Google   www kalachuvadu.com

கட்டுரை

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் - பிரதமரின் கொடுங்கனவு

தேவிபாரதி

‘உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்’ எனச் சமீபத்தில் மாவோயிஸ்ட்டுகளைப் பற்றி எச்சரித்திருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 20இல் வலுவான சக்தியாக உருவெடுத்திருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தை ஒடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். கடந்த ஜூனில் மேற்குவங்க மாநிலம் லால்கரில் 1,000 சதுர கி.மீ. பரப்பை மாவோயிஸ்ட்டுகள் கைப்பற்றியிருப்பதாகக் கூறிய மத்திய, மாநில அரசுகள் ஆயிரக்கணக்கான காவல் துறையினருடன் துணை ராணுவப் படைகளையும் எல்லைப் பாதுகாப்புப் படைகளையும் கொண்டு அப்பகுதியை முற்றுகையிட்டன. லால்கரில் பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடியினர்மீதான அத்துமீறலாக முடிவுற்ற ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ என அழைக்கப்பட்ட அந்த ‘மீட்புப்பணி’ மாவோயிசத்தை மேலும் ‘அபாயகரமான’ சக்தியாக மாற்றியிருப்பதோடல்லாமல், பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களை நக்சல் ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது.

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க, ஏற்கனவே உள்ள 35,000 துணை ராணுவத்தினருக்கு உதவியாக 20,000 வீரர்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். நாட்டின் மிக அபாயகரமான 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தலைவர்களை உயிருடனோ பிணமாகவோ பிடிப்பது, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்டுகளை ஒழித்துக்கட்டுவது ஆகியனவே இக்கூட்டுப்படைகளின் நோக்கம்.

ராணுவத் தாக்குதலைத் தவிர மாவோயிஸ்ட்டுகளின் ‘பிடி’யிலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் வேறு திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நக்சல் பிரச்சினையின் உண்மையான பரிமாணம் குறித்த தெளிவான புரிதல் அரசுக்கோ பாதுகாப்பு அமைப்புகளுக்கோ இருக்கிறதா என்பது விடை காண முடியாத ஒரு கேள்வி. கடந்த சில மாதங்களில் மாவோயிஸ்ட்டுகளும் அவர்களுக்கு ஆதரவான அமைப்புகளும் இணைந்து பல்வேறு வேலைநிறுத்த, முழு அடைப்புப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போராட்டங்களில் சில 48 முதல் 72 மணிநேரம் வரை நீடித்திருக்கின்றன. பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. சாலை, ரயில் போக்குவரத்து பெருமளவில் தடைபட்டது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மாவோயிஸ்ட்டுகளின் மிரட்டல்களுக்குப் பயந்தே மக்கள் அவர்களது போராட்டங்களில் பங்கெடுத்திருப்பதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை ‘மாவோயிஸ்ட் அபாயம்’ குறித்து ஓயாமல் எச்சரித்துவரும் பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் விளக்க வேண்டும்.

மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க முடியவில்லை என அரசு ஒப்புக்கொண்டுவிட்டது என்றுகூட இதற்கு விளக்கம் தர முடியும். ஆனால் வளர்ந்துவரும் ‘மாவோயிச அபாயம்’ குறித்துச் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் எழுந்திருக்கும் கேள்விகள் முக்கியமானவை. சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகளுக்கு மேலாகியும் பெரும்பான்மை மக்களுக்குச் சமூக நீதியையும் பாதுகாப்பான வாழ்க்கையையும் தர முடியாத அரசிடமிருந்து தெளிவான பதிலை, செயல் திட்டத்தைக் கோருபவை அவை.

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களையும் ஆங்கில ஊடகங்கள் ‘நக்சல் ஸ்டேட்ஸ்’ எனக் குறிப்பிடுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் இதயம் என வர்ணிக்கப்படும் தண்டேவாடாப் பகுதியில் மட்டும் சுமார் 40,000 சதுர கி. மீ. பரப்பு மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறார்கள். முன்பு மாவோயிஸ்ட்டுகளின் கோட்டையாகத் திகழ்ந்த ஆந்திரத்தில் அவர்களது செல்வாக்கு உயர்ந்து வருவதாகவும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலுங்கூட அவர்களுக்கு ஆதரவான மனநிலை உருவாகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வெறும் சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்டதாக மட்டுமே இப்பிரச்சினையைப் பார்க்கும் அரசு, மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பொறுப்பை ஆயதந்தாங்கிய குழுக்களிடம் விட்டுள்ளமை நிலைமையைச் சிக்கலாக்கியிருக்கிறது.

2008இல் அமைக்கப்பட்ட அரசு சார்பான உண்மையறியும் குழு ஒன்று தலித்துகளும் பழங்குடியினருமே மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவு சக்திகளாக உள்ளனர் எனக் கூறியிருக்கிறது. வேறு பல ஆய்வுகளும்கூட இந்த உண்மையைச் சொல்லியிருக்கின்றன. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 25 சதவிகிதத்திற்கும் கூடுதலாக உள்ள இம்மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதன் வெளிப்படையான அடையாளம். அம்மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராடுவதே மாவோயிஸ்ட்டுகளுக்கு உருவாகியுள்ள மக்கள் ஆதரவின் அடிப்படை. இந்த உண் மையை ஒப்புக்கொள்ள மறுக்கும் அரசு, தந்திரமான வழிகளில் மாவோயிஸச் சிக்கலுக்குத் தீர்வுகாண முற்படுகிறது.

தண்டேவாடாப் பகுதியில் பழங்குடியினரையும் மாவோயிஸ்ட்டுகளின் அதிருப்தியாளர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ‘சால்வா ஜூடும்’ என்னும் அமைப்பு இதற்கு உதாரணம். பழங்குடியினரில் ஒரு பிரிவினருக்கு ஆயுதங்களை வழங்கி மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராகப் போராட அரசு ஊக்குவித்தது. ஆனால் சால்வா ஜூடும் காவல் துறை உதவியுடன் மக்கள் விரோத அமைப்பாக வெகுவிரைவில் மாறியது. நக்சல் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான பழங்குடிக் கிராமங்களைச் சூறையாடியது இந்த அமைப்பு. அது உருவாக்கப்பட்ட நான்காண்டுகளுக்குள் 700க்கும் மேற்பட்ட பழங்குடிக் கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றிலிருந்த பழங்குடி மக்களில் பலர் கொல்லப்பட்டனர், நூற்றுக் கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டு ஊனப்படுத்தப்பட்டுள்ளனர். பழங்குடி மக்களுக்குச் சொந்தமான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதன் விளைவாக 50,000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் அகதிகளாக்கப்பட்டு அரசு முகாம்களில் தங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர 2,50,000 பேர் தம் வழக்கமான வசிப்பிடங்களைத் துறந்துவிட்டு அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அச்சத்தாலும் பசியாலும் சூழப்பட்ட பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழச் சபிக்கப்பட்ட இம்மக்களுக்குச் சொல்ல அரசிடம் ஒரு பதிலும் இல்லை. பிறகு அவர்கள் மாவோயிஸ்ட்டுகளின் இயல்பான ஆதரவு சக்திகளாக மாறிவிடுகிறார்கள்.

