Google   www kalachuvadu.com

மேலும் சில குறிப்புகள்

அக்டோபர் இரண்டாவது வாரம் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் இலங்கைக்குச் சென்று வந்தனர். வன்னிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிட்ட அக்குழுவினர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தம் இலங்கைப் பயண அனுபவங்களைத் தமிழ் ஊடகங்களில் பதிவுசெய்துள்ளனர். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இந்தச் சுற்றுப் பயணம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகளோடு அந்தப் பதிவுகளிலிருந்து சில இங்கே மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.

பொறுப்பாசிரியர்

“இங்குள்ள ஆர்வலர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகளை நான் நம்பத் தயாரில்லை”

நானும், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் பேசி, தி.மு.க., கூட்டணியில் இருந்து 10 எம்.பி.,க்கள் கொண்ட குழுவை அனுப்பினோம். தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சொந்த செலவில், கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை ஐந்து நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இலங்கை முகாம்களில் 2.53 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் துவங்கும் முன் அவர்களை, பழைய வாழ்விடங்களுக்கே அனுப்பிவிட வேண்டும் என, அதிபர் ராஜபக்ஷேவிடமும், அரசுப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடமும், தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். அதை, இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது. இந்தப் பணி, இன்றே துவங்கப்பட உள்ளது என்ற செய்தி, ஆறுதல் அளிக்கிறது. இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற அவகாசம் வேண்டும் என இலங்கை அரசு கோரியுள்ளது ஏற்புடையதே. அதற்காக இந்திய அரசின் உதவியையும் இலங்கை அரசு கேட்டுள்ளது.

‘இந்த உதவியை உடனே செய்தால், இலங்கைத் தமிழர்களின் வேதனை விரைவில் நீங்கும்’ என, நாங்களும் மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டியுள்ளோம். இலங்கை அரசு உறுதியளித்தபடி நடந்துகொள்கிறதா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம். போரால் அனாதையானவர்களையும், ஊனமுற்றோரையும் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளதாக, இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. முகாம்களில் தமிழர்கள் யாரும் சித்திரவதை செய்யப்படவில்லை. அதெல்லாம், ‘போர் நடக்கும்போது அப்பாவிகள் சாவது சகஜம்தான்’ என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா சொன்னபோது நடந்ததுதான். அதன் பிறகு நடக்கவில்லை. முகாம்களில் சிற்சில அசவுகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ‘தங்கக் கூண்டாக இருந்தாலும் கிளிகளைச் சிறைப்படுத்தல் ஆகாது’ என்ற பாரதிதாசன் வரிகளுக்கேற்ப, எவ்வளவு வசதிகள் இருந்தாலும், முகாம்களில் இருந்து தமிழர்கள், தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.

இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருவதை, எம்.பி.,க்கள் குழு விளக்கமாக விவரித்தது. இனி அந்நிலை தொடராது என இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. இதற்கு, இந்தியத் தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் வேதனையைக் கூறுவதாகச் சொல்லி, இங்குள்ள ஆர்வலர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகளை நான் நம்பத் தயாரில்லை.

முதல்வர் கருணாநிதி
தினமலர், சென்னை, 15.10.2009

ஒரு தீர்க்கதரிசனம்

இலங்கை சென்றுள்ள 10 அரசியல்வாதிகளின் சுற்றுப்பயண முடிவு எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடியும். அந்த அரசால் தேர்வு செய்யப்படும் பணியாளர்களான, தமிழக எம். பி.க்கள் மற்றும் அமைச்சர்களிடம் மட்டுமே அவர்கள் பேசமுடியும்.

இந்த ஏமாற்றுக் குழு திரும்பி வந்தவுடன், தங்கள் தலைவர் மற்றும் எஜமானர் கருணாநிதியிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும். மிகக் குறுகிய காலத்தில், தன்னால் எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்வதாக ராஜபக்ஷே மனப்பூர்வமாக உறுதி அளித்ததாகவும், கருணா நிதியின் நிர்வாகத் திறமையையும், தொலைநோக்குப் பார்வையையும், ராஜபக்ஷே அபரிமிதமாக புகழ்ந்ததாகவும் தெரிவிப்பர். இதன் மூலம் கருணாநிதியும், அவரது கூட்டாளிகளும் ஒட்டு மொத்த தமிழினத்தை ஏமாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், ஐம்பது ஆண்டு காலத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டம் என்னவாகும்?

