|
நம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை பெரும்பாலும் ஓர் அரசியல் பிரச்சினை என்பதைச்
சென்ற கட்டுரையில் பார்த்தோம். மண், நீர் வளம், விதைத் தரம் போன்றவற்றில்
குறைபாடுகள் இருந்தாலும் அவை மட்டுமே உணவுப் பற்றாக்குறை ஏற்பட அதிமுக்கியக்
காரணங்கள் எனச் சொல்ல முடியாது. அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவந்தன; அவற்றுக்கு நல்ல பலன்களும் கிடைத்துவந்தன என்பதையெல்லாம்
முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம்.
உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள ‘பசுமைப் புரட்சி’ என்னும் முழுக்க முழுக்கத்
தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தீர்வை அரசாங்கம் ஏன் முன்வைத்தது? இந்தப் பசுமைப்
புரட்சித் தொழில்நுட்பத்தையும் அதன் தன்மையையும் புரிந்துகொண்டால் இந்தக்
கேள்விக்கும் விடை கிடைக்கும். இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும்
இயந்திரங்களைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது பசுமைப் புரட்சிக்கு ஆதாரமான
“வீரிய” விதைகளின் தொழில்நுட்பத்துக்கும் வரலாற்றுக்கும் வருவோம்!
விதைகளைப் பற்றிய தாவரவியல் பாடம்
நாட்டு ரகம் (native /
indigenous variety), கலப்பின ரகம்
(hybrid variety), மேம்படுத்தப்பட்ட ரகம்
(improved variety) - இப்படி விதைகளில் பல வகையான பெயர்களைக் கேட்டு வருகிறோம். அவை
எவ்வாறு வேறுபடுகின்றன?
இயற்கையில் மகரந்தச் சேர்க்கை ரீதியாகத் தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
சில தாவரங்களில் ஆண் மற்றும் பெண் இனங்கள் தனித்தனியாக இருந்து, அவற்றின்
பூக்களுக்கிடையே மகரந்தச் சேர்க்கை நடைபெறும். உதாரணம், பப்பாளி. சில தாவரங்களில்
ஒரே செடியில் ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியாக இருந்து, அவற்றுக்கிடையே
மகரந்தச்சேர்க்கை நடைபெறும். உதாரணம், பாகல். நமக்கு வேண்டிய நெல் மற்றும் கோதுமைப்
பயிர்கள் மூன்றாம் வகையைச் சேர்ந்த தன்மகரந்தச் சேர்க்கைத் தாவரங்கள். இவற்றில் ஒரே
செடியில், ஒரே பூவில் ஆண் மற்றும் பெண் உறுப்புகள்
(androecium, gynaecium) இருந்து, அவற்றுக்கிடையே மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இப்படி,
இயற்கையில் தன்மகரந்தச் சேர்க்கைத் தாவரங்களின் மரபணுவில் கலப்பின்மையையும்
(genetic purity) அயல்மகரந்தச் சேர்க்கை, மரபணுவில் கலப்பையும்
(genetic diversity) விளைவிக்கும். இவை இரண்டையுமே நம் விவசாயிகள் தங்கள் பயிர்களில்
பல நூற்றாண்டுகளாகக் கையாண்டு வந்துள்ளனர். ஆனால் இயற்கையில் தன்மகரந்தச்
சேர்க்கையாக இருக்கும் நெல்லிலிருந்து எப்படி ஒரு லட்சத்துக்கும் மேலான புதிய
ரகங்களை நம் விவசாயிகள் ஏற்படுத்தினர் என்பதைப் பார்ப்போம்.
இரண்டு வெவ்வேறு செடிகளின் தன்மைகளை ஒரே செடியில் கொண்டுவர இரண்டு வழிகள் உள்ளன.
