|
இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான முனைவர் கண்டலடை
பாலகோபால் 8.10.2009 அன்று ஹைதராபாத்தில் காலமானார். மனித உரிமைத் தளத்தில்
தீவிரமாகச் செயல்பட்டுவந்த ஒரு முக்கிய ஆளுமை மறைந்துவிட்டது. அனைத்து ஆந்திரப்
பத்திரிகைகளும் பாலகோபாலின் மறைவுச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச்
செய்திகளாக வெளியிட்டன. சில தொலைக்காட்சி ஊடகங்கள் அவரின் இறுதிப் பயணத்தை
ஒளிபரப்பின. மனித உரிமை ஆர்வலர்கள் தம் மூத்த தோழர் ஒருவரை இழந்துவிட்டதாகக்
கருதினர். பாலகோபால் தனிப்பட்ட வாழ்வில் அனைவருடனும் மிக நெருக்கமான நட்பைப்
பேணியவரல்ல. ஆனால் மனித உரிமை அரசியலில், மக்கள் இயக்கங்களில் மிக இயல்பாகத் தன்னை
ஐக்கியப்படுத்திக்கொண்டு இறுதிவரை போராடியவர். தன்னைப் பற்றிய சிந்தனைகளே அற்றவர்.
ஒல்லியான தேகம், பட்டையான ஒரு முகக் கண்ணாடி, இறுக்கமற்ற ஒரு சட்டை, சாதாரணமான
காலணிகள், வேகமான ஆழ்ந்த உரை வீச்சு இவையே முனைவர் கே. பாலகோபால் பற்றிய மனப்
பதிவுகளாக இருந்து வருகின்றன.
முதன்முதலாக அவரது புகைப்படத்தை 1985ஆம் ஆண்டு இல்லஸ் டிரேட்டேட் வீக்லி ஆப் இன்டியா
ஆங்கில நாளிதழில் பார்த்திருந்தேன். ஆந்திராவில் நக்சல்பாரி இயக்கத்தினரை
அழித்தொழிக்கும் காவல் துறையினரின் போலி மோதல் நடை முறைகளுக்கு எதிராகப்
போராடியதால் அவர் தடா வழக்கில் சிறைபடுத்தப்பட்டதைப் பற்றிய கட்டுரை ஒன்றை அந்த
நாளிதழ் அப்போது வெளியிட்டிருந்தது. பின் மார்க்சிய லெனினிய இயக்க ஆதரவு ஏடுகள்
சில கே. பாலகோபால் பற்றி எழுதியதை வாசித்திருந்தேன். புதுவையில் மக்கள் சிவில்
உரிமைக் கழகம் சார்பில் மரண தண்டனைக்கு எதிராக நடத்தப்பட்ட மாநாட்டிற்குச்
சென்றிருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு முன் அங்கே போடப்பட்டிருந்த புத்தகக்
கடைகளில் இந்த ஒல்லியான பட்டைக் கண்ணாடி அணிந்த மனிதர் ஆந்திரா சிவில் உரிமைக் கழக
வெளியீடுகள் முன் அமர்ந்திருந்தார்.
கே. பாலகோபால் 1952இல் அன்றைய ஆந்திராவின் ஒரு பகுதியாக இருந்த பெல்லாரியில் ஒரு
வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். கணிதப் பாடத்தில் அவர் மிகுந்த
நிபுணத்துவம் பெற்றிருந்தார். கணிதத்தில் முதுகலைப் பட்டமும் நிகழ்தகவு கணித
தத்துவத்தில் முனைவர் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்ற பின் இந்தியப் புள்ளியியல்
கல்விக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். ஆனால் அங்கு அதிக காலம் அவர்
பணிபுரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு நடைபெற்ற மனித
உரிமைப் பயிலரங்கில் பேச வந்த கே. பால கோபால் சமூக அக்கறையற்ற வெற்று ஆராய்ச்சி
தனக்கு ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை என்றார்.
அவரது தேடல் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரானதாகவே இருந்தது. 1980இல் வாராங்கல்
காக்கத்தியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார்.
அந்நாட்களில் நக்சல்பாரி இயக்கம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியைப் பெற்றிருந்த
காலம். காவல் துறையினர் இவ்வெழுச்சியை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என
முடிவுசெய்து நக்சல்பாரிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒடுக்க முயன்றிருந்தனர்.
