Google   www kalachuvadu.com

கட்டுரை
“தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்”
அநாமதேயன் குறிப்புகள்

குறிப்பு(1)

வன்னியில் இறுதிக்கட்டப் போர் நடந்துகொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் அரசினாலமைக்கப்பட்ட 33 நலன்புரிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பெய்து ஓய்ந்த மழை அவர்களின் வாழ்க்கை நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. வடகீழ்ப்பருவப் பெயர்ச்சி மழை பொழியத் தொடங்கினால் வெள்ளம் தேங்கி நிற்கக்கூடிய தாழ் நிலப் பகுதியிலேயே இத்தகைய நலன் புரிமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பருவமழை ஆரம்பித்ததால் இம்முகாம்களில் மக்கள் தங்கியிருக்கவியலாதென்றும் சுகாதாரம் மோசமாகவுள்ள இச் சூழல் மழைக்காலத்தில் தொற்று நோய் பரவும் அபாயத்தைத் தோற்றுவிக்குமென்றும் சில அரச சார்பற்ற அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. வழமை போல் மஹிந்த அரசு இதையும் பொருட்படுத்தவில்லை. இப்போது இந்நலன் புரிமுகாம்கள் தண்ணீரில் மிதக்கின்றன. அநேகமான பகுதிகளில் இடுப்பளவிற்கு நீர்மட்டமுயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆழங்குறைந்தவகையில் தோண்டப்பட்டுத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மலக்குழிகள் சிதைந்து கழிவுகள் மேலோங்கி மிதக்கின்றன. இதனால் நலன்புரி முகாமில் வசிக்கும் மக்கள் சுகாதாரச் சீர்கேட்டிற்கும் தொற்றுநோய் அபாயத்திற்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. வெள்ளம் வடியும்வரையாவது இப்பகுதிகளை விட்டு வெளியேறி உயரமான பகுதிகளில் தங்கியிருக்கவும் முகாம்களைச் சுற்றிக் கடமையிலீடுபட்டிருக்கும் படையினர் அனுமதி வழங்காத நிலையில் இரவில் உறங்குவதுகூடச் சாத்தியமின்றிப் போயுள்ளது. மேலும் சமையலுக்கு வழங்கப்பட்டிருந்த விறகும் மழையில் நனைந்திருப்பதால் சமைத்து உண்பதற்கும் வழியில்லை. இதுதவிர நலன்புரிமுகாம்களுக்கான போக்குவரத்துப்பாதையும் சேறாகியிருப்பதால் வாகனங்கள் இப்பாதை வழியே செல்ல முடியாத நிலையில் வாகன மூலமாக நலன்புரிமுகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த தூயகுடிநீர் கிடைக்கும் சாத்தியமுமின்றி மக்கள் பெருமவதிக்குள்ளாகியுள்ளனர்.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துப் பயங்கரவாதத்திற்கெதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் எனத் தொடர்ந்து வீரமுழக்கமிட்டுவரும் பேரினவாத அரசானது நலன்புரிமுகாம்களில் அடைத்துவைத்திருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கவில்லை. இது பற்றிய தீவிர அக்கறை மஹிந்த அரசிடமில்லையென்பது மட்டுமல்ல அதற்கான நிதிப்பலமும் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நலன்புரிமுகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மஹிந்த அரசு முன்னெடுத்திராத நிலையில் மக்களுக்குத் தேவையான கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பே விநியோகித்து வருகிறது.

இம்மக்களுக்கான உணவுப் பொருட்கள் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுகிறது. எனினும் இவ்விநியோகம் நேரடியாக இடம்பெறுவதில்லை. இராணுவத்தின் மூலமாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதாவது நேரடி விநியோகத்திற்கு இராணுவம் அனுமதிப்பதில்லை. இவ்வாறான உணவு விநியோகத் திட்டத்திற்கும் சருவதேசமட்டத்திலிருந்து போதுமான நிதி கிடைக்காத நிலையில் விநியோகிக்கப்பட்டுவரும் உணவுப் பொருட்களின் அளவை ஐம்பது சதவிகிதம் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பானது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மஹிந்த அரசானது ‘புனர்வாழ்வு முகாம்களிலுள்ள மக்களின் அவலநிலைக்கு ஐக்கிய நாடுகள் சபைதான் காரணம்’ எனக் குற்றம் சாட்டியுள்ளமை நகைப்புக்குரியது. அதேநேரம் கோத்தபாய ராஜபக்ஷ சொல்லியிருப்பதைக் கேளுங்கள். ‘தமிழர்கள் எங்களது மக்கள். அவர்களை எப்படிப் பாதுகாப்பதென எங்களுக்குத் தெரியும். அவர்கள் வாழ்ந்த இடங்களில் இப்போதே மீளக்குடியமர்த்த முற்பட்டால் அங்கே புதைத்துவைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் யார் பதில் கூறுவது? நாங்கள்தானே? தவிரவும் அவர்களிடையே தந்திரமாகப் பதுங்கியுள்ள புலிப்பயங்கரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யும்வரை மீளக்குடியமர்த்துவது பற்றிச் சிந்திக்க முடியாது. அவர்களை இப்போதே வெளியில் விட்டால் வன்னிக்காடுகளுக்குள் புதைத்துவைத்திருக்கும் ஆயுதங்களைத் தோண்டி எடுத்து மீண்டும் போரைத் தொடக்கிவிடுவார்கள்.’ தமிழர்கள்பால் கோத்தபாய போன்றோர் எந்தளவுக்குக் கருணையும் இரக்கமும் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே தக்க சான்றல்லவா? அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்?

