகளில் ஒன்றாக பாஜக
நீடித்திருப்பதற்கான நியாயங்களை கமிஷனின் அறிக்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது.
பாபர் மசூதி நடவடிக்கைக் குழு, அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு ஆகிய
இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் மசூதியைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டவில்லை எனக்
குற்றம் சாட்டியிருக்கும் அறிக்கை அவர்கள் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நாட்டின்
பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளின் மீது அக்கறை காட்டவில்லை என
விமர்சித்திருக்கிறது.
இந்த அளவுக்கு நடுநிலையாகப் பிரச்சினையைப் பார்க்க முடிந்த நீதிபதி லிபரான்
அப்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருப்பதன் ரகசியம்
பிடிபடவில்லை. நாட்டை மீள முடியாத நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளில்
தலையிடாமல் இருப்பதற்கு அரசியல் சாசனப்படி மாநில உரிமைகளில் மத்திய அரசால் தலையிட
முடியாததே காரணம் என்னும் ஒரு சொத்தையான வாதத்தை முன்வைத்து நரசிம்மராவைக்
குற்றமற்றவர் எனச் சொல்லியிருப்பது யாருடைய தலையீட்டின் பேரில் என்னும் கேள்வி
எழுகிறது. ‘நாட்டைக் காப்பாற்றுவதற்கு’ அரசியல் சாசனத்தைப் பல முறை
திருத்தியிருக்கிற, மீறியிருக்கிற ஒரு கட்சியின் பிரதமர் நெருக்கடியான தருணத்தில்
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தாதது ஏன் எனக் கமிஷனால் கேள்வியெழுப்ப முடியாதது
ஆச்சரியம்தான். அறிக்கையில் தென்படும் இந்த முரண் ஏழு கோடி ரூபாய் செலவிடப்பட்டு
17 ஆண்டு காலத்தில் 48 முறை கால நீட்டிப்புப் பெற்று நடத்தப்பட்ட இக்கமிஷனின்
முடிவுகள்மீது சந்தேகத்தைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது.
இண்டியன் எக்ஸ்பிரஸில் அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்பட்டதற்கு மறுநாள் செவ்வாய்க்
கிழமை அரசு நாடாளுமன்றத்தில் அதன் அசல் பிரதியை உறுப்பினர்களின் பார்வைக்கு
வைத்திருக்கிறது. அப்போதைய உத்திரப் பிரதேச பாஜக ஆட்சியின் கைப்பாவைகளாகச்
செயல்பட்ட உயர் அதிகாரிகள் ஒன்று நடந்த நிகழ்வுகளைக் கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள்
அல்லது சங்கப் பரிவாரங்களின் கரசேவைக்குத் துணை போயிருக்கிறார்கள் எனச் சிலரது
பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள்மீது குற்றம் சுமத்தியிருக்கிறது.
வற்புறுத்தல்களுக்குப் பணிந்து அரசு அந்த அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை
எடுக்கலாம் என்றாலும் குற்றத்தின் மூலவர்களான பாஜக தலைவர்கள்மீது நடவடிக்கை
எடுக்கும் எனத் தோன்றவில்லை. நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்ட நடவடிக்கை
அறிக்கை (Action Taken Report) எதிர்க் கட்சியினரின் கடுமையான எதிர்ப்பைச்
சந்தித்திருக்கிறது. இதுவரை நடந்திராத அளவுக்கு நாடாளுமன்றத்தில்
உறுப்பினர்களுக்கிடையே தகராறு நடந்திருக்கிறது.
வரவிருக்கும் நாட்களைப் பதற்றம் மிகுந்தவையாய் மாற்றுவதற்குப் பலதரப்பினரும்
முயலலாம். கடந்த காலங்களில் நடந்ததுபோலக் குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் முன்
நிறுத்துவதைவிட முக்கியமான கணக்குகள் காங்கிரசிடம் இருக்குமாதலால் இந்த அறிக்கை
அரசியல் சூதாட்டங்களுக்கான ஒரு கருவியாக மாறுவதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது.
அதைவிடப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கையைக் கசியவிட்டதன் மூலம்
எதிர்கொள்ள வேண்டியிருந்த உடனடி நெருக்கடிகளிலிருந்து தன்னைக்
காப்பாற்றிக்கொண்டிருக்கிறது அரசு. கமிஷனின் உடனடியான பயன் அதுதான். ஒரே பயனும்
அதுவாகவே இருந்துவிடக்கூடுமோ என்னும் அச்சம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
|