போலி மோதல் சாவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள்
கொன்றொழிக்கப்பட்டனர். மனித உரிமைகள், மனித கண்ணியம் ஆகியவை பெரும்
கேள்விக்குள்ளான காலகட்டம் அது. துவக்கத்தில் இந்திரா காந்தியின் “வறுமையை
விரட்டுவோம்” என்ற முழக்கத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர் கே. பாலகோபால் நெருக்கடி
நிலை விட்டுச் சென்ற கோரத்தைக் கண்ட பிறகு இந்திரா காந்தியை நிராகரித்தார். மனித
உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும் அதற்காகப் போராடுவதுமே தனது பாதை என
முடிவுசெய்தார். கணிதப் பேராசிரியர் பணியுடன் ஆந்திராவின் மனித உரிமை மீறல்களுக்கு
எதிராகப் போராடி வந்த ஆந்திரப்பிரதேச சிவில் உரிமைக் கழகத்தில் (கிஜீநீறீநீ)
இணைந்து செயல்படத் தொடங்கினார். இப்பணி எளிய பணியல்ல. ஆந்திரக் காவல் துறை
ஆந்திரப்பிரதேச சிவில் உரிமைக் கழகத்தை நக்சல்பாரி இயக்கத்தின் மனித உரிமைப் பிரிவு
என்றே கண்டது. நக்சல்பாரிகள் காவல் துறைமீது தாக்குதல் தொடுக்கும்போது அதற்குப்
பழிவாங்க சனநாயகப் பணி புரியும் ஆந்திரப்பிரதேச சிவில் உரிமைக் கழகத்தினர்
கொல்லப்பட்டு வந்தனர். உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் அங்கு நிலவியது. 1983இல்
இவ்வமைப்பின் பொதுச்செயலாளராகக் கே. பால கோபால் தேர்வுசெய்யப்பட்டார்.
போலி மோதல் சாவுகளில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளில்
கலந்துகொள்வதுகூட நக்சல்பாரி ஆதரவு நடவடிக்கை எனக் காவல் துறை மிரட்டியது.
இறந்தவர்களின் உடல்களைக் கூட ரகசியமாக எரிக்கவும் அது முயன்றது. இந்தச் செயல்களைக்
கேள்விக்குள்ளாக்கும் பணியில் முன்னிலையில் நின்றார் கே. பால கோபால். அவருடன்
இணைந்து செயல்பட்ட மூத்த வழக்குரைஞரும் மனித உரிமைப் போராளியுமான கே. ஜி.
கண்ணபிரான் இவ்வமைப்பின் தலைவராக இருந்தார். 1985 செப்டம்பர் 3ஆம் தேதி வாராங்கல்
நகரில் காவல் துறையினர் ஒரு ஊர்வலத்தை நடத்தினர். வழி எங்கும் திறந்திருந்த கடைகள்
அடித்து நொறுக்கப்பட்டன. சிலர் ஒரு மருத்துவமனைக்குள் புகுந்தனர். அங்கே
குழந்தைகள் மருத்துவர் ராமநாதன் குழந்தைகளுக்கு மருத்துவம்
பார்த்துக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த காவல் துறையினரால் அவர்
சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஆந்திரப்பிரதேச சிவில் உரிமைக் கழகத்தின் துணைத்
தலைவர். நக்சல்பாரிகளை எச்சரிக்கவே அந்தக் கொலை. விசாரணையில் காவல் துறையின்
துப்பாக்கிக் குண்டுதான் ராமநாதனைக் கொன்றது என்பது உறுதியானது. இதன்
தொடர்ச்சியாக ஆந்திராவின் பல பகுதியில் ஆந்திரா சிவில் உரிமைக் கழகத்தினர்
கொல்லப்பட்டனர்.
1985இல் என்.டி. ராமாராவ் காவல் துறையினருக்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட
இசைவு தெரிவித்திருந்தார். ராஜீவ் காந்தியால் தடா சட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சனநாயக உரிமை பேசியவர்கள்மீது இது பாய்ந்தது. கே.
பாலகோபால் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் குற்றவாளியாகச்
சேர்க்கப்பட்டுத் தடா பிரிவில் சிறைப்படுத்தப்பட்டார். நாடு முழுவதுமிருந்த மனித
உரிமை ஆர்வலர்கள் அரசின் இச்செயலைக் கண்டித்தனர்.
