|
மாற்றுக் கருத்துகள் நவீனகால ஒற்றை ஒழுங்கிற்கு எதிரானவை, பன்முகத் தன்மை
கொண்டவை, மையநீரோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபடும் தன்மை கொண்டவை, தடைகளற்ற
கருத்து வெளியீட்டுச் சுதந்திரம், ஒவ்வொன்றின் பின்னாலுள்ள அரசியலை
அம்பலப்படுத்துபவை, முற்போக்குக் குணாம்சங்கள் குடிகொண்டிருப்பவை, வரலாற்றுப்
போக்கில் நிரந்தரப் புரட்சித்தன்மை கொண்டவை என்ற அடைமொழிகளால் செழுமை
சேர்க்கப்பட்டவை. ஆனால் நடைமுறைத் தளத்தில் மயக்கங்களையும் முரண்பாடுகளையும்
கொண்டவர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட சொல்லாக மாற்ற மடைந்துள்ளது என்ற கருத்தே
மேலோங்கியுள்ளது. இதற்குப் புலம்பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்கள் எனத் தம்மைத்
தாமே அழைத்துக்கொள்பவர்களே நீர்வார்த்தும் நிறைபசளை அளித்தவர்களுமாவர். இவர்கள்
பற்றிய அவதானங்களே இங்கே பதியப்படுகின்றது. இவை புலம்பெயர் சூழலுக்கும் அப்பால்
உள்ள சிலரது தலைக்கும் பொருத்தமாக இருந்தால் யாதொன்றும் அறியேன் பராபரமே.
இம்மாற்றுக் கருத்தாளர்களில் பெரும்பாலானோர் பின்நவீனத்துச் சிந்தனை ஒளிவட்டத்துடன்,
தலித்தியப் போர்வையால் தம்மைப் போர்த்திக்கொண்டவர்கள். இவர்களின் கொள்கைப்
பிரகடனத்தின் ஒரு கூறாகவே இந்த மாற்றுக் கருத்து முன்வைக்கப்பட்டு, தம்மை மாற்றுக்
கருத்தாளர்களாகத் தாமே பிரகடனப்படுத்திக்கொண்டார்கள். மையநிலை ஜ் விளிம்புநிலை,
பெரும் கதையாடல் ஜ் சிறுகதையாடல், அநீதிக்கு எதிராக உண்மைகளைப் பேசுதல் எனப் பல
‘கதையாடல்கள்’ முன்வைக்கப்பட்டன.
இவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள். காரணம், அரசியல் சார்ந்து அல்ல.
மாறாக விடுதலைப்புலிகள் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமையினாலேயே. இவர்களில்
பெரும் பாலோர் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட மாற்று இயக்கங்களைச்
சார்ந்தவர்களாகவோ அல்லது அவர்களால் தண்டிக்கப்பட்டு, அவர்கள் இயக்கத்திலிருந்து
வெளியேறியவர்களாகவோ அவர்களால் தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்களாகவோ அல்லது வெளியே
வெளிப்படுத்த முடியாத சாதிய உள்நோக்குக் கொண்டவர்களாகவோ இருக்கலாம்.
அவர்கள்மீதுள்ள மாறாத பகையே இந்தப் போராட்ட எதிர்ப்பு நிலைக்கு வித்திட்டுள்ளது.
இந்தப் பகைக்கு, இவர்கள் தமக்குரிய நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கலாம்.
விடுதலைப் புலிகள் சக இயக்கங்களை அழித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் உண்மையோடு நாம்
இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள்
நிர்மூலமாக்கப்பட்டுள்ளதன் பின் அனைத்தையும் மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கும் அவசியம்
உணரப்படும் இவ்வேளையில், விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரின்
செயற்பாடுகளும் மீள்பரிசீலனைக்கு உட்பட்டே ஆக வேண்டும். தமது சொந்தக் குரோதங்கள்
சார்ந்து தமிழினத்தின் விடுதலையில் பகைத்துக்கொள்ளுதலும் இந்தப் பகையின் வெறியும்
தங்கள் சுய முரண்பாடுகளையே கண்டுகொள்ள முடியாதவர்களாகவும் உண்மையை
மறுப்பவர்களாகவும் இவர்களை மாற்றியுள்ளன.
