|
மதுரையை மையமாக வைத்து இயங்கிவரும் நிகழ் நாடக மய்யம் 2002இலிருந்து நாடகம் சார்ந்த
பல்வேறு செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நாடகத்
தயாரிப்புகள், நாடக நிகழ்வுகள், நாடக விழாக்கள், நாடகம் நடிப்பு தொடர்பான
பயிலரங்குகளைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. 2009 ஜூன் முதல் தமிழகத்தின்
மாவட்டங்கள் தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக “நாடக நிகழ்வுகள்” எனும்
சிறப்புத் திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.
அடுத்த தலைமுறையினருக்கு நவீன நாடகத்தை வடிவ நேர்த்தியோடு அறி முகம்செய்து
மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கும் விதத்தில் ஒரு மாற்று ரசனையை ஏற்படுத்துவதை
நோக்கமாகக்கொண்டு இந்நாடகப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்
நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுகள் முக்கியக் கல்வி நிறுவனங்கள், கலையில் ஈடுபாடுடைய
தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 2009இல்
கொடைக்கானலிலும் ஜூலை மாதம் கோயம்புத்தூரிலும் ஆகஸ்ட் மாதம் மதுரையிலும் இந்நாடகப்
பயணம் நடந்தேறியது. சண்முகராஜா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் நாடக
இயக்குநர் மிரேலி குகோலஸ் இணைந்து நெறிப்படுத்திய ‘சிப்பிஜுங்’ என்னும் நாடகமும்
ஹங்கேரியைச் சேர்ந்த பிரிட்ஜ் கராந்தியால் இயற்றப்பட்டு அ. ராமசாமியில்
தமிழ்ப்படுத்தப்பட்டு சண்முகராஜா நெறியாக்கம் செய்த “திருப்பிக்கொடு” என்னும்
நாடகமும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்புக் காட்சிகளாக நிகழ்த்தப்படுகின்றன.

மேற்கண்ட இரண்டு நாடகங்களும் இடையில் நவீன நாடகம் பற்றிய கலந்துரையாடலுமாக ஒரு
காட்சிக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுத் தினந்தோறும் மூன்று காட்சிகள்
நடத்தப்படுகின்றன. கொடைக்கானல், கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் மொத்தம் 34
காட்சிகள் அரங்கேற்றப்பட்டு 10,500 மாணவர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
அக்டோபர் மாதம் ஈரோட்டில் 30 காட்சிகள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நாடக நிகழ்வுகளின் நிறைவு விழாக்களில் கோயம்புத்தூரில் நாஞ்சில் நாடன், புவியரசு
மதுரையில் சுரேஷ்குமார் இந்திரஜித், தேவேந்திரபூபதி ஆகியோர் பங்கேற்று கலைகளின்
முக்கியத்துவம் நாடகம் இலக்கியம் திரைப்படம் ஓவியம் ஆகிய கலைவடிவங்களின் தனித்தன்மை,
வாசிப்பின் அடிப்படைகள், ரசனை முறை பற்றி மாணவர்களுக்குச் சிறப்புரையாற்றினர்.
உலகமயமாதல் சூழலில் ‘சிப்பிஜுங்’ நாடகம் குழந்தைகள் அறம் பற்றியும்
‘திருப்பிக்கொடு’ நாடகம் மாற்றுக்கல்வி பற்றியும் சுவாரஸ்யமான மொழியில்
வலியுறுத்தியது மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
கல்வி வியாபாரமாகிவரும் சூழலில் மாற்றுக் கல்வியின் தேவையைக் கல்வி
நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைக்கும் பணியை
நிகழ்நாடக மய்யம் இந்நாடகப் பயணம் மூலம் சாத்தியமாக்குகிறது. மூன்றாம் உலக நாடுகளின்
மாற்றுக்கல்வி என்பது கலைவழிக் கல்வியை மையப்படுத்தியதாகத்தான் அமையும் என்ற கருத்து
மீண்டும் ஒருமுறை அனுபவமாகியுள்ளது. |