Google   www kalachuvadu.com

மதிப்புரை
வரலாற்று சாளரம்: பாஸ்கரதாஸின் நாட்குறிப்பு
தியடோர் பாஸ்கரன்

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட் குறிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்திற்கு ஒரு சாளரமாகக் கிடைத்தது போல, 1920இல் இருந்து மூன்று பத்தாண்டுகளின் மொழி வரலாறு, நாடக வரலாறு, சுதந்திரப் போராட்டம், வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல தளங்களைப் பிரதிபலிக்கும் பாஸ்கரதாஸின் நாட்குறிப்பு இன்று நூல் வடிவில் நம் கைக்குக் கிடைத் திருக்கின்றது. ஆய்வாளர்களுக்கு ஒரு மூலப்பொருளாக விளங்கக்கூடிய இந்நூல் தமிழ்க் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மக்களைச் சென்றடைவதில்லை என்னும் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் அமைந்துள்ள ஆவணம். புதிய ஆய்வுத் தளங்களை ஆராய்ச்சியாளர்களுக்குத் திறந்துவைக்கின்றது இந்நூல்.

மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்

தொகுப்பாசிரியர் ச. முருகபூபதி
பாரதி புத்தகாலயம்,
சென்னை. 2009. கெட்டி அட்டை.
ரூ.400. பக்கம் 720.
பல புகைப்படங்களுடன்.

சுதந்திரப் போராட்ட வரலாறு உயர்விய (மீறீவீtவீst) கண்ணோட்டத்திலேயே எழுதப்பட்டதால், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் சரியாகப் பதிவுசெய்யப்படவில்லை என நினைக்கின்றேன். காந்தியடிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமையை ஏற்கும் முன்னர், தென்னிந்தியாவில் தேசியக் கருத்துகளை மக்களிடையே பரப்பியதில் முக்கியப் பங்கு நாடகக் கலைஞர்களைச் சாரும். சிறப்பாக மதுரகவி பாஸ்கரதாஸ் போன்ற பாடலாசிரியர்கள் முன்னணியிலிருந்தனர். ஆனால் வரலாறு எழுதப்பட்டபோது இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பு கிடைக்கவில்லை. வெகுமக்கள் கலாச்சார நாயகர்களை நாம் போற்றுவதில்லையே. அதனால்தான் உடுமலை சரபம் முத்துசாமிக் கவிராயர் போன்ற கலைஞர்களை நாம் மறந்துவிட்டோம். பாஸ்கரதாஸின் சமகாலத்தவர்களான பூமி பாலகதாஸ், பீர் முகமது பாவலர் போன்ற மற்ற கவிஞர்களும் பல தேசியப் பாடல்களை எழுதிச் சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களிடையே ஆதரவு தேடினர்.

தேசிய இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட நாட்டுப் பாடல்களைப் பயன்படுத்தும் முறை 1905 வாக்கில் வங்காளத்தில் தோன்றியது. இப்பாடல்களின் பிரச்சாரப் பயன் பற்றிக் கவி தாகூர் தேசியவாதிகளுக்குப் பரிந்துரைத்திருக்கின்றார். தமிழ்நாட்டில் பாரதி இந்த முறையைப் பின்பற்றினார். மக்களிடையே நாட்டுப் பாடல்களுக்கு இருந்த பிணைப்பை உணர்ந்த அவர், சிந்து, கும்மிப் பாடல்கள் மூட்டும் நாட்டுப் பற்றை உருவாக்கினார். 1908இல் அவர் எழுதி வெளியிட்ட சுதேச கீதங்கள் பல பாடலாசிரியர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தன. வ.உ.சி விசாரணை போன்ற பாடல்கள் மூலம் அரசியல் விவரங்கள் மக்களிடையே பரப்பப்பட்டன. அவரைப் பின்பற்றிப் பல கவிஞர்கள் நாட்டுப் பாடல் எனும் பாரம்பரிய நீரோட்டத்தைத் தேசிய எழுச்சிக்குப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1919 ஜாலியன்வாலாபாக் படு கொலையைத் தொடந்து நாடக நடிகர்கள் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தர ஆரம்பித்தனர். இத்தகைய பிரச்சாரத்தில் பாடல்கள் முதலிடம் பெற்றன. மேடைக்கு வெளியேயும் இவை ஒரு தனி ஊடகம்போலப் பரவ முடியுமே. சத்தியமூர்த்தி போன்ற தலைவர்கள் இதைக் கவனித்து, அக்கலைஞர்களுக்கும் அவர்கள் பாடல்களுக்கும் அரசியல் மேடையில் இடமளித்தனர். ‘பாட்டுப் பாடியே நாம் விடுதலை அடைவோம்’ (கீமீ ஷ்வீறீறீ sவீஸீரீ ஷீuக்ஷீ ஷ்ணீஹ் tஷீ யீக்ஷீமீமீபீஷீனீ) என்றார் சத்தியமூர்த்தி. அந்தக் காலகட்டத்தில் வந்த கிராம்ஃபோன் இப்பாடல்களின் தாக்கத்தை அதிகரித்தது. கிராம்ஃபோன் இயங்க மின்சாரம் தேவையில்லையே. குஜிலிக் கடைப்பாட்டுப் புத்தக மாதிரியில் தேசியப் பாடல்கள் அச்சேற்றப்பட்டன. பல புத்தகங்கள் பிரிட்டீஷ் அரசால் தடைசெய்யப்பட்டன.

நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை.

மதராஸ் ராஜதானியில், 1931இல் எழுந்த ஒத்துழையாமை இயக்கத்தில் இப்பாடல்களின் பயன்பாடு உச்சகட்டத்தை அடைந்தது. சுதந்திர இயக்கம் அடித்தள மக்களின் ஆதரவைப் பெற்றதும் இக்காலத்தில்தான். நாடகக் கலைஞர்கள் யாவரும் விடுதலை இயக்கத்தில் இணைந்தனர். கம்பெனி நாடகங்கள், சினிமா, பத்திரிகைகள் போன்ற மற்ற ஊடகங்கள் கடும் தணிக்கை முறைக்கு உட்படுத்தப்பட்டதால், பாடல்கள் ஒரு வெகுமக்கள் ஊடகம்போலப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஊடகங்களையும் வாய்ப்பூட்டுச் சட்டங்களால் கட்டிப்போட்ட பிரிட்டீஷ் அரசு, பாட்டு விசயத்தில் செய்வதறியாமல் திண்டாடியது. ரயில் நிலையங்களிலும் திருவிழாக்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இப்பாடல்கள் ஒலித்தன. கே. பி. சுந்தராம்பாள் உட்படப் பலர் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபட்டனர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பல கலைஞர்கள், ஆண்களும் பெண்களும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இவ்வாறு ஆரம்பித்ததுதான் தமிழகத்தில் நாடக, திரைப்படக் கலைஞர்களின் அரசியல் ஊடாட்டம். சத்தியமூர்த்தியின் மறைவாலும் அவருக்குப் பின் வந்த தென்னிந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் வெகுமக்கள் நிகழ்கலைகளை உதாசீனம் செய்ததாலும் (‘கூத்தாடிகள்’), சுதந்திரம் வந்த பிறகு, இவர்களில் பலர் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்து அதை வளர்த்துத் தாங்களும் வளர்ந்தது ஒரு தனிக் கதை. இவ்வளவு நடந்தும் இந்திய சுதந்திர வரலாறு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டபோது இக்கலைஞர்கள் மறக்கப்பட்டார்கள். 1981இல் உலகத் தமிழ் மகாநாட்டிற்கு வெளியே ஒரு மேடையில் கே. எஸ். கருப்பையா, சுத்தானந்த பாரதி இவர்களுடன் ஒரு கருத்தரங்கில் பாஸ்கரதாஸ் பற்றிப் பேசியது என் நினைவிற்கு வருகின்றது.

பாஸ்கரதாஸ் (1892-1952) என்னும் ஆளுமையின் பன்முகத்தன்மை அவரது நாட்குறிப்பில் வெளிப்படுகின்றது. நல்ல பேச்சாளர், நாடகத்தின் நுணுக்கங்களை அறிந்தவர்; தீவிர வாசகர். அவரது குறிப்புகளிலிருந்து அன்றைய நாட்களில் நாடகப் பயிற்சி முறைகளைப் பற்றி அறிய முடிகின்றது. குரல் பயிற்சிக்காகப் பாடகர்கள், கோயில் குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு பாடினார்கள் என்றறிகின்றோம். அவருக்கு நாட்டு வைத்தியத்தில் ஈடுபாடு உண்டென்றும் அவரே மருந்துகள் தயாரிக்கவும் செய்தார் என்றும் படிக்கின்றோம். பி.எஸ்.செட்டியார் நடத்திய சினிமா உலகம் பத்திரிகையில் தமிழ்ப் படங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதினார். மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப் பிற்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்.

ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார். ஒரு ஜோடி செருப்பு 6 அணா, மதுரை-சென்னை ரயில் கட்டணம் ரூ. 7 போன்ற பல விவரங்கள் அன்றைய பொருளாதார நிலையைப் பற்றிக் கூறுகின்றன. குற்றாலத்தில் தங்கி அருவியில் அடிக்கடி குளித்த நாட்களில் அங்கு வந்த குரங்குகள், பாம்பு பற்றியும் பதிவுசெய்திருக்கின்றார். மதுரை ஜெயில் ரோட்டில் நடந்து சென்றபோது வலசை போன பறவைக் கூட்டமொன்றைக் கண்டதாக எழுதிவைத்துள்ளார். ராஜபாளையம் நாய் பற்றியும் பூனைக்கடிக்கு மருந்து பற்றியும் குறிப்புகள் உண்டு.