விடுதலைப்புலிகள் ரெலோ இயக்கத்தை அழித்தபோது, ஏனைய விடுதலை இயக்கங்கள் ஏன்
மௌனமாக இருந்தன? இந்தக் கேள்வியை மாற்று இயக்கங்கள் இப்போதாவது தங்களுக்குள்
தாங்களே கேட்டுக்கொள்ளுதல் நல்லது. ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அதற்கு
எதிராகப் போராடியிருக்க வேண்டாமா? அவ்வாறு முடியாமல் போனதற்கு அவர்கள் அசுர
இராணுவப் பலம் கொண்டிருந்தார்கள் என்பதை விடுத்து, ஒவ்வொரு இயக்கமும் ஏனைய
இயக்கங்களின் அழிவை மனதார விரும்பியிருந்தார்கள் என்பதும் அது அவர்களின் பிரச்சினை;
எம்மோடு அல்ல என்ற அந்த நழுவல்போக்கு மனநிலையும்தான் அவர்களது இணைவைத் தடுத்தன;
அழிவையும் ஏற்படுத்தின. இன்று விடுதலைப் புலிகளின் மறைவிற்குப் பின்னரும் கூட,
திண்ணை காலியாகிவிட்டது, நாம் போய் வசதியாகத் தூங்க வேண்டியதுதான் என்ற அதே பழைய
மனோநிலையைத்தான் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்.
விடுதலைப்புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதாலேயே, தேசியம் என்பது ஒரு கற்பனை, அப்படி
எதுவுமே இல்லை எனக் கூறுகிறார்கள். ஆதாரத்திற்கு, பெனடிக் அன்டர்சனைத் தமக்குத்
துணைக் கழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஓர் இனம் தனது தேசிய அடையாளங்கள் சார்ந்து
அடக்கப்படுகின்றபோது, அந்த இனம் அந்த அடக்கு முறைக்கு எதிராக மேற்கோள்ளும்
அனைத்துப் போராட்டங்களின் சாராம்சமும் தேசியத்திலேயே தங்கியுள்ளது. வரலாற்றில் அது
முற்போக்குத் தன்மை கொண்டதென்ற எளிய உண்மைக்கு அன்டர்சனிடம் போகத் தேவையில்லை.
நமது சொந்த வாழ்வின் நெருக்கடிகளே அதை உணர்த்தும். தேசியம் கற்பனை என்றால் அதைச்
சிங்களப் பெருந்தேசியத்திடமல்லவா கூற வேண்டும்? அடக்கப்படும் தேசிய இனத்திடம்
கூறுதல் எதன் சார்பானது? இன்று நவகாலனித்துவத்தின் நிழல் நகர்ந்துவரும் நிலையில்,
மேற்கு அதைப் பயங்கரவாதம் என்று கூறலாம். ஏனெனில், அதன் நலன் அதில்தான் தங்கியுள்ளது.
எல்லா ஆதிக்க அரசுகளும் விடுதலைப் போராட்டங்களைப் பயங்கரவாதம் என்றுதான்
கூறுகின்றன; கூறும். அரசாங்கங்கள் தங்கள் பயங்கரவாதத்தைப் போர் என்று கூறினால்,
விடுதலைப்போராளிகளின் போரைப் பயங்கரவாதம் என்றுதான் கூறும். அப்படித்தான்
நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.
தேசிய விடுதலைப் போராட்டம் என்ற பெரும் கதையாடலுள் தமிழ் மக்களின் சிறுபான்மையோர்
எதிர்நோக்கும் சாதிய அடக்குமுறை போன்ற பல உரிமை முனைகள் முக்கியத்துவமற்று
மழுங்கடிக்கப்படும் அபாயத்தைச் சுட்டுகின்றனர். உண்மைதான். ஆனால் சிங்களப் பௌத்த
மேலாதிக்க இனவாதத்திற்கு எதிராகப் போராடும் போராட்டத்தை எதிர்த்துக்கொண்டு,
சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டக் கருத்தை எவ்வாறு ஆதரிக்க முடியும்?
தமிழருக்குள்ள உபபிரிவுகளின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தின் அதே விரிவுதான்
தமிழர் தேசிய விடுதலைப் போராட்டமும். இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை. இதில்
ஒன்றை எதிர்த்து, ஒன்றை மறுத்தல் போலியானவை. தமிழின மக்களுள் பல உட்பிரிவு
அடக்குமுறை இருப்பதால், தேசியப் போராட்டத்தை எதிர்க்கலாம் எனில்,
தலித்துகளுக்குள்ளும் பல உட்பிரிவு அடக்கு முறைகள் தாராளமாக இருப்பதனால்,
தலித்தியத்தையும் எதிர்க்கலாமா என்ற நியாயமான தர்க்க முறையை வசதியாக மறந்துவிடுதல்
நியாயத்தின் பாற்பட்டதல்ல.
