Google   www kalachuvadu.com

கடிதங்கள்

இனிப்பான மருந்து, கசப்பான உண்மை! உள்ளதை உள்ளபடி ஒளிவுமறை வின்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது. கடவுளும் சாத்தானும் உள்ளத்தை நெகிழச் செய்தது. ஈழக்கனவை அவர் தலைமைபோல் வேறெந்தக் குடிமகனும் முன்னின்று நடத்திச் சென்றிருக்க முடியாது என்ற அவிநாசி செந்திலின் கூற்றில் ஓராயிரம் உண்மைகள் பொதிந் துள்ளன. கோவைத் தயாநிதியின் சீற்றத்தில் நியாயம் முன்னின்று நீதி கேட்டது. ஒரு தனிமனிதன் உயிருக்காக இலட்சோபலட்சம் தமிழ் மக்கள் மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்டதில் என்ன தர்மம் இருக்கிறது? இத்தாலி மக்களின் உரிமைக்காகப் போராடிய கரிபால்டி ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை. இந்திய மக்களின் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா ஒருபோதும் பதவியை எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தின் வழிமுறைகளில் மாற்றம் இருக்கலாம்; ஆனால் இலக்கு, விடுதலை என்ற ஒரே ஒரு மையத்தை நோக்கியே இருந்தது. அதே போல் ஈழத் திருமகன் தனக்காகப் போராடவில்லை. தன் இன மக்களின் விடுதலைக்காகப் போராடினான். குடும்பத்தோடு களத்தில் நின்றான். எதற்காக? தன் குடும்பம் செழிக்க வேண்டும் என்பதற்காகவா? நாட்டின் தலைமையை ஏற்று ஆசியாவிலேயே சிறந்த பணக்காரனாக வர வேண்டும் என்ற பணப்பித்து வெறிக்காகவா? அல்ல, அல்ல! தம் மக்கள் விடுதலை பெற வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் முன்னிலை பெற வேண்டும். உலக அரங்கில் உழைக்கும் வர்க்கமாகப் போற்றப்பட வேண்டும் என்ற உயரிய அளப்பரிய அவாவில்தான். இதற்காகத் தன்னை மட்டுமல்லாது தன் குடும்பத்தையும் நட்பையுமே பணயம்வைத்த ஒரு திருமகனைத் தற்போதைய வரலாற்றில் எவராவது சுட்டிக் காட்ட முடியுமா? அவனது வெந்தனல்கனன்றுகொண்டுதான் இருக்கும். துச்சாதனன் வழிவந்த துரோகக் கூட்டம் காலத்தின் முன்னே கதறப் போவது நிச்சயம்.

ஊடகங்களின் இருண்ட காலம் உண்மை நிலையைத் தெளிவுபெறச் சொன்னது. இன்றும்கூட, ஈவு இரக்கமற்ற முறையில் தமிழினம் கொல்லப்பட்ட படக் காட்சிகளை உலகமே கண்டு கண்ணீர் வடிக்கும் காலத்திலும் நம் ஊடகங்களின் மௌனமும் பாராமுகமும் வணிக நோக்கில்தான் வலம் வருகின்றனவே தவிர சேவை உணர்வும் அறச் சிந்தனையும் அருகி விட்டனவே. கானகனின் சீற்றமும் நியாயமே. இந்து ராம் அவர்களின் செயல்பாடு அரக்கர்களை நியாயப்படுத்தும் போலித்தனத்தின் வெளிப்பாடே அன்றி அதில் நியாயம் துளியும் இல்லை.

விஸ்லாவா சிம் போர்காஷன் கவிதை வரிகளை “ராஜபக்சேவின் அவசரம் கற்பிதமானது; அவனது செய்தி மனித மற்றது” என்று மாற்றிப் படித்தால் அதுதான் நிதர்சனம். ‘நாம் பெரும் பாக்கியசாலிகள்’ என்ற கவிதையில் வரும் “எம்மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்பதை நாம் துல்லியமாக அறிந்திருக்கவில்லை” என்ற வரிகள் நிகழ்காலத்தின் உண்மை பேசும். தூக்கிலிடப்பட வேண்டியவர்கள் கட்டுரை இன்னும் சிலகாலம் கழித்து இலங்கைப் படுகொலைகளையும் தோலுரித்துக் காட்டும் என்பது நிச்சயம். அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... ஒரு சிறப்பான தமிழாய்ந்த ஒப்பீடு மற்றும் விரிவாக்கம்.

கா.இர. குப்புதாசு,
செஞ்சி

ஆகஸ்டு மாதக் காலச்சுவடில் “ஈழப் போரின் இறுதி நாட்கள்” கட்டுரையை முதலில் படித்தேன். மிகவும் சங்கடமாய் இருந்தது. கண்டிப்பாய் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஈழத்தை பற்றிய செய்திகள் அனைத்தையும் படிக்கப் படிக்க வருத்தமாய் உள்ளது. கையாலாகத் தனம். நம்மால் என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய இயலாத நிலையில் படித்து மனது கஷ்டப்படுவதைவிட சும்மாவே இருந்துவிடலாமே என்ற நினைவுதான்.