வீச்சபால் என்பது தண்டேவாடாவின் சிறு கிராமம். ஒரு கட்டத்தில் அது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான அரசின் போராட்டத்துக்கான களமாக இருந்துவந்தது. சால்வா ஜூடும் அமைப்பினர் அக்கிராமவாசிகளைத் தங்கள் அமைப்பில் சேருமாறு வற்புறுத்தினர். அவர்கள் மறுத்தனர். விளைவு வீச்சபால் சால்வா ஜூடும் அமைப்பினராலும் பாதுகாப்புப் படையினராலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 12 முறை எரியூட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஜூனில் தில்லியைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் நந்தினி சுந்தரின் தலைமையில் உண்மையறியும் குழு ஒன்று இக்கிராமத்துக்குச் சென்று வந்தது. அதற்கான பதிலடிபோல் ஆகஸ்ட்டில் மறுபடியும் ஒருமுறை எரிக்கப்பட்டது வீச்சபால். ஜனநாயகரீதியிலான தீர்வைத் தாங்கள் ஒருபோதும் அனு மதிக்கப் போவதில்லை என்பதுதான் சால்வா ஜூடும் அமைப்பினரும் பாதுகாப்புப் படையினரும் விடுத்துள்ள செய்தி. வீச்சபால் கிராமத்தின் பழங்குடி மக்கள் எரிக்கப்பட்ட ஒவ்வொருமுறையும் தம் வீடுகளைத் திரும்பக் கட்டினார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் அவை எரிக்கப்பட்டன. இப்போது அவர்கள் திரும்பக் கட்டுவதைக் கைவிட்டுவிட்டார்கள். பலர் பாதுகாப்புக் கருதி அடர்ந்த காடுகளில் வசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அங்குள்ள மாவோயிஸ்ட்டுகள் அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுக்கிறார்கள். அந்த ஆயுதங்கள் பாதுகாப்புப் படையினரிடமிருந்தும் காவல் துறையிடமிருந்தும் பறிக்கப்பட்டவை.

பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கிய அரசு நிர்வாகம், அக்கிராமத்திற்கான மின் இணைப்பைத் துண்டித்தது. அங்கு இயங்கிய இரண்டு அரசுப் பள்ளிகள் சால்வா ஜூடும் அமைப்பினரால் எரிக்கப்பட்ட பிறகு, பழங்குடிக் குழந்தைகளின் கல்வி முற்றாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையால் மேற்கொள்ளப்பட்டுவந்த வாராந்திர மருத்துவ முகாம்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. நியாய விலைக்கடைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. வீச்சபால் கிராமத்தில் பசித்த வயிறுகளுடன் நிர்வாணமாக அலைந்து திரியும் குழந்தைகளைப் பார்த்ததாக அங்குச் சென்றுவந்த பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். அரசின் இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் மக்களை ஜனநாயக அமைப்புகள்மீதும் அவை சார்ந்த நடைமுறைகள்மீதுமான நம்பிக்கையை இழக்கச் செய்பவை. நடப்பிலுள்ள ‘பாராளுமன்ற ஜனநாயகம் போலி ஜனநாயகம், அரசு மக்கள் விரோதமானது’ என்பன போன்ற மாவோயிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் வலுவூட்டுவதில் ஆச்சரியமில்லை.

துணை ராணுவப் படையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட லால்கர் மீட்பு நடவடிக்கைக்கு மாவோயிஸ்ட்டுகள் தந்த பதிலடியைப் பாருங்கள். செப்டம்பரில் லால்கர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், பாஸ்பர் என்னும் பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த லாலு துபு என்னும் சிறுவனைப் பிடித்து மாவோயிஸ்ட்டுகள் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லச் சொல்லி வற்புறுத்தினார்கள். அவர்களிடம் சொல்வதற்கு அந்த அப்பாவிச் சிறுவனிடம் பதில் இருக்கவில்லை. ஆத்திரமுற்ற பாதுகாப்புப் படை யினர் அவனைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அதைக் கண்டு பதறிப் போன பழங்குடிப் பெண் ஒருவர் அவனைக் காப்பாற்ற முன்வந்திருக்கிறார். பாதுகாப்புப் படையினர் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவர்களுக்காகத் திரண்டு வந்ததைக் கண்ட பாதுகாப்புப் படையினர் உடனே அங்கிருந்து சென்றுவிட்டனர். பதற்றமடைந்த மக்கள் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தபகரி பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட அவரது அலுவலகத்தை நோக்கிச் சென்றிருக் கிறார்கள்.

தமக்குப் பாதுகாப்புக் கோரி அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்ட ஜனநாயக அமைப்பிடம் முறையிடச் சென்ற பழங்குடி மக்கள்மீது பாதுகாப்புப் படை, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். ஆண்கள் காவல்துறை வேட்டைக்குப் பயந்து ஏற்கனவே காடுகளில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். சிதறியோடிய பழங்குடிப் பெண்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது, பழங்குடி மக்களை மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு லால்கருக்குள் நுழைந்திருந்த பாதுகாப்புப் படை.

தப்பியோடிய பெண்களில் சிலர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். துரத்தி வந்த பாதுகாப்புப் படையினர் அவர்கள்மீது ஈவிரக்கமில்லாமல் தடியடி நடத்தி, சிக்கிய 14 பெண்களைக் கைதுசெய்து வாக னத்தில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்று லால்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல் துறை அவர்களைக் கேஸ்பூர் கொண்டுசென்று இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்து மறுநாள் ஜார்கிராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அரசுக்கெதிராக யுத்தம் தொடுத்ததாக அப்பெண்கள்மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் அனைவரும் மிட்னாபூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள்.