கே. பாலகோபால் தன் பேராசிரியர் பணியை உதறிவிட்டு முழுநேர மனித உரிமைப்
போராளியானார். அவரது களப்பணி அபரிமிதமானது. தொடர் பயணம், மனித உரிமை மீறலுக்கு
உள்ளாகிப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கப்பெறுவதற்காக உண்மையறியும்
குழுக்கள், நீதி விசாரணைக் குழுக்கள் என்று மனித உரிமைச் செயல்பாடுகளை அவர் தொடர்
இயக்கமாக்கி வந்திருந்தார். தான் எடுத்த எல்லா முயற்சிகளையும் இறுதிவரை கண்காணித்து
முன் நகர்த்தியவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நக்சல்பாரிகள் 1987இல் இரண்டு காவல் துறையினரைக் கடத்திச் சென்றபோது பதிலுக்குக்
கே. பால கோபாலைக் காவல் துறையினர் “பிரஜா பந்து” என்ற அமைப்பின் பெயரில் கடத்திச்
சென்றனர். அவர் உயிருக்குப் பெரும் ஆபத்து காத்திருந்தது. மூன்று நாட்களுக்குப்
பின்பு நக்சல்பாரிகள் தாங்கள் கடத்திய காவல் துறையினரை விடுவித்த பின்
ஹைதராபாத்தின் இந்தியன் எக்ஸ் பிரஸ் அலுவலகம் அருகில் கொண்டு வந்து அவரை விட்டுச்
சென்றது காவல் துறை. இச்செய்தியை நாளேடுகள் கண்டித்து எழுதின. மோதல் சாவுகளில்
கொல்லப்பட்டவரின் மரணத்திற்காக வழக்குப் பதிவுசெய்யும் நடைமுறை அப்போது
இருக்கவில்லை. இறந்து கிடப்பவனின் மீதே காவல் துறையினரைக் கொல்ல முயன்றதாக ஒரு
வழக்குப் பதிவு செய்யப்படும். இறந்து கிடப்பவனைக் கொன்றதற்காகக் காவல் துறைமீது
வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படாது. இந்நடைமுறையைக் கே. பாலகோபால் தேசிய மனித உரிமை
ஆணையத்திற்குக் கொண்டுசென்று கேள்விக்குள்ளாக்கினார். இக்காலகட்டத்தில் பெங்களூர்
சட்டக் கல்லூரியில் சட்டத் தேர்வு எழுதி வழக்குரைஞராகவும் மாறினார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தில் போலி மோதல் சாவுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு
வந்தது. அது ஆந்திராவின் பல பகுதிகளில் அதன் விசாரணையை நடத்தியது. வாராங்கல்லில்
விசாரணை நடைபெற்றபோது கே. பாலகோபால் காவல் துறையால் விசாரணை நடைபெறும் இடம் அருகே
வைத்துத் தாக்கப்பட்டார். ஆனாலும் அதை அவர் பெரிதுபடுத்த முயலவில்லை. தேசிய மனித
உரிமை ஆணையத்தின் முன் ஆந்திரா மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் வாதாடினார்.
இதன் விளைவாகத் தேசிய மனித உரிமை ஆணையம் இறுதியில் மோதல் சாவுகளில் ஈடுபட்ட காவல்
துறையினர்மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென்றும் நியாயமான விசாரணை செய்து
காவல் துறை தவறு செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இல்லையெனில்
காவல் துறையினர் மீது கொலை வழக்குத் தொடர வேண்டும் எனவும் தீர்மானித்து,
பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அனைத்து மாநில முதல்வர்களும் இந்த
நடைமுறையைக் கடைப்பிடிக்கவும் உத்தரவிட்டது. தாழ்த்தப்பட்டவர்களின் மீது
தொடுக்கப்படும் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு
பரிமாணங்களில் மனித உரிமைப் பண்பாட்டை அவர் உயர்த்திப் பிடித்தார்.
