Google   www kalachuvadu.com

பத்தி: இங்கிலாந்து : மறு பார்வை
சொற்போராட்டமும் அரசியல்-சரியாக்கமும்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

வார்த்தைகள் தன்னிச்சையாக வாழ்வதில்லை. அவற்றின் அர்த்தங்கள் உருவாக்கிய அரசியல், சமுதாய, கலாச்சார, பொருளாதாரச் சூழலமைவுகளுக்குள் உட்பொதிந்துள்ளவை. ஆனால் அவற்றின் பொருளைக் கட்டுப்படுத்த முடியாது. மாறுபட்ட சூழ்நிலையில் அவை மறு உற்பத்திசெய்யப்படுகின்றன. சில சொற்கள் காலம் கடந்தாலும் அவை சுமந்துவரும் கறைபட்ட சில கருத்துகள் எளிதாக மறைவதில்லை. முழுதாக விட்டுப்போவதும் இல்லை. அவற்றில் உள்ளடங்கிய களங்கமான அர்த்தம் மேலும் தொடர்வதுண்டு. அவை ஒருவித இறுக்கத்தையும் கொண்டுள்ளன. அப்படியான ஒரு வார்த்தைதான் ‘பாக்கி’ (Paki). இது பாகிஸ்தானியர் என்பதன் சுருக்கம். இதை 70களில் ஆங்கிலேய இனவெறுப்பு இயக்கமான தேசிய முன்னணி வாழ்ந்த ஐக்கிய இராச்சியத்தில் பாகிஸ்தானியருக்குச் சூட்டிய அவப்பெயர். அந்த நாட்களில், ஏன் இப் போதும்கூட ஐக்கிய இராச்சியத்தின் சில சுவர்களிலும் பொதுமலசலக் கூடங்களிலும் Paki go home என்ற வார்த்தைகள் அலங்கரிப்பதைப் பார்க்கலாம்.

சமீபத்தில் Strictly Come Dancing என்ற பிபிசி தொலைக்காட்சியில் பங்கு கொள்ளும் Anton Du Beke என்ற நடனக்காரர் தன் சோடி ஆட்டக்காரப் பெண்ணான Laila Rouass ஜை ‘பாக்கி’ என்று அழைத்திருக்கிறார். லைலாவின் தாய் இந்தியர்; தந்தை மொறொக்கோ நாட்டைச் சேர்ந்தவர். இதுமட்டுமல்ல ஒத்திகை பார்க்கும்போதுகூட லைலாவைப் பயங்கரவாதி என்று அண்டன் வர்ணித்திருக்கிறார். Strictly Come Dancing ஒரு இயல்பு தொலைக்காட்சி (reality tv) நிகழ்ச்சி. சனிக்கிழமை மாலையில் இந்த நடனப் போட்டி ஒளிபரப்பாகும். ஏழு மில்லியன் பார்வையாளர்கள் மிக விசுவாசத்துடன் பார்வையிடும் தொடர் இது. அண்டனின் இனத்துவ உபயோகம் குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் தொலைக்காட்சி நிறுவநரிடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். இது போன்ற இனவாத எண்ணங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று உற்பத்திசெய்யப்பட்ட ஒரு போலியான தார்மீக உச்சநிலையிலிருந்து, சின்ன பிரசங்கம் செய்தது நிர்வாகம். அண்டன் மன்னிப்புக் கேட்டுவிட்டார் ஆகையால் இந்த விஷயம் இத்துடன் முடிந்துவிட்டதென்று பிபிசி இந்தப் பிரச்சினையிலிருந்து விலகிக்கொண்டது. களிப்பூட்டும் இந்த நடனத் தொடரைக் காப்பாற்றுவதுதான் பிபிசியின் குறிக்கோளே தவிர சிறுபான்மை மக்களின் துயரங்களை ஈடேற்றம் செய்வதல்ல.