இதைச் செய்தது மார்க்சிஸ்ட் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் என்பது ஒரு நகைமுரண். ‘ஏழைகளின் அரசாங்கம்’ மாவோயிஸ்ட்டுகளுக்கெதிரான யுத்தம் என்னும் பெயரில் வறுமையில் உழலும் பழங்குடி மக்கள்மீது யுத்தம் தொடுத்திருக்கிறது. 14 பழங்குடிப் பெண்கள் (அவர்களில் ஒருவருக்கு 70 வயது) தம் கையிலிருந்த மூன்று அம்புகளைக் கொண்டு ‘அரசுக்கெதிராக யுத்தம்’ தொடுத்ததாகச் சொல்கிறது புத்ததேவின் காவல் துறை. மாவோயிஸ்ட்டுகளுக் கெதிராக ‘கம்யூனிஸ்ட்’ அரசாங்கம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்’டின் லட்சணம் இது.

ஆனால் மாவோயிஸ்ட்டுகள் அரசின் தடுமாற்றங்களைச் சரியான படி பயன்படுத்திக்கொண்டார்கள். 40க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்டுகள் லால்கரின் சங்க்ரெய்ல் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த இரண்டு காவல் துறையினரைச் சுட்டுக்கொன்றுவிட்டுஒரு அதிகாரியைக் கடத்திச் சென்றிருந்தார்கள். காவல் நிலையத்தைத் தாக்கிய மாவோயிஸ்ட்டுகள் அருகிலிருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றைச் சூறையாடிப் பதிமூன்று லட்ச ரூபாய்ப் பணத்தையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். நடுப்பகல் ஒரு மணிக்கு மிகத் துணிச்சலாக மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலைக் கண்டு புத்ததேவ் அரசு விதிர் விதிர்த்துப் போயிருக்க வேண்டும். நான்கு மாதங்கள்வரை நீடித்த ஆபரேஷன் க்ரீன் ஹண்ட் இவ்வளவு பரிதாபமாய் அம்பலப்பட்டுப் போகும் என்பதை புத்ததேவ் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். ‘செய்தி’யைக் கேள்விப்பட்ட துணைப் பாதுகாப்புப் படையினர் மிகத் தாமதமாக மாலை 5 மணிக்கு வந்திருக்கிறார்கள். அதற்குள் உள்ளூர் மக்கள் அங்கே திரண்டிருந்தார்கள். நிலைகுலைந்து போன படை அந்த இடத்தில் வேடிக்கை பார்ப்பதற்காகத் திரண்டிருந்த அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது.

தாக்குதலைத் தொடுத்த மாவோயிஸ்ட்டுகளின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கிஷேன்ஜி, அப் போது நாட்டின் 24 மணிநேரச் செய்திச் சானல்களின் நேரடி ஒளி பரப்புகளில் தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டிருந்தார். கடத்தப்பட்ட சங்க்ரெய்ல் காவல் நிலைய அதிகாரியை விடுதலை செய்யக் கிஷேன்ஜி விதித்த ஒரே நிபந்தனை, கைதுசெய்யப்பட்ட பாஸ்பர் கிராமப் பழங்குடிப் பெண்கள் 14 பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான். சிறையிலிருக்கும் மாவோயிஸ்ட் உயர் மட்டத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது அவர்களது நிபந்தனையாக இல்லாமல் போனது அரசுக்கு நிச்சயம் ஏமாற்றமளித்திருக்கும். மற்றொரு கந்தகர் நிகழ்வு என ஊடகங்கள் இதை வர்ணித்தன. இது மாநில அரசின் பிரச்சினை என ஒதுங்கிக் கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். கிஷேன்ஜியும் மற்ற சில மாவோயிஸ்ட் தலைவர்களும் கடத்தப்பட்ட காவல் துறை அதிகாரியைச் செய்தியாளர்களிடம் ஒப்படைத்து, பதிலுக்கு 14 பழங்குடிப் பெண்களைப் பெற்றுக்கொண்ட காட்சியைத் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்புகளில் பார்த்துப் புத்ததேவ் தன் அரசின் கையாலாகாத்தனத்தை நொந்துகொள்வதைத் தவிர வேறு என்ன செய்திருக்க முடியும்? கிஷேன்ஜியைக் கைது செய்ய முடியாதது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்தப் பரிமாற்றம் எங்கே நடந்தது என்பதைக்கூட அரசால் கண்டு பிடிக்க முடியவில்லை.

மாவோயிஸ்ட்டுகளே பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் என்னும் படிமம் இந்த நிகழ்வின் மூலம் மேலும் அழுத்தம் பெற்றிருக்கிறது. ஆபரேஷன் க்ரீன் ஹண்ட் விட்டுச் சென்றிருக்கும் மோசமான சித்திரங்கள் இதோடு முடிந்துவிடவில்லை. நான்கு மாதகால யுத்தத்தில் புத்த தேவ் அரசு மாவோயிஸ்ட்டுகளுடன் பெற்றுள்ள வெற்றிக்குப் பிறகு லால்கர் முற்றாகத் தனிமைப்பட்டுக்கிடக்கிறது.

