Google   www kalachuvadu.com

எதிர்வினை

விவாதத்திற்கான ஒரு திறந்தவெளி

 

இதழ் 116 (ஆகஸ்ட் 2009)இல் இடம்பெற்ற “வன்னியில் என்ன நடந்தது?” பதிவு குறித்து:

யாருமே எதிர்பார்த்திராத ஒரு தோல்வியின் கடைசிக் கணங்களில் என்ன நடந்தது என்பதைத் தனக்கு நேர்ந்த அனுபவங்களினூடாகக் கட்டுரையாளர் முன்வைத்திருக்கிறார். அவருடைய அந்த அனுபவத்தின் உண்மை குறித்து எவரும் கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு இருக்குமென்று நான் நினைக்கவில்லை.

உண்மையில் தமிழ்ச் சமூகம் மிகப் பெரும் அவலம் ஒன்றை வரலாற்றில் சந்தித்திருக்கிறது. ஓர் ஊழிப் பேரழிவுதான் அது. அதிலிருந்து மீண்டெழுவது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதெனினும் வரலாறு பின்னோக்கிச் சுழல்வதில்லை என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றாக வேண்டும். ஆனால் அதற்கு உண்மைகளை நாம் எதிர்கொள்வதற்கு எம்மைத் தயார்படுத்தியாக வேண்டும். அது எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும்கூட.

மேற்படிக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வது தொடர்பான ஓர் உரையாடலில் நான் பங்கேற்க நேர்ந்தது. அக்கட்டுரையை மீள்பிரசுரம்செய்வதை மறுத்துரைத்த நண்பர்கள் சிலர் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய கட்டுரை ஒன்றை மீள்பிரசுரம்செய்யலாமா என்பதையும் தாண்டி இப்படிப்பட்ட கட்டுரை ஒன்று இப்போது எழுதப்படலாமா? அவ்வாறு எழுதினாலும் காலச்சுவடு போன்ற சஞ்சிகைகள் அதைப் பிரசுரிக்கலாமா என்றும் கேள்வியெழுப்பினார்கள். அதுவே நமது வட்டத்தில் ஒரு விவாதமாகவும் ஆகிவிட்டது.

அவர்கள் தமது கருத்தை மேலும் உறுதிப்படுத்த, மறுமதிப்பீடொன்றை இவ்வாறு உடனடியாகச் செய்வது சாத்தியமில்லை என்றும் அதற்குக் கால அவகாசம் தேவை என்றும் அதையுணர்ந்ததால்தான் பலர் மௌனமாக இருக்கிறார்கள் என்றும் வாதிட்டதோடு, இந்த ‘உண்மைகளைச்’ சொல்வதனூடாகக் கட்டுரை முழுக்க முழுக்கப் புலிகளை பாஸிஸ்டுகள் என்று முத்திரை குத்தவே முயல்கின்றது; அத்தோடு தன் பெயரை மறைப்பதனூடாகத் தன் மனவிருப்புக்களான புலிகள்மீதான விரோதத்தையும் குரோதத்தையும் கட்டுரையாளர் வெளிப்படுத்தியுள்ளார்; அதற்குக் காலச்சுவடு எழுதிய குறிப்பினூடாக ஒரு நம்பகத்தன்மையை வழங்கியிருக்கிறது. அதனூடாகக் காலச்சுவடு தவறான அணுகுமுறைக்குத் துணைபோயிருக்கின்றது என்றும் தெரிவித்திருந்தார்கள்.

என்னுடைய அபிப்பிராயத்தில், உண்மையிலேயே கட்டுரையாளர் எந்தப் புதிய விடயத்தையும் எழுதிவிடவில்லை. போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற சம்பவங்களை அவரது பார்வையில் தொகுத்துத் தனது சாட்சியமாக நம்முன் வைத்திருக்கிறார். போரின் இறுதிக்கட்டத்தின்போதே அவ்வாறான சம்பவங்கள் பலவற்றை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அச்சம்பவங்கள் நடைபெற்றபோது அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த வழியும் பலமும் அற்றவர்களாய் நாங்கள் இருந்திருக்கிறோம். ஆக அத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை எங்களால் தவிர்க்க முடியவில்லை. எனவே, அதற்குப் பின்னர் அவற்றை எழுதுவதையும் வெளியிடுவதையும் தவறு என்பதில் எத்தகைய நியாயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தேன்.