விடுதலைப்புலிகள் சாதி அமைப்பைக் காப்பவர்கள் என இவர்களால் முன்மொழியப்படுவது உண்டு.
விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சாதி அமைப்பு முறையைப்
பேணியதில்லை. அவர்களது சட்ட அமைவாக்கம் அதற்கு எதிராகவே இருந்தது. அவர்களது
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த மக்களுள் சாதி அகம்பாவம் கொண்டவர்கள்
இருந்திருப்பார்கள். அவர்கள் நடைமுறையில் தங்களுக்குள் சாதிய அமைப்பைப்
பேணியவர்களாகவும் இருக்கலாம். ஆனால் இவை விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதாகவே அறியப்படுகிறது. விடுதலைப்புலிகளால்
கொல்லப்பட்டவர்களில் பல தாழ்த்தப்பட்ட மக்களும் அடங்குவார்கள். அவர்கள் அவர்களது
அரசியல் நோக்கங்களுக்கு எதிரான செயற்பாட்டாளர்களாக இருந்ததனால் கொல்லப்பட்டார்களே
தவிர (இதற்கு இக்கொலைகளை நான் நியாயப்படுத்துகிறேன் என்பதல்ல அர்த்தம்) இவர்கள்
அழுத்தம் கொடுப்பதுபோல் சாதியத்தின் அடிப்படையில் அல்ல. அவர்களது கட்டுப்பாட்டுப்
பகுதிக்குள் நிறையக் கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. சாதியம் பேசியவர்கள்
பகிரங்கமாகத் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் இவர்கள் ஒப்புக்கொள்ள
முன் வருவதில்லை. இந்த உண்மைகளை ஒப்புக்கொள்ளும் அதேவேளை, அவர்களின் ஏனைய தவறுகளைச்
சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதுதான் நியாயமானது. ஆனால் இவர்கள் இவற்றையெல்லாம்
ஒப்புக்கொள்வதனால் தமது இருப்பு நிலைகுலைந்துவிடும் என்ற அச்ச உணர்வுதான் இந்த
உண்மை மறுப்பிற்குக் காரணமாயிருக்கலாம். இவர்களில் சிலர் இந்தியப் பிராமண ஆதிக்க
சக்திகளுக்கு நிகரான சக்திகளாக ஈழப் பிராமணச் சமூகத்தைக் கருதி, புலம்பெயர்
நாடுகளில் பிறப்பினடிப்படையில் பிராமணச் சமூகத்தை எதிர்க்கிறார்கள். இது தமிழகத்தின்
தலித் நண்பர்கள், வழிகாட்டிகள் ஆகியோரைத் திருப்திப்படுத்தும் நிழல் யுத்தமே தவிர
வேறொன்றுமல்ல. இன்னும் சிலர் பிராமணர்கள் முன்னின்று நடத்தும் சமயச்
சடங்குகளுக்குச் சந்தோசமாகச் சென்று வருகிறார்கள். அத்துடன் யாழ்ப்பாண ஆதிக்க சக்தி
எனச் சுட்டும் வேளாளத் தலைமையின் கீழ் சந்தோசமாக இணைந்துகொள்கிறார்கள். இவர்களோடு
தமது தலித்தியத்தையும் சேர்த்து முன்னெடுக்கிறார்கள். இது ஒன்றும் இவர்களுக்குப்
பிரச்சினையாக இருப்பதில்லையானால் இதன் தார்மீக நிலைப்பாடு என்ன? பிறப்பின்
அடிப்படையில் பிராமணர்களை மட்டும்தான் எதிர்ப்பார்களா? இவ்வாறே மாற்றுக் கருத்தாளர்
என இவர்களால் சொல்லிக்கொள்ளப்பட்ட இணையதளம் ஒன்றில் பிரபாகரனையும் ஏனைய சில
இலக்கியக்காரரையும் அவர்களது சாதிப் பெயரால் விளித்து வசவுகளை வழங்கியதன் மூலம் தமது
உன்னத சாதி ‘எதிர்ப்பு’ நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.
