Google   www kalachuvadu.com

எதிர்வினை
‘வன்னியில் என்ன நடந்தது?’ கட்டுரையாளரின் எதிர்வினை

காலச்சுவடு இதழில் ‘வன்னியில் என்ன நடந்தது’ என்ற கட்டுரைக்கான அறிமுகத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் தொடர்பான விளக்கம்:

சேரனின் நேர்காணலுக்குப் பின்னர் நான் காலச்சுவடுடனும் உங்களுடனும் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளவில்லை. தொடர்பாடல் மட்டுமே இடை நின்றது. கவனிக்கவும் இடைநின்றது.

காரணம் தமிழ்நாட்டில் இருந்த ஈழத் தமிழர் ஒருவர் (ஒரு இலங்கைத் தமிழ் தினசரியின் நிருபராகத் தமிழகத்தில் பணியாற்றிய இவருடைய பெயரை இப்போது வெளியிட வேண்டாம். அவருக்கு அது பாதுகாப்பானதாக இல்லை என நண்பர்கள் கூறுகின்றனர். அது உண்மையும்கூட) காலச்சுவடுக்கான வாசகர் வட்டங்கள் வன்னியில் வளர்வதையும் அதன் வாசகப் பரம்பல் மற்றும் செல்வாக்கையும் தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்றும், அதுவொரு பிராமணப் பத்திரிகை என்றும் அது எப்போதும் தமிழன் எதிர்ப்பரசியலை அடிப்படையாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டு இந்த ஆபத்தான பத்திரிகைக்கு எவ்வாறு வன்னியில் செல்வாக்கை அதிகரிக்க அனுமதிப்பீர்கள் எனக் கேட்டுப் புலிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தின் பின்னர் காலச்சுவடுடன் இணைந்திருந்த பல ஈழ நண்பர்கள் குறிப்பாக வன்னிக்குள்ளிருந்தோர் தொடர்புகளை இடைநிறுத்திக்கொண்டனர். அல்லது குறைத்துக்கொண்டனர்.

இதுபோதாதென்று புலிகளின் புலனாய்வுத் துறை இந்தப் பத்திரிகையுடன் தொடர்புடையோர் குறித்து விசாரிக்கின்றனர் என்றும் அச்சுறுத்தல் செய்யப்பட்டது. அத்துடன் ஈழப் போராட்டத்துக்கு எதிரான தரப்புகளுடன் இவர்களுக்குத் தொடர்புண்டு எனவும் இவர் புலிகளுக்குப் போட்டுக்கொடுத்தார். இதனால் ஜெயமோகன், தஞ்சைப் பிரகாஷ், அருள் எழிலன் (ஆனந்த விகடன்) மனுஷ்யபுத்திரன் மற்றும் கதவு, நவீன விருட்சம் உள்ளிட்ட பல இதழ்கள் என சகலதரப்புடனுமான தொடர்புகள் இடைநின்றன.

குறிப்பிட்ட மனிதர் வன்னிக்கு வந்து மேலும் பல எதிர்நிலை அம்சங்களை இந்தப் படைப்பாளிகள், வாசகர்கள் குறித்துச் சொல்லிப் புலிகளுக்கு எச்சரிக்கை செய்தார். இதனாலேயே தொடர்புகள் தடைபட்டன.

புலிகள் தொடர்பான விமர்சனங்களை காலச்சுவடுவில் நட்சத்திரன் செவ் விந்தியன், நுஃமான், சி. சிவசேகரம் உள்ளிட்ட பலர் முன்வைத்த பின்னர் நாம் காலச்சுவடுடன் தொடர்புகளை வைத்திருந்தோம். குறிப்பாக நான் உட்பட.

காலச்சுவடுவில் நீங்கள் சிரமமெடுத்து இந்தப் பதிவுகளைப் பிரசுரித்ததற்கும் இந்த எதிர்வினைகள், எதிர்நிலைகளால் காலச்சுவடு எதிர்கொண்ட சிரமங்களுக்கும் என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். உண்மையை விரும்பாத, அதை எப்படியும் மூடிமறைக்க விரும்புகிற ஒரு குருட்டுச் சூழல், ஆரோக்கியமற்ற அதிகாரச் சூழலே ஈழ அரசியலில் நிலவுகிறது.

இது ஈழப் பிரச்சினையை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இந்தப் போக்கு தொடர்ந்தால் சிங்கள ஆட்சியாளருக்கே அதிக நன்மை.

நன்றி

இப்படிக்கு

.....................

காலச்சுவடு இதழில் வெளிவந்த ‘வன்னிக் கட்டுரை’ தொடர்பாக மேலும் சில குறிப்புகள்

1. வன்னியில் புலிகளுடன் இருந்தோர் எனச் சொல்லப்படுவதும் பொதுவாக அப்படியொரு முத்திரையைக் குத்துவதும் தவறு. இதையே சிறிலங்கா அரசாங்கமும் இப்போது செய்கிறது. புலிகளின் பகுதியில் இருந்தாலும் பலர் மனதாலும் செயற்பாடுகளாலும் தூர விலகியே இருந்தனர்.

