|
படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டதும் தாத்தா
எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். ‘புழுத்துப்போன முதலாளித்துவப்
பன்றியே’ எனத் தொடங்கியிருந்தது அது. ‘விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும்.
அன்புடன், தாத்தா’. 1991ஆம் வருடத் தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறக் கசங்கிய
தேர்தல் அறிக்கையில் அது எழுதப்பட்டிருந்தது. அது தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல்
சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த
எல்லாருடைய கையெழுத்துகளும் அதில் இருந்தன.
அது போன்ற கௌரவம் கிடைத்ததில் நான் நெகிழ்ந்துபோனேன். அப்படியே உட்கார்ந்து ஒரு
டாலர் நோட்டை எடுத்துத் தாத்தாவுக்குப் பின்வரும் பதிலை எழுதினேன்: ‘கம்யூனிஸ்ட்
போலியே, கடிதத்துக்கு நன்றி. நாளைக்குப் புறப்படுகிறேன். அங்கே போனதும் எவ்வளவு
சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு அமெரிக்கப் பெண்ணை மணந்துகொள்ள
முயல்வேன். அமெரிக்கப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் முயல்வேன். அன்புடன், உங்கள்
பேரன்’ கல்லூரியில் என்னுடைய முதல் வருடம். என்னுடைய முன்னோடிகள் குடிப்பதிலும்
புகைப்பதிலும் கலவியிலும் சூதாட்டத்திலும் பெற்றோரிடம் புளுகுவதிலும் மோட்டார்
சைக்கிள்களில் இலவசப் பயணம் செய்வதிலும் கள்ள நோட்டு அடிப்பதிலும் அல்லது கால்
பந்தாட்டப் பந்தயங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதிலும் மும்முரமாக இருந்தபோது நான்
படித்தேன். ஆங்கிலம். சொற்களையும் இலக்கண விதிகளையும் நெட்டுருச் செய்தேன். கிழக்கு
ஐரோப்பியர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பேச்சு வழக்குகளைப் பயிற்சி
செய்தேன். ‘காசேதான் கடவுளடா’ என்ற பேச்சு வழக்கைத் திரும்பத் திரும்பச் சொல்லிப்
பார்த்தேன். தெருவிலும் மழையிலும் தூக்கத்திலும்கூடச் சொல்லிக்கொண்டிருந்தேன். இது
போன்ற பிரயோகங்கள் உங்கள் நாக்கை வளைக்க உதவுகின்றன. செவிப்புலனை வளர்க்கின்றன.
அப்பார்ட்மெண்டில் நான் தனியாகத்தான் வசித்தேன். ஏனென்றால் நான் நேசித்த எல்லாரும்
அதற்குள்ளாக இறந்துபோயிருந்தார்கள். முதலில் பாட்டி. பிறகு அம்மாவும் அப்பாவும்.
தாத்தா லெனின்கிராடு என்று பெயர் மாற்றப்பட்ட கிரா மத்துக்குப் போனார். திரும்ப
நகரத்தில் குடியேறவோ வந்துபோகவோ மூர்க்கமாக மறுத்துவிட்டார். அபூர்வமான
சந்தர்ப்பங்களில், குறிப்பாக நாங்கள் பெரிதாகச் சண்டை போட்டபோதோ அதில் மனம்
வருந்தியதாக அவர் நடித்தபோதோ, மிக மோசமாக எதையாவது நான் சொல்லியிருக்க வேண்டும்.
எனவே என்னுடைய அதிருஷ்டத்தை வேறு எங்காவது தேட முடிவுசெய்தேன். 1999 வசந்த காலத்
தொடக்கத்தில் அர்கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் எனக்குச் சேர்க்கை கிடைத்தது. இலவசச்
சலுகைகளும் கிடைத்தன. முழுக்கல்விக் கட்டணம், அறை, உணவு, விமான டிக்கெட்டு எல்லாம்.
நான் தாத்தாவை அழைத்தேன்.
‘என் பேரனே, முதலாளியே’ எனத் தொடங்கினார். ‘நீ என்னிடம் இப்படி நடந்துகொள்வாய்
என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் எதையெதையெல்லாம் கடந்துவந்தேன் என்று உனக்குத்
தெரியாதா?’
o
தாத்தா கடந்து வந்தவை அடிப்படையில் இவைதாம். அது 1944ஆம் வருடம். தாத்தா அவருடைய
இருபதுகளின் நடுவில் இருந்தார். அவர் முகம் இறுக்கமானதாக ஆனால் அழகானதாக இருந்தது.
அவருடைய மூக்கு கூர்மையானதாக இருந்தது. புதியதும் மகத்தானதும் உலகத்தையே மாற்றிவிடக்
கூடியதுமான ஏதோ ஒன்றால் அவருடைய ஆழமான விழிகள் ஒளிர்ந்தன. அவர் ஏழையாக இருந்தார்.
என்னிடம் அடிக்கடி சொல்வார்: ‘காலைச் சிற்றுண்டிக்கு ரொட்டியையும் கிராப்
ஆப்பிளையும் சாப்பிடுவேன். பகலுணவுக்கு ரொட்டியும் கிராப் ஆப்பிளும். இரவு
உணவுக்கும் கிராப் ஆப்பிள். ஏனென்றால் பகலுணவு சமயத்திலேயே ரொட்டி
தீர்ந்துபோயிருக்கும்.’
அதனால்தான் கம்யூனிஸ்டுகள் உணவுப் பொருட்களைத் திருடுவதற்காகப் பல்கேரியாவிலுள்ள
கிராமத்துக்கு வந்தபோது தாத்தா அவர்களுடன் சேர்ந்துகொண்டார். அவர்கள்
காடுகளுக்குள் ஓடினார்கள்; பதுங்கு குழிகளை வெட்டினார்கள்; வாரக்கணக்காக இரவும்
பகலும் அதிலேயே வசித்தார்கள். வெளியே பாசிஸ்டுகள் அவர்களை மோப்பம் பிடிக்க
அலைந்தார்கள். வேட்டை நாய்களுடன் அவர்களைத் துரத்த முயன்றார்கள்;
துப்பாக்கிகளுடனும் வெடிகுண்டுகளுடனும் ஏவுகணைகளுடனும் வேசி மகன்களான ஜார்
சந்ததியினர் விரட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் தாத்தா என்னிடம்
சொன்னார்: ‘ஒரு பதுங்கு குழி குறுகலானது என்று நீ நினைத்தால் நீயாகவே ஒன்றைத்
தோண்டு. இல்லை இல்லை, நீயாகவே தோண்டி ஒரு வாரம் கூடவே தங்குவதற்காகப் பதினைந்து
பேரைச் சேர்த்துக்கொள். ஒன்றிரண்டு கர்ப்பிணிகளும் இருக்க வேண்டும். ஒரு பசித்த
வெள்ளாடும். அதற்கப்புறம் உலகத்திலேயே மிகக் குறுகலானது கல்லறைதான் என்று
எல்லாரிடமும் சொல்லித் திரியலாம்.’
‘கல்லறைதான் இடுங்கியது என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையே, தாத்தா’
‘ஆனால் நீ அப்படி யோசித்துக் கொண்டிருந்தாய்.’
ஆகக் கடைசியில் அந்தப் பதுங்கு குழிக்குள் இருக்க முடியாதபடி தாத்தாவுக்குப் பசி
முற்றியது. துப்பாக்கியை எடுத்துச் சொருகிக்கொண்டு உணவுக்காகக் கிராமத்துக்குள்
போகத் தீர்மானித்தார். கிராமத்தை அடைந்தபோது எல்லாமே மாறியிருப்பதைப் பார்த்தார்.
