Google   www kalachuvadu.com

புதிய கவிதை 50 ஆண்டுகள்
எழுத்தும் கவிதையும் - சில பிற்காலக் குறிப்புகள்
சுகுமாரன்

சி.சு. செல்லப்பா தொடங்கி நடத்திய ‘எழுத்து’ பத்திரிகைக்கு இது பொன்விழா ஆண்டு. கறாரான அர்த்தத்தில் எழுத்து இதழைத்தான் தமிழின் முதல் சிறு பத்திரிகை என்று சொல்ல வேண்டும். இந்தச் சிற்றேடு தான் புதுக்கவிதையை விரிவான தளத்துக்குக் கொண்டு சென்றது; அதற்குரிய இலக்கணத்தை வகுக்க உதவியது; புதுக்கவிதையை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றது. ஆனால் இவையெல்லாம் தற்செயல் நிகழ்வுகளாகவே இருந்திருக்கின்றன.

செல்லப்பாவின் பத்திரிகைத் திட்டத்தில் புதுக்கவிதை என்ற வகையே இருக்கவில்லை. பெரும் பத்திரிகைகளின் போக்குக்கு எதிராக தீவிர இலக்கியத்தை முன்வைப்பது, இலக்கியம் பற்றிய பொதுப்புத்தியை நிராகரித்துப் புதிய கோணங்களில் விமர்சனங்களை உருவாக்குவது, பரிசோதனைகளுக்கு இடமளிப்பது ஆகிய நோக்கங்கள் அவருக்கு இருந்திருக்கின்றன. ‘எழுத்து’ இதழ் ஓய்ந்த பின்னர் செல்லப்பா வெளியிட்ட ‘சுவை’ என்ற சிறு தொகுப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்தும் இன்று எழுத்து இதழின் முயற்சிகளை மதிப்பிட்டுப் பார்க்கும்போதும் இவை புலப்படுகின்றன. பத்திரிகையை நடத்த ஆரம்பித்துச் சில இதழ்களுக்குப் பின்னரே அவர் கவிதை முயற்சிகளில் ஈடுபடுகிறார். முதன் மையாகச் சிறுகதைக்காரர். விமர்சகர். பகுப்பாய்வு விமர்சனத்தில் ஈடுபட்டவர். ‘எழுத்துவின் நோக்கம் விமர்சனத்துக்கே தவிர சிறுகதைக்குக் கூடக் கிடையாது. அப்புறம் கவிதைக்கு அதுவும் புதுக்கவிதைக்கு எப்படி ஈடுபாடு இருக்கும்? எனக்கே கவிதை நோக்கு அவ்வளவு உருவாகவில்லையே?’ என்று செல்லப்பாவே பின்னாளில் குறிப்பிட்டார்.

பத்திரிகையாசிரியரின் மனப் பாங்கை மீறி கவிதை மறுமலர்ச்சிக் கோலம் கொண்டது காலத்தின் நிர்ப்பந்தம்; தவிர்க்க இயலாமை. நாற்பது ஐம்பதுகளில் தமிழ் இலக்கியத்தின் பரிசோதனைகள் நிகழ்ந்து கொண்டிருந்தது உரைநடையில் தான். புதிய தடத்திலான சிறுகதைகள் உருவாகி விவாதப் பொருளாக மாறியிருந்தன. கவிதையில் புதிய முயற்சிக்கான அடையாளங்கள் தென்பட்டிருந்தும் ஒரு புதிய போக்குக்கான ஆற்றல் திரளாமலிருந்தது. பாரதியின் வசன கவிதை முயற்சிகளை முன்னோடியாகக்கொண்டு ந. பிச்சமூர்த்தி உரைநடையில் சில கவிதைகளை எழுதியிருந்தார். அவை அச்சேறியிருந்தன. எனினும் அது கவிதையின் புதிய முகமாக அடையாளம் காணப்படவில்லை. மாறாக எள்ளலுக்குரிய செயலாகவே கருதப்பட்டது. உரை நடையில் கவிதை எழுதப்படாது என்ற பார்வையே மேலோங்கியிருந்தது.

