Google   www kalachuvadu.com

கடிதங்கள்

புனரமைப்புப் பாதையும் கட்டமைத்து எஞ்சியிருக்கிற ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையிலிருந்து இந்தியா தவறுமேயானால் உலக வரலாறு அதை மன்னிக்காது. உரிமைகள் அபகரிக்கப்பட்ட சூழலில் அவர்களை மேலும் அனாதைகளாக்கிவிடலாமா என வன்னி அகதிகள் முகாம் நிலவரத்தை உதாரணமாக்கியிருந்தது ஒரு உபன்யாசமோ உபதேசமோ அல்ல. விமர்சனம், அலசல், பார்வையென அரசியல்ரீதியாக ஒரு இனத்தை பேரவலங்களில் மூழ்கடித்ததுபோதும். வெள்ளைக் காக்கைகள் பறப்பதாகச் சொன்னால் நம்புகிற ஏமாளிகளா ஈழத் தமிழர்கள். முளைத்த மண்ணிலேயே வாழ்வாதாரங்கள் கேள்விக் குட்படுத்தப்பட்ட எதார்த்தம் பொறுத்துக்கொள்ளக்கூடியதல்ல. இந்திய விடுதலைக்காக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய தமிழ் மண் வீரம் விளையும் பூமி. தன்னை நம்பியிருப்பவர்களைக் கைவிட்டு மனித குலத்துக்கே தலைக்குனிவு ஏற்படுத்த வேண்டாம். சினிமாத்தனம் ஊடுருவி ஒரு மாதிரியான மந்(தை)தத் தன்மை தமிழர் மனோ நிலையில் பரிச்சயமாகிவிட்டதென உன்னைப் போல் ஒருவன் ஒரு அபாயகரமான கலாச்சாரச் செய்தியைச் சொல்வதாக உறுதியாகக் குறிப்பிடுகிறது காலச்சுவடு.

சாமி
திருவண்ணாமலை

“ஆஷ் அடிச்சுவட்டில்!” கட்டுரை ஒரு வரலாற்றுப் புதினம் போலும் விறுவிறுப்பாக இருந்தது. அறிவிக்கப்பட்ட, நடந்த நிகழ்வுகள் பலவும் இதுகாறும் அறியப்படாதவையாகவே இருந்தன என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.

தோற்கடிக்கப்பட்ட மக்களாக - வாழ்வதற்குக் கதியற்றவர்களாக நிலை குலைந்திருக்கும் எம் தொப்புள் கொடி உறவுகள் இரும்புத் திரைக்குள் மறைக்கப்பட்டிருந்தாலும், இந்நிலையின் காரண கர்த்தாவும் கிரியா ஊக்கிகளும் புனித புத்தனாகப் பவனி வந்தாலும், நிச்சயம் காலம் ஒருநாள் மாறும்; கவிதைப் பூங்காவில், “சில ஆலோசனைகள்” பல சிந்தனைகளை உருவாக்கிவிட்டது.

நல்ல எழுத்தாளன், நல்ல வாசகன் உறவு என்றும் கசந்ததில்லை என்ற தீர்க்க தரிசனம் சு.ரா. நினைவுக் கட்டுரை மூலம் கிடைக்கப் பெறுகிறது.

பசுமைக்கு வித்திட்ட ரிச்சார்யாவின் பசுமையான நினைவுகள் வேளாண் துறையின் வளர்ச்சிக்கான வித்து என்பதில் ஐயமில்லை.