தேவாலயக் கோபுரத்தின் உச்சியில் செங்கொடி படபடத்துக்கொண்டிருந்தது. தேவாலயம்
மூடப்பட்டு சமூகக்கூடமாக மாற்றப்பட்டிருந்தது. மக்கள் எல்லாரும் சுதந்திரமாக
நடமாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆழமான விழிகள் புதியதும் மகத்தானதும்
உலகத்தையே மாற்றிவிடக்கூடியதுமான ஏதோ ஒன்றால் ஒளிர்ந்தன. தாத்தா முழந்தாளிட்டுச்
சரிந்து அழுதார். தாயகத்தின் மண்ணை முத்தமிட்டார். உடனடியாகக் கட்சியிலிருந்து
அவருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக உள்ளூர் நிர்வாகத்தில் அவருக்கு உயர்ந்த
பதவியளிக்கப்பட்டது. உடனடியாக அவர் பதவி ஏணிமேல் ஏறி இத்தியாதி இத்தியாதி துறையின்
இத்தியாதி இத்தியாதியாக ஆனார். அவருக்கு ஒரு வீடு கிடைத்தது. பாட்டியைத் திருமணம்
செய்தார். ஒரு வருடத்துக்குப் பிறகு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
o
அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு நாள் தொலைபேசியில் அவரிடம் கேட்டேன்.
‘அப்படி மோசமான எதையெல்லாம் கடந்துவந்தீர்கள்? உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதானே
அமைந்திருந்திருக்கிறது?’
‘முதலாளித்துவவாதிகளை நான் வெறுக்கிறேன். லெனினை நேசிக்கிறேன்’ என்றார்.
‘என்னை நேசிக்கிறீர்களா?’
‘நீ என் பேரனல்லவா?’
‘அப்படியானால் நகரத்துக்கு வாருங்கள். என்னுடன் இந்த வீட்டிலிருங்கள்.’
‘நான் இங்கே செய்துமுடிக்க வேண்டியவை ஏராளம். எனக்குப் பொறுப்புகள் இருக்கின்றன’
என்றார்.
‘சுத்தப்படுத்தக் கல்லறைகள்தான் உங்களுக்கு இருக்கின்றன.’
‘என்னால் வர முடியாது. என்னால் முடியாதென்று உனக்கும் தெரியும்’ என்றார்.
‘தெரியும். அதனால்தான் நான் போகிறேன்.’
o
1999 ஆம் வருடம் ஆகஸ்டு 11 தேதி நான் அர்கான்சாஸுக்கு வந்து சேர்ந்தேன். சூட்
அணிந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் என்னை அழைத்துச் செல்வதற்காக விமான
நிலையத்துக்கு வந்திருந்தார்கள். சர்வதேச மாணவர் நலனில் அக்கறைகொண்ட ஏதோ
அமைப்பிலிருந்து வந்திருந்தார்கள். என்னை அழைத்துச் செல்வதைப் பற்றி முன் கூட்டியே
மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.
‘அமெரிக்காவுக்கு நல்வரவு’ என்று இதமானதும் நட்பு நிரம்பியதுமான ஒரே குரலில்
சொன்னார்கள். அவர்களுடைய முகங்கள் அழகானவை. உண்மையானவை. நாங்கள்
கைகுலுக்கிக்கொண்டோம். பிறகு காரில் போகும்போது ஒரு பைபிளை என்னிடம்
தந்தார்கள்.
‘இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ நிதானமாகவும் அழுத்தமாகவும் அந்தப் பெண்
கேட்டாள்.
‘தெரியாது’ என்றேன். நியாயமாகவே அவள் மகிழ்ச்சியடைந்தது போலத் தோன்றியது.
‘நமது மீட்பரின் நற்செயல்கள். நமது தேவனின் வார்த்தைகள்’
‘லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள்தானே? இது எந்தத் தொகுதி?’ என்றேன்.
o
சிறுவனாக இருந்தபோது என்னுடைய கோடைக்கால நாட்களை கிராமத்தில் தாத்தா பாட்டியுடன்
கழிப்பதுதான் வழக்கம். குளிர்காலத்தில் அவர்கள் நகரத்தில் எங்கள் வீட்டிலிருந்து
இரண்டு பிளாக்குகள் தள்ளி வசித்தார்கள். பருவநிலையில் வெப்பமேறத் தொடங்கியதும்
மூட்டைகட்டிக்கொண்டு கிராமத்துக்குப் போவார்கள்.
சில சமயங்களில் முழு நிலாப் பொழுதுகளில் தாத்தா என்னைச் சிங்கிறால் வேட்டைக்குக்
கூட்டிக்கொண்டு போவார். கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து பெரிய பைகளைத்
தயாரிப்பதிலும் அவற்றின் அடிப்பாகத்தை டேப் ஒட்டிச் செப்பனிடுவதிலும் கடந்த
வேட்டைகளின்போது அவற்றில் விழுந்த ஓட்டைகளைச் சரிசெய்வதிலும் நாள் முழுவதையும்
கழித்தோம். கடைசியாக எல்லாவற்றையும் முடித்து விட்டு முற்றத்தில் வந்து
உட்கார்ந்து பால்கன் மலைத்தொடரின் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் விழுவதைக்
கவனித்தோம். தாத்தா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார். சின்னக் கத்தியை எடுத்தார் மீன்
பிடிப்புக்காக வைத்திருந்த வாதுமைப் பட்டைகளில் உருவங்களைச் செதுக்கிக் காட்டினார்.
நிலா உதிப்பதற்காகக் காத்திருந்தோம். சில சமயங்களில் பாட்டி எங்களுடன் உட்கார்ந்து
பாடினாள். அல்லது தாத்தா அவருடைய கம்யூனிஸ்ட் தோழர்களுடன் காட்டில் பதுங்கு
குழிக்குள் ஒளிந்திருந்த நாட்களின் கதைகளைச் சொன்னார்.
கடைசியாக நிலா எழுந்து வெளிச்சத்துடன் ஒளிரத் தொடங்கியதும் தாத்தாவின் கால்கள்
அரிக்கும். ‘அவையெல்லாம் மேய்ச்சலுக்கு வந்திருக்கும். நாம் போகலாம்’ என்பார்.
வழியில் சாப்பிடுவதற்காகப் பாட்டி சாண்ட்விச்சுகளைக் காகித நாப்கின்களில் பொதிந்து
கொடுத்தாள். அதைப் பிரித்து எடுப்பது எப்போதுமே சிரமமாக இருந்தது. பாட்டி எங்களை
வாழ்த்தியனுப்பினாள். வீட்டை விட்டிறங்கிக் காடுகளுக்கு இடையே மண்பாதையில் நடந்து
கிராமத்தைவிட்டு வெளியேறினோம். பைகளையும் தூண்டில் கழிகளையும் தாத்தா
எடுத்திருந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன். நிலா எங்கள் வழியைப்
பிரகாசமாக்கியது. குளிர்ந்த காற்று எங்கள் முகத்தில் இதமாகப் படர்ந்தது. பக்கத்தில்
எங்கோ ஆறு கலகலத்துக் கொண்டிருந்தது.
நாங்கள் காட்டைத்தாண்டி வெளியே சமவெளிக்கு வர வேண்டும்; அப்போது எங்களுக்கு மேலே
கட்டவிழ்ந்து இரவு நேர வானம் விரிவதைப் பார்க்க முடியும். ஆறும் சிங்கிறால்களும்.
ஆறு எப்போதும் இருண்டிருக்கும். குமுறிக்கொண்டிருக்கும். மீன்கள் எப்போதும்
கரையோரப் புல் வெளிகளில் மேய்ந்துகொண்டிருக்கும்.
நாங்கள் புல்மீது உட்கார்ந்து சாண்ட்விச்சுகளை எடுத்துத்தின்போம். உச்சமான நிலா
வெளிச்சத்தில் சிங்கிறால்களின் ஈர உடல்கள் கனன்றெரியும் நிலக்கரி போல
மின்னிக்கொண்டிருக்கும். இரு கரைகளும் எரியும் அனல் துண்டுகளால் போர்த்தப்பட்டது
போலத் தெரியும். அவற்றின் சின்னக் கண்கள் இருட்டில் எங்களைக்
கவனித்துக்கொண்டிருக்கும். சாப் பிட்டு முடிந்ததும் வேட்டையைத் தொடங்குவோம்.