நமக்குத் தேவையான தன்மைகளைக் கொண்ட ஒரு நெல் ரகச் செடி 1இன் பூக்களிலிருந்து ஆண்
உறுப்பை மட்டும் நீக்கிவிட்டு, பின்னர் நமக்குத் தேவையான தன்மைகளைக் கொண்ட மற்றொரு
நெல் ரகச் செடி 2இன் பூக்களிலிருந்து மகரந்தத்தைச் சேருமாறு செய்ய வேண்டும்.
மற்றொரு முறையில், இயற்கையிலேயே ஆண் - மலடான ரகத்தோடு மற்றொரு ரகத்தைச்
சேர்த்தால், அந்த ஆண் - மலட்டுத் தன்மை, நமக்குத் தேவையான ரகத்துக்குள் வந்துவிடும்.
பிறகு இதைக் கலப்பு மகரந்தச் சேர்க்கைக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும்போது,
இயற்கையால் தீர்மானிக்கப்பட்ட ஆதாரமான சில தன்மைகள்
(dominant characters - ஓங்கு பண்புகள் என இவை அழைக்கப்படுகின்றன) செடி
1இலிருந்தும் ஆதாரமான வேறு சில தன்மைகள் செடி 2இலிருந்தும் சேர்ந்து நமக்குத்
தேவையான தன்மைகளை மட்டுமே கொண்ட செடி 3 உருவாகும். இவ்வாறு உருவாகும் விதைகளைக்
கலப்பின விதைகள் என்கின்றனர். இந்த விதைகளை மறுபடியும் விதைத்தால், இரண்டாம் தலைமுறை
விதைகளில் இரண்டாம் நிலைப் பண்புகள்
(recessive characters -
ஒடுங்கு பண்புகள் என இவை வழங்கப்படும்) வெளிப்படலாம். அதனால்தான், முதல் தலைமுறைக்
கலப்பின விதைகளை மறுபடியும் விதைத்தால் அதே தன்மை கொண்ட பயிர் விளையாது. விவசாயி,
இத்தகைய கலப்பின விதைகளை விற்கும் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் வாங்கி
அவற்றையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
ஆனால் இந்தக் கலப்பின விதைகளை மறுபடியும் மறுபடியும் விதைத்து, ஒவ்வொரு
தலைமுறைப் பயிரிலும் சரியான முறையில் நமக்குத் தேவையான பண்புகளைக் கொண்ட பயிர்களின்
விதைகளைத் தேர்ந்தெடுத்துச் சேகரித்தால், ஆறாம் அல்லது ஏழாம் தலைமுறையிலும் அதற்குப்
பின் வரும் எல்லாத் தலை முறைகளிலும் அந்த விதைகளின் தன்மை ஒரே சீராக வெளிப்படும்.
அவை நமக்குத் தேவையான பண்புகளாக இருந்தால், அவற்றுக்குத் தனித்தன்மை வாய்ந்த ஒரு
பெயரைச் சூட்டித் தனியாகச் சேமித்துவைக்கத் தொடங்கலாம். இவற்றுக்கு
மேம்படுத்தப்பட்ட ரகங்கள்
(improved varieties) என்று பெயர்.