ஜெ. ஜெயலலிதா
எதிர்க்கட்சித்தலைவர்
தினமலர், 14.10.2009

“எங்களை இந்தச் சிறையிலிருந்து விடுவியுங்கள்”

“ஒரு முகாமுக்குள் 8 முகாம்கள் இருக்கின்றன. அத்தனையும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்தால் ஒரு சிறை வளாகம் போலத்தான் தெரிகிறது. எங்களை இந்தச் சிறையிலிருந்து விடுவியுங்கள் என்ற குரல்தான் ஒருமித்து ஒலிக்கிறது. பெரும் மழைக்குத் தாங்காத ஒரு டெண்ட்டுக்குள் 8 பேரும் உட்கார்ந்து, உறங்கி, சாப்பிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை காலம் இப்படியே போகும்? எப்போது நாங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்புவோம்? மாணிக் ஃபார்மிலிருந்து கேட்கும் ஒட்டுமொத்த குரலிலும் ஒலிக்கும் வார்த்தைகள் இதுதான்.

தண்ணீர் கிடைக்கிறதென்றால் அதற்கு ஈடாகத் தங்கத்தைக்கூடத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் முகாமில் வசிக்கும் மக்கள். குடிப்பதற்காகக் கொடுக்கப்படுகிறது தலைக்கு 5 லிட்டர் தண்ணீர். அடுத்த முறை, தண்ணீர் வண்டி எப்போது வரும் என்பது தெரியாததால், நீண்ட கியூவாக நிற்கிறது மனிதப் பேரவலம். குளிப்பதா? அதெல்லாம், 5 நாட்களுக்கு ஒரு முறை நடந்தாலே விசேஷம். குளிக்கும்போது கழற்றும் சட்டையையேதான் குளித்தபிறகும் போட்டுக்கொள்ள வேண்டும். மாற்றி உடுத்துவதற்கு உடைகள் கிடையாது. இதில் ஆண்-பெண் பேதமில்லை. சமத்துவமாக எல்லோரும் அழுக்கு அப்பி, கிழிந்து தொங்கும் உடைகளையே அணிந்திருக்கிறார்கள்.

குளிக்கிறது, கழுவுறது எல்லாமே கஷ்டம்தான். அதுவும் மாதவிலக்கு ஏற்படுற பெண்களின் நிலைமையை விவரிக்கவே முடியாது. தண்ணீர் இல்லாததால சுத்தப்படுத்திக்க முடியல. மாற்றுத் துணியும் இல்லாததால ரொம்பவே கஷ்டப்படுறோம். உடல் அவஸ்தையோடு மன அவஸ்தையும் சேர்ந்துகொண்டு, தற்கொலை பண்ணிக்கலாமான்னு யோசிக்க வைக்குது என்று கதறும் முகாம் பெண்கள், எங்களை இங்கேயிருந்து அனுப்பிடுங்க. நடந்தே கூட சொந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்திடுறோம் என்று சொல்லும்போது வாழ்வின் வலி வெளிப்படுகிறது. தாயின் கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை கதறிக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்க்க முடியாமல் தாயும் கதறிக்கொண்டிருக்கிறாள். அவளுக்குப் புரிகிறது, நிச்சயமாக நீண்ட நேரம் அந்த குழந்தையைத் தன் கையில் வைத்திருக்க முடியாது.