பாரதிக்குப் பின்னர் வந்த பெரும் கவிஞரான பாரதிதாசனிடம் கவிதை வாழ்வனுபவம் என்பதைக் கடந்து பரப்புரையாகவே தேங்கியிருந்தது. பாரதிதாசனை அடியொற்றி உருவான பாவலர்களும் அவர் வெற்றி கண்ட கவிதைப் பொருள்களிலேயே தம்முடைய கவிதைகளை உற்பத்தி செய்துகொண்டிருந்தனர். பாரதியின் தொடர்ச்சி என்று தம்மைச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் விடுதலைக் கனவின் மிச்ச சொச்சங்களில் திளைத்திருக்க பாரதிதாசன் மரபினர் சங்க யுகக் கனவுகளை மீட்டெடுக்க முயன்றனர். காலமோ புதிய பிரச்சினைகளை முன்வைத்துக் காத்திருந்தது. ஆக, ‘ஒற்றை பாரதியை வைத்துக்கொண்டு உடுக்கடித்துக் கொண்டிருந்த’ கவிதையுலகில் புதிய கவிதைக்கான தேவை இருந்தது.

இந்தத் தேவையைக் காலம் பிச்சமூர்த்தி வழியாகச் செல்லப்பா மூலம் நிறைவேற்றிக்கொண்டது. ‘எழுத்து’ முதல் இதழுக்காக செல்லப்பா கேட்டிருந்தது, சிறுகதை அல்லது கட்டுரை. கைவசம் அந்த வகையில் எதுவுமில்லை என்ற நிலையில் முன்னர் ‘கலாமோகினி’ இதழில் வெளியாகியிருந்த ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற கவிதையை மறு வெளியீட்டுக்காகக் கொடுத்தார் பிச்சமூர்த்தி. ‘அரைச் சம்மதத்துடன் அதை வெளியிட்டேன்’ என்கிறார் செல்லப்பா. அபிமான எழுத்தாளரின் படைப்பு முதல் இதழில் இடம் பெற வேண்டும் என்பதைத் தவிர அதன் பின்விளைவுகள் பற்றிய தீர்மானம் எதுவும் அவருக்கு இருக்கவில்லை. பிச்சமூர்த்தி கவிதை கொடுத்திருக்கிறார் என்பதனால் தானும் கவிதையைக் கொடுத்திருக்கிறார் க.நா. சுப்ரமணியம். ஓர் இலக்கிய வடிவம் மறுமலர்ச்சிக்கு ஆயத்தமாவதன் எந்த அறிகுறியும் இல்லாத சாதாரண நிகழ்வுகளாகவே இவை அமைந்திருக்கின்றன.

‘தமிழில் ஒரு கவியின் குருத்து மனம் புதிய கவிதைக்கு ஏங்கிக் கொண்டிருந்த காலத்தில் பெட்டிக் கடை நாரணன் வெளிவந்தது. இந்தப் புதிய கலையின் வடிவத்தை க. நா. சு. சொற்களால் சொல்ல முயன்று கொண்டிருந்த காலம் அது. சொற்கள் மூலம் வரவிருக்கும் கவிதைகளை அனுமானிக்க முடியாமல் இளைய மனங்கள் திணறிக் கொண்டிருந்த காலத்தில் புதிய கவிதைக்கு வெளிச்சம் வீசுவதுபோல் இந்தக் கவிதை ‘எழுத்து’வில் மறுபிரசுரமாயிற்று. காய்ந்த புதரில் தீப்பற்றிக்கொண்டதுபோல இந்தக் கவிதை எண்ணற்ற மனங்களைப் பாதித்தது’ என்கிறார் சுந்தர ராமசாமி ( ந. பிச்சமூர்த்தியின் கலை - மரபும் மனித நேயமும்; பக். 75). இந்தப் பாதிப்பு தீவிர வீச்சுக் கொண்டதாக இருந்தது என்று இப்போது உணர முடிகிறது. மாற்றுக் கருத்துகளை முன்வைத்து விவாதித்தாலும் புதுக்கவிதைக்கான களம் உருவாக்கியதும் அதற்கு இலக்கணத்தை உருவாக்கியதும் ‘எழுத்து’ இதழ் என்பது வரலாற்று உண்மை.