2. புலிகளின் நன்கொடையையும் அங்கீகாரத்தையும் பெற்றிருந்த கலைஞர்களும் படைப்பாளிகளும் மிகக் குறைவானோரே. அவர்கள் நேரடியாகப் புலிகளின் பிரச்சார அலகுகளாக இருந்தனர். அவர்களுக்கே புலிகள் வெளியீட்டு வசதிகளையும் பிற வாய்ப்புகள் வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

ஏனைய பல கலைஞர்கள், எழுத்தாளர்களை எந்தப் புலம்பெயர் மக்களும் சந்தித்ததுமில்லை. நானறிந்தவரையில் அன்பளிப்புகள், வெகுமதிகள் கொடுத்ததுமில்லை. அவர்கள் பெற்றதுமில்லை. அதிகம் ஏன், எந்தப் புலம்பெயர் தமிழரின் ஏற்பாட்டிலும் உதவியிலும் ஒரு புத்தகம்கூட வெளியிடப்பட்டதுமில்லை. உதாரணம்:

தாமரைச் செல்வி, முல்லைக் கோணேஸ், நிலாந்தன், அமரதாஸ், கருணாகரன், சித்தாந்தன், தானா. விஷ்ணு, பிரதீபகுமாரன், யாத்திரீகன், முல்லைக்கமல், அநாமிகன்.

3. இது தவிர போராளிகளாக இருந்தவர்கள் எழுதிய பல நூல்களையே புலிகள் அமைப்பு வெளியிடவில்லை. காரணம் அவற்றில் சில விமர்சனமான பகுதிகள் இருந்தமை. இதில் கவனிக்க வேண்டிய உண்மையும் சுவாரஷியமுமான விசயம் என்னவென்றால் இந்த நூல்களில் சிலவற்றை இந்த உறுப்பினர்கள் தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்களில் சிலருக்கு அனுப்பினர் (முற்போக்குப் பாத்திரம்வகிப்போர் என எண்ணிச் சிலருக்கு) அவர்கள் புலிகளின் மேலிடத்துடன் இந்த நூல்களின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் பேசிக்கொள்வார்கள் என எதிர்பார்த்தனர். அத்துடன் அவர்கள் இந்த நூல்களை எப்படியும் வெளியே கொண்டு வரக்கூடிய சூழலை உருவாக்குவர் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இது ஏன்?

4. வன்னியில் பல வாசகர்களும் புலிகளின் இயக்கத்திலுள்ள பல உறுப்பினர்களும் தேடி வாசிக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்ன தெரியுமா?

சரிநிகர், தினமுரசு, ஆதவன், பெரு வெளி, உயிர்நிழல், எக்ஸில், காலச்சுவடு, மூன்றாவது மனிதன், தினகரன், அமுது ஆகியவை. மாற்று அபிப்பிராயங்களை அறிவதற்கான தாகம் இதுவன்றி வேறென்ன?

இதைப் போல ஷோபா சக்தி, சுகன், லஷ்மி, சேரன், நட்சத்திரன் செவ்விந்தியன், மஜீத், நாசமறுப்பான், சக்கரவர்த்தி, திருமாவளவன், கற்சுறா, முல்லை முஸ்ரிபா என்போரின் புத்தகங்களும் எழுத்துக்களும் வன்னியில் பலரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. பல முக்கியப் பொறுப்பாளர்களே இவர்களின் எழுத்துக்களில் மிகப் பிரியம் கொண்டிருந்தனர்.

5. அதேவேளை புலம்பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களும் போராட்ட ஆதரவு நடவடிக்கைகளும் ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடும்’ சங்கதிகளே எனவும் இவர்கள் அபிப்பிராயப்பட்டனர். தவிரவும் தமிழகத்திலும் வை.கோ, நெடுமாறன் குழுவினரின் கற்பனைக்கு அளவேயில்லை என்பதும் அவர்கள் கருத்து.

6. சனங்கள் வாய்திறக்க முடியாத சூழலில் வாழ்வதைப் பற்றியும் சமாதானச் சூழலைப் பாழாக்கிக்கொண்டிருப்பதைப் பற்றியும் ஒரு புலி உறுப்பினருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் ‘அல்லற்பட்டு ஆற்றாது விடும் கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்று. இது எதைச் சொல்கிறது?

7. ஏன் இப்படியெல்லாம் அக்கிரமமாக நடக்கிறார்கள் என்று வேறு சில புலிகளிடம் கேட்டபோது (இந்த மாதிரி உறுப்பினர்கள் மூத்தவர்களாக இருந்தாலும் செல்வாக்கு வலயத்துக்குத் தூரத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர். காரணம், இவர்கள் அடிப்படையில் மனிதாபிமானத்துடனும் நேர்மையுடனும் நடப்பவர்கள். ஆனால் தலைமையின் மீது அளவற்ற விசுவாசம் கொண்டவர்கள்). “பிரபாகரனின் அபிலாசைகள் மாறிவிட்டன. பொதுவாக தளபதிகள், பொறுப்பாளர்களின் வர்க்க நலன்களைக் கைவிட அவர்கள் தயாரில்லை. அதுதான் தோல்விக்கான காரணமாக அமையப்போகிறது” என்று சொன்னார்கள். இது 2006 காலப் பகுதியிலிருந்து 2008 வரை அவர்கள் சொன்ன கருத்துகளின் சாரம்.

உள்ளடக்கம்