‘விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம். புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டுவிட்டோம்’ என அரசின் படைத்துறைத் தளபதி சரத்பொன்சேகர வீரமுழக்கமிட்டார். ஆனால் திரும்பவும் அரசாங்கம் புலிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. இங்கே இன்னொரு முக்கியமான பதிவை மேற்கொள்ள வேண்டும். முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மக்களில் 24,000 பேர் வரையான இளம் வயதினரைத் தனித்தொகுதியாகப் பிரித்து, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தோர் என முத்திரையிட்டுச் சித்திரவதைக்குட்படுத்தி வருவதாகவும் அப்பகுதிக்கு வெளியார் எவரும் நுழைய முடியாதபடி பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதைத் தவிர மேலும் 3,000 அளவிலான பெண்கள் அவர்களது குடும்பத்திலிருந்து பிரித்துத் தனியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனரென்றும் அவர்களுக்கு நேர்ந்ததென்னவென்பதை இதுவரை அறிய முடியவில்லையென்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்நலன்புரி முகாம்களிலிருந்து 50,000 பேர்வரை காணாமல் போயிருப்பதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கும் நிலையில் அரசாங்கமானது ஆரம்பக் கணக்கெடுப்பில் தவறுகள் நேர்ந்திருக்கலாமென்றும் காணாமல்போனவர்கள் பற்றிய தகவல் பொய்யானது என்றும் அப்படிக் காணாமல் போயிருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் தப்பித்துச் சென்றிருக்கக் கூடுமென்றும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் புலிகளுடன் நேரடித் தொடர்புடையோர் படையினருக்குப் பெருந்தொகைப் பணம் கொடுத்து முகாம்களிலிருந்து வெளியேறி அரச பாதுகாப்புடன் கொழும்பிற்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் பிரபாகரனுக்கு வைத்தியம்செய்த ஆண்தாதியொருவர் இவ்வாறு வெளியேறிச் சென்று கொழும்பில் கைதானதும் குறிப்பிடத்தக்கது.

போர் முடிவுக்கு வந்துவிட்டதெனக் கூறப்படும் நிலையில் அப்பகுதிகளுக்கு எந்தவொரு ஊடக அமைப்பையும் அரசாங்கமானது சென்றுவர அனுமதிக்கவில்லையென்பதை அம்னெஸ்டி மட்டுந்தான் கண்டனம் செய்துள்ளது. சர்வதேச அமைப்புகள் இது போன்ற மஹிந்த அரசின் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கான தமது கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறி மௌனம் சாதித்து வருகின்றன. இந்நலன்புரிமுகாம்கள் தொடர்பான விவகாரத்திலும் இந்த மௌனம் தொடர்ந்தால் அங்கே தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சுகாதாரச் சீர்கேடுகளின் விளைவாகத் தொற்றுநோய்த் தாக்கத்திற்குள்ளாகிச் செத்துமடிவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.

குறிப்பு (2)

கடந்த ஓகஸ்ற் மாதம் எட்டாந் திகதி நடந்து முடிந்த யாழ் மாநகர சபை, வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களினது நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பையும் மிகத் தெளிவாகக் காட்டுவதோடு மஹிந்த அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதையும் அறிய முடிகின்றது. எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக இத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதோடு அற்பசொற்ப சலுகைகளுக்கோ அன்றி. அச்சுறுத்தல்களுக்கோ பணிந்துவிடமாட்டோம் என்பதைத் தொடர்புபட்ட கட்சியினருக்குத் தமிழ் மக்கள் உணர்த்தியுள்ளனர்.

யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்கிய ஈபிடிபி கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இத்தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்து வெளியிட்டபோது ‘யாழ் மாநகர சபைத் தேர்தலில் தோல்வியையும் வவுனியா நகர சபைத் தேர்தலில் படுதோல்வியையும் சந்தித்துள்ளோம்’ எனப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் இத் தேர்தலில் அவரது கட்சியிலிருந்து 20 உறுப்பினர்கள் போட்டியிட்டனர். 17 ஆசனங்களைக் கைப்பற்றலாமென டக்ளஸ் கனவு கண்டிருந்தார். வவுனியா நகரசபைத் தேர்தலைப் பொறுத்தவரை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் -இவர் டி. சிவராம் (தராக்கி) என்ற அரசியலாய்வாளரின் கொலைச் சம்பவத்துடன் நேரடித் தொடர்புள்ளவரெனச் சந்தேகிக்கப்பட்டு வருபவர்-கருத்துத் தெரிவிக்கும்போது ‘இதுவரை எம்வசமிருந்த வவுனியா நகரசபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது. புலிகள்மீது அனுதாபங்கொண்டிருப்போர் புலிச்சார்புக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்’ என அங்கலாய்த்துள்ளார். தவிரவும் ‘வவுனியா நகரசபைத் தேர்தலில் எமது கட்சியே வெற்றியீட்டுமென எதிர்பார்த்திருந்தோம். எனினும் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தன்று பிற்பகல் ஒருமணிக்குப் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் எமது வெற்றிக்குப் பாதகமாக அமைந்துவிட்டிருந்தன. அதாவது எங்களுக்கான வாக்குவங்கிகள் உள்ள இடங்களில் ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்ற தமிழ்க் கட்சிகள் காவல் துறையினருடன் வந்து மக்களை மிரட்டி வாக்களிக்காமல் செய்துவிட்டார்கள். இதனால் எங்களுக்கான 1,000 வாக்குகளை இழந்துவிட்டோம். எனவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 143 வாக்குகளால் தோற்றோம். இல்லாவிடின் ஆறு ஆசனங்களைப் பெற்று வவுனியா நகரசபையைக் கைப்பற்றியிருப்போம்?, எனவும் சித்தார்த்தன் அறிக்கை விடுத்துள்ளார். இத்தருணத்தில்,

‘வவுனியாவில் புளொட் இயக்கம் ஆயுதக் குழுவாகச் செயற்பட்டுவருவதனால் அங்கே சுதந்திரமான தேர்தலை நடத்தும் சாத்தியமில்லை. மக்கள் வாய்திறக்க முடியாத நிலைமையே அங்கே காணப்படுகிறது. இதையும் மீறி மக்கள் வாய்திறந்தால் எத்திசையிலிருந்து துப்பாக்கிக் குண்டு வருமோ என்ற பீதியுடனேயே காணப்படுகின்றனர். இது குறித்து நாங்கள் காவல் துறையினரிடம் முறையிட்டபோதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர் தயாசிறிஜயசேகர இத்தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவாதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தர்மலிங்கம் சித்தார்த்தன் சொல்வதைப் போல மக்கள் மிரட்டப்பட்டிருந்தால் வவுனியாவில் அரச சார்புடைய தமிழ்க் கட்சிதான் நகரசபையைக் கைப்பற்றியிருக்க வேண்டும்? ஆனால் அரசுடன் எந்தவிதத்திலும் சார்பில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகரசபையைக் கைப்பற்றியுள்ளது. தவிரவும் சித்தார்த்தன் சொல்வதை வைத்துப்பார்த்தால் அரச சார்புடைய தமிழ்க் கட்சிகள் காவல் துறையினருடன் சேர்ந்து புளொட் இயக்கத்திற்கு மக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கச் செய்திருப்பதாகவும் கருதலாம். வவுனியா நகரத்தைத் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் புளொட் அமைப்பிற்கே அரசாங்க சார்புக் கட்சிகளும் காவல் துறையும் சேர்ந்து நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருப்பதாக சித்தார்த்தன் கூறுகிறார். அவ்வாறெனில் எந்தவொரு செல்வாக்கையோ ஆதிக்கத்தையோ கொண்டிராத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் தேர்தல் காலத்தில் எந்தளவிற்கு அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்குமென்பது உய்த்துணரப்பட வேண்டியதொன்று.

யாழ் மாநகர சபையைப் பொறுத்தவரையில் 1975 காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் அதன் மேயராகவுமிருந்த அல்பிரட் துரையப்பா 27.07.1975 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் 1998 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் சரோஜினி யோகேஸ்வரன் யாழ் மாநகர சபை மேயராக நியமிக்கப்பட்டார் (தேர்தல் நடைபெறவில்லை). 1998 மே 17 அன்று சரோஜினி யோகேஸ்வரன் அவரது வீட்டில்வைத்து சங்கிலியன் படை என்ற அமைப்பால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் பி. சிவபாலன் யாழ் மாநகர சபை மேயராக நியமிக்கப்பட்டார் (தேர்தல் நடைபெறவில்லை). 1998 செப்ரெம்பர் 11 அன்று யாழ் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதையடுத்து என். ரவிராஜ் யாழ் மாநகர சபை மேயராக நியமிக்கப்பட்டார். பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானதையடுத்து யாழ் மாநகர சபை மேயராகச் செல்வன் கந்தையன் நியமிக்கப்பட்டார். அவர் பதவி வகித்த காலத்திலேயே யாழ் மாநகர சபை கலைக்கப்பட்டதுடன் விசேட ஆணையாளருடைய அதிகாரத்தின் கீழ்க்கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் 11 வருடங்கள் கழித்து கடந்த ஓகஸ்ற் மாதம் எட்டாந்திகதி யாழ் மாநகர சபைத் தேர்தல் நடை பெற்றுள்ளது. அதேநேரம் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டு 34 வருடங்களுக்குப் பின் இப் போதுதான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 ஆசனங்களைப் பெற்று யாழ் மாநகர சபையைக் கைப்பற்றியுள்ளது.