அவள் கை, அந்தக் குழந்தைக்கு அரவணைப்பல்ல. வலியை உண்டாக்கும் அழுத்தம். ஆமாம்... குழந்தையின் உடம்பு முழுக்க வெயில் நேரக் கொப்புளங்கள். இந்த முகாம் கொடுத்திருக்கிற பரிசைப் பார்த்தீங்களாய்யா... இவ்வளவு உஷ்ணத்தை இந்தப் பிள்ளை எப்படி தாங்கும்? வெப்பத்தைத் தணிக்கவைக்கணும்னா நல்லா குளிக்கவைக்கணும். தண்ணி கிடைக்காத இந்த இடத்தில், குளிக்க வைக்க முடியுமா? அதனாலதான் உடம்பு முழுக்க கொப்புளம் வந்து குழந்தை துடிக்குது. என்ன பண்ணுதுன்னுகூட சொல்ல முடியாத புள்ளைக்கு இப்படியொரு கொடுமை எனக் கதறுகிறது பெத்த மனசு.

கனிமொழி, எம்.பி.,
நக்கீரன், 21.10.09

“சிரித்து மழுப்பினேன்”

இறுதி நாளின்போது, பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் நீங்களும் அழிந்திருப்பீர்கள் என்று ராஜபக்சே உங்களை கமெண்ட் பண்ணியிருக்கிறாரே?

திமிர்த்தனமான பேச்சு. புலிகளின் ஆதரவாளன் என்பதால் என்னை நக்கல் பண்ணுவதற்காக அப்படி கமெண்ட் அடித்தார். இதனை நானும் வேறு விதத்தில் நக்கலடித்திருக்க முடியும். ஆனா தேவையற்ற சர்ச்சைகள் என்னால் உருவாக வேண்டாமே என்று நினைத்துதான் சிரித்து மழுப்பினேன். பிரபாகரனின் நண்பர் என்று என்னை ராஜபக்சே சொன்னதற்கு மகிழ்ச்சி.

திருமாவளவன், எம்.பி.
தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள்
நக்கீரன், 21.10.09

ஏக்கப் பெருமூச்சுகளும் முனகல்களும்

வதை முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத்தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது. மக்களிடையே மன அழுத்தங்களும், அச்சமும், பீதியும் மேலோங்கி நிற்கின்றன. அகில உலகத்தையே வியக்க வைத்த, அதிர வைத்த வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எம் தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தனது உறவினர்களைச் சந்திக்கக்கூடப் போக முடியாதபடி முள்வேலிக் கம்பித் தடுப்புகளும், ராணுவத்தின் கெடுபிடிகளும் வாய்திறக்க முடியாத வகையில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மெலிந்த நலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரைதாரையாய் நீர் கொட்டுவதைக் காண முடிகிறது. இரு கைகளையும் கூப்பிக் குனிந்து கும்பிடு போட்டு, “எங்களை ஒட்டு மொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்றுவிடுங்கள் அய்யா!” என்று கண்ணீரைக் கொட்டியபடி சிலர் கதறி அழுதனர்.

இரண்டு பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் எட்டுப் பேர், பத்துப் பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனித நேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டைச் சொற்களால் விவரிக்க முடியாது. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத பெரும் கொடுமையாக உள்ளது.

வதை முகாமில் சிக்கி அவதிப்படுவோரை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்தம் மறுவாழ்வு மற்றும் மறுக்கட்டுமானப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்பதும், இன்றியமையாத ஒன்று என்றாலும், தவிர்க்க முடியாத உடனடி தேவைகள்தான் என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியதும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த வகையில் நெஞ்சிலே ஈரமில்லாத, ஈவிரக்கமில்லாத சிங்கள இனவெறி ஆட்சியாளர்களைக் குறிப்பாக, ராஜபக்சே சகோதரர்களை சர்வதேசப் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும், சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டுமெனவும், இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

திருமாவளவன், எம்.பி.
மாலை முரசு, 19.10.2009

இகழ்பவனின் பின்னால் போய்

விடுதலைப்புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச ‘உன் கதையையும் முடித்திருப்பேன்’ என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?

“ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்து விட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒருநாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை” என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு வந்திருந் தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, ‘ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்’ என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்றுகொண்டு, ‘இரத்தம் கொதிக்கிறது’ என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்துகொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், ‘நன்றாக இருக்குமா?’ என்று திருமாவளவனாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! “என் மற்று இகழ்வார் பின்சென்று நிலை” (966).

பழ. கருப்பையா,
தினமணி, 21.10.2009

உள்ளடக்கம்