பள்ளிகளில் பெரும்பாலானவை மூடிக்கிடக்கின்றன. பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 19 பள்ளிகளில் 5 மட்டுமே அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. தொடக்கப் பள்ளிகளில் சில திறந்திருந்தாலும் பணிக்கு வர ஆசிரியர்களிடையே அச்சம் நிலவுகிறது. லால்கரில் இரவு தங்குவதற்குத் தயங்கும் பேருந்து ஓட்டுநர்கள் தம் பாதையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். லால்கரின் சுகாதார மையங்கள் தற்போது ராணுவ முகாம்களாக மாறியிருக்கின்றன. மருத்துவர்கள் யாரும் அங்குச் செல்வதில்லை. சிகிச்சைக்காக மிட்னாபூர் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் லால்கர் மக்கள், உடல்நலக் குறைவு காரணமாக மரணத்தைத் தழுவ வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அங்கன் வாடிப் பள்ளிகள் மூடிக்கிடப்பதால் ஒருங் கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. லால்கரில் உள்ள மக்கள் தேசியக் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்தின் உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அத்திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதற்கு ஆள் இல்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு மாவோயிஸ்ட்கள் தடையாய் இருக்கிறார்கள் எனச் சொல்லி நியாயப்படுத்துவது சரியான வாதம் அல்ல. ஜார்கண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த இரண்டு மூன்று மாதங்களில் மாநில நிர்வாகம் மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொண்ட வளர்ச்சி, நலத் திட்டப் பணிகளுக்கு அவர்கள் எந்த இடையூறும் விளைவிக்கவில்லை என்பதைத் தெகல்காவுக்கு அளித்த பேட்டியொன்றில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நிலைமையை நேரில் கண்டறிவதற்கு யாருக்கும் அனுமதியில்லை. மனித உரிமை இயக்கங்கள் லால்கர் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார் இந்தியப் புள்ளியியல் கழகப் பேராசிரியர் பார்த்தோ ராய். லால்கரில் இப்போது நடப்பது ராணுவ ஆட்சிதான் என்கிறார்கள் நிலைமையை அறிந்த பத்திரிகையாளர்கள். கூட்டுப்படையினரின் ஓயாத ரோந்து லால்கரை முடக்கியுள்ளது. கண்காணிப்பின்போது யாரிடமாவது சந்தேகப்படும்படி ஒரு அசைவு தென்பட்டாலும் சுடுகிறார்கள். ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்டுகள் யாரும் அவர்களது பார்வைக்குத் தென்படாதபோதும் அவர்கள் பதுங்கியிருப்பதாகத் தாம் நம்பும் காடுகளின் அடர்ந்த இருளுக்குள் இலக்கின்றிச் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதால் சட்டபூர்வமான போராட்டங்களுக்கும் ஜனநாயகவழியிலான எதிர்ப்பு இயக்கங்களுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. சமீபத்தில் காவல் துறைச் சித்திரவதைகளுக்கெதிரான மக்கள் கமிட்டி என்னும் அமைப்பு ஜனநாயகப் பாதையைக் கைவிட்டுவிட்டு வரும்காலங்களில் ஆயுதந்தாங்கிப் போராடப் போவதாக அறிவித்திருக்கிறது. சாத்ரகார் மகட்டோ தலைமையிலான இவ்வமைப்பு 2008 முதல் காவல் துறை அத்துமீறல்களுக்கெதிராக ஜனநாயகவழியில் பெரும் கிளர்ச்சிகளை நடத்தியது. பழங்குடி மக்கள்மீதான சட்ட விரோத, காவல் துறை அத்துமீறல்களைக் கைவிடுமாறு இவ்வமைப்பு அரசைக் கோரியது. அரசு ஆயுதங்களின் துணைகொண்டு அந்த அமைப்பை நசுக்க முயன்றது. விளைவு ஜனநாயகவழியில் செயல்பட விரும்பிய சிவில் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அக்டோபரில் இந்த அமைப்பு தான் ராஜதானி எக்ஸ்பிரஸைச் சிறைப்பிடித்தது. இப்போது மகட்டோ கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகொண்டிருந்ததாகவும் பெரிய அளவிலான வன்முறைகளின் மூலம் மேற்கு வங்க அரசைச் சீர்குலைக்க முயன்றதாகவும் காவல் துறை குற்றம் சாட்டியிருக்கிறது. கைது செய்யப்படும் மாவோயிஸ்ட்டுகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குச் சட்டபூர்வமாக அளிக்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் எழுந்துள்ள விமர்சனங்களை அரசு பொருட்படுத்தவில்லை.

இவற்றைத் தவிரப் பிரதமர் குறிப்பிடும் ‘மாவோயிசப் பயங்கரவாத’த்தின் வேர்களைக் கண்டறியும் முயற்சியில் அரசு துளிகூட அக்கறை காட்டவில்லை.

ஜார்கண்ட்டிலும் சத்தீஸ்கரிலும் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுவதற்கு அரசு பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துவரும் ஒப்பந்தங்கள் அம்மாநில மக்களின், குறிப்பாகப் பழங்குடி மக்களின், நலன்களுக்கு எதிரானவை என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சியின் பெயரால் பலியிடப்படுவதை ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமாகவே ஆட்சியாளர்கள் கருதவில்லை. அவர்களுடைய நிலங்கள் உரிய இழப்பீடின்றி அபகரிக்கப்பட்டு வருவதாலும், வன வளங்கள் கொள்ளையிடப்படுவதாலும் தம் வாழ்வாதாரங்களை இழந்து கொடிய வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் பழங்குடி மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு யாருமே முன் வராததாலும்தான் அவர்கள் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் பழங்குடிகள், தலித்துகளின் வாழ்நிலையை மேம்படுத்த அக்கறை காட்டாததால் அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து வருகிறார்கள். தம் உரிமைகளுக்காகப் போராடும் அடித்தட்டு மக்கள்மீது அரசுகள் ஏவிவிடும் அடக்குமுறைகளிலிருந்து ஓரளவுக்காவது அவர்களைப் பாதுகாப்பது மாவோயிஸ்ட்டுகள்தாம்.

வளர்ந்து வரும் மாவோயிஸ அபாயத்துக்கு அடிப்படைக் காரணம் சத்தீஷ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடிகள், குறு, சிறு விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்படுவது தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான பிரேம் ஷங்கர் ஜா. சாலைகள், மின் நிலையங்கள், சுரங்கங்கள் அவை சார்ந்த கனரகத் தொழிற்சாலைகள் அமைப்பதற்காகத் தேவைப்படும் ஏராளமான நிலங்களைப் பறிமுதல் செய்யும் அரசு அவர்களது மறுவாழ்வுக்கான திட்டங்களில் கொஞ்சம்கூட அக்கறை காட்டுவதில்லை. கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்காக அரசிடம் அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களும் அரசும் சொற்ப இழப்பீட்டைக் கொடுத்து ஏழை விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கின்றன. விவசாயிகள் தம் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது இந்தக் கூட்டணிதான்.

ஏழை விவசாயிகள், பழங்குடிகள், தலித்துகள் முன்வைக்கும் கோரிக்கைகளின் நியாயத்தைப் புறக்கணித்து அவர்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு அவர்களது கோபத்துக்கு ஆளாகியிருக்கும் அரசு விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரை வளர்ச்சி சாத்தியமில்லை என்னும் எளிய உண்மையைக்கூட உணரவில்லை.

விவசாயிகளின் எதிர்ப்பு காரண மாக நந்திகிராமில் அமையவிருந்த ரசாயனத் தொழிற்சாலை கைவிடப்பட்டது ஒரு முக்கியமான உதாரணம். ஒரிசாவில் அமையவிருந்த ஸ்டீல் ஆலைகளும் சிங்கூரில் அமையவிருந்த டாடா நானோ கார்த் தொழிற்சாலையும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டன. மிகப் பிரபலமான லட்சுமி மிட்டல் நிறுவனம் ஜார் கண்ட்டிலும் ஒரிசாவிலும் 24 மில்லியன் டன் உற்பத்தித் திறனுள்ள ஸ்டீல் ஆலைகளை நிறுவத் திட்ட மிட்டிருந்தது. பழங்குடிகள், விவசாயிகளின் எதிர்ப்பால் அத்திட்டத்தைக் கைவிடுவதாக மிட்டல் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். 2007இல் 60,000 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கத் தனியார் நிறுவனமொன்று எடுத்த முயற்சியும் நிலக்கரிப் பற்றாக்குறையால் கைவிடப்பட்டது. சுரங்கங்கள் அமைப்பதற்கு அனுமதி பெற்றிருந்த பல தனியார் நிறுவனங்களால் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகக் கனிம வளமுள்ள நிலங்களைப் போதிய அளவுக்குக் கையகப்படுத்த முடியவில்லை என்பதே நிலக்கரிப் பற்றாக் குறை ஏற்படுவதற்கான மூல காரணம்.