அண்மைக்காலங்களில் தனது மிக மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளால் சருவதேசரீதியாக வெறுப்பைச் சம்பாதித்திருக்கும் மஹிந்த அரசானது யாழ் மாநகர சபைத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளின்போது வன்முறைகளைத் தவிர்த்து நிதானமாகச் செயற்பட்டது. சருவதேசத்தினதும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களினதும் அபிமானத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தந்திரோபாய நகர்வுகளில் கவனஞ்செலுத்தியது. இதன்விளைவாகத் தேர்தலுக்கான நாள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் யாழ்ப்பாணம் எத் திசையிலிருக்கிறது என்பதை முன்பின் அறிந்திராத சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிக் கூட்டங்கூட்டமாகப் படையெடுத்த அதிசயம் நிகழ்ந்தது. யாழ்ப் பாணத்தைச் சுவர்க்க பூமியாக்கப்போவதாக இவ்வமைச்சர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசினர். ஏ-9 நெடுஞ்சாலை போக்குவரத்துக்கெனத் திறக்கப்பட்டது. மீன்பிடிதொடர்பான தடைகள் நீக்கப்பட்டு ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பொருட்கள் தாராளமாக எடுத்துவரப்பட்டன. ஊரடங்குச் சட்டம் இரவு வேளையில் 9:00 மணிக்கு அமல் செய்யப்பட்ட நிலைமாறி 11:00 மணிக்கு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மக்கள் ஆகக்குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வசதியாக கஸ்தூரியார் வீதியில் ‘சதோச’ எனும் அரச விற்பனை நிலையக் கிளை திறக்கப்பட்டது. வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் அழைத்துவரப்பட்டுப் பிரதேசச் செயலகங்களின் மூலமாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். மேலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கப்போவதாக அறிவித்து விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அமைச்சர்களில் ஒருவரான மஹிதானந்த அழுத்கமகே யாழ்ப்பாணத்துப் பெண்ணையே திருமணம்செய்யப்போவதாக இன்ப அதிர்ச்சியளித்தார். அரச சார்பு ஊடகங்கள் யாழ்ப்பாணம் சுவர்க்க பூமியாக மாறிவருவதாகவும் அங்கே ‘வடக்கின் வசந்தம்’ ஆரம்பித்து விட்டதாகவும் இயல்புவாழ்க்கை திரும்பிவிட்டதாகவும் யாழ்ப்பாண மக்கள் மஹிந்தவைத் தெய்வமாகப் போற்றுவதாகவும் பிரச்சாரத்தை முழுமூச்சாகப் பரப்பிக்கொண்டிருந்தன. தென்னிந்திய மற்றும் சிங்கள நடிகைகளோடு வந்த இசைக்குழு துரையப்பா ஸ்ரேடியத்தில் குத்தாட்டம் போட்டது. வீதிகள் புனரமைக்கப்பட்டன. புதிய தொழில் நிறுவனங்கள் திறந்துவைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அமைச்சர்கள் மக்களோடு மக்களாகச் சங்கமமாயினர். நல்லூர் கந்தசுவாமி கோயில் வீதியெங்கும் அமைச்சர்கள் வலம்வந்தனர். இந் நடவடிக்கைகள் மூலமாக ஆளுந் தரப்பு யாழ்ப்பாண மக்களிடம் மாநகர சபைத் தேர்தல் வெற்றிக்காகக் கையேந்திநின்றது.