உலக நாடுகள், சிறுவர்களைப் படையில் இணைத்துக்கொள்ளப்படுவது பற்றிக் கவலை
தெரிவிக்கும் போது, இவர்களும் விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படைகளில்
சேர்த்துக்கொள்கிறார்கள் எனத் தெரிவித்து சர்வதேசக் குரலோடு தம்மை
இணைத்துக்கொள்கிறார்கள். இந்த நியாயமான கோரிக்கை, அக்கறை (சிறுவர்கள் படைகளில்
பலவந்தமாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு அப்பால், சிலர் தாமாகவே முன்வரக்கூடியதாக
அமையும் ஈழ யதார்த்தச் சூழல் பற்றியெல்லாம் இங்கு இவர்கள் மறந்தும் எங்கும்
குறிப்பிடுவதில்லை என்பதை விட்டுவிடுவோம்.) படையணிகளுக்கு அப்பாலுள்ள
சிறுவர்கள்மீது ஏற்படாமல் போனமை ஏன்? அரசப் படையினரால் சிறுவர்கள்
கொல்லப்படுகையில் இவர்களுக்கு மௌனம் காக்கும் காலமாகிவிடுகிறது. உல்லாசப்
பயணிகளின் பாலுறவிற்குச் சிறுவர்கள் வற்புறுத்தப்படும் சமூகத் தளம் பற்றியெல்லாம்
ஏன் இவர்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை. செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவ,
மாணவிகளை விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று
கூறிக்கொண்டார்கள். முள்ளி வாய்க்காலின் இறுதித் தாக்குதலில் இருதரப்பாலும்
சிறுவர்கள் கொல்லப்பட்டபோதும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்கள் பற்றியே
‘கவலை’யாகப் பேசுகிறார்கள். இவ்வாறே இறுதி யுத்தத்தின்போது மக்கள் விருப்பத்திற்கு
மாறாக விடுதலைப்புலிகள் அவர்களை ஆயுதமுனையில் தடுத்தார்கள் எனக் கண்டித்து
வெகுண்டெழுந்த இவர்கள், இன்று இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முள்கம்பி
வேலி சூழ, துப்பாக்கி முனையில் தடுத்துவைக்கப்படுவது பற்றி வெகுண்டெ ழுவதில்லை.
ஓரிரு இணைய தளங்கள் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்கின்றன என்ற உண்மையையும்
ஒப்புக்கொள்ள வேண்டும். நாளாந்தம் அடிப்படை வசதிகளற்று, மரணித்தும், மரணத்தின்
பிடியில் இருப்பவர்கள் பற்றி இந்த மாற்றுக் கருத்தாளர்களில் சிலர், எல்லோரும்
சௌக்கியமே என்ற விதத்தில் ஒரு அறிக்கைவிட்டார்களே. அதில் தெரிந்ததல்லவா இவர்கள்
நேர்மை, கண்ணியம்! ஈழத் தமிழர்கள்மேல் இனஅழிப்பு நடத்தப்பட்டது என்ற உண்மையைக்கூட
ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள் இவர்கள். இதே போன்றுதான் அரசியல்வாதிகள்,
ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது சார்ந்து வெளியிடும் அறிக்கைகளும் கண்டனங்களும்
தமக்குச் சார்பானவர்களுக்காக மட்டுமே என வரையறை செய்துகொண்டார்கள்.
விடுதலைப்புலிகள் செய்த மாபெரும் அரசியல் தவறு, வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்
சமூகத்தை வெளியேற்றியமை. அது கழுவ முடியாத கறை என்று சொல்லக்கூடியது.
அரசியல்ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே. ஒரு
தனிமனிதன்கூடத் தன் வாழ்விடத்திலிருந்து துரத்தப்படுதலின் துயரத்தை அவனால் மட்டுமே
புரிந்துகொள்ளக்கூடியது. இந்தத் துயர் இனம், மதம், தேசங்கள் கடந்தவை. ‘அவர்கள்
தங்கள் பின்னால் விட்டுச் செல்லப்பட்ட துயர நினைவுகளைச் சுமந்துள்ளார்கள்’.
இத்துயர் சார்ந்து மற்றவர்களின் புரிதல்கள் என்பது முற்றிலும் முழுமையானவையல்ல.
