Google   www kalachuvadu.com

தலையங்கம்
வெட்கம் கெட்ட நடிகர்கள்

அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் முன்னாள் மைய அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார்கள். ஈழப் போரால் அகதிகளாக்கப்பட்டுத் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களை அவர்களது வாழ்விடங்களுக்குத் திருப்பியனுப்பக் கோரி உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் ராஜபக்ஷே அரசை வலியுறுத்திவரும் நிலையில் திமுகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைத் தடுப்பு முகாம்களைப் பார்வையிட அழைப்புவிடுத்த, அனுமதித்த இலங்கை அரசின் செயல் 50ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் இலங்கை இனச் சிக்கல் இறுதித் தீர்வை எட்டுவதற்கான ஒரு நடவடிக்கை என்பதான தோற்றம் உருவாக்கப்பட்டது. முகாம்களைப் பார்வையிடவும் அவற்றிலுள்ள மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவவும் தம்மை அனுமதிக்கக்கோரி ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் விடுத்துவந்த கோரிக்கைகளைச் சற்றும் பொருட்படுத்தாத இலங்கை அரசு அவசரஅவசரமாகத் திமுக கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்ததற்கான காரணம் புரிந்துகொள்ள முடியாததல்ல. கடந்த ஜூன் மாதத்தில் முகாம்களைப் பார்வையிட அனுமதி கோரிய கனடாவின் லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாப் ரே உள்படப் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அவர்களைத் தம்மால் கட்டுப்படுத்த முடியாது என ராஜபக்ஷே அரசு நினைத்ததே காரணம்.

கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்துவரும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் போராட்டங்களின் விளைவாகச் சர்வதேசச் சமூகம் ராஜபக்ஷே அரசுக்குக் கடும் நெருக்கடிகளை அளிக்கத் தொடங்கியிருந்தது. சர்வதேச விதிமுறைகளைப் புறக்கணித்துவிட்டுப் போரில் அப்பாவி மக்கள் பாதிப்புக்குள்ளானதற்குக் காரண மானவர்கள்மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறது அமெரிக்கா. தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக அவர்களது வாழ்விடங்களுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தியுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு புனர் வாழ்வுப் பணிகளை மேற்கொள்ளச் சர்வதேசச் சமுதாயத்தை அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளதோடு இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பதைக் குறித்தும் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய பின்னணியிலேயே ராஜபக்ஷே அரசு திமுகக் கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துத் தனக்குச் சாதகமாகப் பரப்புரை செய்ய அவர்களைத் தூண்டியிருக்கிறதோ என்னும் சந்தேகம் எழுகிறது.

கொடநாட்டிலிருந்து திரும்பியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா டி. ஆர். பாலு தலைமையிலான அந்தக் குழுவை ஏமாற்றுக் குழு எனக் கடுமையாக விமர்சித்தார். கருணாநிதியும் அவரது கூட்டாளிகளும் ஒட்டுமொத்தத் தமிழினத்தை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டிய ஜெயலலிதா, அந்தக் குழு திரும்பி வந்ததும் ‘தன் எஜமானர்’ கருணாநிதியிடம் அளிக்கப்போகும் அறிக்கை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதையும் யூகித்துச் சொல்லியிருந்தார். ஜெயலலிதாவின் யூகம் ஒரு தீர்க்கதரிசனம்தான். திரும்பிவந்த குழுவினருக்கு ஜெயலலிதாவின் யூகத்திற்கப்பால் சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லாமல் போய்விட்டன.

அவர்களை வரவேற்பதற்காகத் தன் துணைவியாருடன் சென்னை விமான நிலையத்திற்குப் போன முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா யூகமாகச் சொல்லியிருந்த பல வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. முகாம்களில் உள்ள மக்கள் துன்புறுத்தப்படவில்லையெனவும் அவை சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டே அமைக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்ன கருணாநிதி தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டரை லட்சம் தமிழர்களைத் தங்கக்கூண்டில் வைக்கப்பட்டுள்ள கிளிகளோடு ஒப்பிட்டார். இலங்கை அதிபருக்கு இவ்வளவு ‘இலக்கியத் தரமாக’ப் பேச முடிந்திருக்காது அல்லவா? இதன் மூலம் உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் முகாம்களின் நிலை குறித்து இதுவரை உலகின் முன்வைத்த தகவல்களையும் அவற்றில் அடைபட்டுள்ள சிலரது அனுபவப் பதிவுகளையும் மறுத்து அவர்களைப் பொய்யர்களாக்கி அவமானப்படுத்தியுள்ளார் கருணாநிதி. குழுவின் ஒரு உறுப்பினரும் அவரது புதல்வியுமான கனிமொழி முகாம்களின் நிலை பற்றி நக்கீரனில் மனம் உருகிச் சொல்லியிருக்கும் கருத்துகள் முதல்வரின் கவனத்திற்குச் சென்றனவா எனத் தெரியவில்லை.

குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் அனுபவங்கள் வேறுபட்டவை. அதிபர் மாளிகையில் குழுவினருக்கு விருந்தளித்த ராஜபக்ஷே, திருமாவளவனிடம் “நீங்கள் பிரபாகரனின் நண்பர்தானே, அவரை அழைத்து வரவில்லையா?” எனவும் “நல்ல வேளையாக இறுதி யுத்தம் நடந்தபோது நீங்கள் பிரபாகரனுடன் இல்லை. இருந்திருந்தால்” எனவும் குத்தலாக மிரட்டலாகக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார் திருமாவளவன். அந்தத் தருணத்தில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்குப் பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது என்கிறார் அவர். இலங்கை அதிபரின் இந்தப் பேச்சுத் திமிர்த்தனமானது எனவும் அநாகரிகமானது எனவும் கண்டனம் தெரிவித்திருக்கும் சில தமிழ்ப் பத்திரிகையாளர்கள் ராஜபக்ஷேயின் மீதான தம் அவநம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ஆதாரமாக அவரது இச்செயலை மேற்கோள் காட்டியிருக்கின்றனர். ராஜபக்ஷே அளித்த தேநீர் விருந்தை ஏற்று அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ள முடிந்த டி. ஆர். பாலுவுக்கோ கனிமொழிக்கோ திருமாவளவனை அவமானப்படுத்திய அதிபரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாதது ஏனெனத் தெரியவில்லை. கனிமொழியும் டி.ஆர். பாலுவும் அடைபட்டுள்ள தங்கக்கூண்டு எதுவோ?

சர்வதேசச் சமுதாயத்தின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான கண்துடைப்பு நாடகத்தின் ஒரு பகுதியாகவே தமிழக எம்பிக்களின் இந்தப் பயணம் அமைந்துள்ளதோ என்னும் சந்தேகமும் எழுகிறது. தன் அரசின் கொடூர முகம் முற்றாக அம்பலப்பட்டுவிட்ட நிலையில் ராஜபக்ஷேவுக்கு முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவிப்பது தவிர வேறு வழியில்லை. தமிழ் எம்பிக்களின் கோரிக்கைக்கு இணங்கவே விடுதலை செய்வதான ஒரு மாயையைத் தோற்றுவிப்பதன் மூலம் ராஜபக்ஷே சர்வதேசச் சமூகத்தை ஏமாற்றுகிறார். அதற்குத் திமுக துணை போயிருக்கிறது.

இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்களை ஆறு மாதத்திற்கும் மேலாக எவ்விதமான அடிப்படை வசதிகளுமற்ற முகாம்களில் அடைத்துவைத்து அவர்களின் உடல், மன ஆரோக்கி யத்தைச் சிதைத்திருக்கும் ராஜபக்ஷே அரசு அதற்குப் பொறுப்பேற்கவும் பதிலளிக்கவும் வேண்டும். சர்வதேச அமைப்புகள் முகாம்களைப் பார்வையிடவும் அகதிகளிடம் சுதந்திரமாக விசாரணை நடத்தவும் கூடிய ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் கடந்த ஆறு மாத காலத்தில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் கொடிய முகம் வெளிப்படும். அதற்குக் காரணமானவர்கள் உரிய தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும். ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என இப்பிரச்சினையை விட்டுவிடுவது மனித உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் அபாயகரமானது. இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலம் என வர்ணிக்கப்படும் ஒரு கொடிய யுத்தத்தை நடத்தி லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வைச் சிதைத்தவர்கள் நடத்தும் கண்துடைப்பு நாடகத்தில் கருணாநிதியும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று நடித்திருப்பது வெட்கக்கேடானது.

தடுப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலையைத் தங்கக்கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளிகள் என வர்ணித்திருக்கும் கருணாநிதி விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் திணறிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் துயர் துடைக்க அதே போன்ற முகாம்களை அமைக்கலாம். ஈழத் தமிழர்கள் சர்வதேசத் தரத்தில் வாழும்போது தமிழர்களுக்கும் தங்கக்கூண்டில் வாழும் கொடுப்பினை வேண்டாமோ?

உள்ளடக்கம்