இவ்வளவுக்கும் முதலாவது புதுக் கவிதையை வெளியிட்டது ‘எழுத்து’ இதழல்ல. அதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே மணிக்கொடி இதழ் பிச்சமூர்த்தியின் ‘காதல்’ கவிதையை வெளியிட்டு நவீன கவிதையின் பிறப்பை அறிவித்திருந்தது. எனினும் அந்த அறிவிப்பு உடன்பாடான எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. மாறாக எதிர்மறையான கருத்துகளுக்கு உற்சாகமாக இடமளித்தது. கவிதை, செய்யுள் திட்பமான நுண்ணுணர்வு கொண்டிருந்த புதுமைப்பித்தன் ‘கோவேறு கழுதை, வெஜிடபிள் பிரியாணி வகையறாக்களுடன் வசன கவிதை’யையும் சேர்த்திருந்தார். ஆகப் பெரிய உரைநடைக் கலைஞரான புதுமைப்பித்தனுக்கும் கவிதை உரைநடையில் இயங்காது என்ற மூடநம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த முரண்நிலை இன்று யோசிக்கும்போது வேடிக்கையாகவும்படுகிறது. இந்த எதிர்மறையான காலப் பகுதியைப் பிற்பாடு இலக்கியச் செயல்பாட்டின் காலமாக மாற்ற முடிந்தது எழுத்து இதழின் சாதனை.

பாரதி, பாரதிதாசன் காலத்துக்குக் கவிதை கைக்கொண்டிருந்த அடிப் படையான இலக்கிய அலகை அவர்களுக்குப் பிந்திய கவிதையுலகம் நழுவவிட்டிருந்தது. வாழ்வனுபவங்களையே எந்தக் கவிதையும் முதன்மையான பேசு பொருளாகக் கருதுகிறது. பிற கவிதைகளைவிடத் தமிழ்க் கவிதை இந்த அலகுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கற்பிக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களிலும் பக்தி இலக்கியக் கவிதைகளிலும் இந்த முக்கியத்துவத்தை அவதானிக்கலாம். வாழ்வின் எளிய கணங்களை நிரந்தரப்படுத்திப் பேரனுபவமாக மாற்றுவதற்கான எத்தனமே தமிழ்க் கவிதை. இடையில் காணாமற்போயிருந்த அல்லது கனவுத் திரைகளால் போர்த்தப்பட்டிருந்த இந்த அலகையே புதுக்கவிதை மீட்டெடுத்தது. அதை நவீனப்படுத்தியது. நவீன மொழியில் சொன்னது. நவீன உத்திகளில் வாசகனுடன் தொடர்பு கொண்டது. இதற்கான களமாக ‘எழுத்து’ இருந்தது. புலமையின் தர்க்கமே கவிதை என்றிருந்த கட்டத்தில் வாழ்வின் சிக்கல்களே கவிதைக்கான பொருள் என்ற இலக்கணத்தை முன்னிறுத்தியது. புதிய கவிதை என்பது வெறும் உருவமாற்றமல்ல; உணர்வுநிலையில் ஏற்படும் மாற்றம் என்று வகைப்படுத்தியது. இதற்கான உந்துதல் மேற்கத்தியச் சிந்தனைகளிலிருந்து பெறப்பட்டது என்பதை இன்று குறையாகச் சொல்லலாம். ஆனால் அது நிகழ்ந்த கால அளவில் அதுதான் பொருத்தமானதும்கூட.