பின்னர் விடுதலைப்புலிகள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலும் துயரம் செறிந்த இந்த
வரலாற்றுப் பதிவு அழிக்க முடியாததுதான். மாற்றுக் கருத்தாளர்கள் இந்தத் தவறை மிகக்
கெட்டியாகவே பிடித்துள்ளனர். உண்மையில், நேர்மையாக இவர்கள் அக்கறை கொண்டிருந்தால்,
1995இன் பின்னர் விடுதலைப் புலிகள் யாழ்ப் பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
பின்னர், அவர்களது மீள்குடியேற்றம் பற்றிப் பேசுதல் வேண்டும். இன்றுவரை,
விடுதலைப்புலிகள் தோல்வியடைந்த பின்னரும் பேசுவதாக இல்லை. நோக்கம், முஸ்லிம்
பிரச்சினையை விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராகப்
பாவிப்பதையே அடிப்படையாகக் கொண்டதே தவிர, அவர்கள் நலன்சார்ந்த அக்கறையால் அல்ல
என்றே கருத வேண்டியுள்ளது.
மனித இனம் சார்ந்து வாழ்புலம் இழந்த துயர் பற்றிய இவர்கள் அக்கறை உண்மையானவையாக
இருந்தால், சிங்களவர்களால் வெளியேற்றப்பட்ட தமிழர்கள் பற்றியும் தமிழர்களால்
வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் பற்றியும் பேசியிருக்க வேண்டும். இவர்கள் அக்கறை
உள்நோக்கம் கொண்டது என்பதை மேலும் உறுதிப்படுத்த சில கசப்பான தகவல்களை முன்வைக்க
வேண்டியுள்ளது. தீபகவாவியில் முஸ்லிம்களது 685 ஏக்கர் காணிகள் 1968இல்; இலங்கை
அரசாங்கத்தால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டு, அவர்கள் அங்கிருந்து
விரட்டப்பட்டார்கள். பின்னர் 1982இல் அறுகம்ப, உல்ல போன்ற பகுதிகளிலிருந்து
துரத்தப்பட்டார்களே, இவை பற்றி ஏன் இன்றுவரை யாரும் அக்கறைப்படவில்லை? 1998
கார்த்திகையில் இந்திய இராணுவம் இருந்த காலத்தில்நு ணிறிஸிலிதி, ஜிணிலிளி,
ணிழிஞிலிதி இணைந்த ஜிழிகி என்ற தமிழ்த் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தாவூர்,
சாய்ந்தமருது ஆகிய இடங்களைச் சேர்ந்த 40 முஸ்லிம் பொலிஸ்காரரை இனம்பிரித்துப்
படுகொலை செய்யவில்லையா? (சேரனின் உயிர் கொல்லும் வார்த்தைகள் பக்: 73) சரி,
காத்தான்குடியில் விடுதலைப் புலிகளால் பள்ளிவாசலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட
முஸ்லிம்களது துயரம் போன்றதுதான், அம்பாறை மாவட்டத்தின் திரியாய் கேணியில்
நடந்தது. 06.08.1990இல் பெரியதம்பிரான் ஆலயத்துள் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்களை
முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் கண்டதுண்டமாக வெட்டி 46 பேர்களைப் படுகொலை
செய்ததுடன் சுற்றியுள்ள வீடுகளுக்குத் தீமூட்டி, அந்தத் தமிழ் மக்கள் விரட்டி
அடிக்கப்பட்டார்களே. கிழக்கில் முஸ்லிம் கிராமங்களை அண்டிய தமிழ்க் கிராமங்கள்
எவ்வாறு முஸ்லிம் கிராமங்களாகப் படிப் படியாக மாற்றப்பட்டதென் பதையும் தமிழ்ப்
பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளாக மாறினது பற்றியும் சிங்கள இராணுவத்தின்
உதவியுடனும் எம்.எஸ். காரியப்பர் அவர் மருமகன் எம்.சி. அகமது ஆகியோர் முயற்சியால்
1965இலிருந்து இவர்களால் அழிக்கப்பட்ட கரவாகு, மீராவோடைக் கிராமம் மற்றும்
மீனோடைக்கட்டுக் கிராமம் இவற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பற்றியும் பேசியாக
வேண்டும். (இந்த விபரங்கள் 2003இல் ‘வீர கேசரி’ வாரப்பதிப்பில் எஸ். ஜெயானந்த
மூர்த்தியால் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பின்னர் அழிக்கப்பட்ட தமிழ்க்
கிராமங்கள் என்ற தலைப்புடன் நூல் வடிவில் வெளிவந்துள்ளது. வெளியீடு: அபிஷா
வெளியீட்டகம், இரத்தினம் வீதி, வாழைச்சேனை.) இதேபோல் கவிஞர் நீலாவணன் பற்றிய
நினைவுக்குறிப்புகளை எழுதிய எஸ்.பொ. அவர்கள் “முஸ்லிம்களுடன் சௌஜன்யமான உறவுகள்
பாராட்டியபோதிலும் முதலியார் காரியப்பரின் தலைமையில் தமிழரது பாரம் பரிய மண்
பறிக்கப்படுவது கண்டு (நீலாவணன்) சினந்தார்” என்று குறிப்பிடுகின்றார் (பக்.107).