வழமையாக ஒவ்வொரு தேர்தலிலும் வீணைச் சின்னத்தில் போட்டியிட்டுவந்த டக்ளஸ் தேவானந்தாவின் ணிறிஞிறி கட்சியை மஹிந்த அரசானது இம்முறை வீணைச் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தடைவிதித்து தனது வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிட அனுமதித்தது. (டக்ளஸ் தேவானந்தா இதற்கு எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. இப்போதுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ என்ன செய்யச் சொன்னாலும் டக்ளஸ் தேவானந்தா மறுப்பேதும் சொல்லாமல் செய்யக்கூடிய நிலையிலேயே இருக்கிறார். புலிகள் இருந்தவரைக்கும் மஹிந்தவுக்குப் புலி எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதில் டக்ளஸ் தேவானந்தா பிரதான பங்குவகித்தார். புலிகளை முழுமையாக அழித்துவிட்ட நிலையில் இனிப் புலி எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க வேண்டியதில்லை. எனவே டக்ளஸ் தேவானந்தா மஹிந்தவுக்கு இப்போது முக்கியமானவரல்ல. இதை டக்ளஸ் நன்குணர்ந்துள்ளார். அண்மையில் ‘ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி’ (EPDP) என்பதிலுள்ள ‘ஈழ’ என்னும் சொல்லை நீக்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு டக்ளஸ் சிரித்த முகத்துடன் சம்மதித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது). அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ ‘ஹிந்து’விற்கு அளித்திருந்த பேட்டியில், ‘தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதை நிறைவேற்றுவது முடியாத காரியம். அடுத்துவரும் பொதுத்தேர்தலின் பின்புதான் நான் அரசியல் தீர்வு குறித்துச் சிந்திப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அவர் வெளியிட்டிருந்த கருத்து வெளிப்பாட்டின் பிரதிபலிப்பு யாழ் மாநகர சபைத் தேர்தலின் வாக்களிப்பில் தெரிந்தது. யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 1,00,417 வாக்காளர் இருந்தனர். இதனடிப்படையில் 23 ஆசனங்களுக்குப் போட்டியிடும் ஏனைய கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுயேட்சைக் குழு-1 தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சுயேட்சைக் குழு- 02 ஆகியவற்றைக் காட்டிலும் மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது ஆகக்கூடுதலான ஆசனங்களைக் (17) கைப்பற்றலாமென எதிர்பார்த்திருந்தது. ஆனால் 22,280 வாக்காளர் மட்டுமே வாக்களித்தனர். (மீதமான 78,137 வாக்காளரும் இத் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர் என்பதை இங்கே கவனத்திற் கொள்வது அவசியம்). இவர்களில் 10,602 வாக்காளரே மஹிந்தவின் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்திருந்ததுடன் 8,008 வாக்காளர் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் மஹிந்தவின் கட்சி 13 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களைக் கைப்பற்றி மஹிந்தவைத் திகைப்பிலாழ்த்தியது. பதிவுசெய்யப்பட்ட வாக்காளரில் 18 சதவிகிதமானோரே வாக்களித்திருந்தனர் என்ற அடிப்படையில் இத்தேர்தலானது யாழ்ப்பாண மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட தேர்தலாகவே கருதப்படுகிறது. அதாவது இத்தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் அக்கறைகொண்டிருக்கவில்லையென்பதும் அரசின்மீது நம்பிக்கையிழந்துவிட்டனரென்பதையும் இவ்வாக்களிப்பு சதவிகிதமானது தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. பிறிதொருநோக்கில் வன்னியில் நிகழ்ந்த மனிதப் பேரவலம், மூன்று இலட்சம் சகோதர உறவுகள் நலன்புரிநிலையங்களில் நாளாந்தம் எதிர்கொள்ளும் அவலம், யாழ்ப் பாணத்தில் நிகழ்ந்த படுகொலைகள், ஆள்கடத்தல், கப்பம்கோருதல் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும்பங்கு வகித்த மஹிந்த அரசின் மீது தமது நியாயமான எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஓர் அரிய வாய்ப்பாகவே யாழ்ப்பாண மக்கள் இம்மாநகர சபைத் தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டனர் எனலாம். மேலோட்டமாகப் பார்த்தால் நிர்ணயிக்கப்பட்ட 23 ஆசனங்களில் மஹிந்தவின் கட்சி 13 ஆசனங்களைப் பெற்று இம்மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகத் தோன்றியபோதும் வாக்களிப்பு சதவிகிதம் மற்றும் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்குகள் என்பவற்றுடன் ஒப்பிடும்போது மஹிந்த அரசு உண்மையில் இத்தேர் தலில் தோல்வியையே சந்தித்துள்ளது. இத்தேர்தல் முடிவு குறித்துக் கருத்து வெளியிட்ட ஆளுங்கட்சியின் அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, ‘யாழ் மாநகர சபைத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவை வீணைச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்திருந்தால் இன்னும் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கலாம்’ எனக் குறிப்பிட்டது யாழ்ப்பாண மக்கள் மஹிந்த அரசை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதன் வெளிப்பாடாகவே கொள்ளப்பட வேண்டும்.

வவுனியா நகர சபைக்கான தேர்தல் 1994 காலப்பகுதியில்தான் இறுதியாக நடைபெற்றிருந்தது. இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (PLOT) போட்டியிட்டு ஏழு ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியது. இதிலிருந்து அண்மைக் காலம்வரை வவுனியா நகரம் றிலிளிஜி அமைப்பினரின் முழு ஆதிக்கத்திலிருந்து வந்துள்ளது. கடந்த ஓகஸ்ற் மாதம் எட்டாந்திகதி நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளதுடன் றிலிளிஜி அமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளதுடன் மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. யாழ் மாநகர சபைத் தேர்தலிலும் வவுனியா நகரசபைத் தேர்தலிலும் போட்டியிட்ட ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்றாமல் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளமையும் இங்கே குறிப்பிட வேண்டியதாகும். 24,626 வாக்காளர் பதிவு செய்யப்பட்டிருந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் 12,850 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இதில் 4,279 வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 4,136 வாக்குகளை புளொட் அமைப்பும் 3,045 வாக்குகளை மஹிந்தவின் கட்சியும் பெற்றிருந்தன. இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் மஹிந்தவின் கட்சியானது இத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காகப் பாரிய அளவில் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய சூழல் இருந்திருக்கவில்லை. பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இக்கட்சியானது தேர்தல் பிரச்சார நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் இத்தேர்தல் முடிவுகள் மூலமாக வடக்கில் இயல்புநிலை திரும்பிவிட்டதென்றும் தமிழ் மக்கள் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துவிட்டதால் எமக்குப் பேராதரவு நல்கியுள்ளார்களென்றும் வெளியுலகிற்குக் காட்டமுயன்ற மஹிந்த அரசானது இவ்விருதேர்தல் முடிவுகளாலும் திகைப்படைந்துள்ளது. வவுனியாவைப் பொறுத்தவரையில் புனர்வாழ்வு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்கள் தொடர்பாக மஹிந்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளாலும், மனிதாபிமானமற்ற செயற்பாடுகளாலும் வெறுப்பும் விரக்தியுமடைந்துள்ள மக்களின் உணர்வு வெளிப்பாடாகவே அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளதைக் கருத வேண்டும். முன்னைய காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் வெற்றியீட்டியபோது புலிகளின் மோசடியால் ஏற்பட்ட வெற்றியெனக் கூறிவந்த அரசானது இப் போது புலிகளை முற்றாக ஒழித்துவிட்ட நிலையில் இவ்வெற்றிக்கு எக்காரணமும் கூற முடியாது விழிபிதுங்கி நிற்கிறது.