கடந்த நூற்றாண்டின் இடைப் பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள்தாம் புதுக்கவிதையின் உருவையும் உயிரையும் தீர்மானித்தன. அவை தாம் புதிய கவிதைக்கு ஓர் இயக்கவியலை உருவாக்கின. புதுக்கவிதை என்று பின்னர் பெயர் சூட்டப்பட்ட கவிதைக்கு அவையே இலக்கணமும் ஆயின. விடுதலை பெற்ற பின்னர் சமூக வாழ்வில் நேர்ந்த மதிப்பீடுகளின் வீழ்ச்சி, நகரமயமாக்கம், நவீன கல்விமுறை, மனித உறவுகளில் ஏற்பட்ட மாற்றம், அன்றாட வாழ்வின் சிக்கல்கள் - இவற்றைப் புதுக் குரலில் பேச வேண்டிய தேவை எழுந்தது. அதை அதுவரை இருந்த மரபான வடிவங்களில் பேசுவது பொருத்தமற்றதாகவும் இருந்தது. ‘ஒரு காலத்தில் மிகவும் பரவலாகப் புழக்கத்திலிருந்த ஒரு கவிதை வடிவத்தை அதன் காலம் கடந்த பின்னர் பயன்படுத்துவது அங்கத உணர்வுக்கு மட்டுமே உதவும்’ என்ற டி.எஸ். இலியட்டின் கூற்று நினைவுக்கு வருகிறது. நீண்ட காவியங்கள் வெண்பா என்ற பாவகையில் இயற்றப்பட்டன. ஆனால் அந்தப் பாவகையின் பெறுமானம் இல்லாமற்போனதும் அந்த வடிவம் அங்கத உணர்வுக்குப் பயன்பட்டதை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். இதைச் செய்முறையில் நிறுவியவர் புதுமைப்பித்தன். இந்த உணர்வு நிலை மாற்றத்தைத்தான் எழுத்து காலக் கவிதைகள் அடையாளப்படுத்தின.

இன்று யோசிக்கும்போது இரண்டு காரணங்கள் புதுக்கவிதைக்கான உந்துதல்களாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன். பாரதிதாசனின் கவிதை வெளிப்பாடு முழக்கங்களைக் கொண்டது. அவரைப் பின் தொடர்ந்தவர்களும் அவர் வெற்றி பெற்ற அதே வெளிப்பாட்டைப் பின்பற்றினர். கவிதையின் பொது இயல்பே முழக்கம் என்றானது. அன்றிருந்த திராவிடச் சீர்திருத்த மரபுக்கு இந்த வெளிப்பாட்டு முறை உதவிகரமானதாக இருந்தது. வாழ்க்கையின் நவீன சிக்கல்களை இந்த முழக்கங்கள் அடையாளப்படுத்தவில்லை. அனுபவங்களை அடையாளப்படுத்தவில்லை. மாறாகக் கருத்துகளை மட்டுமே முழங்கின. இந்த முழக்கத்துக்கு எதிரான மௌன வாசிப்புக்கு வாசகனை இட்டுச் செல்லும் திசை மாற்றமாகவே புதுக்கவிதை உருவெடுத்திருக்க வேண்டும். இது ஒரு காரணம். அதுவரை கவிதை என்பது சொல்முறை சார்ந்த ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு யாப்பு வடிவங்கள் உதவின. அச்சுத் தொழில் பரவலாகி வாசிப்பு என்பது ஜனநாயகப்படுத்தப்பட்ட நிலையில் கவிதைக்கு யாப்பின் பாரம் தேவையாக இருக்கவில்லை. ஒரு கவிதையை நெட்டுருச் செய்துகொள்ள வேண்டிய தேவை இல்லாமற்போனது. அச்சிடப்பட்ட கவிதைப் பிரதியைக் கைவசம் வைத்திருந்தால் போதும். இது இரண்டாவது காரணம். தவிர இருபதாம் நூற்றாண்டு செய்யுளின் நூற்றாண்டல்ல; உரைநடையின் யுகம். உரைநடை புலமையின் கருவியல்ல; எழுத்தறிவு பெற்ற எவரும் தொடர்பு கொள்ளக்கூடிய ஊடகம். இந்தக் காரணமாகவே கவிதை உரை நடைக்கு இயல்பாகவே பெயர்ந்தது. இந்த வடிவப்பெயர்ச்சிக்கு இயல்பாகவே எழுத்து இடமளித்தது. புலமைசார்ந்த சிறு பான்மையிடமிருந்து மொழிப் பிடிவாதமற்ற இன்னும் கொஞ்சம் பெரிய சிறுபான்மைக்குக் கவிதை நகர்ந்தது. புதிய கவிதை மொழி உருவானது.

