|
ஆஷ் துரை செத்துப்போனான்; அந்தச் சாவில் அவன் மனைவிக்கு ஏற்பட்ட துக்கத்தைவிடவும்
அதிகத்தை ஆ. இரா. வேங்கடாசலபதி உணர்ந்திருக்கிறார். ‘தூத்துக்குடியில் ஆஷின்
செயல்களால் நமக்கு நன்மை விளையவில்லை’ என்று சொன்ன பிரிட்டிஷ் கவர்னரே ஆஷ்
செத்துப்போனதில் வருத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நீதிபதி பின்ஹே, வ.உ.சிக்கு
இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததை மார்லி பிரபுவே பொறுத்துக்கொள்ளவில்லை என்ற
அளவுக்குக் கடுந்தண்டனையாக அது இருந்தது எனும் போது, ஆஷிடமிருந்து எத்தகைய அணுகு
முறையை வெள்ளை ஏகாதிபத்தியம் எதிர்பார்த்திருக்கும் என்பது வெளிப்படை. ஆனால்
‘அரசனைவிட அரசனுக்கு அதிக விசுவாசம் காட்டிய’ ஆஷ் எவ்வளவு கடுமையாக
நடந்துகொண்டிருந்தால் பிரிட்டிஷ் கவர்னரே மேற்குறிப்பிட்டபடி சொல்லியிருப்பார்?
மேலும், அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டராக இருந்த விஞ்ச்சுடன் சேர்ந்து
தனிப்பட்ட விருப்பத்துடன், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிராக வ.உ.சியும் அவரது
தோழர்களும் சேர்ந்து நடத்திய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழிப்பதற்குக்
காரணமாயிருந்த ஆஷை, “காலனிகளை அடித்து நொறுக்கும் ஏகாதிபத்திய வெள்ளை அரசு எனும்
பேரியந்திரத்தின் ஒரு சிறு திருகாணி” என்று மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்
கட்டுரையாளர். பேரியந்திரமோ சிற்றியந்திரமோ திருகாணிகள் இன்றி இயந்திரங்கள் இல்லை;
இயந்திரங்களைப் பிய்த்தெறியத் திருகாணிகள் களையப்படுவது அவசியம். மேலும், திருகாணி
எந்த இடத்தில் இருக்கின்றது என்பதுதான் மிகவும் முக்கியம். ஒரு இயந்திரத்தின் மைய
இரும்பு உருளையில் இருக்கும் பல்சக்கரத்தைத் தாங்கிப்பிடிக்கின்ற திருகாணி எவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்தது? அது இல்லையெனில் இயந்திரமே இல்லை என்பதைக் கூட அறியாதவரா
கட்டுரையாளர்? அல்லது தெரிந்தேதான் இப்படி எழுதுகிறார் எனில் இவரது நோக்கம்?
“புரட்சிகரத் தீவிரவாதிகளின் முதல் இலக்கு ஆஷ் அல்ல; தூத்துக்குடியைவிட
திருநெல்வேலியில்தான் அடக்குமுறையும் உயிர்ச்சேதமும் அதிகம். எப்படியும் மாவட்டக்
கலெக்டர் என்ற முறையில் விஞ்சுதான் அனைத்திற்கும் பொறுப்பு” என்று எழுதுவதன் மூலம்
வாஞ்சிநாதன், தவறான நபரை இலக்காக்கியதாகச் சித்தரிப்பதும் ஆஷ் கொல்லப்பட்டது தவறு
என்று சொல்வதும்தான் கட்டுரையாளரின் நோக்கம். தனது இக்கருத்தை நியாயப்படுத்தத்தான்
“ஆஷ் தலையில் சைத்தானின் கொம்புகளும் இரத்தம் வடியும் கோரைப் பற்களும் இல்லை”
என்று சொல்லி ஆஷை ஒரு அப்பிராணியாகச் சித்தரிக்கிறார். ஒரு அப்பிராணியைக் கொன்ற
கொலைகாரன்தான் வாஞ்சி என்பதே இவர் சொல்ல வருவது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை
நிகழ்த்திய ஜெனரல் டைருக்குக்கூடத் தலையில் கொம்புகளோ இரத்தம் வடியும் கோரைப்
பற்களோ இல்லை என்ற ‘உண்மை’யைக் கூட இவர் பறைசாற்றுவார் போலும்!