குறிப்பு (3)

அண்மையில் மஹிந்த அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் சனல்-4 எனும் பிரித்தானியத் தொலைக்காட்சியால் சர்ச்சைக்குரிய ஒளிநாடாவொன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது. அவ்வொளிநாடாவில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் அம்மணமாக நபர் ஒருவர் இழுத்துவரப்பட்டு முதுகில் காலால் உதைத்து நிலத்தில் இருத்திவைத்து இராணுவச் சீருடையணிந்த ஒருவர் பின்தலையில் சுட்டுக்கொல்கிறான். அங்கே மேலும் சில சடலங்கள் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் சிதறிக்கிடக்கின்றன. ஒரு சடலம் மட்டும் வெள்ளைத்துணியால் மூடப்பட்டுள்ளது. அது பெண்ணொருத்தியின் சடலமாயிருக்க வேண்டும். காட்சிகள் நகரும்போது ‘அடி’, ‘சுடு’ எனச் சிங்களத்தில் கத்துவதும் கேட்கிறது. கத்துபவரின் முகங்காட்டப்படவில்லை. இக்காட்சி சிங்களச் சிப்பாயி ஒருவரால் கைத் தொலைபேசியின் ஒளிப்படக் கருவிமூலம் 2009 ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வொளிநாடாவானது சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவ்வமைப்பின் வெளிவிவகார நிருபரான Jonathan Miller என்பவரால் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதுடன் அவர் இவ்வொளிநாடா தனக்கு ‘இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர் அமைப்பு’ என்ற இயக்கத்தைச் சார்ந்தவர்களால் கையளிக்கப்பட்டதென்றும் இவ்வியக்கம் பெர்லினில் இயங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வொளிநாடா குறித்து இலங்கையில் வெளியுறவு அமைச்சர் ரோஹிதபோகெல்லாகம கருத்துத் தெரிவிக்கும்போது, ‘இலங்கை அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே இத்திரிவுபடுத்தப்பட்ட ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப் போன்ற விடயங்கள் வெளிவரும் போதெல்லாம் மஹிந்த அரசு ‘எமது படையினர் மனிதாபிமானமுள்ளவர்கள், எமது படையினர் ஒழுக்கமானவர்கள்’ எனக் கீறல் விழுந்த இசைத்தட்டைப் போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இலங்கை ராணுவம் எந்தளவுக்கு மனிதாபிமானமுள்ளதும் ஒழுக்கமானதுமென்பதை கொக்கட்டிச் சோலைப் படுகொலைகள், மைலந்தனைப் படுகொலைகள், ரம்பாவைப் படுகொலைகள், செம்மணிப் படுகொலைகள் என அனந்தமாய் நீளும் வரலாற்றுத் துயரங்கள் எடுத்துக்காட்டிவந்துள்ளன. போரால் பாதிப்பிற்குள்ளான மக்களில் எவரும் அரச படையினரைத் தமது பாதுகாவலர்களாகக் கருதுவதில்லை. அரச படையினரும் பாதுகாவலர்களாக ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. இவ் வொளிநாடா தொடர்பில் ரோஹித போகெல்லாகம சொல்வதைப் போல அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே இத்திரிவுபடுத்தப்பட்ட ஒளிநாடா வெளியிடப்பட்டிருந்தால் மஹிந்த அரசின் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்துக் கேள்வியெழுப்பிவரும் சகலதரப்பினருக்கும் நம்பிக்கையூட்டும் விதத்தில் இது திரிபுபடுத்தப்பட்ட ஒளிநாடாவென்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டிய கடப்பாடு மஹிந்தருக் குண்டு இல்லாவிடின் மஹிந்தரின் சரிவுக்குக் காரணமாகும் விடயங்களில் இவ்வொளிநாடா முக்கியப் பங்குவகிக்கப்போவது மட்டும் உறுதியானது.

குறிப்பு (4)

1979 காலப்பகுதியில் நடை முறைக்குக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்ப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திஸ்ஸநாயகத்திற்கு இருபது வருடச் சிறைத் தண்டனையை வழங்கிக் கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளமை பத்திரிகைத் துறை வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் தண்டனை பெறும் முதலாவது சம்பவமாகப் பதிவாகியுள்ளது. 2008 மார்ச் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதாகிப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் யசிகரன் மற்றும் அவருடைய மனைவி வளர்மதி ஆகியோரைப் பார்க்கச் சென்றிருந்தபோதே திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டார். இவர்மீது

(1) வடக்கு கிழக்கு மாசிகை (North Easthern Monthly) என்ற சஞ்சிகையை வெளியிட்டு இனவாத உணர்வுகளைத் தூண்டியமை.

