Google   www kalachuvadu.com

எதிர்வினை
விமர்சிப்பதும் புனிதப்படுத்துவதுமல்ல பிரச்சினை
சர்வகன்

‘வன்னியில் என்ன நடந்தது’ என்ற கட்டுரை தொடர்பான எதிர்வினைகள் மீதான என் கருத்துகள்: பரணி கிருஸ்ணரஜனி, யாழினி ரவிச்சந்திரன், சித்திரலேகா துஸ்யந்தன், ப்ரியதர்சினி சற்குணவடிவேல் போன்றோர் தம்மை ஆய்வு மாணவர்களாகக் குறிப்பிட்டிருந்தனர். இவர்கள் காலச்சுவடு, குறித்த கட்டுரையை எழுதியவரின் பெயரை வெளியிடாமலிருந்தமை மாபெரும் ஊடக அறமீறலாகக் குறிப்பிட்டிருந்தனர். இவர்கள் ஈழத்தின் இன்றைய நிலையைப் புரிந்துகொள்ளாதது ஊடக அறம் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. இங்கு அரசுதான் கடவுள். அது புனிதமானது. அதை நோக்கி விரலை நீட்டுவது நாட்டுக்குச் செய்யும் துரோகமானது என்ற நிலைதானிருக்கிறது. உண்மையில் இந்தக் கருத்துநிலையைப் புலிகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். விடுதலைப்புலிகள் அமைப்பை எவரும் கேள்விகளுக்குட்படுத்த முடியாது. அவர்கள்மீது விமர்சனங்கள் வைக்கப்படுமானால் துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் பலர்.

ஊடக சுதந்திரம் பற்றிப் பேசும் இம் மாணவர்கள் இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறு உள்ளதென முதலில் ஆராய வேண்டும். சோதிடனிலிருந்து பத்திரிகையாளன்வரை அரசைப் பற்றி யாருமே வாய்திறக்க முடியாது. புலிகள் எப்படித் தம்மைப் புகழ்ந்து துதித்தவர்களைக் கொண்டாடி புத்திபூர்வமாகக் கருத்துக் கூறியவர்களைப் புறக்கணித்து வந்தார்களோ அத்தகைய மனநிலைதான் இந்த அரசிடமும் இருக்கின்றது. இந்த நிலையில் உண்மையை வெளிப்படுத்த விரும்புபவர்கள் புனைபெயரில் ஒளிய வேண்டியிருக்கிறது அல்லது பெயரை வெளியிடாதிருக்க வேண்டியிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு உண்மைகளை வெளிப்படுத்த விரும்பும் பத்திரிகைகள், சஞ்சிகைகள்மீது ஊடக அறம் சார்ந்து கேள்வியெழுப்புவது எந்த வகையிலும் நியாயமான ஒன்றல்ல.

ஆய்வு மாணவர்கள் தாம் வாழும் நாடுகளின் ஜனநாயகச் சூழலோடு இலங்கையைப் பொருத்திப் பார்ப்பது வேடிக்கையானது. இவர்களால் இலங்கையில் இருந்துகொண்டு ஊடக அறம் பற்றியோ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள மக்களை அரசு விடுவிக்காது செய்யும் மனித உரிமைப் பாசாங்குகளைப் பற்றியோ பேச முடியுமா? ஈழப்போரின் வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகப் புலிகளை விமர்சனங்களுக்கப் பாற்பட்ட அமைப்பாக வளர்த்துவிட்டமையையும் குறிப்பிடலாம். வெற்றிகளைக் கொண்டாடிய புலம்பெயர் புத்திஜீவிகள் பலரும் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிக்க முயலவில்லை, அவர்கள் மக்களை நடாத்திய விதம் குறித்தும் விமர்சிக்க விரும்பவில்லை என்பதுந்தான் பெரிய அபத்தம்.