நிலமிழந்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கவும் பாதுகாப்பான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இந்த நஷ்டங்களைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால் வளர்ச்சிக்காகப் பழங்குடியினர், விவசாயிகள் நலன்களைப் பலியிடத் துணிந்துள்ள அரசு அடக்கு முறையைக் கையிலெடுத்திருக்கிறது.

பழங்குடிகள், தலித்துகள், சுரண்டலுக்குள்ளான விவசாயிகளின் கூட்டணியை முன்னிறுத்தி ஒரு புரட்சியை நடத்த மாவோயிஸ்ட்டுகள் முற்பட்டிருக்கிறார்கள். சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஒரிசா, பீகார், ஆந்திரப் பிரதேசம், மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்குப் பிரதேசத்தை விடுவித்து அதைத் தம் தளப்பிரதேசமாக்குவதை உடனடி அரசியல் திட்டமாகக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களையும் தலித்துகளையும் சிறு விவசாயிகளையும் ஆயுததாரிகளாக்கும் பணியில் முனைந்திருப்பதைப் பற்றிய செய்திகள் சில ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று நான்காண்டுகளுக்குள் மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப்படையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 80க்கும் மேற்பட்ட மையங்களை அவர்கள் உருவாக்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் காவல் நிலையங்களை மாவோயிஸ்ட்டுகள் சூறையாடி ஆயுதங்களைப் பறித்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தவிர வங்கிகளைக் கொள்ளையடித்தல், தம் கட்டுப் பாட்டுப் பகுதியிலுள்ள சுரங்க முதலாளிகள், தொழிலதிபர்களிடம் மேற்கொள்ளும் கட்டாய வரிவசூல்கள் ஆகியவற்றின் மூலம் சேர்த்த பெருந்தொகையைக் கொண்டு ஆயுதங்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகள் ஒரு தீர்மானகரமான தாக்குதலுக்குத் தயாராகக் கூடும் என்னும் அச்சம் காரணமாகவே பிரதமர் அவர்களை அபாயகரமானவர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கண்ணுக்குத் தெரியாத வேறு பல அபாயங்களைக் குறித்துப் பிரதமர் கவலைப்படவில்லை.

அமைப்பின் மீது நம்பிக்கையை உருவாக்குவதற்கான குறைந்தபட்சத் தகுதிகளைக்கூட இழந்துவரும் அரசியல்வாதிகள்தாம் மாவோயிஸ்ட்டுகளின் இருப்புக்கு நியாயம் கற்பித்திருப்பவர்கள் எனலாம். மத்திய இந்தியாவின் கனிம வளங்களைச் சுரண்டிப் பல்வேறு முறை கேடுகளின் மூலம் பல்லாயிரம் கோடி ஊழலில் ஈடுபட்ட ஜார்கண்ட்டின் முன்னாள் முதல்வர் மதுகோடா, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற சிபுசோரன் போன்ற அரசியல்வாதிகளை உதாரணம்காட்டி மாவோயிஸ்ட்டுகள், ‘பாராளுமன்றம் பன்றித் தொழுவம்’ எனவும் ‘பாராளு மன்ற ஜனநாயகம் போலி ஜனநாயகம்’ என்றும் சொல்லும் போது அரசுக்குக் கோபம் வருகிறது. மாவோயிஸ்ட்டுகளுக்கெதிராக நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்குமளவுக்கு அதன் நிலை பரிதாபமாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற பிரச்சாரங்களாலோ ராணுவ நடவடிக்கைகளாலோ மாவோயிஸ்ட் அபாயத்தை முடிவுக்குக்கொண்டு வந்துவிடலாம் என நினைப்பது அபத்தமான கற்பனை. கடந்த முப்பதாண்டுகளில் நக்சலைட்டுகள் தலைமறைவு இயக்கமாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். பெரிய அளவிலான கருத்துப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளற்ற நிலையிலுங்கூட அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது ‘உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக’ மாறியிருக்கும் அந்தச் சக்தி.

பேச்சுவார்த்தைகள் மூலமும் வளர்ச்சித் திட்டங்களை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டுசெல்வதாலும் மட்டுமே மாவோயிஸ்ட் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பதை அரசு நம்ப மறுக்கிறது. நவம்பரில் மத்திய இந்தியப் பழங்குடி மக்கள்மீது போர் தொடுப்பதற்காக 75,000 துணை ராணுவப் படையினரை அனுப்பப்போவதாகச் சொல்கிறார்கள். அரசின் தாக்குதல் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றிருக்கும் மக்களைச் சண்டைக்கு அழைக்கும் நடவடிக்கை இது. அவர்களது வாழும் உரிமையைப் படை பலத்தைக் கொண்டு நசுக்குவதன் மூலம் அரசு அவர்களை மேலும் மேலும் மாவோயிஸ்ட்டுகளின் பக்கம் தள்ளுகிறது.