இந்த மேம்படுத்தப்பட்ட ரகங்களின் தன்மைகள் மாறாமல், தரம் குறைந்து போகாமல் இருக்க,
கலப்பற்ற தேர்வுகள்
(pureline selection) எனும் முறையில்
பராமரித்துச் சேமித்துவரலாம். இந்த முறையில், ஒவ்வொரு தலைமுறைப் பயிரிலிருந்தும்
மிகச் சுத்தமான, தரமான பயிர்களின் விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
நாட்டு ரக விதைகள்
நம் நாட்டிலேயே இயற்கையாக விளைந்த சில நெல் ரகங்களைக் கொண்டு நம் விவசாயிகள் பல
நூற்றாண்டுகளாக இத்தகைய தொழில்நுட்பத்தைக் கையாண்டு உருவாக்கியவைதாம், நாட்டு ரக
விதைகள். ஒவ்வொரு ரகமும் அது விளையும் இடத்தின் தட்பவெப்ப நிலை, மண் வகை, தாக்கும்
பூச்சிகள், நீர்வளம் போன்ற உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு, அதன்
தனித்தன்மைக்கேற்பப் பெயரும் சூட்டப்பட்டன. உதாரணத்திற்குக் கடலோரப் பகுதிகளில்
மடுவு முழுங்கி (மடுவு = வெள்ளம்) போன்ற ரகங்கள் வெள்ளத்தில் சாயாமல், நீர்
மட்டத்தைத் தாண்டி உயரமாக வளர்ந்து விளைச்சலைக் கொடுத்தன. இந்தக் கதிர்களைப்
படகுகளில் சென்று அறுவடை செய்து, கயிற்றால் கட்டித் தண்ணீரில் போட்டு
இழுத்துக்கொண்டு போவார்களாம். நெல்மணிகளும் சிந்தாமல் கரையேறுமாம். இதை நாகை
மாவட்டத்து விவசாயிகளே கூறக் கேட்டிருக்கிறேன். வறண்ட நிலம், களர் நிலம் இப்படி
எல்லா நிலங்களுக்கும் ஏற்ற ரகங்கள் உண்டு. இப்படி, நம் நாட்டில் 1,20,000 நெல்
ரகங்களுக்கு மேல் இருந்தனவாம்!*
சுதந்திர இந்தியாவின் அரசாங்கம், தனது விதைப் பண்ணைகளிலும் இத்தகைய தரமான,
மேம்படுத்தப்பட்ட விதைகளைத்தான் உருவாக்கி விநியோகம் செய்துவந்தது. உதாரணத்திற்கு,
கிஞிஜி-27, சிளி-20 ஆகிய ரகங்கள், ஆடுதுறை மற்றும் கோவை மாநில வேளாண் ஆராய்ச்சி
நிலையங்களில் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ரகங்கள்.
கோதுமையில் ‘வீரிய’ ரகங்கள் தொடக்கம்
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இரசாயன (குறிப்பாக நைட்ரஜன்) உரத்தின் பயன்பாடு
அதிகரித்ததன் விளைவாக, அமெரிக்காவில் உயரமான கோதுமைப் பயிர்கள் எல்லாம் அளவுக்கு
அதிகமாகக் கதிர்விட்டன. மேற்பரப்பிலேயே உணவு கிடைத்தமையால் ஆழமாகச் செல்லாமல்,
பலமில்லாமல் மேலோட்டமாக வளர்ந்த இந்தப் பயிர்களின் வேர்கள், கதிர்களின் எடையைத்
தாங்கும் சக்தியை இழந்தன. இதனால் பயிர்கள் சாய்ந்து விழுந்து நிலத்திலேயே அழுகின.
அப்போது பயிரைக் குட்டையாக்கிவிட்டால் சாயாமல் இருக்குமே என்னும் யோசனை
விஞ்ஞானிகளுக்குத் தோன்றியது.
1949இல் செசில் சால்மன் என்னும் அமெரிக்க மண்ணியலாளர்
(agronomist) ஜப்பானில் ‘நோரின் 10’ என்னும் குட்டை ரகக் கோதுமைப் பயிரைக் கண்டதும் அமெரிக்கக்
கோதுமைப் பயிர் ஆராய்ச்சியாளர்களுக்கு அதன் விதைகளை அனுப்பிவைத்தார். அச்சமயம்,
மெக்ஸிகோ நாட்டில் ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷனின் வேளாண் திட்டத்தில் பணிபுரிந்துவந்த
அமெரிக்க ஆராய்ச்சியாளர் நார்மன் போர்லாக்குக்கும் அவை அனுப்பிவைக்கப்பட்டன.