(2) இச்சஞ்சிகைக்கு நிதி சேகரித்துப் பயங்கரவாதத்தை வலுப்படுத்தியமை.

(3) அவசர காலச் சட்டவிதிகளை மீறிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியும் ஆதரவும் வழங்கியமை

ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மஹிந்தவின் நீதித் துறையானது இந்‘நியாயமான’ தண்டனையை வழங்கிக் கௌரவித்துள்ளது.

திஸ்ஸநாயகம் கைதான காலப் பகுதியில் நடைபெற்ற விசாரணையின்போது காவல் துறைக்கு அவரால் அளிக்கப்பட்டிருந்த வாக்கு மூலம் ஆதாரச் சான்றாக நீதிமன்றத்தில் அரச தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டபோது இவ்வாக்கு மூலம் சுய விருப்பில் வழங்கப்பட்டதல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டு அதற்கான விசாரணைகளும் நடைபெற்றமை கவனிப்பிற்குரியது.

திஸ்ஸநாயகம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘நான் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் செய்தியாளர் என்ற வகையில் செய்தி சேகரிப்பதற்காகவே வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். இதன்போது மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள், காணாமற் போனோரின் உறவினர்கள் எனப் பலதரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளேன். ஒரு காலகட்டத்தில் காணாமற்போனவர்களினது பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களின் அமைப்புகளுக்கு உதவியும் ஆதரவும் நல்கினேன். அப்போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது ஆலோசகர் வாசுதேவ நாணய்க்காரவும் காணாமல் போனோரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களின் அமைப்பில் சேர்ந்து இயங்கியதுடன் இவ்விருவருமே அவ்வமைப்பிற்கு அரசியற் தலைமைத்துவத்தை வழங்கியிருந்தனர்.

மீடியா (Media) என்ற அமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட யுனிசெப் (Unisef) கருத்திட்டமொன்றில் (Projet) பணியாற்றிய தருணம் விடுதலைப்புலிகள் (Ltte) மக்கள் விடுதலை முன்னணி (JVP). இந்திய அமைதிப்படை (IPKF), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPrlf) மற்றும் துணை இராணுவக் குழுக்கள் மேற்கொண்டிருந்த மோசமான வன்செயல் நடவடிக்கைகளால் எண்ணற்ற பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியவந்தது. நான் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கருத்திற்கொள்ளும் ஒருவனல்ல. பயங்கரவாதத்திற்கும் அதனது சகல நடவடிக்கைகளுக்கும் எதிராகப் பேசி வருபவன். மனித உரிமை மீறலுக்குப் பலியானோரின் சார்பாக இருந்து அமைதிவழித் தீர்வுக்காகப் பாடுபட்டவன். செய்தியாளன் மற்றும் ஆய்வாளன் என்ற வகையில் முரண்பாடுகளுக்கு எந்த விதத்திலும் வேற்றுமைகளுக்கு வழிவகுக்காத அமைதிவழித் தீர்வைத்தான் என்னால் முன்மொழிய முடியும்.

எனது தந்தையார் 1978 காலப் பகுதியில் தகவற் திணைக்களத்தில் பணிப்பாளராகவிருந்து ஓய்வுபெற்றவர். நான் கொழும்பில் பல்லினச் சூழலில் வளர்ந்ததால் தமிழர், சிங்களவர், முஸ்லிம், பறங்கியர் ஆகிய எல்லா இனத்தவருமே எனக்குப் பாடசாலை நண்பர்களாக இருந்தனர். பல்கலைக்கழகத்திலும் இத்தகைய நட்பு தொடர்ந்திருந்தது, எனக் குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸ நாயகம் என்ற இப்பத்திரிகையாளர் கண்டி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று பட்டம்பெற்றவர். மார்க்கா (Markka) என்ற அமைப்புடன் இவர் இணைந்து பணியாற்றிய காலகட்டத்திலே இலங்கையில் காணாமற் போவோர் பற்றிய தகவல்களைச் சருவதேச மட்டத்திற்கும் சருவதேச மன்னிப்புச் சபைக்கும் எடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றியுள்ளார். மார்க்கா அமைப்பிலிருந்து விலகிய பின்னர் இவர் மீடியா (Media) எனும் நிறுவனத்தில் இணைந்து யுனிசெப் கருத்திட்ட நிறைவேற்று அதிகாரியாகச் செயற்பட்டார். திஸ்ஸநாயகம் ஒரு பத்திரிகையாளராக மட்டுமன்றி மனித உரிமைப் போராளியாகவும் மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் திஸ்ஸநாயகத்திற்கு இருபது வருடக் கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்த பின்பாக இரண்டு சருவதேச மட்டத்திலான விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘துணிச்சல்மிகு தார்மிகக் கோட்பாட்டு இதழியல் துறைக்கான விருது, திஸ்ஸநாயகத்திற்கே முதன்முறையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பாரிஸைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பத்திரிகை உரிமைகளுக்கான எல்லைகளற்ற நிருபர்கள், அமைப்’பின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட இவ்விருது குறித்து அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் ஜேன் பிரான் கொய்ஸ் ஜூலியெம் கருத்து வெளியிடும்போது ‘இவ்விருதை திஸ்ஸநாயகத்திற்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைக் கண்டறிவதில் உறுதிப்பாடும் அக்கறையும்கொண்ட திஸ்ஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்தான் நாட்டுக்குத் தேவை’ எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றைய விருது பத்திரிகையாளரைப் பாதுகாக்கும் குழுவால் வழங்கப்பட்டுள்ள 2009 காலப்பகுதிக்கான சருவதேச பத்திரிகைச் சுதந்திரத்திற்கான விருதாகும். அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா கடந்த பத்திரிகைச் சுதந்திர தின உரையில் திஸ்ஸநாயகத்தின் செயற்பாடுகளைக் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