எழுத்து பத்திரிகையின் முதல் இதழ் 1959இல் வெளியானது. அந்த இதழில் புதிய கவிதையாக இடம் பெற்றவற்றை ந. பிச்சமூர்த்தியும் க.நா.சு.வும் மட்டுமே எழுதியிருக்கிறார்கள். இரண்டாவது இதழ் அதுவரை கவிதைகள் என்று எதையும் எழுதியிராதவர்களின் படைப்புகளைக் கொண்டிருந்தது. தி.சோ. வேணுகோபாலன், நகுலன், பசுவய்யா ஆகியோரின் கவிதைகள். பின்னர் வந்த இதழ்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வந்திருக்கிறது. நம்பிக்கைக்கு உரிய பல பெயர்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தது. சி. மணி, தர்மூ சிவராமு, எஸ். வைதீஸ்வரன் என்று புது ஆளுமைகள் அறிமுகமானார்கள். ‘1959 ஜனவரியில் ஆரம்பித்து 1970 ஜனவரியில் 119வது காலாண்டு ஏட்டுடன் கிட்டத்தட்ட ஒரு மாமாங்கக் காலம் மாத ஏடாகவும் காலாண்டு ஏடாகவும் நடந்த எழுத்து மறைய நேர்ந்தது’ என்று பின்னர் குறிப்பிட்டார் செல்லப்பா.

விமர்சனத்துக்கு முக்கியத்துவமளிக்கும் இதழாகத் தொடங்கிய ‘எழுத்து’ கவிதையின் நவீன முகமாக மாறியது தற்செயலானது. ஆனால் இந்தத் தற்செயல் விளைவு ஆரம்ப இதழ்களுடனேயே முடிவடையவும் செய்தது. கவிதையின் புது விளைச்சலுக்குக் களமானதை அதன் ஆசிரியரும் அதில் பங்கேற்றவர்களும் புரிந்துகொண்டிருந்தனர். இந்தப் புரிதல் தமிழ்க் கவிதைக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. பத்தாண்டுகளில் சுமார் எழுநூறு கவிதைகளையும் இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுத்து வெளியிட்டதாக ராஜ மார்த்தாண்டன் தனது ‘புதுக்கவிதை வரலாறு’ நூலில் குறிப்பிடுகிறார். ஒரு புதிய இலக்கிய வடிவம் நிறுவப்பட இந்தப் பங்களிப்புகள் ஆதாரமாக இருந்தன. எழுத்து இதழை விமர்சிப்பவர்கள் கூட இந்த ஆதாரத்தைப் புறக்கணிக்க முடியாது என்று தோன்றுகிறது. ‘இலக்கியத் தரமான எத்தகைய புதுச் சோதனைகளுக்கும் இடம் தரும்’ என்று செல்லப்பா பிரகடனப்படுத்திக் கொண்டது ஒப்புக்கு அல்ல என்பதை இன்றைய தமிழ்க் கவிதை ஆர்வலன் ஏற்க வேண்டியிருக்கும். ஏனெனில் இன்று பெருங்கடலாகத் தெரியும் கவிதையின் ஆரம்பத் துளி அதுவே.

கவிதையில் புது முயற்சிக்குப் பங்களித்த முன்னோடிகளை எழுத்துக் கவிஞர்கள் என்ற பொதுப் பெயரில் வகைப்படுத்துவது ஓர் இலக்கிய உபாயம் மட்டுமே. மிகச் சிலரின் கவிதைகளை மட்டுமே இன்னொரு கவிஞரின் கவிதைகளுடன் ஒப்பு நோக்க முடியும். தவிர, மற்ற எல்லாரும் வெவ்வேறு வகையான கவிதைகளையே முயன்றிருக்கிறார்கள். இந்த வகைமைகள் இன்றும் நிலவுகின்றன. கவிதை யாப்பு வடிவத்தில் அமைந்திருக்குமானால் இத்தனை வகைமைகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக் காது. பிச்சமூர்த்தி நடை, சி. மணி நடை, நகுலன் நடை, பிரமீள் நடை, பசுவய்யா நடை என்று இத்தனை கவிதை மொழிகள் சாத்தியமாகி இராது. இவ்வளவுக்கும் இந்தக் கவிஞர்களின் நோக்கும் போக்கும் வேறுவேறானவை. சில சமயங்களில் எதிரெதிரானவை. ந. பிச்சமூர்த்தியின் ஆன்மீக அமைதிக்கு நேர் எதிரானது சி. மணியின் காமமும் நெருக்கடியும் திணிந்த நகரப் பதற்றம். எஸ். வைதீஸ்வரனின் சமகாலப் புதுமையிலிருந்து முற்றிலும் மாறானது பிரமீளின் செவ்வியல் அணுகுமுறை. நகுலனின் உள்முக உரையாடலுக்கு முரணானது பசுவய்யாவின் சக மனித உரையாடல். இந்த நோக்கில் ஓர் இலக்கிய இயக்கம் கோஷ்டிக்கான சங்கமல்ல; தனிக் கலைஞர்களின் கூட்டமைப்பு என்று இதற்குப் பொருள் சொல்லலாமா? புதுக் கவிதையில் இந்தப் பன்முகத் தன்மைக்குக் களம் ஏற்படுத்தியது தான் எழுத்து இதழின் சாதனை.