இவற்றையும் வேறு சில கோதுமை ரகங்களையும் இணைத்துத், தமக்குத் தேவையான பண்புகளைக்
கொண்ட குட்டை ரகங்களைக் கண்டுபிடித் தார் போர்லாக். இரசாயன உரங்களிட்டால் நன்றாகக்
கதிர்விட்டு வளரும் பண்புகொண்டிருந்தன இந்த ரகங்கள்.** இந்த விதைகளை “வீரிய விதைகள்”
அல்லது “உயர் விளைச்சல் ரகங்கள்”
(high yielding varieties / HYVs) என்றழைத்தனர். இந்தக் குட்டைக் கோதுமை மூன்றே ஆண்டுகளில் விளைச்சலை
மும்மடங்கு பெருக்கி, கோதுமை இறக்குமதி செய்யும் நாடக இருந்த மெக்ஸிகோவை அதை
ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றியது.
இப்படி அதிக இரசாயன உரமிட்ட பயிர்கள், அந்நிய நாட்டிலிருந்து வந்திறங்கியதாலும்
நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் ஓரினப் பயிர் செய்ததாலும் உயிரணுக்கள் (இரசாயன உர)
உப்பு சேர்ந்து ஊதிக்கொண்டதாலும் பயிர்களின் பச்சையம் அதிகரித்ததாலும் பல வகையான
பூச்சித் தாக்குதலுக்கு ஆளாயின. ‘உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்பதுபோல
அதிகமான நீர்ப் பாசனமும் தேவைப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் இந்த “வீரிய” விதைகள்,
இரசாயன உரம் - இரசாயனப் பூச்சிகொல்லி - நீர்ப்பாசனம் ஆகியவை உள்ளடங்கிய
தொழில்நுட்பக் கூறுகள் இல்லாமல், சாதா சோதா விதைகளாக மாறியது மட்டுமல்லாமல்
பெருத்த பயிரிழப்புக்கும் காரணமாயின.
பின்தொடர்ந்த நெல்
மத்திய நெல் ஆராய்ச்சிக் கழகம்
(Central Rice Research Institute - CRRI) ஒரிசா மாநிலம் கட்டாக்கில் 1950களில் நிறுவப்பட்டது.
இங்கு நம்மிடையே இருந்த பல நாட்டு ரகங்களைக் கொண்டு தரமான, அதிக விளைச்சலைக்
கொடுக்கும் ரகங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. 1959இல் இந்த
நிலையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்ற டாக்டர் ஸி.பி. ரிச்சாரியாவும் மற்ற
திறமைவாய்ந்த விஞ்ஞானிகளும் நெல் உற்பத்தியில் புரட்சியைக் காண்பதற்கான அற்புதமான
பல ஆராய்ச்சிகளைச் செய்துவந்தனர். குறுகிய கால அறுவடை, வெள்ள எதிர்ப்பு, வறட்சி
எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு, பூச்சி எதிர்ப்பு, சாயாமல் இருத்தல் போன்ற பல
சிறப்புத் தன்மைகளுக்காக நெல் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இவர் தன் களப்
பணியாளர்களின் உதவியுடன் மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்து மட்டும் 17,000
நெல் ரகங்களைச் சேகரித்தார். இவற்றில் 8% ரகங்கள், ஒரு ஏக்கருக்குக் குறைந்தது 1.5
டன் விளைச்சலைக் கொடுத்தன.
வேளாண் ஆராய்ச்சியில் ரிச்சாரியாவின் அணுகுமுறை, நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான
ஆல்பர்ட் ஹோவார்டின் அணுகு முறையைப் போன்றே இருந்தது. இவரும் ஹோவார்டைப் போலவே
ஆதிவாசி விவசாயிகளிடம் பெருத்த மரியாதை கொண்டு, அவர்களிடமிருந்து நிறையக்
கற்றுக்கொண்டார். இந்தியாவில் இயற்கையாகக் கிடைக்கும் மரபணுப் பொருளை
(genetic material) மட்டுமே கொண்டு நம் நாட்டின் நெல் உற்பத்தியைப் பெருக்கலாம்,
பெருக்க வேண்டும் என ஆணித்தரமாக நம்பினார். நமது இயற்கைச் சூழலைப் பத்திரமாகப்
பராமரிக்க மரபணுப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் உறுதியாக
எண்ணினார்.
