Google   www kalachuvadu.com

பதிவு: நாரதகான சபா, ஆகஸ்ட் 31, 2009
பெண்ணொளி: ஒரு குரல்கூட எழவில்லையே...
அரவிந்தன்

ரோகிணியின் நேர்த்தியான உடல் மொழியுடனும் பொருத்தமான குரல் பாவங்களுடனும் நிகழ்த்தப்பட்ட பெண்ணொளி நிகழ்வு, பன்முக ஊடகங்களின் துணையோடு பார்வையாளர்களுடன் உரையாட முனைகிறது. பாரதியின் பாஞ்சாலி சபதம் பிரதியை அடிப்படையாகக் கொண்டு பாஞ்சாலியின் துயரை, வாழ்நிலையை அணுகும் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் பிரதி, பாரதியைத் தன் பாணியில் நகல்செய்வதாக அல்லாமல் அந்தப் பிரதியினூடே சமகாலப் பார்வையுடனும் வெவ்வேறு பிரதிகளின் துணையுடனும் பயணிக்கிறது.

ஃபேஷன் தொலைக்காட்சியில் இடையறாமல் ஓடும் காட்சிப் படிமங்களிலிருந்து தொடங்குகிறது ப்ரஸன்னாவின் பிரதி. வரையறுக்கப்பட்ட அழகுகளுடனும் சருமங்களுடனும் பவனிவரும் பெண்கள் தங்கள் உடல்களை முன்வைத்துப் பண்டங்களைச் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பண்டங்களை விற்பதற்கான தளமாக விளங்கும் விளம்பர உலகிற்குப் பயன்படும் பெண்களின் உடல்கள் தாமே பண்டங்களாகி நிற்பதை அவற்றின் பயன்பாட்டின் வீச்சை உற்று நோக்குகையில் உணர முடியும். திரையில் காட்சிப் படிமங்கள் மறையும் தருணத்தில் மேடையில் தோன்றும் ரோகிணி பெண்ணுடலே சந்தைப் பண்டமாக மாறும் போக்கைப் பற்றிய சில கேள்விகளுடன் தன் உரையாடலைத் தொடங்குகிறார்.

பெண் உடலைக் காட்சிப் பொருளாக மாற்றுவது என்னும் பிரச்சினை குறித்து ரோகிணியின் கேள்விகள் கிளை பிரிகின்றன. மாட்சிமை பொருந்திய மன்னர்களும் மகத்தான வீரர்களும் நீதிமான்களும் நிரம்பிய சபையில் திரௌபதியின் உடல் காட்சிப்படுத்தப்பட்ட காவிய நிகழ்வை நோக்கிப் பயணிக்கிறது ப்ரஸன்னாவின் பிரதி. இந்திரப் பிரஸ்தத்திலிருந்து பாண்டவர்கள் திரௌபதியுடன் கிளம்புவதிலிருந்தே இந்தப் பயணமும் தொடங்குகிறது. சூரிய அஸ்தமனக் காட்சியைத் தன் கவிதை வரிகளில் காட்சிப்படுத்துகிறார் பாரதியார். அதன் கவித்துவத்தில் லயிக்கும் ப்ரஸன்னாவின் பிரதி, அந்த லயிப்பிலிருந்து சற்றே மீண்டு ஒரு கேள்வியை எழுப்புகிறது. பார்த்தன் பாஞ்சாலிக்குக் கண்டு சொல்வது போல ஏன் இந்தக் காட்சியைப் பாரதியார் அமைக்கிறார்? பாஞ்சாலிக்குப் பார்க்கத் தெரியாதா? பாரதியின் பாஞ்சாலிக்குக்கூடத் தன்னிச்சையாக இயற்கையைப் பார்க்கவும் ரசிக்கவும் முடியாதா? அதையும் ஓர் ஆண்தான் காட்டித்தர வேண்டுமா?

வியாச பாரதத்தில் பெண்ணிய நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பக்கூடிய பல இடங்களில் அம்பையின் அலைக்கழிப்பும் பாஞ்சாலியின் துகில் பறிப்பும் முக்கியமானவை. அதிலும் பாரதப் போரைத் தீர்மானிக்கும் மையக் காரணியாக அமைந்த பாஞ்சாலியின் அவமானம் பாரத சமுதாயம் பெண்நிலை சார்ந்து எத்தகைய மதிப்பீடுகளை வைத்திருந்தது என்பது பற்றிய பலவிதமான தகவல்களைப் பொதிந்துவைத்திருக்கிறது. தன்னைத் தோற்றபின் என்னைப் பணயமாகவைக்கும் உரிமை தருமனுக்கு இல்லை என்னும் எதிர்ப்புக் குரல் ஒருபுறமும் ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம் தானமெனத் தந்திடலாம் என்பது முற்றிலும் அடிமை முறை அன்றி வேறல்ல என்னும் குரல் மறுபுறமும் ஒலிக்கும் இடம் இது. இதுவே இன்றைய சாத்திரம் என்று வரையறுக்கும் பிதாமகனை, பேயர சாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று வாயடைக்கச் செய்யும் பெண்ணின் குரல் ஓங்கி ஒலிக்கும் இடமும் இதுதான். கடைசியில் பெண்ணுடலைக் காட்சிப் பண்டமாக்கும் ஆண்மையின் அதிகார வக்கிரம் அரங்கேறும் இடம். நீதிமான்களும் கணவர்களும் மகன்களும் கண்மூடியிருந்த போது கடவுளைத் தஞ்சமடைவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு ஒரு பெண் தள்ளப்பட்ட தருணம். பெண்ணுக்கு எதிராய் இத்தனை சக்திகள் திரண்டபோதிலும் கடைசியில் அவளுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைப்பதற்காகவே மாபெரும் போர் நிகழ்த்தப்பட்டதையும் சேர்த்துப் பார்க்கும்போது வியாசரின் பிரதி, பிரதி பலிக்கக்கூடிய காலம் பெண்ணை எப்படிப் பார்த்திருக்கக்கூடும் என்பது பற்றிய முக்கியமான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