தாத்தா தூண்டில் கழியையும் பையையும் என்னிடம் தருவார். நூற்றுக்கணக்கான
சிங்கிறால்கள் எங்கள் உள்ளங்கால்களைச் சுரண்டிக்கொண்டிருக்கும். அவற்றின்
கொடுக்குகளைக் கழியால் தொடுவோம். சீண்டுவோம். அவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு
பலமாகக் கழியைக் கவ்விக்கொள்ளும். அவற்றை அப்படியே தண்ணீரிலிருந்து எடுத்துப்
பைக்குள் உதறக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொன்றாகச் சேகரித்தால் போதுமென்று தாத்தா
அடிக்கடி சொல்வார் .
“அவையெல்லாம் எளிதில் மாட்டிக்கொள்ளக்கூடிய இரைகள். நீ ஒன்றைப் பிடித்தால்கூட
மற்றவை ஓடிப் போகாது. நீ கழியைத் தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே
இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாது. அப்புறமும் கூடத் தெரியாது. மனித
சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன, இல்லையா?” அது என்ன
பாடமென்று புரிந்துகொள்ளக்கூடிய வயதல்ல எனக்கு. எனவே அதைக் கேட்டுக்கொள்வேன்.
வேட்டையாடுவேன்.
ஒன்று. இரண்டு. மூன்று மணி நேரங்கள். நிலா களைத்துப்போய்த் தொடுவானத்தை நோக்கி
நீந்துகிறது. கிழக்குத்திசை அனல் சிவப்பாக ஒளிர்கிறது. சிங்கிறால்கள் முழு
ஒத்திசைவுடன் திரும்பி மெதுவாகவும் அமைதியாகவும் நதியை நோக்கி நகர்கின்றன. நதி
அவற்றின் குளிர்ந்த முரட்டு உடல்களைத் திரும்ப எடுத்துக்கொண்டு ஒரு புதிய நாளின்
தாலாட்டுக்குள் உறங்கச் செய்தது. நாங்கள் புல்தரையில் உட்கார்ந்திருந்தோம். எங்கள்
பை இரைகளால் நிரம்பியிருந்தது. நான் தாத்தாவின் தோளில் சாய்ந்து தூங்கிப்போனேன்.
அவர் என்னைத் தூக்கிக்கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தார். சிங்கிறால்கள்
எல்லாவற்றையும் ஆற்றோடு போகவிட்டார்.
o
என்னுடைய இருப்பிடத்திலிருந்து தாத்தாவை அழைத்தேன். நீண்ட நேரம் தொலைபேசித்
தொடர்பே கிடைக்கவில்லை. ஆனால் இணைப்பு இடையே முறிந்தபோது மறுமுனையில் தாத்தாவின்
குரல் கேட்டது.
“பேரனே?”
“நான் இங்கே தான் இருக்கிறேன்.”
“நீ அங்கேதான் இருக்கிறாய்” அவருடைய குரல் அடங்கியதாகவும் தணிவானதாகவும் இருந்தது.
அதன் எதிரொலி நாங்கள் ஏதோ சுரங்கத்தின் இரு முனைகளில் நின்றிருப்பதுபோலக்
கேட்டது.
“எப்படி இருக்கிறாய்?” என்றார் அவர்.
“தூங்கப் போகிறேன். சரி, என்னுடைய விடை பெறல் கார்டு கிடைத்ததா?”
“அதைப் பன்றிகளுக்குத் தீனியாகப் போட்டுவிட்டேன். அமெரிக்கப் பணத்தைப் போன்ற
பன்றிகளுக்கு.”
எங்களுக்கிடையில் தொடர்பு அறுபட்டுக் காற்று அலைமோதியது.
“தாத்தா, நமக்கு நடுவில் ஏராளமான வெள்ளம் இருக்கிறது. நாம் அவ்வளவு
விலகியிருக்கிறோம்”
“ஆமாம். விலகித்தான் இருக்கிறோம். ஆனால் சமுத்திரத்தைவிட ரத்தம் அடர்த்தியானது
என்று நான் நம்புகிறேன்” என்றார்.
o
அவருக்கு முப்பது வயதாகி இத்தியாதி இத்தியாதிப் பதவியும் கிடைத்தபோதுதான் தாத்தா
தன்னுடைய மனங்கவர்ந்தவளைச் சந்தித்தார். அது ஒரு செவ்வியல் கம்யூனிஸ்ட் காதல்
கதையாக இருந்தது. கட்சியின் மாலை நேரக் கூட்டமொன்றில் அவர்கள் முதன் முதலாகச்
சந்தித்தார்கள். பாட்டி தாமதமாக வந்திருந்தாள். மழையில் நனைந்திருந்தாள்.
தாத்தாவுக்குப் பக்கத்தில் காலியாகக் கிடந்த இருக்கையில் உட்கார்ந்து அவருடைய
தோளில் சாய்ந்து தூங்கிப்போனாள். அந்த நொடியில் கட்சி நடவடிக்கைகளில் அவள்
காட்டுகிற அரைகுறை ஆர்வத்தை வெறுத்தார். அந்த நொடியில் அவளுடைய வாசனையையும்
அவளுடைய முகத்தையும் தன்னுடைய கழுத்தில் படர்ந்த அவளுடைய சுவாசத்தையும் அவர்
காதலித்தார். அதன் பிறகு அவர்கள் இலட்சியங்கள் பற்றியும் ஒளிமயமான எதிர்காலம்
பற்றியும் பேசினார்கள்.
மேற்கத்திய முதலாளியத்தின் தீமை பற்றியும் சோவியத் யூனியனை ஆதரிப்பது பற்றியும்
மிக முக்கியமாக லெனினைப் பற்றியும் பேசினார்கள். இருவரும் ஒரே ஆசையைப்
பங்கிட்டுக்கொள்வதையும் விஷயங்களை ஒரே கண்ணோட்டத்தில் நன்றியுணர்வுடனும்
போற்றுதலுடனும் அணுகுவதையும் தாத்தா கண்டுபிடித்தார். எனவே அடுத்த நாள் காலை
பாட்டியை சிவில் அலு வலகத்துக்கு அழைத்துப் போய்த் திருமணம் செய்துகொண்டார்.
பல்கேரியாவில் கம்யூனிசம் அகற்றப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு 1989இல் பாட்டி
மார்பகப் புற்றுநோயால் இறந்துபோனாள். அப்போது எனக்கு எட்டு வயது. ஆனாலும்
எல்லாவற்றையும் தெளிவாக நினைவுகூர முடிகிறது. பாட்டியை அவளுடைய சொந்தக்
கிராமத்தில் அடக்கம் செய்தோம். அவளுடைய சவப்பெட்டியை ஒரு வண்டியில் வைத்தோம். அதை
ஒரு டிராக்டருடன் சேர்த்துக் கட்டினோம். வண்டியையும் சவப்பெட்டியையும் டிராக்டர்
இழுத்துப் போக நாங்கள் எல்லாரும் அதன் பின்னால் போனோம். தாத்தா வண்டிக்குள்ளே
சவப்பெட்டிக்குப் பக்கத்தில் பாட்டியின் கையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்.
அன்றைக்கு மழை பெய்ததாகத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய நினைவுகளில் மழையையும்
மேகங்களையும் காற்றையும் உணர்கிறேன். எனக்குள்ளே மழை பெய்திருக்க வேண்டும்.
உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களை இழந்துவிடும்போது பெய்யும் அதே நிதானமான குளிர்
மழை. தாத்தாவுக்குள்ளும் அந்த மழை பெய்திருக்க வேண்டும். இருந்தும் அவர் கண்ணீர்
சிந்தவில்லை. அவர் வண்டிக்குள்ளே உட்கார்ந்திருந்தார். எனது நினைவுகளின் மழை அவர்
மேல் பொழிந்துகொண்டிருந்தது. அவருடைய வழுக்கைத் தலை மீதும் திறந்த
சவப்பெட்டிமீதும் பாட்டியின் மூடிய கண்கள்மீதும் பொழிந்துகொண்டிருந்தது.