1950கள் வரையில் கலப்பற்ற தேர்வு உத்தியின் மூலமே நெல் ரகங்கள் உருவாக்கப்பட்டன.
பிறகு ஜப்பானிலிருந்தும் தாய்வானிலிருந்தும் அதிக விளைச்சலைத் தரும் ரகங்களைக்
கொண்டுவந்து, இந்தியாவின் (இண்டிகா) ரகங்களோடு கலந்து புதிய ரகங்களை உருவாக்கத்
தொடங்கினர்.*** நெல் ரகங்களைப் பல ஆண்டுகள் வளர்த்து, பல தலைமுறைப்
பயிர்களிலிருந்து கவனமாகத் தேர்ந்தெடுத்துப் புதிய ரகங்களை உருவாக்கும் காரியத்தை
அவசர அவசரமாகச் செய்ய முடியாது. அதனால், முதலில் பல முயற்சிகள் தோல்வியடைந்தாலும்
சிறிது காலம் கழித்து நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. உதாரணத்திற்கு 1963இல் சி.
கங்காதரன் என்னும் விஞ்ஞானி குட்டையான உயர்விளைச்சல் ரகம் ஒன்றை உருவாக்கியிருந்தார்.
மத்திய நெல் ஆராய்ச்சிக் கழகத்தில் உருவாக்கப்பட்ட குட்டை ரக நெல் ரகங்கள் பூச்சி
மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை போன்ற மற்ற சிறப்புத் தன்மைகளை யும் கொண்டதாக
உருவாக்கப்பட்டன.
ரிச்சாரியாவின் மற்றுமொரு முக்கியமான கண்டுபிடிப்பு, சேர்க்கை தவிர்த்த பயிர்
பரப்பு முறை (Clonal
Propagation) எனும் தொழில்நுட்பம்.
இதன்மூலம், ஒரு நெல்லிலிருந்து முளைத்த செடியின் கதிர்களைக்
(tillers) கையால்
பிரித்துப் புதிய செடிகளாக உருவாக்கிக்காட்டினார். பிப்ரவரி மாதத்தில் இப்படிச்
செய்ய ஆரம்பித்தால், (3-6 முறை இப்படிப் பிரித்தால்) நவம்பர் மாதத்தில் ஒரே ஒரு
நெல்லிலிருந்து 20 கிலோ நெல் கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காண்பித்தார். இந்த
உத்தியின் மூலம் நம் நாட்டு ரகங்களில் கலப்பின உயிரியக்கத்தைப்
(hybrid vigour) புகுத்திக்காட்டினார். சாதாரண முறையில் பெருக்கப்பட்ட விதைகளைவிட
இவற்றின் தரம் உயர்வாக இருந்தது; விளைச்சலும் 17 முதல் 61% வரை அதிகரித்தது.
சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம் (மிஸிஸிமி)
அதே சமயம், அமெரிக்கர்கள் ராக்ஃபெல்லர் மற்றும் ஃபோர்டு ஃபவுண்டேஷன்களின் உதவியுடன்
ஃபிலிப்பீன்ஸ் நாட்டில் “சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம்”
(International Rice Research Institute - IRRI) ஒன்றை 1962இல் நிறுவினர்.
கோதுமைப் பயிரில் செய்ததுபோலவே, நெல் பயிரையும் குட்டையாகவும் உரத்துக்கு
இசைவாகவும் (fertilizer
responsive) உருவாக்கிவிட்டால்,
இரசாயன உரத்தை அள்ளிக் கொட்டி விளைச்சலைப் பெருக்கலாமே என்பதுதான் இந்த
நிறுவனத்தின் ஒரே வெளிப்படையான குறிக்கோளாக இருந்தது.