ஒருபக்கம் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டே அரசு பேச்சுவார்த்தைக்கும் அழைக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைக்கூடக் கீழே போட வேண்டாம், வன்முறையைக் கைவிட்டால் போதும் என்கிறார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். ஆனால் பேச்சுவார்த்தைகளால் எதிர்பார்க்கப்படும் பலன் விளையும் எனத் தோன்றவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைகள் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்கும் எதிரானவை என்பது தெளிவு. அவர்கள் அமைப்பை அடியோடு மாற்ற விரும்புகிறார்கள். துப்பாக்கிக் குழலிலிருந்தே அதிகாரம் பிறக்கும் என்னும் மாவோவின் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை வைத்துள்ள இந்திய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இயக்கங்களின் புதிய கூட்டமைப்பான மாவோயிஸ்ட் அமைப்பு மாவோவின் வழியில் கிராமங்களைக் கைப்பற்றி நகரங்களைச் சுற்றிவளைப்பதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தம் அரசியல் செயல் திட்டமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மாவோயிஸ்ட்டுகளின் இந்தத் திட்டம் காலாவதியாகிப் போன ஒன்று என்னும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் நகர்ப்புற உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்கத்தினரின் பங்களிப்பைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இது மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். பழங்குடி மக்களையும் தலித்துகளையும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தித் தனிமைப்படுத்துவதும் அழித்தொழிப்பதும் அரசுக்கு எளிது என்பதை அவர்கள் உணரவில்லை. குறிப்பான திட்டம் எதுவுமற்ற சாகச நடவடிக்கையாக மாவோயிஸ்ட்டுகளின் அரசியல் குறுகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையிழந்து அவற்றிலிருந்து முற்றாக விலகியிருக்கும் அவ்வமைப்பு பொதுச்சமூகம் எதிர்கொண்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகள் சார்ந்த உரையாடல்களில் குறுக்கிடும் வாய்ப்புகளற்றுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக அளவில் சமூகப் பொருளாதார மட்டத்திலும் அரசியல் சமன்பாடு களிலும் நிகழ்ந்துள்ள மாற்றங்களை அவர்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை.

சாரு மஜூம்தாருக்குப் பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)க்குள் நடந்த தத்துவார்த்தப் போராட்டங்களிலிருந்தும் அவற்றின் விளைவான பிளவுகளிலிருந்தும் மாவோயிஸ்ட்டுகள் பாடம் கற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தோடு எந்தத் தொடர்புமற்ற ஒரு கட்சியால் எந்த மாதிரியான புரட்சியை நடத்திவிட முடியும்?

நக்சல்பாரி எழுச்சி தோற்றுவித்த நம்பிக்கையை மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தம் இடது தீவிரவாதப் போக்குகளால் சிதைத்திருக்கின்றன. இவ்வளவுக்கும் நக்சல்பாரி இயக்கம் பல தரப்பினரது ஆதரவையும் பெற்றிருந்தது. ஜனநாயகவாதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் அறிவு ஜீவிகள் எனப் பலர் அந்த இயக்கத்தால் ஊக்கம்பெற்றனர். ஆனால் அவர்கள் மக்கள் திரள் இயக்கங்களை அறவே புறக்கணித்தனர். ஜனநாயகரீதியான வழிமுறைகளை ஒரு போர்த் தந்திரமாகக் கடைபிடிக்கக் கூட அவர்களால் முடியவில்லை. நகர்ப்புறப் பாட்டாளி வர்க்கத்தைப் புறக்கணித்ததால் அவர்களால் தொழிற்சங்க இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை. பெண்ணியம், தலித்தியம் போன்ற நவீனக் கருத்தியல்களை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

சென்ற நூற்றாண்டின் முக்கிய அரசியல் நெருக்கடிகளுக்குக் காரணமான தேசிய இனப் பிரச் சினைகளை அவர்கள் காலாவதியாகிப்போய்விட்ட தத்துவப் பின்புலத்திலிருந்து பார்த்தார்கள். உலகமயமாக்கலை அதன் முழுமையான கூறுகளோடு பரிசீலித்து எதிர்வினையாற்றுவதற்குப் பதில் அதை வெறுமனே முதலாளித்து வத்தின் உச்சநிலையாகவே பார்த்தார்கள். உலக மார்க்சிய இயக்கங்களில் நடைபெற்ற விவாதங்களை அவர்கள் உள்வாங்கிக்கொள்ளவில்லை. அழித்தொழிப்பை ஒரு அரசியல் நடவடிக்கையாக முன்வைத்த மக்கள் யுத்தக் குழுவிலிருந்து பிரிந்துசென்றவர்கள்கூட இடது தீவிரவாதப் போக்கிலிருந்து முற்றாக விடுபட முடியாத அளவுக்குத் தனிநபர் அழித்தொழிப்பு வாதம் செல்வாக்குப் பெற்றிருந்தது.

தமிழகத்தில் எழுபதுகளின் இறுதியில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுக்கு இது முக்கியக் காரணம். விரிவான மக்கள் திரள் இயக்கங்களைக் கட்டியெழுப்புவதன் தேவையைப் புரிந்துகொண்ட சில குழுக்கள் உருவாயின. வெகுசன இயக்கங்கள், பத்திரிகைகள் போன்றவற்றோடு ஜனநாயகரீதியில் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைளை ஒடுக்க முடியாமல் அரசு திணறியது. குறிப்பாக ஆந்திராவில் இயங்கிய பல மனித உரிமைக் குழுக்கள் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. ஆனால் அமைப்பு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

போலீஸ் அடக்குமுறைக்கெதிரான மக்கள் கமிட்டி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு மாவோயிஸ்ட்டுகளின் இடது தீவிரவாதப் போக்குக்குச் சரியான உதாரணம். சட்டபூர்வமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வெகுசன ஆதரவைத் திரட்டுவதற்குமான வாய்ப்புகளை இதன் மூலம் மாவோயிஸ்ட்டுகள் இழந்துள்ளனர். மகாட்டோவை விடுதலை செய்வதற்காக ரயிலைக் கடத்துமளவுக்குத் தீவிரமாகச் செயல்பட்ட அமைப்புக்குத் தலைமறைவாவதைத் தவிர வேறு வழியுமில்லை. மகாட்டோ நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கலாம். அதன் மூலம் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். ரயில் கடத்தல் நடவடிக்கைகள் மாவோயிஸ்ட்டுகளை மக்கள் திரளிலிருந்து அந்நியப்படுத்துவதற்கே உதவும். மக்கள் விரோதிகளாக அவர்களைச் சித்தரிப்பதற்கு அரசுக்குத் துணை போயிருக்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

வங்கிகளைக் கொள்ளையடிப்பது, சுரங்க முதலாளிகளை மிரட்டி வரி வசூல் செய்வது போன்ற நட வடிக்கைகளால் மாவோயிஸ்ட்களின் அரசியல் அறம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஆயுதங்கள் வாங்குவதற்காகவும் தம் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்காகவுமே இது போன்ற வழிகளில் பணம் திரட்டுவதாகச் சொல்லி மாவோயிஸ்ட் தலைவர்கள் அவற்றை நியாயப்படுத்துகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் சால்வா ஜூடும் அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பழங்குடிகளைக் கொண்டு அரசால் இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்க முடிந்திருப்பது குறித்த கேள்விகளை மாவோயிஸ்ட்களால் எதிர்கொள்ள முடியவில்லை. உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தி அப்பாவிப் பழங்குடி மக்களில் பலரைக் கொன்றிருப்பதாக அவர்கள்மீது சில மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியிருக்கின்றன. மாற்றுக் கருத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாத போக்குதான் மாவோயிஸ்ட்கள் தம் சொந்த மக்கள்மீது தாக்குதல் நடத்துவதற்குக் காரணம். இந்தப் போக்குதான் கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கங்களில் ஏற்பட்ட பல பிளவுகளுக்கும்கூடக் காரணமாக இருந்தது.