இதுதவிர 1964இல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பின் ஐந்து இலட்சம் மக்கள்
அவர்கள் விருப்பின்றி நாடு கடத்தப்பட்டார்களே, ‘சென்றுவருகிறேன் என் ஜென்ம பூமியே
திரும்பவும் உன் வெளிகளில் என்று ஓடி மகிழ்வேனோ’ எனப் பாடிச் சென்றானே வண்ணச்சிறகு
என்ற கவிஞன். இதே துயரம்தான் வடபகுதியிலிருந்து வெளியேறிய சிங்களவர்களுக்கும். இது
பற்றி எல்லாம் இந்த மாற்றுக் கருத்தாளர்கள் ஏன் மனிதாபிமான அடிப்படையில்
பேசுவதில்லை?
இவர்களில் பலர் இலக்கியவாதிகளாகவும் பெண்ணியம் சார்ந்த கருத்துகளால் பூரணமாக
ஆகர்ஷிக் கப்பட்டவர்களாயும் இருக்கின்றார்கள். இவர்கள் இலக்கியச் சந்திப்புகளை
வருடாவருடம் நடாத்தி வருகிறார்கள். ஒற்றைப் பரிமாணத் தன்மைக்கு மாற்றாகப் பன்முகத்
தன்மையை அழுத்திய இவர்களின் ஆரம்ப காலங்களில், இச்சந்திப்புகளில் இலக்கிய விடயங்கள்
சார்ந்த பன்முகப் பார்வைகள் முன்வைக்கப்பட்டன. ஆண்டு பலவாகிய பின்னர் இலக்கிய
விவாதங்கள் குறைந்து அரசியல் உள்நோக்குகள் முன்னிறுத்தப்பட்டன. இலக்கியத் தளம்
விடுதலைப்புலிகளுக்கு எதிரான அரசியல் தளமாக மாற்றம்பெற்றது. இறுதியில்
ஆனந்தசங்கரியைச் சிறப்பு விருந்தினராகக் கொண்டு ஒரு சந்திப்பும் ஒரு ஆலோசனைக்
கூட்டத்தில் ஜே.வி.பி.யின் அங்கத்து வரைச் சிறப்பு விருந்தினராக அழைக்கும்
ஆலோசனையுமாகவும் இன்னொன்று கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சரின் நிழலான ஒருவரின்
ஏற்பாட்டில் ஒரு சந்திப்பாகவும் நடைபெற்றுள்ளது. பிற்காலங்களில் இச்சந்திப்புகளில்
மாற்றுக் கருத்தாளர் உரையாற்றும் போது அவரைப் பேசவிடாது இடைமறிப்பதன் மூலம் தமது
மாற்றுக் கருத்தின் தாராள மகிமையை நிரூபித்துக்கொண்டனர். சன்னியாசிகள் மீண்டும்
சர்வாதிகாரியின் புள்ளியில் வந்து நின்றனர். இந்த இலக்கியச் சந்திப்புப் போன்று
பெண்கள் சந்திப்பும் வருடாவருடம் நடந்துவருகிறது. அரசியல்ரீதியாக இரு சாராரும் ஒரே
கருத்தைக் கொண்டுள்ளனர். அது அவரவர் சுதந்திரம் தான். சொல்லிற்கும் செயலிற்குமான
முரண்பாடே முக்கியமானது. இவர்களது சந்திப்புகளும் ஆரம்பித்த நோக்கிலிருந்து
விலகிவிட்டனவாகவே உணரப்படுகின்றன. ஆரம்பத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட பலர்
பின்னர் நம்பிக்கையிழந்து வெளியேறிவிட்ட சம்பவங்களும் உண்டு. இப்போது இந்த
அமைப்பு, கருத்து வன்முறையாளர்களது ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருப்பதைப் பலரும்
உணர்கிறார்கள்.