இரண்டாவது, விமர்சனங்களை எப்போது முன்வைக்க வேண்டுமென்பது அவரவர் தீர்மானிப்பது. பொறுமை காத்து நிதானமாக எழுதுபவர் எழுதட்டும். அதே நேரம் தமது காயங்கள் ஆறும் முன்னர் அதைப் பதிவிடுபவர் பதிவிடட்டும்.

தவறான போக்குகள் எங்கெங்கு தலையெடுக்கின்றனவோ அவ்வப்போதே அவை தொடர்பான திறந்த கருத்தாடல்கள் நடாத்தப்பட வேண்டும். அதுதான் ஒரு போராட்டம் சரியான திசை வழியை நோக்கிப் பயணிக்க வழியமைக்கும். அதை ஒத்திப்போடுவதென்பது இறுதியில் இன்றைய நிலையை வந்தடைய வழி சமைத்ததாய் ஆகிவிடும்.

உதாரணமாக முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கும், அந்தத் தவறைப் பற்றி இப்போது பேசக் கூடாது என்றவர்கள் இன்றுவரை அது பற்றிப் பேசாமல் மௌனமாகவே இருக்கிறார்கள். அன்றே அது தவறு என்றும் அது ‘ஈழத்தின் தேசியத் தற்கொலை’ என்றும் சுட்டிக்காட்டிய சரிநிகர் பத்திரிகையும் அதையொத்த கருத்துக் கொண்டவர்களும் துரோகியாக இனங்காட்டப்பட்டனர். ஆனால் புலிகளே பின்னர் அது தவறு என்று ஒத்துக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்தது. முஸ்லிம்களை வெளியேற்றிய விடயம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நியாயமற்ற ஒன்றாக இனங்காட்டப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் இவ்விடத்தில் மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.

தமிழ் மக்களுக்கெதிரான அழித் தொழிப்பு யுத்தம் உச்சம் பெற்றபோது, தமிழ் மக்களின் உயிர்காக்கப் போர்நிறுத் தம் கோரிப் போராடிய, அதற்காகத் தம் உயிரையும் ஈந்த மக்கள் வாழும் நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு சஞ்சிகை என்றளவில் வன்னியில் இறுதியில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அறியவும் கருத்தாடவுமாகக் காலச்சுவடு மேற்கொண்ட அக்கறை வரவேற்புக்குரியது.

அந்த வகையில் காலச்சுவடு தனது ஆசிரியத்துவப் பணியை மிகச் சரியாகவே செய்திருக்கிறது. அதேநேரம் இதே அனுபவங்களை இன்னொரு பார்வையில் தொகுப்பதற்கான வாய்ப்பு இருப்பதைக் காலச்சுவடு மறுக்கவில்லை. அது புலிகளுக்கு ஆதரவானதாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் இருக்கக்கூடும். அப்போதும்கூட இன்றுள்ள சூழ்நிலையில் அதைப் புனைபெயரில் வெளியிடுவது தான் சாத்தியம். எனவே காலச்சுவடு விவாதத்திற்கான ஒரு திறந்தவெளியை இதன்மூலம் உருவாக்கியிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.

இறுதியாக, கட்டுரையாளரின் அனுபவங்கள் உண்மையானவை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அவர் அவற்றைத் தொகுத்த அணுகுமுறை போராட்டத்தின் பலவீனங்களை இனம் காணும் வாய்ப்பைச் சுருக்கிவிடுகிறது. அந்தப் பார்வையுடன் எனக்கு ஒருபோதும் உடன்பட முடியவில்லை. அந்தப் பார்வையுடன் உடன்படாதிருத்தல் என்பது வேறு. ஆனால் அவை எழுதப்படக் கூடாது அல்லது வெளியிடப்படக் கூடாது என்பது வேறு.

யாதவன், கொழும்பு

உள்ளடக்கம்