கட்டுரையாளர் குறிப்பிட்டதற்கு மாறாகவே ஈழத்தில் குறிப்பாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் மன நிலை இருப்பதாகவும், புலிகள்மீதான மக்களின் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லையெனவும் அவர்கள் இன்னும் புலிகளைக் கொண்டாடுகிறார்கள் என்னும் தொனியில் எதிர்வினையாளர்கள் கருத்துக் கூறியிருந்தார்கள். ஆனால் உண்மை புறம்பாக இருக்கின்றது. புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களே புலிகளை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் புலிகளைக் காத்து தங்கள் உயிரையும் உடமைகளையும் பிள்ளைகளையும் எந்த மக்கள் காவு கொடுத்தார்களோ அந்த மக்களின் மீதே புலிகள் தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காகச் செய்த வன்முறை எவ்வளவு கொடுமையானது. எதிர்வினையாளர்கள் சொல்வது மாதிரியல்ல. மக்களின் மனநிலை வேறு. அந்த மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கதைகளை அறிகிற எங்களால் புரிய முடிகின்றது. புலிகள் தாம் புரிந்த தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் அர்த்தமற்றதாக்கிவிட்டார்கள். வன்னி மக்களை மாபெரும் அவலத்துக்குள் தள்ளியிருக்கிறார்கள். இந்த யுத்தத்தின் மிகப் பெரிய கொடூரத்தை அனுபவிப்பவர்கள் அந்த மக்கள்தான். எனவே இறுதி யுத்தத்தின் வடுக்களையும் துயரத்தையும் அனுபவித்த மக்களின் சாட்சியங்கள் தாம் இந்த இடத்தில் முக்கியமானவை. தவிர உண்மையை உணர விரும்பாத வெறும் குருட்டுத் தனமான விசுவாசம் எந்தளவிற்கு மோசமானது என்பது உணரப்படுமானால் மக்களின் கசப்பான உணர்வுகளைப் புரிந்துகொள்வது சிக்கலாக இருக்காது. குறித்த கட்டுரையாளர் தன்னுடைய அனுபவப் பகிர்வையும் வலியையும் எழுதியிருக்கின்றார். அது மாபெரும் மக்கள் கூட்டத்தின் கருத்தாக இருக்குமென்றும் நான் கருதவில்லை. ஆனாலும் நாம் சந்திக்கின்ற வன்னியிலிருந்து வந்த மக்களின் அனுபவமும் கட்டுரையாளரின் பதிவும் பல நிலைகளிலும் வேறுபடுபவையல்ல.

புலிகளை விமர்சிப்பதும் புனிதப்படுத்துவதுமல்ல பிரச்சினை. அடைக்கப்பட்டிருக்கிற மூன்று இலட்சம் மக்களின் நிலைதான் முக்கியமானது. அதைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படுவதுதான் பிரதான கடமை. ஈழத் தமிழர்களின் முப்பதாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் கண்ணீரும் குருதியும் நிறைந்திருக்கிறது. இன்று புனர்வாழ்வு நிலையங்கள் என அழகாக உச்சரிக்கப்படும் அகதி முகாங்களில் வாழும் மக்களின் வாழ்வின் மீட்சி குறித்துப் புலம்பெயர் தமிழர்கள் யோசிக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு யுத்தத்திற்காக வழங்கப்பட்ட நிதி இன்று எவ்வாறான நிலையிலிருக்கிறது, யாரிடமிருக்கிறது என்பதெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டிய விடயம். ஆனால் பெருந்துயரத்தோடும் கண்ணீரோடும் இழப்புகளோடும் வாழுகின்ற மக்களின் மறுவாழ்வுக்கான வழிகள் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும். அதுவே அந்த மக்களுக்குச் செய்யத்தகுந்த பெரும் உதவியாகும்.

தமிழீழம் என்பது புலம்பெயர் மக்களின் கனவு மட்டுமல்ல. இந்த நிலத்திலேயே இரத்தமும் சதையுமாக வாழும் மக்களின் கனவுந்தான். வெறுமனே பொருளாதார உதவிகளால் வலுப்பெற்றதல்ல புலிகள் இயக்கம். இத்தனை காலமும் அது நிலைத்திருந்ததற்கு இங்கு வாழும் மக்களின் அர்ப்பணிப்பும் அரவணைப்பும் தியாகங்களும்தான் காரணங்கள். விடுதலைக்காகப் பிள்ளைகளைக் கொடுத்தவர்களின் வலியை எதைக் கொண்டும் போக்க முடியுமா? தங்கள் பிள்ளைகளின் கல்லறைகளில்கூட ஒரு விளக்கைத்தானும் அவர்களால் ஏற்ற முடியுமா? ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஓர் ஈழக் கவிஞர் ஒருவர் தன் கவிதை நூலின் பின்னுரையில் “புலம்பெயராதிருந்திருந்தால் என்னையும் என் குழந்தைகளையும் போர் மிருகம் மேய்ந்திருக்கும். இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை” என எழுதுகின்றார். இன்னொரு கவிஞர் பேட்டியொன்றில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “சாதிய கட்டுமானத்தைக் கொண்ட ஜனநாயக மறுப்புக்கொண்ட எம் சமூக அமைப்பில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்குப் புலம் பெயர் தேசங்களே அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றன. ஆதலால் அவர்கள் திரும்புதலை விரும்பார் என்றே நினைக்கின்றேன்” என்று பதிலளிக்கின்றார்.

இவர்களுடைய அடிப்படை உணர்வு தான் என்ன? தாங்களும் தங்கள் பிள்ளைகளும் புலம்பெயர்ந்த நாடுகளில் சுதந்திரமாக வாழ வேண்டும். ஆனால் ஈழத்தில் வாழும் மக்கள் சாதிய ஒடுக்குமுறைகள், ஜனநாயக மறுப்புகள், போர் நெருக்கடிகள் எல்லாவற்றிற்குள்ளும் அழுந்தித் துயரத்தோடு வாழ வேண்டும் என்பதா? இதற்குள் இவர்களுக்குத் தமிழீழம் வேண்டும். இல்லையெனில் நாடு கடந்த தமிழீழமாவது வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு என்ன வேண்டும்?

உள்ளடக்கம்