மறைமுகமான வேறொரு குறிக்கோளும் இந்த நிறுவனத்துக்கு உண்டு. முந்தைய கட்டுரைகளில்
பார்த்ததுபோல, அமெரிக்க உர-பூச்சிக்கொல்லிகளுக்கும் அவற்றின்
தொழில்நுட்பங்களுக்கும் ஆசிய நாடுகளில் ஒரு மாபெரும் சந்தையை
ஏற்படுத்திக்கொள்வதுதான் அது. இதில் பிரம்மாண்டமான பாசன வசதிகளும் அடங்கும். மேலும்,
இந்தப் புதிய விதைகளைக் கலப்பின விதைகளாகவும் வெளியிட்டால், பிறகு விதைகளுக்கான
சந்தையும் உருவாகுமே! ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்!
இந்தக் கட்டத்தில் ரிச்சாரியா முக்கியமான எச்சரிக்கையை விடுத்தார். “நாமே ஒரு
பொக்கிஷத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அந்நிய ரகங்களை இங்கு எதற்காகக் கொண்டுவர
வேண்டும்? இப்படி முன்னெச்சரிக்கையின்றி டன் கணக்கில் அந்நிய விதைகளை நாட்டிற்குள்
இறக்குமதி செய்தால், கூடவே அடக்க முடியாத பூச்சி - நோய்ப் பிரச்சினையையும்
விலைகொடுத்து வாங்குவதுபோலாகிவிடும்!” எனக் கூறி மிஸிஸிமி விதைகளை இந்தியாவிற்குள்
கொண்டு வருவதைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் எச்சரித்ததுபோலவே நடந்தது.
மிஸிஸிமி உருவாக்கிப் பரப்பிவந்த நெல் ரகங்களின் செயல்பாடுகள் பற்றி அப்போது
நிலையத்தின் முக்கிய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனும் விமர்சித்திருக்கிறார்:
“வெப்ப மண்டலத்தில் 5 - 6 ஆண்டுகளுக்கு மேல் உபயோகிக்க ஏதுவான புதிய ரகங்களை
உருவாக்குவது கடினம் . . . ஆண்டு முழுவதும் நெல் பயிரிடுவதால் நோய் - பூச்சி
தாக்கும். பல தலைமுறைகளுக்கு இது தொடரும். புதிய இனங்கள் உயிரி வகைகள்
உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதன் விளைவாகப் புதிய பூச்சிகள் பிரச்சினையும்
தொடர்ந்து எழுந்தவண்ணம் இருக்கும். 1966இல் வெளியான
IR8 ரகத்தை, 1968 -69களில்
பாக்டீரியல் ப்ளைட்
(bacterial blight - BB) எனும் நோய் பலமாகத்
தாக்கிப் பெருத்த சேதம் ஏற்பட்டது. பிறகு 1970 - 71இல், ரைஸ் டுங்க்ரோ வைரஸ்
(rice tungro virus - RTV) தாக்கி IR8இன் விளைச்சலைப் ஃபிலிப்பீன்ஸ்
நாடு முழுவதும் நாசமாக்கியது. 1969இல் வெளியான
IR20 ரகம், BB மற்றும்
RTVயை
எதிர்க்கும் சக்தியுடன் புதிதாக உருவாக்கப்பட்டு, 1971 - 72இல்
IR8க்குப் பதிலாகப்
பரப்பப்பட்டது. ஆனால் 1973இல்,
brown plant hopper (BPH) மற்றும்
grassy stunt virus (GSV) தாக்கி, ஃபிலிப்பீன்ஸ் நாட்டில்
பெரும்பான்மையான மாகாணங்களில்
IR20ம் அழிந்துபோனது. பிறகு 1973இல்
BPH எதிர்ப்புச் சக்தியுடனான
IR26 எனும் ரகம் வெளியாகி, ஃபிலிப்பீன்ஸ் 1974 - 75இல்
பரவலாகப் பயிரானது. பிறகு 1976இல் ஒரு புதிய
BPH ரகம் (biotype) தாக்கியபின்
IR36 வெளியானது. இது புதிய
BPH ரகத்தை (biotype) எதிர்க்கும்
சக்தி கொண்ட வேறு மரபணுவைக் கொண்டது. இதுவே ஃபிலிப்பீன்ஸில் பரவலாகப்
பயிராகிவருகின்றது. சிறிது காலம்வரை
BPHஐ நன்றாக எதிர்த்துவந்தது. ஆனால் இப்போது
ragged stunt மற்றும் wilted stunt (இரண்டும் புதிய நோய்கள்)
மற்றும் வேறொறு புதிய
BPH ரகம் இந்தப் பயிரைத் தாக்கிவருகின்றன!”