தம் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும் எனப் பழங்குடி மக்கள் கருதுவதாக அவர்கள் கட்டமைத்திருக்கும் கருத்தியல் பழங்குடி மக்களை மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. பழங்குடி மக்களின் நலனுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் அமைப்பு அவர்களின் முக்கியக் கோரிக்கைகளைக் குறித்துப் பேசுவதற்காக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் விடுத்திருக்கும் அழைப்பை ஏன் ஏற்க முடியவில்லை என்னும் கேள்வியைப் பொருட்படுத்தாமலிருக்க முடியவில்லை.

பழங்குடி மக்களின் பிரச்சினைகளை இந்த அமைப்புக்குள் தீர்க்க முடியாது என நம்பவைப்பதன் மூலம் மாவோயிஸ்ட்டுகள் அவர்களைத் தம் அரசியல் திட்டத்திற்கான பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசு வன்முறையைக் கைவிட்டால் வன உரிமை, நிலம் கையகப் படுத்துதல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்தல், கனிம நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் போன்ற பழங்குடியினரின் பிரச்சினைக்குக் காரணமான பல விஷயங்களைக் குறித்துப் பேசுவதற்கு அரசு தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் சொல்வதைப் பரிசீலிக்க மறுப்பது விவேகமான அரசியல் பார்வை அல்ல. அரசுடன் நடத்தும் யுத்தத்தில் அப்பாவிப் பழங்குடி மக்கள் பலியிடப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஒரு முழுமையான சுயபரிசோதனைக்கு மாவோயிஸ்ட்டுகள் தங்களை இன்னமும் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

இப்போது அரசு தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் அவர்களைத் தனிமைப்படுத்த முயல்கிறது. காடுகளைவிட்டு வெளியே நடமாட முடியாதபடி அவர்களை முடக்கிப் போட்டிருக்கிறது. காவல் துறையினர் மீதும் தமக்கு எதிரான பழங்குடி மக்கள்மீதும் அவர்கள் நடத்திவருகிற தாக்குதல்களை முன்வைத்து அரசு அவர்களை அழித்தொழிப்பதற்கான ஒப்புதலைச் சட்டத்திடமிருந்தும் பொதுச்சமூகத்திடமிருந்தும் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு ராணுவத்தைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். எனினும் அசாதாரணமான நிலைமைகளில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை.

அமெரிக்காவைப் போல, இலங்கையைப் போல ‘பயங்கரவாதத்திற்கெதிரான இறுதி யுத்தம்’ என்னும் பெயரில் அரசு தாக்குதல் தொடுக்கலாம். மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவுப் பகுதியில் உள்ள பழங்குடியினர், தலித்துகள் எல்லோரையுமே மவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி அழித்தொழிப்பதைப் பற்றி அரசு அதிகம் யோசிக்கும் எனத் தோன்றவில்லை. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக வளர்ச்சியைப் பலியிட முடியாது என அறிவித்த பிரதமரால் பழங்குடிகளுக்காக வளர்ச்சியைப் பலியிட முடியாது எனச் சொல்வதற்கு வெகுநேரம் ஆகாது. மாவோயிச அபாயம் என்பதை சிங் மேலோட்டமான அர்த்தத்தில் உச்சரிக்கவில்லை. நவம்பர் அல்லது டிசம்பரில் பெரும் தாக்குதல்களை நடத்த அரசு திட்டமிட்டிருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆளில்லாத தேடுதல் விமானங்களையும் அமெரிக்காவின் செயற்கைக்கோளையும் பயன்படுத்தி மாவோயிஸ்ட்டுகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க அரசு முயல்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

பழங்குடியினர், தலித்துகளுக்காகக் குரல்கொடுத்துவரும் அமைப்புகளின் விமர்சனங்களை எதிர்கொள்வது சார்ந்த தயக்கம் அரசுக்கு இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. மாவோயிஸ்ட் வேட்டையை ஒரு முழு அளவிலான யுத்தமாக நடத்த வேண்டிய தேவை இருக்காது என்றே அரசு நம்புகிறது. அது பல்வேறு நிலைகளில் நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையாக இருக்கும் என்பதை அரசு வட்டாரங்கள் உணர்ந்துள்ள போதிலும் ஒரு முடிவான தாக்குதலுக்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இது நிலைமையை மேலும் மேலும் சிக்கலாக்கலாம். மக்கள்தொகையில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் வறுமைக்கோட்டைவிட்டு வெளியே வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் மாவோயிஸ்ட்டுகள் அவர்கள்மீதான விமர்சனங்களை மீறி ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நேபாளம் இதற்குச் சரியான உதாரணம். அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்குமிடையே ஒரு இறுதி யுத்தம் நடக்குமானால் அதன் விளைவுகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பயங்கரமாக இருக்கும் என்பதை யூகிப்பதற்கு நமக்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

உலக அளவில் மார்க்சிய இயக்கங்கள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குப் பெற்றுவருவதற்கு அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளே காரணம். அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் வளர்ச்சியின் பலன்களை நியாயமாகப் பங்கிட்டுக்கொள்வதன் மூலம் சமூக நீதியை நிலை நிறுத்துவதுமே ஜனநாயக அரசின் முன்னுள்ள உடனடிக் கடமைகள் என்பதைப் பிரதமர் உணர வேண்டும். அதைச் சாதிக்காதவரையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் வளர்ச்சி ஒரு கனவாகவும் மாவோயிஸ அச்சுறுத்தல் என்பது ஒரு கொடுங்கனவாகவுமே இருக்கும்.

“எங்களால் அவர்களை நம்ப முடியாது!”

- கிஷேன்ஜி,
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)

இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கிஷேன்ஜி என அழைக்கப்படும் 53 வயதான மல்லோஜுலா கோட்டீஸ்வர ராவுடன் தெகல்காவுக்காகப் பத்திரிகையாளர் துஷா மிட்டல் தொலைபேசியில் எடுத்த நேர்காணலில் இடம்பெற்றுள்ள பகுதி இது. நவம்பர் 21, 2009 தெகல்கா இதழில் இந்நேர்காணல் பிரசுரமாகியிருக்கிறது. லால்கரில் அமைந்துள்ள காவல் துறை முகாம் ஒன்றிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் கிஷேன்ஜி தலைமறைவாக இருப்பதாகத் தெகல்கா தெரிவிக்கிறது.

