Google   www kalachuvadu.com

எதிர்வினை
ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு

காலச்சுவடு, அக்டோபர் 2009 இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள “ஆஷ் அடிச்சுவட்டில்...” என்ற நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது.

“தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரும் ஆஷ்தான் என்று பிந்தைய வரலாறு காட்டியது” எனக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ளார். இக்கருத்து தவறான ஒன்று.

அதே நெல்லைச் சீமையில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்) 1942 செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் குலசேகரபட்டினம் உப்பளத்தில் பி. எஸ். ராஜகோபால நாடார் தலைமையில் நுழைந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்தது. அங்குப் பணியிலிருந்த காவலர்களைக் கட்டிப்போட்டதோடு அவர்களிடமிருந்த துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது.

டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரி உப்பளத்துக்கு அருகிலேயே வசித்து வந்தான். சத்தம் கேட்டு விழிப்படைந்த அவன் இந்த விடுதலைப் போராட்ட வீரர்களை வழிமறித்தான். குண்டுகள் இல்லாத காரணத்தால் தம் துப்பாக்கியின் பெய்னெட் பகுதியைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினான். கூடியிருந்த விடுதலை வீரர்கள் தம் கையிலிருந்த ஆயுதங்களால் சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் லோன் துரையை வீழ்த்தினர்.

இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடியில் (Thoothukudi District Gazetteer, Vol-1, 2007, Tamil Nadu Archives, Chennai-8) குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகரபட்டினத்திலுள்ள லோன்துரையின் சமாதியின் படமும் இத்தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலை வழக்கு விசாரணை 1943 பிப்ரவரியில் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் எதிரியான ராஜகோபால நாடாருக்கும், இரண்டாம் எதிரி காசிராஜன் நாடாருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1943 ஏப்ரல் 30 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மூன்றாம் எதிரியான பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவரான ஏ. எஸ். பெஞ்சமினுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும், அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை ஒத்த ஃபெடரல் நீதிமன்றமும் இத்தண்டனையை உறுதிசெய்தது.

காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஆர். வெங்கட்ராமன், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லண்டனில் இருந்த ப்ரைவி கவுன்ஸிலில் ஆஜராகி இவர்கள் சார்பில் வாதாட மனுசெய்தனர். தேவைப்படுமானால் ராஜாஜியும் லண்டன் சென்று இவர்கள் சார்பில் வாதாடத் தயாராக இருந்தார். இவ்வழக்கில் வாதாடுவதற்காக ராஜாஜி லண்டன் வருவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி இந்தியாவின் கவர்னர் ஜெனரலை அறிவுறுத்தியது. அதன்படி, 1945 ஏப்ரல் 23 அன்று கவர்னர் ஜெனரல் தண்டனைக் குறைப்பு ஆணையை வெளியிட்டார்.

இரண்டாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா விடுதலை பெற்றதை முன்னிட்டு இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராஜகோபால நாடார், ‘தூக்குமேடை’ ராஜகோபால் என்று குறிப்பிடப்படலானார். இச்சம்பவத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில், 1997ஆம் ஆண்டில் குலசேகரபட்டினத்தில் நினைவுத் தூண் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதேபோல நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்ட வரலாறாகட்டும், பண்பாட்டுப் பொருளியல் சமூக வரலாறாகட்டும், நாடார் எனப்படும் சான்றோர் சமூகத்தவரின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வதே ஆ.சிவசுப்பிரமணியன், ஆ. இரா. வேங்கடாசலபதி போன்றவர்களின் பணியாக இருந்து வருகிறது. இவர்களைப் போன்றவர்கள் கருத்தில் நாடார் என்ற சமூகமே இப்பகுதியில் இருந்ததில்லை போலும்.