‘பாக்கி’ ஆங்கிலேய அன்றாட வழக்கில் இனவெறுப்பையும் ஆங்கிலேயரின் எரிச்சலையும் காண்பிக்கும் ஒரு இழிச் சொல்லாகவேதான் பாவிக்கப்படுகிறது. முதலில் பாகிஸ்தானியரைக் குவியமாகக் கொண்ட ஒரு சொல் நாளடைவில் பாகிஸ்தானியர், இந்தியர், வங்காளதேசியர்கள் இடையே இருக்கும் சமய, இன, மொழி வேறுபாடுகளைத் தட்டைப்படுத்தி, இச்சொல் அகல்விரிவாக்கப்பட்டு இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடியேறியவர்களைத் தூற்றும் வார்த்தையாக மாறிற்று. மேற்கோளாக உதைப்பந்தாட்ட மைதானங்களில் இனவெறிக் குண்டர்களால் பாடப்படும் ஒரு பாடலைத் தருகிறேன். A Man That Knew Too Much என்ற சினிமாவில் Dorris Day பாடிய que sera,seara பாட்டு மெட்டில் அமைக்கப்பட்டது. இப்பாடலை இன்னும் கொழும்பு, சென்னை, பங்களுரு இரவு விடுதிகளில் கேட்கலாம். இந்த வரிகளில் உட்பொதிந்திருக்கும் இனவாதத்தைச் சற்று மறந்துவிட்டு முடியுமானால் முணுமுணுத்துப் பாருங்கள்:

When I was just a little boy,
I asked my mother what will I be,
Will I be Pakistan, will I be India?,
And here’s what she said to me: Go
wash out your mouth son,
And go get your fathers gun,
Shoot some India Scum.

ஆங்கிலேயர்கள் மற்ற இனத்தவர்களுக்குச் சூட்டிய சில நாமங்கள்: ஆப்பிரிக்கர்களுக்கு நீக்ரோ (negro, coon), யூதர்களுக்கு Yid, அயர்லாந்துக்காரர்களுக்கு Paddy, வேல்ஸ்சில் (Wales) உள்ளவர்களுக்கு Taffy, பிரான்சு நாட்டவருக்கு frogs, ஜெர்மானியருக்கு krauts. இதே வரிசையில் பாக்கி என்ற பதமும் அடங்கும். பிரித்தானியர்களைச் சுருக்கி Brits என்று அழைப்பது போல் பாகிஸ்தானியரைப் ‘பாக்கி’ என்று கூப்பிடுவதில் என்ன தவறு என்று ஒரு வாதம் உண்டு. ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு. ‘பாக்கி’ இனவெறியையும் இஸ்லாம் மீதுள்ள அச்சத்தை உறுதிசெய்யும் அவதூறான, புண்படுத்தும் சினமான வார்த்தை. சீராட்டுப்பதமல்ல.

விளிம்புநிலை மக்கள் பற்றிய இனவாத இழிபெயர்கள் அடிக்கடிப் பிரபலங்களால் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு பழைய பிரதமர் மார்கிறெட் தட்சரின் மகள் கரல் தட்சர் ஒரு வெளிநாட்டுக் கறுப்பு டென்னிஸ் ஆட்டக்காரரை Golliwogg என்று அழைத்திருந்தார். Flosrence Kate Upton எழுதிய The Adventures of Two Dutch Dolls and a Golliwogg என்ற சிறுவர்களுக்கான புதினத்தில் வரும் ஒரு கறுப்புப் பொம்மைக் கதாபாத்திரம். 1895இல் வெளிவந்த நாவலின் பாத்திரத்தின் பெயர் வெள்ளையர் பொதுக்களத்தில் கறுப்பர்களுக்கெதிரான ஒரு வசைச் சொல்லாக மாறிற்று. பிற இனத்தவரைக் கேலி செய்வதைப் பிரிட்டிஷ் இராச குடும்பம் ஒரு கலைப்படிமமாக மாற்றியிருக்கிறது. இளவரசர் பிலிப்பு ஒரு சமவாய்ப்பு வைப்பாளர். ஒரு நைஜிரீய அரசியல் தலைவரின் நீண்ட அங்கியைப் பார்த்து நித்திரைக்குத் தயாராகிவிட்டீர்களா? என்று கேட்டார். ஒருமுறை சீனாவிற்குப் போனபோது அதிக நாட்கள் இங்குத் தங்கிவிட்டால் கண்கள் சீனர்களுடையதுபோல் குறுகிவிடாதா என்று கேட்டிருக்கிறார். பிறரைக் கேலிசெய்வது பிரித்தானிய அரச மரபணுவின் குணாம் சம்போல் தெரிகிறது. அவருடைய புத்திரன் இளவரசர் சார்ல்ஸ் போலோ (polo) விளையாடும் ஒரு இந்தியரை sooty என்று அழைத்திருக்கிறார். இது காலனிய நாட்களில் இந்தியர் நிறம் புகைக்கரிக்கு ஒத்திருப்பதை எள்ளலாக அடையாளப்படுத்தும் வார்த்தை. பேரன் வில்லியம்கூடச் சளைத்தவர் அல்ல. தன்னுடன் பணிபுரியும் சக இராணுவத்தினரை ‘பாக்கி’ என்று அழைத்திருக்கிறார்.