இந்தியாவிலும்
gall midge, brown planthopper, leaf folder, whore maggot என்று வகைவகையாய்ப் பூச்சிகள் தாக்கின.
30 முதல் 100 சதவீதம்வரை பயிரிழப்பு நேர்ந்துவந்தது. இதற்கு முக்கியக் காரணம், எல்லா
‘வீரிய’ நெல் விதைகளும் ‘குட்டையாக்கும் மரபணு டீ-ஜீ-வோ-ஜென்
(dee-gee-wo-gen) கொண்ட TN1 அல்லது
IR8 ஆகிய இரண்டு ரகங்களைக்கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டன.
இத்தகைய மரபணுச் சீர்மையால்தான்
(genetic uniformity) ஒட்டு
மொத்தமாகப் பூச்சிகள் தாக்கின.
IRRI விதைகள், நம் நாட்டின் 75% நெல் பயிர்
விளையும் மேட்டு நிலம் மற்றும் கடல் மட்டத்துக்குச் சமதளத்திலுள்ள நிலம்
ஆகியவற்றுக்கு ஏற்றவை அல்ல. இப்படி ஓயாமல் அலை அலையாகத் தாக்கிக்கொண்டிருந்த பூச்சி
- நோய்ப் பிரச் சினைக்குத் தீர்வுகாண, ரிச்சாரியா பாடுபட்டுச் சேகரித்து
வைத்திருந்த நாட்டு ரக விதைகளை நாடி
IRRI விஞ்ஞானிகள் இந்தியா வந்தனர்.
இத்தனை பிரச்சினைகள் இருந்தும், இந்த “வீரிய” விதைகள் நம் நாட்டில் எப்படிப்
புகுந்து பரவலாயின? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
|
டாக்டர் ராதேலால் ஹேர்லால் (R.H.) ரிச்சாரியா
ராதேலால் (டாக்டர் ரிச்சாரியா) 1909ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் ஹோஷங்கா பாத்
மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் ஹேர்லால் பள்ளித் தலைமை
ஆசிரியராகவும் தபால் நிலைய அதிகாரியாகவும் பணிபுரிந்தார். வீட்டுத் தோட்டத்தில்
காய்கறிகள் வளர்ப்பதில் சதா பல பரிசோதனைகளைச் செய்தவண்ணம் இருந்தார். உதாரணத்துக்கு,
வேம்பின் நற்குணங்கள் காய்கறிக்கும் வரும் என்னும் எண்ணத்தில் கொடி வகைகளை
வேப்பமரத்தின் மேல் படரவிடுவார். சிறுவன் ராதேலால் இவர் செய்ததையெல்லாம் ஆர்வத்துடன்
கவனித்துவந்தான். ஹேர்லால் அந்தப் பகுதியில் வசித்துவந்த ஆதிவாசிகளுடன் கலந்துரையாடி,
விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி அவர்களுக்கிருந்த ஆழமான அறிவை மெச்சினார்.
இவற்றிலெல்லாம் சிறுவன் ராதேலால் தவறாமல் கலந்துகொள்வான். இந்தக் கலந்துரையாடல்கள்
அவன் ஆதிவாசிகளிடம் வைத்திருந்த மரியாதையும் தாவரவியலில் ஆர்வமும் வளரக் காரணமாயின.