“சுதேசி இயக்கத்தின் தலைமையகமாக விளங்கிய தூத்துக்குடியில் அதிகாரியாகப்
பணியாற்றியதாலும், கப்பல் கம்பெனியை அடித்து நொறுக்கியதில் நேரிடையாகத்
தொடர்புகொண்டவராகக் கருதப்பட்டதாலுமே ஆஷ் வெறுக்கப்பட்டார்” என்று எழுதிவிட்டு,
வ.உ.சி எழுதிய, “யான் இவண் ஏகியதற்கும் தூத்துக்குடியில் தோன்றிய ‘சுதேசிக் கப்பல்
கம்பெனி’ செத்தொழிந்ததற்கும் அவன் காரண மென்றறைந்தேன்” என்று சொல்லி, அவன்
சுட்டுக்கொல்லப்பட்டதைக் கேட்டு, “நல்லதோர் செய்தி நவின்றாய்” என்று ஊழ்வலி மீது
ஆழ்ந்த நம்பிக்கையும் பொறுத்தருளும் பெருங்குணமும் ஒருங்கே பெற்றதோடு மட்டுமின்றி,
நாட்டுப்பற்றாளரும் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று
அறிவார்த்தமாகச் சிந்தித்த வ.உ.சி கூடத் தவறாகப் புரிந்து கொண்டதாகச் சொல்வது,
ஆஷைக் கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சியின் செயலைக் கொச்சைப்படுத்த
முற்படுவதாகும். வாஞ்சியை விடுதலைப் போராட்டக்காரன் என்று சொல்ல மனமின்றி
‘புரட்சிகரத் தீவிரவாதி’ என்று இன்றைய சூழலில் ‘இந்துத் தீவிரவாதி’ என்று
சித்தரிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மேலும், ஆஷ் - விஞ்ச்
ஆகியோருக் கிடையிலான கடிதப் போக்குவரத்தைச் சுட்டி, சுதேசிக் கப்பல் கம்பெனியை
ஒழித்துக் கட்டுவதில் ஆஷின் தனிப்பட்ட விருப்பார்வத்தை வெளிப்படையாகச் சொல்லிய
பிறகு, சுதேசிக் கப்பல் கம்பெனியை அடித்து நொறுக்கியதில் நேரிடையாகத் தொடர்பு
கொண்டவராகக் ‘கருதப்பட்டதாலுமே’ என்று தவறாகக் கருதியதைப் போல சொல்கின்ற மனநிலையை
என்ன வென்று சொல்ல?
“கொலையாளியான வாஞ்சி ஒரு பிராமணர் என்பதைத் தமிழ்நாட்டு நடுத்தர பிராமண வர்க்கம்
செரிக்க முடியவில்லை” என்கிறார். இங்கே வாஞ்சியைக் கொலைகாரனாகச் சித்தரிக்கின்ற
இவர் தமிழ்நாட்டுப் பிராமண நடுத்தர வர்க்கம் அக்காலத்தில் விடுதலை வேட்கையின்றி
வெள்ளையர்களின் கையாளாகச் செயல்பட்டுக்கொண்டிருந்ததாகவும், அதனால், வெள்ளையனுக்கு
விசுவாசமான ஒரு பிரிவினர், தம்மிலிருந்து ஒருவன் வெள்ளை அதிகாரி ஒருவனைக் கொன்றான்
என்பதைச் செரித்துக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகப் பார்த்ததைப் போலப்
பிரஸ்தாபிக்கிறார். இதற்கு என்ன சான்றுகள் வைத்திருக்கிறார்? பிராமண நடுத்தர
வர்க்கத்தை மட்டுமின்றி ஏனைய நடுத்தர வர்க்கத்தினர் பற்றியும் “திருநெல்வேலி எழுச்சி
ஒடுக்கப்பட்டு, வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றது மிதவாதிகளுக்கும் அரசைக் கண்டு
அஞ்சிய நடுத்தர வர்க்கத்திற்கும் ஏற்கெனவே காய்ச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆஷ்
கொலையால் மேலும் உதறல் ஏற்பட்டது” என்று எழுதுகிறார். அதாவது அன்றைய சூழலில் ஒரு
பெருந்தொகையினர் மத்தியில் பாதுகாப்பு உணர்வின்மையை ஏற்படுத்திய செயல் தான் ஆஷ்
கொலை என்று சித்தரிக்கிறார். அதாவது வாஞ்சிநாதன் ஒரு பொறுப்பற்ற கொலையாளி என்பதே
கட்டுரையாளரின் கருத்து. ஆனால் இவரே வேறு வழியின்றி ஒப்புக்கொண்டதைப் போல,
‘வாஞ்சியின் உயிர்த்தியாகம் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுவிட்டது’.
மணியாச்சி இரயில் சந்திப்புக்கு வாஞ்சி பெயரைச் சூட்ட இயக்கம் நடை பெற்றபோது
அதற்கெதிராக, வாஞ்சியின் இந்து மதச் சார்பைக் கண்டித்துத் துண்டறிக்கைகள் வெளியிட்ட
திராவிடர் கழகம், ஆஷைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பாதுகாவலராக
முன்வைத்தது. வாஞ்சியின் இந்து மதச் சார்பைத் திராவிடர் கழகம் எதிர்த்ததை எவரும்
புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆஷைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளின்
பாது காவலனாக வைத்தது? ஐரோப்பியக் கிறித்தவ மிஷனரிப் போதகர் கால்டுவெல்லை ‘ஞானத்
தந்தை’யாக ஏற்றுக்கொண்டவர்களிடமும், சொந்த புத்தி வேண்டாம், ‘தந்தை’ பெரியார்
தந்த புத்தி போதும் என்று சொல்பவர்களிடமும் வேறெதை எதிர்பார்க்க முடியும்! |