இந்த வேற்றுமைகளை மீறியும் சில பொதுவான தன்மைகளை எழுத்துக் கவிதைகளில் காணக் கூடும். இதில் எழுதிய பெரும்பான்மையினரும் நவீன முறைக் கல்வியின் சந்ததிகள். நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பயன்படுத்திய மொழி பொது வழக்கிலிருந்து செம்மைப்படுத்தப்பட்டது. மிகச் சிலரைத் தவிர மற்றவர்களின் கவிதைக்களம் பண்பாட்டு அடையாளங்களற்றது. இடங்கள் பிரத்தியேகத்தன்மையில்லாத வரைபடத்தின் சாயல் கொண்டது. இன்று கவிதை இந்தப் பொதுத் தன்மைகளிலிருந்து விடுபட்டு பிரத்தியேகத்தன்மையை வரித்துக் கொண்டிருக்கிறது. எழுத்து இதழில் கவிதை எழுதிய ஒரே பெண் கவிஞரான இரா. மீனாட்சியின் கவிதையை அன்று எந்த ஆணும் எழுதியிருக்க முடியும். ஆனால் இன்றைய பெண் கவிஞர்களின் கவிதையை அப்படிச் சொல்லுவது எளிதல்ல. பிரத்தியேகத்தன்மையையே ஒரு பொது அனுபவத்தின் எல்லைக்குள் கொண்டு நிறுத்தவே இன்றைய கவிதை முயல்கிறது. எழுத்துக் கவிதைக்கும் இன்றைய கவிதைக்குமான காலத்தின் நிர்ப்பந்தம் அது.

கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கியே செயல்படுகிறது. எழுத்துக் காலத்தின் கவிதைகளும் அந்தத் திசையில் செயல்பட்டவையே. எனினும் அன்று மிகப் புதுமையாகத் தென்பட்ட பலவும் இன்று புராதன வஸ்துக்களாகத் தோன்றுகின்றன. எஸ். வைதீஸ்வரனின் கவிதையொன்றில் வரும் ‘மறந்து வைத்த பிளாஸ்டிக் பையாய் மரத்தின் மேல் ஒரு தேன் கூடு’ என்ற அன்றைய புதுமை இன்று எந்தச் சிறப்புப் பொருளையும் தரவில்லை. அன்று எல்லாராலும் பாராட்டப்பட்ட கவிஞரான ஷண்முக சுப்பையா இன்று மறக்கப்பட்டுவிட்டார். பிச்சமூர்த்தியால் தூண்டப்பட்டு, கவிதையாக்கத்தில் ஈடுபட்ட தி. சோ. வேணுகோபாலன் இன்று யார் நினைவிலும் இல்லை. செல்லப்பாவால் நம்பிக்கையூட்டும் கவிஞர் என்று பரிந்துரைக்கப்பட்ட ‘பசப்பல்’ தொகுப்பின் ஆசிரியர் ராஜகோபாலின் கவிதைகள் யாருக்கும் அறிமுகமில்லை. காலத்தின் விமர்சனம் பக்கச்சார்பற்றது தான் போல.

