|
இந்தியாவில் திரையிடப்படும் முன்னமே பர்மிங்ஹாம் சினிவேர்ல்ட் சினிமாவில்
வெள்ளிக்கிழமை முதல் காட்சியில் ஆறு பேருடன் மிக அமைதியான அரங்கில் ஒரு தியானக்
கூட்டத்தில் இருப்பதுபோல் இந்தப் படத்தைப் பார்த்தேன். வளமையான தமிழ் சினிமாவின்
கலாச்சாரப் பண்புகளின் பெருமைகளான கூச்சல்கள், விசில்கள், கைத்தட்டல்கள் இல்லாமல்
படத்தைக் கண்டு அனுபவித்தது கிரிக்கட் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் ஒலியை
நீக்கிவிட்டு வர்ணனையில்லாமல் பார்ப்பதுபோல் இருந்தது.

ஒரு சில வரிகளில் திரைக்கதைச் சுருக்கம். தீவிரவாதம் ஏற்படுத்தும் வாழ்க்கை
நிலைகுலைவுகளைத் தாங்க முடியாமல் குமுறும் பொது இந்தியர் ஒருவர் அக்கறையற்ற அரசைச்
செயல்படவைக்கச் சென்னையில் ஐந்து இடங்களில் குண்டு வெடிக்கப்போவதாகக் காவல் துறை
அதிகாரி ராகவன் மாறாரைப் பயமுறுத்துகிறார். அவருடைய பயங்கள், சந்தேகங்கள்,
எரிச்சல்கள், மனக் கலக்கங்கள், பொதுமக்கள் சார்பாகக் குரல்கொடுப்பதுபோல்
சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
சினிமா விசயங்களில் அதீத அக்கறைகாட்டாதவர்களுக்குக்கூட இப்படத்தின் ஆணிவேர்
இந்திப்படமான
A Wednesday எனத் தெரிந்திருக்கும். நகல்கள் அசல்களைவிடச்
சில வேளைகளில் பிரகாசிப்பது உண்டு. இந்தத் தமிழ்ப் படம் அதைச் சாதித்திருப்பதாக
நினைக்கிறேன். ஓர் உதாரணம்: காவல் துறை அதிகாரி ராகவன் மாறாரும் தமிழக முதன்மைச்
செயலாளரும் பரஸ்பர எரிச்சலை வெளிப்படுத்தும் காட்சி. இந்திக்கும் தமிழுக்கும்
அப்படிப் பெரிய வித்தியாசங்கள் இல்லை. சும்மா மேற்பரப்பில் பார்க்கும்போது சில
வேறுபாடுகள் தெரியும். வடக்கத்தியக் காவல் துறை அதிகாரி அனுபம் கேர் பெரும்பாலும்
மப்டியில் வெள்ளை ஜிப்பாவில் காட்சியளிக்கிறார். தெற்கத்திய அதிகாரி மோகன்லால்
எப்போதும் உத்தியோகபூர்வமாகச் சீருடையில் தோன்றுகின்றார். தமிழ்த் தொலைக்காட்சி
நிபுணர் நடாஷா ராஜ்குமார் (அனுஜா ஐயர்) வட இந்தியப் பெண்ணைவிட ஒயிலாக இருக்கிறார்.
புகைபிடிக்கிறார். இந்திப் பெண்ணுக்கு இந்தப் பழக்கம் இல்லை.
நஸ்ருதீன் ஷா பாத்திரம் விடுவிக்கும்படி கேட்கும் தீவிரவாதிகள்
Ibrahim Khan, Ikhlaque Ahmed, Mohd. Zaheer and Khurshid Lala எல்லோருமே மும்பாய், குஜராத் குண்டுவெடிப்புகளுடன்
சம்பந்தப்பட்டவர்கள். கமல்ஹாசனின் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் குண்டுதாரிகள்
- அல்ல அந்தப் பாத்திரத்தின் கணிப்பில் தோழர்கள் / போராளிகள் - தென்னகத்
தொடர்புடையவர்கள். இந்தத் ‘தோழர்’களில் ஓர் இந்துவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இவர் வெடிகுண்டுகளையும் ஆயுதங்களையும் எந்த மதத்தினருக்கும் காசு சரியாக இருந்தால்
தாராளமாக விற்பவர். காவல் துறை இவருக்குக் கொடுத்த நிபுணத்துவச் சான்றிதழ்:
He is a community and cash agnostic. ஆனால் இவருடைய மதம்
சுத்திகரிக்கப்பட்டு ஒரு வியாபாரியாகவே அடையாளப்படுத்தப்படுகிறார்.
இந்திப் படம் வரிசைப்படுத்தும் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் அல்கைதா, லஷ்கர்-
இ-தொய்பா, பாகிஸ்தானிய உளவு அமைப்புகளின் தடயங்கள் தெரிகின்றன. குண்டுதாரிகள்
இஸ்லாமியர்கள் என்னும் பொதுப்புத்தி அவதானிப்பை மேலும் பலப்படுத்துகிறது.