அவர்களைச் சுற்றி ஒபெயேவும் டிரம்பெட்டும் ஈம முரசும் இழைந்த ஆழ்ந்த துக்ககரமான இசை
பெருகிக்கொண்டிருந்தது. கம்யூனிஸ்டின் இறுதிச் சடங்குக்கு புரோகிதர் தேவையில்லை.
எனவே பாட்டியைக் கல்லறையில் அடக்கியபோது புரோகிதர் யாரும் இல்லை. லெனினின்
தேர்ந்தெடுத்த நூல்களின் பன்னிரண்டாம் தொகுதியிலிருந்து சில பகுதிகளைத் தாத்தா
வாசித்தார். அவருடைய சொற்கள் ஆகாயம் வரை உயர்ந்தன. மழை அந்தச் சொற்களை மோதி ஈரச்
சிறகுகளைப் போலத் தரையை நோக்கித் தள்ளியது. அவை உறுமும் அருவிபோலக் கல்லறைக்
குழியின் விளிம்புகளிலிருந்து ஓடிச் சேற்றுக் கலங்கலான நதிகளாகப் பெருக்கெடுத்தன.
எல்லாம் முடிந்ததும் தாத்தா சொன்னார்: “நல்ல இடுகுழி. பதுங்கு குழியைப் போல
அவ்வளவு இடுங்கியதல்ல. இல்லையா? ரொம்ப இடுங்கியதல்ல, இல்லையா? அதற்குள்ளே அவள்
வசதியாக இருக்கலாம். இல்லையா? வசதியாக இருப்பாள். நிச்சயம் வசதியாக இருப்பாள்.”
பாட்டியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு தாத்தா கிராமத்தை விட்டு நகர
மறுத்துவிட்டார். ஒரே வருடத்துக்குள் ஒரு மனிதன் இழக்கக்கூடிய எல்லாவற்றையும் அவர்
இழந்தார். தன் மனதுக்கினியவளை இழந்தார். தன்னுடைய வாழ்வின் காதலான கம்யூனிஸ்ட்
கட்சியை இழந்தார்.
“நகரத்தில் எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது?” என்று அப்பாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. “இந்தத் துரோகிகளுக்குச் சேவை
செய்ய எனக்கு விருப்பமில்லை. இந்த வேசி மகன்களை, அப்பாவிப் பெண்களைக் கொன்றவர்களை
முதலாளித்துவம் நாசமாக்கட்டும்.”
கம்யூனிசத்தின் வீழ்ச்சிதான் பாட்டியைக் கொன்றது என்பதில் தாத்தா உள்ளுக்குள்ளே
உறுதியாக இருந்தார். “அவளுடைய சுத்தமான இலட்சிய வேட்கையுள்ள இதயத்தில் ஏற்பட்ட
அதிருப்தியின் விளைவு தான் அவளுடைய புற்றுநோய்” என்று விளக்கம் சொல்லுவார்.
“அவளுடைய இலட்சியங்கள் கவிழ்க்கப்படுவதை அவளால் பார்த்துக்கொண்டிருக்க
முடியவில்லை. அவளைப் போன்ற நேர்மையான ஒரு பெண்மணி செய்யச் சாத்தியமானதை அவள்
செய்தாள். இறந்துபோனாள்.”
பாட்டியின் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதற்காகவே தாத்தா கிராமத்தில் ஒரு வீட்டை
வாங்கினார். நாள்தோறும் பிற்பகல் மூன்று மணிக்கு பாட்டியின் கல்லறைக்குப் போனார்.
அதன் அருகில் உட்கார்ந்தார். லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள் - பன்னிரண்டாம்
தொகுதியை-திறந்து உரக்க வாசித்தார். கோடைக்காலமோ குளிர்காலமோ அவர் அங்கே
உட்கார்ந்து வாசித்தார். ஒரு நாளைக்கூடத் தவறவிட்டதில்லை. அங்கேதான், பாட்டியின்
கல்லறை அருகேதான் அவருக்கு அந்த யோசனை தோன்றியது.
ஒரு சனிக்கிழமை அவரைப் பார்க்க வந்திருந்தபோது என்னிடமும் என் பெற்றோரிடமும்
சொன்னார் “எதையும் இழந்துவிடவில்லை. இந்த நாடுகளில் கம்யூனிசம்
செத்துப்போயிருக்கலாம். ஆனால் அதன் இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை. நான்
அதையெல்லாம் இங்கே இந்தக் கிராமத்துக்குக் கொண்டுவரப்போகிறேன். எல்லாவற்றையும்
முதலிலிருந்து கட்டியெழுப்பப்போகிறேன். அதன் மூலம் உன் பாட்டியின் கனவு
நிறைவேறும். உன் பாட்டி என்னைப் பற்றிப் பெருமைப்படுவாள்.”
1993 பத்தாம் மாதம் இருபத்தி நான்காம் தேதி மகத்தான அக்டோபர் கிராமப் புரட்சி
நடந்தது. அமைதியாகவும் தலைமறைவாகவும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமலும் நடந்தது. அந்தச்
சமயத்தில் அறுபது வயதானவர்களும் அல்லது அதைவிடக் குறைந்த வயதானவர்களும் ஏற்கனவே
கிராமத்தைவிட்டு வாழ்வதற்காக நகரத்துக்குப் போய்விட்டிருந்தார்கள். ஆக
அப்பாவிகளும் மன உறுதியுள்ளவர்களும் அங்கே மிஞ்சியிருந்தார்கள். அவர்களிடையே அந்த
இலட்சியம் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தது. மகத்தானதும் உலகத்தையே
மாற்றிவிடக்கூடியதுமான ஏதோ ஒன்று அவர்களுடைய ஆழ்ந்த விழிகளில் ஒளிர்ந்தன. கிராமம்
அதிகாரபூர்வமாக இன்னும் பல்கேரியாவின் ஒரு பகுதியாகத் தான் இருந்தது. தேசிய
அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட மேயரும் இருந்தார். அரசாங்கம்தான் கிராமத்தை
நிர்வாகம் செய்தது. ஆனால் ரகசியமாகவும் தலைமறைவாகவும் புதிய கம்யூனிஸ்ட் கட்சிதான்
கிராமத்தின் விதியைத் தீர்மானித்தது. கிராமத்தின் பெயர் லெனின்கிராடு என
மாற்றப்பட்டது. தாத்தா ஏகமனதாக அதன் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒவ்வொரு மாலையும் கிராமத்தின் பழைய கூடத்தில் கட்சிக் கூட்டம் நடக்கும்.
தாத்தாவுக்குப் பக்கத்து இருக்கை எப்போதும் காலியாகவே விடப்படும். வெளியே மழை
பெய்வதுபோன்ற பிரமையை உருவாக்குவதற்காகக் குழாய் மூலம் ஜன்னல் கண்ணாடிமேல் தண்ணீர்
ஊற்றப்படும்.
ஜன்னல் மேல் தண்ணீர் விடும் முடிவைப் பற்றி கட்சி உறுப்பினர்கள்
கேள்வியெழுப்பியபோது “ஈரப் பதத்தில் கம்யூனிசம் நன்றாகத் தழைக்கும்” என்று
விளக்கம் சொன்னார் தாத்தா. உண்மையில் அவர் பாட்டியைக் குறித்தும் அவர்களுடைய முதல்
சந்திப்பின்போது பெய்த மழையையும் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால்
லெனின்கிராடில் கம்யூனிசம் நிச்சயமாகவே தழைத்தது.
தாத்தாவும் கிராமவாசிகளும் பல்கேரியாவில் மிஞ்சி யிருந்த எல்லாக் கம்யூனிஸ்ட் கலைப்
பொருட்களையும் மீட்டு லெனின்கிராடுக்கு - கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாழும்
அருங்காட்சியகத்துக்குக் - கொண்டுவந்துவிடத் தீர்மானித்தார்கள். சிவப்பு
இலட்சியத்தில் ஊன்றியிருந்த எல்லா நினைவுச் சின்னங்களும் நாடு முழுவதும்
தகர்க்கப்பட்டிருந்தன.