மற்றோர் இடத்தில் கட்டுரையாளர், “மணியாச்சி சந்திப்புக்கு வாஞ்சி பெயரை இடவேண்டுமென ஒரு இயக்கமே நடந்தது. இதற்கு எதிராக வாஞ்சியின் இந்து மதவாதச் சார்பை முன்வைத்துத் திராவிடர் கழகம் துண்டறிக்கைகளை வெளியிட்டு ஆஷைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பாதுகாவலராக முன்வைத்தது. இந்தப் பின்னணியில் தான் ஆ. சிவசுப்பிரமணியன் ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சியும் (1986) நூலை எழுதினார்” எனக் குறிப்பிடுகிறார். மணியாச்சி சந்திப்புக்கு வாஞ்சி பெயரை இடவேண்டுமென இயக்கம் நடத்தியவர்கள் இந்து மதவாத அல்லது பிராமணியச் சார்புடையவர்கள் என்ற தொனி இக்கருத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் குமரி அனந்தன் ஆவார். அவர் நாடார் சமூகத்தவரும் பிராமணர் அல்லாத ஒருவர் என்பதும்தான் இந்த இருட்டடிப்புக்கு முக்கியக் காரணம். அல்லது, நாடார் சமூகத்தவர் அனைவருமே இந்து மதவாதச் சார்புடையவர்கள் எனக் கட்டுரையாளர் கருதுகிறார் போலும். ஒருவேளை, வாஞ்சிநாதனும் குமரி அனந்தனும் சார்ந்த சமூகங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பதோடு வீட்டிலும் வெளியிலும் சுத்தத் தமிழில்தான் பேசி வந்தார்கள் என்பதாலும், தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தமிழர்களை ‘அரவாடு’ என்று சொல்லக்கூடிய நடைமுறை இல்லாதவர்கள் என்பதாலும் இப்படி உண்மையைத் திரித்து இருட்டடிப்புச் செய்கின்றனர் போலும். இவர்களுடைய இத்தகைய இருட்டடிப்புக்கு அப்பட்டமான வேறொரு எடுத்துக் காட்டையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நெல்லைச் சீமையிலும் மறவர் சீமையெனப்படும் இராமநாதபுரத்திலும் இருந்த பருத்தி ஜின்னிங் கிடங்குகள் அனைத்தும் நாடார் சமூகத்துக்குரியவை என்பதை ராபர்ட் ஹார்ட்கிரேவ் தமது Nadars of Tamilnadu என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1827ஆம் ஆண்டிலேயே ஆறுமுகநேரி ஆயிரம் நாடாக்கள், தட்சிண மாறநாடு சீர்மை நாடாக்கள் என்னும் பெயரில் வணிகப் பேட்டைகள் அமைத்து மதுரை நெல்பேட்டையில் ஒரு தலைமை இடமும் அமைத்துச் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதற்குச் செப் பேட்டு ஆதாரம் உண்டு. இச்செப்பேடு தற்போது திருநெல்வேலி தட்சிண மாற நாடார் சங்க அலுவலகத்தில் உள்ளது.

18-19ஆம் நூற்றாண்டுகளிலேயே தூத்துக்குடி முதன்மையான பருத்தி ஏற்றுமதிக் கேந்திரமாக விளங்கியது என்பதை பிஷப் ராபர்ட் கால்டுவெல் தம்முடைய History of Tinnevelly என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1870ஆம் ஆண்டளவில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை அடுத்த உமரிக்காட்டைச் சேர்ந்த நாராயணன் நாடார் என்பவர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குக் கப்பல் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். சென்னைப் பட்டினத்தில் இருந்த லெவிச்சி துரை, பவிச்சி துரை முதலிய பரங்கித் துரைமார்கள் இவரிடமிருந்து சரக்குகளை விலை பேசி வாங்கினர் என்றும் சாதிலிங்கக் கட்டி, கட்டிப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், கௌரிப் பாஷாணம், பச்சைக் கர்ப்பூரம், பவளக் கர்ப்பூரம், ஈயச் செந்தூரம், இந்துப்பு, வெடியுப்பு, பொரிகாரம், நவச்சாரம், சீனக் காரம் முதலான பல சரக்குகள் விற்கப்பட்டன என்றும் ‘கப்பல் பாட்டு’ (பக். 61-75, உமரிமாநகர் தல வரலாறு, ஆசிரியர்: காசிப்பழம் என்கிற சின்னாடார், உமரிமாநகர் அஞ்சல், ஆத்தூர் வழி, தூத்துக்குடி மாவட்டம், 1987) என்ற ஒரு பழம் பாடல் தெரிவிக்கின்றது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தென்னிந்தியப் பருத்தி இங்கிலாந்தின் லங்காஷயர், மான்செஸ்டர் போன்ற தொழில் நகரங்களில் ஜவுளி ஆலைகளுக்கு முதன்மையான கச்சாப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். எனவே, 1906இல் வ. உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தொடங்கியபோதும் 1908இல் கோரல் மில் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தியபோதும் அன்னியத் துணி பகிஷ்காரப் போராட்டத்தை வழிநடத்தியபோதும் அவருடைய தலைமையைத் தூத்துக்குடி நகரத்தின் முதன்மையான வணிகர்களாகவும் விளங்கிய நாடார் சமூகத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டுமின்றி, அவருடைய கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களாகவோ வேறு விதத்தில் தொழில் உறவு கொள்ளவோ நாடார் சமூகத்தவர்கள் விரும்பவில்லை.