கா. இர. குப்புதாசு
செஞ்சி

உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் உலக நாயகனின் குறுகிய பார்வையை உணர்த்துகிறது. ஒரு சமுதாயத்திற்கு எதிராக விஷமக் கருத்துகளை ஊடகங்கள் மூலம் பரப்பிப் பரபரப்பாக்கி, காசு பார்ப்பது பன்றிக் காய்ச்சலைவிட மிக மிக ஆபத்தானது. இதைத்தான் இங்கே மலிவுப் பதிப்பாக ஊடகங்கள் தொடர்ந்து செய்துவருகின்றன. குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் கேக் வாங்கப் போன ஒரு கர்ப்பிணிப் பெண்ணை நிர்வாணப்படுத்தி அவளைக் கருவறுத்துக் கொலை செய்கிறார்கள். (இது தீவிரவாதமில்லையா?) இதனால் ஆத்திரமடைந்தவன் தீவிரவாதியாகிறான். இந்தத் தீவிரவாதியைக் கொலை செய்ய இன்னொரு தீவிரவாதி (கமல்) கிளம்புகிறார்! காரணம் கேட்டால் இவரும் அதே காரணத்தைச் சொல்கிறார். அதாவது தீவிரவாதிகளை அழிக்க வந்த தீவிரவாதி என்கிறார். என்ன லாஜிக் இது? இந்நாட்டில் மசூதிகளை இடித்தல், மதக் கலவரம் ஏற்படுத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்தல், குஜராத்தைப் போன்று நாடு முழுக்க முஸ்லிம்களை அழித்தல் போன்றவை நிகழ்ந்தாலும் எல்லாத் தீவிரவாதத்துக்கும் ஒரே தீர்வு முஸ்லிம் தீவிரவாதிகளை அழிப்பதுதான் என்றாகிவிட்டது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிர்வினை எங்கும் நடக்கவில்லை. கமல் முஸ்லிம் தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளி அதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
கோவை

சுதந்திரம்பெற்ற 62 ஆண்டுகள் கழித்து, சாதிய வன்கொடுமைச் சட்டமென இன்றும் பிரதமர் பேசும் அவல நிலை நாட்டில் சாதியை வளர்த்துவிட்டு அதில் அரசியல் குளிர் காயும் நிலையில் கண் துடைப்பு வேலை நடந்துகொண்டுதானிருக்கும். அடிப்படைச் சாதியைத் தகர்த்தால் ஒழிய எந்தச் சட்டமும் திருத்திவிடாது. ஆஷ் துரையின் வரலாற்றையும் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் கட்டுரையாளர் எழுதியுள்ள விதம் சிறப்பு. “வன்னி அகதிக்கு என்ன இருக்கிறது” கட்டுரை படிக்கையில் நமக்கு வேதனை வருகிறது. ஈழத் தமிழர்கள் அனுபவிக்கிற வேதனையை நினைத்துப் பார்த்தால் தமிழர்கள் தூங்க முடியாது. ஆனால் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் நாடகம் ஆடியே தமிழர்களைக் கொன்று விட்டார்கள். தமிழக எழுத்தாளர்கள் பல வரலாறுகளை எழுதி முடித்திருக்கிறார்கள். தமிழர்கள் விருந் தோம்பலில் சிறந்தவர் என்பதெல்லாம் ஒரு காலம். ஆனால் இந்தப் பண்பாடு மறைந்து அண்ணன், தம்பி உறவு இல்லை அப்பா அம்மா உறவில்லை. பக்கத்துவீட்டு உறவில்லை. எப்படி இலங்கைத் தமிழர்களை நேசிப்பார்கள்?

இரா. சண்முகவேல்
கீழக்கலங்கல்

சு.ரா. குறித்தான இமையத்தின் அனுபவங்கள் ஆழமான மனப் பதிவுகள். “எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்” என்ற சு.ரா.வின் வாசகத்தை அவர் தனது ஒவ்வொரு எழுத்திலும் கடைப்பிடிக்கிறார் என்றே நம்புகிறேன். சு.ரா. என்ற ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறிய எத்தனையோ பயணிகளிலிருந்தும் முற்றாக வேறு அனுபவங்களைப் பெற்றவராகவே இமையத்தின் பதிவுகள் வெளிப்படுகின்றன. சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளனின் நினைவுகளோடு தன்னையும் வெளிப்படுத்திக்கொள்வதாகவே அவரது இந்தப் பதிவுகள் இருக்கின்றன. ‘சு.ரா.வின் மறைவுச் செய்தி கேட்டதும் நிலை குலையாது அமைதியாக அவரது சிறுகதைத் தொகுதியை எடுத்து மீண்டும் மீண்டும் வாசித்தேன்’ என்று அவர் இறுதியில் எழுதுவது மனத்தைக் கலங்கடித்தது.