பதிற்றாண்டுகளுக்கு முன்பு திட்பமானவையாகவும் மகோன்னதப்படுத்துபவையாகவும்
நம்பிக்கையூட்டக்கூடியவையாகவும் நிறுவப்பட்டிருந்த சிலைகளெல்லாம் இன்று
பெயர்க்கப்பட்டுப் பழைய உலோகமாக உருக்கப்பட்டன. முன்பு கொண்டாடப்பட்ட கவிஞர்கள்
இன்று மறக்கப்பட்டார்கள். அவர்களுடைய காகித உடல்களில் புழுதி படிந்தது. அவர்களுடைய
உதிரமை மழைநீரால் கழுவப்பட்டது. மீட்புப் பணியைச் செய்துதர ஒரு நாடோடிக்
கூட்டத்தைக் கிராமவாசிகள் சம்மதிக்க வைத்திருப்பதாக எனக்கு எழுதிய கடிதத்தில்
தாத்தா தெரிவித்திருந்தார். “தோழர் ஹசன், அவர் மனைவி, அவர்களுடைய பதின் மூன்று
நாடோடிப் பிள்ளைகள் எல்லாரும் பிரகாசமான கம்யூனிஸ்ட் இலட்சியங்களால்
ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். என்ன, கொஞ்சம் காசுக்கு ஆசைப்படுகிறார்கள். நாங்கள்
இரண்டு பன்றிகளைக் கொடுத்தோம். நம்முடைய இரங்கத் தகுந்த நாட்டில் பார்க்கக்
கிடைக்கிற எல்லாச் சிவப்புக் கலைப் பொருட்களையும் கிராமத்துக்குக் கொண்டு வந்து
சேர்ப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்று நாடோடித் தோழர்கள் அவர்களுடைய
முதல் பரிசை எங்களிடம் கொண்டுவந்தார்கள். பெயரற்ற ரஷ்யச் சிப்பாயின் நினைவுச்
சின்னம். துருக்கியர்களிடமிருந்து விடுதலைபெற்றவர். சிலை இடுப்புக்குக் கீழே
கொஞ்சம் சிதைந்திருக்கிறது. ஒரு துப்பாக்கி காணாமல் போயிருக்கிறது. மற்றபடி நல்ல
நிலையிலிருக்கிறது. இப்போது அந்தச் சிலை அல்யோஷா, செர்யோஜா, மின்ஸ்கைச் சேர்ந்த
பெயரற்ற பணிப் பெண் ஆகியவர்களின் சிலைகளுக்கு அருகில் கம்பீரமாக நிற்கிறது.”
o
அமெரிக்க வாழ்க்கை நன்றாகவே இருந்தது. நான் வகுப்புகளுக்குப் போனேன். படித்தேன்.
புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டேன். நான் தாத்தாவுக்குக் கடிதங்கள் எழுதினேன்.
அல்லது பல்கேரியாவில் விடியற் காலையாக இருக்கும்போது அவர் விழித்திருப்பாரென்றும்
நாற்காலியில் உட்கார்ந்திருப்பாரென்றும் லெனினை வாசித்துக்கொண்டிருப்பாரென்றும்
தெரியுமென்பதால் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். மறுபடியும் கெட்ட கனவுகள் காண
ஆரம்பித்திருந்தேன். கார் என் தலைமேல் ஏறி ஏறி இறங்கு வதாகக் கனவுகண்டு அலறியடித்து
விழித்தேன். மறுபடியும் தூங்கியபோது பாட்டி வந்து என் படுக்கை யில் உட்கார்ந்து,
நான் காய்ச்சலில் விழுந்துவிடும்போதெல்லாம் செய்திருந்ததுபோல, என் நெற்றியை
வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். “உன் தாத்தா செத்துக்கொண்டிருக்கிறார்” என்று
எச்சரித்தாள். “அவரைச் சீக்கிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்புறம்,
என் கண்ணே, தயவுசெய்து அடுத்தமுறை நீ அவரோடு பேசும் போது என் கல்லறையில் லெனினை
வாசிப்பதை நிறுத்தச் சொல்.”
o
தாத்தா அமெரிக்கர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினார். அப்படியானால்
ஏதாவது புத்தகத்தைப் படிப்பதுதானே என்றேன். “என்னால் மனிதர்களை ஆராய முடியாது.
தப்பான முடிவுகளையே எடுப்பேன்” என்றேன்.
“பிறகு எதற்காக உளவியல் படிக்கிறாய்?”
அதனால் அமெரிக்கர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க முயன்றேன். “அவர்கள்
வித்தியாசமானவர்கள்.” அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்:
“நாளைக்கு என்ன சாப்பிடப் போகிறோமென்றோ நாளைக்கு மேஜைமீது உணவு இருக்குமாவென்றோ
அவர்கள் யோசிப்பதில்லை. இவையெல்லாம் அவர்கள் வரையில் முடிந்துபோய்விட்ட
பிரச்சினைகள். நடப்பதுபோல. நடை ஒரு முடிந்துபோன பிரச்சினை என்று நாம்
படித்திருக்கிறோம். பரிணாமம் அதை அக்கறையாகத் தீர்த்துவிட்டது. இனிமேல்
ஒவ்வொருவரும் எப்படி நடக்க வேண்டுமென்று வகைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
இத்தகவலைச் சரியாகச் செயல்படுத்த மூளைக்கு ஒரு வருடம் போதுமானதாக இருந்தது.
அப்புறம் புரிந்துகொண்டது. நீங்கள் காலால் நடக்கிறீர்கள். இங்கே மக்களுக்கு வேறு
பிரச்சினைகள். வேறு விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள்” என்று எழுதினேன்.
கடிதம் கிடைத்த பிறகு தொலை பேசி மூலம் “என்ன சொல்ல வருகிறாய்?” என்று கேட்டார்
தாத்தா.
“எனக்குத் தெரிந்த இந்தப் பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். சமந்தா. ஒரு மாதமாக
மிகவும் மனச் சோர்வுடன் இருக்கிறாள். அவள் அப்பா அவளுக்குத் தானியங்கியான
கியரில்லாத ஒரு பிஎம்டபிள்யூ காரைக் கொடுத்தார். என்னால் அதை ஓட்டவே முடியாது. அது
கொடுமையாக இருக்கிறது. நான் செத்துப்போகப்போகிறேன் என்று அழுகிறாள்.”
“அது கொடுமைதான்” என்றார் தாத்தா.
“ஆனால் வேறு சிலரின் பிரச்சினைகள் நம்முடையவைபோலத் தான். என்னுடைய அறை நண்பனின்
பெற்றோர் மணவிலக்குச் செய்துகொள்ளப் போகிறார்கள். இருபது வருடங்களாக ஒன்றாக
இருந்தவர்கள். ஒரு நாள் காலையில் இனிமேல் ஒரே படுக்கையில் விழித்து எழ வேண்டாம்
என்று முடிவு செய்துவிட்டார்கள்.” மறுமுனையில் தாத்தா இருமினார்.
“ஏழு வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் உன் பெற்றோர் காலமானார்கள்” என்றார்.
“தெரியும். என்னுடைய காலண்டரில் குறித்துவைத்திருக்கிறேன்” என்றேன்.
o
எனக்குப் பன்னிரண்டு வயதாவதற்கு ஒரு வாரம் முன்பு என்னுடைய பெற்றோர் இறந்தார்கள்.
அவர்கள் எனக்கு ஒரு சைக்கிளைப் பரிசளிப்பதாக இருந்தார்கள். வீட்டின் தரைத்தளத்தில்
அதை மறைத்துவைத்திருந்ததை நான் பார்த்திருந்தேன். தோல் இருக்கையும் டைனமோவால்
எரியும் இரண்டு முகப்பு விளக்குகளும் கொண்ட ஒரு வெள்ளை நிற பி.எம்.எக்ஸ். அம்மா
ஏற்கனவே வாழ்த்து அட்டை எழுதி உறையை சைக்கிளில் சொருகியிருந்தாள்.