இலங்கை போன்ற அண்டை நாடுகளின் சரக்கு ஏற்றுமதிக்காகக்கூட இப்பகுதி நாடார் சமூகத்தவர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் கப்பலை நாடவில்லை. வ.உ.சி. தம் குறிக்கோளில் தோல்வியடைவதற்கு நாடார்களின் இத்தகைய ஒத்துழைப்பின்மையே முதன்மையான காரணமென்ற வரலாற்று உண்மையைப் பரிசீலிக்க ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற ஆய்வாளர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. ஏனென்றால், அவர்களுடைய மனவெளிப் பரப்பில் நாடார் சமூகத்திற்கு எந்த ஓர் இடமும் கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. எனவே அவர்களுடைய கண்ணோட்டத்தில் அமைந்த வரலாற்றிலும் நாடார் சமூகத்திற்கு எந்த இடமும் கிடையாதென்பது முடிந்த முடிபு.

1916ஆம் ஆண்டுக்குரிய இந்திய அரசின் கல்வெட்டு ஆய்வறிக்கை (Annual Report on Epigraphy) நூலின் முன்னுரையில் இந்திய அரசின் கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற கருத்தைப் பாருங்கள்: “நெல்லைச் சீமையில் இப்போதும் நிலவிவருகின்ற வேளாளர் - நாடார் பகைமையின் வேர்களைக் கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய ஊர்களில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 15 மற்றும் 17ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் காணலாம்.” இந்தியக் கல்வெட்டு ஆய்வாளர்களுக்குத் தெரிந்த இந்த எளிய உண்மையைக்கூட இத்தகைய வரலாற்றாய்வாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்டம் மிகுந்த தீவிரமடைந்த 1940ஆம் அளவிலும் அதற்குப் பின்னரும்கூடத் தென்மாவட்ட நாடார் சமூகத்தவரிடம் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோரின் தலைமைப் பண்புகளும் பாரதியாரின் பாடல்களும் தாக்கம் விளைவித்திருந்தனவே தவிர, வ.உ.சி.யின் போராட்ட வரலாறு எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

வ.உ.சி. இணையற்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்ற உண்மையை எப்படி மறுக்க முடியாதோ அது போன்றே சைவ வேளாளர், பிராமணர் அல்லாத - அந்தக் காலகட்டத்தில் இடைத்தட்டுச் சாதிகளாகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் இவர்களால் கருதப்பட்ட - பிற சாதியினர் சமைத்த உணவைக்கூட அருந்துவதற்கு ஆயத்தமாக இல்லாத மனநிலை உடையவர் என்ற உண்மையையும் யாரும் மறுத்துவிட முடியாது. கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேசனாகிய ஜார்ஜ் பஞ்சமன் என்று தன்னுடைய கடிதத்தில் எழுதும்போது, வாஞ்சி அய்யர் என்ன மனநிலையில் பஞ்சமன் என்னும் சொல்லைப் பயன்படுத்தினாரோ அந்த மனநிலைக்குச் சற்றும் வேறுபாடில்லாத மனநிலை உடையவர்தாம் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களும். (ஜாதி என்னடா? என்றேன். ‘முதலி’ என்றான். ‘என்னடா முதலி நீ?’ என்றேன், விழித்தான். ‘பார்ப்பான் அல்லது பாண்டி வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால் உண்பேன் என்று ஜெயிலர்பால் இயம்பெனச் சொன்னேன்’. - சுயசரிதை பக். 134.)

இத்தகைய மனநிலை அக்காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிற ஃபீனிக்ஸ் போல மீண்டும் மீண்டும் வேளாளர் சார்பு மனநிலை, சான்றோர் சமூகத்தை இருட்டடிப்புச் செய்கின்ற உள்நோக்கம் ஆகியவை ஆ. இரா. வேங்கடாசலபதி போன்றவர்களிடம் ‘நீறுபூத்த நெருப்பாக’ இருந்து வருகின்றன. அதன் வெளிப்பாடு தான், லோன் துரை கொலை வழக்கு என்ற நிஜத்தையே நிகழாத ஒன்றுபோல மறைத்து எழுதுகிற மனநிலை. உண்மையிலேயே இது “ஆஷின் அடிச்சுவட்டில்...” அமைந்த ஆய்வுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

- அ. கணேசன்
(தலைவர், சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகம், சென்னை)

உள்ளடக்கம்