கமல்ஹாசனின் பாத்திரம் தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு சமவாய்ப்பைக்
கொடுத்து ஸ்ரீபெரும் புதூர், மீனம்பாக்கம் விமான நிலையக் குண்டுவெடிப்புகளையும்
இணைத்திருக்கிறது. காவல் துறையினரை மிரட்டியவரின் பெயர், அவருடைய சமயம், மொழி
கடைசிவரை தெரிவிக்கப்படவில்லை. அவர் குண்டுவைத்திருக்கும் கருப்புப் பையில்
வெங்கடாசலபதியின் படம் இருக்கிறது. அவர் மனைவி கைபேசியில் ‘இன்ஷா அல்லா’ என்கிறார்.
“தீவிரவாதி பௌத்தனாகவோ கிறிஸ்தவனகவோ இருக்கக் கூடாதா?” என்று கதாநாயகனே காவல்
துறை அதிகாரியிடம் கோபமாகச் சீறுகிறார்.
சாதாரண முட்டாள் பொதுஜனம் என்று அறிவித்துக்கொள்ளும் பிரதான பாத்திரம்
பயன்படுத்தும் தனிமனித பாவனைக்கான கணினி காவல் துறையினரை மிஞ்சக்கூடிதாயிருக்கிறது.
காவல் துறையினருக்குத் துணைபுரிய வந்த கணினிக் குறும்பர்
(hacker) அவர்களின்
தொழில்நுட்பக் கருவிகளைப் பார்த்துச் சொன்னது: ‘தாத்தா பாட்டி காலத்தவர்கள்.
முன்னோர்கள்.’ பிளாஸ்டிக் பையில் காய்கறி வாங்கும் ஒரு அநாமதேயனுக்கு அதீதத்
தொழில்நுட்பம் மிக்க கணினி எப்படிக் கிடைத்தது? அதைப் பற்றிய விழிப்புணர்சியும் அதை
இயக்கும் வல்லமையும் அதை வைத்து அவன் விளையாடும் அந்தக் கணிப்பொறி ஆட்டமும் ஒரு
சாதாரண மனிதனால் அல்லது இத்திரை வசன வார்த்தையில் சொல்வதெனில் ஒரு குப்பனாலும்
சுப்பனாலும் முடியுமா?
War Room என்று வர்ணிக்கப்படும் உத்தி அறை மதுரை சைவ சாப்பாட்டுக் கடையை
ஞாபகமூட்டுகிறது. வாழை இலைக்குப் பதிலாக இங்கே ஒவ்வொருவரும் மடிக் கணினிகளுக்கு
முன் உட்கார்ந்திருக்கிறார்கள். இன்னும் ஒன்று. ஒரு கணினிப்பொறிக் கட்டுப்பாட்டுப்
படக்கருவி (CCTV) காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்தால் குண்டுவைத்தவரை
எப்போதோ அடையாளம் கண்டுகொண்டிருக்கலாம். படம் அரை மணித்தியாலத்தில்
முடிந்திருக்கும்.
ஆச்சரியப்படக்கூடிய கலைச் செறிவு, செயற்கையற்ற நகைச்சுவை, அதிகம் குறுக்கிடாத இசை,
உணர்ச்சிவயப்படாத நடிப்பு, கதைசொல்லலில் கட்டுப்படுத்தப்பட்ட நாடகத்தனம் இவை
எல்லாம் இப்படத்தை வித்தியாசப்படுத்துகின்றன. தமிழ்ப் படங்கள் அந்நிய சினிமாபோல்
இல்லையே என்று ஏங்குகிறவர்களுக்கு உன்னைப் போல் ஒருவனின் இந்தப் பலமான அம்சங்கள்
ஆறுதல் தரலாம். இந்தவகை ரசிகர்கள் சற்றுத் தெம்படையலாம். ஆனால் இந்த சினிமா தரும்
கலாச்சாரச் செய்தி, அது அறிவிக்கும் எண்ண இயல்கள்
(ideology) கொஞ்சம்
குழப்பமானவை. அபாயகரமானவையும்கூட.
திரைக்கதை சாதாரண மனிதனைப் பற்றியதாயிருந்தாலும் காவல் அதிகாரியின் கருத்துக்
கோணத்தில்தான் கதை சொல்லப்படுகிறது. பயங்கரவாதம் மத்தியதர மக்களின் பிரச்சினை
என்பதை இத் திரைப்படம் இன்னும் வலுப்படுத்துகிறது. இதற்கு அலங்காரமான ஆதாரங்கள்:
காவல் துறை அதிகாரியின் மனைவி வீட்டிலிருக்கும் நுண் அலையை
(microwave) ஞாபகப்படுத்துவது; அச்சமூட்டும் நாயகனாக வரும் கமல்ஹாசன் மதிய போசனத்திற்கு
Sandwitch சாப்பிடுவது; இவற்றைவிடக் கதையின் முக்கியக் கட்டங்களில் பிரதானப்
பாத்திரங்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது. உசிலம்பட்டித் திரை
அரங்குக்காட்சிகளில் துணை உரை
(sub-title) இணைக்கப்பட்டிருக்கும் என்று
நினைக்கிறேன்.