இம்மாற்றுக் கருத்தாளர்களின் செயற்பாடுகள் ஜோர்ஜ் ஓவலின் விலங்குப் பண்ணை நாவலையே
நிவைவூட்டக் கூடியது. எந்த வரையறைகளை வகுத்தார்களோ அதே வரையறைகளைத் தாங்களே
மீறினார்கள். பிறப்பின் அடிப்படையில் முழுப்பிராமண சமூகத்தையும் அவர்களது
செயற்பாடுகளையும் எதிர்த்தவர்கள் குமுதம், இந்தியா ருடே போன்ற இதழ்களில்
தாராளமாகவும் மகிழ்ச்சியாகவும் பேட்டி கொடுத்தார்கள். எந்தப் பெரும் கதையாடலிற்கு
எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்களோ அதே பெரும் கதையாடல்களுக்குள் கரைந்தே
போனார்கள். இந்தியா ருடே இதழ்களின் பக்கங்களில் மலத்தை வைத்துத் தம் போர்க்கள
வீரத்தை நிருபித்த தலித் எழுத்தாளர் பின் அதே இதழில் தன் படைப்பைப்
பதிவுசெய்ததன்மூலம் ‘அந்த மலம் நிறைந்த பக்கத்தால் தம் முகத்தைத் துடைத்துக்கொண்ட’
செயலைப் போல்தான் இவர்கள் செயல்களும் அமைந்திருந்தன. உனது கருத்தை நான்
ஏற்காவிட்டாலும் உனது கருத்தைச் சொல்லும் உனது உரிமைக்காக எனது உயிரையும்
கொடுப்பேன் என்ற நவீன வால்டேயர்கள் தமது இணையதளங்களில் அந்த உரிமையை மறுத்து
வருகிறார்கள். இதைவிடத் தமக்குப் பிடிக்காத கருத்தை வெளியிட்ட ஒரு இணையதளத்தை
நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டவர்களில் தொண்ணூறு
வீதமானவர்கள் இந்த மாற்றுக் கருத்தாளர்கள்தான். சிலர் தமக்கெனத் தனியான
இணையதளங்களைக் கொண்டு, வெளியாகும் கட்டுரைகளிற்கு வாசக எதிரொலி என்ற போர்வையில்
தாமே ஐந்து அல்லது ஆறு புனைபெயர்களில் எல்லா வசைகளையும் அள்ளித்
தெளித்துவிடுவார்கள். அரசியல் தளத்தில் பயங்கரவாதி என மற்றவர்களைச் சுட்டிய
இவர்களால் நடாத்தப்பட்ட வெலிகடைச் சிறைச்சாலை படுகொலை நினைவின் முதல்நாள், அதன்
அமைப்பாளர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தப்பெற்று பொலிசாரினாலும்
கைதுசெய்யப்பட்டார். இது தெரிந்தும் பல தலித்திய முன்னோடிகள் பங்குகொண்டார்கள்.
இன்றும் பலர் இங்குத் துப்பாக்கிகளுடன்தான் திரிகிறார்கள். அதற்குப் பதிலாகச் சிலர்
கத்திரிக்கோலுடனும் திரிகிறார்கள். தாங்கள் இலக்கியத்தளத்திலும் பயங்கரவாதிகளாய்
மாறியிருப்பதை இவர்கள் உணர்ந்துகொள்வதே இல்லை. இறுதியில், ஒரு பயங்கரவாத அரசான
சிறிலங்காவின் நிழலில் ஒதுங்கி, அதை நம்பும் அளவிற்கு மாறியுள்ளனர். விளிம்பு நிலை
மாந்தர் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட இவர்கள் சிறிலங்காவின் அரசியல்
கட்சிகளில் ஒன்றாகப் பதிந்துகொண்டதன் மூலம் விளிம்புநிலை அரசியலிலிருந்து மைய
அரசியலுடன் இணைந்து கொண்டார்கள். ஜோர்ஜ் ஒர்வலின் விலங்குப் பண்ணையில் வரும்
All animals are equal but some animals are more equal than others என்ற முடிவிற்குத்தானா இவ்வளவும்!
|