மரண தண்டனை என்பது ஒரு தண்டனை வடிவமே அல்ல எனவும் அது ஒழிக்கப்பட வேண்டுமென்பதை
உறுதியாக வலியுறுத்தி வந்தவர் பால கோபால். ராஜ முந்திரி மாவட்ட மத்திய சிறையில்
மரண தண்டனையை எதிர் நோக்கி இரண்டு தலித் இளைஞர்கள் இருந்தனர். அவர்களின் வழக்கை
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. ஜனாதிபதியும் அவர்களின் கருணை மனுவை
நிராகரித்திருந்தார். ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து அவர்களுக்கு
விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகப் போராடி வந்தனர். அந்த இரு இளைஞர்களையும்
தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. அவர்களைத் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் தில்லியில்
ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவிக்கு ஞானபீட விருது
வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. மனித உரிமைக் குழுவினர்
மகாஸ்வேதா தேவியை அணுகினர். தலித் இளைஞர்கள்மீது 23 பயணிகளைப் பேருந்துடன் தீ
வைத்து எரித்துக் கொன்ற குற்றமிருந்தது. பேருந்துப் பயணிகளிடம் கொள்ளையடிக்கவே தீ
வைப்பது போன்று மிரட்டினர், எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து நிகழ்ந்துவிட்டது,
பயணிகளைக் கொலை செய்வது இவ்விரு இளைஞர்களின் நோக்கமல்ல என விளக்கப்பட்டது.
மகாஸ்வேதா தேவி தான் விருது பெறுவதற்கு முன் ஆந்திராவின் ராஜமுந்திரி சிறையில் உள்ள
இளைஞர்களின் கருணை மனுவை ஜனாதிபதி பெற்றுக்கொண்டு பரிசீலிக்க வேண்டுமென்று
வேண்டுகோள் வைத்தார். ஜனாதிபதி அந்த மனுவைப் பெற்றுக்கொண்டதும், அன்று இரவே உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இளைஞர்களுக்கு மரண தண்டனையைக் கருணை மனுவின் மீதான
பரிசீலனை முடியும்வரை நிறுத்தி வைக்கக்கேட்டு அதற்கான உத்தரவுபெற்றனர். அதன் பின்பு
தொடர் இயக்கம் கண்டு இறுதியில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இம்முயற்சியில் ஈடுபட்ட மனித உரிமைக் குழுவில் கே. பாலகோபாலின் பங்கு
முக்கியமானது. பொதுமக்கள் 23 பேரைக் கொன்றவர்களை விடுவித்தவர்கள் என்னும்
விமர்சனம் எழுந்தபோது மரண தண்டனை எவ்வகையில் தவறானது என்பதைத் தன் பதிலாக
முன்வைத்தார் பாலகோபால்.
1995க்குப் பிறகு கே. பாலகோபால் நக்சல்பாரிகள் நிகழ்த்திய பல்வேறு வன்முறைகளை
விமர்சித்தார். மனித உரிமை இயக்கம் என்பது வன்முறை என்பதை எவர் செய்தாலும்
விமர்சிக்க வேண்டுமெனவும் வன்முறையில் நல்ல வன்முறை, கெட்ட வன்முறை என இல்லை எனவும்
வன்முறை கோரமானது எனவும் விமர்சனங்களை முன்வைத்தார். காவல் துறையின் அரச
வன்முறையையும் நக்சல்பாரிகள் நடத்தும் அரசியல் வன்முறைகளையும் ஒரே மாதிரி
பார்க்கும் அவரது கண்ணோட்டம் பெரும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. அவர்
ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகத் திலிருந்து வெளியேறி மனித உரிமை அமைப்பு
ஒன்றைத் தொடங்கிச் செயல்படலானார். வன்முறையை அரசியலாகக் கொண்டு செயல்படுவதை ஏற்க
முடியாது என்ற கருத்தில் அவர் இறுதிவரை உறுதியாகவே நின்றார். அரசியல்ரீதியாக அவர்
கருத்தைக் கடுமையாக விமர்சித்த அனைவரும் அவரது நேர்மையின் மீது மதிப்புக்
கொண்டிருந்தனர்.
மனித உரிமை அமைப்பு என்பது தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதையும் சிறு குழுக்களாகச்
செயல்படுவதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித உரிமைக் கருத்துகளை வெகுசன
மக்களுக்கான இயக்கமாக மாற்றத் தீவிரமாகச் செயல்பட்டார். ஏழைகளின் சுகாதாரம்,
தொழிலாளர்களின் உரிமைகள், பழங்குடி மக்களின் வாழ்வுரிமைகள் எனப் பல்வேறு
விளிம்புநிலை மக்களின் உரிமைகளையும் மனித உரிமையின் ஓர் அங்கமாகவே அவர் கண்டார்.