பாறையாய் இறுகிய மவுனங்களிடையே அரங்கேறும் பாஞ்சாலியின் அவமானத்தையும் ரௌத்திரத்தையும் ஒட்டிப் பயணிக்கும் ப்ரஸன்னாவின் பிரதி பாஞ்சாலியின் வேதனையைச் சமகாலப் பரப்பிற்குக் கொண்டுவந்து இன்றைக்கான கேள்விகளை எழுப்புகிறது. நெட்டை மரங்களென நின்று புலம்புதல் கலியுகத்திலும் நடப்பதுதான். கேட்க ஒருவர்கூட வரவில்லையே, ஒரு குரல்கூட எழவில்லையே எனப் பரிதவிக்கும் பாஞ்சாலியின் துயரம் யுகங்கள் கடந்துவந்து ரோகிணியின் வாயிலாக வெளிப்படும்போது அது பாஞ்சாலியின் துயரம் மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. ப்ரஸன்னாவின் பிரதி இன்னும் ஒரு படி மேலே சென்று மொழிசார் இனத்தின் அவலமாக இதைக் கண்டு பரிதவிக்கிறது. ரோகிணியின் உடல் மொழியும் கேட்பவரை உலுக்கும் குரல் பாவங்களும் நாரதகான சபையின் மேடையை ஒரு கண நேரத்திற்கு இனப்படுகொலை நடக்கும் களமாக உணரச் செய்தன. இந்த நிகழ்வின் மிகமுக்கியமான தருணம் என்று இதைச் சொல்ல வேண்டும். கையறு நிலை. கேட்பாரற்ற, ஆதரவற்ற கையறு நிலை. இதுதான் பிரச்சினை. இதுதான் பாஞ்சாலியின் பிரச்சினை. இதுதான் இனக் கலவரங்களில் உயிரையும் மானத்தையும் இழப்பவர்களின் பிரச்சினை. இனப்படுகொலைக்கு ஆளாகும் லட்சக்கணக்கான மக்களின் பிரச்சினை. பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பீமனின் ரௌத்திரமும் பீஷ்மனின் அனுதாபமும் வெளிப்படுகின்றன. ஆனால் சமகாலக் கொடுமைகளில் அந்த அளவுக்குக்கூட உரியவர்களிடமிருந்து குரல் எழுவதில்லை என்பதையும் ப்ரஸன்னாவின் பிரதி அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.

பாஞ்சாலியை முன்னிட்டு இந்தக் கேள்வியைப் எழுப்பும் ப்ரஸன்னா, பல்வேறு பிரதிகளைத் தன் பிரதியினூடே ஊடாடச் செய்வதன் மூலம் இந்தக் கேள்வியின் வீரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். காடு பற்றி எரியும்போது தன் அலகில் ஒரு துளி நீரைச் சுமந்துவந்து நெருப்பை அணைக்க முயலும் கிளியைப் பாகவதத்திலிருந்து அழைத்துவந்து பாஞ்சாலியுடன் பேசவைக்கிறார். சுகுமாரன் முதலிய சமகாலக் கவிஞர்களுடன் தன்னுடைய சொந்த வரிகளையும் கலந்து பாஞ்சாலி சபதத்தின் சமகாலத் தன்மையைக் கூட்டுகிறார்.

பிரதியும் அது எழுப்பும் கேள்விகளும் ஒருபுறம் இருக்க, நடனம், பாடல், கவிதை வாசிப்பு, நடிப்பு எனப் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக ஒரு நிகழ்வு அரங்கேறும்போது அது பன்முக அனுபவத்தைச் சாத்தியப்படுத்துகிறது. அந்த வகையில், ரோகிணியின் நேர்த்தியான உடல் மொழியும் உணர்ச்சிகளின் பிரவாகமாய் வெளிப்பட்ட அவரது வாய் மொழியும் சுஷாந்தின் அற்புதமான குரலும் பிரதியைச் செழுமைப்படுத்திய வரிகளும் பார்வையாளர்களின் அனுபவப் பரப்பை விசாலமாக்கின. அவமானத்தின் வலியையும் கண்ணன் செய்த உதவியைக் கண்டு உருகும் மனநிலையையும் பீமனின் ரௌத்திரத்தையும் ரோகிணி வெளிப்படுத்திய விதம் அற்புதம். இந்த நிகழ்வின் ஆதாரமான செய்தி என்ன என்கிற ஒற்றைப்படைத் தன்மைகொண்ட கேள்விகளை அர்த்தமற்றதாக்கும் அம்சங்கள் இவை. இத்தகைய பன்முக அம்சங்கள் நிறைந்த நிகழ்வு இயல்பாகவே ஒற்றைச் செய்தியை மறுத்துப் பன்முக அனுபவத்தைச் சாத்தியப்படுத்தும். பெண்ணொளி பார்வையாளருக்குச் சாத்தியப்படுத்துவதும் இதைத்தான்.

பெண்ணியம் முதல் இன அழித் தொழிப்பு அரசியல்வரை பல விஷயங்களைத் தொட்டுச் செல்லும் பிரதியின் பயணம் கடைசியில் அரசியல் சார்ந்த தளத்தில் முடியாமல் பாரதியின் கவித்துவ அழகில் தன்னைக் கரைத்துக்கொண்டது மனத்தைத் தொட்டது. கவிதையின் வசீகரம் நிகழ்த்தும் ஜாலத்தை உணரச்செய்யும் தருணம் இது.

உள்ளடக்கம்