|
தமிழின் முதல் சிற்றேடான ‘எழுத்து’வின் பொன்விழா ஆண்டு இது. 1959இல் தொடங்கிய
இந்த ஏடு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் செயல்பட்டது. வணிக இதழ்கள் புகட்டிய வெகுசன
ருசிக்கும் புலமையாளர்கள் பரிந்துரைத்த பத்திய ரசனைக்கும் மாறாக இலக்கியத்தில்
புதுச் சுவையை உருவாக்க முனைந்தது எழுத்து. ஆசிரியர் சி. சு. செல்லப்பா ‘நடு வகையான,
நிறை குறை இரண்டையும் எடுத்துக் காட்டும் ஒரு ஓட்டப்போக்கே விமர்சனம் ஆகும். இந்த
அடிப்படையில்தான் எழுத்து இயங்கும். இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமாக மாறுபட்ட
கருத்து களுக்கும் களமாக எழுத்து அமைவதுபோலவே இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனை
களுக்கும் எழுத்து இடம் தரும்’ என்று பிரகடனம் செய்திருந்தார்.
விமர்சனத்துக்காகத் தொடங்கப்பட்ட இதழ் தமிழில் புதிய கவிதைக்கான பரிசோதனைக்
கூடமானது.
இந்தப் பரிசோதனைதான் இன்று எழுதப்படும் கவிதைகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ
தூண்டுதலாக இருக்கிறது. ஓர் இலக்கியவாதியின் பிடிவாதமான பத்திரிகை முயற்சி ஒரு
மொழியில் புதுப் போக்கை, நவீன வடிவத்தை உருவாக்கியது என்பது போற்றத் தகுந்த செயல்.
அந்தச் செயலுக்கு
மதிப்பளிப்பவையே இந்த சிறப்புப் பக்கங்கள்.
எழுத்து இதழின் சாதனை தமிழில் புதுக்கவிதைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத்
தந்தது என்பதே. அறுபதுகள் முதல் எண்பதுகள் வரையிலான புதுக் கவிதை முயற்சிகள் எழுத்து
இயக்கத்தின் தொடர்ச்சி. அதைக் கருத்தில் கொண்டு அந்தக் காலப் பகுதியில்
எழுதப்பட்ட சில கவிதைகளை இங்கே மறுவெளியீடு செய்திருக்கிறோம். கவிதையில்
தம்முடையதான மொழியை உருவாக்கிய கவிஞர்கள் சிலர் இதில் இடம் பெறுகிறார்கள். இது ஒரு
கோடிகாட்டல் மட்டுமே.
|