எம்.எஸ். பற்றி எழுதியதில் இளம்பெண்களைப் பற்றியது நகைச் சுவையாக இருந்தது. அதுபோலவே நெய்தல் கிருஷ்ணன் பற்றியதும்.

பெருமாள்முருகனின் ‘வேப்பெண்ணெய்க் கலயம்’ சிறுகதை என்னுடைய பாட்டியையும் பால்யத்தையும் நினைவுபடுத்துவதாய் இருந்தது. “The way home” திரைப்படத்தின் சாயலில் இருந்தது.

‘குடியும் சாதி நிமித்தமும்’ கட்டுரையில் முதல் இரண்டு பகுதிகள் ரொம்ப நன்று. ஏன் திடீர் என்று முக்கியப் பகுதியில் இருந்து விலகி எழுத்தாளர்களின் சண்டையைப் பற்றி எழுதினார் என்று தெரியவில்லை.

மு. சிகப்பி,
சென்னை

விஸ்லாவா சிம்போர்கா ஆற்றிய நோபல் உரை குறித்து:

இலக்கிய வடிவத்தின் ஒரு பிரிவான கவிதை தத்துவம் சார்ந்த பாடமல்ல. இலக்கியப் படைப்புகள் அவற்றின் உள்ளடக்கக் கூறுகளால் தான் இலக்கியத் தகுதியைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் இலக்கியக் கூறுகளை வரையறுத்துக் கூறிடவும் இயலாது. ஏனெனில் வரையறுத்துக் கூறப்படுபவை தத்துவத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட போதனைக்குரியனவாகத்தாம் விளங்க இயலும். இந்த அடிப்படைத் தத்துவத்தைச் சாராதவன்தான் கவிஞனாக உருவாகிறானேயொழிய, கவிஞர்கள் உருவாக்கப்படுகிறவர்களல்லர். அதுவும் இலக்கிய வடிவங்களின் பிறிதொரு பிரிவான கவிதையானது வார்த்தைகளுக்கான அழுத்தத்தைத் தந்து மொழியின் மேலாண்மையால் கவிதைக்கான சிறப்பை உணர்த்தக் கூடியது. கவிதையில் காட்சி கவித்துவமாக வேண்டுமானால், தேர்ந்து பிரயோகிப்படும் வார்த்தைகளே அருமையான சொல்லாடலால் சொல்லாட்சிப் பீடத்தைத் தனதாக்கிக்கொள்ள இயலும் ஒரு கவிதையில் கலைக்கான அந்தஸ்தை வீரியமாக்கக் கவிஞனுக்கு அதீத கற்பனை வளமும் தேர்ந்த சிற்பக் கலைஞனின் நுட்பத்தோடு ஒப்பிடக் கூடிய மொழிநடைச் சரளத்தில் தேர்ந்த பயிற்சியும் இருந்தால் போதுமானது.

இது தவிர, கலையின் மாயத் தன்மைக்குள் புதைந்துள்ள சூட்சுமங்களை புலனறிவால் வென்று கால வெளியைப் புதுப்பிக்கும் மாறுபட்ட சிந்தனை ஆற்றலின் வெளிப்பாடும் மிக அவசியமான தாகும். இத்தகைய தேவைகளை உணர்ந்தபோதிலும் கூடக் கவிஞனுக்குள் ஊற்றாகச் சுரக்கும் கலையார்ந்த கலை நுட்பங்களை வெளிப்படுத்தும் எழுத்தின் தீவிரம், பொய் மற்றும் போலிகள்மீது ஆட்படாத சமரசமற்ற போக்கு, எதன்மீதும் கொள்ளும் ஆழ்ந்த அக்கறையுணர்வு, அற்பமான அரசியல் மற்றும் வாழ்வியல் போக்குச் சமூக விழுமியங்களிலிருந்து மானுடத்தை வேறுபடுத்தியும் வேரறுத்தும் வருவதன் காரணமாக இந்த அற்புதமான மானுடம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சந்திக்க நேரும் அவலங்களால் தூண்டப்பெறும் தர்மத்திற்கான ஓலங்களை படைப்புலக்கத்தினுள் கொண்டுவருவதற்கான முயற்சி இவை யாவும் சிறந்த கவிஞனுக்கான ஆளுமைகளேயொழிய போதனைகளாக அமைய இயலாது.

பா. செல்வ விநாயகம்
சென்னை

டி.கே. பட்டம்மாள் அஞ்சலியில் நான் பிழையாக எழுதியதைச் சுட்டிக்காட்டிய திரு. வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

‘மீனாட்சி மே முதம்’ பாடும் போது தீட்சிதர் இறந்தார் என்பதால் அதைக் கடைசிக் கிரதியாகக் கருதிவிட்டேன்.

இப்பிழைகள் எடுத்துக்கூறப்படாமல் போயிருந்தால் தவறுகளே வரலாறாகியிருக்கும். ஆனால் வரலாறே ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டுக் கதைகள்.

அசோகமித்திரன்,
சென்னை

உள்ளடக்கம்