ஆங்கில மேலாட்சியினரின் எதிர் விமர்சனங்கள்

இப்படியான பெயர் அழைப்புச் சர்ச்சைகள் ஏற்படும்போது மூன்று விதமான விமர்சன எதிர்ப்புத்தன்மைகளை வலதுசாரி சொல்லாடலில் பார்க்கலாம். ஒன்று இனத்துவ வார்த்தையைப் பேசியவர் நான் இனவாதி அல்ல. எனக்கு நிறைய முஸ்லிம் /இந்து / கறுப்பு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார். தன்னுடைய கலாச்சாரப் பல்வகைமையை உறுதிப்படுத்தத் தனக்குப் பிடித்த உணவு சிக்கன்டிக்கா மசாலா என்பார். இவரின் நேர்த்தியான பல்லினப்பங்கை வலுப்படுத்த ஊடகப் பிரபலங்கள் இவருக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தருவார்கள். இந்த நிலைப்பாட்டில் ஒரு சங்கடம் என்னவென்றால் இனத்துவம் தனிமனித நேயம் சார்ந்த உறவுகளால் மீட்படைவதில்லை, ஒரு பெரும்பான்மைச் சமூகம் அதனுடன் கூடி வாழும் சிறுபான்மையினரைப் பேணும் விதத்திலிருக்கிறது. வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், சமூக நீதி, அரசின் நலன்புரி சலுகைகள் உள்நாட்டவர்களுக்கு மட்டுமல்ல உள்நுழைந்தோருக்கும் கிடைக்கப் பெறுவழி (access) செய்வதில்தான் இருக்கிறது. ஒரு நடப்பு உதாரணம். ஆங்கிலேய விண்ணப்ப தாரர்களுடைய கல்வித் தராதரத்திற்கு இணையாக இருந்தாலும் அன்னிய நாட்டுப் பெயருடையவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் கிடைப்பது அரிது. இது என்னுடைய அறிவுபூர்வமற்ற, உணர்வுப்பெருக்கோடு சொல்லப்பட்ட அபிப்பிராயம் அல்ல. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது அரசின் Department of Work and Pension நியமித்த National Centre for Social Research வெளியிட்ட அறிக்கையில் இருக்கிறது. ஒரு சீரான இன உறவுகளுக்கு ஆடுதளம் சகல இனத்தவரும் சமனாக இருக்க வேண்டும். தனிமனித காருண்ணியங்களால் இனத்துவம் சீராக்கப்படுவதில்லை.