கலெக்டர் ஆஷ் கொலை பற்றிய வேங்கடாசலபதியின் கட்டுரை நன்று. ‘பயங்கரவாதம்’ என்னும் சொல் அறியப்படாத காலத்தில் நடைபெற்ற அரசியல் கொலையின் முழுப் பரிமாணம் நூறு வருடங்கள் கழிந்த பிறகும் அறியப்படாமல்தான் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் இன்று நாம் எழுதியும் பேசியும் வரும் தேசியத்தின் விரிந்த பார்வை வாஞ்சி நாதன் போன்றவர்களுக்கு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படும்போது ஏதாவது ஒரு வீராவேசமான பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்குள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அதன் விளைவே ஆஷ் கொலை. ‘கலெக்டர் என்னும் சொல்லின் பொருள், ‘வரிவசூலிப்பவர்’ என்பதே. அதுவே பிற்காலத்தில் ஆட்சியர் என்று மாறியிருக்கக்கூடும். எனவே தான் கலெக்டர் என்ற சொல்லின் பொருளை ‘மாவட்ட ஆட்சியர்’ என்று இன்றுள்ள பொருளின் படி ஆஷின் வாரிசுகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நம்புகிறேன். (டிக்கெட் கலெக்டர், பில் கலெக்டர் போன்ற சொற்கள் அவற்றை வசூலிப்பவர் என்னும் பொருளில்தான் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.)

ஈழம் குறித்த இரு பதிவுகளுமே நெஞ்சின் துயரத்தைக் கிளறுபவை. அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு இடர்கள் நீங்கி நல்லதோர் எதிர் காலம் அமையட்டுமென இறைவனிடம் பிரார்த்திப்பது தவிர நம்மால் வேறு என்ன செய்துவிட முடியும்?

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்

“விடைத்தாள் மதிப்பீடும் தொழில் நியதிகளும்” என்னும் தலைப்பில் பெருமாள்முருகன் கூறியுள்ள செய்திகள் ஒரு பேராசிரியரின் நேர்மையான வாக்குமூலமாக அமைந்துள்ளது.

“விடைத்தாள் மதிப்பீடு தனி மதிப்பூதியம் இல்லாத ஆசிரியப் பணியின் ஒரு பகுதியாக மாற வேண்டும், தொலைநிலைக் கல்வி வகுப்பெடுக்கும் வாய்ப்பைத் தகுதியுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு அளிக்கலாம்” என்பவை வரவேற்கத்தக்கவை. இவை சாத்தியமானால் முறையே மாணவர் சமுதாயமும், தகுதி பெற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களும் பயனடைய வழிவகுக்கும். ஆனால் இவற்றிற்குப் பேராசிரியர் சமுதாயம் ஒப்புக்கொள்ளுமா?

தாள் மதிப்பீடு மையத்தில், இறுதி நாளில் விடைத்தாள்களை அனைவருக்கும் சமமாகப் பங்கு பிரிக்க வேண்டும். பிறருக்கு ஒரு நாள்கூட அதிகம் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள் (ஒரு தாளிற்கு மதிப்பூதியம் ஒன்பது ரூபாய்) அதில் ஏதேனும் பிறழ்ச்சி ஏற்படுகையில் பேராசிரியர்கள் மத்தியில் ‘கடும் வாக்குவாதம்’, ‘கலகம்’ ஏற்படுவதுமுண்டு.

இன்று புதிய ஊதிய விகிதத்தில் அறுபது ஆயிரம்வரை மாத ஊதியமாகப் பெறும் பேராசிரியப் பெருமக்கள், பெருமாள்முருகனின் கட்டுரையைப் படித்தால் அவர் ‘கோடரிக் காம்பு’ என்னும் வசைக்கு ஆளாக நேரிடும்.

மு. இளங்கோ
கருப்பூர்

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து 62 வருடங்களுக்குப் பிறகும் ‘தலித்’ மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் சொல்லிக்கொள்ளும்படியாகக் குறையவில்லையென்றாலும், அவர்களுக்கெதிராகக் குற்றம் புரிந்தவர்கள் உரிய தண்டனை பெறுவது என்பது குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் குறைவாகயிருப்பது எதனால்! தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன் கொடுமைச் சட்டம் (22 வகை வன்கொடுமைகளை இச்சட்டம் பட்டியலிட்டிருந்தாலும்) அமலாக்கப்பட வேண்டியவர்களால் சரியாக அமலாக்கப்படவில்லை என்பதாகத்தானேயிருக்க வேண்டும். ஒரு சட்டம் இயற்றுவதுடன், அதை நூறு சதவீதம் அமலாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை தானே? வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியான முறையில் அமலாக்கப்பட வேண்டுமென்பதில் பிரதமர் அக்கறை காட்ட வேண்டும்.

கே. எஸ். கீழாம்பூர் ராமையா
மதுரை

உள்ளடக்கம்