தீவிரவாதம் இப்படத்தில் ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெறும் பேச்சுப் பரிமாற்றம் காவல் துறையினரிடம்
விடப்படுகிறது. தமிழக முதலமைச்சரும் முதன்மைச் செயலாளரும் பிரச்சினைக்கான முடிவைக்
காவல் துறை அதிகாரியான மாறாரின் கையிலேயே விட்டுவிடுகிறார்கள். அரசியல் அமைப்புகள்,
அரசாங்க இயந்திரங்கள் ஓரம்தள்ளப்பட்டிருக்கின்றன. தீவிரவாதம் வெறும் சட்ட ஒழுங்கு
விடயமல்ல. ஒவ்வொரு தீவிரவாதத்திற்கும் பின்னால் அரசியல், சமூக, சமயக் காரணங்கள்
உண்டு. அவை இப்படத்தில் தெளிவாக்கப்படவில்லை.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்னும்
சொல்லாடலை அரசியல் கூறுமுறையில் புகுத்தினார். அவர் பண்புப் பெயரில் அழைத்த
தீவிரவாதிகளுக்கு இப்படத்தின் பெயரில்லாத கதாநாயகன் உயிரூட்டிக் கரப்பான் பூச்சிகள்
என்கிறான். அவன் பயங்கரவாதத்திற்கு வைத்திருந்த எதிர்வினை பயங்கர வாதிகள் அத்தனை
பேரையுமே அழித்துவிடுவது. தீவிரவாதத்தைத் தனி நபரின் புனிதப் போராக்கி முடிவுகாண
முயல்கிறான். அவனுக்கு
Terrorism is instant. ஆகையால்
நியாயம்கூட உடனடியாகக் கிடைக்க வேண்டும். எல்லாப் பயங்கரவாதிகளுமே திடீரென்று
உருவாகியவர்கள் அல்லர். ஒரு பரிச்சயமான எடுத்துக்காட்டு: தமிழ் ஈழ விடுதலை
இயக்கங்கள்.
ஈழ சமஷ்டிக் கட்சி சிங்கள அரசுடன் நடத்திய இருபது ஆண்டுகளுக்கு மேலான பேச்சு
வார்த்தைகளின் தோல்விக்குப் பிறகுதான் தமிழ்ப் போராளிகள் ஆயுதங்கள் ஏந்தத்
தொடங்கினார்கள். உணர்ச்சி சாராது அணுக வேண்டிய விஷயம் தனி மனிதக் கண்ணோட்டதில் தனி
மனித வீரசாகசமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை
எதிர்ப் பயங்கரவாதமோ
(counter-terrorism) தன்னிச்சையான
பழிவாங்குதலோ அல்ல. இப்படம் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற இருண்மையான, நம்
கலாச்சாரம் எப்போதோ கடந்துவந்துவிட்ட நெறிமுறைக் காலத்திற்கு இழுத்துச்
செல்லுகிறது. இரையாக்கப்பட்டவர்கள்
(victims), நம்முடைய சட்ட ஒழுங்குகள்படி
நியாயாதிபதிகளாக, சான்றாயர்களாக
(jury) இருப்பதில்லை. நாகரிகமான சமூகத்தில்
நீதி வழங்குதல் காயப்படுத்தப்பட்டவர்களின் கையில் இல்லை.
போர்க்குணம் கொண்ட அடிப்படைவாதத் தீவிரவாதத்தின் ஒரே நோக்கம் நாட்டில்
குழப்பத்தையும் கலகத்தையும் விளைவிப்பது. அதைவிட இன்னும் முக்கியமானது களைத்து
ஜடமாயிருக்கிற சனங்களைத் தீவிரவாதிகளாக உருவாக்குவது, நாட்டில் ஒழுங்கவிழ்ப்பை
(anarchy) உண்டாக்குவது. இந்தப் படத்தில்
stupid common man எனக் கூறிக்கொண்டு
பதில் நடவடிக்கை எடுப்பவர் இன்னொரு குண்டுதாரியாக உருவெடுத்து இந்தச் செயல்களில்
ஈடுபடுகிறார். இது தீவிரவாதத்திற்குக் கிடைத்த வெற்றி. இளைப்பாறிய காவல் துறை
அதிகாரி ராகவன் மாறார்கூடப் பெயர் தெரியாத அந்த மிரட்டல்காரனின் கோபத்தையும்
தைரியத்தையும் பாராட்டி நினைவுகூர்வதுபோல் படம் முடிகிறது. இந்த சினிமாவைப்
பார்க்கும் அடிப்படைவாதிகளின் நெஞ்சு கொஞ்சம் பெருமிதமடையும். கரிசனையுள்ள
பொதுஜனங்களுக்குப் பயங்கரவாதம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் கவலையை இன்னும்
அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் இது நல்ல செய்தி அல்ல. திரைக் கதையில் இப்படி
ஒரு வசனம் வரும்: ‘படம் பார். கதை கேள்.’ இந்தப் படத்தைப் பாருங்கள். ஆனால் இப்
படக்கதைச் சொல்லும் கருத்தியலை ஒரு கிள்ளு உப்பாக
(pinch of salt) எடுத்துக்கொள்ளுங்கள்.
|