மரபுரீதியான ஆங்கிலேயரின் இரண்டாம் கருத்து அரசியல்-சரியாக்கம் (political-correctness) நகைச்சுவையைக் கொன்றுவிட்டது. சிரிப்பதற்குத் தடைபோடுகிறது. ‘பாக்கி’, Sooty போன்ற வார்த்தைகள் எல்லாம் பகடியாகச் சொல்லப்பட்டவை. இப்படியான பொதுவெளியில் நடைபெறும் விசாரணைகள் நம்மிடையே காணப்படும் இயல்பான கேலி சுபாவத்திற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது. ஏன் எங்களைக்கூட அமெரிக்கர்கள் limeys என்றும் ஆவுஸ்திரேயியர்கள் Pommy என்றும் அழைக்கிறார்கள். நாங்கள் அதைப் பகடியாகத்தான் எடுத்துக்கொள்ளுகிறொம். நீங்களும் அந்த நகைச்சுவையாக ரசித்தால் என்ன என்பது இவர்களின் வாதம். ஆனால் limey, Pommy என்பன நிந்தைப் பெயர்கள் அல்ல. இவை ஆங்கிலேயரின் பட்டப் பெயர்கள். இந்தப் பெயர்களுடன் ‘பாக்கி’யை இணைத்துப் பார்க்க முடியாது. பட்டப்பெயர்கள் சரிச மனானவர்களிடையே ஒருவருக்கொருவர் சூட்டிக்கொண்டு செல்லமாக அழைக்கப்படும் பெயர்கள். நிகரானவர்கள் தங்களுடைய பாசத்தையும் நட்புணர்வையும் வெளிப்படுத்திடும் பதங்கள். ‘பாக்கி’ என்ற சொல் அப்படி முஸ்பாதியாக ஒத்த நபர்களிடையே புழங்கப்படுவதல்ல. சமமின்மையான பிறிதானவர்கள்(the other) மீது இனத் துவேசத்தையும் வன்முறையையும் நியாயப்படுத்தும் பதமாகவே உருப்பெற்றது. இது விசமத்தனமான வார்த்தை. ‘பாக்கி’ பகடியான வார்த்தை என்ற கருத்துக்கோணத்தை வலியுறுத்துவோர் கேட்கும் தொடர்பானதும் இணையானதுமான இன்னொரு கேள்வி நகைச்சுவை எப்போது நகைச்சுவை அற்றதாகிறது? சுருக்கமான விடை: சொல்லப்பட்ட வார்த்தைகள் பாதிக்கப்பட்டவர்களைப் புண்படுத்துமானால் அது நகைச்சுவை ஆகாது.

ஆங்கிலப் பழமைவாதிகளின் மூன்றாம் கருத்து அரசியல்-தகமைப்பாடு (political-correctness) எல்லை மீறிவிட்டது, இந்த ஆர்ப்பாட்டம் பேச்சுச் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கிறது. கருத்துக் கண்காணிப்பு தீவிரமடைந்து விட்டதன் அடையாளம் இது. அரசியல்-தகமைப்பாட்டின் பூர்விகம் கொஞ்சம் சறுக்கலானது. இந்தப் பதம் எப்போது உபயோகத்திற்கு வந்தது என்பது பற்றி ஒரு தெளிவான கருத்தொருமிப்பு இல்லை. Toni Cade Bambara என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணிய எழுத்தாளர் எழுதிய கட்டுரை ஒன்றில் ‘Aman cannot be politically correct and a chauvinist too.’ என்ற வரிகளில்தான் இந்தப் பதம் முதலில் அறிமுகமாக்கப்பட்டது என்கிறார்கள். இக்கட்டுரையை 1970இல் வெளிவந்த இவரது The Black Woman என்னும் தொகுப்பில் பார்க்கலாம். சீனத் தலைவர் மாவோவின் Little Red Book ஆங்கில மொழிபெயர்ப்பில் இவ்வார்த்தை பதிவாகியிருப்பதாகச் சொல்லுகிறார்கள். மாவோவின் நூலைக் கலந்தாலோசிக்காததால் என்னால் இதை ஆதாரப்படுத்த முடியவில்லை. பொதுவுடமைக் கட்சியின் பாவனையிலிருந்த correct-lineism தான் நாளடைவில் politically correct ஆக மாறியது என்ற கருத்தும் உண்டு.

ஆனால் அரசியல்-சரியாக்கம் என்ற பதம் அதிகக் கவனத்தைப் பெற்றது 90களில்தான். இதற்கு 1991இல் New York Magazineஇல் வெளியான Are you politically correct? என்ற கட்டுரை பொறுப்பாகும். இக்கட்டுரையின் மையக் கருத்து அரசியல்-தகமைப்பாடு இன்றைய புதிய அடிப்படைவாதம். மேற்குலகக் கலாச்சாரத்தின் கொண்டாட்டக் கருத்துகளான தனிமனிதச் சலுகைகளுக்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் இது முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்த அரசியல்-சரியாக்கம் அறிமுகப்படுத்திய கட்டுடைப்பு மேற்கத்தைய கலாச்சாரத்தையும் தாராளத்தன்மையையும் தளர்த்துவது மட்டுமல்ல அதன் அடி நிறுவனத்தையே தகர்ப்பதற்கும் சிதறுண்டுபோவதற்கும் காரணமாயிருக்கிறது. பெரும்பான்மைச் சொல்லாடலில் குறுக்கிடும் கலகக்காரர்களின் பட்டியலை அக்கட்டுரை தந்திருந்தது. அதில் அம் பலப்படுத்தப்பட்டவர்கள்: பல் பண்பாட்டுநிலையாளர்கள் (multiculturalists), மார்க்சியவாதிகள், சமபால் ஈர்ப்பாளர்கள், நவ வரலாற்றாளர் (new-historicists) மற்றும் பெண்ணியர்கள்.