நாகபுரியில் தாவரவியலில்
MSc மாணவனாக இருந்தபோதே, ராதேலால் சொந்தமாக
உருவாக்கிய அறிவியல் ஆக்கங்கள் சில மதிப்புவாய்ந்த அறிவியல் அமைப்புகளால் பாராட்டப்
பட்டன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இரண்டே ஆண்டு களில் தன்னுடைய ஆராய்ச்சிப்
பட்டப் படிப்பை (றிலீஞி) சர்வ சாதாரணமாக முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது
ரிச்சாரியாவுக்கு வயது 25.
கேம்ப்ரிட்ஜிலிருந்து இவர் விடைபெற்றுச் செல்லும்போது “நாடு திரும்பி மற்ற
பட்டதாரிகளைப் போலப் பதவி, பணம் என்று நாடிச் செல்லாதே; ஏழை விவசாயியின் நலனுக்காக
நீ உண்மையாக உழைக்க வேண்டும்.” என்று பேராசிரியர் எங்கில்டௌ கூறிய அறிவுரை, இவர்
மனத்தில் ஆழமாகப் பதிந்தது.
PhD பட்டம் வாங்கிய பின்னும் ரிச்சாரியாவுக்கு
ஆதிவாசிகள்மேல் இருந்த பணிவும் மரியாதையும் சிறிதும் குறையவில்லை. எப்போதும்
களத்திலேயே இருந்து ஆராய்ச்சிசெய்துகொண்டிருப்பார்.
1959 வரையில் வேளாண் துறையில் பல பதவிகளில் இருந்த ரிச்சாரியா, 1959இல் மத்திய நெல்
ஆராய்ச்சிக் கழகத்தின்
(CRRI) இயக்குநராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய
மாணவர்களுடன் ஆதிவாசி கிராமங்களுக்கெல்லாம் சென்று அவர்களிடமிருந்த நாட்டு ரக
விதைகளைச் சேகரித்து, அவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்தினார். இவ்வாறு தன்னுடய
வாழ்நாளில் 17,000 நெல் ரகங்களைச் சேகரித்தார். ரிச்சாரியா சிஸிஸிமியை உலக அளவில்
ஒரு முன்னணி நெல் ஆராய்ச்சி நிலையமாக மாற்றினார்.
|
* டாக்டர் ரிச்சாரியா, மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியிலிருந்து மட்டும்
17,000 நாட்டு ரகங்களைச் சேகரித்தார். 1,20,000 என்ற இந்த எண்ணிக்கை அவரு டைய
கணிப்பாகும்.
** இரசாயன நைட்ரஜன் உரங்கள், தாவரங்களின் பச்சையத்தைச் செயற்கையாக அதிகப்படுத்தி,
அதனால் ஒளிச்சேர்க்கையைத் தீவிரமாக்கித் தானியங்களைப் பெருக்கின. வீரிய விதைகளில்
நைட்ரஜனின் ‘சூரிய ஒளியை அறுவடைக்கு இசைவாக ஆக்கும் தன்மை’ அதிகரிக்கப்பட்டது.
இதனால்தான், ‘பசுமைப் புரட்சி’ என்னும் பெயரை வில்லியம் காட் 1968இல் சூட்டினார்.
*** அந்நிய மரபணுப் பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டுவருவதில் அத்தனை உடன்பாடு
இல்லாமல் இருந்தாலும், ஒரு சில ரகங்களை மட்டும் உபயோகித்துப், பல ஆண்டுகள் அவற்றைத்
தீவிரமாகக் கண் காணித்து, எச்சரிக்கையுடன் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில்
ரிச்சாரியாவுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை.
இந்தக் கட்டுரையிலுள்ள அறிவியல் சார்ந்த விவரங்களை விளக்க உதவிய
Dr.G.V.ராமாஞ்சனேயுலு அவர்களுக்கு எனது நன்றிகள்.
1. Alvares, C. The Great Gene Robbery,The Illustrated Weekly of India, March 23,
1986.
2. Dogra, B. The Life and Work of Dr. R.H. Richharia, 1991*
கட்டுரையாசிரியரைத் தொடர்புகொள்ள:
sriram.sangeetha@gmail.com
|