ஆரம்ப காலப் புதுக்கவிதையின் இயல்புகளைப் பேராசிரியர் நா.வானமாமலை ‘புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்’ என்ற நூலில் பட்டியலிட்டிருந்தார். எதிர்மறையான இந்தப் பட்டியலைத் திருப்பிப் போட்டால் உடன்பாடான கருத்துக்கு வந்துவிடலாம். ‘எழுத்து’ காலப் புதுக்கவிதையின் பேசு பொருள்கள் என்று அவர் குறிப்பிட்டவை பின்வருமாறு: 1. வாழ்க்கை மறுப்பு 2. சாவு 3. இணை விழைச்சு 4. நிராசை 5. தனிமனிதம் 6. உணர்வுத்தாரை 7. கவிஞன் தொழில் 8, எழுத்தாளன் தொழில் 9, கோரமான படிமம் உவமை உருவகங்கள் 10. கூடார்த்தம். எழுத்து காலக் கவிதைகள் மட்டுமல்ல எல்லாக் காலக் கவிதைகளும் இந்தப் பட்டியலுக்குள் அடங்கிவிடும். இவற்றை மீறி வாழ்வின் சிக்கல்கள் என்று எதை முன்வைப்பது என்ற கேள்வியும் எழும். இடதுசாரி மனப்பாங்கில் போடப்பட்ட இந்தப் பட்டியல் இன்னொரு அவதானிப்பையும் முன்வைக்கிறது. உலக இலக்கியத்தில் புதிய நோக்குக்கும் புதிய வடிவங்களுக்கும் முதலில் ஆயத்தமானவர்கள் இடதுசாரிகள். ஆனால் தமிழில் மட்டும் ஏன் அப்படி நிகழவில்லை? பழைய வடிவங்களுக்குள் இறைப்பட்டுக் கிடப்பதை பாதுகாப்பானது என்று அவர்கள் கருதியது ஏன்? இதற்கான பதில்களை யோசிக்கலாம்.

எழுத்து இதழில் வெளியான எழுநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் நூற்றுக்குட்பட்ட கட்டுரைகளும் புதுக்கவிதையை ஓர் இயக்கமாக வார்த்தெடுத்தன. எண்பதுகள் வரை தமிழ்ப் புதுக்கவிதை இதன் தொடர்ச்சியாகவே இருந்திருக்கிறது. எழுத்துக் கவிதைகள்மீது புலவர்களும் இடதுசாரிகளும் வைத்த விமர்சனங்களைச் சுமக்க வேண்டியிருந்தது. அதுவரை புதுக்கவிதையும் படித்த நகர மத்திய தர வர்க்கத்தின் மனநிலையின் பிரதிபலிப்பாகவே இருந்தது. எண்பதுகளில் இந்த நிலை மாறத் தொடங்கியது. கவிதை இன்னும் விசாலமான எல்லைகளுக்குள் நுழைந்தது. அதுவரை பின்பற்றப்பட்டு வந்த அழகியல் விதிகள் மாறின. எழுத்து இதழின் சாயல் கலையத் தொடங்கியது. புதுக் கவிதை என்ற பெயரே பழசானது. நவீன கவிதை என்றானது. இன்று அந்தப் பெயரும் அதை ஒட்டிய அடையாளங்களும் உதிரத் தொடங்கியிருக்கின்றன. இன்று எழுத வரும் புதிய இளைஞன் எழுத்து மரபை அறியாமலேயே கவிதை எழுதலாம். ஆனால் அவன் பயன்படுத்தும் கவிதைமொழியை, அழகியல் பார்வையை, உருவாக்கியதில் எழுத்து இதழுக்குக் கணிசமான பங்கு உள்ளது. கவிதையில் அவன் கையாளும் சுதந்திரத்துக்குக் காரணம் எழுத்து இதழ் தோற்றுவித்த இயக்கம். அது அவனுடைய கவனத்தில் பதிந்திருந்தாலும் இல்லாமற் போனாலும் அதுவே நிஜம். இந்தச் சுதந்திரமே ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் அந்த இலக்கியச் சிற்றேட்டை நினைவிற்கொள்ளத் தூண்டுகிறது.

உள்ளடக்கம்