இந்நூல் அரிய ஆராய்ச்சியின் பயன் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஐம்பது - எழுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுப்பது எளிதான காரியமல்ல. அதில் தவறுகள் தோன்ற வாய்ப்பு அதிகம். மிகுந்த பொறுப்புடன்தான் தொகுப்பாசிரியர் நூலை உருவாக்கியுள்ளார். நூலில் உள்ள சில எழுத்துப் பிழைகளை மு. ராமசாமி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். மதுரையில் கவிஞர் பார்த்த படம் லாட சாம்பிராணி அல்ல. ‘மடசாம்பிராணி’. தமிழ் சினிமாப் பட்டியலைப் பார்த்து இதை உறுதிசெய்திருக்க முடியும்.

ஆங்காங்கே பயனுள்ள குறிப்புகளைத் தொகுப்பாசிரியர் சேர்த்துள்ளார். மன்னார்குடி நடராஜப் பிள்ளை பற்றியும் நாடக நடிகை கே.ஆர்.சாரதா பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இம்மாதியான நூலில் அத்தகைய குறிப்புகள் அதிகம் சேர்க்கப்பட வேண்டும். குறிப்புகளும் சற்று விரிவாக இருக்க வேண்டும். தொகுப்பாசிரியர் அடுத்த பதிப்பில் அதைச் செய்வதாகக் கூறுகின்றார்.

புத்தகம் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல வடிவமைப்பு. வீணை தனம்மாள், கன்னையா பிள்ளை, எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் போன்ற தமிழகக் கலாச்சார வரலாற்று நாயகர்கள் பலரின் அரிய புகைப்படங்களைக் காண முடிகிறது. ஆனால் இப்படங்களை செப்பியா வண்ணத்தில் அச்சிட்டதால் அவை துல்லியமாக இல்லை. அதிலும் நாடக நோட்டீசுகளைப் படிக்க முடியவில்லை. பழைய நூல்களிலிருந்து ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை ஃபோட்டோ ஷாப் மூலம் செப்பனிட்டுப் புதிய உரு கொடுக்கும் வசதி இன்றிருக்கிறது. ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை. படங்களின் தொன்மையைக் காட்ட செல்லரிப்பு, கிழிசல் போன்ற குறைகளுடன் வெளியிட வேண்டிய அவசியமில்லை. படமொன்றை வெளியிடுவதின் நோக்கம் அதில் சித்தரிக்கப்படும் பொருளைக் கச்சிதமாகக் காட்டுவது தான். படம் எதைக் காட்டுகின்றதோ அதுவே அதன் தொன்மைக்குச் சான்றாக அமைகின்றது.

பாஸ்கரதாஸ் பாடல்கள் இயற்றிய திரைப்படங்கள் பற்றி முழுமையான தகவல்கள் இல்லாதது ஒரு குறை. முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) தொடங்கி, பிரகலாதா (1933 ), வள்ளி திருமணம் (1933), உஷா கல்யாணம் (1936) உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதியுள்ளார். முப்பதுகளில், திரைப்படங்களில் பாடலாசிரியரே இசையையும் அமைத்தார் என்பதை நாம் இங்கு நினைவில்கொள்ள வேண்டும். எந்தத் தீவிர வாசகனும் அவர் பணியாற்றிய நாடகப் பட்டியல், திரைப்படப் பட்டியல் இவற்றை எதிர்பார்ப்பார். அதே போல் பொருளடைவு இல்லாதது பெருங் குறையாக இருக்கின்றது. இத்தகைய கிடைத்தற்கரிய ஆவணத்தின் பயன் பொருளடைவால் பன்மடங்கு அதிகரிக்கும். சில எழுத்துப் பிழைகளும் கண்ணில் படுகின்றன. தமிழில் இன்னும் sஜீமீறீறீ நீலீமீநீளீ மென்பொருள் உருவாக்கப்படாதது பெரிய குறை.

இந்திய அரசியல்-கலாச்சார வரலாற்றில் பாஸ்கரதாஸ் போன்றோரின் பங்களிப்பை ந. முத்துசாமியின் முன்னுரை அருமையாக விளக்குகின்றது. ஆழமான கட்டுரை. நூலின் பின்னணி பற்றி அ. ராமசாமியின் கட்டுரை நூலின் மதிப்பைக் கூட்டுகின்றது. இந்தப் பொருளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் தொகுப்பாசிரியர் முருகபூபதியைத் தூண்டிய அவருக்குத் தமிழ் ஆர்வலர்கள் நன்றி செலுத்த வேண்டும்.

முருகபூபதியிடமிருந்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இன்னும் பல ஆய்வு நூல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பை இந்நூல் உருவாக்குகின்றது. மதுரகவியின் எல்லாப் பாடல்களையும் - திரைப்படப் பாடல்கள் உட்பட - தொகுத்து வெளியிட முயல வேண்டும்.

உள்ளடக்கம்