“எங்கள் அன்பான பையனுக்கு, நீ கீழே விழுந்து முட்டியைச் சிராய்த்துக்கொள்ளும்போது
எங்களை நினைத்துக்கொள்” என்று அட்டையில் இருந்தது.
அவர்கள் இறந்துபோன அந்த இரவை இப்போது நடந்ததுபோல என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள
முடிகிறது. தொலைபேசி ஒலித்தபோது அதிகாலை இரண்டரை மணியாக இருந்தது. அப்பா தொலை
பேசியை எடுத்துச் சற்று நேரம் பேசினார். அவருடைய சோகமான முணுமுணுப்பால்
விழித்தேன். மறுபடியும் தூக்கத்துக்குள் ஊர்ந்தேன். மறுபடியும் விழித்தேன். அம்மா
அப்பாவின் கையைப் பற்றிய படி சோபாவில் அவர் அருகில் உட்கார்ந்திருந்தாள். இருவரும்
நீல இருளில் குளித்தவர்கள்போல இருந்தார்கள். தசை நிழல்கள்போலத் தோன்றினார்கள்.
கடைசியாக அப்பா சொன்னார். “நன்றி டாக்டர். நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்”
அம்மா என் படுக்கையில் வந்து உட்கார்ந்தாள். பயத்தால் நடுங்கிக் கண்களை இறுக
மூடிக்கொண்டேன்.
“மிஷே, எழுந்திரு” என்றாள்.
“தாத்தாவா?” என்று கேட்டேன். அம்மா குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள்.
“அவருக்கு மாரடைப்பாம். ஆனால் இப்போது நன்றாக இருக்கிறார். எல்லாரும் சேர்ந்து
கிராம மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்” என்றாள்.
“செத்துப்போய்விடுவாரா?”
அப்பா வந்து என்னை முத்தமிட்டார். அவருடைய கண்கள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில்
மின்னின. என்னைப் போர்வையுடன் அப்படியே சுற்றித் தூக்கிக்கொண்டு கதவைத்
தாண்டினார். நாங்கள் நெடுஞ்சாலையை அடைந்தபோது நான்கு மணி ஆகியிருந்தது. ஒரு
மணிநேரத்துக்குப் பிறகு அவர்கள் இறந்தார்கள்.
o
என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிவதெல்லாம் எங்களுக்கு நேராக வந்த லாரியின்
பிரகாசமான வெளிச்சத்தை மட்டுமே. சாலையிலிருந்து விலகிக் கார் உருண்டது. மோதல்.
பிறகு இருட்டு. என் மார்பில் குழாய்களுடன் விழித்தேன். “அம்மா? அப்பா?” என்று
கேட்டேன்.
“சின்கோ, என் மகனே, விழித்துவிட்டாய்” என்று கேட்டது. எங்கிருந்தோ தாத்தா
தோன்றினார். என் முன்னால் நின்று அழுதுகொண்டிருந்தார்.
“நீ விழித்துவிட்டாய், விழித்துவிட்டாய்” என்று திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டிருந்தார்.
டாக்டர்கள் வந்தார்கள். நர்ஸுகள் வந்தார்கள். அவர்கள் எல்லாரும்
ஆச்சரியமடைந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நான் விழித்துக் கிடப்பதைப் பார்த்து
மகிழ்ச்சியடைந்திருந்தார்கள்.
“தாத்தா, அம்மா எங்கே?”
“சின்கோ, நீ விழித்துவிட்டாய்” திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்
தாத்தா.
o
ஒரு வாரத்துக்குப் பிறகு புதிய சமாதியைப் பார்க்க என்னை இடுகாட்டுக்கு அழைத்துப்
போனார். மண் மேடாகக் குவிக்கப்பட்டிருந்தது. கறுத்திருந்தது. ஈரமாக இருந்தது. என்
பெற்றோர் ஒரே இடு குழியில் புதைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில்
பாட்டி கிடந்தாள்.
“தாத்தா நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்றேன். மரச் சிலுவைமேல் பொறித்திருந்த
என் பெற்றோரின் பெயர்களை உற்றுப் பார்த்தேன். “நீங்கள் ஒரு புளுகர்.”
ஒரு கையை என் தோள்மீதுவைத்தார் அவர்.
“இறுதிச் சடங்கை நீ தவறவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி.”
“புளுகர்” என்று முணுமுணுத்தேன். மண்டியிட்டு உட்கார்ந்து என் உள்ளங்கைகளால்
மண்ணைப் பறித்தேன். திரும்பி அதை அவர் முகத்தில் எறிந்தேன். பிறகு அவரைக்
கட்டியணைத்துக்கொண்டேன்.
o
கல்லூரியில் என்னுடைய இரண்டாம் வருடம். எங்களுடைய தொலைதூர அழைப்பு வேளையொன்றில்
தாத்தா என்னிடம் கேட்டார். “இ பேயைப் பற்றி உனக்கென்ன தெரியும்?”
“என்ன?”
“மீ-தீணீஹ். அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா?”
“ஆமாம். நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் தெரியும். ஆனால் ஏன்?”
“தோழர் ஹசன் ஆராய்ச்சி செய்திருக்கிறார். சுவாரசியமான சில விஷயங்களைக்
கண்டுபிடித்திருக்கிறார்” என்று விளக்கினார் தாத்தா. யாரோ லெனினின் சடலத்தை இ பே
மூலம் விற்பதாகத் தெரிகிறது.
“இ பேயில் லெனின்?” ஒரு கணம் தொண்டை வறண்டது. “தாத்தா உங்களுக்குப் பைத்தியமா?”
“அது தேவையில்லாத விஷயம்” என்றார். இன்று கட்சி உன்னுடைய உதவியை நாடுகிறது.
விளாதிமிர் இலியீச்சை லெனின்கிராடுக்குக் கொண்டுவர நீ உதவ வேண்டுமென்று நாங்கள்
விரும்புகிறோம்.”
“நீங்கள் என்னைச் சீண்டுகிறீர்கள். உங்களால்...”
“விற்பனையாளருக்குத் தேவை ஒரு கடனட்டை. விசாவோ மாஸ்டர் கார்டோ அல்லது டிஸ்கவரோ?
கிராமத்தில் எங்களில் யாரிடமும் இதில் எதுவும் கிடையாது. அதனால்தான் உன் உதவியைக்
கேட்கிறோம். ஆராய்ச்சி செய். நாளைக்கு என்னைக் கூப்பிடு”
நான் என் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இண்டெர்நெட் பிரௌசரைத் திறந்தேன்.
பிறகு மூடிவிட்டேன். பிறகு மறுபடியும் திறந்து இ பேயைத் தேடினேன். ‘லெனின்’ என்று
தட்டச்சு செய்து தேடு பொறியைச் சொடுக்கினேன். 430 இனங்கள். அஞ்சல் அட்டைகள்,
பாட்ஜுகள், டி ஷர்ட்டுகள். தாத்தா எதைச் சொன்னார்? மார்பளவுச் சிலையையா?
தொப்பியையா? அல்லது ஒட்டுத் தாடியையா? விண்டோசை மூடுவதற்குத்
தயாராக்கிக்கொண்டிருந்தபோது அதைப் பார்த்தேன். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
நிறுவனர் லெனின். பதப்படுத்திய நிலை. ‘சீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமே.’
அந்த இணைப்பைத் தொடர்ந்து போய் அந்தப் பக்கம் பதிவிறங்கக் காத்திருந்தேன்.
உள்ளடக்கத்தை உரக்க வாசித்தேன். “விளாதிமீர் இலியீச் லெனினின் சடலத்தை ஏலம்
கோரியிருக்கிறீர்கள். உடல் நல்ல நிலையில் உள்ளது. அமெரிக்க வெப்பநிலையிலும்
ஐரோப்பிய வெப்பநிலையிலும் இயங்கும் குளிரூட்டிய சவப்பெட்டியில் அனுப்பப்படுகிறது.
சீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமே. வாங்கிய உடன் தொகையைச் செலுத்தவும்.”
பொருள் வைத்திருக்கும் இடம் மாஸ்கோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உலகம்
முழுவதும் சரக்கு அனுப்பப்படும். விற்பனையாளர் பற்றிய தகவல்களைப் பரிசோதித்தேன்.
விவரங்கள் எதுவுமில்லை. வேறு ஏலம் நடந்ததாகவும் தெரியவில்லை. நிச்சயமாக இது ஒரு
புரட்டு. ஏலம் பற்றிய தகவல் பக்கத்துக்குத் திரும்ப வந்தேன். மேலும் ஓரிருமுறை அதை
வாசித்தேன். இதுவரையிலும் யாரும் ஏலம் கேட்டிருக்கவில்லை. ஆரம்பத் தொகை 1.99
டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் ஐந்து டாலருக்கு ஏலம் கேட்டு அதற்கான
பித்தானை அமுக்கினேன். பழைய பக்கம் மறைந்து புதிய பக்கம் பதிவிறங்கியது. “பொருள்
முன்பதிவு” என்றிருந்தது. “வாழ்த்துகள், கம்யூனிஸ்ட் போலி - 1944. நீங்கள் லெனினை
விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள்.”
o
மறுநாள் தாத்தாவைக் கூப்பிட்டேன்.
“உங்களுடைய முட்டாள் லெனினுக்காகப் பத்து டாலர்கள் வீணடித்திருக்கிறேன். உங்களுக்கு
சந்தோஷமென்று நினைக்கிறேன்” என்றேன்.
“பேரா!”
“ஆமாம். நான் அவரை வாங்கிவிட்டேன். சடலத்துக்கு ஐந்து டாலர். அனுப்புகிற செலவுக்
கட்டணம் ஐந்து டாலர். உங்கள் கிராமத்து முகவரியைத்தான் கொடுத்திருக்கிறேன்.”
“அப்படியென்றால் ஒரு நினைவு மண்டபத்தை நாங்கள் கட்ட வேண்டும். உடனே கட்ட வேண்டும்.”
“தாத்தா, இது ஒரு புரட்டு. ஒரு வேடிக்கை. லெனினை விற்கவோ வாங்கவோ யாருக்கும்
உரிமையில்லை.”
“நாங்கள் கட்டுவோம்.”
“நான் என்ன சொல்கிறேன் என்பதையாவது கேட்கிறீர்களா?”
“ஒரு நினைவு மண்டபம். சதுக்கத்தில். அதற்கு வண்ணம் பூச வேண்டும். ஆமாம்
சதுக்கத்தைச் சிவப்பாக்க வேண்டும்.”
“தாத்தா, நிறுத்துங்கள்.”
அவர் நிறுத்தினார். பிறகு சொன்னார். “பேரனே, கவனி. சமாதிகளைச் சுத்தம் செய்து
களைத்துப்போய்விட்டேன். சமீப காலமாகக் கடுமையான தலைவலி வருகிறது. என்னுடைய வலது கை
மரத்துப்போய் சும்மா தொங்குகிறது. கால்களில் குத்தலும் குடைச்சலுமாக உணர்கிறேன்.
அதனால் தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து என்னை நிறுத்தச் சொல்லாதே. நான்
விரும்பினால் லெனினை வாங்க முடியுமென்று யோசிக்க விரும்புகிறேன். அல்லது ஒரு
நினைவு மண்டபம் கட்ட முடியுமென்று அல்லது ஒரு பிரமிடை எழுப்பலாமென்று அல்லது ஒரு
ஸ்பிங்க்ஸை நிர்மாணிக்கலாமென்று யோசிக்க விரும்புகிறேன்.”
“மன்னித்துவிடுங்கள் தாத்தா.”
“பேரா, இன்னும் என் மேல் கோபமா? என்னுடைய தவறால் தான் உன் பெற்றோர்கள் இறந்து
போனார்கள் என்று இன்னும் நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
o
என்னுடைய பதினாறாம் பிறந்த நாளன்று அவர் ஒரு சைக்கிளைப் பரிசளித்தபோது நான்
அவருடைய தவறுதான் காரணமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் குடியிருப்பில்
பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். கேக்கும் மெழுகுவர்த்திகளும் பலூன்களும்
கொண்டுவந்திருந்தார். அவர் கொண்டுவந்த பரிசுப் பொருட்களின் உறைகளைப் பிரித்துப்
பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் கைகளைத் தட்டிப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார்.
“அது ஒரு பி எம் எக்ஸ். அதை வாங்குவதற்கு என்னுடைய தொடர்புகளையெல்லாம்
பயன்படுத்தினேன்” என்று கண்ணைச் சிமிட்டினார்.
அப்புறம்தான் நான் வெடித்தேன்.
“எல்லாம் உங்களுடைய தவறு. அப்பா உங்களைப் பற்றி மிகவும் கவலைப் பட்டார். உங்களுடைய
மடத்தனமான மாரடைப்புத்தான் கார் மோதுவதற்குக் காரணம்” என்று கத்தினேன்.
கேக்கைத் தரையில் தட்டி எறிந்தேன். எழுந்து போய் அந்தச் சந்தர்ப்பத்துக்கு முன்பு
எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்த படங்கள் எல்லாவற்றையும் கிழித்து வீசினேன்.
தட்டுகளையும் கோப்பைகளையும் உடைத்தெறிந்தேன்.
“நீங்கள் செத்துத் தொலைந்திருக்கலாம். தூக்கத்திலேயே செத்துப் போயிருக்கக் கூடாதா
என்று நினைத்தேன்” என்று கத்தினேன்.
“சின்கோ”
“சின்கோ என்று கூப்பிடாதீர்கள். உங்கள் பிள்ளை செத்துப்போனார். உங்களால்தான்
அவர்கள் இரண்டு பேரும் செத்துப்போனார்கள்” என்று கத்தினேன்.
மறுநாள் தாத்தா நகரத்தை விட்டுப் போனார். லெனின் கிராடுக்குத் திரும்பிப் போய்
உள்ளூர் தலைமறைவுக் கட்சியில் சேர்ந்தார். தினமும் லெனின் தொகுதியை அக்குளில்
இடுக்கிக்கொண்டு கல்லறைக்குப் போனார். அதன் பிறகு மீண்டும் என்னை சின்கோ என்று
அவர் கூப்பிடுவதைக் கேட்கவில்லை. ஒரு வருடம் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
அமெரிக்காவுக்குப் போவதைத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தேன்.
“என் பேரன் ஒரு முதலாளியவாதி. நான் எதையெதையெல்லாம் கடந்து வந்தேன் . . .” என்றார்.
o
நாங்கள் லெனினை வாங்கிய ஐந்து மாதங்களுக்குப் பின்பு எங்கள் உரையாடலின்போது தாத்தா
சொன்னார். “அவர் இங்கேதான் இருக்கிறார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர் லெனின்
கிராடுக்கு வந்திருந்தார்.”
“உங்களுக்குக் கிறுக்கா, தாத்தா?”
“சடலம் நேற்று வந்து சேர்ந்தது. குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியும் இதரச்
சாமான்களுமாக. நினைவு மண்டபத்தின் வேலைகளையெல்லாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்.
அதுவரைக்கும் லெனின் வீட்டில் தங்கியிருக்கிறார். உன்னுடைய அறையில்தான்
தங்கவைத்திருக்கிறோம். உனக்கு ஆட்சேபமில்லையே?”
“உங்களுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதென்று நினைக்கிறேன்.”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” தாத்தா ஒப்புக்கொண்டார்.
“நீங்கள் ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும்.”
“அதனால் என்ன பயன்? தலைவலி எப்போதும் கூடவே இருக்கிறது. கைகளில் குடைச்சல்.
மறுபடியும் கெட்ட கனவுகள் வருகின்றன. பதுங்குகுழியில் கிடந்த மக்களைப் பற்றிய
கனவுகள்.”