மார்க்சியத்தின் தத்துவங்களிலும் டி.டி. கோசாம்பியின் எழுத்துகளிலும் அவர் மிகுந்த
ஈடுபாடு கொண்டிருந்தார். கே. பாலகோபால் பங்கெடுத்த உண்மையறியும் குழு அறிக்கைகள்
நிகழ்வுகளைப் பற்றித் தட்டையாகப் பேசாமல் அவற்றின் சமூக, பொருளாதார, அரசியல்
பின்புலங்களை விரிவாக ஆராய்ந்தன. காஷ்மீர் மக்களின் தேசிய உரிமை பற்றிய அவருடைய
இரண்டு உண்மையறியும் குழுக்களின் அறிக்கைகளும் குஜராத் கலவரம் பற்றியும் சத்தீஸ்கர்
அரசு வன்முறை குறித்தும் அவரது உண்மையறியும் குழு அறிக்கைகளும் புதிய கோணங்களில்
பிரச்சினைகளின் மையத்தைப் பார்க்க வைத்தவை. வளர்ச்சி என்னும் பெயரில் பழங்குடி
மக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்திய போஸ்கோ இருப்பு ஆலை
திட்டம், உத்தல் அலுமினிய ஆலை திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் எனப்
பல்வேறு மக்கள் விரோத திட்டங்களையும் எதிர்த்துப் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில்
அவர் போராடினார்.
2008இல் திட்டக் கமிஷன் அமைத்த, ‘தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்
வளர்ச்சித் திட்டம் எதிர்கொள்ளும் சவால்கள்’ சார்பான கமிட்டியில் அவர்
உறுப்பினராகச் செயல்பட்டார். அவரது ஆங்கிலக் கட்டுரைகள் எக்னாமிக்ஸ் அண்ட்
பொலிடிக்கல் வீக்லியில் வந்துள்ளன. தெலுங்கில் செக்கடி சொன்னனு என்னும் ஒரு
கட்டுரை தொகுதி வெளி வந்துள்ளது. தெலுங்கில் அவர் எழுதிய பின் நவீனத்துவக்
கட்டுரைகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளாய் முழு நேர வழக்குரைஞராகத் தன்னை
மாற்றிக்கொண்ட கே. பால கோபால் தன் மனித உரிமைப் பணியின் ஓர் அங்கமாகவே அதைக்
கண்டார். பல வழக்குகளில் சாமானியர்களுக்காக இலவசமாக வாதாடினார். மனித உரிமைப்
போராளிகள் தங்களிடம் நேர்மைப் பண்பை உருவாக்கிக்கொண்டால் அரச வன்முறையை
அச்சமின்றி எதிர்கொள்ளும் உள்ளொளியைப் பெற முடியுமென்பதை நிரூபித்துக் காட்டிய
தீரர் அவர்.
அவர் குடும்பம் மிகச் சிறியது. ஒரே மகன் பிரபதா, மனைவி வசந்தாலட்சுமி. மனைவி
பத்திரிகையாளர். நீதிமன்றப் பணி முடிந்து வீட்டிற்கு வந்தால் மனைவிக்கு முன் சமையல்
பணியைத் தொடங்கிவிடுவார். மகன் கிரிக்கெட்டை நேசிக்கும் இளைஞன். கல்லூரி நாட்களில்
கே. பாலகோபாலனும் தன் கல்லூரி கிரிக்கெட் அணியில் தொடக்க நிலை ஆட்டக்காரர்.
பிரபதாவுக்குக் கற்றலில் குறைபாடு உண்டு. எனவே பாலகோபால் அவருக்குச் சிறப்பு கவனம்
எடுத்துக்கொண்டிருந்தார்.
அவருக்குக் குடல்புண் இருந்து வந்தது. முறையாக உணவு எடுக்காமை, அதிகமான தேநீர்
பழக்கம், ஓய்வற்ற அலைச்சல் ஆகியவை அவரது குடல்புண் நோயை அதிகப்படுத்தியிருந்தன.
வீட்டில் தன் மகனுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தபோதே
திடீரென அவர் ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது அவரது
நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அதன் பின்
வெகு சீக்கிரத்திலேயே அவர் தன் நீண்டகால களப்பணிகளிலிருந்தும் இடையறாத
போராட்டங்களிலிருந்தும் ஓய்வற்ற சிந்தனைகளிலிருந்தும் விடைபெற்றுக்கொண்டார்.
குறிப்பு:
ச. பாலமுருகன், எழுத்தாளர், சோளகர் தொட்டி என்னும் நாவல் மூலம் பரவலான
கவனம்பெற்றவர். மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்ட ச.
பாலமுருகன் ஈரோடு மாவட்டம் பவானியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.
|