அன்று அக்கட்டுரை வித்திட்ட பல்லினப் பண்பாட்டுக் கோட்பாடு மேற்குலகக் கிறிஸ்தவக் கலாச்சாரத் தனித்தன்மைக்கு அச்சுறுத்தலாக மட்டுமல்ல, அதைப் பலவீனப்படுத்தவும் செய்கிறது என்னும் செய்தி வலதுசாரி கூறுமுறையில் இன்னமும் தொடர்கிறது. வைதீக, ஆண் ஆளுமையாளர்களுக்கும் வெள்ளை இன மேலாண்மையினருக்கும் அரசியல்-தகமைப்பாடு ஒரு தூசணமான வார்த்தை மட்டுமல்ல அவர்களின் கைகளில் இது ஒரு மிரட்டல் கருவியாக மாறியிருக்கிறது. இவர்கள் பார்வையில் அரசியல்-சரியாக்கம் நவீன Stalinism, McCarthyism ஆகக் கருதப்படுகிறது. வலதுசாரிகளுக்கு அரசியல்-சரியாக்கம் ஒரு குறிமுறையாக்கப்பட்ட வார்த்தை (coded word). இன்னும் ‘பாக்கி’ என்று சொல்லவும் சமபாலினச் சேர்க்கையாளர்களை poofs என்று கூறவும் கறுப்பு உதைப்பந்தாட்டக்காரர்களில் விளையாடும்போது குரங்குகள் போல் கூச்சல் போடவும் அவர்கள் மேல் வாழைத் தோலை எறியவும் இந்தப் பதம் சுதந்திரம் கொடுக்கிறது.

வார்த்தைகள், அர்த்தங்கள், பொருள் சுட்டல், குறிமுறைகள் பற்றிப் பேசும்போது இலக்கிய வாசகர்களுக்கு Lewis Carroll எழுதிய Alice in WonderlandL™ வரும் ஆலிஸ் என்ற சிறுமிக்கும் ஹம்டி டம்டி என்ற பொம்மைக்கும் நடந்த உரையாடல் நினைவுக்கு வரலாம். எனக்கும்வந்தது. அதை என்னுடைய சுதந்திர மொழிபெயர்ப்பில் தருகிறேன். முக்கியமாகக் கடைசி வரிகளை உன்னிப்பாகப் படியுங்கள். பிறகு அந்த வரிகளில் உள்ளடங்கிய, முக்கியமாக அர்த்தத்திற்கும் அதிகாரத்திற்கும் உள்ள தனிவகைத் தொடர்பைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள்:

‘நான் ஒரு வார்த்தையை உபயோகிக்கும்போது, அதற்கு நான் என்ன பொருளைக் கொடுக்கிறேனோ அதைத்தான் அது குறிக்கிறது. நான் தந்த அர்த்தம் கொஞ்சம் கீழேயோ மேலேயோ குறைவதில்லை.’ இது ஹம்டி டம்டி சொன்னது.

‘சொற்களுக்குப் பல அர்த்தங்கள் கொடுக்க முடியுமா? என்று ஆலிஸ் ஆச்சரியத்துடன் திருப்பிக் கேட்கிறாள்.

அதற்கு ஹம்டி டம்டி சொன்ன விடை: ‘ஒரு சொல்லுக்கு பொருள் யார் யாருக்கு அதிபதியாக இருப்பது என்பதில்தான் இருக்கிறது.’

உள்ளடக்கம்