“அவர்களுக்கு என்ன ஆயிற்று?”
“அந்தப் பதுங்குகுழியில் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆட்களுடனும் இரண்டு
கர்ப்பிணிகளுடனும் ஒரு பசித்த வெள்ளாட்டுடனும் நான் எப்படி இருந்தேன் என்று உனக்கு
நினைவிருக்கிறதா? பசியுடனும் நிராசையுடனும் கிடந்து கடைசியாகக் கிராமத்துக்குப்
போகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன் என்பது உனக்கு நினைவிருக் கிறதா?”
“ஆமாம். நினைவிருக்கிறது.”
“மூன்று வருடங்களுக்குப் பிறகு காட்டில் அதே இடத்துக்குத் திரும்பப் போனேன்.
அந்தப் பதுங்குகுழிக்கு. என்னுடைய சுதந்திரமான கண்களால் அதை இன்னொரு முறை பார்க்க
விரும்பினேன். நுழைவு வழியைச் சுத்தப்படுத்தினேன். ஏணிவழியாகக் கீழே இறங்கி
அவர்களைப் பார்த்தேன். பதினைந்து ஆண்கள். இரண்டு பெண்கள். ஒரு வெள்ளாடு. எல்லாரும்
இறந்து போயிருந்தார்கள்.”
“பதுங்குகுழியிலா?”
“பதுங்குகுழியில்தான். யுத்தம் முடிந்துவிட்டதென்று யாரும் அவர்களிடம்
சொல்லவில்லை. அவர்கள் வெளியே வரலாமென்று யாரும் சொல்லவில்லை. அவர்களுக்கு
நடப்பதற்கான வலு இருக்கவில்லை. பட்டினி கிடந்தே இறந்துபோனார்கள்”
தொலைபேசியின் ஒலி வாங்கியைக் கையில் பிடித்தபடி என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து
அந்த ஆண்களையும் பெண்களையும் ஆட்டையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள்
சுதந்திரமானவர்கள் என்று எப்படி யாரும் சொல்லாமல் விட் டார்கள் என்று
யோசித்துக்கொண் டிருந்தேன். இண்டெர்நெட் மூலம் நாங்கள் வாங்கிய, இப்போது என்
அறையில் குளிரூட்டத்துடன் இருக்கிற லெனினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்படியே வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். நான் சிரிக்கத் தொடங்கியதும்
தாத்தாவும் சிரிக்கத் தொடங்கினார். நீண்ட நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம்.
எங்களுடைய குரல்கள் தொலைபேசி இணைப்பில் கலந்து கடைசியில் ஒன்றாகக் கேட்கும்வரை
சிரித்துக்கொண்டிருந்தோம்.
மறுநாள் மறுபடியும் தாத்தாவை அழைத்தேன். ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை.
சில மணிநேரங்களுக்குப் பிறகு மறுபடியும் அழைத்தேன். அதற்குச் சில மணிநேரங்களுக்குப்
பிறகும். யாரும் பதில் சொல்லவில்லை. இரண்டு வாரங்களாக நாள்தோறும் அழைத்தேன்.
ஒலிவாங்கியை இறுகப் பிடித்தே கையில் காய்ப்பு காய்த்துவிட்டது. என்னுடைய
நாற்காலியில் உட்கார்ந்து இணைப்பின் மறுமுனை மௌனத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.
இடையிடையே ஒலிக்கும் ஒரே மாதிரியான பீப்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவை
என்னுடைய மண்டைக்குள் ஒலிக்கும் துடிப்புகளைப் போல ஒலித்தன. நிதானமாகவும்
களைப்புடனும் எனக்கு விடைசொல்லும் துடிப்பொலி. உரக்க அழுதேன். ஒலிவாங்கியைக்
கையில் வைத்துக்கொண்டு அறைக்குள் அடிவைத்து நடந்தேன்.
கூப்பிட்டுக்கொண்டேயிருந்தேன். தாத்தாவின் எண்ணைத் தவிர எனக்கு வேறு எண்கள்
தெரியாது.
o
மறுநாள் தபாலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. நீண்ட நேரம் அதைப் பிரிக்காமலே
இருந்தேன். அதற்கான தைரியம் இல்லாமலிருந்தது. இரண்டு நாட்கள் அழுதேன். கடைசியாகத்
தேற்றிக்கொண்டு கடிதத்தைப் பிரித்தேன்.
“அன்புள்ள பேரனுக்கு,
நான் இப்போது இறந்தவன். என்னுடைய இதயம் அதன் துடிப்பை நிறுத்தியதும் இந்தக்
கடிதத்தை உனக்கு அனுப்புமாறு தோழர் பென்கோவிடம் தெரிவித்திருந்தேன். அவர் மிகவும்
நல்லவர். இதை அனுப்பும் செலவை அவர் ஏற்றுக்கொள்வார்.
பேரனே, நாம், நீயும் நானும் ஒரு கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்.
வருடங்களால் அல்ல; மரணங்களால். நமக்கு வயதாகிவிட்டிருக்கிறது. இப்போது நீ ஒரு
மரணத்துக்கு மூப்படைந்திருக்கிறாய். இந்தச் சுமையைக் கௌரவத்துடன் சுமந்து செல்.
ஆனால் அது உன் முதுகை முறித்துவிடாமல் பார்த்துக்கொள். எல்லாரைவிடவும் நீ அதிகம்
துன்பப்பட்டிருக்கிறாய். ஆனால் மற்றவர்கள் இதைவிடப் பெரும் வேதனைகளை
அனுபவித்திருக்கிறார்கள். நீ என்னவாக இருக்கிறாயோ அதற்கு நன்றியுடன் இரு. நீ
பார்த்தவைகளுக்கும் பார்க்காமல் விட்டவைகளுக்கும் நன்றியுடன் இரு.
சிங்கிறால்கள் எளிதில் மாட்டிக்கொள்ளக்கூடிய இரைகள். நீ ஒன்றைப் பிடித்தால் மற்றவை
ஓடிப் போகாது. நீ கழியைத் தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே
இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாது. அப்புறமும்கூடத் தெரியாது. மனித
சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. பேரனே, நீ
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாடம். மீன்களுக்கு இடையில் விழும் எல்லாக்
கழிகளும் கவ்விப் பிடிக்க வேண்டியவை அல்ல. சில சமயம் தவறான கழியைப் பிடிப்பது உன்னை
உன்னுடைய முடிவுக்கே கொண்டுபோய் விடலாம். எனவே என் அன்பானவனே, எந்தக் கழியைப்
பற்றிக்கொள்வது எதை விடுவது என்று எச்சரிக்கையுடன் யோசி. தகுதியான யுத்தங்களில்
மட்டும் ஈடுபடு. மற்றவை உன்னைக் கடந்துபோக விடு. கழி உன்னைப் பலமாகத் தாக்கினாலும்
அதை மறுபடியும் பற்றிக்கொள்ளாமலிருக்கக் கற்றுக்கொள். என் அன் பானவனே, என்னை
மன்னித்துவிடு”
கடிதத்தின் முடிவில் தாத்தா நான்கு வார்த்தைகளை எழுதியிருந்தார்.
“சின்கோ, நான் உன்னை நேசிக்கிறேன்.”
o
மிரோஸ்லாவ் பென்கோவ் சிறுகதை எழுத்தாளர். பல்கேரியாவில் பிறந்து வளர்ந்தவர்.
பதினெட்டாம் வயதில் மேற்படிப்புக்காக அமெரிக்காவில் குடியேறினார். அர்கான்சாஸ்
பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியத்தில் பயின்றுவருகிறார்.
ஆங்கில மூலத்திலிருந்து இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள லெனினை வாங்குதல்
(Buying Lenin) என்ற இச்சிறுகதை, சல்மான்ருஷ்டி தொகுத்த சிறந்த
அமெரிக்கக் கதைகள் - 2008 தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹூடன் மிஃப்ளின் கம்பெனி,
(Houghton Mifflin Company) பாஸ்டன்,
நியூயார்க் வெளியீடு.
|
|