03.09.2009 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ‘திஸ்ஸநாயகம் மீதான நீதிமன்றத் தீர்ப்பானது நீதித்துறையின் தீர்ப்பென்தால் இதைக் கேள்விக்குட்படுத்த முடியாது. தவிரவும் திஸ்ஸநாயகம்மீதான விசாரணை குறித்த தகவல்கள் ஐரோப்பிய யூனியன் உட்பட உலக அமைப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளன’ எனக் கூறியுள்ளார். அவர்மீதான நீதிமன்றத் தீர்ப்பானது இலங்கைக்குள் மட்டுமன்றி சருவ தேச மட்டத்திலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளமையின் வெளிப்பாடாகவே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூற வேண்டியேற்பட்டுள்ளது.

குறிப்பு (5)

வவுனியா நலன்புரிமுகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும் அரச படையினருக்குமிடையே 26.09.09 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் மோதல் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இராமநாதன் முகாமிலிருந்து மக்கள் சிலர் ஆனந்தகுமாரசுவாமி முகாமுக்குச் செல்ல எத்தனித்தபோது அங்கே காவலுக்கு நின்ற அரச படையினர் அம்மக்கள்மீது துப்பாக்கியால் சுட்டபோது எட்டுவயதுச் சிறுமியுட்பட மூவர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பி.பி.சி தமிழோசைக்கு செவ்வியளித்த இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, ‘அகதி முகாம் பகுதியில் மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. சிலபேர் முதலாவது முகாமிலிருந்து இரண்டாவது முகாமுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டபோது படையினர் அவர்களைத் தடுத்தனர். இதனால் அங்கு மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் படையினரை நோக்கிக் கற்களை வீசினர். எனவே படையினர் தற்காப்புக்காகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதிலிருவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காகத் தற்போது செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படையினரைத்தாக்குவதற்கு எத்தனித்த 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டார். உண்மையில் நடைபெற்ற சம்பவத்திற்கான பின்னணியாதெனில் 17.09.09 திகதியிலிருந்து இலங்கையரசானது இம்முகாம்களிலுள்ள மக்களுக்கு வழங்கி வந்திருந்த சமைத்த உணவை முன்னறிவித்தல் ஏதுமின்றி நிறுத்திவிட்டது. உலக உணவுத் திட்டத்தால் (World food Programme) உலர் உணவுப் பொருட்கள் மட்டுமே இம்மக்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வருவதால் அவ்வுணவுப் பொருட்களைச் சமைத்து உண்பதற்குத் தேவையான விறகை எடுத்து வருவதற்காகவே மக்கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறே சென்ற மக்களைப் படையினர் தடுத்துநிறுத்த முற்பட்டபோது படையினருக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். இவ்வாறான சம்பவங்களின் மூலம் மஹிந்த அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடமொன்றுண்டு. 2009 மே மாதம் வன்னியில் யுத்தம் உக்கிரமடைந்த வேளையில் புலிகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் சினந்தெழுந்து புலிகளையே ஓட ஓட அடித்து விரட்டியிருந்தனர். தமது ஏகப் பிரதிநிதிகளெனக் கொண்டாடிய புலிகளையே அம்மக்கள் அடித்து விரட்டத் துணிந்தார்கள் எனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழினத்தை அடக்கியொடுக்கி வன்முறையைக் கட்டவிழ்த்து வரும் சிங்களப் பேரினவாத அரசுக்கெதிராகத் தமிழ் மக்கள் பொங்கியெழுவது ஒன்றும் பெரிதல்ல. இப்போது முகாம்களிலுள்ள மக்கள் எல்லாமிழந்து நடைப் பிணங்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை இன்னுமின்னும் அரசானது ஒடுக்க முற்படுமானால் அவர்கள் தமது உயிரைக்கூட ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். அந்நிலை வரும்போது படையினர் ஏந்தியிருக்கும் துப்பாக்கிகளுக்கும் மக்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதுதான் இச்சம்பவத்திலிருந்து மஹிந்த அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

உள்ளடக்கம்