துஷாமிட்டல்: வன உரிமைகள், நிலங்களைக் கையகப்படுத்துதல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து உங்களுடன் பேச்சு நடத்த உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது அழைப்பை ஏன் நிராகரித்தீர்கள்? அவர் உங்களை வன்முறையை நிறுத்திவைக்குமாறுதானே கேட்கிறார்.

கிஷேன்ஜி: அரசுப் படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். வன்முறை எங்கள் செயல் திட்டத்தின் பகுதி அல்ல. நாங்கள் நடத்துவது எதிர்த் தாக்குதல் மட்டுமே. சிறப்புப் படை எங்கள் மக்களை நாள்தோறும் தாக்கிக்கொண்டிருக்கிறது. சென்ற மாதம் மட்டும் பாஸ்த்தரில் கோப்ரா படையினர் அப்பாவிப் பழங்குடியினரில் 18 பேரையும் 12 மாவோயிஸ்ட்டுகளையும் கொன்றிருக்கிறார்கள். சத்தீஷ்கரில் நாங்கள் மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுபவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். இதை நிறுத்துங்கள், வன்முறையும் நின்றுவிடும். சமீபத்தில் சத்தீஷ்கர் மாநிலக் காவல் துறைத் தலைவர் சால்வா ஜூடும் அமைப்புக்காக 6000 பேரைப் புதிதாகப் பணியில் சேர்த்திருக்கிறார். அந்த அமைப்புக்குப் புதிய ஆட்ளைத் தேர்வுசெய்யும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்த அமைப்பினர் பழங்குடியினரைக் கொலைசெய்கின்றனர், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களைச் சூறையாடுகின்றனர். பல பழங்குடிக் கிராமங்களை அந்த அமைப்பினர் சிதைத்துவிட்டிருக்கின்றனர். அரசு தான் விரும்புவதுபோல் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அவர்களை நாங்கள் நம்ப முடியாது.

எத்தகைய நிபந்தனையின் கீழ் நீங்கள் வன்முறையைக் கைவிடுவீர்கள்?

பழங்குடி மக்களிடம் பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும், எங்களுடைய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். படைகளை விலக்கிக்கொள்வதற்குத் தேவையான அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை தாக்குதல் நிறுத்தப்படுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அரசு இதை ஒப்புக்கொள்ளுமானால் வன்முறையைக் கைவிடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அரசுப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளும் முன்பாகவே தாக்குதலை ஒரு மாதம்வரை நிறுத்திவைப்பதாக ஒரு உத்தரவாதத்தை உங்களால் அளிக்க முடியாதா?

நாங்கள் அதைப் பரிசீலிப்போம். நான் எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளரோடு பேச வேண்டும். அந்த ஒரு மாதத்தில் படையினர் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அரசு முறையாக அதை அறிவித்துவிட்டுப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் பணியைத் தொடங்கட்டும். அது வெறும் நாடகமாக இருந்துவிடக் கூடாது, ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததுபோல. அங்கு அவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள், பிறகு நிறுத்திவிட்டார்கள். எமது மத்தியக் கமிட்டி உறுப்பினர் அரசுச் செயலரைச் சந்திப்பதற்காகச் சென்றார். பேச்சு வார்த்தைக்கு முன்வந்த அவரைக் காவல் துறை சுட்டுக்கொன்றது.

மக்கள் நலன் உங்களது செயல்திட்டம் என்றால் நீங்கள் ஏன் ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? உங்களுடைய இலக்கு பழங்குடியினர் நலனா அரசு அதிகாரமா?

அரசு அதிகாரம்தான். பழங்குடியினர் நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். ஆனால் அரசு அதிகாரம் இல்லாமல் எங்களால் எதையும் சாதிக்க முடியாது. ராணுவமோ ஆயுதமோ இல்லாமல் யாராலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணமாகவே பழங்குடியினர் சுரண்டப்படுகின்றனர், விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களது சொந்த நிலங்களின் மீது இப்போது அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை. எனினும் எங்கள் தத்துவம் ஆயுதங்களைக் கோருவது அல்ல. ஆயுதங்களை நாங்கள் இரண்டாம்பட்சமானதாகவே வைத்திருக்கிறோம்.

முதலில் வன்முறையைக் கைவிடுமாறு அரசு உங்களைக் கோருகிறது. முதலில் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என நீங்கள் அவர்களைக் கேட்கிறீர்கள். இத்தகைய அபத்தமான சூழலில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினரே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அப்படியானால் சர்வதேச அளவிலான நடுநிலையாளர்களை அழையுங்கள். ஆந்திரப் பிரதேசத்திலாகட்டும், மேற்கு வங்காளத்திலாகட்டும் அல்லது மராட்டியத்திலாகட்டும் நாங்கள் ஒருபோதும் வன்முறையைத் தொடங்கவில்லை. முதல் தாக்குதல் அரசிடமிருந்து தான் வந்தது. மேற்கு வங்காளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட பகுதிகளுக்குள் யாரும் நுழையக் கூடாது என்கிறார்கள். லால்கரில் 1998இலிருந்து காவல் துறைத் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.

வன்முறை உங்கள் செயல்திட்டத்தில் இல்லை என்கிறீர்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளில் நீங்கள் 900 காவல் துறையினரைக் கொன்றிருக்கிறீர்கள். அவர்களில் பலர் ஏழைப் பழங்குடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அது பதில் வன்முறையாகவே இருக்கட்டும். அதன் மூலம் எப்படி நீங்கள் உங்கள் இலக்கை எட்ட முடியும்?

எங்கள் போராட்டம் அரசுடனானது, காவல் துறையுடனானது அல்ல. காவல் துறை மரணங்களை எங்களால் முடிந்த அளவுக்குக் குறைக்கிறோம். மேற்கு வங்காளத்தில் உள்ள பல காவல் துறைக் குடும்பத்தினர் எங்கள் அனுதாபிகள். கடந்த 28 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் 51000 அரசியல் கொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாங்கள் கடந்த ஏழு மாதங்களில் அவர்களில் 52 பேரைக் கொன்றிருக்கிறோம். அரசு, மார்க்சிஸ்ட்டுகளின் அராஜகங்களுக்குப் பதிலடியாகவே நாங்கள் இதைச் செய்தோம்.

உள்ளடக்கம்