|
கடந்த மே 17, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,
சேலம் தமிழ்ச் சங்க அறக் கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் எழுத்தாளர் சா.
கந்தசாமி கலந்துகொண்டார். நாவலாசிரியர், சிறுகதையாளர், கட்டுரையாளர், குறும்பட
இயக்குநர், பதிப்பாசிரியர் எனப் பல்வேறு ஆளுமைகள் கொண்ட அவரை சேலம் தமிழ்ச் சங்கச்
செயலாளர் க. வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.
தான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும் மிகச் சிறந்த வாழ்க்கை தனக்கு
இருந்தது என்றும் நெகிழ்ந்த அவர், சகோதரரின் பராமரிப்பில் வளர்ந்த தான்
எழுத்தாளராய் இருப்பதில் மிகுந்த மன மகிழ்ச்சி அடைவதாகவும் தன் குடும்பமும் அவ்வாறே
உணர்வதாகவும் கம்பீரத்துடன் கூறினார். பொதுவாக இலக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளும்
படைப்பாளிகள் வறுமையின் வசம் சிக்கிக்கொள்வார்கள் என்பதை ஏற்க இயலாது எனக்
குறிப்பிட்ட சா. கந்தசாமி, தாம் சிறப்பாக வாழ்வதற்குத் திட்டமிட்ட வாழ்வே
காரணமென்றும் பல எழுத்தாளர்கள் சொந்த வாழ்வில் தோல்வி அடைவதற்கு எழுத்தில்
காட்டும் அக்கறையைத் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டாததே என்றும் குறைபட்டுக்கொண்டார்.
தான் எழுதுவதற்குக் காரணம் படிப்புதான். உலகில் மிகக் கடினமான காரியம் ஒன்று உண்டு
என்றால் அது புத்தகப் படிப்புதான். சரியாக உள்வாங்குவதுதான் புத்தகப் படிப்பின் பயன்
என்ற அவர் படிப்பு என்பது பயிற்சி அல்ல, இலக்கியத்தின் நோக்கம் மனிதனை நல்ல
பிரஜையாக, கௌரவமான சிந்திக்கக்கூடியவனாக உருவாக்குவதுவனாக, தான் எனக்
குறிப்பிட்டார். தன் மகன் ஓவியப் படிப்பில் சேர்ந்து பயின்று முன்னேறிய தகவலைத்
தெரிவித்தபோது அது ஒரு சிறுகதைக்கான கருப்பொருளாகவே பார்வையாளரின் மனத்தில் பட்டதை
விவரித்தார்.
தான் பிரச்சாரத்திற்கு எதிரானவன், பிரச்சாரம் போன்று இழிசெயல் வேறொன்றுமல்ல என்ற
அவர், தமது படைப்பில் ஒருபோதும் பிரச்சாரம் மேற்கொள்ளாததையும் அதைச் செய்வது எதிர்
நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.
கல்வி தைரியத்தை அளிக்க வேண்டும். அந்தத் தைரியத்தைக் கல்வி அளித்தது; தமிழ் அள்ளி
வழங்கியது எனக் குறிப்பிட்டவர் தமது பேச்சினூடே வரலாற்றுச் செய்திகள், கல் வெட்டுக்
குறிப்புகள் எனப் பல தரப்பட்ட கருத்துகள் மூலம் பார்வையாளர்களை வியப்பில்
ஆழ்த்தினார்.
சிறுகதையின் இலக்கணம் என்ன என்ற ஒரு கேள்விக்குச் ‘சிறந்த கதைக்கு இலக்கணம்
ஏதுமில்லை என்பதுதான் இலக்கணமே’ என்று தொடர்ந்தவர், ‘நல்ல சிந்தனை என்பது ஏற்கனவே
உள்ளவற்றை உடைப்பதுதான்’ என்று பதிலளித்தார். எழுத்தாளனின் கடமை யாது என்ற
வினாவுக்கு நல்ல பிரஜையை உருவாக்குவது என்றும் எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும்
எப்போது மதிப்பு வரும் என்றால் எழுத்து லாபகரமாக அமையும்போது தான் அது
சாத்தியமாகும் என்றும் விடையளித்தார்.
நாவல் கலை பற்றிய ஒரு கேள்விக்கு நல்ல நாவல் என்பது முடிந்து போய்விடும் விஷயமல்ல,
மாறாக ஒரு நாவல் படித்து முடிக்கப்படும்போது வாசகன் மனத்தில் மற்றொரு நாவல்
தொடர்கிறது என்பதை வித்தியாசமான தொனியில் வெளிப்படுத்தினார். குறும்பட முயற்சி
பற்றிப் பதிலளித்தபோது தான் ஆராய்ச்சியாளனாகவே குறும்பட ஆக்கத்தில் ஈடுபடுவதாகத்
தெரிவித்தார். மேலும் தான் மகிழ்ச்சிகரமான எழுத்தாளனாய் இருப்பதற்கு “நான் எனக்காகவே
எழுதுகிறேன்; நானே எனக்கு வாசகன்” என்று ஒரு வினாவுக்குப் பதில் அளித்தபோது அவர்
மீதான மதிப்பும் கூடிக்கொண்டே போனதைப் பார்வையாளர் அனைவரும் உணர்ந்தனர்.
|